Kadhal 2

அத்தியாயம் 2

மிகப் பிரமாண்டமான ஆறுமாடிக் கட்டிடம் “ருக்மணி”. சபரிநாதனின் தாயின் பெயரால் ஆரம்பித்த நிறுவனம்.

சிறு முதலீட்டில் துவங்கப்பட்ட நிறுவனம், இன்று ஆறு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது என்றால் அது சபரிநாதனின் கடும் உழைப்பே காரனம்.

சில வருடங்களுக்கு முன் மனைவியும் இறந்துவிட, அதில் கொஞ்சம் ஓய்ந்து போனவர். இப்போது பக்கவாதத்தால் இன்னும் ஓய்ந்து போனார்.

சிறு சிறு இடைவெளியில் இரண்டு கார்களும் அலுவலக வாயிலினுள் நுழைந்தன.

ஒன்றிலிருந்து ஆருஷ் அட்டகாசமாக இறங்கி, வேகமாக உள்ளே சென்றான். உள்ளே அவனது உதவியாளரான பாலாஜி அன்றைய நிகழ்வுகளைப் பட்டியலிட்டவாறு அவன் வேகத்திற்கு ஈடுக்கொடுத்தான்.

மற்றொன்றில் இருந்த தீப்தி ஸ்டைலாக தன் வருகையை பதிவு செய்தாள்.

வெள்ளை நிற சட்டை, கருப்பு நிறத்தில் கால்களை இருக்கி பிடித்த ஸ்கர்ட், மேலே கருப்பு பிளேசர், கையில் விலை உயர்ந்த பர்ஸ், நான்கு இன்ச் ஹை ஹீல்ஸில் டக்…டக்..என வந்தவளை அவளது உதவியாளரான சித்ரா எதிர்கொண்டாள்.

அவளுக்கான அன்றைய நிகழ்வுகளை கூற எத்தனிக்க, “வெய்ட் சித்ரா… ஐ வான்ட் டு மீட் மிஸ்டர். ஜெ.எம்.டி. அதற்கு ஏற்பாடு செய்… அவர பார்த்துட்டுதான் அடுத்த வேலைய ஆரம்பிப்பேன்னும் சொல்லிடு” என்றவாறு தன் அறைக்குச் சென்றாள்.

சித்ரா சொன்ன “ஓ.கே. மேம்” காற்றோடுதான் கதை பேசியது. ஒரு நிமிடம் நின்றவள், இந்த ட்ரஸ்ஸையும், ஹீல்சையும் போட்டுட்டு எப்படிதான் இவ்ளோ வேகமா நடக்கறாங்களோ! என வியந்தவாறே ஆருஷின் அறையை நோக்கி சென்றாள்.

சித்ரா செய்தியை கூறியவுடன் புருவ மத்தியில்ஒரு சின்ன சுருக்கம், பின் தன் கையில் இருந்த வாட்சைப் பார்த்தவன் “ஓ.கே. இன்னும் பத்து நிமிசத்துல மீட்டீங் ஹால் வரச் சொல்லுங்க” என்றவாறு மீண்டும் தன் வேலைகளில் மூழ்கினான்.

சரியாக பத்து நிமிடத்தில் ஆருஷ் சென்றிருக்க, தீப்தியும் வந்தாள். எப்போதும் போல ரசனையாய் ஒரு பார்வை ஓட்டம் அவன்மீது.

ஆருஷோ லேப்டாப்பில் ஏதோ பணிசெய்தவாறு அமர்ந்திருந்தவன் இவளை கவனிக்கவில்லை…இல்லை அப்படி காட்டிக் கொண்டானோ!

ஒரு முடிவுடன் அவன் முன், மேசையின் மீது கை வைத்து சாய்ந்தவாறு நின்றவள், “போதும் ஆருஷ் ரொம்ப காக்க வைக்கற” இரு பொருள்பட கூறி அவன் கவனத்தை கலைத்தாள்.

