Uyir kathale unakagave

நினைவலைகள்…

அற்புதமான
காதலை மட்டுமல்ல…!
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்கு தந்தாய்…!

எல்லாருடைய வாழ்க்கைப் புத்தகத்திலும் கிழித்து எறிந்துவிட நினைக்கும் பக்கங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன.

எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. அவளைப் பார்த்த நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை என் வாழ்விலிருந்து மறைந்து போய்விடாதா என்றிருந்தது.
என்ன செய்ய இருந்தேன்? கடவுளே! மதி கெட்டுப் போய் பள்ளிக் கல்வியை முடித்திராத சிறு பெண்ணிடம் காதலைச் சொல்லத் தெரிந்தேனே? அவள் குழந்தைக்குரிய செயல்களோடு இயல்பாய்தான் இருந்திருக்கிறாள்.

அதில் மயங்கி காதல் சொல்ல நினைத்தது என் தவறு. மனம் சாட்டையாய் விளாசியது.

ஒற்றை நாளில் என் உயிர் வரை ஊடுருவிவிட்டாளே! இன்று மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் நரகத்தில் உழலும் பாவ ஜீவனாய் நான்.

“அவளை நான் சந்தித்திருக்கவேக் கூடாது” வாய்விட்டே புலம்பிக் கொண்டேன். எனக்கானவளை என் கண்முன் தெய்வமே காட்டியதாக எண்ணியிருந்தேனே? அவ்வளவும் மாயையாய் போனதே. நினைக்க நினைக்க ஆற்றாமையால் கண்ணீர் வந்தது.

ஆண் பிள்ளை அழக்கூடாது என்று எளிதாய் சொல்கின்றனர். அடிவயிற்றிலிருந்து பந்தாய் கிளம்பி தொண்டையை வந்து அழுத்தும் துக்கத்தை என்ன செய்ய? மனம் கனத்துப் போய் பாரம் தாங்காமல் வலிக்கிறதே என்ன செய்ய?

நொடிக்கு பத்து முறை அவளை நினைக்கும் மூளையை என்ன செய்ய? நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளாமல் அலறும் இதயத்தை என்ன செய்ய? கரகரவென்று வழியும் கண்ணீரால்கூட என் மனதின் வெம்மையை தணிக்க முடியவில்லை.

“என்னம்மா சொல்ற? லெவன்த் படிக்கிறியா?” லேசான நடுக்கத்துடன் வந்தது என் குரல். “ம்ம், லெவன்த் எழுதியிருக்கேன். அடுத்த வருஷம் டுவெல்த்” குல்ஃபியில் கவனத்தைப் பதித்திருந்தாலும் பெருமையாய் வந்தது அவள் குரல்.

“பூரணி பாசாயிடுவியா?” காரிலிருந்து ஜன்னல் வழியே தலையை நீட்டி வாண்டு ஒன்று கேட்க, “டேய் நான் கிளாஸ் டாப்பர்டா” என்றவாறு அவனது மண்டையில் கொட்டி அமர வைத்தாள்.

பனி மறைத்த கண்ணாடியை வைப்பர் கொண்டு துடைப்பது போல, மூளையை மறைத்திருந்த காதல் சற்று விலகியதில் அவளது குழந்தைத்தனம் பளிச்சென்று தெரிந்தது.

பொடிப் பொடியாய் உடையும் இதயத்தை மீட்க வழியின்றி, கையாலாகாத்தனத்தோடு அவர்களைக் கொண்டுவந்து மண்டபத்தில் பத்திரமாய் சேர்த்துவிட்டு, அறைக்கு வந்து படுத்தவன்தான் விடிந்து வெகு நேரமாகியும் எழும்பாமல் படுத்துக் கிடந்தேன்.

யாருக்கும் தெரியாமல் வழியும் கண்ணீரை அந்த அறையிலிருந்த படுக்கையும் தலையணையும் வாங்கிக் கொண்டன.

கண்களில் தென்பட்ட அனைத்துமே இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. இதயத்தில் இடம் பெற்ற அனைத்தும் நம் கை சேர்வதில்லை. அதுதான் வாழ்க்கை நியதி, ஒப்புக் கொள்ளத்தான் மனம் வருவதில்லை.

எவ்வளவோ பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல… அவளை மட்டும் ஏன் விரும்பினேன்? அவளை மட்டும் ஏன் இந்தளவு பிடிச்சு தொலையுது என்று என்னிடமே நான் வாதிட்டுக் கொண்டேன்.

எனக்காக பிரத்யேகமாக படைக்கபட்டவள் அவள் மட்டுமே என்றுதான் நினைத்திருந்தேன்… என் நினைவு ஒன்றாகவும் நிகழ்வு வேறாகவும் இருப்பது மொத்தமாய் முடக்கிப் போட்டது என்னை. வாழ்வே ஓரிரவில் சூனியமாய் போனது போல இருந்தது.

