T6 ஆவடி காவல் நிலையம்
போலிஸ் ஜீப் காவல் நிலையத்தின் முன்னால் வந்து நின்றதை கூட உணராமல் சிந்தனையோடு ஜீப்பினுள்ளேயே அமர்ந்து இருந்தான் சித்தார்த்.
“ஸார்! ஸார்! ஸ்டேஷனுக்கு வந்தாச்சு ஸார்” வெங்கட்டின் குரல் கேட்ட பின்பே தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன்
“என்…என்ன ஆச்சு வெங்கட்?” குழப்பமாக அவனை திரும்பி பார்த்தான்.
“ஸ்டேஷனுக்கு வந்துட்டோம் ஸார்” வெங்கட் மறுபடியும் தயக்கத்துடன் அவனை பார்த்து கூற
“ஓஹ்! வந்துட்டோமா?” என்றவாறே ஜீப்பில் இருந்து இறங்கியவன் தான் அமர்ந்திருந்த இடத்திற்கு முன்னால் இருந்த பைலை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குள் உள் நுழைந்து கொண்டான்.
தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்து நுழைந்து கொண்டவன் தன் கையில் இருந்த பைலை அங்கிருந்த மேஜை மேல் வைத்து விட்டு சோர்வாக தன் நாற்காலியில் கண் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
அவனது மனம் முழுவதும் சிறிது நேரத்திற்கு முன்பு கோர்ட்டில் நடந்த நிகழ்வுகளிலேயே தங்கி நின்றது.
ஜெஸ்ஸியும், சித்தார்த்தும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்த வேளை ஜட்ஜோடு பேசி கொண்டே நடந்து வந்து கொண்டிருந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ் மணிவேல் கைதிகளை ஏற்றிக் கொண்டு வந்த வாகனமும், போலிஸ் ஜீப்பும் வழக்கு எல்லாம் முடிந்த பின்பும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்ததை பார்த்து குழப்பத்தோடு
“இது சித்தார்த் கூட்டிட்டு வந்த ஆட்கள் தானே! கேஸ் முடிந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகப்போகுது இன்னும் இந்த இடத்திலேயே இவங்க நின்னுட்டு இருக்காங்க என்ன நடக்குது?” என தன் மனதிற்குள் நினைத்து கொண்டே சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டார்.
சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி யாரோ ஒருவரைப் பார்த்து பேசி கொண்டு நிற்பதை பார்த்ததுமே முகம் சிவந்து போனவர் கோபத்துடன் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.
“சித்தார்த்!” மணிவேலின் அதட்டல் கலந்த உறுமலான குரலில் தூக்கி வாரிப் போட அவசரமாக தன் பார்வையை அவரின் புறம் திருப்பியவன்
அவரை பார்த்த அடுத்த கணமே
“குட் ஆப்டர்னூன் ஸார்!” என அவசரமாக சல்யூட் வைத்தான்.
“குட் ஆப்டர்னூன் ஸார்!” ஜெஸ்ஸியும் சித்தார்த்தைப் பின்பற்றி அவசரமாக மணிவேலிற்கு சல்யூட் வைத்தாள்.
