UEJ-35(1)

UEJ-35(1)

உன்னோடு தான்… என் ஜீவன் …

 

பகுதி 35

 

‘மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!’ எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் மௌனமும், அவர்களின் இத்தனை நாள் வேதனையின் ஆழத்தையும், அழுத்தத்தையும் மெல்ல மெல்ல மற்றவருக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

 

வாய் மொழியாய் சொன்னால், ‘தீராத வேதனையை மட்டுமே மற்றவருக்கு பரிசாக்கிட முடியும்’ என்பதை நன்கு அறிந்த இருவரும், மற்றவரின் மனதில் வேதனையை கொடுத்திட தயாராக இல்லை என்பதை கடந்து போன நிமிடங்கள் அழகாய் உணர்த்திட.. கௌதமின் கரங்களின் வெம்மை காயத்ரிக்கும், அவளின் கண்ணீரின் வெம்மை கௌதமின் மார்பிலும், அவர்களின் கருப்பு பக்கங்களை கரைகளை கரைத்துக்கொண்டிருந்தது என்பதே நிதர்சனம்.

 

மன்னிப்பை யாசிக்க, இருவருக்கும் காரணம் இருக்கும் போது, மன்னிப்பை வழங்கிடும் இடத்திலும் இருவரும் இருப்பதால் வந்த மௌனமோ அது…! தௌதமின் இதழ்கள் அழுத்தமாய், தனது செல்லம்மாவின் உச்சத்தலையில் பதிந்து மீண்டது மட்டும் எத்தனையாவது முறை என்பதை கணக்கீடு செய்திட முடியாது. அவனின், ஒவ்வொரு இதழ் ஒற்றலும், அவனின் மன்னிப்பை மட்டுமே, அவளிடம் யாசித்துக்கொண்டிருந்தது.

 

கண்கள் கண்ணீர் மழையை பொழிய, தன்னிடம் அடைக்கலம் ஆனவளை அணைத்தவனுக்கு, அதை தாண்டி பேசிட வேண்டாம் என்பது தான் எண்ணமாய் இருந்தாலும், தனக்கு மறந்து போன, தன்னவளுக்கு தான் இழைத்த துரோகத்தின் வித்தை கொடுத்த தருணம், அறிந்திட வேண்டும் என்பதை மட்டும்  தீவிரமாய் முடிவு செய்தவன், செல்லம்மா கொஞ்சம் ஆசுவாச பட வேண்டி காத்திருந்தான்.

 

நிமிடங்கள் கடந்து, மணிகளை நெருங்கும் வேளையில், அவன் மார்பிலிருந்தவாறே நிமிர்ந்து, கௌதமின் முகம் நோக்கியவளை பார்க்கும் போது, அந்த விழி வீச்சில், கடந்து வந்த, அனைத்து துயரும் கரைந்து போன நிம்மதி கிடைக்க, அந்த இமைகளில், தனது இதழ்களை மெல்ல ஒற்றினான்.

 

அவனின் நெருக்கத்தில், தன் மனதின் பாரம் வெகுவாய் குறைய, அப்போது தான், அம்மூ வெகு நேரமாய் கௌதமின் மடியிலேயே இருப்பதை பார்த்தபடி விலகியவள், அம்மூவை கையிலேந்த முயற்சிக்க, “செல்லம்மா, அம்மூவ ஏன் எடுக்கற?!”

 

“இல்ல கௌதம்,  ரொம்ப நேரமா உங்க மடியிலையே இருக்கா. நம்ம கையில ரொம்ப நேரம் வச்சிருக்க கூடாது, சூடு ஆகாதுன்னு, சச்சும்மா அடிக்கடி சொல்வாங்க! அம்மூ, என் மடியில படுத்தாலும், கொஞ்ச நேரத்தில தலையணையில படுக்க வச்சிடுறது வழக்கம் தான்” என்றிட,

 

“பரவாயில்ல செல்லம்மா, இன்னைக்கி மட்டும் இப்படியே தூங்கட்டும்..!” என்றபடி அம்மூவின் தலையை, வாஞ்சையோடு தடவியவனின் ஏக்கம் புரிய.. சரியென தலையசைத்தவள், மீண்டும் வந்து, அவனின் மறுபுறம் தோளில் சாய்ந்து கொள்ள…

 

வார்த்தைகள் வர மறுத்தாலும், கஷ்டப்பட்டு, தனது தொண்டையை சீராக்கியவன், “செல்லம்மா, நா ஒன்னு கேட்கவா?” என்றதும்,

 

“ம்ம்..! என்ன வேணுமின்னாலும் கேட்கலாம், மன்னிப்பை தவிர..!” என்றவளை, இரு கரம் கொண்டு அணைத்தவன் விழிகளில் சுரந்த நீர் அவள் தலையில் விழ.. தன்னை அவனிடமிருந்து விலக்கி, நிமிர்ந்தவளை பார்த்தவன்,

 

