Kadhal – 18

Kadhal – 18

               காதல் – 18

விழியோடு விழி சேர்த்து அழகாய் ஒரு பார்வை பார்த்தாய்…

என் இதயம் உன் பேர் சொல்லிடுதே!

விரலோடு விரல் சேர்த்து நீ என் பக்கம் வந்தாய்…

அடடா என் பெண்மை மாறிடுதே…!

கொஞ்ச நேரத்தில் மதியும், கௌதமும் பைக்கில் இந்தர் வீட்டை நோக்கி பறந்தனர்.

வீட்டின் உள்ளே நுழையவும், வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்றான் அஷோக்.

“மச்சி ஏன்டா லேட்… உனக்காக எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணுறது” கேட்டபடியே உள்ளே அவர்களுடன் சேர்ந்து நடந்தான் அஷோக்.

அங்கே புது விருந்தினராக சுபியின் பெற்றோர் அமர்ந்திருந்தனர்.

‘ஆஹா… மச்சி சந்தோசம் இதுக்கு தானா? விடக்கூடாதே’ எண்ணியவன் “ஹாய் ஆன்ட்டி” என்றபடி அவர்கள் முன் வந்து அமர்ந்தான் கெளதம்.

“சுபி கல்யாணத்தை சீக்கிரமே முடிக்கணும்னு கொஞ்ச நாளா யோசிச்சிட்டு இருக்கோம் கெளதம்” மெதுவாக கௌதமைப் பார்த்துக் கூறினார் சுரேஷின் தாய்.

இப்பொழுது கெளதம் பார்வை, அஷோக் பக்கமாய் தாவியது.

‘அடடே…. பாக்குறானே பாக்குறானே. பாவிபய என்னை சிங்கிள் லிஸ்ட்ல  முதல் ஆளா சேர்க்க பிளான் பண்ணுவானே?’ கடுப்பாக அவனைப் பார்த்தான் அஷோக்.

“இப்போ தான் அவளுக்கு கல்யாணம் பண்ணுற வயசு. இப்போ அவளுக்கு பண்ணுனா தான், அடுத்த லீவ்ல சுரேஷ் வரும்போது அவனுக்கு பண்ணமுடியும். காலையில் தான் கமலா கிட்ட சொன்னேன் அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. அது தான் எல்லாரும் கோவிலுக்கு போய் சாமிக்கிட்ட கேட்டுட்டு நேரே இங்க தான் வருகிறோம்? சுபி கிட்ட கூட இந்த விஷயமா எதுவும் பேசல”

“ரதி கல்யாணத்தை முடிச்ச பிறகு தான் நாங்க அஷோக் கல்யாணத்தை பற்றி யோசிக்க முடியும்.அதிலும் சுபி இப்போ படிச்சுட்டு தானே இருக்கா?” கேட்டார் கருத்தப்பாண்டி.

‘மீசைக்கு எப்பவும் என்னை தாக்குறதே வேலை. ஏன் கல்யாணம் முடிஞ்ச பிறகு படிக்க கூடாதாமா? இல்லை நாங்க தான் படிக்க வைக்கமாட்டோமா?’ கடுப்பாக எண்ணிக் கொண்டான்.

“இந்தர் நீ என்ன சொல்லுற?” இந்தரை பார்த்துக் கேட்டான் கெளதம்.  

“நான் என்ன மச்சான் சொல்லுறது. உன் தங்கச்சி எது சொன்னாலும் ஓகே தான்” மெல்லிய நகையுடன் கூறினான் இந்தர்.

“ரதி இப்பவே இந்தரை கைக்குள்ள போட்டுட்ட போல”

“அச்சோ அப்படில்லாம் இல்லண்ணி” அவள் அழகாய் வெட்கி சிரிக்க எல்லார் முகங்களும் புன்னைகையை தத்தெடுத்தது.

“அப்பா பேசாம ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒரே மேடையில் வைக்கலாமா?” கருத்தபாண்டியை நோக்கி கேட்டான் கெளதம்.