“அதெல்லாம் இருக்கட்டும் கேஸ் முடிந்து ஒரு மணி நேரத்திற்கு மேல ஆகப் போகுது இன்னும் அவங்களை எல்லாம் கொண்டு போய் சென்ட்ரலில் விடாமல் இங்க என்ன பண்ணிட்டு இருக்க சித்தார்த்?” கோபமாக கேட்ட மணிவேலைப் பார்த்து
சங்கடத்தோடு கையில் இருந்த பைலை இறுக பற்றி கொண்டவன்
“ட்ரெயினிங் டைம் மீட் பண்ண பிரண்ட்டை ரொம்ப நாள் கழித்து பார்த்ததும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டேன் ஸாரி ஸார் இதோ இப்போவே கிளம்பிட்டேன் ஸார்” மெதுவாக படியிறங்கி செல்ல போக
அவன் முன்னால் வந்து நின்ற மணிவேல்
“இந்த பிரண்ட்ஸ், சுக துக்கம் விசாரிக்குறது எல்லாம் உங்க பர்சனல் டைம்ல பாருங்க இது வேலை பார்க்குற டைம் வேலையை மட்டும் பாருங்க இன்னொரு தரம் இப்படி ஏதாவது ஆச்சுன்னா பேசிட்டு இருக்க மாட்டேன் ஜாக்கிரதை பர்ஸ்ட் செய்யுற வேலைக்கு மரியாதை கொடுத்து பழகுங்க” என்று விட்டு ஜெஸ்ஸியின் புறம் திரும்பி
“இது உனக்கும் சேர்த்து தான்” என்று கூற அவர்கள் இருவருமோ சங்கடத்துடன் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து கொண்டனர்.
“சித்தார்த் இன்னும் ஐந்து நிமிஷத்தில் உன் வாகனம் இந்த காம்பவுண்டை தாண்டி இருக்கணும்” மணிவேல் கட்டளையிடுவது போல கூற
“எஸ் ஸார்!” மீண்டும் அவசரமாக அவருக்கு சல்யூட் வைத்தவன் அவசரமாக படியிறங்கி தன் ஜீப்பில் ஏறி கொண்டான்.
ஜீப்பில் தான் ஏறி அமர்ந்த பின்பும் வெங்கட் ஜீப்பை இயக்காமல் இருக்க கோபமாக அவனின் புறம் திரும்பியவன்
“யோவ்! எதுக்கு என் முகத்தையே பார்த்துட்டு இருக்க? அந்த ஆளு வேற நம்மளையே உற்று பார்த்துட்டு இருக்காரு சீக்கிரம் வண்டியை எடுய்யா!” பதட்டத்தோடும், அதட்டலோடும் கூற
“ஓகே ஸார்! ஓகே!” வெங்கட் அவசரமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்ய மணிவேல் கூறிய ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அவர்களது ஜீப் சென்னை உயர்நீதிமன்ற காம்பவுண்டை தாண்டி சென்றது.
வெகு நாட்களுக்குப் பின்னர் சந்தித்த தன் தோழிக்கு முன்னால் தன்னை இப்படி எல்லாம் பேசி விட்டாரே என்ற மனக் கவலையுடன் சித்தார்த் இங்கே அமர்ந்திருக்க மறுபுறம் ஜெஸ்ஸி பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு முன்னால் தன் ஜீப்பில் இருந்து இறங்கி நின்றாள்.
“ஜான்சி அந்த பொண்ணு மேக்னாவை கூட்டிட்டு வாங்க” ஜெஸ்ஸி தன் அருகில் நின்ற கான்ஸ்டபிள் பெண்ணிடம் கூறவும் அவர் அவளை பார்த்து சரியென்று தலை அசைத்து விட்டு மேக்னாவை அழைத்து கொண்டு வந்தார்.
மேக்னா கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை ஜெஸ்ஸி அவளைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறாள்.
அவளது முகத்தில் எந்தவித உணர்வையும் பிரித்தறிய முடியாது.
கல் போல இறுக்கமாகவே தன் முகத்தை வைத்து கொண்டு தான் இருப்பாள் மேக்னா.
ஆரம்பத்தில் அவளைப் பார்த்ததுமே ஏனோ ஜெஸ்ஸியின் மனதிற்குள் இந்த கொலையை அவள் செய்து இருக்க மாட்டாள் என்று அவளது உள்ளுணர்வு சொல்லியது.
ஆனால் நடந்த சம்பவங்களும், அதற்கான சாட்சியங்களும் அவள் உள்ளுணர்வை
ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தது என்பது தான் உண்மை.
மீண்டும் மேக்னாவை ஒரு தடவை திரும்பி பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டவள்
“முன்னாடி போங்க” என்று விட்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றாள்.
