Kadhal 21

முதல் நாள் இரவு முழுமையாக விழித்திருந்து மேக்னா கொடுத்த டைரிகள் முழுவதையும் ஒன்று விடாமல் படித்து முடித்து இருந்தவன் அதைப் பற்றி ஜெஸ்ஸி விடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடே அன்று ஸ்டேஷனுக்கு புறப்பட்டு வந்திருந்தான்.

மாலை நேரம் வானம் இலேசாக மங்க ஆரம்பித்திருந்தது.

சித்தார்த்தின் ஸ்டேஷனில் அவனது மேஜையின் முன்னால் மலைத்துப் போய் அமர்ந்திருந்தாள் ஜெஸ்ஸி.

ஒரு கேஸ் விடயமாக காலையில் இருந்து பகல் வரை சரியாக உண்ணக்கூட நேரமின்றி அலைந்து திரிந்தவள் அப்போது தான் தன் ஸ்டேஷனுக்கு வந்து சற்று சாவகாசமாக அமர சித்தார்த்திடம் இருந்து அவசரமாக அவளை சந்திக்கும் வேண்டும் என்று அழைப்பு வந்தது.

தன் களைப்பையும் மீறி என்னவோ ஏதோ என்று அங்கே வந்தவள் சித்தார்த் மேக்னாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக கூறி முடித்ததும் தான் தாமதம் அப்போதே அதிர்ச்சியில் மலைத்துப் போய் விட்டாள்.

“ஜெஸ்ஸி!” சித்தார்த்தின் அழைப்பில் அவனை விருட்டென்று நிமிர்ந்து பார்த்தவள்

“என்ன?” விட்டால் அவனை பார்வையினாலேயே கபளீகரம் செய்து விடுவதைப் போல முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

“நான் என்ன பண்ணேன் ஜெஸ்ஸி? எதற்கு என் மேல இவ்வளவு கோபப்படுற?”

“ஆமா நீ எதுவுமே பண்ணல பாரு நான் ஆரம்பித்தில் இருந்தே தலையில் அடிக்காத குறையாக சொன்னேன் அந்த பொண்ணு பின்னால் போகாதே! போகாதேன்னு இப்போ பாரு எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தி இருக்க!”

“எனக்கு என்னவோ அந்த பொண்ணு தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு தோணுச்சு அது தான் அவளைப் பற்றி விசாரிக்க போனேன் இப்போ அதனால எந்த பிரச்சினையும் ஆகலயே அதோடு அவ தான் அந்த கொலையை பண்ணவே இல்லையே ஜெஸ்ஸி!”

“மண்ணாங்கட்டி! நீ உன் மூளையை வீட்டில் இருந்து வரும் போதே வீட்டு கப்போர்டில் பூட்டி வைத்து விட்டு தான் வர்றியா?”

“ஏன் ஜெஸ்ஸி இப்படி சொல்லுற?”

“பின்ன என்னடா? அந்த பொண்ணு எத்தனை தப்பு பண்ணி இருக்கா? அது எல்லாம் உன் ஆந்தைக் கண்ணுக்கு தெரியல இந்த கொலை பண்ணலன்னு சொல்லுற விஷயம் மட்டும் தான் தெரியுதா?”

“இல்லை ஜெஸ்ஸி! அது…”

“வேண்டாம் எதுவும் பேசாதே! எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை கொன்னுட்டு நானும் அந்த மேக்னாவிற்கு பக்கத்தில் இருக்கும் ஜெயிலுக்கு போயிடப் போறேன்”

“ஸாரி ஜெஸ்ஸி!” சித்தார்த்தின் கவலை தோய்ந்த குரலில் ஜெஸ்ஸி தன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

சிறு நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் கண்களை திறந்து அவனை பார்த்தவள்
“ஸாரி சித்தார்த்! நீ மேக்னாவை பற்றி சொன்னதை எல்லாம் கேட்டு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்” என்று கூற

அவனோ புன்னகை முகமாக
“இட்ஸ் ஓகே மா!” என தலை அசைத்தான்.

