kaathaldiary8_9
kaathaldiary8_9
காதலை உணர்ந்த தருணம்
இன்றோடு கதிர் ஊருக்கு சென்று ஒரு வாரமானது. இனியா வழக்கம்போலவே கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் நுழைந்த சகுந்தலாவைப் பார்த்தும், “அம்மா வாங்க” என்று புன்னகை முகமாக அழைத்தாள்.
அவரோ கோபத்துடன் அவளை முறைத்துவிட்டு, “உனக்காக எல்லாத்தை விட்டு கொடுத்தவனை இன்னும் நீ ஏன் சோதிக்கிற. அந்த ஸ்ரீதரை ஒழுங்கா இருக்க சொல்லு. இல்ல அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் வந்த வேகமும் பேசிய வார்த்தைகளும் அவளை சிலையென நிற்கவைக்க இம்முறை அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது. தன் முன்னே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தவளோ, “கதிர் மாமா நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கு” என்று நினைவே அவளுக்கு இனித்தது. அவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது..
அன்று வீட்டிற்கு வந்தவனை ஷர்மிளா புன்னகை முகமாக வரவேற்றாள்.
“என்ன அண்ணா தங்கையைப் பார்க்க வர இவ்வளவு நாள் ஆச்சா?” என்று அவள் குறும்புடன் புன்னகைக்க அவளின் கையில் ஸ்வீட் எல்லாத்தையும் கொடுத்தவன், “என்னம்மா பண்றது சில நேரம் வந்தால் தானே நேரடியாக வர முடியுது” என்றான்.
அர்ஜூனோ கதிரின் மீது சரியான கோபத்தில் இருந்தான். இனியா நடந்ததை அவனிடம் சொல்லியிருக்க, ‘இவன் எதுக்கு விட்டு கொடுக்கிறான்..’ என்ற கோபத்துடன் வீட்டின் உள்ளே நுழைய கதிர் அமிர்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
“இனியா வந்ததால் தான் சார் அமெரிக்கா வரீங்க. இதுக்கு முன்னாடி நான் எத்தனை முறை உன்னை கூப்பிட்டு இருப்பேன். அப்போது எல்லாம் வந்தாயா?” என்று கதிருடன் சண்டைபோட சோபாவில் வந்து அமர்ந்தான் அர்ஜூன்.
கதிர் நிமிர்ந்து நண்பனின் முகம் பார்க்க, “அவனா ஒன்னு நினைச்சு அவனாவே முடிவெடுப்பான் அம்மா. நம்ம சொல்வதை கேட்டுட்டா அவரோட சுயகௌரவம் என்ன ஆகறது” என்று கிடைத்த கேப்பில் அவனின் கோபத்தை தீர்த்துக் கொண்டான்.
இனியா எதுவும் பேசாமல் மௌனமாக நிற்பதை கவனித்த ஷர்மி, “ஏய் இனியா நீ உன் ரூமிற்கு போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வா. இன்னைக்கு நைட் இங்கேதான் உனக்கும் சாப்பாடு” என்று கண்டிப்புடன் கூறியவள் சமைக்கலாம் சென்றுவிட அவளோ கதிரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னுடைய பிளாட்டிற்கு சென்றாள்.
அவள் சென்றபிறகு சகுந்தலாவுடன் அவன் பேசிக்கொண்டிருக்க இனியாவின் செயல்களை ஒருவித புன்னகையுடன் விவரித்ததை கேட்டு அவன் புன்னகைக்க தாய் அறியாதபடி சமையலறைக்கு நழுவினான்.
அங்கே ஷர்மிளா வேலையில் மும்பரமாக இருக்க, “இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?” என்றதும் பட்டென்று நிமிர்ந்து கணவனின் முகம் பார்க்க அவனோ ஒரே வேகத்தில் இனியா சொன்ன அனைத்தையும் சொல்லிவிட்டு கோபத்துடன் கதிரை முறைத்தான்.
அவன் சொன்னதை மெளனமாக இருந்தவள், “அண்ணா எங்கே இருந்தாலும் மனசு எல்லாம் இனியா மேலதான்” என்றவளை அவன் கேள்வியாக நோக்கிட அவளோ அவனின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டாள்.
“அவன் இனியாவுடன் உரிமையா சண்டை போட்டு இருந்திருக்கலாம். இவன் எப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல” அவளின் பார்வையைத் தவிர்த்துவிட்டு வேறு எங்கோ பார்த்தபடி.
“அர்ஜூ ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ. அண்ணா இனியாவை விட்டு பிரிய எல்லாம் மாட்டாரு. இன்னொரு விஷயம் அவளே வேண்டான்னு சொன்னதை கவனிக்காமல் அவன் பிடிவாதமாக சொல்லும் போதே தெரியல அவனோட மோட்டிவ் இனியா இல்லன்னு. என்னைக்கும் எதிரி என்று தெரிந்தால் அவங்களை பக்கத்தில் வெச்சுக்கணும்.” என்ற மனையாளை மீண்டும் பார்த்தான்.
அவளின் தீர்க்கமான பார்வையும், தெளிவான பேச்சும் அவனுக்கு எதையோ புரிய வைக்க முயற்சிக்க, “ஷர்மி எனக்கு நிஜமா புரியல..” என்றான் அவளின் முகத்தில் பார்வையை பதித்தபடி.
“இனியாவிற்கு நிறைய மனிதரோட இன்னொரு முகம் தெரியல. அவள் செய்த காரியத்திற்கு ஸ்ரீதர் கோபபட்டு ஏதாவது செய்திருந்தா நீங்க போய் காப்பாத்தி இருக்க முடியுமா? எந்த இடத்தில் உரிமையை நிலை நாட்டனும் என்று அவருக்கு தெரியும். நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்க” என்று சொல்லிவிட்டு அவள் அசராமல் வேலையைத் தொடர்ந்தாள்.
