Kanavu 18

கனவு – 18

திரவியம் சொன்ன விஷயத்தை அம்ரிதா தன்னுள் கிரகித்துக் கொண்டு, தான் காதில் கேட்ட விஷயம் நிஜம்தான் இது பிரம்மை அல்ல என்று அவள் உணர்ந்து ஊர்ஜிதப்படுத்தும் முன்னர் அது நடந்திருந்தது.

ஆம்… அனேகனை ஓங்கி ஒரு கை பலமாக அறைந்திருந்தது.

எதிர்பாராமல் கன்னத்தில் விழுந்த அடியின் தாக்கத்தால் பக்கவாட்டில் சரிந்து நின்ற அனேகன், சுவற்றில் எறியப்பட்ட பந்தை போல அதீத வேகத்தில் மீண்டும் திரும்பி நிமிர்ந்து நின்றான்; கண்கள் சிவக்க முறைத்தான்.

தீடீரென நடந்த அந்த நிகழ்வின் அதிர்ச்சியில் அனைவரது மூளையும் ஒரு நிமிடம் இயங்க மறுத்து, மீண்டும் இயங்கத் தொடங்கிய தருணம், ‘நாம் நால்வர் தானே பேசிக்கொண்டிருந்தோம், யாரது புதிதாய் நம் வீட்டில்? என்ன நடந்தது தீடீரென?’ என்று யோசிக்க, அது சற்று பின்நோக்கிச் சென்று படம் காட்டியது.

“மோகனோட டெத் ஆக்சிடட் இல்ல… இட்ஸ் அ மர்டர்… அத செஞ்சது… அனேகன்…” என்று திரவியம் சொல்லி நிறுத்தியிருக்க, வேகமாக அந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த தடித்த உருவம் கொண்ட மனிதன், கண்ணிமைக்கும் நேரத்தில் அனேகனுக்கு முன்பாக நின்றிருந்த திரவியத்தை கீழே தள்ளிவிட்டு அனேகனை ஓங்கி அறைந்திருந்தான்.

அந்த மனிதன் வேறு யாரும் அல்லன். ஆஷ்ரிதா – அம்ரிதா இரட்டை சகோதரிகளின் தகப்பனும், இறந்த யசோதாவின் கணவனுமான விஸ்வநாதன் தான்.

என்னதான் அனேகனுடன் சண்டை இழுத்துக் கொண்டிருந்தாலும் திடீரென வீடு புகுந்து ஒருவன் அவனை அடிக்கிறான் என்றதும் திரவியத்துக்கு கோபம் தான் வந்தது. கீழே விழுந்த மாத்திரத்தில் எழுந்து நின்றவன்,

“ஹலோ… யாரு நீங்க? நீங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள நுழைஞ்சி அடிதடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என கர்ஜித்தான்.

பெரும் சீற்றத்துடன் அவன் புறம் திரும்பிய விஸ்வநாதன் “யாரு டா நீ? பார்க்க பிளோ ஆவரேஜ் மாதிரி இருக்க… என்ன கேள்வி கேக்குறியா?” என்று கேட்க, தட தடவென சத்தம் கிளம்ப அங்கே வந்து நின்றனர் ஆறு ஜிம் பாடிகள்.

அவர்களது உடற்கட்டும், அவர்கள் அணிந்திருந்த கருப்பு சட்டையும், கையில் வைத்திருந்த ஜெர்மன் பிஅஸ்ஜி1 ஏ1 ஸ்னிப்பர் ரைபிள் –ம், அவர்களை ப்ளாக் கேட்ஸ் என்று எண்ண வைத்தது.

தான் கண்ட காட்சிகளால் பயத்தின் விளிம்பில் நின்ற ஆஷ்ரிதாவின் உடல் அவளையும் மீறி தன் நடுக்கத்தை அனைவருக்கும் காட்சிப்படுத்தியது. அந்த நடுக்கம் மாறாமல் “எல்லோரையும் வெளியில போக சொல்லு அம்மு” என்று உதட்டை பிதுக்கிக்கொண்டு அவள் கூற, “அப்பாவையா டா வெளியில போக சொல்லுற?” என அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் விஸ்வநாதன்.

விஸ்வநாதன் ஆஷ்ரிதாவை எட்டும் முன்னர் விரைந்து சென்று தன் கரம் சூழ அவளை அணைத்துக் கொண்ட அம்ரிதா, விஸ்வநாதனைப் பார்த்து “தள்ளி போங்க” என்றாள் ராட்சஷ குரலில்.