“எப்படி செல்லம்மா, உன்னால என்னை மன்னிக்க முடுஞ்சுது?! எந்த ஒரு கேள்வியும், விளக்கமும் இல்லாம…!! என்னால, நீ பட்ட வேதனையும், அவமானமும் கொஞ்சமா..?! அதை யாராலும், இவ்வளவு ஈசியா மன்னிச்சிட முடியாது. இன்பேக்ட், இது ஒரு விதத்துல துரோகமும் கூட..” என்றவனை கூர்மையான பார்வையோடு எதிர் கொண்டவள்,

 

“கௌதம், நா ஒரு கேள்வி கேட்கவா..?!” என்றிட,

 

“கேளு செல்லம்மா, நீ கேட்கற எல்லாத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது என்னோட கடமை!” என்றதும்,

 

“என்னையும், ஆரனையும் அந்த பேப்பர்ல, அந்த கோலத்துல, பார்த்த போது, அது நிஜமுன்னு ஒரு செக்கண்டாவது நினச்சீங்களா மனசார…?” என்றதும்,

 

“ச்சீ, என்ன பேச்சு இது! எனக்கு தெரியாதா, உங்க ரெண்டு பேரையும்..! அப்படி நினச்சா, என்னையே நா தப்பா நினைக்கற மாதிரி செல்லம்மா..!” என்றதும், அதுவரை இருந்த தீர்க்கமான பார்வையை மாற்றி, விரக்தியாய் ஒரு புன்னகையோடு,

 

“அப்படி ஒரு நிலையை பார்த்து தான், இருபது வருஷம் வளர்த்த, எங்க வீட்டுல என்னை தப்பானவன்னு தூக்கி போட்டாங்க. ஒரு வார்த்தை, என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு அனுப்பியிருந்தாலும், எனக்கு.. நா அவங்களுக்கு தெரியாம செஞ்ச தவறுக்கு தண்டனையா நினச்சிருப்பேன்.. அத கூட செய்யலையே..!” என்றவள் தொடர்ந்து,

 

“அதே, ஒரு வருஷம் கூட முழுசா பழகாத உங்களுக்கு, என் மேல நம்பிக்கை இருக்கும் போது, அதே நம்பிக்கை.. உங்க மேல எனக்கு இருக்காதா?! இல்ல  இருக்கக்கூடாதா?!

 

நான் சொன்னா அதை  நம்பறது ரொம்ப கஷ்டம் தான். நா, உங்கள நேருல சந்திக்கறதுக்கு முன்னாடியே, கனவுல மீட் பண்ணிட்டேன்” என்றவள், அன்றைய கனவு பற்றி சொல்லி விட்டு,

 

“அப்ப இருந்து, ஒவ்வொரு முறையும் நமக்குள்ள நடந்த விசயம், எல்லாமே எனக்கு ஏதோ ஒரு விதத்தில உணர்ற மாதிரி தான் இருந்தது. இதோ, இப்ப இந்த கையில இருக்கற காயம், இத கூட என்னால உணர முடிஞ்சப்ப, நீங்க, உங்க உயிரையே போராடி மீட்டு வந்திருக்கீங்கன்னு புரியாதா?!” என்ற போது, அதிர்ச்சியில் வாயடைத்து போனது கௌதமிற்கு.

 

ஆரன் சொன்ன போது கூட, அதை பெரிதாக எடுக்காதவன், தன்னவள் வாய்மொழியால் கேட்ட போது, பிரமித்து போனான் என்பதே நிதர்ஷனம்…

 

“நான், நீங்க நிச்சயம் ஒருநாள், என்கிட்ட வந்துடுவீங்க அப்படிங்கற நம்பிக்கையோட தான், இதுவரைக்கும் இருந்தேன். என்னோட இந்த நம்பிக்கைய கொடுத்தது, என் கௌதமோட காதல்! அது கொடுத்த வலிமை! அது எப்பவும், பொய்த்து போகாதுன்னு எனக்கு நல்லவே தெரியும்!” என்ற நொடி, அவளை தன்னுள் புதைத்து கொள்வது போல மார்போடு சேர்த்து அணைத்தவன்..

 

“தேங்க்யூ..!! தேங்க்யூ சோ மச்..!! செல்லம்மா..!!! என்னோட நிலைமைய, நா சொல்லி, நீ புருஞ்சிட்டு என்னை ஏத்துக்கிட்டு இருந்தா, அதுலையே உன் காதல் தோத்து போயிருக்கும்!

 

ஆனா, நா விளக்கத்த தெரிஞ்சுகிட்டு தான், தேடி வந்திருக்கேன். அப்ப உன்னோட காதல விட, என்னோடது கீழ தான்… உன் காதலோட வலிமை தான் இப்ப நம்மல சேர்த்திருக்கு…!” என்று சொல்லும் போதே அவனின் பெருமிதம் குரலில் வழிய,

 

“யார் காதல் பெருசுன்னு, பட்டிமன்றம் நடத்த தான் வந்திருக்கீங்களா?!” என அவனின் மனநிலையை மாற்ற வேண்டி கேட்க, அதை புரிந்து கொண்ட அவனும், “அதானே..! அத பேசி..  பட்டிமன்றம் நடத்தியா.. காட்டுவாங்க..?! வேற மாதிரி இல்ல காட்டணும்.. அப்படி தானே செல்லம்மா!” என்று அவளை பார்த்து கண்சிமிட்டி சிரிக்க,

 

அதுவரை இருந்த மனநிலைக்கு மாறாக, வெக்கம் ஆட்கொள்ள, சிவந்த தன் முகத்தை கௌதமின் நெஞ்சத்திலேயே மறைத்தாள் அவனின் செல்லம்மா..