ஆசைப்பட்ட படிப்பு, ஆசைப்பட்ட கல்லூரி, பொறியியல் முடித்ததும், இரண்டு வருட மேல் படிப்பு, முடித்து வெளிவரும் போதே கையில் வேலை. 23 வயது முடியும் முன்னே வெளிநாட்டு வேலை வாய்ப்பு. இ

வருடபயிற்சிக்குப் பின் இன்று கிட்டத்தட்ட லகரத்தைத் தொடும் சம்பளம், குறுகிய வயதிலையே நினைத்ததெல்லாம் அடைந்த எனக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை மட்டும் கிடைக்கவே வழியில்லையே என்று ஏங்கியது மனம்.

எனக்கும் அவளுக்குமான பத்து வருட வித்தியாசம் பூதாகாரமான தடைக்கல்லாய் தெரிந்தது. அவளுக்காக எத்தனை வருஷமானாலும் காத்திருக்க என்னால் முடியுமென்றாலும், இத்தனை வருட இடைவெளியில் எனக்கு அவளை பெண் தருவார்களா?

என் வீட்டில் முதலில் ஒத்துக் கொள்வார்களா? என் மனசாட்சியே ஒப்புக்கொள்ள மறுக்கிறதே! சிறு பெண்ணிடம் காதல் சொல்ல நினைத்த முட்டாள்தனத்தை எண்ணித் தவிக்கிறதே! முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.
ஏற்கனவே அம்மாவும் பெரியம்மாவும் வந்து என்னை எழுப்பிப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

சோர்ந்து சிவந்த என் முகத்தைப் பார்த்து எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற கவலை அவர்களுக்கு. என் மனம்தான் சீர்கெட்டுப் போனது என்பதை அறிந்தால் துடித்துவிடுவர்.

அவர்களுக்காகவாவது நான் என்னை இயல்பாய் வைத்துக்கொள்ள வேண்டும். எழுந்து சென்று குளித்துவிட்டு வந்து அமர்ந்தேன். நெற்றி நிறைய விபூதியும் குங்குமமுமாய் பக்திப் பழமாய் உள்ளே வந்தனர் என் மாமன்கள்.

“மாப்ள, காலையிலயே உங்க அப்பாவும் பெரியப்பாவும் நல்ல மூடுல இருக்காங்க. எங்ககூட வா மாப்ள. உன் விஷயத்தைச் சொல்லி சம்மதம் வாங்கிடலாம்.”

“…”

“முதல்ல பொண்ணு யாருன்னு சொல்லுய்யா.”

“…”

“என்னய்யா வாயைத் திறக்காம இடிச்சபுளி மாதிரி உட்கார்ந்திருக்க. எதாவது பேசு. யாரு பொண்ணு? இந்த ஊரா வெளியூரா?”

“மாமா, அ… அதெல்லாம் எதுவுமில்லை. நான் நேத்து சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். இப்ப எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலைஞ்சு வருஷம் போகட்டும்.”

“என்னது, நாலைஞ்சு வருஷம் போகட்டுமா? நாலைஞ்சு மாசம்னு வேணும்னா சொல்லு, உங்க வீட்ல ஒத்துக்கிடுவாங்க. இந்த ஆவணி மாசம் உன் ஜாதகத்தை எடுக்கனும்னு இப்பதான் உங்க அப்பாரு பேசிகிட்டு இருந்தாப்படி.”
பதில் எதுவுமே சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

“என்ன மாப்ள? என்னவோ போல உட்கார்ந்திருக்க? நேத்து ராத்திரி இருந்த தெளிவு இப்ப உன் முகத்துல இல்லையே!”

“அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா.”

“இல்ல, நேத்து மெர்க்குரி லைட்டாட்டம் பளிச்சின்னு இருந்த, இப்ப விடிவிளக்கு மாதிரி அழுது வடியுற, என்ன விஷயம்? சொல்றியா உங்க அக்காவ கூப்பிடவா?”

“ம்ப்ச்… மாமா ப்ளீஸ் கடுப்பேத்தாம போங்க. எதுவுமில்லங்கிறேன்ல.” என் மாமனிடம் கடுப்படித்துக் கொண்டிருக்கும் போது காபி டம்ளர்களை ஏந்திய ட்ரேயோடு அறைக்குள் வந்தாள் பூரணி.

முழங்காலைத் தொடும் அளவுக்கு ஒரு ஸ்கட்டும், அதற்கு அழகாக பொருந்தும் வகையில் டாப்ஸும் அணிந்திருந்தாள். இயல்பில் சற்று உயரமான அவளுக்கு அழகாகப் பொருந்தியது அந்த உடை. தலையை இரட்டை பின்னலாகப் பின்னி முன்னே விட்டிருந்தாள்.