தற்பொழுது அதிர்ச்சி திரவியத்திற்கு தான் வந்தது. ‘இவர் தான் யசோதாவின் கணவரா?’ என்ற மன ஓட்டம் கொண்டவனாய் அங்கு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த திரவியத்திற்குள் தலைத் தூக்கியது ஒரே ஒரு சந்தேகம். ‘இவர் ஏன் அனேகனை அடிக்க வேண்டும்? அனேகனை இவருக்கு தெரியுமா? அனேகனுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்விகள் தான் அவனுள் அப்பொழுது பிரதிபலித்தது.

ஆனால் அனேகனை திரும்பிப்பார்த்தால், இறுகிய முகத்தோடு, உதட்டோரமாய் வடியும் இரத்தத்தையும் துடைக்காமல், ஆஜானுபாகுவாகவே நின்றுக்கொண்டிருந்தான். அவன் கண்களில் ஏதோ ஓர் ஓளி தெரிந்தது. அதன் காரணம் என்ன என்பது மட்டும் திரவியத்தால் உணர்ந்துக் கொள்ள முடியவில்லை.

மல்யுத்தத்திற்கு தயாரான காளைகளாய் திரவியமும் அனேகனும் சற்றுமுன் விடைத்திருந்த தருணம் மாறி தற்போதய முழக்கம் அம்ரிதாவுடையதாய் இருந்தது.

“யாருக்கு யார் அப்பா” சிங்கமென சீறிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

“அ… ஆ…” என்று விஸ்வநாதன் திணறி நிற்க,

“ம்ம்ம்… சொல்லுங்க… யார் அம்ரிதா, யார் ஆஷ்ரிதா? சொல்லுங்க பார்ப்போம்” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“அத எப்படி சொல்லுவாரு அம்ரிதா… உன்னோட ஏர்காடு எஸ்டேட் எவ்வளவு ப்ராஃபிட் –ல இருக்குனு கேளு… சரியா சொல்லுவாரு” அசுரனைக் கொல்லத் துடிக்கும் பார்வையோடு கூறினான் அனேகன்.

“டேய்…” என பல்லை கடித்துக்கொண்டே விஸ்வநாதன் அனேகனை கண்டு முறைக்க, அவனை சுடக்கிட்டு தன் திசைக்கு திருப்பினாள் அம்ரிதா.

“என்னை பார்த்து பேசுங்க விஸ்வநாதன்… எங்க ஷேர் ப்ராஃபிட் எல்லாத்தையும் அச்சுவோட ப்ரொஃபெஷ்னல் பி.ஏ. –ங்கற பேர் –ல இருக்குறானே உன் பினாமி… அவன் உன்கிட்ட ஒப்பிக்கற விஷயம் எங்களுக்கு தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா? இல்ல எஸ்டேட் –அ பிடுங்கதான் இப்ப வந்து ட்ராமா பண்ணுறீங்கனு எங்களுக்கு தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா?” – அம்ரிதா.

“பினாமி இல்ல டா மா… யசோதா இல்லாம தனியா இருக்கற உங்கள கவனிச்சிக்கறதுக்கு தான் அப்பா…”
அதற்கு மேல் அவனை பேச விடவில்லை அம்ரிதா.

“என் அம்மா பேர சொல்லாதீங்க… அவங்கள நினைக்கற தகுதி கூட கிடையாது உங்களுக்கு… ரொம்ப அக்கறையோ? யாரு அம்மு யாரு அச்சு –னு கூட தெரியாத அளவு அக்கறை…” – அம்ரிதா.

“அப்பாவ மன்னிக்க மாட்டிங்களா மா?” – விஸ்வநாதன்.

“ஹாங்… அப்பாவா? அப்பா –னா யாரு தெரியுமா? இந்த நடிப்பெல்லாம் இங்க வேணாம்… மரியாதையா இடத்த காலி பண்ணுங்க… இல்ல அசிங்கமாகிடும்” – அம்ரிதா.

“சரி டா… நாம பேசிக்கலாம்… முதல இந்த நாய வெளிய அனுப்பு… அப்பறமா நாம பொறுமையா உட்கார்ந்து பேசி எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்…” என அனேகனை சுட்டிக்காட்டி கூறினான் விஸ்வநாதன்.

