KAATRE-3

KAATRE-3

போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்த கவிகிருஷ்ணா வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும் உடனே தன் அறையில் இருந்து வெளியேறி வந்தான்.

அங்கே தேன்மதி மயங்கி கிடக்க ஒரு சில நர்ஸ்கள் அவளை கட்டிலில் நேராக படுக்க வைத்து கொண்டிருக்க இன்னொரு நர்ஸோ கவிகிருஷ்ணாவை நோக்கி ஓடி வந்தார்.

“டாக்டர் திடீர்னு அவங்க தலையை பிடித்து கத்திகிட்டே மயங்கி விழுந்துட்டாங்க” என்று நர்ஸ் கூற உடனடியாக தன் போனை பேண்ட் பாக்கெட்டில் போட்டவன் விரைந்து தேன்மதியின் அருகில் சென்றான்.

கவிகிருஷ்ணா வருவதைப் பார்த்ததும் மற்றைய நர்ஸ்கள் ஒதுங்கி கொள்ள கவிகிருஷ்ணா தேன்மதியைப் பரிசோதித்து பார்க்கத் தொடங்கினான்.

உடனடியாக தேன்மதியை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யும் படி கட்டளையிட்டவன் அடுத்து என்ன செய்வது என்று கவனிக்கத் தொடங்கினான்.

இரண்டு, மூன்று மணி நேரமாக தேன்மதியை மயக்கத்தில் இருந்து தெளிவடையச் செய்வதற்காக தொடர் சிகிச்சை நடைபெற சிறிது நேரத்தின் பின்னர் தேன்மதியை சாதாரண அறைக்கு மாற்றம் செய்திருந்தனர்.

மணித்தியாலத்திற்கு ஒரு தடவை தேன்மதியை வந்து பார்த்துவிட்டு சென்ற கவிகிருஷ்ணாவிற்கு தேன்மதியைப் பற்றி இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியவில்லை.

உடலளவில் அவளது ஆரோக்கிய நிலையை பரிசோதித்து பார்க்கவும் சிகிச்சை அளிக்கவும் செய்ய முடிந்த கவிகிருஷ்ணாவினால் அவளது மனதில் உள்ள குறைகளை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

தேன்மதியின் மருத்துவ விபரங்களை பார்த்து கொண்டு நின்றவன் வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்கவும்
“எஸ் கம் இன்” என்று விட்டு மீண்டும் அந்த விபரங்களை படிப்பதில் மூழ்கிப் போனான்.

“என்ன டாக்டர் ஸார் பிஸியா? உள்ளே வரலாமா?” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவன் தன் எதிரில் நின்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க தலை முடி அங்கங்கே நரைத்து இருக்க புன்னகை மாறாத முகத்தோடு நின்றவரைப் பார்த்து புன்னகையோடு எழுந்து நின்றான்.

“டாக்டர் விருத்தாசலம் நீங்க இப்படி கேட்டுட்டா உள்ளே வரணும்?” என்று கவிகிருஷ்ணா கேட்கவும்

புன்னகையோடு அவனெதிரில் அமர்ந்து கொண்டவர்
“என்ன இருந்தாலும் இது உன் வேர்க் டைம் ஷோ டிஸ்டர்ப் பண்ணக் கூடாது இல்லையா?” என்று கேட்க அவரைப் பார்த்து புன்னகத்தவன் தன் கையில் இருந்த பைலை அவரின் புறமாக நீட்டினான்.

“நான் காலையில் போனில் சொன்னது இந்த பொண்ணைப் பற்றி தான் டாக்டர் அவங்களைப் பற்றி எல்லாத் தகவலும் அவங்க சொல்லுறாங்க ஆனா எப்படி அவங்க இந்த ஊருக்கு வந்தாங்கன்னு அவங்களுக்கே தெரியல அது மட்டுமல்ல என்னை அவங்க சொந்தம்னு வேற சொல்லுறாங்க எனக்கு அவங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவே முடியல டாக்டர்”  என கவிகிருஷ்ணா கூறவும் அவன் கூறுவதை கேட்டு கொண்டிருந்தவர் கவிகிருஷ்ணா கொடுத்த பைலை புரட்டிப் பார்க்கத் தொடங்கினார்.