லேப்டாப்பை மூடி வைத்து விட்டு சாய்வாக அமர்ந்து அமர்த்தலாய் அவளை பார்த்தவன், ” ரியலி…நான் காத்திருக்க சொல்லலயே! அதுவுமில்லாம நான்தான் முன்னவே ‘என்னோட’ இடத்துக்கு வந்துட்டேனே.. அது தெரியாம நீங்க காத்திருந்தா அதுக்கு நான் பொறுப்பா மிஸ் தீப்தி சபரிநாதன்.”

“என்னோட” என்பதில் இருந்த அழுத்தம் அவன் நேரடியாக பேச தயாராகிவிட்டான் என்பதை உணர்த்தியது.

இவளும் இந்த சந்தர்ப்பத்தை விட தயாராக இல்லை. தன்னைப் பற்றியும், தன் காதலைப் பற்றியும் பேச வந்தாலே வேறு பேச்சுக்கு தாவுபவன் இன்று தானாக பேச்சுக் கொடுப்பது ஆச்சர்யமாக இருந்தது.

இதே எண்ணம்தான் ஆருஷின் மனதிலும். இன்றோடு இவளது பார்வைக்கும், காத்திருப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தனக்காக இல்லையென்றாலும் சபரிதாநன் அங்கிள்காக வேண்டியாவது இதைச் செய்ய வேண்டும்.

அவரது மகளது வாழ்வு மலராமல் இருக்க தெரிந்தோ தெரியாமலோ தான் காரணமாய் இருக்க கூடாது என சில மாதங்களாகவே எண்ணிய வண்ணம் இருந்தவன் இன்றைய வாய்ப்பை பிடித்துக்கொண்டான்.

“நமக்குள்ள இந்த ஒளிவு மறைவெல்லாம் வேண்டாமே. நான் நேரடியாவே கேட்கறேன் என்னோட காதலை ஏத்துக்கறதுல அப்படி என்ன தடை உனக்கு ஆருஷ்… என சற்று நிதானித்தவள், “இத “ருக்மணி” யோட எம்.டி.யா கேட்கல, சபரிநாதன் பொண்ணா கேட்கல… உன் கூட படிச்ச தீப்தியா கேக்கறேன். ப்ளீஸ்”

அமர்த்தலாய் ஆரம்பித்தவள் கெஞ்சலோடு முடித்தாள். காதலை கிட்டத்தட்ட யாசகம்போல் கேட்க மனது வலிக்கிறதுதான்.

ஆனால் இவனை விடச் சொன்னால் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியது போல ரனமாய் கொல்கிறதே!

இவளது கேள்வியில் அவனது விரைப்புத் தன்மையும் போய் இளகுவாக உணர்ந்தான். அதே சமயம் அவளுக்கு வலிக்க வைக்காமல் விலக வேண்டும் எனவும் எண்ணாமலில்லை.

இது எந்தளவு சாத்தியம் . நிச்சயம் காயப்படுவாள். ஆனால் அதன் வீரியம் குறைவாக இருக்க வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தான்.

“எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசக் கூடாது தீப்தி” வருத்தத்துடன் ஒலித்தது அவன் குரல்.

“எல்லாமே தெரிஞ்சதாலதான் இன்னும் உறுதியா பிடிக்குது ஆருஷ்”

“ம்ப்ச்.. இது நடக்காதுடா…ப்ளீஸ் டோன்ட் ஃபோர்ஸ் மீ”

“ஏழு வருஷம் ஆருஷ்… முழுசா ஏழு வருஷம்… விட்டுட்டு போனவளுக்காக ……” அடுத்து என்ன கூறாயிருப்பாளோ!

“இனாஃப் தீப்தி… மைண்ட் யுவர் வோர்ட்ஸ்” என அதிகார தொனியில் கூறியவன்

“திஸ் ஈஸ் தி லாஸ்ட் வார்னிங் ..அதுவும் சபரிநாதன் அப்படிங்கற ஒரு பெயருக்காக…. ஸ்டே அவே ” என கை நீட்டி எச்சரித்தவாறு வெளியேறிவிட்டான்.

இதுவரை அவளை நோக்கி அவனது குரலும் உயர்ந்ததில்லை! விரலும் உயர்ந்ததில்லை! இன்று இரண்டும் உயர்ந்து இவளை தாழ்த்தியதாக தோன்றியது.