“யார பார்த்து நாயி –னு சொன்ன?? நீ போ முதல வெளியில… இனி ஒரு நிமிஷம் இங்க நின்ன நடக்கறதே வேற…” அவ்வளவு நேரம் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதா வெடிக்கும் எரிமலையானாள்.

அவளை பார்த்து சிநேகமாய் புன்னகைத்த அனேகன் விஸ்வநாதன் முன் வந்து நின்று “நீங்களா போறீங்களா இல்ல நாய அடிச்சி தொறத்தற மாதிரி… நோ நோ… நாய்க்கு நன்றி உண்டே…” என்று நாடியில் கைவைத்தவாறு யோசிக்க, பொங்கி எழுந்தனர் அந்த ஆறு ஜிம் பாடிகளும்.

அறுவரின் கையில் இருந்த துப்பாக்கியும் ஒருசேர அனேகனை குறிவைத்து நின்றது அக்கணம்.

“ஹாஹா… ஃபன்னி கெய்ஸ்…” சிரித்துக்கொண்டான் அனேகன்.

“என்ன டா உயிர் பயம் இல்லாத மாதிரி நடிக்கறயா?” – விஸ்வநாதன்.

“உங்கள மாதிரி எனக்கு நடிக்க தெரியாது ஜி…” நக்கலாகவே கூறினான் அனேகன்.

“யாருக்கு டா பயம்? உன்ன மாதிரி பிள்ளப்பூச்சிகளோட மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுறவன் இல்ல இந்த விச்சு… இல்லைனா நாடு விட்டு நாடு போய் நாலு கம்பெனி, பன்னிரெண்டு பிராஜெக்ட், முப்பது பிரான்ஜ், லட்சக்கணக்கான எப்லாயீஸ் –னு கைக்குள்ள வச்சி கம்பீரமா நிக்க முடியுமா?” – விஸ்வநாதன்.

“ரெண்டு குடும்பத்தை லிஸ்ட் –ல விட்டுட்டீங்களே…” – அனேகன்.

“என்ன டா? இத சொல்லி என்ன அடக்கிறலாம் –னு நினைக்குறயா? – விஸ்வநாதன்.

“இன்னும் எத்தனை இல்லீகல் ரிலேஷன்ஷிப் உனக்கு இருக்குனு நான் புட்டு புட்டு வச்சாலும் நீ அடங்கமாட்டனு எனக்கு தெரியும்… எல்லாம் தெரிஞ்சும் உன்ன இவ்வளவு ஆட விடுறேன் –னா கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா டா?” – அனேகன்.

அவன் பேசும் சூட்சும பாஷையின் அர்த்தம் புரியாமல் கேள்வியாய் நோக்கிக் கொண்டிருந்தான் விஸ்வநாதன்.

அப்போது தன் அலைபேசியை எடுத்து, சில இலக்கங்களை தட்டி, தன் காதில் வைத்த அனேகன், “யஸ் லேகா… கம் அண்ட் கேட்ச் தி மாஃபியா” என்று கூற, அவ்வீட்டு வாசலில் நின்றிருந்த நான்கு ஆண் காவல்துறை அதிகாரிகளும் இரண்டு பெண் அதிகாரிகளும் உள்ளே வந்தனர்.

ஆண் காவலாளிகள் நால்வரில் மூவர், திரவியம் அனேகனது அப்பார்மெண்ட் –ல் பார்த்தவர்களாய் இருந்தனர். அப்பொழுதுதான் திரவியத்திற்கு விஷயம் கொஞ்சம் பிடிபடத் தொடங்கியது. மோகன் கொலைக்கும், அம்ரிதா குடும்பத்தின் வாழ்க்கைக்கும் பின் பெரியதொரு முடிச்சு இருக்கிறது என தன்னுள் சொல்லிக்கொண்டான் திரவியம்.

உள்ளே வந்த காவல்துறையினர் ஒன்றாய் அனேகனுக்கு சல்யூட் அடிக்க, அனேகன் மட்டும் சிரித்தாவறு “ஆம்” என தலையாட்டினான். மற்ற அனைவரது முகத்திலும் புதிரே தெரிந்தது.

“ஹியர் இஸ் தி அக்யூஸ்ட் லேகா” என்று அனேகன் விஸ்வநாதனைக் காட்ட,

“யஸ் சர்” என்று கூறிய லேகா, மற்ற காவலாளிகளை பார்த்து “அரெஸ்ட் ஹிம்” என்றார்.

