avalukkenna9

அத்தியாயம்
9

‘இந்த நேரத்துல தூங்க மாட்டாளே’ என எண்ணியபடி, உள்ளே வந்தவர், உறங்கும் மகளை வாஞ்சையோடு பார்த்திருந்தார். அதேநேரம் படுக்கையின் ஓரத்தில் இருந்த பேப்பர் கண்ணில்பட, ‘இந்தப் பழக்கத்தை மாத்தவே செய்ய மாட்டேங்குறா’ என்று எண்ணியவாறே அதை எடுத்து வாசித்திருந்தார்.

வாசிக்கும் வரை இலகுவான மனநிலையில் இருந்தவருக்கு, மகளின் மனஅழுத்தத்திற்கான தீர்வாக இருந்த வெள்ளைத்தாளில் எழுதப்பட்டிருந்த விவரம், நடந்த விடயங்களின் வீரியத்தை சொல்லியிருந்தது.

தனது கணவனை வீட்டிற்கு வரச் சொல்லி பேப்பரில் எழுதியிருந்ததை கணவனிடம் கொடுத்திருந்தார்.

அனன்யா எழும்வரை காத்திருந்த இருவரும் நேரடியாகவே மகளிடம் விடயத்தைக் கேட்டிருந்தனர். தனது தாய், தந்தை இருவரிடமும் எதையும் மறைக்காமல் விடயத்தைப் பகிர்ந்தாள் அனன்யா.

விடயத்தை அறிந்த தேவகி, “இதுக்குதான் நான் ஆரம்பத்திலயே சொன்னேன், அவளுக்கு நிறைய இடம் குடுக்காதன்னு”, என்று அகல்யாவின் செயலுக்கு அனன்யாவின் மீது பழி சொல்ல

“அம்மா யாரும் இடம் குடுக்கல, ஆனா… அவள கைட் பண்ண நாம எல்லாரும் தவறிட்டோம். உங்க மகனு என்னைய… இதச் செய், அதச் செய்யாதன்னு சொன்ன நீங்க, அவள அந்த மாதிரி சொல்லத் தயங்கினீங்க. அதனால அவ மனம் போல வளந்திருக்கா, அது நம்ம மேலயும் தப்புதான்.

இனி நவீன் எனக்கு வேணாம். அவளுக்கே மேரேஜ் பண்ணி வைங்க. நவீன் பேரன்ட்ஸ்கிட்ட மேற்கொண்டு பேசுங்க”, என அனன்யா தனது தாயிடம் முடிவாகக் கூறினாள்.

“எல்லாம் பேசுவ நீ! உண்ட வீட்டுக்கு அவ ரெண்டகம் நினைப்பா… அவளுக்கு நாங்க போயி மேற்கொண்டு கேட்டு, எங்க தலைமையில எல்லாம் பண்ணணுமாக்கும். அந்தளவுக்கு நான் ஒன்னும் பெரிய மனசுக்காரியெல்லாம் கிடையாது”, என கோபத்தோடு தேவகி மகளை நோக்கிப் பேசினார்.

“அவ மேல உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம். அனன்யா சொல்றதுல என்ன தப்பு இருக்கு. இவ்வளவு வருசமா நம்ம வீட்ல தான அகல்யா வளந்தா. நம்ம புள்ளையா இருந்தா என்ன செஞ்சிருப்போம். அதத்தான் அனன்யாவும் செய்யச் சொல்றா. அதுக்கு அவகூட போயி சண்டை போட்டுட்டு இருக்க”, என்று ஈஸ்வரன் மகளுக்கு ஆதரவாகப் பேசினார்.

“சண்டை எதுக்கு எம்புள்ளையோட நான் போடப் போறேன். அவ செஞ்சு வச்ச காரியத்த நினைச்சு என் பெத்த வயிறு எரியுது. எம்புள்ளை வாழ்க்கைய கேள்விக்குரியாக்கிட்டு அவ மட்டும் எப்புடி நல்லாயிருக்கானு பாக்கறேன்”, என்று என்ன பேசுகிறோம் என்று உணராமல் கொதித்திருந்தார் தேவகி.

“அம்மா அதுக்காக இப்டியெல்லாம் அவள சொல்லாதீங்க… எங்க இருந்தாலும், யாரை அவ கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவ சந்தோசமா இருந்தாதான் நமக்கும் நிறைவா இருக்கும்.