‘பாவி… நேத்து இப்படி ட்ரெஸ் பண்ணியிருந்தா பார்த்ததும் புரிஞ்சிருக்கும், தாவணியும் காக்ராசோளியும் போட்டதில் சிறுபெண்ணாகத் தோன்றக்கூட இல்லை.’ மனதில் எண்ணியபடி மௌனமாக என் முன்னே நீட்டப்பட்ட காபியை வாங்கிக் கொண்டேன்.

“நீங்களும் எடுத்துக்கோங்க அண்ணா…” என்று பொறுப்பாக காபியை அனைவருக்கும் கொடுத்தவள்,

“நேத்து என்கிட்ட எதுவோ சொல்லனும்னு சொன்னீங்களே மாமா, என்னது அது?” என்க குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறியது எனக்கு.

என் மாமன்கள் வினோதமாக என்னையும் அவளையும் பார்த்தபடி இருக்க, என்ன செய்வது என்று புரியாமல் ஒரு நொடி நின்றவன், பெட்டியைத் திறந்து கைநிறைய சாக்லேட்டுகளை அள்ளித்தர,

“இதுக்குதானா… தேங்க்ஸ் மாமா” என்றபடி மலர்ந்த முகத்தோடு வாங்கிக் கொண்டு ஓடினாள்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, “வாங்க மாமா கீழ போய் ஆச்சியப் பார்க்கலாம்.” என்றபடி நகர எத்தனிக்க,

“அப்ப எங்ககிட்ட எதுவும் சொல்லமாட்ட?”

“எதாவது இருந்தாதான சொல்றதுக்கு. எதுவும் இல்ல மாமா.”

“ஓ… விடிய விடிய கண்ணு முழிச்சு டைரியில நீ எதையோ எழுதுனது ஒன்னுமில்ல. எங்க யார் கண்ணுலயும் படாத மாதிரி அதை மறைச்சு வைக்கிறது ஒன்னுமில்ல. கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகனும் மாப்ள. எப்படியும் ஒருநாள் உன்கிட்ட இருந்து விஷயம் வந்துதான ஆகனும்.”
வெகுநேரம் போராடியும் என் வாயிலிருந்து எதையும் வாங்க முடியாததால் கடுப்பானவர்கள் என்னையே நோட்டம் விட ஆரம்பித்தனர். எங்கு போனாலும் என் பின்னே வந்து, என் பார்வை போகும் பக்கமெல்லாம் ஆராய்ச்சியாய் ஓடியது அவர்களது பார்வை.

நான்தான் அவளிருக்கும் இடத்தில்கூட இருப்பதில்லையே. எங்கே… அவளைப் பார்க்கப் பார்க்க மனம் ஒருநிலையில் நில்லாமல் தவிக்க, என்னைமீறி ஏதேனும் செய்துவிடுவேனோ என்று பயந்து, திருமண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் சாக்கில் சமையலறையிலும், பந்தி பரிமாறும் இடத்திலும் ஒதுங்கியிருந்தேன்.

ஒருவேளை நான்கைந்து வருடங்களுக்கு பிறகு அவளைப் பெண் கேட்டால் தரக்கூடும் என்று எனக்குள் லேசான ஆசை இருந்தது. ஆனால், அவளது குடும்பம் அவள் மீது வைத்திருக்கும் பிரியத்தை எண்ணிப் பார்த்தபோது, என் ஆசை பேராசை என்று புரிந்தது.

மாதவியின் திருமணம் சீரும் சிறப்புமாக முடிந்த கையோடு, ரிசப்ஷன் வேலைகளைப் பார்க்கப் போகிறேன் என்றுகூறி உடனடியாக மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றேன் இனி அவளைப் பார்ப்பதில்லை என்ற மனதின் முடிவோடு…

அலையடிக்கும் …

வேட்டை ஆரம்பம்…

மெனு கார்டில் முகத்தைப் புதைத்து அதிலுள்ளவற்றை மனனம் செய்து முடித்து விடுபவளைப் போல அமர்ந்திருந்தவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சரண். அவ்வளவு நெர்வஸ்ஸாக இருந்தாள்.

அது நல்ல உயர்தரமான ஹோட்டல். தனித்தனி தடுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மேஜைக்கும் மெல்லிய விளக்கொளி விழுமாறு செய்யப்பட்டு, மற்ற பகுதிகள் மங்கிய வெளிச்சத்தில் இருந்தது. இளஞ்சிவப்பு நிற நெட்டட் சல்வார் அந்த மெல்லிய வெளிச்சத்திலும் தேவதையாகக் காட்டியது ஹரிணியை.