 

எத்தனையோ ஆசைகள் இருந்தாலும், அறிய வேண்டியதையும், முறையாய் செய்ய வேண்டியதையும், இனியாவது சரியான படி செய்ய விளைந்தவன்,

 

“செல்லம்மா, எனக்கு…!” என்றவன் ஆரனிடம் சொன்ன அனைத்தையும் சுருக்கமாக சொல்லி, “என்னால உன்கூட பழகினத உணர முடிஞ்சது, ஆனா வாழ்ந்தத உணர முடியாலடா..?! அதோடு..”  என்றவன், ஆரன் போட்டோ கொண்டு செய்து வைத்த குளறுபடியை சொல்ல, விதியின் விளையாட்டை எண்ணி, நொந்து கொள்வதை தவிர, வேறு வழியின்றி போனது அவளுக்கு…

 

“ப்ளீஸ், எனக்கு நமக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியணும்.. கல்யாணம் செய்யாம, ஒரு பொண்ணு கூட பெட் ஷேர் பண்ணறது தானா ஆண்பிள்ளை தனமுன்னு, சொன்ன நானே, இந்த நிலைமையில உன்ன நிறுத்தியிருக்கேன்னா.. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு…!” என்றிட…

 

சிறு புன்னகையை தந்ததோடு, அவனை விட்டு விலகி, தனது கபோர்டை நோக்கி சென்றவளை, கேள்வியாய் பார்த்தவனிடம், அவள் கொடுத்ததை பார்த்தவன் அதிர்ந்து தான் போனான்….

 

தங்களின் உன்னத பந்தம், உறுதியான நாளை பற்றி சொல்ல சொல்ல, கௌதம் என்னமாதிரி உணர்ந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்….

 

******

 

காயத்ரியின் பிறந்தநாளை கொண்டாடி முடித்த போதே, நேரம் இரவு ஒன்பதை தாண்டியிருக்க, ஆரன், “காயு சுமி வாங்க, நா உங்கள ட்ராப் பண்ணிட்டு, வீட்டுக்கு போறேன். கௌதமுக்கு நாளைக்கி கிளம்பறதுக்கு பேக்கிங் வேலை இருக்கும்..!” என்றிட..

 

சுமியோ, “நீங்க எதுக்கு சார், வேண்டாம். நாங்க, டேக்சி புக் பண்ணி போயிடுறோம். தனியா போனா தானே பயம்” என்றதும்,

 

“டேக்சி வேணாம், என்னோட கார்ல  ட்ரைவர கொண்டு போய் விட சொல்றேன்!” என்று கௌதம் சொல்லிட, மறுக்க இயலாது, இருவரும் மற்றவரிடம் விடை பெற்று, கொண்டு வந்த பொருட்களோடு கிளம்பினர்.

 

ஹாஸ்டல் வந்ததும், காயத்ரியோ தனக்கு கொடுத்த கிப்ட், காலையில் உடுத்திய புடவை அடங்கிய பைகளை எடுத்தவள், அப்போது தான், கௌதம் தனக்கு கொடுத்ததை மறந்து அங்கேயே வைத்துவிட்டது தெரிந்தது.

 

காரிலிருந்து இறங்காமல், ஏதோ யோசனையில் இருந்தவளை உசுப்பிய சுமி, “என்ன ஆச்சு காயு?!” என்றிட, பரிசை வைத்துவிட்டு வந்ததை சொல்ல, “விடு, அதை, நாளைக்கி எடுத்துக்கோ! இல்ல, பொறுமையா, அப்புறம் எடுத்துக்கோ!” என்றதும், கௌதம் அதை தரும்போது, தனியாக பார்க்க சொன்னதும், அந்த நேரத்தில், அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்றை, இப்போதே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும், என்ற ஆசையும் சேர, சுமியிடம், “நா போய் அத எடுத்திட்டு திரும்ப வந்திடுறேன். இந்த பேக்ஸ் எல்லாம் நீ கொண்டு போ…!” என்று சைகையால் சொல்லிட,

 

‘இந்த நேரத்திற்கு மேல்…!’ என்ற யோசனை வந்தாலும், கௌதமின் காரில் சென்று வருவதால், ஒன்றும் ஆகிடாது என்ற நம்பிக்கையில், “ஓகே, காயு பார்த்து போயிட்டு வா…!” என்றபடி, அவளின் மற்ற பொருட்களுடன் சுமி ஹாஸ்டல் செல்ல, காயத்ரியுடன் கார் திரும்பியது கௌதமின் இல்லம் நோக்கி…

 

காயத்ரி திரும்பி வந்த போது, மாரி அனைத்து வேலையும் முடிந்தது, கெஸ்ட் ஹவுஸ் சென்றுவிட்டதால், வீடே அமைதியாக காட்சியளித்தது. அந்த அமைதியே, அவளின் கௌதமின் நிலைக்காக மிகவும் வேதனை கொள்ளவே செய்தது.