அவள் சொல்லும் வரை அவன் இப்படியொரு கோணத்தில் தான் யோசிக்கவில்லையே என்ற சிந்தனையுடன் ஹாலில் அமர்ந்திருந்த கதிரைப் பார்க்க அவனின் உருவம் மட்டும் தான் இங்கே இருந்தது. உள்ளம் முழுவதும் அவளிடம் இருப்பதை அவனின் தவிப்பே அர்ஜூனிற்கு உணர்த்தியது.
‘இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் எப்படித்தான் பசங்க மனசை தெளிவா படிக்க முடியுது. இரண்டே நிமிஷத்தில் கதிரோட மனசை அக்குவேற ஆணிவேராக சொல்லிட்டாளே’ அவன் கதிரை நோக்கி சென்றான்.
அப்போது சகுந்தலா, “கதிர் நீ போய் இனியாவைப் பார்த்துட்டு வாடா கண்ணா. இல்லன்னா வீட்டிற்கு வரும்போது ஆர்ப்பாட்டமாத்தான் வருவா. இன்னைக்கு என்னன்னு தெரியல, பிள்ளையோட முகமே சரியில்ல.” என்றார்.
அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு, “அர்ஜூன் இருடா நான் இனியாவைப் போய் பார்த்துட்டு வரேன்” என்றவன் அவளை தேடிச்செல்வதை கவனித்த ஷர்மி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
அர்ஜூன் அதை கவனித்தும், ‘என்ன’ என்று பார்வையால் கேட்க, “அத்தை இன்னைக்கு பலத்த இடியுடன் கூடிய மழை வரும்ன்னு பிபிசில நியூஸ் வந்துச்சே நீங்க பார்க்கல” என்று கிண்டலாக கேட்க, “என்னம்மா சொல்ற.. மழை வருமென்று எப்போ நியூஸ்ல சொன்னாங்க” என்று புரியாமல் குழம்பினார் சகுந்தலா.
அவள் சிரித்தபடியே, “பக்கத்து ஊரில் வெள்ளமே வருதாம் அத்தை. நம்ம ஊர் பக்கம் தூறல் கூட போடாமல் இருக்கு வானம்” என்று மீண்டும் அர்ஜூனின் மீது பார்வையைப் பதித்தபடி அத்தையுடன் வம்பு பேசிய மனைவியின் மீது சுவாரசியமாக படிந்தது அவனின் பார்வை.
அவளோ பார்வையாலே, ‘இந்நேரம் பக்கத்து ரூமில் இடி மின்னல் மழை எல்லாமே வந்திருக்கும்’ என்றாள் குறும்புடன். சகுந்தலா புரியாமல் மருமகளை பார்க்க அப்போதுதான் இருவரும் விழிஜாடையில் பேசிவது புரிந்து சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
அர்ஜூனின் வீட்டிலிருந்து வந்த இனியா தன்னுடைய படுக்கையில் அமர்ந்து தன்னை மீறி அழுதாள். ஸ்ரீதர் தன்னிடம் காதலை சொன்னதும், இன்னொரு புறம் கதிர் அதை பார்த்து தன்னை புறக்கணித்தது இரண்டு சேர்ந்து அவளை கலங்க வைத்தது.
சிறிதுநேரம் கண்ணீர்விட்ட கண்கள் மெல்ல மெல்ல தன் நிலையிலிருந்து மாடிவிட கண்ணீர் கோடுகளோடு படுக்கையில் ஜெடம் போல அமர்ந்திருந்தாள்.
அப்போது அறையின் கதவுகள் திறந்து உள்ளே நுழைந்த கதிரின் பார்வை அறை முழுவதும் தேடியது. அங்கே அவளின் படுக்கை அறையில் சோர்ந்து களைத்துப்போன தோற்றத்துடன் அமர்ந்திருந்த இனியாவைக் கண்டு அவனின் உள்ளம் வலித்தது.
தன்னை சுற்றி இருள் படர்ந்தை கூட உணராமல் சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்த தன் உயிர் காதலியைக் கண்டு மனம் நொந்து போனான் கதிர். எப்போதும் பட்டாம்பூச்சி போல சிறகு விரித்து பறந்து திரியும் பெண்ணவள் கண்ணீர் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதை அவனால் பார்க்க முடியவில்லை.
அவன் அறையின் கதவுகளை தாளிட்டுவிட்டு அழுத்தமான காலடி ஓசைகளோடு அவளை நெருங்கினான். அதை கூட உணராமல் அமர்ந்திருந்தவளின் அருகே சென்று அமர்ந்தவன், “இனியா” என்று அழைக்க அவளிடம் அசைவில்லை.
“இனியா” என்று அவன் அழுத்தமாக அழைக்க இப்போது சுவரின் மீதிருந்த பார்வையை அவள் அவனின் பக்கம் திருப்பினாள்.
“இப்போ எதுக்கு அழுகுற” என்று அவளின் கலங்கிய கண்களை துடைத்தபடி அவளின் கலைந்த கூந்தலை வருடி சரி செய்தான். அவளோ அவனையே இமைக்காமல் பார்க்க அவளின் முகத்தை இரண்டு கரங்களில் தங்கிய கதிர் அவளின் பார்வையில் தன் பார்வையை கலக்கவிட்டபடி அவளின் இதழில் தன் உதடுகளை பதித்தான்.
மெல்ல அவளின் இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிய பார்வையால் அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவன் இன்னும் சற்று அழுத்தமாக அவளின் இதழை தனக்கென்று எடுத்துக் கொண்டான். சில கணங்கள் போல நீடித்த இந்த இதழ் முத்தம் அவளை மீட்டெடுத்தது.