பெற்றவர்களோடு நண்பர்களோடு இது போன்ற இடங்களுக்கு வந்தவள்தான். இருந்தாலும் தனியே ஒரு ஆண்மகனோடு, அதுவும் இவன்தான் உன் வாழ்க்கைத்துணை என்று பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவனோடு வந்தது அவளது பதட்டத்தைக் கூட்டியிருந்தது. மேலுதட்டில் அரும்பிய வேர்வையை கர்சீஃபால் நாசூக்காக ஒற்றிக் கொண்டாள்.

அன்று அவளைக் காண வந்த பெற்றவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அனைத்து திருமண விஷயங்களையும் முறைப்படி பேசி முடித்துவிட்டுச் சென்றிருந்தனர். திருமணத்தை சொந்த ஊரில் வைத்துக் கொள்வதாகவும், ரிசப்ஷனை பெங்களூருவில் வைத்துக்கொள்வதாகவும் பேசி முடிக்கப்பட்டிருந்தது.

திருமணத் தேதி மட்டும் இவளது படிப்பு முடிந்ததும் வரும் முகூர்த்தத்தில் உறுதி செய்து கொள்ளலாம் என்று பேசியிருந்தனர். பெரியவர்கள் முன்பு அமைதியாக இருந்தவள் தனிமையில் பெற்றோரிடம் திருமணம் வேண்டாம் என்க,

இவளது தயக்கங்களையும் மறுப்புகளையும் ஈசியாக சமாளித்திருந்தார் அவளது தந்தை.

“மாப்பிள்ளையைப் பிடிக்கலங்கறதுக்கு ஒரு வேலீட் ரீசன் சொல்லு ஹரிணிம்மா அப்பா உன் பேச்சைக் கேட்கிறேன். சும்மா அர்த்தமில்லாம கல்யாணம் வேணாம்னு சொல்லக்கூடாது.” என்று கூறுபவரிடம் என்ன பேச.

படிப்பைக் காரணம் காட்டியதில், அவள் விருப்பப்பட்டதை படிக்கவோ அவளது துறையில் வேலைக்குப் போகவோ, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தீரன் கூறிவிட, அந்த காரணம் பிசுபிசுத்துப் போனது.

உண்மையில் சரணை வேண்டாம் என்று சொல்வதற்கு அவளிடம் பெரிதாக காரணம் எதுவுமில்லைதான். பார்ப்பதற்கு ஸ்மார்ட்டான தோற்றத்தோடு, நல்ல மதிப்பான பதவியில் இருக்கிறான். பழகுவதற்கும் இனிமையானவன் என்பது தாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களில் தன் பெற்றோரிடமும் தன்னிடமும் அவன் பழகும் விதத்தை வைத்தே தெரிந்து கொண்டாள்.

அவன் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று உள்ளுக்குள் இனிமையாக பரவுகிறதுதான். ஆனால் இதுமட்டும் திருமண வாழ்க்கைக்குப் போதுமா? ஒருவரை பார்த்ததும் உள்ளுக்குள் இவர்தான் உனக்கானவர் என்று மணியடிக்க வேண்டும்! பூக்கள் பூக்க வேண்டும்! என்றெல்லாம் திரைப்படங்களில் கதைகளில் வருகிறதே! அப்படி எதுவுமே இவரைப் பார்த்து எனக்குள் நிகழவில்லையே என்ற குழப்பம் அவளுக்குள்.

சரணை முதலில் சந்தித்ததை நினைத்தாலே உள்ளுக்குள் கலவரமாகத்தான் இருக்கிறது. கிளுகிளுப்பாகவெல்லாம் இல்லை. பரஸ்பரம் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் எப்படித் திருமணம் செய்வது. பார்த்ததும் மனதிற்குள் இவன்தான் உனக்கானவன் என்று தோன்ற வேண்டாமா?

பெற்றவர்களால் இவன்தான் உனக்கானவன் என்று தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டவனிடம் இப்படி ஈர்ப்புகளெல்லாம் தோன்றுமா? என்ற குழப்பம் அவளுக்குள். சுஜியிடமும் புலம்பி அவளைக் குழப்பியதில்,

“அதெல்லாம் போகப் போக எல்லாம் வரும்டி” என்று வாயை அடைத்திருந்தாள்.

திலகவதி வேறு பெருமையாக, “உங்க ஊருக்கு உன் அத்தை மக கல்யாணத்துக்கு வந்தப்ப உன்னைப் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுடா. அப்பவே உங்க அம்மாகிட்ட பேசி உன் ஃபோட்டோவும் ஜாதகமும் கையோட வாங்கிகிட்டு வந்துட்டேன். ஜாதகம் அமோகப் பொருத்தம்.