 

யாருமற்ற தனிமையை இதுவரை அவள் உணர்ந்ததே இல்லை. அது எந்த அளவு  கொடுமையாய் இருக்கும் என்பது இந்த சில நிமிட நேரமே உணர்த்த, அதை மட்டுமே, பல வருடமாய் அனுபவிப்பவன் மேல் பரிவும், காதலும் ஆழிப்பேரலையாய் எழுந்து, அவனின் தனிமையை விரட்டிட, கண்டிப்பாய் தன் வீட்டில் பேசி விடுவது என்ற உறுதியை மீண்டும் எடுத்தாள்.

 

கௌதம் கொடுத்த பரிசை எடுத்துக் கொண்டவள், கௌதமிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக, கௌதமின் அறைக்கு சென்றவள் அதிர்ந்து நின்றாள் அது இருந்த கோலத்தில்……

 

அறை முழுவதும், பெட்டியும், உடைகளும் கலைந்து கிடக்க, தலையை கெட்டியாக பிடித்தபடி, அவனின் கட்டிலில் குழந்தையென குறுகி போய் படுத்து கிடந்தவனை பார்த்ததும், அதிர்ந்து நின்றவள், மறுநொடி, அவனை நெருங்கி அவனை தொட்டு திருப்ப, கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல சிவந்திருக்க, முகமோ மிதமிஞ்சிய வலியை அடக்கி வைத்திருப்பதால் கண்ணுக்கு போட்டியாக சிவந்து போய் கிடந்தது.

 

காயத்ரியை கண்டதும், தாயை தேடும் பிள்ளை போல, அவளின் கரத்தை பற்றிக்கொண்டவன், “தலை ரொம்ப வலிக்குது செல்லம்மா..!” என்றவனின் குரலும், வேதனையை வெளிப்படுத்தவே செய்தது.

 

அவனின் நிலையை பார்க்கும் போதே அறிந்திருந்தவள், அதை அவன் வாயால் கேட்ட போது அவளின் தாய்மை உணர்வு விழித்தெழ… அவனின் நெற்றியை தடவிய படி, “டாக்டர்கிட்ட போலாம்…!” என்று ஜாடையாய் சொல்ல…

 

“ச்ச.. போ செல்லம்மா.. ஹாஸ்பிடல் ஸ்மெல்லே போதும், என் வலிய அதிகமாக்க… எனக்கு அது சுத்தமா பிடிக்காது! எங்க அம்மா ரூம்ல அந்ச ஸ்மெல் வருன்னு தான் சின்ன வயசுல அங்க போறதையே விரும்பாம இருந்தேன்!” என்றதும்,  

 

அவனின் சிறுபிள்ளை செயலில், கோபம் கொண்டவள், “நான் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, எப்படி இருந்தீங்க கூட..?!”  என போனில் அடித்து காட்டி கேட்க, அதை படிக்கவே பிரம்ப பிராய்த்தனம் கொண்டவன்,

 

“அது வேற செல்லம்மா.. ஆரனுக்காக கூட இருந்திருக்கேன். எனக்குன்னு போக இரிட்டேட்டிங்கா இருக்கு… ப்ளீஸ், எதாவது செய்யேன். நான், கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும். ஜெர்மன் போகற வேலை ன்னால, சரியா தூங்கவே இல்ல.. அதான், தலை வலிக்குது செல்லம்மா..!” என ஹாஸ்பிடல் செல்ல முடியாது என்று பிடிவாதம் செய்பவனை பார்க்கும் போது கோபம் வந்தாலும், இன்னும் அவன் முகம் காட்டும் பாவனையிலேயே, அவனின் வேதனை புரிய…

 

“இருங்க வர்றேன்!” என்று சைகை காட்டிவிட்டு, கீழே வந்தவள், மாரியும் இல்லாததால், தானே கிச்சனுக்கு சென்று, நல்ல ஸ்ராங்காக ஒரு காபியை போட்டவள், தனது ஹேண்ட் பேகில், எப்போதும் வைத்திருக்கும் மாத்திரையில், தலைவலிக்கானதை எடுத்துக்கொண்டு கௌதமிடம் சென்றாள்.

 

மாத்திரையையும், காபியையும் கொடுத்தவள், அவன் அதை முடிக்கும் முன்பாக, அவன் கலைத்து போட்ட உடைகளை, அழகாய்  கொண்டு போகும் பெட்டியில் அடுக்கிவிட்டு, அவனுக்கு தேவையான அனைத்தையும், சரி செய்து முடித்து பார்க்க, அப்போதும் அவனின் நிலையில் மாற்றமின்றி, அதே போல் தலையை பிடித்த வண்ணம் இருக்க,

 

அவனிடம் சென்றவள், அவனை தன் மடியில் கிடத்தி, மெல்ல அவனின் தலையை பிடித்துவிட துவங்கினாள். அவளின் செயலில், வலியின் அளவு சிறிது மட்டுப்பட்டாலும், அவனின் மன வேதனை அதிகமாக தான் ஆனது.. காரணம், இதே போன்று முதல் முறை வந்த போது, அவளின் பேச்சும் பாட்டும் அவளின் இன்றைய நிலையை அவனுக்கு உணர்ந்த, அதுவரை வராத கண்ணீர் அவனின் விழிவழி, அவளின் மடியை நனைத்தது..