அவளின் இதழில் இளைப்பாறி நிமிர்ந்த கதிர் அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பு அவளுக்கு ஆறுதலாக இருக்கவே, “கதிர் மாமா” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் மெளனமாக இருக்கவே அவள் நிமிர்ந்து முகம் பார்க்க, “என்ன” என்றான் அவளின் முகத்தை மெல்ல வருடியபடி.
“ஸ்ரீதர் காதலை சொன்னதுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்ல மாமா. எனக்கு உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும். அவன் லவ் சொல்லிட்ட அவன் பின்னாடியே போயிருவேன்னு நினைச்சுட்டு தானே நீ என்னோட பேசாமல் இருந்த.. நீ அவனோட கடைசி வரை உரிமையாக சண்டையே போடல. யாரிடமோ சொல்றான் என்பது மாதிரி கண்டுக்காமல் அமைதியா வர..” என்றவளின் முகத்தில் கோபம் இருந்தாலும்குரல் கரகரப்புடன் ஒலிக்கவே மெல்ல அவளின் தலையை வருடிய கதிர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான்.
“சாக்லேட் பேபி எனக்கு உன்மேல் கோபம் இல்லடா. சின்ன பொண்ணு என்ற நினைவில் தான் என் மனதை உன்னிடம் சொல்லாமல் மறைத்தேன். காரில் வரும்போது நான் பேசாம வந்ததுக்கு நீயே தப்பா ஒரு அர்த்தம் எடுத்துக்க கூடாது” என்றான் அவளுக்கு புரியும்படி.
அவள் எங்கே அவன் பேசியதை காதில் வாங்கினாள் தானே. அவனின் ‘சாக்லேட் பேபி’ என்ற அழைப்பே அவளின் சோகத்தை பின்னுக்கு தள்ளிவிட குஷியாக அவனோடு டூயட் பாட சென்றுவிட்டாள் கற்பனையில்.
அவள் பதில் பேசாமல் இருப்பதில் அவனின் கவனம் இவளின் பக்கம் திருப்பி, “சாக்லேட் பேபி” என்றதும், “ஆங்.. சொல்லு கதிர் மாமா” என்றாள் கற்பனை கலைந்தவளாக.
“ஸ்ரீதர் லவ் ப்ரப்போஸ் பண்ணிட்டான்னு அவனோட உரிமையாக சண்டைபோட எனக்கு இரண்டு நிமிஷம் போதும். நான் இன்னைக்கு ஊரிலிருந்து வந்தேன். நாளைக்கு ஊருக்கு போயிருவேன். அதுக்கு அப்புறம் உனக்கு அவன் மூலமாக பிரச்சனை வந்தா யார் பார்த்துக்குவா” என்றவன் தெளிவாக கேட்க அவளுக்கும் அப்போது தான் அவன் சொல்ல வரும் விஷயம் புரிவது போல இருந்தது.
“ஆமா நீ கிளம்பி போயிட்ட அந்த பிரச்சனையை நான்தான் சமாளிக்கணும்” என்றவள் ஏதோ நினைவில் சொல்ல, “உனக்கு பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் நான் அவனோட சண்டை போடல” என்றதும் அவளின் கவலைகள் மறைந்துப்போகவே அவனிடம் சண்டைக்கு வந்தாள்.
“நாளைக்கு எனக்கு பிறந்தநாள்.. நீ என்னடான்னா ஊரிலிருந்து வந்ததும் சண்டை போட்டு அழ வெச்சிட்ட” என்று அவனை அவள் அடிக்க அவன் படுக்கையில் சரிய அவனோடு சேர்ந்து சரிந்தாள் இனியா.
அதை உணராமல் அவள் அடிப்பதில் குறையாக அவனோ அவளை அணு அணுவாக பார்வையில் ரசித்தான். சிறிதுநேரம் கழித்தபிறகு அவனிடம் மாற்றத்தை உணர்ந்த இனியா வாயடைத்துப் போனாள். கதிரின் கண்களில் தெரிந்த காதலும், அவனின் உரிமையான பார்வை தீண்டலில் பெண்ணவள் நாணம் கொண்டு தாமரை மலர்போல தலைகவிழ்ந்தாள்.
“சாக்லேட் பேபி” என்றவன் ரசனையுடன் அழைத்தபடியே அவளின் கரம்பற்றி அருகே இழுத்த கதிர், “இனிமேல் தான் உனக்கு போராட்டங்கள் அதிகமாக இருக்கும். அதெல்லாம் போராடி ஜெய்த்துவிட்டு மாமாவை தேடி வந்துவிடு செல்லம்.” என்ற கதிரின் வார்த்தைகள் சில்லென்ற தென்றல் போல அவளின் இதயம் தீண்டி சென்றது.
அவள் அவனின் மார்பில் சாய்ந்தபடி அவனை இமைக்காமல் பார்க்க அந்த பார்வையில் தன்னை தொலைத்த கதிர் தான் கொண்டுவந்த பேக்கில் இருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் அது என்னவென்று புரியாமல் பிரித்து பார்த்தாள்.
அவளின் பெயரில் இடம் வாங்கிப்போட்டு இருந்தான். அவள் அவனை கேள்வியாக நோக்கி, ‘இது என்ன’ என்று பார்வையால் விளக்கம் கேட்க, “நீ பிஸ்னஸ் பண்ண கம்பெனி கட்ட இடம் வாங்கி போட்டு இருக்கேன்”என்றவனை மீண்டும் தர்மத்திற்கும் மொத்தினாள் இனியா.