கொஞ்சம் இந்த விசயத்தை ஆறப் போட்டு அப்புறம் போயி அகல்யாவுக்காக நவீன் வீட்டுல போயி அவங்க கல்யாணத்தை பத்தி பேசுங்கப்பா”, என்று தாய், தந்தை இருவரிடமும் பேசிவிட்டு, தனது அறைக்குள் முடங்கியிருந்தாள் அனன்யா.

திருக்குமரன் மூலமாக வந்த சம்பந்தம் என்பதால் அவருக்கு அழைத்து, நேரில் விடயத்தைக் கூறினார், ஈஸ்வரன். அதன்பின் நவீனின் பெற்றோரை அழைத்து விடயம் பகிரப்பட்டது.

ஈஸ்வரனின் வாதத்தை ஏற்க மறுத்திறுந்தனர், நவீனின் பெற்றோர். அனன்யா என்றால் மட்டுமே இந்த திருமணம் நடைபெறும் என்று மிகவும் தெளிவாகக் கூறியிருந்தனர்.

நவீனை அழைத்து அகல்யா பற்றிய விடயத்தைக் கேட்க சொன்னவர்களுக்கு, “அவனுக்கு… என்ன நல்லது கெட்டது தெரியும்? அப்ப பெரியவங்கனு நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்?”, என்று தட்டிக் கழித்திருந்தனர்.

நவீனின் பெற்றோரை சம்மதிக்க வைப்பதில் பெரிய வாக்குவாதமே வந்தது. அகல்யாவிற்கு திருமணம் செய்து வைப்பது எங்கள் கடமை. அதை எந்த குறைபாடும் இல்லாமல் செய்வோம் என்று ஈஸ்வரன் கூற, அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

பிற்காலத்தில் வரக்கூடிய நல்லது கெட்டது அனைத்திற்கும் அவள் குடும்ப சார்பில் யார் வருவார் என நேரடியாக நவீன் குடும்பத்தார் கேட்க, ஈஸ்வரன் தான் செய்வதாக முன்வந்தார்.

இருந்தாலும் நவீனின் பெற்றோர்கள் அகல்யாவை மருமகளாக ஏற்க மறுக்க, நவீனின் விருப்பத்தைக் கேட்டு மேற்கொண்டு பேசலாம் என முடிவானது.

நவீனின் தாயார், நவீன் தன் சொல்லைத் தட்டாமல் தனது விருப்பப்படியே செய்வான் என்று கூற, அதை சபையோர் முன்னே வந்து கூற வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்கி, அனைவரின் முன்னே நவீனை நேரடியாக அழைத்துக் கேட்டனர்.

“என்ன நவீன் உனக்கு அனன்யாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருக்கா”, நவீனின் தாய்

“அப்டியெல்லாம் எதுவுமில்லம்மா, நீங்க யாரைப் பாத்து தாலி கட்டச் சொன்னாலும் எனக்கு சரிதான்”, என்று அமைதியாக நின்றவனைப் பார்த்த ஈஸ்வரன்

“தம்பி, அப்ப அகல்யா மனசுல எதுக்கு அப்டியொரு ஆசைய உண்டாக்குனீங்க!”

“நான் அவகிட்ட போயி எதுவும் பேசல. அந்தப் பொண்ணு தான் ‘அனன்யாவும், நானும் சின்ன வயசுல இருந்தே திக் ஃபிரண்ட்ஸ், விவரம் தெரிஞ்சதுல இருந்தே எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவோம். அதே போல கல்யாண வாழ்க்கையவும் ஷேர் பண்ணிக்க ஆசைப்படறேன். உங்களுக்கும் இதுல சம்மதமானு கேட்டா’, அதுக்கு நான், ‘அனன்யாவுக்கு ஓகேனா எனக்கும் ஓகேனு’ சொன்னேன், என்று நவீன் விளக்கம் தந்திருந்தான்.

“அனன்யாவோட சம்மதத்தை தெரிஞ்சுக்கும் முன்னே, அந்த பொண்ணு அகல்யாவைப் பாக்க அந்த ஊருக்கு அன்னிக்கு எதுக்கு போயிருந்தீங்க?”, ஈஸ்வரன்.