கண்களில் இருந்து நீர் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்தாள் தீப்தி.

ஏழு வருஷமாகியும் இன்னும் உருகறயே ஆருஷ், உன்னால என்னை என்னோட காதலை புரிஞ்சுக்க முடியலயா? உன்ன மாதிரிதான் நானும் ஏழு வருஷமா காத்திருக்கிறேன். பாக்கலாம் யார் காதல் ஜெயிக்குதுன்னு” என ஒரு முடிவோடு கண்களை துடைத்தாள்.

காதலில் உயர்த்தி என்ன? தாழ்த்தி என்ன? எல்லாம் காதல் தானே! ஆனால் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல் பெற்றும், கொடுத்தும் இருமுனையாய் கொள்ளும் காதல் சக்தி வாய்ந்தது.

மாறாக நான் உன்னை விரும்புகிறேன் அதனால் நீ என்னை விரும்பிதான் ஆக வேண்டும் என்பது எப்படி மேன்மையான காதலாகும். இனி முடிவு காலத்தின் கையில்!

லண்டனில் ஹர்ஷியின் வீட்டில் அமைதியாக ஒரு பூகம்பமே உருவாகிக் கொண்டிருந்தது. காரணம் ஆதித்யாவின் முடிவு.

ஹர்ஷியின் தாய், தந்தை என்ன செய்வது என கையை பிசைந்துகொண்டு தவித்தபடி அமர்ந்திருக்க, தர்ஷியோ வெடி வைத்து கொண்டாடும் நிலமையில் இருந்தாள்.

ஹர்ஷிக்கோ ஏதோவொரு பரபரப்பும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டது.

ஆதித்யா கூறியது இதைத்தான் ….அன்று தாய் தந்தையோடு காலையே வீட்டிற்கு வந்தவன் திருமணம் இந்தியாவில்தான் நடக்க வேண்டும் என்றும், அதற்காக இந்த வாரம் ஊருக்கு செல்லும் போதே ஹர்ஷியை தன்னோடு அழைத்துச் செல்வதாகவும் கூறினான்.

இதைக்கேட்ட ஹர்ஷியின் பெற்றோரோ அதிர்ச்சியாகி இருக்க, தர்ஷி குத்தாட்டம் போடும் மனதை அடக்கியபடி இருந்தாள்.

தெரிந்தோ தெரியாமலோ ஆதித்யா செய்த உதவிக்கு மனதார நன்றி கூறினாள். அதே சமயம் பெற்றோரைப் பார்த்து, “இப்போ என்ன செய்வீங்க?”என்ற கேலிப்பார்வை பார்க்கவும் தயங்கவில்லை.

“ஹர்ஷி அவ்ளோ தூரம் தனியா எப்படி!” என அவர்கள் சமாளிக்க பார்க்க,

“வேணும்னா நானும் கூடப் போறேன்பா” என தர்ஷி சமாளிப்புக்கு தடை போட, அவளது பெற்றோர் அவளை முறைத்தனர். அதற்கெல்லாம் அசருபவளா அவள்!

ஆதியின் பெற்றோரும் இதுதான் சரி என வாதிட, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள வேண்டியதாய் இருந்தது அந்த பணத்திமிர் பிடித்த பெற்றோருக்கு.

ஹர்ஷிக்கு இது எதுவும் மனதில் பதியவில்லை. இந்தியா செல்கிறோம் என்றதுமே ஏதோ நினைவுகள் எழுந்து உடல் தானாக சிலிர்த்தது.

ஒருவேளை தனக்கு வரும் கனவுக்கான விடை அங்கு இருக்குமோ! என எண்ணத் தொடங்கி விட்டாள்.

மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்க ஆதி தன் செல்போன் மணி அடிக்கவும் அதை எடுத்துக் கொண்டு தனியாக சென்றான்.

அவன் செல்வதை பார்த்த தர்ஷியும் அவன் பின் சென்றாள். அவன் பேசி விட்டுத் திரும்பவும் இவள் நிற்பதைப் பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினான்.