“சித்! அந்த பொண்ணைப் பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்து இருக்கியே இந்த டைரியில் இருக்கும் விஷயம் எல்லாம் உண்மை தானா உனக்கு தெரியுமா?” ஜெஸ்ஸி சற்று சந்தேகத்துடன் அவனை நோக்க

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்
“நான் மேக்னாவோட கார்டியன் ராணி கிட்ட பேசுனேன் அவங்க கூட இருக்கும் வரைக்கும் அவ இதில் எழுதி இருக்கும் எல்லாம் உண்மை தான் அதற்கு அப்புறம் நடந்த விடயங்கள் பற்றி கேட்க யாரும் இப்போ இல்லை வள்ளி, நடராஜன் இரண்டு பேரும் உயிரோடு இல்லை நர்மதா எங்கே இருக்கான்னு தெரியல” என்று கூறவும்

“தனபாலன்!” அவள் மீண்டும் கேள்வியாக அவனை நோக்கினாள்.

“அந்த ஆளு இறந்துட்டதாக தான் எல்லா இடங்களிலும் செய்தி வந்து இருக்கு ஆனா மேக்னா அவன் இன்னும் சாகலன்னு இதில் எழுதி இருக்கா அந்த ஆளோட குடும்பத்தை கான்டாக்ட் பண்ணவே முடியல எல்லோரும் சிங்கப்பூரில் செட்டில் ஆகிட்டாங்கன்னு இங்கே இருக்குற ஒண்ணு, இரண்டு பேரு சொன்னாங்க ஆனா அங்கே தனபாலன் இல்லை”

“இதெல்லாம் எப்போடா நீ விசாரித்த?”

“உனக்கு போன் பண்ணி வரச் சொல்லுறதுக்கு முதல்”

“அடப்பாவி!” ஜெஸ்ஸி தன் வாயில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியாக அவனைப் பார்க்க

சற்று சங்கடத்துடன் அவளது வாயில் இருந்த கையை விலக்கி விட்டவன்
“ஒரு கேஸைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் இது எல்லாம் சகஜம் தானே!” என்று இயல்பாக கூறினான்.

“வேற என்ன எல்லாம் விசாரித்து வைத்து இருக்க?”

“அது வந்து!”

“அது தான் வந்துட்டேனே அப்புறம் என்ன தயக்கம் சொல்லு?”

“சுதர்சனையும் கொஞ்சம் விசாரித்தேன்”

“அந்த ஆளையும் விடலயா நீ?”

“அப்படி இல்லை ஜெஸ்ஸி அவர் கிட்ட மேக்னாவை பற்றி விசாரித்தால் அதன் மூலமாக அந்த தனபாலனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமேன்னு பார்த்தேன்”

“என்ன சொன்னாங்க அந்த சுதர்சன்?”

“மேக்னாவை பற்றியோ, அவள் சம்பந்தமான எந்த விடயத்தையும் பற்றியோ தனக்கு பேச இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டாரு”

“அதுவும் போச்சா? சரி இப்போ கடைசியாக நீ என்ன முடிவில் இருக்க? மேக்னா கேஸை இப்படியே விடப் போறியா? இல்லை மறுபடியும் விசாரிக்க வைக்கப் போறியா?”

“அது தான் எனக்கு இன்னமும் குழப்பமாக இருக்கு ஜெஸ்ஸி” சித்தார்த் தன் நெற்றியை நீவி விட்டபடியே கூற

அவனை சற்று கூர்ந்து கவனித்த ஜெஸ்ஸி தன் மனதிற்குள்
‘இவன் இன்னும் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மறைப்பது போல இருக்கே!’ என நினைத்து கொண்டே அவனை அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள்.

“சித்! நீ வேற ஏதாவது முக்கியமான விஷயத்தை என் கிட்ட இருந்து மறைக்குறியா?”

“இ…இல்லையே! ஏன் அப்படி கேட்குற?” தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்ற படி அவன் பதிலளிக்க அது அவள் கண்களுக்கு பிடிபடாமல் இல்லை.

“ஆர் யூ ஸ்யூர்?” ஜெஸ்ஸி சித்தார்த்தின் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்க அவனோ சிறிது தயக்கத்துடன் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டான்.

“அப்போ ஏதோ இருக்கு அப்படி தானே?”

“……….”

“இது சரி வராது அந்த டைரியை எல்லாம் கொடு நான் ஒரு தரம் படித்து பார்க்கிறேன்” ஜெஸ்ஸி சித்தார்த்தின் கைகளில் இருந்த டைரிகளை எட்டி எடுக்கப்போக அவனோ அவசரமாக அவளது கைகளை விலக்கி விட்டு விட்டு சிறிது விலகி அமர்ந்து கொண்டான்.