“வேல முடிஞ்சு வரும்போது எதார்த்தமா பாத்தேன். தெரிஞ்சவங்கனு ரெண்டொரு வார்த்தை பேசிட்டு வந்திட்டேன். அவ்ளோதான்”, என்று நவீன் கூறியதைக் கேட்டவர்

“ஏறத்தாழ ஒரு மணி நேரம் ரெண்டொரு வார்த்தை பேசுனீங்களா?”, என ஏளனமாகவே கேட்டார், ஈஸ்வரன்.

“…”, அமைதியாக நின்றிருந்தான் நவீன்.

“எதுக்கு தேவையில்லாத பேச்சு பேசுறீங்க… அவந்தான் உண்மை என்னனு பட்டு, பட்டுனு சொல்லிட்டானே… உங்க பொண்ணை கொடுக்க பிரியம் இருந்தா கொடுங்க, அதுக்காக வேற யாருக்காகவும் வந்து பரிஞ்சு பேசவெல்லாம் வேணாம். குலம், கோத்திரம் தெரியாதத எல்லாம் எங்க வீட்டுல கொண்டு வந்து தள்ள நினைக்க வேணாம்”, என்று தனது எண்ணத்தை மறைக்காமல் கூறியிருந்தார் நவீனின் தாய்.

“உங்க பையனை இதுக்கு மேல நம்பிக் கொடுக்க எங்களுக்கு பிரியமில்லமா”, என்று நவீனின் தாயை நோக்கிக் கூறியவர், அருகில் நின்றிருந்த நவீனை நோக்கி, “ஏம்பா தம்பி, அந்த பொண்ணு… அதான் அகல்யா மேல உங்களுக்கு வேற எந்த அபிப்ராயமும் இல்லைனு சொல்ல வரீங்க, அப்டித்தானே”, தனக்கு தேவையான விடயத்தை அறிந்து கொள்ள மிகவும் பிரயாசப்பட்டிருந்தார் ஈஸ்வரன்.

“ஆமா… எங்க வீட்டுப் பெரியவங்க என்ன சொல்றாங்களோ… அதுப்படிதான் நடப்பேன்”, என்று அருகிலிருந்து தாயின் கையை தனது கைகளுக்குள் வைத்து அழுத்தியபடியே கூறியிருந்தான், நவீன்.

நவீனுக்கு என்று எந்த ஒரு திடமான முடிவும் தனது திருமணம் சார்ந்து எடுக்க முடியாத சூழலில், அகல்யாவிற்கு, நவீனைப் பேசுவது சரியென்றும் தோன்றவில்லை.

நவீனுக்கு அகல்யாவின் மேல் இருந்த ஆர்வம், அவனாலேயே அங்கு மறைக்கப்பட்டது. அதற்குமேல் நவீனின் பெற்றோரிடம் தர்க்கம் செய்ய விரும்பவில்லை ஈஸ்வரன்.

பூ வைக்கும் விழாவில் செய்துகொண்ட பத்திரத்தை ரத்து செய்துவிட்டு உடன் அழைத்து வந்தவர்களோடு கிளம்பியிருந்தார் ஈஸ்வரன்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று மனம் ஒருபுறம் நினைத்தாலும், வருத்தம் இருந்தது.

தந்தையிடம் நடந்தவற்றை கேட்டறிந்து கொண்டவள், தோழியை சந்திக்க எண்ணினாள்.

அகல்யாவை அதன் பின் சந்தித்து நேரில் பேசச் சென்ற அனன்யாவை கடுகளவும் கண்டு கொள்ளாமல், வாயில் வந்தபடி பேசி விரட்டியிருந்தாள், அகல்யா.

“இப்போ உனக்கு சந்தோசந்தான!”, தனது திருமண ஆசை தடைபட்டதால் வந்த கோபம் அகல்யாவை அப்படி பேசச் செய்திருந்தது.

“என்னடி சொல்ற!”, என தோழியின் பழிச்சொல்லைக் கேட்டு பதறி கேட்டிருந்தாள் அனன்யா.

“உங்கூட பங்குக்கு வந்திருவேன்னு தான இப்ப அவசரப்பட்டு, நவீன எங்கிட்ட இருந்து பிரிச்சிட்ட!”