வழக்கமான பரிசோதனைகளுக்கு பின்னர் மேக்னாவை ஒரு சிறைக்குள் அனுப்பி விட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறி வந்தவள் தன் பொறுப்பில் இருக்கும் காவல் நிலையத்தை நோக்கி புறப்பட்டாள்.
சிறிது நேரம் அங்கிருந்த பழைய, புதிய பைல்களை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தவள் மனம் எதிலும் ஒன்றாமல் போகவே தன் போனை எடுத்து சித்தார்த்திற்கு அழைப்பை மேற்கொள்ள சிறிது நேரக் காத்திருப்பிற்கு பின்னர் மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டது.
“ஹலோ! சித்தார்த்!”
“ஹேய்! ஜெஸ்ஸி! என்ன சர்ப்பரைஸ் இப்போவே போன் பண்ணிட்ட?”
“ஏன்டா! நான் எல்லாம் போன் பண்ணக் கூடாதா?”
“சேச்சே! அப்படி எல்லாம் இல்லை ம்மா நீ தான் பிஸி வுமன் ஆச்சே! அது தான் கேட்டேன்” சித்தார்த் சிரித்துக் கொண்டே கூறவும்
மறுமுனையில் புன்னகையோடு அமர்ந்து இருந்தவள்
“உனக்கு நக்கல் கூடிப்போச்சுடா! ஒரு மாதமாக ஒரே கேஸில் மும்முரமாக இருந்ததால் என்னவோ நேரம் போனதே தெரியல இப்போ அந்த கேஸ் முடிஞ்சதும் ரொம்ப போரிங்கா இருக்கு” சற்று சலிப்புடன் கூற மறுமுனையில் இருந்தவனோ வாய் விட்டு சிரிக்க தொடங்கினான்.
“ஒரு கேஸ் முடிஞ்சதுக்கா இவ்வளவு பீல் பண்ணுற! அவன் அவன் எப்போடா எடுத்த கேஸை முடிக்கலாம்னு அவஸ்தை பட்டுட்டு இருக்கான் நீ வேற” சித்தார்த் கேலி கலந்த குரலில் கூற
ஜெஸ்ஸியோ சிறிது சங்கடத்தோடு
“அது என்னவோ உண்மைதான் சித்! பட் இந்த கேஸ் ஏதோ எனக்கு கொஞ்சம் பர்சனலா ரிலேடட்டா பீல் ஆச்சு” என்று கூறவும் அவளது கூற்றில் சிறிது நேரம் அவர்கள் இருவருக்கும் இடையில் பலத்த அமைதி நிலவியது.
“ஏன் ஜெஸ்ஸி அந்த பொண்ணை இதற்கு முன்னாடி உனக்கு தெரியுமா?”
“இல்லை சித்! அப்படி எல்லாம் இல்லை இங்கே சென்னையில் தான் அந்த பொண்ணை பர்ஸ்ட் பர்ஸ்ட் மீட் பண்ணேன் பட் சம்திங் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு அது என்னன்னு சொல்லத் தெரியல”
“ஹ்ம்ம்ம்ம்! சரி அதை எல்லாம் ரொம்ப யோசிக்காதே! அப்புறம் இந்த வீக் என்ட் என்ன பிளான்?”
“என்ன பிளான்? எப்போதும் போல சன்டே மட்டும் லீவு வேற ஒண்ணும் இல்லை”
“அப்படியா? அப்போ சரி இந்த வீக் சன்டே லஞ்ச் எங்க வீட்டில் தான் அம்மா கிட்ட சொல்லிடுறேன் வந்துடு உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”
“டேய் சித்! அது…” ஜெஸ்ஸியின் பதிலை எதிர்பாராமலேயே சித்தார்த்தின் புறம் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
“சரியான அவசரம் பிடித்தவன் அப்படி என்ன தலை போகுற விஷயத்தை பற்றி பேச வரச் சொல்லுறானோ தெரியல” போனை பார்த்து கொண்டே முணுமுணுத்துக் கொண்டவள் மீண்டும் தன் முன்னால் இருந்த பைல்களை புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.