“வாட் தி ஹெல் இஸ் ஹேப்பனிங்? என்ன எதுக்கு அரெஸ்ட் பண்ணுறீங்க? நான் யாருனு தெரியுமா?” என்று திமிறிய விஸ்வநாதனின் கைகளில் விலங்குபோடப்பட்டது.

அதே சமயம் அந்த ஆறு ஜிம் பாடிகளில் மூவரை பிடித்துவிட, மீதி மூவரும் தப்பி ஓட முயன்றனர். கணப்பொழுதில் வாசலை தாண்டி ஓடியவர்கள் வீட்டின் கேட்டை அடையும் முன்னர் அவர்களை துறத்திச்சென்ற லேகா, மூவரின் கால்களை குறிவைத்து தன் துப்பாக்கியின் தோட்டாக்களை இறக்கியிருந்தாள்.

துளைக்கப்பட்ட கால்களில் இரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்துத் துடித்தனர் அந்த மூன்று கயவர்களும். கேட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வேன் –ல் இருந்து இறங்கி வந்த கான்ஸ்டபிள்கள் சிலர் “வீ ஷல் மேம்” என கூறிவிட்டு அந்த மூன்று பேரையும் தூக்கிச் செல்ல, மற்ற மூன்று ஜிம் பாடிகளோடு விஸ்வநாதனும் அந்த வேன் –ல் ஏற்றப்பட்டான்.

இவற்றை கடந்து லேகா மீண்டும் அவ்வீட்டிற்குள் நுழைய அவரோடு வந்திருந்த மற்றொரு பெண் அதிகாரியோடு கை குலுக்கிக் கொண்டிருந்தான் அனேகன்.

“தேங்க் யூ மிஸ்டர். அனேகன்” என்று அங்கு வந்து தானும் கை குலுக்கினாள் லேகா.

“நான் தான் தேங்க்ஸ் சொல்லனும் லேகா… உங்களால தான் எல்லாம்… தேங்க்ஸ் அ லாட்” என்ற அனேகனிடம் ஒரு புன்னகையை சிந்தியவள்,

“இந்த கன் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிக்க சொல்லுங்க” என்று அந்த ஜிம் பாடிகள் விட்டுச்சென்ற துப்பாக்கிகளை சுட்டிக்காட்டி மற்றொரு பெண் அதிகாரியிடம் கூற, அவர் கூறியபடி அனைத்தும் கைப்பற்றப்பட்டது.

“ஓகே மிஸ்டர். அனேகன்… சீ யூ இன் தி கோர்ட்” என கூறிவிட்டு மீண்டும் ஒரு சல்யூட்டோடு விடைப்பெற்றார் லேகா.

தற்பொழுது அடமழை பெய்து ஓய்ந்தது போல அமைதி பரவியிருந்தது அவ்வீட்டில். நடப்பவை என்னவென்று அறியாமல் சிலையாயிருந்த அம்ரிதா, ஆஷ்ரிதா மற்றும் திரவியம் ஆகியோர் தன்னை பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் “வெயிட் சொல்லுறேன்” என்ற அனேகன் திரவியத்தை பார்த்து,

“திரு… கொஞ்சம் உள்ள போய் தண்ணி எடுத்துட்டு வர முடியுமா?” என்றான்.

“ம்ம்ம்… வர்றேன்” என உள்ள செல்லத் துணிந்தவன் சற்று நிதானித்து அனேகனை நோக்கி ஒரு சந்தேக பார்வையை வீசினான்.

“உங்கள விட்டுட்டு ரகசியம் பேச மாட்டேன் திரு… சீக்கிரம் எடுத்துட்டு வாங்க” – நகைப்போடு கூறினான் அனேகன்.

ஆர்வத்தை அடக்கும் பொறுமையற்ற திரவியம் விரைந்தோடி தண்ணீர் எடுத்து வந்து அனேகனிடம் கொடுக்க, அதை வாங்கிப் பருகிய அனேகன் பேசத் தொடங்கினான்.