“யாருடி பிரிச்சா! முட்டாள் மாதிரி பேசற…!, அவன இப்ப கூட சொல்லச் சொல்லு, உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேனு, இல்லை உம்மேல அவனக்கு ஆசைன்னு… அடுத்த முகூர்த்தத்துல உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நாங்க தயார். ஆனா எல்லார் முன்னாடியும் உன் மேல அவனுக்கு இருக்கற அஃபையரையே மறச்சுட்டான். இதுக்கு மேலயும் அவன நம்பினா… அது உனக்குத் தான் நஷ்டம். அவ்ளோ தான் என்னால சொல்லமுடியும்”

“நீ மாட்டேனு சொன்னதாலதான் என்னைய வேணாணு சொல்லியிருப்பார்”, என்று இன்னும் புரியாமல் அகல்யா பேச

“ஏய்… அறிவுகெட்டவளே… சோத்து முட்டி? நம்ம மேரேஜ் ஆக்ட்லயே இரண்டு பேர கல்யாணம் பண்ண இடமே இல்ல. அது தெரியுமா இல்லையா? அப்பிடி இருக்க என்ன அர்த்தத்துல இத எங்கிட்ட சொல்ற?”, என்று கோபத்தோடு அகல்யாவைச் சாடினாள்.

“நீ இதுக்கு ஒத்துக்கிட்டா எந்தப் பிரச்சனையுமே வந்திருக்காது. நவீனுக்கும் ஓகேன்னுதான் எங்கிட்ட சொன்னாரு”, என்று அகல்யா மீண்டும் கூற

“லூசாடீ நீ… ஒத்துக்க சொல்ற… அசிங்கம்டீ… அதெப்படி ஒருத்தவனை ரெண்டு பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு அன்னியோன்யமா, அன்போட, காதலோட காலத்துக்கும் இருக்கு முடியும். யோசி… இன்னும் முட்டாத்தனமாவே பேசாத… எனக்கு புடிக்கலனு இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியவே இல்லைல… இன்னும் லூசாவே இருந்தேன்னு வையி… அவம்பாட்டுக்கு வந்து ஏமாத்திட்டு போயிருவான். அவங்கம்மா அப்பா முன்னாடி உம்மேல எந்த அபிப்ராயமும் இல்லைனு சொன்னவனை இன்னும் நம்பி வீணாகாதே”, என்று பொறுமையோடு தனது தோழிக்கு எடுத்துச் சொன்னாள் அனன்யா.

“உனக்கென்ன… காசு, பணம், எடுத்துச் செய்ய பெத்தவங்கனு எல்லாம் இருக்கு. எனக்கு அப்டியானு சொல்லு…

இல்லைல… உன்னோட வசதிக்கு யாரு வேணா வந்து உன்னக் கல்யாணம் பண்ணிக்குவாங்க…! ஆனா என்னைய பாத்து பின்னாடி வரவணும் எனக்குன்னு யாரும் இல்லைனு தெரிஞ்சா பின்னங்காலு பிடரி அடிக்க ஓடிருவான்.
நீங்கல்லாம் அவசரப்பட்டு அவங்க வீட்டுல போயி போட்டுக் குடுத்து… எல்லாரும் சேந்து என்ன ஏமாத்திட்டீங்க. இனி என்னைய பாக்க வராத இங்க!”, என நவீன் தனக்கு கிடைக்காமல் போனதை எண்ணி வாய்க்கு வந்ததை பேசினாள், அகல்யா.

அகல்யாவின் தனக்கு யாருமில்லை என்கிற எண்ணம் அவளை அங்ஙனம் பேசச் செய்தது.

ஆகையால், அவளுக்கு சற்று அவகாசம் கொடுக்க எண்ணினாள் அனன்யா.

“கொஞ்சம் ரிலாக்சா யோசி அகி. உன் நல்லதுக்குத்தான் போயி பேசினோம். உனக்கு கெடுதல் நினைக்கிற அளவு நாங்க மோசமில்ல… உன்னை ஏமாத்த நாங்க ஏன் நினைக்கனும்னு ஒரு நிமிசம் உக்காந்து நல்லா யோசி”, என்று அகியை சமாதானம் செய்ய முயற்சிக்க

இரண்டு கைகளையும் அனி நோக்கி எடுத்துக் கும்பிட்டு, வலது கையால் செல் என கையைக் காட்டினவளைக் கண்டு மனம் வருந்தினாலும்,

நவீன் திருமணத்திற்கு சம்மதிக்கும் நிலையில் தனக்கு தெரிவிக்கும்படியும், இல்லையெனில் வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக தனது பெற்றோரின் சார்பில் கூறினாள், அனன்யா.