“என்ன புருவம் தூக்கறான்… அவசரப்பட்டு வந்துட்டமோ!” என நினைக்க,

“என்ன மேடம் என் பின்னாடியே வந்துட்டு ஒன்னும் பேசாம நிக்கறீங்க…நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்” என கண்சிமிட்டி கேட்க,

‘ம்க்கும் இவன பத்தி தெரிஞ்சும் இப்படி வந்து மாட்டிக்கிட்டயே தர்ஷி’ என அரண்டவள்,

“ஹி..ஹி..ஹி அது வந்து அக்காவ இந்தியாக்கு கூட்டிட்டு போகனும் சொன்னீங்கள்ள அதுக்கு தேங்க்ஸ் சொல்ல வந்தேன்.”

இவ இப்படி வளையுற ஆள் இல்லையே என யோசித்தவாறே, “அதுக்கு உங்கக்காதான தேங்க்ஸ் சொல்லனும், நீ ஏன் சொல்ற”

“ஏன்னா! நானும்தான கூட வரேன், இல்லயா அதான் சொல்றேன். ”

“ஓ..உங்கக்காவுக்கு நீ ஃப்ரீயா, அடடா! ஆதி டபுள் டமாக்காவா இது தெரியாம போச்சேடா” என வாய்விட்டு புலம்ப,

முதலில் அவன் என்ன கூற வருகிறான் என புரியாதவள் புரியத் தொடங்கியதும், “ராஸ்கல் உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா என்னை ஃப்ரீயான்னு கேட்ப, உனக்கு எங்கக்காவே அதிகம் இதுல நான் வேறயா…தலைல கல்ல தூக்கி போட்டு கொன்றுவேன் ஜாக்கிரதை” என மிரட்ட,

அவளது கையை பிடித்து இழுத்து சுவரோரமாக சாற்றியவன், “ஏய் என்னடி நீயா வந்த தேங்க்ஸ்ன்ன, இப்ப என்னடான்னா மரியாதை இல்லாம பேசற… நீ ஒன்னும் இந்தியாக்கு வர வேண்டாம். நான் அவங்ககிட்ட பேசிக்கறேன்” என முகத்தினருகில் வந்து மிரட்டவும் அரண்டு விட்டாள்.

ஹர்ஷியை தனித்து விட மனமில்லை. தனக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு இதைத் தவற விடுவதா!

“ச்சே என்ன வாய் என்னோடது! இவன வேற சீண்டி விட்டுட்டமே. எப்படி இவன சமாதானப்படுத்தறது” என யோசித்தவாறே மேற் பார்வையாய் அவனைப் பார்க்க, அவனும் இவளின் முகபாவனைகளை படித்துக் கொண்டிருந்தான்.

“என்ன? என்னை எப்படி சமாதானப் படுத்தறதுன்னு யோசிக்கறயா!”

“சாரி..சாரி இனி இப்படி பேச மாட்டேன், என்னையும் கூட்டிட்டு போங்க.. நான் என் ஃப்ரண்ட்ஸ்யெல்லாம் பார்ப்பேன்” என பாவமாய் கேட்க,

“உன் சாரி எனக்கெதுக்கு, எனக்கு வேற வேணும்”

“வே….வேற வேணுமா”

“ஆமா”

“என்..ன வேணும்” நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

“என்னை…..என்னை….என்னை…”

“சொல்லித் தொலையேண்டா” என மனதோடு திட்டினாள், அவளுக்கு பிபி தாறுமாறாக ஏற பெருமூச்சு வாங்கியது.

அவளது அவஸ்தையை பார்த்தவன் மேலும் நெருங்கி நின்றவாறு காதோரம் குனிந்து, “இனி நீ என்ன மாமான்னுதான் கூப்பிடனும்”

இப்போதுதான் இழுத்துப் பிடித்த மூச்சை வெளிவிட்டாள். ஆனாலும் மாமாவென்று கூப்பிட மனம் வரவில்லை. முகத்தைச் சுளித்தவாறு,

“நான் ஏன் உங்களை மாமான்னு கூப்பிடனும்” என அவனது நெருக்கத்தில் நெளிந்தவாறு கேட்க,

“கட்டிக்கப் போறனே” என இடைவெளி விட்டவன் “உங்க அக்காவ”