நீதிமன்றத்தில் வைத்து அந்த பெண்ணைப் பார்த்த நொடியில் இருந்து சித்தார்த்தின் மனது அந்த பெண்ணைப் பற்றியும், அவளது வழக்கின் பின்னணி பற்றியும் அறிந்து கொள்ள அவனை தூண்டிக் கொண்டே இருந்தது.
அவளது முகம் இதற்கு முன்னர் அவனுக்கு நன்றாக பழக்கப்பட்ட ஒரு முகமாகவே தோன்றியது.
அந்த நிலையில் இப்போது ஜெஸ்ஸியும் அவனது மனநிலைக்கு சாதகமாக இருப்பதை போல பேசி இருக்கவே எப்படியாவது தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை தீர்த்து விட வேண்டும் என்று நினைத்து அவளை நேரில் சந்தித்து பேச முடிவெடுத்து இருந்தான் சித்தார்த்.
இங்கே சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி இருவரது மனமும் ஒரு விடயத்தை நோக்கியே சிந்தித்து கொண்டு இருக்க அந்த விடயத்திற்கு காரண கர்த்தாவானவளோ அது எதைப்பற்றியும் அறியாமல் தன் முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.
“மேக்னா பேபி! உங்களுக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?” தன் அன்னை இறுதியாக தன்னிடம் கேட்ட கேள்வி தன் காதில் இன்று வரை எதிரொலித்தது கொண்டு இருக்க அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மனதிற்குள் மறுகிக் கொண்டு இருக்கிறாள் மேக்னா.
அன்று அவள் விளையாட்டாக செய்த காரியம் இன்று அவளை, அவளது வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டு இருந்தது.
மேக்னா நீலகிரியில் பிரபலமான தொழிலதிபர் சம்பந்தனின் ஒரே மகள்.
அவரது மனைவி சுந்தரி மேக்னாவின் அன்னை மட்டுமல்ல அவளது உற்ற தோழியும் கூட.
தனது ஒன்பதாம் வயது வரை எந்தவித சிறு கஷ்டத்தையும் மேக்னா சந்தித்து இருக்கவில்லை.
தனது ஒன்பதாவது வயது பூர்த்தியான அந்த நாள் தான் இன்று வரை அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினம்.
தங்கள் செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாட சம்பந்தன், சுந்தரி மற்றும் மேக்னா தங்கள் காரில் ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காரின் முன் இருக்கையில் தன் தாய், தந்தைக்கு நடுவில் அமர்ந்து கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த மேக்னா
“டாடி எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்து இருக்கு என்னை தினமும் இங்கே கூட்டிட்டு வருவீங்களா?” தன் கன்னங்களில் கை வைத்து கொண்டு ஆசையாக கேட்கவும்
அவளது தலையை செல்லமாக
கலைத்து விட்ட சம்பந்தன்
“கண்டிப்பாடா கண்ணா! உனக்கு பண்ணாமல் வேற யாருக்கு பண்ணுறது?” என்று கூறவும்
அவளோ குதூகலத்துடன்
“ஹைய்யா!” தன் கைகளை தட்டி கொண்டே அவரது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ஊட்டிக்கு வர்றதுக்கு பிளான் போட்டது நான் உங்க அப்பா கார் ஓட்ட மட்டும் தான் செய்யுறாரு அப்போ எனக்கு எதுவும் இல்லையா?” சுந்தரி போலியாக கவலையுடன் கேட்பதை போல கேட்கவும்
“அய்யோ! ஸாரி சுந்தரி ம்மா” வேகமாக அவரது கன்னத்திலும் முத்தம் ஒன்றை வைத்தவள் அவரது கழுத்தைக் கட்டி கொண்டு தன் வேடிக்கை பார்க்கும் பணியைத் தொடர்ந்தாள்.