“டேய்! சித்! உனக்கு என்ன தான் டா ஆச்சு? என்ன பிரச்சினைன்னு முழுமையாக சொன்னால் தானே எனக்கு புரியும்”

“அது வந்து ஜெஸ்ஸி ஐ யம் ஸாரி! மேக்னாவை பற்றி ஒரு ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லாமல் மறைத்து விட்டேன்”

“என்ன அது?”

“மேக்னா என்னோட அத்தை பொண்ணு”

“வாட்?” தன்னை மறந்து சத்தமிட்டு கத்தியவளுக்கு தலையை சுற்றி கொண்டு வருவது போல இருக்க தன் முன்னால் இருந்த டம்ளரில் இருந்த நீரை எடுத்து ஒரே மிடறில் பருகியவள் பேச வார்த்தைகள் இன்றி அதிர்ச்சியாக அமர்ந்திருந்தாள்.

“சி..சித்..தார்த்! நீ சொல்றது உண்மை தானா?”

“ஆமா ஜெஸ்ஸி எனக்கே இந்த விஷயம் காலையில் தான் தெரியும்” காலையில் யசோதா தன்னிடம் கூறிய விடயங்களையும், அதன் பிறகு மேக்னாவின் டைரியில் தான் படித்த விடயங்களையும் அவன் கூற அவளோ அவன் கூறியதைக் கேட்டு தன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“இது மட்டும் தானா? இன்னும் ஏதாவது இருக்கா?”

“இல்லை அவ்வளவு தான்”

“ஒரு மனுஷனுக்கு ஒரு நாளில் எத்தனை ஷாக் டா நீ தருவ?”

“நீ இப்படி ஷாக் ஆகுவேன்னு தான் நான் இந்த விஷயத்தை உன் கிட்ட சொல்லாமல் விட்டேன் கொஞ்ச நேரம் கழித்து இல்லேன்னா நாளைக்கு சொல்லலாம்ன்னு தான் இருந்தேன்”

“எனக்கு என்னவோ இது ரொம்ப ரிஸ்கியா இருக்கு சித் நீ மேக்னா கிட்ட எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிடு கேஸை ரீ ஓபன் பண்ணணும்னா ஸ்ட்ராங்கா ஏதாவது சாட்சியை கோர்ட்டில் ஒப்படைக்கணும் இங்கே அப்படி எதுவுமே இல்லையே!”

“மேக்னா பாவம் இல்லையா ஜெஸ்ஸி?” சித்தார்த்தின் கேள்வியில் ‘நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்குறியாடா சித்? ஒண்ணுமே புரியலையே!’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்து கொண்டு இருந்தாள் ஜெஸ்ஸி.

“அவ பாவம் தான் ஆனா அவளால் இறந்த மற்ற ஆளுங்க அப்போ பாவம் இல்லையா? ஒருத்தனைப் பழி வாங்க இத்தனை உயிரை எடுத்து இருக்குறது சரியா?”

“அவ தப்பு பண்ணி இருக்கா தான் இல்லைன்னு இல்லை அவங்க எல்லாம் தப்பு பண்ணவங்க ஜெஸ்ஸி அதை தான் அவ தட்டி கேட்டு இருக்கா அதுவும் இதுவும் ஒண்ணா?”

“சித் நீ ஜெஸ்ஸியை விரும்புற தானே?”

“ஹேய்! லூசா நீ? சம்பந்தமே இல்லாமல் பேசுற அவளை நான் லவ் பண்ணுறதா? சும்மா உளறாமல் இந்த கேஸைப் பற்றி பாரு”

“இல்லை சித்! எனக்கு உன்னை நல்லாவே தெரியும் நாம பிரண்ட்ஸா பழகுனது வேணும்னா ஒரு சில வருடங்களாக இருக்கலாம் ஆனா உன்னோட முக பாவனைகள் எல்லாம் எனக்கு புரியும் நான் இதே கேள்வியை அன்னைக்கு மேக்னாவை நீ சந்திக்க ஒரு வழி சொல்ல சொல்லி வரச்சொன்ன நேரம் கேட்டேன் அப்போ நீ அப்படி எதுவும் இல்லைன்னு சொன்ன அதை நான் நம்பினேன் ஏன்னா உன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை ஆனா இன்னைக்கு நீ சொல்றதை நான் நம்பல ஏன்னா உன் கண்ணே உன்னோட மனதில் இருக்கும் தயக்கத்தை எனக்கு காட்டுது”