 

தன் மடியில் ஈரத்தை வெகு நேரம் சென்றே உணர்ந்தவள், பதறி போயி அவனின் தலையை நிமிர்த்த, அதிலிருந்த வேதனையும், அவனின் கண்ணீரும், அவளுக்கு என்ன உணர்த்தியதோ, அடுத்த நொடி அவனின் முகத்தை இரு கரங்களால், தனது நெஞ்சோடு அள்ளி அணைத்தவள், அவனின் விழி நீரை, தன் உதடால் ஒத்தி எடுத்தாள்.

 

அவளின் இதழ் தீண்டல், அவனின் மனதை மேலும் வருத்த, “சாரி, செல்லம்மா! என்னால தானே.. நீ வேணாமுன்னு சொல்லியும், நா கட்டாயபடுத்தினதால தானே, இப்ப உன்னோட உணர்வுகளை கூட வெளிப்படையா சொல்ல முடியாம போச்சு.. ஐ ம் ரியல்லி சாரி..! சாரி..!” என்று ஓயாமல் சொல்ல, தனது இதழ் கொண்டு, அவனின் வார்த்தைக்கும், வருத்ததிற்கும் தடையிட்டாள் மங்கையவள்…

 

கௌதமோ, அவளின் செயலில் சுகமாய் அதிர்ந்து தான் போனான். இதுவரையிலும், ஒரு முறை மட்டுமே, அதுவும் அவளின் மனதை மாற்ற மட்டும், அவளின் இதழை, அதுவும் கௌதமாக இணைத்திருக்கிறான்.

 

முதன்முறை கொடுத்ததன் தாக்கத்தை நன்கு உணர்ந்தவன், மறுமுறை தங்களின் முறையான திருமணத்திற்கு பின் தான், என்பதில் தீர்மானமாய் இருக்க, இன்று தன் செல்லம்மா.. தானாக வந்து இப்படி ஒரு செயலை செய்வாள் என்பதை கிஞ்சித்தும் நினைக்கவில்லை.

 

அவளின் செய்கையில், அவனின் மனதின் பாரம் குறைய, அவனின் உடல் கொண்ட மாற்றம் அவனின் வேதனையையும், மெல்ல குறைக்க துவங்கியது. வேதனை குறைய, அவனின் உடலோ, உணர்வு ரீதியான தேடல் கொண்டு, அவனை ஆட்டுவிக்க, அவளாக ஆரம்பித்த செயலை, அவன் கையிலெடுத்தது எப்போது என்பதை அவர்கள் இருவருமே அறியவில்லை.

 

அவளை விட்டு, சிறிதும் நகராது, அவளை தன்னோடு சேர்த்தவனின் கைகள், இடம் மாறிய போதே, அவனின் உணர்வுகளோடு தான் விளையாடிவிட்டது விளங்கியது காயத்ரிக்கு…

 

அவனின் வேகத்திற்கு, அணை போட்டு விட பெண்மை துடித்தாலும், அவனின் நிலையும், அவன் மீதான காதலும், அவனின் செயலுக்கு உடன்பட சொல்லி மனதை கட்டாயபடுத்த, இரண்டிற்கும் இடையே தடுமாறி போயிருந்தாள் காயத்ரி.

 

தனது எல்லையை கடக்கும் தருணத்திலும், ஏதோ ஒரு சிந்தனையில் சிறிது நிதானித்தவன், பின்பு அவளுக்கு உணர்த்தியது அனைத்தும், அவனின் வேகத்தை மட்டுமே… அப்போதும், அவனின் வேகத்தையும், மோகத்தையும்  தாண்டி, ஒரு நொடி அவளை விட்டு விலகியவன், அவளின் முகத்தை பார்த்தான், அவளின் முழு சம்மதத்திற்காக..

 

அதுவே, அவளின் கொஞ்ச நஞ்ச தயக்கத்தையும் உடைத்தெறிய…. அவனின் முகத்தை பார்க்காமல், விழி மூடி சம்மதம் சொல்லிய மறு நிமிடம், அவனின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்திருந்தாள் அவனின் செல்லம்மா… இதுவரையிலும், மனதால் மட்டுமே உறவாடிய இரண்டு உயிரும், இன்று உடலாலும் ஒன்று பட்டு ஓருயிர் ஆகினர்.