“சரி அம்மா ஒரு கேள்வி கேட்பேன் பதில் சொல்லணும் ஓகே வா?”
“ஓகே சுந்தரி ம்மா கேளுங்க”
“மேக்னா பேபி! உங்களுக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?” சுந்தரியின் கேள்வியில் சிறிது நேரம் தன் கன்னத்தை தட்டி யோசித்தவள்
“நான் சொல்ல மாட்டேனே” என்றவாறே தன் வாயை இறுக மூடிக் கொண்டு சிரிக்க அவளைப் பார்த்து பதிலுக்கு புன்னகத்து கொண்டவர்
“சொல்லுடா கண்ணா!” என்று கூறவும்
“மாட்டேன் மாட்டேன் மாட்டேன்” என தன் தலையை வேகமாக இடம்புறம் அசைத்தவள் அவரிடம் இருந்து விலகி பின் இருக்கையை நோக்கி நகர்ந்து செல்ல முனைந்தாள்.
“மேக்னா பேபி! என்ன பண்ணுறீங்க? அப்பாவுக்கு டிஸ்டர்ப் ஆகுதும்மா” சுந்தரியின் பேச்சை பொருட்படுத்தாமல் மேக்னா பின்னால் செல்லப் போக அவளது கால்களோ ஸ்டியரிங்கில் சிக்கி கொண்டது.
“அய்யோ! மேக்னா!” சுந்தரியும், சம்பந்தனும் ஒரு சேர கத்தி கொண்டே மேக்னாவின் கால்களை ஸ்டியரிங்கில் இருந்து விடுவிக்க போராடிக் கொண்டிருக்க அவர்கள் கண்களுக்கோ முன்னால் இருந்த வளைவோ தென்படவில்லை.
“சுந்தரிம்மா! வலிக்குதும்மா” மேக்னா வலியில் கதற சுந்தரியும், சம்பந்தனுமோ தங்கள் மகளை காப்பாற்றுவதிலேயே முனைப்பாக இருந்தனர்.
வலியில் கத்தி கொண்டே திரும்பி பார்த்த மேக்னா
“சுந்தரி ம்மா பள்ளம்!” என்று அலற அதற்குள் அவர்களது கார் அந்த சரிவான பள்ளத்தில் உருண்டு வீழத் தொடங்கி இருந்தது.
அந்த நேரத்திலும் தங்கள் மகளின் கால்களை ஸ்டியரிங்கில் இருந்து எடுத்து விட்டவர்கள் அவளை ஒரு பக்க ஜன்னலினூடு வெளியே தள்ளி விட அவளோ ஒரு புதருக்குள் சென்று வீழ்ந்தாள்.
வலியோடு கால்களை பிடித்து கொண்டு எழுந்து நின்ற மேக்னா
“சுந்தரி ம்மா! டாடி! சுந்தரி ம்மா!” என அலறிக் கொண்டே அந்த சரிவான பள்ளத்தில் உருண்டு வீழ்ந்த காரை பின் தொடர்ந்து நொண்டிக் கொண்டே ஓடி சென்றாள்.
ஆனால் அதற்குள் காரை மரக்கிளைகள் குத்தி பெற்றோல் மெல்ல மெல்ல கசியத் தொடங்கி இருக்கவே சிறிது நேரத்தில் சம்பந்தன் மற்றும் சுந்தரியோடு சேர்ந்து அவர்களது கார் பற்றி எறியத் தொடங்கியது.
“சுந்தரி ம்மா!” தன் கண்கள் முன்னால் தன் பெற்றோர் நெருப்பில் எறிந்து சாம்பலாகுவதைப் பார்க்க முடியாமல் மேக்னா மயக்கமாகி வீழ அந்த நாளோ அவளது வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டு இருந்தது.
எத்தனை நாட்கள் மயக்கமாக அவள் அந்த இடத்தில் வீழ்ந்து கிடந்தாள் என்று அவளுக்கு தெரியவில்லை.