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் திரு இஸ் ரைட்… என் அப்பா –க்கு நடந்தது ஆக்சிடண்ட் இல்ல… இட்ஸ் அ ப்ரீ ப்ளண்டு மர்டர்… எந்த ஆதாரமும் இல்லாம நான் தான் அவர கொன்னேன்… யாரும் கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சேன்… ம்ம்ம்… ஐ அப்ரிஷியேட் யூ திரு… செகண்ட் வன், விஸ்வநாதனோட அரெஸ்ட்… இந்த விச்சு வேற யாரும் இல்ல… என் டேடியோட பிசினஸ் பார்ட்னர். நான் சொல்லுறது லீகல் பிஸ்னஸ் இல்ல, இல்லீகல் பிசினஸ்… இதுவரை எத்தனை பொண்ணுகள இவங்க ரெண்டு பேரும் நாசம் பண்ணியிருக்காங்கனு எனக்கு தெரியும்… எல்லாத்துக்கும் விட்னஸ் கலெக்ட் பண்ண இவ்வளவு டிலே ஆகிடுச்சு… கமிஷ்னர் லேகா -வ என்னோட ஒரு இன்ரட்வ்யூ –ல மீட் பண்ணேன். அவங்களோட நேர்மை இந்த டிப்பார்ட்மெண்ட் –ல வேற யாருக்கும் கிடையாது… இந்த விஷயத்துக்கு அவங்கதான் கரெக்ட் –னு பட்டுச்சு… சோ அவங்கள காண்டாக்ட் பண்ணி அவங்க க்ரூ வச்சி வன் இயர் -ஆ போட்ட ஸ்கெட்ச் தான் எல்லாம்…” – அனேகன்.

“வன் இயர் –ஆ வா?” – ஆஷ்ரிதா.

“யஸ்… நீங்க நினைக்கற மாதிரி உங்க அப்பா சாதாரண க்ரிமினல் இல்ல” – அனேகன்.

“அவர் ஒன்னும் எங்க அப்பா இல்ல” – அம்ரிதா.

“ஹாஹா… இட்ஸ் ஓகே… அந்த விச்சு சாதாரண க்ரிமினல் இல்ல… அத அவன் கூட வந்திருந்த தடியனுங்க கையில் வச்சிருந்த ரைபிள் –லே உங்களுக்கு சொல்லியிருக்கும்… அவன அவ்வளவு ஈசியா அரெஸ்ட் பண்ணவும் முடியாது… அதுலயும் அவன் லண்டன் –ல செட்டில் ஆகிட்டா இங்க அரெஸ்ட் பண்ணி வைக்கிறது இட்ஸ் ரியலி நாட் பாசிபிள்… அதனால அவனோட ஒவ்வொரு பிஸ்னஸ் மூவ் –வும் நோட் பண்ண தனி டீம் ரெடி பண்ணோம்… அவனோட ஒவ்வொரு ப்ராஜெக்ட் –லயும் எங்க ஆளு ஒருத்தன் இருப்பான்… அவனோட எல்லா பிசினஸ் டீலிங்க்ஸ் –ம் ட்ரேஸ் பண்ணி, அவனோட கம்பெனி ப்ரொசீஜர் –ல மிஸ்மேட்ச் ஆன டாக்யுமெண்ட்ஸ் செட் பண்ணி, எந்த ஒரு டேரக்ட் டீலிங்க் –ம் அவன பண்ண விடாம தடுத்தோம்… அதனால அவனோட எல்லா பாண்டும் லண்டன் சிட்டிசன் ஜேம்ஸ் அப்படீங்கறவரோட ஹெட் –ல தான் இருக்கும். பட் மாஸ்டர் கீ இந்த விச்சு தான்” – அனேகன்.

“அப்படீன்னா ஜேம்ஸ் உடல் மாதிரி, விஸ்வநாதன் உயிர் மாதிரி… கரெக்ட் –ஆ?” – திரவியம்.

“யஸ் ப்ரைனி… அதனால சட்டபடி அவன இங்க அரெஸ்ட் பண்ணுறத எந்த கொம்பனாலயும் தடுக்க முடியாது” – அனேகன்.

தற்பொழுது அனேகன் மேல் பெரிய மரியாதையே வந்தது திரவியத்திற்கு. “என்ன மன்னிச்சிருங்க சார்” என்றான் குற்ற உணர்ச்சியோடு.

“ஹே… கூல்… நோ ப்ராப்ளம்” – அனேகன்.

“ஆனா…” தயங்கினான் திரவியம்.

“என் அப்பாவ எதுக்கு கொலை செஞ்சேன்… அதான உங்க சந்தேகம்?” – அனேகன்.