சரண் என் பேச்சை மறுக்க மாட்டான்னு தெரியும். அதேமாதிரி உன் ஃபோட்டோவைப் பார்த்ததும் உங்க விருப்பப்படி செய்ங்கம்மான்னுட்டான். நீ படிப்ப முடிக்கனும்னுதான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணோம்” என்று கூறி சிரித்ததில் அவனுமே பெற்றவர்களுக்காகதான் ஒப்புக் கொண்டிருக்கிறான் என்று தோன்றியதும் உள்ளே லேசாக ஏமாற்றம் பரவியது.

தனக்கு சப்போர்ட் செய்வான் என்று வெகுவாக எதிர்பார்த்த தனா அண்ணனும், அவளுக்குதான் பக்கம்பக்கமாக அறிவுரை கூறிச் சென்றான். அன்று அவளுடைய பெற்றோர் வந்து சேர்ந்த சில மணி நேரங்களில் தனாவும் விழுந்தடித்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான்.

ஹரிணியை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் என்று கேட்டதும் ஒரு நிமிடம்கூட அவனால் திருச்சியில் இருக்க முடியவில்லை. உடனடியாக கிளம்பியவன் பெங்களூரு வந்து அவளைப் பார்த்துதான் சற்று ஆசுவாசமானான்.

ஆனாலும், வழக்கு விபரங்களைக் கேட்டறிந்தவன், இங்கே இருந்தது போதும் உடனே கிளம்பி ஊருக்கு வா என்று பிடிவாதமாக நின்றான். அவளது பெற்றோரைக் கூட ஈசியாக சமாளித்தவளால் அவனைச் சமாளிப்பது பெரும் சிரமமாகிப் போனது.

“பாப்பா, பிடிவாதம் பிடிக்காம சொல்றதைக் கேளுடா. இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல நீ இங்க இருக்கனுமா? உனக்கு ஏதாவது ஒன்னுன்னா எங்களால தாங்க முடியாதுடா. எனக்கென்னவோ நீ இங்க இருக்கறது சரியாவே படல” என்று கலங்கியவனை சரண்தான் சமாதானப் படுத்தினான்.

ஹரிணிக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வது என் கடமை என்று சரண் வாக்குக் கொடுக்கவும்தான் சற்று சமாதானம் ஆனான் தனா.

ஹரிணிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று சரணை அறிமுகப்படுத்தி வைக்க, சரணை வெகுவாகப் பிடித்திருந்தது தனாவுக்கு. ஹரிணியின் மீதான சரணின் நேசத்தை உணர்ந்தவன், திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்த ஹரிணியிடமும் எடுத்துக் கூறியிருந்தான்.

அவளிடம் தனியாக பேசுவதாகக் கூறி அருகில் இருந்த பூங்காவுக்கு அழைத்து வந்தவன், “ஏன் பாப்பா கல்யாணம் வேண்டாம்ங்கற? வேற யாரையாவது விரும்புறியா? எதுவாயிருந்தாலும் அண்ணன்கிட்ட சொல்லுடா.”

“ஹைய்யோ அண்ணா, அதெல்லாம் நான் யாரையும் விரும்பல. ஹையர் ஸ்டடீஸ் முடிக்கனும், இந்தத் துறையில சாதிக்கனும். அவ்வளவுதான் என் மனசுல இருக்கு. கல்யாணம் பத்திலாம் நான் யோசிச்சதேயில்லை.”

“இதுவரை யோசிக்கலைன்னா என்ன? இனி யோசி. சரண் உனக்கு பர்ஃபெக்ட் மேட்ச். அவரோட தகுதி, குணம், குடும்பம் எல்லாமே ரொம்பத் திருப்தியா இருக்குடா. எங்க வீட்டு செல்ல தேவதைடா நீ. உனக்கு கல்யாணம் செய்து பார்க்கனும்னு எங்க எல்லாருக்குமே ஆசையிருக்கு. ஒத்துக்கோடா.”

“எனக்கு இருபத்தோரு வயசுதான் ஆகுது. அதுக்குள்ள கல்யாணம் பண்ணனுமா? நீ இத்தனை வயசாகியும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா? முப்பத்தைஞ்சு வயசு முடிஞ்சு போச்சு உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா. இன்கம்டாக்ஸ் கமிஷனரா இருக்கற உனக்குப் பொண்ணு குடுக்க எவ்வளவு பேரு ரெடியா இருக்காங்க தெரியுமா?

பெரியம்மா பாவம் ஃபோன் பண்ணும் போதெல்லாம் புலம்புறாங்க. நீ மட்டும் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்குற? நான் மட்டும் நீங்க எல்லாரும் சொன்னதும் உடனே ஒத்துக்கனுமா?”

கோபத்தில் மூக்கு விடைக்க பேசும் குட்டித் தங்கையை ஆசையாகப் பார்த்திருந்தான். பதினைந்து வயது சிறுவனாக இருந்த போது உனக்குத் தங்கை பிறந்திருக்கிறாள் என்று இவனது கைகளில் வைத்த சின்னஞ்சிறிய ரோஜாச் செண்டைப் பார்த்தபோது இருந்த பரவசம் இப்போதும் அவன் பார்வையில் குறையாமல் இருந்தது.