“அது நடந்தாதான” என சட்டெனக் கூறியவள் உளறி வைத்ததை எண்ணி நாக்கை கடித்தவாறு “அதாவது இன்னும் கல்யாணம்தான் நடக்கலயே… நடந்தவாட்டி கூப்பிடறனே!” என சமாளிப்பாய் கூற,

அவளது பதிலில் அவளை உரசுமாறு மேலும் நெருங்கியவன், “இந்த கல்யாணம் நடந்தாலும் சரி, நடக்கலன்னாலும் சரி நான்தான் உன்னோட மாமா புரியுதா” என கண்களை பார்த்தவாறு கூறினான்.

“அது எப்படி”

“எல்லாம் ஒரு சொந்தம்தான். யோசிச்சு பாரு சரியா வரும்” என்று முன்னுச்சி முடிகளை ஒதுக்கி, கன்னத்தை தட்டியவாறு விலகிச் சென்று விட்டான்.

இவள்தான் அவன் விலகலைக் கூட கவனிக்காமல் உறவு முறையை யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆதியின் குடும்பம் ஏதோ தூரத்து உறவுமுறை என்று தெரியும். இவர்கள் பெண் கேட்டு வரவும் இவர்களின் பணச் செழுமையைப் பார்த்து மயங்கியே சரியென்ற தன் பெற்றோரை நினைக்கையில் மனது வேதனைப் பட்டது தர்ஷிக்கு.

தனியாக நின்று யோசித்துக் கொண்டிருந்தவள் ஹர்ஷி வந்து தோள் தட்டவுமே கலைந்தாள்.

‘ச்சே இவ்ளோ நேரமாவா யோசிச்சிகிட்டு இருந்தோம்… என்னையே ஃப்ரீஸ் ஆக வச்சிட்டானே..இவன்கிட்ட என்னவோ இருக்கு. அதான் பொண்ணுங்க எல்லாம் இப்படி விழுந்து விழுந்து பழகுதுங்க’ என மனதில் அவனை தாளித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் ஹர்ஷி அழைக்கவும்,

“என்னக்கா”

இவளை ஒரு மாதிரியாக பார்த்தாள் ஹர்ஷி.

“என்ன? ஏன் அப்படி பார்க்கற…அவங்க எல்லாம் போய்ட்டாங்களா”

“அதெல்லாம் போய்ட்டாங்க… நீ என்ன அக்கான்னெல்லாம் கூப்பிடற…நல்லாதான இருக்க” என கழுத்தில் கை வைத்துப் பார்க்கவும்,

“ஓய் என்ன கிண்டல் பண்றியா…மரியாதை குடுத்தா உங்களுக்கெல்லாம் பிடிக்காதே.. ஆமா என்ன முகத்துல பல்ப் எரியுது”

“தெரியல தர்ஷ் இந்தியாக்கு போறோம்னு சொன்னவுடனே ஏதோ சந்தோஷம்…ஆமா நமக்கு நெருக்கமானவங்கள மறுபடியும் பார்க்க போற மாதிரி எக்சைட். எப்படி சொல்றதுன்னு தெரியல. அப்படி யாராவது அங்க இருக்காங்களா” என ஆவலாய் அறியும் பொருட்டு கேட்டாள்.

முதலில் அதிர்ந்த தர்ஷி ஏதோ நினைவில் கண்கள் கலங்க, “ஆமா ஹர்ஷ் முக்கியமானவங்க இருக்காங்க”

“முக்கியமானவங்கன்னா?”

“நெருங்கிய சொந்தம்னு வச்சுக்கோயேன். சரி வா அதான் நேர்லயே பார்க்க போறோமே, இப்ப போய் பேக்கிங் செய்யலாம், கொஞ்சமா மட்டும் எடுத்து வச்சுக்க, மீதிய அங்க போய் வாங்கிக்கலாம்” என தோள் மேல் கை போட்டவாறே அழைத்துச் சென்றாள் தர்ஷினி.

இந்தியப் பயணம் இனிமையைத் தருமா?