அந்த நிமிடமே மனதில், கௌதமுக்கு ஒரு கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்ய ஆரம்பித்து விட்டான் அஷோக்.

“நீ சொல்லுறதும் சரி தான் கெளதம்” என்றவர் அஷோக்கை நோக்கி திரும்பி “டேய் அஷோக் நீ என்ன சொல்லுறடா?”

‘யப்பா… இப்பவாது என்கிட்ட கேட்கணும்னு தோணிச்சே’ எண்ணியவன் “அது வந்து மாமா” என ஆரம்பிக்கும் பொழுதே,

“அதெல்லாம் எதுக்கு மாமா அண்ணா கிட்ட கேட்குறீங்க. நாம என்ன சொன்னாலும் அண்ணா கேட்பாங்க… சுபி படிப்பு முடிஞ்சு வேலைக்கு போகணும்னு ஆசை பட்டா கூட அவளை வேலைக்கு விட்ட பிறகு கல்யாணம் பண்ணுனா போதும் சொன்னா கூட அண்ணா ஒன்னுமே சொல்ல மாட்டாங்க அப்படி தானேண்ணா?” மதி தான் கூறினாள்.

‘அடப்பாவிகளா எல்லாம் கூட்டமா சேர்ந்துகிட்டே. புருஷன் நல்லது பண்ணுனா பொண்டாட்டிக்கு பொறுக்கலை. பொண்டாட்டி நல்லது பண்ணுனா புருசனுக்கு பொறுக்கல… நல்ல குடும்பம்டா சாமி’ தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டான் அஷோக்.

‘பாட்டி நீ ஏதாவது செய்யேன்?’ என்றபடி நாகுவைப் பாவமாக பார்த்தான் அஷோக். அவனின் பாவப் பார்வையைக் கண்டவர் தான் உதவ முன் வந்தார்.

“கெளதம் சொல்லுற மாதிரியே செய்யலாமே? அது தான் எனக்கும் சரியாபடுது. இந்தருக்கும் வயசாகிட்டே போகுது. அதே போல சுபி கல்யாணத்தையும் சீக்கிரமே முடிக்க நினைக்குறாங்க? பேசாம ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில் வைக்கலாம்”

நாகு சொல்வதே எல்லாருக்கும் சரியாக பட, எல்லார் முகங்களும் புன்னகையை காட்டின.

அதே புன்னகை முகத்துடன் அந்த இடத்திலேயே பூ, பழம் மாற்றிக் கொண்டனர் சுபி வீட்டார்.

அதே இடத்தில் இந்தர், ரதிக்கும் தாம்பூல தட்டு மாற்றிக் கொண்டனர்.

அடுத்த மாதத்தில் வரும், முதல் முகூர்த்த நாளை குறித்தார் நாகு. இரு கல்யாணமும் முடிவானதில் அத்தனை பேருக்கும் சந்தோசம் ரெக்கை கட்டி பறந்தது.

கொஞ்ச நேரத்தில் சுபி வீட்டினர் கிளம்ப, மீதி எல்லாரும் பேசியபடியே அமர்ந்திருந்தனர்.

அதிலும் அஷோக் எக்ஸ்ட்ரா இரண்டு இறக்கையே கடன்வாங்கிக் கொண்டு பறந்தான்.

“பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் பேசலாமா?” என்ற குரல் கேட்டு பேச்சை நிறுத்தியவர்கள் இந்தர் பக்கமாய் திரும்பினர். அவன் தான் அப்படி கேட்டிருந்தான்.

“இதென்ன மாப்பிள்ளை புதுசா கேட்குற, எப்பவும் தான் பேசுறீங்களே” அஷோக் தான் கேட்டிருந்தான்.