“யாரும் இனி என்னைப் பாக்க வர வேணாம். எனக்கு யாரையும் பாக்குற ஐடியாவும் இல்ல. என்னைத் தொந்திரவு பண்ண வேணாம். நான் இன்னும் சின்ன பொண்ணு இல்ல. என் வாழ்க்கைய இனி நானே பாத்துப்பேன்!

திரும்ப வந்து, எங்கிட்ட நல்லவ வேசம் கட்டணும்னு சீன் போட கிளம்பி வராத!

எல்லாம் எங்களுக்கும் அறிவெல்லாம் இருக்கு. நீங்க பாத்து வளந்த உலகத்தைப் பாத்துத் தான் நாங்களும் வளந்தோம். என்னைய பாத்துக்க என்னால முடியும்.

இனி என்னைய பாக்கனு வந்தா மரியாதையே உனக்கு இல்ல! நல்லவ மாதிரி வேசம் போட்டுக்குட்டு பெருசா பேச வந்துட்டா”, என்று அனன்யாவை வெறுத்துப் பேசி அங்கிருந்து கிளம்பிய அகல்யாவை வருத்தத்தோடு பார்த்தபடியே நின்றிருந்தாள், அனன்யா. அடுத்து பார்க்கவோ, அவளிடம் பேசவோ இல்லை அனன்யா.

திருமணம் நின்றிருந்த நிலையில், தன்னால் பெற்றோருக்கு வந்த வேதனை ஒரு புறம். தோழியின் பேச்சு தந்த ரணம் மறுபுறம் என அறைக்குள்ளேயே முடங்கியிருந்தாள், அனன்யா.

அகல்யாவிடம் அலைபேசியில் பேச முயன்றும், அதை தவிர்த்துவிட்டாள் அகல்யா.

அலுவலகம் செல்லவோ, வீட்டில் இருக்கவோ இயலாமல், ஒரு முடிவுக்கு வந்திருந்தாள், அனன்யா.

தனக்கு டயட்டீசியன் பணிக்கு அழைத்திருந்த உள்ளூர் மருத்துவமனையை அணுகி, அவர்களின் வேறு கிளைகளில் பணியிருந்தால் அங்கு தன்னை அனுப்புமாறு கேட்டுக் கொண்டாள்.

அனன்யாவின் திறமையை அறிந்திருந்த மருத்துவமனை நிர்வாகம், சென்னையில் இருக்கும் தங்களது கிளையை பரிந்துரை செய்தது.

மேலும், பகுதி நேரப் பணியாதலால், மேற்கொண்டு அவளது முதுஅறிவியல் படிப்பை இரண்டாம் சுழற்சியில் தொடர எண்ணி சரியென்று கூறியிருந்தாள்.

தனக்கு மாற்றம் வேண்டி வெளியூருக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, அவர்களின் எந்த சமாதானத்தையும் ஏற்க இயலாமல் சென்னை வந்திருந்தாள், அனன்யா.

வந்தவளின் சிந்தனைகளைக் கலைத்த திருமணம் சார்ந்த நிகழ்வுகள், அகல்யா, பெற்றோர் இவர்களை எண்ணாமல் இருக்க வேண்டி, பகுதி நேரம் டயட்டீசியன் பணியிலும், மதியத்திற்கு மேல் தனது முதுஅறிவியல் கல்வியிலும் மனதை செலுத்தியிருந்தாள், அனன்யா.

அகல்யாவின் அவசர, நிதானமற்ற, முன்யோசனை இல்லாத செயலால், அனன்யா, அகல்யா இருவரது வாழ்வும் பறிபோயிருந்தது.

அனன்யாவின் பெற்றோருக்கு மகளின் நின்று போன திருமணத்தால் நிம்மதி இழந்திருந்தனர்.
———————-

தனது பூ வைக்கப்பட்ட திருமண நிகழ்வு பாதியில் நின்று போனது, அதன்பின் சென்னை வந்தது அனைத்தையும் கைலாஷிடம் கூறிவிட்டு அமைதியாக இருந்தாள், அனன்யா.

முழுவதும் கேட்டவன்,
“இப்ப நான் என்ன செய்யணும்?”, புரியாமல் கேட்டிருந்தான், கைலாஷ்.