“இது மாதிரி பல கேஸ் நான் டீல் பண்ணி இருக்கேன் கிருஷ்ணா சில பேருக்கு தலையில் பலமாக அடிபடும் போது பழைய நினைவுகள் மொத்தமாக இல்லாமல் போகும் சில பேருக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் மறந்து போகும் இதில் இந்த பொண்ணுக்கு ஏற்பட்டு இருக்கிறது இரண்டாவதாக நான் சொன்னது”

“இது சரி பண்ண கூடியது தானே டாக்டர்?”

“கண்டிப்பாக ஆனா அது எப்போ நடக்கும்னு தான் சொல்ல முடியாது நீ இப்போ தானே டியூட்டியில் ஜாயின் பண்ணி இருக்க அது தான் நீ கொஞ்சம் கன்பியுஸ் ஆகிட்டேன்னு நினைக்குறேன் இது நீ சந்திக்கிற முதல் கேஸ் இல்லையா? இதில் இருந்து நீ நிறைய விஷயங்கள் கத்துக்க முடியும் கிருஷ்ணா” என்று விருத்தாசலம் கூறவும் ஆமோதிப்பாக தலை அசைத்தான் கவிகிருஷ்ணா.

“அவங்க தலையில் அடிபட்டு இருக்கிறதனால் அடிக்கடி அவங்களுக்கு தலைவலி வருது அதை குணப்படுத்த என்னால முடிந்த எல்லா சிகிச்சைகளையும் நான் பண்ணுவேன் ஆனா அவங்க நினைவுகளை எல்லாம் பழைய நிலைக்கு கொண்டு வர்றதுக்கு நீங்க தான் ஏதாவது பண்ணணும் டாக்டர்” என்று கவிகிருஷ்ணா கூறவும்

அவனைப் பார்த்து புன்னகையோடு தலை அசைத்த விருத்தாசலம்
“கண்டிப்பாக கிருஷ்ணா அவங்களை பரிபூரணமாக குணப்படுத்த வேண்டியது நம்ம பொறுப்பு” என்றவாறே எழுந்து கொள்ள அவரோடு இணைந்து பேசிக் கொண்டே கவிகிருஷ்ணாவும் நடந்து சென்றான்.

கவிகிருஷ்ணா ஊட்டியில் இருக்கும் பிரபல மருத்துவமனையான லோட்டஸ் ஹாஸ்பிடலில் நியூரோ சர்ஜனாக பணி புரிந்து கொண்டு இருக்கிறான்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் தன் படிப்பை முடித்து விட்டு இந்த மருத்துவமனையில் வேலையில் இணைந்து கொண்டவன் பல வகையான நபர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளான்.

ஆனால் நினைவுகளை இழந்த ஒரு நபருக்கு சிகிச்சை அளிப்பது  கவிகிருஷ்ணாவிற்கு இதுவே முதல் தடவை.

இந்த சிகிச்சை மூலம் பல விடயங்களை கற்றுக் கொள்ளக் கூடும் என்று கவிகிருஷ்ணா நினைத்து இருக்க கடவுளோ வேறு ஒரு திட்டத்தை கவிகிருஷ்ணாவின் வாழ்வில் நடத்த திட்டம் தீட்டி இருந்தார்.

மாலை நேரம் ஊட்டி முழுவதும் பனிக்காற்று சாரலாக வீசத் தொடங்க மயக்கத்தில் இருந்த தேன்மதி மெல்ல மெல்ல கண் விழிக்கத் தொடங்கினாள்.

மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டு சுற்றிலும் நோட்டம் விட்டவள் மறுபடியும் வைத்தியசாலையிலேயே தான் இருப்பதைப் பார்த்து முகம் வாடிப் போனாள்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவித்துப் போன தேன்மதி அங்கிருந்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

இயற்கையின் பசுமை, மாலை நேரத்து சூரிய வெளிச்சம், மெல்லிய படலம் போன்று மலையையும், வானையும் படர்ந்து இருந்த பனிப் போர்வை என ரம்மியமான இயற்கையின் அழகை ரசித்து பார்த்து கொண்டிருந்த தேன்மதி அந்த நொடி தன்னை சூழ இருந்த பிரச்சினை, கேள்வி, குழப்பம் என எல்லாவற்றையும் மறந்து போய் இருந்தாள்.

வேலை முடிந்து வீடு செல்லத் தயாராக வந்த கவிகிருஷ்ணா தேன்மதி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

அங்கே தேன்மதி ஏதோ சிந்தனை வயப்பட்டவளாக அமர்ந்திருக்க அவளருகில் வந்த கவிகிருஷ்ணா
“மிஸ்…மதி” என்று அழைத்தான்.