“இன்னும் நீங்க வளரணும் அஷோக் மச்சான். பொண்ணு பாக்க வரும்போது பொண்ணுகிட்ட பேசாம எப்படி போறதாம்? அதுல என்ன கிக் இருக்குது” கண்ணடித்து கேட்டான் இந்தர்.

‘அடேய் அஷோக். உனக்கு மிங்கிள் ஆகுற ராசியே இல்லடா… இன்னும் நீ வளரணும்டா’ அவனையே அவன் கொட்டிக் கொண்டான்.

“டேய் மச்சி… நாங்க தாண்டா மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கோம்? நியாயப்படி பார்த்தா எந்தங்கச்சி தாண்டா இந்த கேள்வியை கேட்கணும்”

“அவ கேட்டா என்ன? நான் கேட்டா என்ன? ரெண்டும் ஒன்னுதானே மச்சான்” சிரித்தான் இந்தர்.

சத்தியநாதன் ஓகே சொல்லவே, இந்தர் எழுந்து அவன் அறைக்கு செல்ல, அவன் பின்னோடு ரதி சென்றாள்.

அவள் உள்ளே வரவும் அவளை இறுக்க கட்டி பிடித்துக் கொண்டான் இந்தர்.

“உன்னை ரொம்ப காக்க வச்சுடேன்ல? சாரிடி… என்னை மன்னிச்சுக்கோ. மதியை பார்த்த நான் உன்னை பார்க்க தவறிட்டேன்டி” அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

சட்டென்று அவனை நோக்கி திரும்பியவள் “என்ன இந்தர் என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்குற. நீ மதியை கவனிக்காம என்னை பார்த்திருந்தா தான் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன். ஆனா என் புருஷன், அப்படி பண்ணலியே.

ஒரு நல்ல நண்பன் என்ன செய்வானோ அது தான் நீயும் செய்திருக்க. தன் கூட வளர்ந்தவளுக்கு தாயாகவும், தகப்பனாகவும், நல்ல நண்பனாகவும் இருந்திருக்க இப்படி யாரு இருப்பா சொல்லு. நீ மதி கூட வளர்ந்ததுல தான் இத்தனை நல்ல மனசோட வளர்ந்திருக்க. இதுல நான் எதுக்குடா மன்னிக்கணும்.

எந்த ஒரு பையனும், பொண்ணு மேல வைக்காத பாசத்தை நீ மதி மேல செலுத்தி இருக்க. இந்த அழமான பாசத்தையும் எனக்கு உணர்த்தியது இந்த இத்தனை நாள் பிரிவு தான். இதுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

என்ன ஒரு அழகான தேவனை மதி எனக்கு தந்திருக்கா!

ஒருவேளை, என் அண்ணன் பண்ணுன செயலுக்கு மதியை உனக்கு கட்டி வச்சிருந்தா? இப்படி ஒரு தேவன் எனக்கு கிடைத்திருக்கவே மாட்டான்.

அப்படி கிடைக்க காரணமே உங்க ரெண்டு பேரோட தூய்மையான அன்புடா…. அந்த அன்பை புரிய வச்சதும் இந்த பிரிவு தான். இப்போ தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் ரதி.

அவனின் அணைப்பு மேலும் இறுகியது. தன் காதலி தன்னை எத்தனை அழகாக புரிந்து வைத்திருக்கிறாள். ஒரு பொண்ணும், பையனும் நட்பாக பழகுவதையே தப்பாக பார்க்கும் சமூகத்தில் இவள் வித்தியாசமாக தெரிந்தாள்.

அவள் கன்னத்தில் இதழ் பதித்து அப்படியே அவளுள் மூழ்க ஆரம்பித்தான் இந்தர். சட்டென சுதாரித்து, அவனை கஷ்டபட்டு விலகி அந்த பக்கமாய் திரும்பிக் கொண்டாள் ரதி.

அவனை விட்டு கொஞ்சமாய் விலகி திரும்பி நின்றவளை, பின்னால் இருந்து அணைத்து அவள் கன்னத்தில் கன்னம் வைத்து “ஐ லவ் யூ டி” கூறியபடி அவளின் கன்னத்தோடு கன்னம் இழைத்து அப்படியே நின்றிருந்தான்.