ஹரிணியின் தந்தையும் தனாவின் தந்தையும் உடன்பிறந்தவர்கள். ஆரம்ப காலத்தில் அனைவரும் ஒன்றாக இருந்தவர்கள்,

ஹரிணியின் தந்தைக்கு பணியிட மாற்றம் காரணமாக பெங்களூரு வந்தபோதுதான் பிரிந்திருந்தனர்.
ஹரிணியின் விடுமுறை நாட்கள் முழுவதுமே அவளது பெரியப்பா வீட்டில் தனாவுடன்தான் கழியும்.

அவனுக்கு மிகவும் பிடித்தமான செல்லத் தங்கை அவள். அவள் மீது உயிரையே வைத்திருந்தவன், அவளது பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான்.

“என்னை ஏன்டா இப்ப வம்புக்கு இழுக்குற?”

“போனதடவை ஊருக்கு வந்தப்பவே பெரியம்மா எவ்வளவு வருத்தமா பேசுனாங்க தெரியுமா? நீ ஏன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்குற? யாரையாவது லவ் பண்றியா?” அவன் கேட்ட கேள்வியை அவனிடமே திரும்பக் கேட்டாள்.

“ஹா… ஹா… அதெல்லாம் எதுவுமில்லை பாப்பா. என்னைப் பத்தி இப்ப பேச வரலை. நீ பேச்சை மாத்தாம உன்னைப் பத்தி மட்டும் பேசு.”

கோபமாகப் பார்த்திருந்தவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்,

“பிராக்டிகலா யோசிடா. எப்படியும் நீ கல்யாணம் பண்ணி செட்டிலாகத்தான வேணும். என்ன, இரண்டு மூனு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன்னு சொல்ற. ஆனா இந்த சம்பந்தம் ரொம்ப நல்ல சம்பந்தம். எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.

ஆறு மாசத்துக்கு முன்னாடியே கேட்டாங்களாம். நீ படிக்கிறதால சித்தப்பா பிடி குடுக்காம இருந்திருக்காரு. ஆனாலும் விடாம திரும்பவும் விரும்பி வந்திருக்காங்க. அவங்க ஸ்டேடஸ்க்கு இப்படித் திரும்ப வந்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை.உன்னை ரொம்பப் பிடிச்சுப் போனதாலதான் கேட்குறாங்க. ஒத்துக்கோடா… உன் லைஃப் நல்லா இருக்கும்.”

“ம்க்கும்… மாமியாருக்கு ரொம்ப பிடிச்சு என்ன செய்ய” தனக்குள் மெதுவாக முனகியவள்,

“வேணாம்னா விடவா போறீங்க. ஏதையோ பண்ணுங்க.” என்று சலித்துக் கொண்டாள்.

தங்கையின் மனதை ஊகித்துக் கொண்டவன், “சரணோட ஃபிரியா பேசிப் பாருடா. நாங்க உனக்கு நல்லதுதான் பண்றோம்னு புரிஞ்சுப்ப” என்றவன் ஊருக்குக் கிளம்பும்போது சரணிடமும் ஹரிணியின் மனநிலையை லேசாகக் கோடிட்டுக் காட்டியிருந்தான்.

சரணுக்குமே தன்னவளோடு மனம்விட்டுப் பேசவேண்டும்போல இருந்ததால் அவளை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தான்.

பேரர் வந்ததும் நிமிர்ந்தவள் தனக்குத் தேவையானதைச் சொல்லவும், ஆர்டர் செய்தவன் அவளது அசௌகரியத்தைப் புரிந்து கொண்டு மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்.

அவளது விருப்பங்கள், பள்ளிப் பருவம் பற்றி விசாரித்தவன் தன்னைப் பற்றியும் கூறினான். அவனது இலகுவான பேச்சு அவளுக்கும் சற்று இலகுத்தன்மையைக் கொடுக்க சரளமாக பேச முடிந்தது அவளுக்கு.

“என்னைப் பிடிச்சிருக்கா ஹனி? என்னைத் திருமணம் செய்ய உனக்கு ஓகேதான? உன் மனசுல என்ன நினைக்கிறியோ தயங்காம சொல்லு.”
ஹரிணியா ஹனியா என்று புரியாத வகையில் மென்மையாக தன் பெயரை அவன் அழைத்தவிதம் பிடித்திருந்தது. தயக்கமின்றி தன் மனதில் தோன்றியதைக் கூறினாள்.

மனதளவில் திருமணத்திற்கு தயாராக சிறிது அவகாசம் வேண்டுமென்றும் கூறினாள்.