கவிகிருஷ்ணாவின் குரல் கேட்டதுமே
“கவி” என்று துள்ளல் நிறைந்த குரலோடு திரும்பி பார்த்தவள் புன்னகையோடு கவிகிருஷ்ணாவை பார்த்து கண் சிமிட்டினாள்.

“இப்போ தலையில் வலி எதுவும் இருக்கா?” அவளது மருத்துவ ரிப்போர்ட்களை நோட்டம் விட்டு கொண்டே கவிகிருஷ்ணா கேட்க

தேன்மதியோ கவிகிருஷ்ணாவை நெருங்கி அமர்ந்து அவனது கைகளை இறுக பிடித்து கொண்டு
“வலி பெரிதாக இல்லை கவி ஆனா இங்கே இருக்க ஒரு மாதிரியாக இருக்கு எப்போ என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவ?” என்று கேட்டாள்.

மெல்ல அவள் கைகளை தன் கைகளில் இருந்து விலக்கி கொண்டவன் சற்று தள்ளி சென்று அவளது ரிப்போர்ட்களை ஒரு முறை பார்த்து விட்டு மறுபடியும் அவற்றை தேன்மதியின் கட்டிலின் முன்னால் வைத்தான்.

தேன்மதி குழப்பமாக கவிகிருஷ்ணாவைப் பார்க்க அவளை பார்த்து ஒரு வித சங்கடத்தோடு புன்னகத்தவன்
“இது ஹாஸ்பிடல் இங்க இப்படி கை பிடித்து பேசுறது எல்லாம் சரி இல்லை அதோடு நான் ஒண்ணும் உங்க…” பேச வந்ததை இடை நிறுத்தியவன்

இப்போது இதைப் பற்றி பேசுவது சரி இல்லை என்பதை உணர்ந்தவனாக
“அது வந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா அதாவது நீங்க ரெஸ்ட் எடுங்க நாளைக்கு சீஃப் டாக்டரும் நானும் உங்களை வந்து சந்திக்கிறோம் தலையில் சின்னதாக வலி வந்தால் கூட உடனே சிஸ்டர் கிட்ட சொல்லிடுங்க சரியா?” என்று விட்டு கவிகிருஷ்ணா விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட தேன்மதியோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.

“கையை பிடித்து பேசுறதைப் பற்றி ஏதோ சொல்ல வந்தான் திடீர்னு நாளைக்கு காலையில் வந்து டாக்டர் பார்ப்பாங்கனு சொல்லுறான் என்னாச்சு இவனுக்கு? யாராவது மந்திரித்து விட்டுட்டாங்களா? டேய் தடியா! உன் விளையாட்டு எத்தனை நாளைக்குனு பார்த்துடலாம் ஒரு நாள் நீ என் கிட்ட வசமாக மாட்டிக்குவ அப்போ இருக்குடா உனக்கு!” என்றெண்ணி சிரித்துக் கொண்டே தேன்மதி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொள்ள மறுபுறம் கவிகிருஷ்ணா மெல்லிய சத்தத்தில் பாடல்களை கேட்டு கொண்டே காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை காதை நிறைக்க ஸ்டியரிங்கில் தாளம் இட்டு கொண்டே ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து கேட்கும் கவிகிருஷ்ணாவின் ரசனையிலேயே அவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மேல் இருந்த ஈர்ப்பு விளங்கியது.

ஊட்டியில் இருக்கும் பங்களாக்களிலேயே சற்று பெரிதாக காணப்பட்ட ஒரு பங்களாவின் முன்னால் கவிகிருஷ்ணாவின் கார் சென்று நிற்க ஒரு காவலாளி ஓடி வந்து அந்த வீட்டின் கேட்டை திறந்து விட்டார்.

அவரைப் பார்த்து புன்னகத்து கொண்டே தன் காரை உள்ளே கொண்டு சென்றவன் காரை நிறுத்திவிட்டு தன் கோர்ட்டையும், ஸ்டெதஸ்கோப்பையும் ஒரு கையில் எடுத்து கொண்டு மறுகையில் கார் சாவியை சுழற்றி கொண்டே சற்று முன்னர் கேட்ட பாடலை விசிலடித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

வெளியே எத்தனை வகையான பிரச்சினைகள் வந்தாலும் தன் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளும் போது ஒரு வித உற்சாகம் கவிகிருஷ்ணாவை சூழ்ந்து கொள்ளும்.