“ஏன் மாமா நீ இப்படி இருக்குற? நீ விரும்பிய படிப்பு, உனக்கு பிடிச்ச வேலை எதுவும் கிடைக்கல. சரி அடுத்து உனக்குன்னு ஏதாவது சேர்த்து வைக்காமல் மற்றவங்களுக்கு நல்லது செய்றேன்னு ஆசரமம் ஆரம்பிச்ச. இப்போ என்னை படிப்புக்கு அமெரிக்கா அனுப்பிட்ட. அடுத்து தென்றலுக்கு ஏதாவது சேர்த்து வைப்பன்னு நினைச்சேன். இப்போ என் பெயரில் இடம் வாங்கி போட்டு இருக்கேன்னு வந்து நிற்கிற” என்றவள் தனக்கு வந்த கோபத்தை வார்த்தையால் கொட்டி தீர்த்தாள்.
அவளுக்கு இன்னும் விஷயம் தெரியவில்லையோ என்ற சந்தேகத்துடன், “ஒரு நிமிஷம்” என்றவன் சுப்புவிற்கு போன் செய்து அவளிடம் கொடுத்தான்.
“இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம். நான் கதிர்கிட்ட உனக்கு பட்டுபுடவை கொடுத்து விட்டு இருக்கேன். அப்பா உனக்காக மோதிரம் ஒன்னு வாங்கிக் கொடுத்தார்” என்றவரிடம் இருந்து போனை பிடுங்கிய தென்றல்,
“இனியா அண்ணா உன்னிடம் விஷயத்தை சொல்லலையா? சஞ்சீவ்கிட்ட அண்ணா நேரடியாக பேசி எல்லாமே ஓகே ஆகிருச்சு. என்னோட படிப்பு முடிஞ்சதும் அவருக்கும் எனக்கும் கல்யாணம்” என்றவள் தொடர்ந்து,
“அண்ணா எனக்குன்னு ஐந்து பவுன் நகை எடுத்து அப்பா அம்மாகிட்ட கொடுத்துட்டுதான் உன்னைப் பார்க்க அங்கே வந்திருக்கு” என்றவள் இனியாவை பேசவிடாமல் அவளே பேசிக்கொண்டு இருந்தாள்.
அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்த இனியா, “ஐ லவ் யூ கதிர் மாமா.. உனக்காகவே நான் சீக்கிரம் படிப்பை முடிச்சிட்டு இந்தியா வருவேன்” என்ற இனியாவின் கழுத்தில் அந்த செயினைப் போட்டுவிட்டான்.
அதில் ஒரு குட்டி சாக்லேட் போன்ற செப்பில் இரண்டு இதயங்கள் இணைந்திருக்க அதன் உள்ளே குட்டி வெள்ளைகள் பளிச்சென்று ஒளிவீசியது.
அவள் திகைப்புடன் அவனை இமைக்காமல் பார்க்க, “என்னதான் உன்னைவிட்டு நான் விலகி இருந்தாலும் என் மனசு உன்னை சுற்றித்தான் இருக்கு இனியா. உன்னோட அந்த கள்ளம்கடபம் இல்லாத பாசத்திற்கு இந்த கதிர் அடிமை. என்னோட குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் தேவையையும் உணர்ந்து வெச்சிருக்கும் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்” என்றவன் மறந்தும் ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை கூறவில்லை.
அவன் கூறிய வாக்கியங்களே அவனின் காதல் மனதைப் பறைசாற்ற போதுமானதாக இருந்தது. அந்த இனிமையான தருணத்தை அவள் உணர்ந்த வேளையில் அவளின் உதட்டில் புன்னகை அரும்பிட அவளை இழுத்து அணைத்த கதிர், “உன்னோட பிரெண்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிட்டேன் சந்தோசமா” என்று கேட்க அவளை மறுப்பாக தலையசைத்தாள்.
அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, “நம்ம காதலுக்கு சிவப்புக்கொடி காட்டாமல் இருந்தீயே அது போதும்” என்றவள் வெக்கத்துடன் அவனின் மார்பில் புதைய அவனும் அந்த தருணத்தை தன்னை மறந்து ரசித்தான். அர்ஜூனின் குரல்கேட்டு நடப்பிற்கு வந்த இனியா வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.
“சுவாசிக்க சுவாசம் இருந்தும்
என்னையே நான் மறந்த
வேளையிலும்..
ஒவ்வொரு நிமிடமும்
உன்னை நினைக்கிறேன்..
நீ காட்டும் அன்பிற்கு
இந்த பேதை மனம்
கரைந்து போகிறதே..
நேசத்தை சொல்லாமல்
சொல்லிவிட்டாய்..
ஒரே ஒரு பார்வையால்..
உன் விழியில் என் காதலை
உணர்ந்த தருணம்..
தித்திக்கும் நினைவானது
என் நெஞ்சினிலே..” காற்றுடன் படபடவென்று திரும்பிய டைரியின் பக்கத்தில் காதல் உணர்ந்த தருணத்தை கவிதையாக எழுதி வைத்திருந்தாள்.
ஸ்ரீதரின் மனமாற்றம்
இரவு ப்ளைட்டில் வந்த கதிரை அழைத்துச் செல்ல ஏர்போர்ட் வந்திருந்தாள் நேஹா. அவள் வருவாள் என்று அவன் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. கிட்டதட்ட நடுநாசி நெருங்கும் நேரத்தில் முகத்தில் பதட்டத்துடன் நின்றவளைப் பார்த்தும் மற்ற விஷயங்கள் பின்னுக்கு தள்ளபட்டது.
அவளோடு சேர்ந்து கால்டாக்ஸியில் ஏறிய மறுநொடி, “என்னாச்சு நேஹா” என்று விசாரித்தான்.
“எங்க சித்தப்பா மக மஞ்சரி நாலுப்பேர் சேர்ந்து கெடுத்துட்டாங்க கதிர். இப்போ அவ ஹோஸ்பிட்டல இருக்கடா” கண்ணீரோடு கூறிய நேஹாவின் கரத்தைப்பிடித்து அழுத்தம் கொடுத்து, “நம்ம ஹாஸ்பிட்டல் போகலாம் நேஹா” அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு டிரைவரை காரை திருப்ப சொன்னான்.
ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க நினைத்தாலும், வன்முறையாக நடக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. தினமும் பேப்பரை திறந்தாலே இந்த மாதிரி பாலியல் தொந்தரவுகளைப் பார்க்கும் போது மனம் கனத்து போகிறது.
இருவரும் சென்று அந்த பெண்ணைப் பார்க்க அப்போது தான் கண்விழித்த பெண்ணின் விழியில் உயிர்ப்பு இல்லாமல் எங்கோ பார்த்தபடி பித்துபிடித்தவள்போல அமர்ந்திருந்தாள். நேஹாவின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், “அண்ணா சாக்லேட் வாங்கிட்டு வந்தியா” என்று உரிமையுடன் சண்டைபோடும் குழந்தை முகம் மனதில் வந்துபோனது.
நேஹா அவனின் கரம்பிடித்து தடுக்க, “ஏன்” என்றான் ஒற்றை சொல்லாக.
“அவ அவங்கப்பா தொடுகையைக்கூட உணரல” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய. அந்த பெண்ணின் உணர்வுகள் மரத்துபோது என்ற உண்மையை உணர்ந்தபிறகும் மனதில் தைரியத்தை வரவழைத்து அந்த பெண்ணின் அருகே சென்றான் கதிர்.
அவளின் அருகே அமர்ந்து, “மஞ்சரி” என்றழைக்க அவளோ எங்கோ பார்த்துக் கொண்டே இருக்க மெல்ல அவளின் கரம்பிடித்ததும் பட்டென்று திரும்பிய பெண்ணின் முகத்தில் அவனைக் கண்டதும் பயம் பரவியது.
அந்த பெண்ணின் தாய் – தந்தை இருவரும் அவளைப் பார்த்து கலங்கிட, “ஷ்..” என்றவனோ அவளை இமைக்காமல் பார்த்துவிட்டு தன் பாக்கெட்டிலிருந்து சாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்ட, “அண்ணா சாக்லேட் பார்த்தாலே கசக்குது” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.
அவனோ அவளின் கையில் அழுத்தம்கொடுத்து, “வாழ்க்கை கசக்குதுன்னு இங்கேயே இருக்க முடியாது மஞ்சரி. உன்னோட மனசில் கலங்கம் இல்லன்னா அண்ணா சொல்லும் பேச்சு கேளுடா” என்றவனை அவள் நம்பிக்கை இழந்த பார்வை பார்த்து வைத்தாள்.
அவளின் மனநிலை உணர்ந்து, “சீக்கிரம் இங்கிருந்து நீ வெளியே வரணும்” என்றவன் அழுத்தமாக கூற, “அண்ணா எனக்கு வெளி உலகத்தைப் பார்க்க பிடிக்கல. நான் இங்கே இப்படியே செத்துபோறேன்” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
அவளின் பேச்சு அங்கிருந்தவர்களின் மனதை கசக்கி பிழிந்தது. அவளின் தலையை வருடிய கதிர் அவளுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேச நினைத்தான். அதற்குள் டாக்டர் வரவே அங்கிருந்த மற்றவர்கள் அறையைவிட்டு வெளியேறினர்.
“கதிர் இப்போ என்ன பண்றது” என்று கேட்க, “ஏன் என்ன பண்ண நினைக்கிற நேஹா” என்றவன் கோபத்துடன் அவளைப் பார்த்தான்.
அவனின் மனநிலை புரியதவளோ, “அவளை ரேப் பண்ணவங்க மேல கேஸ் கொடுக்க போறேன்” என்றாள் உறுதியான குரலில். அவளை தீர்க்கமாக பார்த்த கதிரின் பார்வையில் வந்த மாற்றத்தை அவள் கவனிக்கவே இல்லை.
“அப்புறம்” என்றவன் புருவம் உயர்த்திட, “அவளுக்கு நியாயம் கிடைக்க வழி பண்ண போறேன்” ரௌத்திரத்தில் பேச பேச அவனின் கோபம் அதிகரித்தது.
“நேஹா ஸ்டாப்” என்றவன் இருக்கும் இடத்தை மறந்து கத்த “என்னாச்சு கதிர்” என்றாள் அவள் காரணம் புரியாமல்.
“நீ கேஸ் போட்டு அதில் ஜெய்க்கவே முடியாது நேஹா. நம்ம எல்லாம் பணக்காரன் இல்லடி. இங்கே பணம் இருக்கிறவன் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும். இப்போது அவளோட காயபட்ட மனசுக்கு மருந்து தேவை. இந்த மனநிலையில் அவளைக் கொண்டுபோய் கோர்ட்டில் நிறுத்துன அங்கே கேட்கிற கேள்வியில் இவ பாதி செத்துருவா. மீதி இருக்கிற உயிரும் மற்றவங்க கேவலமாக பார்க்கும் பார்வையில் போயிரும்” என்றவன் நிதர்சனத்தை கூற நேஹாவிற்கு மனம் வலித்தது.
‘பெண்ணாக பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என்பதெல்லாம் பொய்யாக போனதை நினைத்து அவள் மனம் கலங்கியது. தினம் தினம் இந்த சமூகத்தினால் அவள் அனுபவிக்கும் கொடுமைகளை நினைக்கவே அவளின் மனம் வலித்தது.