 

அவனால், தான் கொண்ட வலியை, தன் கண்ணீரால் வெளிப்படுத்தினால், அதுவே, அவனை வேறு விதமாய் குற்ற உணர்வில் தள்ளிவிடுமோ?! என்பதை மனதில் கொண்டவள், அதை சிறிதும் வெளிப்படுத்திவிடாது இருக்க பெரும் பிராயித்தம் செய்த போதும், அதை உணர்ந்ததை போல, அவனின் இதழ்கள் செவியில் உரைத்த வார்த்தைகளும், அவனின் மென்மையான அணுகுமுறையும், அவளை அவனின் செயலில், மேலும் ஒன்றி போக செய்தது என்றால் மிகையில்லை….

 

தன்னை அவளுக்கும், அவளை தனக்குள்ளும் முழுதாய் உணர்ந்திட செய்து விலகியவனின் மனமும், உடலும் புத்துணர்வோடு இருக்க, இதுவரை இல்லாத தெளிவோடு, நிறைவான புன்னகையை சிந்தியவனை பார்த்த போது, தன்னை அவனுக்கு முழுதாய் கொடுத்தை எண்ணி பூரிப்பே வந்தது.. அவனின் செல்லம்மாவிற்கு..   

 

புதிதாக உணர்ந்த இந்த உறவு தந்த இதமோ, அல்லது அவள் தந்த மருந்தின் விளைவோ, கௌதம் மெல்ல தூக்கத்தில் ஆழ, அவனை விட்டு விலக நினைத்தவளின் எண்ணம் உணர்ந்தது போல, தன்னுள் அழுத்தமாய் அவளை புதைத்துக்கொண்டான் கௌதம், தனது இருகரம் கொண்டு…

 

கௌதமின் உடல் தந்த மிதமான சூடும், உடலில் இருந்த களைப்பும், காயத்ரியையும் உறக்கத்தில் ஆழ்த்த, அவள் மீண்டும் விழித்ததே கௌதமின் சீண்டலில் தான்…

 

முதலில் கௌதமிற்கு, தன் கைவளைவில் உறங்கிய, தன் செல்லம்மாவை பார்த்த போது.. என்றைக்கும் போல வந்த கனவு தானோ!  என்று எண்ணியவன், அவளை இறுக்கி அணைக்க, அந்த பிம்பம் மறையாது, தனது அழுத்தத்தில் நெழிய, அப்போது தான் இரவில் நடந்த அனைத்தும் கௌதமின் நினைவுக்கு வந்தது.

 

நேரத்தை பார்க்க, அது அதிகாலை 5 என்பதை காட்ட.. மெல்ல அவளை தன்னுள் அடக்கியவனின், இதழ்கள் அவளின் வெற்று முதுகில் கோலம் வரைய, அவனின் மீசை தந்த குறுகுறுப்பில் சினுங்களோடு திரும்பியவள்,

 

கௌதமின் கண்ணில் தெரிந்த மோகத்தில் ஒட்டு மொத்தமாய் கரைந்து போனாள். அவனின் தேவை மட்டுமே எண்ணாமல், தன்னவளின் சந்தோஷத்தையும், மனதில் கொண்டு நடந்தவனின் மேல் அவளின் மதிப்பு கூடித்தான் போனது அந்த நொடி…

 

இம்முறை தன்னை விட்டு விலகியதும், தன் மேல், அருகே இருந்த டவளை கொண்டு, உடலை மறைத்தபடி எழுந்தவள், தனது உடைமைகளை எடுக்க, அவளின் பக்கம் வந்தவன், “செல்லம்மா  அது எதுக்கு, அதெல்லாம் வேணாமே…!” என்றதும், அவள் அதிர்ந்து தான் போனாள், அது தந்த அர்த்ததில்…

 

அவளின் விழி சொன்ன மொழியில், வாய் விட்டு சிரித்தவன், “அச்சோ, அதையே எப்படி போடுவ, போ, போய் குளி உனக்கு ட்ரஸ்க்கு, நா ஏற்பாடு பண்றேன்னு சொன்னேன்” என்ற பிறகே, ஆசுவாசமாய் பெருமூச்சு கிளம்ப,

 

“நீ, நினைச்ச மாதிரி, அது இல்லாம நம்ம இப்படியே இருந்தாலும் எனக்கு ஓகே தான்..!” என்று சொல்லி கண்சிமிட்ட, அவனின் தோளில், ஒரு அடியை போட்டவள், சுட்டுவிரல் நீட்டி மிரட்ட, சட்டென அந்த சுட்டுவிரலோடு, தனது விரலை கோர்த்து இழுக்க, தன் மீது பூமாலையாய் விழுந்தவளை அள்ளிக்கொண்டவன், குளியலறைக்குள் அவளோடு நுழைய, அதிர்ச்சியில் அவளின் விழிகள், அகன்று விரிந்தது.

 

உள்ளே வந்தவனை கெஞ்சி, கொஞ்சி வெளியே அனுப்புவதற்கு, லஞ்சமாய் அவன் கேட்டதை கொடுத்து முடிப்பதற்குள், அவளுக்கு போதும் போது என்றானது.