“இந்த விசயத்துல எனக்கு பெத்தவங்களோட முடிவை மதிச்சு, நானும் சில கனவுகளோட தான் அந்த திருமண வாழ்க்கைய ஏத்துக்க தயாராகி இருந்தேன்.

இதை எதையும் உங்ககிட்ட மறைக்க எனக்கு இஷ்டமில்லை.

சப்போஸ் நாம கல்யாணம் செய்தபின்ன இது பத்தி உங்களுக்கு இந்த விசயமெல்லாம் தெரிய வந்தா ஏதும் சங்கடங்கள் வரக்கூடாதுன்னு தான், இப்போ இத உங்ககிட்ட சொன்னேன்”, அனன்யா.

“ம்… புரியுது…”, என்ற வெளியில் கூறியவன், ‘எனக்கு உன்னையும் உன் குடும்பத்தையும், உங்க வீட்ல நடக்கிற ஒவ்வொரு விசயத்தையும் தெரியும். அதனால இவ்வளவு விளக்கமே எனக்கு தேவையில்ல. ஆனாலும்… உன் மனச நோகடிக்க பிரியமில்ல… அதான் இவ்வளவு பொறுமையா நீ சொன்னதைக் கேட்டேன்’, என மனதிற்குள் நினைத்தபடியே அமர்ந்திருந்தான்.

“என்னால அகல்யா வாழ்க்கை வீணாயிருச்சோனு ஒரு மனவருத்தம் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கு. ஆனா அவள நான் பாக்க முடியல. அவகூட பேச ட்ரை பண்ணா இன்னும் கோபமா கால் கட் பண்ணிறா!”, அனன்யா வருத்தமாகக் கூற

“சரி அவங்க பேசலண்ணா… உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லல. அப்றம் நமக்கென்னனு விட வேண்டியதுதான!”, தனக்கு தோன்றியதை கூறினான் கைலாஷ்.

“அது எப்டி கைலாஷ்!, எங்கூட சின்ன வயசில இருந்து, வளர்ந்த பொண்ணு, அவளுக்கு என்மேல பிரியம் இல்லாம இருக்கலாம். ஆனா அதே மாதிரி என்னாலயும் இருக்க முடியல!. என்ன செய்றா, எப்டி இருக்கா எதுவும் தெரியல.

அம்மா, அப்பாகிட்ட சொல்லிப்பாத்தேன். அவங்க அவன்னால தான் என் வாழ்க்கை இப்டி ஆகிருச்சுன்னு ரொம்ப கோபப்படறாங்க!. அதான், அவளப் பத்தி தெரிஞ்சுகிட்டு, அவளுக்கு என்னால முடிஞ்சத செய்திட்டு, அப்றம் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்!”, தயக்கம் மீறி தனதுள்ளம் பகிர்ந்திருந்தாள், அனன்யா.

சற்று நேரம் அனன்யாவின் வார்த்தைகளை யோசித்தவன்,
“ம்… சரி… ஃபர்ஸ்ட் உங்க பேரண்ட்ஸ, என் பேரண்டோட மீட் பண்ண வைப்போம்”, என்று கைலாஷ் கூற

“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா கைலாஷ்?”, கைலாஷைப் பற்றியே அவளுக்கு ஒன்றும் புரியாத நிலையில், அவர்களின் பெற்றோர் பற்றிய தனது ஐயத்தை வினவினாள்.

“கண்டிப்பா ஒத்துப்பாங்க அன்யா”, நம்பிக்கையோடு பேசினான், கைலாஷ்.

“நானும் எங்க வீட்ல அம்மா, அப்பாகிட்ட இன்னிக்கு நைட்டு பேசுறேன்!”, அனன்யா கூற

அதற்குமேல் இருவரும் பொதுவான விடயங்கள் பேசி… அவரவர் பணியை நோக்கிப் பயணமாகியிருந்தனர்.
——————————————-
இருவரின் திருமண வாழ்க்கைப் பயணம் ஒரே இடத்தில் ஆரம்பமாகுமா…! அனன்யா தனது பெற்றோரிடம் கைலாஷ் பற்றி கூறினாளா? கைலாஷின் பெற்றோர் அனன்யாவை ஏற்றுக் கொள்ள சம்மதித்தனரா?
——————————————-

error: Content is protected !!