அவளின் அமைதியைக் கவனித்த கதிர், “நீ அவளை நல்ல சைகார்ட்டிஸ்கிட்ட கூட்டிட்டு போ. கொஞ்ச நாளைக்கு அவளை வேற ஊருக்கு கூட்டிட்டு போங்க. அங்கே வெச்சு டிரீட்மெண்ட் கொடுங்க. அவளுக்கும் இந்த வாழ்க்கை பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மாறுவா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இரவு வீட்டிற்கு சென்றவனுக்கு தூக்கம் வர மறுத்தது. மஞ்சரிக்கு நடந்த விசயம் அவனின் மனதை என்னவோ செய்தது. அதுவும் கடைசியாக அவன் சொல்லிவிட்டு வந்த விஷயம் இப்போது நினைத்தாலும் அருவருப்பாக இருந்தது. அதற்காக தன் தங்கை வயதுள்ள பெண்ணை கோர்ட் கேஸ் என்று அலைய வைத்து அவளை உயிரோடு கொல்ல அவனின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற உறுதி எடுத்தபிறகு தான் அவனின் விழிகளை தூக்கம் தழுவியது. மறுநாள் அவன் வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பி செல்லும் வழியில் மஞ்சரியைப் பார்த்து பேசிவிட்டு சென்றான். பிறகு மாலை வீட்டிற்கு வரும்போதும் ஹாஸ்பிட்டல் சென்று அவளைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.
அவன் இரவு உணவிற்கான வேலைகளை கவனிக்க நேரத்தில் வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டது. கதிர் யாரென்று வாசலைப் பார்க்க “வா தமிழ் என்ன இந்த நேரத்தில்” என்றான்.
“என்ன அண்ணா நான் இந்த நேரத்தில் இங்கே வரக்கூடாதா?” உரிமையுடன் சண்டை போடவே, “உனக்கு இல்லாத உரிமையாடா” என்ற கதிர் அவனை ஹாலில் அமர வைத்துவிட்டு சமையலறைக்கு சென்றான்.
“அண்ணா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா” என்று அவனின் பின்னோடு சென்றவன் கதிர் மறுத்தும் கேளாமல் அவனுக்கு காய்கறிகளை நறுக்கி கொடுத்தபடியே, “இன்னைக்கு ஒரு கம்பெனியில் இருந்து வந்து நம்ம ஆசரமத்திற்கு டொனேஷன் பண்ணாங்க அண்ணா” என்று ஆசரமத்தின் விஷயங்களை கூறினான்.
கதிரோ, “ஆசரமத்தின் பொறுப்பை உன் கையில் ஒப்படைச்சு இருக்கேன். உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்குடா” என்றதும் அவனின் முகம் சட்டென்று மாறிப்போனது. அவனின் மனதில் மறந்ததாக நினைத்ததெல்லாம் மீண்டும் நினைவிற்கு வந்தது.
அவனின் அமைதியைக் கவனித்த கதிர், “தமிழ்” என்று அதட்டவே அவனின் கவனம் கலைந்து நிமிர, “வா சாப்பிட போலாம்” அவனின் மனநிலை உணர்ந்து பேச்சை திசைதிருப்பினான்.
அதன்பிறகு அவன் ஊருக்கு சென்ற விஷயம் அங்கே நடந்த விஷயங்கள் என்று பேச்சு திசைமாறிவிட்டது. அவனும் தன்னை மறந்து அவனோடு இயல்பாக பேச தொடங்கிவிட்டான். ஆசரமத்தில் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்று பேசியபடியே இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.
“சரி அண்ணா நான் கிளம்பறேன்” என்ற தமிழின் தோளில் தட்டிக் கொடுத்தவன், “நமக்கு ஒரு விஷயம் கெட்டதாக நடக்குதுன்ன அதை பாஸிடிவாக எடுத்துக்க பழகணும் தமிழு” என்றவன் வாசல்வரை வந்து வழியனுப்பி வைக்க அதுவே அவனின் மனதிற்கு நிறைவைக் கொடுத்தது.
கதிர் தொடங்கிய ஆசரமத்தின் பொறுப்புகளை எல்லாம் தமிழரசனிடம் தான் ஒப்படைத்திருந்தான். சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு படித்து, ஒரு பிரபலமான நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருந்தான்.அங்கே அவனுக்கு நடந்த கசப்பான விஷயங்கள் அவனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிபோட்டுவிட அதிலிருந்து மீண்டுவர உதவினான் கதிர்.
அவனிடம் ஆசரமத்தின் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கதிர் மற்ற வேலைகளை கவனிக்கிறான். அன்றைய நாளுக்குப்பிறகு அடுத்தடுத்த நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது.
***
இனியா வழக்கம்போல கல்லூரிக்கு செல்ல அங்கே அவளுக்கு முன்னாடி வந்து ஆஜரான ஸ்ரீதரைப் பார்த்து இனியாவிற்கு கோபம் கோபமாக வந்தபோதும் அவள் பொறுமையை இழுத்துபிடித்தவண்ணம் தன் வகுப்பை நோக்கி சென்றவளை வழிமறித்து நின்றான்.
“இப்போ எதுக்கு இப்படி பண்ற ஸ்ரீதர்” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “என்னை கண்டுக்காமல் போற இது நியாயமா?” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தாள் இனியா.
‘இவனிடம் என்ன சொல்லி எப்படி புரிய வைக்க போறேனோ’ என்றவள் மனதிற்குள் புலம்பிட இவனோ அவளை இமைக்காமல் பார்த்தான். அவளோடு பழகிய கொஞ்ச நாளில் அவளை அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவளை யாருக்கும் விட்டுகொடுக்கக்கூடாது என்ற விசயத்தில் உறுதியாக இருந்தான்.