“யப்பா! உன்னை போலீஸ் வேலைக்கு சரியாக தான் எடுத்து இருக்காங்க ஒரு ஆளை இந்தளவிற்கு நீ எடை போட்டு வைத்திருக்க சூப்பர் கையை கொடு” சித்தார்த் சிரித்துக் கொண்டே ஜெஸ்ஸியின் கரத்தை பற்றப் போக

கோபமாக அவனது கரத்தை தட்டி விட்டவள்
“என்ன காமெடி பண்ணுறதா நினைப்பா?” அவனை முறைத்து பார்த்துக் கொண்டே வினவினாள்.

“அப்படி இல்லை ஜெஸ்ஸி எனக்கு ஆரம்பித்தில் அவ மேல ஒரு க்ரஸ் வந்தது உண்மை தான் ஆனா அது லவ் எல்லாம் இல்லை இப்போ அவளைப் பற்றி எல்லாம் தெரிந்ததற்கு அப்புறம் அந்த க்ரஸ் கூட காணாமல் பறந்து போயிடுச்சு”

“சித்தார்த்!”

“இல்லை ஜெஸ்ஸி நான் ஒண்ணும் உன்னை சமாளிக்க இதை சொல்லல அப்பாவை பற்றி நான் உன் கிட்ட சொன்னேன் தானே மேக்னா உண்மையாகவே இந்த கொலையை பண்ணி இருக்காவிட்டாலும் தன் தங்கச்சி பொண்ணு ஜெயிலில் இருந்து வந்தவன்னு சொன்னா அவரு ஏத்துப்பாரா? அவர் ஏற்றுக் கொண்டாலும் அம்மா! வாய்ப்பே இல்லை!”

“அப்போ அம்மா, அப்பாவுக்காக தான் உன் காதலை சொல்ல உனக்கு தயக்கமா?”

“ம்ம்ம்ம்ம்” சித்தார்த் தன்னை மறந்து ஆமோதிப்பாக தலை அசைக்க ஜெஸ்ஸி தன் கையை கட்டிக் கொண்டு புன்னகையுடன் அவனைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் தன் கைகளையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தவன் ஜெஸ்ஸியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவளை நிமிர்ந்து பார்க்க அவளது முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த பின்பே தான் என்ன கூறினோம் என்று அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“ஸ்ஸ்ஸ்!” நாக்கை கடித்து கொண்டு தன் தலையில் தட்டிக் கொண்டவன் சங்கடமாக அவளை நிமிர்ந்து பார்க்க

புன்னகையுடன் தன் கைகளை மேஜையின் மீது வைத்து கொண்டவள்
“இவ்வளவு நாளா திருடனுங்களைத் தான் இப்படி கேள்வியாக கேட்டு குழப்பி அவங்க பண்ண திருட்டு தனத்தை கண்டு பிடிப்போம் ஆனா இன்னைக்கு ஒரு போலீஸ் ஆபிஸரே திருடனைப் போல மாட்டிக்கிட்டாரு” என்று கூற அவனது முகமோ சட்டென்று சிவந்து போனது.

அப்போது வெட்கப்பட்டு விளையாட்டாக இயல்பாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை இன்னும் சில நாட்களில் தானே தன் தாய், தந்தையின் முன்னால் மேக்னாவிற்காக மன்றாட வேண்டிய சூழ்நிலை வரப்போகிறது என்பது.

“சரி சரி ஓவரா வெட்கப்படாதே! சகிக்கல” ஜெஸ்ஸி சலித்து கொள்வது போல கூறவும்

வாய் விட்டு சிரித்தவன்
“ஓகே! ஜோக்ஸ் அபார்ட் இப்போ என்ன பண்ணலாம் சொல்லு” என்று கேட்க

சிறிது நேரம் யோசித்த வண்ணம் அமர்ந்திருந்தவள்
“மேக்னாவை போய் முதலில் சந்திப்போம் அப்புறமாக என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம் அப்புறம் அம்மா கிட்ட இப்போதைக்கு மேக்னா பற்றி சொல்ல வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் சரியா?” என்று கேட்க அவனும் சரியென்று ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“சரி அப்போ நான் கிளம்புறேன் நாளைக்கு காலையில் மேக்னாவை போய் சந்திப்போம் நான் அதற்கு அரேஞ்ச்மெண்ட் எல்லாம் பண்ணி வைக்கிறேன்
நான் வர்றேன் சித் ரொம்ப நேரம் ஆச்சு”

“இரு ஜெஸ்ஸி நானும் வர்றேன் மணி ஒன்பது ஆகப்போகுது உன்னை உன் வீட்டில் விட்டுட்டு நானும் வீட்டுக்கு போறேன்”

“ஹ்ம்ம்ம் சரி!” என்றவாறே ஜெஸ்ஸி எழுந்து கொள்ள சித்தார்த்தும் அவளுடன் இணைந்து அங்கிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினான்.