அவளிடம் அசைவில்லை. பதில் லவ் யூ கூட இல்லை. ‘எத்தனை அழகான மனிதன் என் இந்தர்’ மனம் சிலாகித்துக் கொண்டிருந்தது.

“என்னடா யோசனை?” அவளின் யோசனையைக் கண்டு மெதுவாக வினவினான்.

அவனை நோக்கி திரும்பியவள் “நீ எப்படிடா இவ்ளோ நல்லவனா இருக்க. பக்கத்துல ஒரு அழகான அத்தை பொண்ணு, உனக்கு முழு உரிமையும் இருக்க பொண்ணு உன் மேல் உயிரையும் வச்சிருக்கும் பொண்ணு இருந்தும், எங்க இருந்தோ என் பின்னாடி ஏன் வந்த?

மதி இருக்க அழகுக்கும், அவளோட குணத்துக்கும் நான் ஒரு பையனா இருந்தா அன்னைக்கே அந்த தாலியை கழட்டி தூர வீசிட்டு அவளுக்கு, என் கையால் கட்டி தேவதை மாதிரி வாழ வச்சிருப்பேன்.

ஆனா, நீ அவளுக்கு ஒரு தகப்பனா இருந்து அவளை தேவதை மாதிரி வாழ வச்சிருக்க. எங்க இருந்துடா நீ வந்த? எனக்கென்று வந்த தேவனோ?” கேட்டபடியே அவனை தள்ளி சுவரோடு சாய்த்து அவன் மேல் சாய்ந்து நின்றாள்.

அவள் பேச பேச அவளின் நெருக்கமும், சிறு இதழ் அசைவும் அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. அவனின் அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாய் இறுகியது.

அதை எல்லாம் அவள் கவனிக்கும் நிலையில் இல்லாமல் தன் கணவனை புகழ்ந்துக் கொண்டிருந்தாள்.     

கொஞ்சமாய் அவனை விட்டு வலுகட்டாயமாக விலகியவள், அவனை விட்டு பல அடி தள்ளி நின்றாள்.

“ஏய்” அவன் அழைக்க,

அதெல்லாம் அவள் காதில் ஏறவே இல்லை. இடுப்பில் கைவைத்து அவனை தலையிலிருந்து கால் வரை பார்வையால் வருடினாள்.

பிங்க் நிற ஷர்ட், சாக்லேட் நிற பேண்ட் அணிந்திருந்தான். “ரொம்ப அழகுடா நீ… மனதளவிலும், என் பார்வையிலும்” கூறியவள் மேலும் அவனை நெருங்கினாள்.

அவனின் நிலையை அவள் கொஞ்சமும் கவனிக்கவில்லை. அவனின் கண்களில் வழிந்த காதலும், அது கரையை கடக்க நிற்கும் ஆர்வத்தையும் கவனிக்காமல் மேலும் அவனை உரசும் அளவு நெருங்கி நின்றாள்.

அவள் அருகில் வரவும், ஒரே அணைப்பில் அணைத்தவன், அவளை திருப்பி அப்படியே சுவற்றில் சாய்த்துக் கொண்டு அவள் மேல் உரசி நின்றான் “என்னடி ரொம்ப பேசிட்டே போற மனுஷன் நிலை தெரியாம. யாருகிட்ட பேசினாலும் முதலில் கண்ணை பார்த்து பேசு. அதிலும் என்கிட்ட எப்போ பேசினாலும் என் கண்ணை மட்டும் பார்த்து பேசு”

“ஆமா, அதை பார்த்தா நான் எப்படி பேசுறதாம்?” மெதுவாக முணுமுணுத்துக் கொண்டாள்.