அவனோ அவளின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைபடாமல், “நான் லவ் சொன்னேன். அதுக்கு நீ அப்படியொரு பதிலை சொன்னால் சும்மா விட்டுவிடுவேன்னு நினைக்கிறீயா இனியா. உனக்கு எப்போதும் நான்தான் பெஸ்ட்டாக இருக்கணும்” பிடிவாதத்துடன் கூற, ‘ஐயோ இவனை வெச்சு நான் என்ன பண்ண போறேன்? கதிர் மாமா இதுக்குதான் நான் படிக்க வெளிநாடு வரலன்னு சொன்னேன்’ என்று மானசீகமாக கதிரை வறுத்தெடுத்த இனியாவோ பல்லைக் கடித்தாள்.
“ஏன் இனியா நான் உன்னை ரொம்ப இம்சை பண்றேனா” என்றவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
“ஆமா” என்றவளோ அவனைவிட்டு விலகி இரண்டடி எடுத்து வைத்திட ஸ்ரீதர் அவளின் கரம்பிடித்து தடுத்தான். அவளைத் திரும்பிப் பார்த்த இனியாவிற்கு ஸ்ரீதரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
சிறுவயதில் இருந்தே பாசம் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாமல் இருந்தவனிடம் தன்னுடைய நட்பை எப்படி அவனுக்கு புரிய வைப்பதென்று அவனுக்கு புரியவே இல்லை.
“ஸ்ரீதர் நான் என்னோட லிமிட் தாண்டி உன்னோட பழகிட்டேனா” இனியா குழப்பத்துடன் கேட்க அவனோ மறுப்பாக தலையசைத்தான். அவனை அங்கிருந்த சேரில் உட்கார சொல்லிவிட்டு அவனின் அருகே அமர்ந்தவளை சிந்தனையோடு பார்த்தான்.
“ஸ்ரீதர் என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்” என்றாள்
“உனக்கு அப்பா, அம்மா இல்ல. உன்னோட அத்தை, மாமாதான் இப்போ உன்னை படிக்க வைக்கிறாங்க” என்றான் சாதாரணமாகவே.
அவனின் பதிலே அவளைப் பற்றிய விஷயங்கள் அவனுக்கு தெரியும் என்றபோதும் முழு விவரம் அவனுக்கு தெரியாது என்ற உண்மையை உணர்ந்தாள் இனியா.
“நீ சொன்னது எல்லாமே சரிதான் ஸ்ரீதர். ஆன பெற்ற பிள்ளையைப் படிக்க வைக்க முடியாதுன்னு சொல்லிய என் மாமாவே என்னை படிக்க வெளிநாடு அனுப்பி இருக்கார்” என்றதும் அவன் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“அதுக்காக உன்னை காதலிக்க மாட்டேன்னு சொல்ல சொல்றீய” என்றவன் கோபத்துடன் ஆரம்பிக்க அவனைக் கைநீட்டி தடுத்தவளோ ஆழ மூச்செடுத்துவிட்டு தன் குடும்பம் தனக்கு எவ்வளவு முக்கியம் என்ற விஷயத்தை கூறினாள்.
அவள் பேசிய அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுவிட்டு, “எல்லாமே வாழ்க்கையில் இருக்கும் இனியா. நீ என்னைக் காதலிக்கிறீயா” பிடிவாதத்துடன் கேட்டவனை என்ன செய்வதென்று அவளுக்கே தெரியவில்லை. குழந்தைக்கு சொல்வது போல அனைத்தும் சொன்னபிறகும் கூட அவன் பிடிவாதமாக பேசுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
“ஸ்ரீதர் நீ என்னை காதலிக்கிற என்ற உண்மையை என்னால ஏத்துக்க முடியலடா” என்றவளை அவன் முறைக்கவே, “உனக்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்றேன் ஸ்ரீதர். எனக்கு கதிர் மாமாதான் பிடிக்கும். நீ என்னைக்கும் என்னோட ஃபிரெண்ட் தான்” என்றதும் அவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது.
“உன்னால் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்ல முடியுது இனியா. இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது உன்னோட மனசு என் பக்கம் சாயும் அதுவரை உன்னை விரும்பிட்டே இருப்பேன்” என்றவன் அகிருந்து எழுந்தான்.
“என்னோட மனசு மாறவே மாறாது ஸ்ரீதர்” என்றவளை அழுத்தத்துடன் பார்த்த ஸ்ரீதர் சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன்பிறகு இனியாவே அவனிடம் பேசாமல் சென்றாலும் அவனே வழிய வந்து அவளிடம் பேசினான். அவளே அவனை தவிர்க்க நினைத்தாலும் அவன் அவளிடம் பேசுவதை தவிர்க்கவில்லை.
இந்த மாதிரி நாட்கள் நகர கிட்டதட்ட ஒருவாரம் கல்லூரிக்கு லீவ் போட்டுவிட்டான். அவனை காணவில்லை என்றதும் அவனை தேடி அவன் தங்கியிருந்த பிளாட்டிற்கு சென்றான். அங்கிருந்த சிலர் அவளைப் பார்த்ததும், “ஸ்ரீ உன்னை தேடி ஒரு பொண்ணு வந்திருக்குடா” என்றான் அவனின் ரூம்மேட்.
அவன் ரொம்ப சோர்வாக கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்த இனியாவிற்கு மனசிற்கு வருத்தமாக இருந்தது. தன்னால் அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதோ என்று அவளின் மனம் வலித்தது.
ஸ்ரீதர் அவளைப் பார்த்தும், “வா இனியா” என்று சோர்வுடன் எழுந்து அமர, “ஸ்ரீ உடம்புக்கு என்னடாச்சு? ஏன் ஒரு வாரமாக கிளாஸ்க்கு வரல” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
அவளின் அக்கறை மனதைத் தொட, “திடீரென்று காய்ச்சல் இனியா” என்றான் புன்னகைக்க முயன்றபடி.