“ஹா… ஹா… உன்னை ஃபோட்டோவுலதான் முதன் முதல்ல பார்த்தேன்னு யார் சொன்னது?” வசீகரமான சிரிப்போடு வினவியவனுக்கு, “அத்தைதான்…” என்று இழுத்தவளைப் பார்த்து மேலும் சிரிப்பு வந்தது.

“நான் உன்னை முதன் முதல்ல பார்த்தது இஸ்கான் டெம்பிள்ல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு பெங்களூருக்கே போஸ்டிங் ஆர்டர் வந்தப்ப கோவிலுக்கு வந்திருந்தேன்.
அப்பதான் உங்கப்பாவுக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வந்து அவங்க உன்னை ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டுட்டு ஊரை விட்டு போகனும்னு முடிவு செய்துட்டு, கோவிலுக்கு வந்திருந்தீங்க. உன்னைத் தனியா விடனுமேன்னு கலங்கிப் போயிருந்தவங்களுக்கு அவ்வளவு அழகா சமாதானம் சொல்லிகிட்டு இருந்த.
பார்க்க சின்ன பொண்ணா இருந்தாலும், தைரியமா நீ பேசினது ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சி என்னை. ஏன்னா நான் ரொம்பவே ஹோம் சிக். அதுவரை டெல்லியில போஸ்டிங்ல இருந்தவன், எப்படா பெங்களூரு வருவோம்னு காத்திருந்து போஸ்டிங் வாங்கியிருந்தேன்.

உங்க அப்பா அம்மாவ சமாதானப்படுத்தி நீ பேசியது ரொம்ப நாள் நினைவுல அழியாம இருந்தது. அதுக்கப்புறம் ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி இன்டர் காலேஜ் மீட் ஒன்னு உங்க காலேஜ்ல நடந்தது இல்லையா? அப்ப எங்க அம்மாவைப் பார்க்கறதுக்காக உங்க காலேஜ்க்கு வந்திருந்தேன்.

உன்கிட்ட லவ் சொன்ன பையன் எவனையோ உன் பிரண்ட்ஸ்ஸோட சேர்ந்து ஓட ஓட விரட்டிகிட்டு இருந்த. அப்பவும் உன்னோட போல்ட்னெஸ்தான் பிடிச்சது. உன்னை ஆர்வமா கவனிக்கவும் வச்சது.

உன்னைப் பத்திய தகவல்கள் சேகரிக்கறது எனக்கொன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா, இது வெறும் ஈர்ப்பு மட்டும்தானா அதையும் தாண்டிய ஆத்மார்த்தமான பந்தமான்னு எனக்குள்ளவே கொஞ்சம் குழப்பம் இருந்தது.

ஆனா சில நாட்கள்லயே உன் முகம் எனக்குள்ள ஆழமா பதிஞ்சதை உணர்ந்தேன் ஹரிணி. உன்கிட்ட நேரா வந்து சொல்லனும்னு நினைக்கும் போதுதான் சரியா அம்மா உன்னோட ஃபோட்டோவைக் காட்டிப் பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க. நம்ம ரெண்டு பேரும் சொந்தம்னு வேற சொன்னாங்க.
அப்ப உண்மையிலேயே என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை எனக்கு. அவங்ககிட்ட ரொம்ப நல்ல பிள்ளையா சம்மதம்னு சொல்லிட்டு ஒரு ட்ரெயினிங்காக ஜெர்மனி போயிட்டு இரண்டு வாரம் முன்னதான் வந்தேன்.

கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்கன்னு ஆசையா வந்து பார்த்தா, உனக்கு படிப்பு முடிஞ்சதும் பேசலாம்னு அசால்ட்டா சொல்றாங்க. ரொம்பக் கடுப்பாகி ஒருத்தன் எவ்வளவு நாள்தான் வெயிட் பண்றது ஒழுங்கா பேசி முடிங்கன்னு அவங்களை விரட்டி உங்க வீட்ல திரும்பவும் பேச வச்சது நான்தான்.

உன்னை முன்னாடியே பார்த்ததை அதுவரை எங்க வீட்ல யார்கிட்டயும் சொல்லல. அம்மா துருவித் துருவி கேட்டதும்தான் சொன்னேன். உன்கிட்டயும் நானே சொல்லிக்கிறேன்னு சொல்லியிருந்தேன். அதனாலதான் உன்கிட்ட அம்மா அப்படி சொன்னாங்க.”

“…”

“நான் ஜெர்மனியில இருந்து வந்ததும் அட்டென் பண்ற முதல் கேஸே கலெக்டர் மர்டர் கேஸ்தான். இந்த கேஸ்ல நீ இன்வால்வ் ஆகியிருக்கன்னு தெரிஞ்சதுமே உன்கிட்ட வந்து என்னை அறிமுகப்படுத்திக்கனும்னு நினைச்சேன். ஆனா, இரண்டு நாள் நீ ஹாஸ்டல விட்டு வெளியவே வராம இருந்த.