“ஏய் என்ன சொன்ன” அவளின் முகத்தை அசையாமல் பிடித்தவன் “என் கண்ணைப் பாருடி” என,

அந்த கண்களில் கண்ட காதலையும், அது விஞ்சி நிற்கும் அளவையும் கண்டவள் கண்கள் தானாக மூடிக் கொண்டன.

அவள் கண்ணை மூடி நிற்கும் நிலை. அவனுக்கு ரவிவர்மா ஓவியத்தை நினைவுபடுத்தின.

ரவிவர்மா ஓவியத்தை எப்படி ரசிப்பானோ அப்படியே ரதியை ரசிக்க ஆரம்பித்தன அவனின் கண்கள்.

அவனின் கைகள், அவளின் நெற்றியில் இருந்து ரசனையை ஆரம்பிக்க, அவன் கண்கள் அதை பருக ஆரம்பித்தன.

நெற்றியில் இருந்து கோடிழுத்தவன் கைகள் அப்படியே நகர்ந்து நாசி தான்டி அவளின் இதழில் நின்றது.

அவனின் செயல் அவளை மிகவும் தவிக்க வைத்தது. ‘ஏன் என்னை இப்படி தவிக்க விடுகிறாய். முழுதாய் தான் எடுத்துக் கொள்ளேன்’ அவளின் மனம் முனகி கொண்டது.

அவளின் கீழ் இதழை மெதுவாக வருடியவன், அதை கைகளில் பிடித்து தன் இதழை, அவள் இதழோடு பொருத்தி இதழில் கிறங்கிப் போனான் இந்தர்.

அவன் கைகள் அவளில் தடுமாறி தடுமாறி செல்ல மொத்தமாய் சிலிர்த்துப் போனாள்.

அவன் மொத்தமாய் அவள் மேல் கவிழ்ந்திருக்க, அவன் உணர்வுகள் அவளை பலமாய் தாக்கியது. ஆனால் வெளியில் காத்திருப்பவர்களை நினைக்கும் பொழுது, பெரும் அவஸ்தையான உணர்வைக் கொடுத்தது

அவன் மீண்டுமாக அவளுள் மூழ்க நினைக்க “இந்தர் வெளிய எல்லாரும் இருக்காங்க“ அவளின் முணுமுணுப்பு அவனின் இதழோடு கரைந்து காணாமல் போனது.

இப்பொழுது அவனின் இதழில் தன் கையை வைத்து தடுத்தவள், “இந்தர் எல்லாரும் வெளிய இருக்காங்க” மெதுவாக முணுமுணுத்தாள்.

அவனின் உணர்வுகள் அணைத்தும் சட்டென வடிய அவளை விட்டு விலக…, அவள் கோலம் கண்டு அவளின் புடவையை தானே சரி செய்ய ஆரம்பித்தான்.

ஆனாலும், அவன் பார்வை அவள் மேல் பதிந்து தடுமாற, தன் பார்வையை வேகமாக திரும்பிக் கொண்டு தலையை அழுந்த கோதிக் கொண்டவன். கள்ளப் பார்வையுடன் அவளின் தலையை சரி செய்தான்.

“இவ்வளவு காதலை என் மேல வச்சுக்கிட்டு… ஏன்டா என்னை விலகி இருந்த?” அவனின் சட்டையை பிடித்து சிறு கண்ணீர் துளியுடன் கேட்டாள்.

அவளின் கையோடு பிடித்து அணைத்துக் கொண்டவன். அவளையும்  சரி செய்து வெளியில் வந்தான்.

வெளியில் வரவும் பெரியவர்களின் சந்தோஷ பார்வையும். சிறியவர்களின் கேலி பார்வையும் அவர்களை சூழ. அழகிய புன்னகையுடன் தலையை கவிழ்ந்துக் கொண்டாள் ரதி. அவளின் கைகளையே இறுக்க பிடித்திருந்தான் இந்தர். (நாம கொஞ்சம் காதல் பார்வை பார்த்து விலகுவோம்.)

error: Content is protected !!