“ஒரு போன் பண்ணியிருந்தா அர்ஜூன் அண்ணாவை அனுப்பிவிட்டு இருப்பேன் இல்ல” அவள் அவனிடம் கோபத்துடன் சண்டை போடுவதை நினைத்து அவனுக்கு சந்தோசமாக இருந்தது.
இந்த இடைப்பட்ட நாட்களில் அவளின் மனநிலையை தெளிவாக புரிந்து கொண்டான் ஸ்ரீதர். இனியாவிடம் விளையாட்டு போல லவ் சொல்லிவிட்டு இரண்டு நாள் தூக்கத்தை இழந்து இருந்தவனுக்கு அவளின் பாசம் காலம் முழுவதும் தனக்கு வேண்டுமென்று பிடிவாதத்துடன் அவளிடம் ஒவ்வொரு நாளும் பேசினான்.
இனியாவிடம் நட்பாக பழகும்போது இருந்த நெருக்கம் கூட இப்போது அவளிடம் இல்லை என்ற உண்மையை தெளிவாக உணர்ந்து இருந்தான். தனக்கு காய்ச்சல் என்றதும் ஒரு தோழியாக தன்னை தேடிவந்து விசாரித்தவளிடம் காதல் என்ற வார்த்தை சொல்லவே அவனுக்கு உடம்பெல்லாம் கூசியது.
நட்புக்கும், காதலுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சில மாதமாக அவனுக்கு செய்கையின் மூலமாக புரிய வைத்திருந்தாள்.
“நான்தான் உன்னோட நட்பை காதல் என்று தவறாக கற்பனை பண்ணிட்டேன் போல என்னை மன்னிச்சிரு இனியா” என்றவன் மனதார மன்னிப்பு கேட்க அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“இப்பொழுதாவது புரியுதா ஸ்ரீதர். காதலுக்கு ஒரு புனிதம் இருக்கு. நட்புக்கும் கற்பு இருக்கு. சிலர் அதை தவற புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணி அதுக்கு பிறகு ஒன்றாக வாழ முடியாமல் பிரியறாங்க.” என்றவள் நிதர்சனத்தை கூறவே அவனும் அமைதியாக இருந்தான்.
“காதல் ஒருவகை உள் உணர்வு அது எல்லோரிடமும் வராது ஸ்ரீதர்.. நம்ம மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட மட்டும் அந்த உணர்வு வரும்..” என்ற இனியா சிலநொடி மௌனமாக இருந்தாள்.
பிறகு நிமிர்ந்தவளின் உதட்டில் புன்னகை அரும்பிட, “எனக்கு மாமாகிட்ட ஒரு விஷயம் பிடிக்கும். எனக்கு எது எந்த நேரத்தில் தேவையோ அதை அதுக்கு முன்னாடியே வாங்கி வெச்சிருப்பாங்க. அதிலிருந்து அவங்க மீதான அக்கறை புரியும்” என்றவள் ஸ்ரீதரிடம் ஒரு விஷயம் கூறினாள். அதை கேட்டு அதிர்ந்துதான் போனான்.
“தன்னோட ஆசை, தன்னோட லட்சியம், தன்னோட கனவு என்று நம்ம ஒவ்வொரு நொடியும் நேசிக்கும் ஒரு விஷயத்தை சட்டென்று விட்டுகொடுக்க முடியாது ஸ்ரீதர். எனக்காக இஞ்சினியர் ஆகிற கனவை தியாகம் பண்ணிட்டு என்னை இங்கே படிக்க அனுப்பி இருக்காரு. அப்போவே தெரியலையா அவரோட நல்ல மனசு” என்ற இனியா தன் கலங்கிய கண்களைத் துடைத்துகொண்டாள்.
அவளின் பேச்சிலிருந்தே அவளின் மனம் அவனுக்கு தெளிவாக புரிந்துவிட, “உன்னோட காதல் அனுதாபத்தால் வந்த காதலா?” என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்தி, “இல்லடா” அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.
“அப்புறம்” என்றதும்,“எனக்கு கதிர்மாமாவை ரொம்ப பிடிக்கும். நான் மனசில் நினைச்சா அதை வாங்கி தர என்னோட மாமாவால் முடியும். ஆனால் நானாக ஆசைப்பட்டது அவரை மட்டும் தான். இந்த படிப்பு படிக்க நான் இங்கே வந்தது கூட இன்னொட மாமா மனசு வருத்தப்பட கூடாதுன்னு தான்” என்றவளின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது.
நம்மள உண்மையாக நேசிக்கிற ஒருத்தருக்காக தன் லட்சியத்தை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். ஆனால் கதிர் அவளுக்காக செய்ததை நினைக்கும்போது ஸ்ரீதருக்கு தன்னை நினைத்து அருவருப்பாக இருந்தது. தோழி என்றவளிடம் காதலை சொன்ன தன் மடத்தனத்தை நினைத்து மனதளவில் நொந்து போனான்.
அவன் சிந்தனையோடு இருப்பதைப் பார்த்து, “ஸ்ரீதர் உன்னோட லைப்ல ஒரு பொண்ணு வருவாள். அவ வந்து உனக்கு கற்றுக்கொடுப்பா காதலென்றால் என்னன்னு” என்றவள் குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு எழுந்து சென்றாள்.
“உள்ளங்கள் உறவாடும்
நேரத்தில் அங்கே மௌனம்
அழகாகும் என்றால்..
உன்னோடு நான் இருக்கும்
தருணங்கள் எனக்கு
பொக்கிஷம் போன்றது..
உன் நினைவுகளை சேகரித்த
என் மனதிற்கு தெரியும்
என் மனம் உன்னை மட்டும்
விரும்புகின்ற விஷயம்..
நீ அறிவாயோ சூரியனே
இந்த பெண்ணின் காதல் மனம்..” அவளின் டைரியில் எழுதியா இனியா வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள்.