அன்னைக்கு கமர்ஷியல் ஸ்ட்ரீட்க்கு நீ ஷாப்பிங் வந்திருக்கன்னு ராகுல் சொல்லவும், உன்னைப் பார்த்துப் பேசலாம்னுதான் அன்னைக்கு நான் அங்க வந்தேன். அவ்வளவு ட்ராஃபிக்ல நீ அந்த ரோடு நடுவுல நின்னதைப் பார்த்ததும் ஒரு நொடி ஹார்ட் பீட்டே நின்ன மாதிரி இருந்தது. உன்னை சேஃபா தூக்கினதும்தான் நின்ன மூச்சே வந்தது எனக்கு.

அன்னைக்கு நானுமே ரொம்ப பதட்டமாகிட்டேன். உன்னைக் கீழயே விடாம அப்படியே எனக்குள்ள பொத்திப் பாதுகாத்து வச்சுக்கனும்னு தோனுச்சி. நீ சுயநினைவுக்கு வந்து என்னோட அணைப்புல இருந்து கீழ இறங்கவும்தான் நான் என்ன பண்ணிகிட்டு இருந்தேன்ங்கறதையே உணர்ந்தேன்.

நீயுமே அப்ப ரொம்பவே பயத்துலயும் பதட்டத்துலயும் இருந்த. அதுக்கு மேல என்னாலயும் உன்கிட்ட பேசமுடியும்னு தோனலை. உனக்கும் என்னை அடையாளம் தெரியலை. உன்கிட்ட என்னோட ஃபோட்டோவைக் கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சிருந்தேன். நீ என் ஃபோட்டோவையே பார்க்கலைன்னு அப்பதான் புரிஞ்சது.”

விழிகளை விரித்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதுவரை இருந்த தயக்கங்கள் விலகியது. அன்று சரியாக இவன் அந்த இடத்திற்கு எப்படி வந்தான் என்ற அவளது கேள்விக்கு விடையும் கிடைத்தது. தன்னை ஒருவன் ஆறு மாதங்களுக்கு மேலாக நேசித்து வருகிறான் என்ற செய்தி ஆச்சர்யம் அளிக்க, “நிஜமாவா?” என்றாள்.
புன்னகையோடு ஆமோதித்தவன்,

“எனக்கு உன்கிட்ட நேர்ல வந்து புரபோஸ் பண்ணனும்னு ஆசைதான், பட் உன்கிட்ட லவ் சொன்ன பையனை ரவுண்டுகட்டி நீங்க கலாய்ச்சதுதான் நினைவுக்கு வரும் எனக்கு. எதுக்குடா வம்பு? நாம சேஃபா கல்யாணமே பேசி முடிச்சிடலாம்னு பேசி முடிச்சிட்டேன்.”

குறும்பாக கண்சிமிட்டியவனைப் பார்த்து தானும் சிரித்தவள்,

“என்னோட கிளாஸ்மெட்தான் அவன். அவன் லவ் சொன்ன பொண்ணுங்க வரிசையில நான் எத்தனாவது வருவேன்னு அவனுக்கேத் தெரியாது. கிறுக்குத்தனமா அப்படிதான் எதையாவது உளருவான். அவனும் நீங்களும் ஒன்னா?”

“அடடா, அப்ப இவ்வளவு நாள் நான்தான் வேஸ்ட் பண்ணிட்டேனா? அப்ப இனி ஒரு நிமிஷம்கூட வேஸ்ட் பண்ணாம லவ் பண்ண ஆரம்பிக்கலாம். ஹனி டார்லிங், ஜ லவ் யூ!” என்றவாறு எழுந்து ஒரு காலை மடக்கி அவள்முன் அமர்ந்தவன், தன் பேண்ட் பேக்கெட்டில் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து நீட்ட, அவனது செயல் சுற்றி வெவ்வேறு டேபிள்களில் அமர்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

லைவ்வாக ஒரு புரபோசலைப் பார்த்தவர்கள் மெல்லிய கரகோஷத்தை எழுப்ப, அவனது செயலில் எழுந்த வெட்கத்தோடும், உள்ளுக்குள் நிறைந்த மகிழ்வோடும் தனது வலது கரத்தை நீட்டினாள்.

மென்மையாக அவளது விரல்களைப் பற்றி மோதிரத்தை அணிவித்தவன், அவளது புறங்கையில் இதழ் பதித்து விடுவித்தான். வெட்கத்தில் கன்னம் மின்ன சந்தோஷமாக சிரித்தபடி இருந்தவளை இரண்டு விழிகள் குரோதமாக முறைத்தபடி இருந்தது.

—-வேட்டை தொடரும்.

error: Content is protected !!