 

அவன் வெளியேறி சென்றதும், கதவை அடைத்து, அங்கிருந்த ஷவரை திறந்து அதனடியில் அமர்ந்தவள், அதுவரை அடக்கியிருந்த கண்ணீரை உகுத்தாள் கேட்பார் யாருமின்றி… அவளின் அழுகை கௌதமிற்கு தன்னையே கொடுத்ததால் அல்ல.. அதை முறையான உறவு முறைக்கு முன்பு, அதுவும் அவளின் பெற்றோருக்கு தெரியாமலும், கௌதமின் கொள்கை நன்கு தெரிந்தும், தான் செய்த சிறு செயலால் தான், அவன் எல்லையை கடந்தான் என்பதால் வந்த குற்ற உணர்வு தந்த அழுகை….

 

நேரம் கடந்து செல்ல, கௌதமின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள், அவசரமாக குளித்து, தனது வருத்தமும் கலக்கமும் கௌதமிற்கு தெரியாத வகையில் முகத்தை மாற்றிக்கொண்டவள், கதவு வழி, பல சீண்டலோடு கௌதம் தந்த உடையை உடுத்தி வந்தாள்.

 

அவன் கொடுத்த உடை அவ்வளவு சரியாக, தனக்காகவே தேர்ந்தெடுத்தது போல நேர்த்தியாக இருக்க, அதில் வியந்தவள், “எப்படி இவ்வளவு விரைவாக, அதுவும் இந்த நேரத்தில் தனக்கு சரியான உடையை வரவைத்தான்?!” என்ற எண்ணம் தோன்ற, அதே சிந்தனையில் இருந்ததால், அவளின்

சோகமும், குற்றஉணர்வும் கௌதமிற்கு தெரியமலேயே போனது.

 

அவளையே பார்த்திருந்த கௌதமிற்கு, அவளின் உடை பற்றிய சந்தேகம் மட்டிலும் புரிய, அவளை பின்னிருந்து அணைத்தவன், “செல்லம்மா, அன்னைக்கி உன் பிறந்தநாளுக்கு புடவை வாங்க போன போதே, இந்த சல்வார் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சரி வாங்கி வைப்போம், நீ இங்க வந்தா உடுத்த இருக்கட்டுமின்னு வச்சேன். அது இப்ப எப்படி யூஸ் ஆச்சு பார்த்தியா?!” என்றவனின் கையும், இதழும் செய்த மாயத்தில், கிறங்கியவளை கௌதமின் சிரிப்பு சத்தம் நினைவுக்கு கொண்டு வர, முகம் சிவந்து நின்றிருக்க, கௌதமோ விடாமல்,

 

“செல்லம்மா.. இப்படியே போனா நா ஜெர்மனுக்கும் போக முடியாது, நீ எக்ஜாமுக்கும் போக முடியாது..!” என்ற சில்மிஷ பேச்சில் சுயத்திற்கு வந்தவள், அவசரமாக அவனை விட்டுவிலகிட, அவனின் பார்வையோ, அவளை தொடர்ந்து கொண்டே இருந்தது, அவள் தயாராகும் வரையிலும்…

 

காயத்ரியை விட்டுவிட்டு வந்த உடன், தனது கம்பெனிக்கு சென்று செய்ய வேண்டிய முக்கிய பணியை முடித்து,  ஃபைல்களை எடுத்துக்கொண்டு, நேரே ஏர்போர்ட் செல்வதாக ஏற்பாடு செய்தவன்,  அவளை அழைத்துக்கொண்டு வெளியேற, சட்டென நினைவு வந்தவளாக, மீண்டும் அறைக்குள் சென்று, நேற்று கௌதம் தந்த, அந்த பரிசை எடுத்துக்கொண்டு வெளிவர, அதை கண்டவன் விழியில் வந்து போன உணர்வை புரிந்திருந்தால், எல்லாமே சரியாக நடந்திருக்குமோ..?!

 

அவளிடம், “செல்லம்மா, நீ இந்த கிப்ட்ட பார்த்துட்டு வரலையா?!” என்றதும், அவனின் கேள்வியில் இருப்பது என்னவென புரியாது, ‘தான் அதை மறந்ததையும், திரும்ப எடுக்க வந்ததையும்’ செல்லில் டைப் செய்து காட்ட, ‘ஓ.. காட்…!’ என்று மெல்ல தனக்குள் முனுமுனுத்துக்கொண்டவன்… “ஓகே, செல்லம்மா.. நா ஜெர்மன் போயிட்டு வந்ததும், உன் வீட்டில பேசி எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். என்ன ஆனாலும், நா உன்கூட தான் இருப்பேன். அதுக்கு, அத்தாட்சி தான் இந்த கிப்ட்.. இது மட்டும் எப்பவும் உன்கிட்டையே வச்சிக்க!” என்ற பூடகமான பேச்சை, புரிந்து கொள்ள அவகாசம் இல்லாது, காயத்ரியின் போன் ஒலிக்க,

 

அதில் ஒளிந்த சுமியின் எண்ணிலிருந்து தான் இரவு இங்கு இருந்தது குறித்து அவளுக்கு தெரிவிக்கா குற்ற உணர்வில்  