சூரிய வெளிச்சம் தன் முகத்தில் படவுமே மெல்ல கண்களை திறந்து கொண்டவள் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள்.
அவள் இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி சாம்பலாகிய நிலையில் அவர்களது கார் கிடக்க அதைப் பார்த்ததுமே பதட்டத்துடன்
“சுந்தரி ம்மா! சுந்தரி ம்மா!” என்றவாறே அந்த காரை நோக்கி ஓடி சென்றாள் மேக்னா.
வீதியில் இருந்து பல அடி தூரத்தில் அவர்களது கார் விழுந்து கிடந்ததனால் யாருக்கும் அந்த விபத்து பற்றி தெரிந்து இருக்கவில்லை.
அவர்களுக்கு பெரிதாக உறவினர்களும் இல்லாத காரணத்தினால் யாரும் அவர்களை தேடியும் வந்திருக்கவில்லை.
சாம்பலாகி கிடந்த தங்கள் காரையே பல முறை சுற்றி வந்தவள்
“சுந்தரி ம்மா! சுந்தரி ம்மா! நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன் சுந்தரி ம்மா! ப்ளீஸ் சுந்தரி ம்மா என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க சுந்தரி ம்மா! டாடி! சுந்தரி ம்மா! டாடி” அழுது கொண்டே மீண்டும் மீண்டும் அந்த காரை சுற்றி வர அந்த இடத்தில் அவளைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.
நீண்ட நேரமாக அந்த இடத்தையே சுற்றி வந்ததால் கால்கள் இரண்டும் வலிக்க சிறிது நேரம் அந்த இடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தவள் தன் பெற்றோருடன் சேர்ந்து சாம்பலாகி இருந்த தங்கள் காரையே வெறித்துப் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து பசியால் அவளது வயிறு சத்தமிட கண்களில் கண்ணீர் வடிய சுற்றிலும் திரும்பிப் பார்த்தவள் உண்பதற்கு எதுவும் இல்லாமல் போகவே மெல்ல எழுந்து நடக்க தொடங்கினாள்.
கால்கள் போன போக்கில் நடக்க தொடங்கியவள் பசியில் கண்களை இருட்டிக் கொண்டு வர மெல்ல மெல்ல தன் நடையின் வேகத்தை குறைத்து கொண்டு சுற்றிலும் இருந்த மரஞ்செடி, கொடிகளை நோட்டம் விட்டாள்.
சற்று தள்ளி பல வண்ண பூக்கள் நிறைந்த ஒரு மரம் இருக்கவே சுந்தரி ஒரு தடவை அந்த பூக்களை அவளிடம் பறித்து கொடுத்ததை எண்ணி பார்த்து கொண்டவள் புன்னகையோடு அவசரமாக அந்த மரத்தை நோக்கி ஓடி சென்றாள்.
பசியை இதற்கு முன்னர் அறிந்து இராதவள் எதையாவது உண்டு தன் பசியை தீர்க்க வேண்டும் என்ற முனைப்போடு தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினாள்.
ஏற்கனவே அரை மயக்கத்தில் இருந்தவள் அந்த மரத்தை நெருங்குவதற்கு முன்னதாகவே முழு மயக்கத்திற்கு செல்ல
“சுந்தரி ம்மா!” என்றவாறே கால்கள் தடுமாறி மீண்டும் அந்த சரிவில் உருண்டு வீழ்ந்தாள்.
“ஏய் பொண்ணு மணி அடிச்சது காதில் விழலயா? சாப்பிட எழுந்து வா!” சிறைக்குள் வார்டனாக இருக்கும் பெண் மேக்னா இருந்த சிறை அறையின் கதவில் இருந்த கம்பிகளில் தட்டி கூற ஒரு சிறு திடுக்கிடலோடு தன் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தவள் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே எதுவும் பேசாமல் தன் தட்டை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்…….