தன் கவலை, குழப்பங்களை எல்லாம் மறக்க அவன் எடுத்துக் கொள்ளும் ஒரு மருந்தே இந்த இசை.

என்றும் இல்லாமல் இன்று சற்று உற்சாகமாக சந்தோஷத்தோடு வரும் தன் மகனைப் பார்த்து புன்னகையோடு சமையலறைக்குள் இருந்து வெளியேறி வந்தார் கவிகிருஷ்ணாவின் அன்பு அன்னை வேதவல்லி.

அவரது சாந்தமான முகத்தை பார்த்ததுமே கோபம் கொண்ட நபர் கூட பனிமலையாக கரைந்து போய் விடுவர்.

தெய்வீக கடாட்சம் பொருந்திய அவரது தோற்றம் பார்ப்போரை கையெடுத்து வணங்கச் செய்யும்.

தன் கணவனின் இறப்பிற்கு பின்னர் தன் மூன்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஊட்டிக்கு வந்து சேர்ந்தவர் தன் கணவர் பெயரில் இயங்கிக் கொண்டிருந்த எஸ்டேட் தொழிலைக் கவனிக்கத் தொடங்கினார்.

முதலில் எதுவும் புரியாமல் தவித்த வேதவல்லி பின்பு நாளாக நாளாக எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு பல லட்ச லாபங்களை ஈட்டத் தொடங்கினார்.

சிறு வயதில் தந்தையை இழந்த கவிகிருஷ்ணாவிற்கோ தன் அன்னை தான் எல்லாமே.

கவிகிருஷ்ணாவின் தம்பி, தங்கைக்கோ அவர்களது அண்ணணான கவிகிருஷ்ணா தான் எல்லாமுமாக இருந்தான்.

ஒரு எஸ்டேட்டில் தொடங்கிய அவர்களது வாழ்க்கை இன்று இருபது, இருபத்தைந்து எஸ்டேட்களுக்கு உரிமையாளர்கள் என்ற நிலைக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.

கவிகிருஷ்ணாவின் தம்பி கெளசிக் எம்.பி.ஏ படித்து முடித்து விட்டு அவர்கள் எஸ்டேட் பொறுப்புகளை பார்த்து கொண்டிருக்க அவனது தங்கை காயத்ரி பி.இ பைனல் இயர் படித்து கொண்டிருக்கிறாள்.

தங்கள் அண்ணன் என்றால் கௌசிக் மற்றும் காயத்ரிக்கு அத்தனை மரியாதை.

தங்கள் அன்னைக்கு அடுத்ததாக தங்கள் குடும்பத்தை காப்பாற்ற படித்து கொண்டு இருக்கும் போதே மறுபுறம் எஸ்டேட் வேலைகளையும் பார்த்த தங்கள் அண்ணன் எப்போதும் அவர்களுக்கு ஒரு தனி பாசம் உண்டு.

ஆனால் அதை அவர்கள் நேரடியாக இது நாள் வரை கவிகிருஷ்ணாவிடம் காட்டியதில்லை.

அவ்வப்போது கவிகிருஷ்ணா சற்று கண்டிப்பாக அவர்களிடம் நடந்து கொள்வதால் என்னவோ அவர்கள் மனதில் இருந்த அன்பு இதுநாள் வரை அவர்கள் மனதிற்குள்ளேயே பொக்கிஷமாக இருந்து கொண்டிருக்கிறது.

“கிருஷ்ணா…” தன் தாயின் அழைப்பில் சட்டென்று நின்ற கவிகிருஷ்ணா புன்னகையோடு

“ஹாய் ம்மா” என்று கையசைத்து கொண்டே அவரை நோக்கி வந்தான்.

“என்னப்பா இன்னைக்கு வேலை எல்லாம் ரொம்ப நல்லா போச்சு போல” அன்னையின் கேள்வியில் தேன்மதியின் முகம் சட்டென்று நினைவுக்கு வர அத்தனை நேரம் இருந்த சந்தோஷம் வடிந்து போக கலவரத்தோடு தன் அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் பேச வார்த்தைகள் இன்றி தவிப்பாக தன் அன்னையை நோக்கினான்…..

error: Content is protected !!