கௌதமை பார்க்க, அவளிடம் போனை வாங்கி பார்த்தவன், அதை அட்டன்ட் செய்து, “சுமி, நேத்து லேட் நைட், தனியா அனுப்ப வேணாமேன்னு இங்கையே இருக்க சொல்லிட்டேன். இப்ப கொஞ்ச நேரத்துல வந்திடுவா..” என்றிட,

 

“சரிங்க சார்.. தகவல் எதுவும் வரலையா. நான் வேற, நைட் டையர்டுல தூங்கிட்டேன், காலைல தான் அவ வராம போனது தெரிஞ்சுது சார். எக்ஜாமுக்கு டைம் வேற ஆகிடுச்சு.. அதான்..!” என்றதும், தனது கடிகாரத்தில் மணியை பார்த்தவனுக்கு உண்மையில் ஆச்சர்யம் தான்.. நேரம் விரைந்த விதத்தில்.. அதை விடுத்து இப்போதைய சூழலுக்கு வந்தவன், சுமியின் அக்கரையான பேச்சிற்கு பதிலாக,

 

“ரொம்ப தேங்க்ஸ் சுமி.. காயத்ரி மேல அக்கரையா இருக்கறதுக்கு. டோண்ட் வொரி, காயுவ இப்ப அனுப்பிடுறேன்” என்று சொல்லி, காலை கட் செய்தவன், அவளை கீழே அழைத்து வரும்போது, “செல்லம்மா, ஜெர்மன் போனா நிச்சயமா போன்ல பேசறது கஷ்டம்டா, எனக்கு, எவ்வளவு சீக்கிரம் வேலைய முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடுச்சிட்டு வரணுமின்னு தான் இருப்பேன். உனக்கும் எக்ஜாம் இருக்கு.. சோ, நல்லா எழுது.. நீ வீட்டுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி வர பார்க்கறேன். இல்லைன்னாலும், நீ உங்க வீட்டுக்கு போனா, அடுத்த நாள் அங்க இருப்பேன். ஆல் தி பெஸ்ட் ஃபார் யூவர் எக்ஜாம்ஸ்” என்று வாழ்த்து சொல்லி அனுப்ப முயல,

 

சடுதியில் அவனை நெருங்கி, அவன் எதிர்பாரா தருணத்தில், கன்னத்தில் இதழ் பதித்தவள், சிட்டென பறந்திருந்தாள் காரின் அருகே.. நடந்தது என்னவென உணரும் முன்பே, ஓடிவிட்ட செல்லம்மாவின் செயலில், அழகாய் புன்னகை விரிய வந்தவன், அதே இதத்தோடு, அவளை வழியனுப்பி வைத்தான். இனி, அந்த இதம் நிலைக்க போவது இல்லை! என்பதை அறியாமல்….

 

அவள் விலகி சென்ற பின்பு கூட, அவள் தந்த முத்தத்தில் திளைத்திருந்தவனை மீட்டது, அவனின் போனில் வந்த ஒலி. எடுத்து பார்க்க, அது அவனின் செல்லம்மா அனுப்பிய வாழ்த்து.. அவனின் வெற்றிக்காக…! அவளின் வாழ்த்தோடு உற்சாகமாக, தனது பயணத்திற்கு தயாராக சென்றான்.

 

கௌதமுக்கு வாழ்த்தை அனுப்பி முடிக்கும் வரை இருந்த இதம், தன் கையில் வைத்திருந்த அந்த பரிசினை கண்ட போது மாயமாகி போனது. ஒரே நேரத்தில் கௌதமின் கொள்கைக்கும், பெற்றவரின் நம்பிக்கைக்கும் ஊறு விளைவித்த அந்த பரிசினை காணும் போது, அவளின் குற்றஉணர்வு அதிகரிக்க, அதை பிரித்து, அதில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும், என்ற எண்ணமே ஒருவித வெறுமையை தந்தது. அதோடு, அன்றைய பரிச்சையில் வேறு, இருந்த குழப்பமான மனநிலையில், சரியாக விடையளிக்காது போக, அதுவும் சேர்ந்து அந்த பரிசினை பிரிக்கும் எண்ணத்தை வேறோடு அழித்தது.

அதனால், ஹாஸ்டல் வந்ததும், தனது பெட்டியில் வைத்தவள், அதை எடுத்து பார்க்கும் எண்ணத்தை ஒழித்து, தனது பாடத்தில் கவனத்தை திருப்ப முயன்றாள்.

 

அவளின் மனஉறுதியால், கடைசி பரிச்சை வரை அதனை தொடாது இருந்தவள், சுமியும் அவசரமாக ஊருக்கு அன்றே சென்றுவிட, கிடைத்த தனிமையில் அதனை எடுத்தவள், பிரிக்க இயலாது இருமனமாய் போராட, ஒரு வேளை கௌதம் வந்து கேட்டால், இன்னும் பார்க்கவில்லை என்று எப்படி சொல்வது? என்பதற்காகவே, அதனை பிரிக்க, அதனுள் இருந்ததை, நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவே இல்லை என்பதற்கு, அவளின் கண்ணீரே சாட்சியாகி போனது…..

 

error: Content is protected !!