“எல்லாம் என்னோட சகி –காக… ஐ மீன் அம்ரிதாக்காக” அனேகன் காதல்காரனாய் மாறினான் இப்போது.

இதை கேட்ட ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியாய் அனேகனை ஏறிட்டு பார்க்க, அனேகனோ

“நீ ஏன் அம்ரிதா எங்க ஆஃபீஸ் –ல வேலைக்கு சேர்ந்த?” – அனேகன்.

இதுவரை நடந்த விஷயங்களில் இருந்து, தங்கள் வாழ்வில் நடந்த அத்தனை விஷயங்களும் அனேகனுக்கு தெரிந்திருக்கிறது என்பது அம்ரிதாவுக்கு தெளிவாய் புரிந்தது. தான் மோகனின் கம்பெனியில் வேலை செய்வதின் முக்கியமான காரணம் என்ன என்பதையும் அவன் அறிந்திருக்கிறான் என்பதை உணர்ந்த அம்ரிதா, கண்களில் நீர் சொறிய மறுப்பாக தலையாட்டினாள்.

“சொல்லு அம்ரிதா… இன்னும் எத்தனை நாளைக்கு உண்மைய மறைக்கப்போற?” – அனேகன்.

அனேகன் அம்ரிதாவிடம் கேட்ட கேள்விகள் ஆஷ்ரிதாவை யோசனையில் ஆழ்த்தியது. ‘அம்ரிதா நம்மிடம் மறைக்க என்ன விஷ்யம் இருக்கிறது?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்ற அனேகன்,

“நீ சொல்லு ஆஷ்ரிதா… உங்களுக்கு இவ்வளவு சொத்து இருந்தும் அம்ரிதா ஏன் மோகன் கிட்ட அத்தனை ஏச்சும் பேச்சும் வாங்கி அங்க வேலை பார்த்தா?” – அனேகன்.

“அது… அது… விஸ்வநாதனுக்கு குடிக்க கத்துக்கொடுத்து, பணம் மேல ஆசை காட்டி, என் அம்மாவுக்கு துரோகம் செய்யவச்சது மோகன் தான்… என் அம்மா எஸ்டேட் வாங்கின விஷயத்துல அம்மாவுக்கு எதிரா பொய் கேஸ் போட்டு அம்மாவையும் எங்களையும் நடு ரோட்டுல நிறுத்த நினைச்சாங்க மோகனும் விஸ்வநாதனும்… அத முறியடிச்சு என் அம்மா ஜெயிச்சிட்டாங்க… அந்த கோபத்துல எங்க எல்லாரையும் கொலை செய்யுறதுக்காக எங்க கார் –ல மெக்கானிக் வச்சி ஏதோ மக்கர் பண்ணிட்டாங்க… அதனால நடந்ததுதான் அந்த ஆக்சிடெண்ட்… அன்னைக்கு நானும் அம்முவும் கார் –ல இல்லாததால தப்பிச்சிட்டோம்… அதுக்கப்பறம் பொன்னம்மா தான் எங்கள பார்த்துகிட்டாங்க… அம்மாவோட கேஸ் –அ க்ளோஸ் பண்ணது எங்க காலேஜ் –ல படிச்ச ஒரு பயனோட அப்பா… எல்லாம் மோகனும் விஸ்வநாதனும் போட்ட ப்ளான் –னு அவன் மூலமா தான் எங்களுக்கு தெரிஞ்சது… அவங்க ப்ரெஷராலதான் அந்த கேஸ் –அ க்ளோஸ் பண்ணிட்டாங்க… சட்டத்தின் வழியா எதுவும் செய்ய முடியாம போனதால அவன பழி வாங்க அம்மு அங்க ஜாயிண்ட் பண்ணா” – ஆஷ்ரிதா.

“கரெக்ட் ஆஷ்ரிதா… நீ சொன்ன எல்லாமே கரெக்ட்… ஆனா நீயும் யசோதாவோட பொண்ணு தான். உனக்கும் இந்த விஷயத்துல கோபம் இருக்கும் தான். ஆனால் உன்னவிட அதிகமா அம்ரிதா இவ்வளவு ஆவேசப்படுறான்னா அதுக்கு வேற காரணமும் இருக்கும்னு நீ யோசிக்கலையா?” என்று அனேகன் கேட்கவும்,

“அனேகன் நோ… வேணாம்” துடித்து கதறினாள் அம்ரிதா.

(களவாடுவான்)