“ஜெஸ்ஸி நான் ஒரு விஷயம் கேட்கலாமா?”

“கேளுடா இது என்ன புதுசா பர்மிஷன் எல்லாம் கேட்குற?”

“இல்லை நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல யாரையாவது லவ் பண்ணுறியா?”

“வாட்? நான் லவ்வா? நோ நெவர் இம்பாசிபிள்” சிரித்துக் கொண்டே மறுப்பாக தலை அசைத்தவளை பார்த்து

“அப்போ ஏன் இன்னும் இப்படி சிங்கிளாகவே இருக்க?” சற்று குழப்பத்துடன் கேட்டான்.

“சித்! கல்யாணம் என்கிறது என்ன தெரியுமா?”

“இரு மனங்கள் ஒரு மனதாக சேர்வது தான் திருமணம்!” விளம்பரத்தை விவரிப்பது போல சித்தார்த் கூற

சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டியவள்
“ஆன்ட்டி கூட சேர்ந்து நீயும் டிராமா பார்க்க ஆரம்பிச்சுட்ட போல!” என்று விட்டு

“அரேஞ்ச் மேரேஜ் என்கிறது நம்ம தெருவில் நடந்து போயிட்டு இருக்கும் போது தெரியாமல் நாய் வாலை மிதித்து கடி வாங்குற மாதிரி

அதே லவ் மேரேஜ் என்கிறது தெருவில் செவனேன்னு படுத்துட்டு இருக்கும் நாயோட வாயில் காலை விட்டு நம்மளை கடிக்க சொல்லி கேட்குற மாதிரி

அதாவது லவ் மேரேஜோ, அரேஞ்ச் மேரேஜோ எதுவாக இருந்தாலும் கடி வாங்குவது உறுதி அதனால தான் நான் சிங்கிளாகவே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று கூற அவனோ தன் கைகள் இரண்டையும் தட்டத் தொடங்கினான்.

“கல்யாணத்தைப் பற்றி எவ்வளவு நல்லா புரிந்து வைத்து இருக்க சபாஷ்! ஆனா ஒண்ணு ஜெஸ்ஸி உன்னை கட்டாயம் கடி வாங்க வைக்காமல் நான் விட மாட்டேன்”

“அதையும் பார்த்துடலாம் முதல்ல மேக்னா கேஸை முடிப்போம் கிளம்பு” சித்தார்த்தின் தலையில் தட்டி விட்டு ஜெஸ்ஸி தன் ஸ்கூட்டரில் ஏறிக் கொள்ள அவனும் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு அவளுடன் இணைந்து புறப்பட்டான்.

ஜெஸ்ஸியை அவளது வீட்டிற்குள் அனுப்பி வைத்து விட்டு தன் வீடு நோக்கி புறப்பட்டவன் மனமோ அத்தனை நேரம் இருந்த இயல்பான நிலையைத் தொலைத்து விட்டு கலக்கம் கொள்ள ஆரம்பித்தது.

மேக்னாவை பற்றிய உண்மை நிலவரம் தனது பெற்றோருக்கு ஒரு நாள் தெரியவரும் நேரம் அவர்கள் அதை தாங்கிக் கொள்வார்களா என்பது அவனுக்கு தெரியாது.

இதற்கிடையில் தன் மனதிற்குள் அவள் மேல் இருக்கும் ஒரு வித சலனம் வேறு அவனை இன்னமும் பாடாய்ப்படுத்த ஒரு வழியாக பல்வேறு சிந்தனைகளினூடே தன் வீடு வந்து சேர்ந்தவன் அவசர அவசரமாக தன் வேலைகளை முடித்து விட்டு தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டான்.

காலையில் யசோதாவிடம் அந்த புகைப்படத்தில் இருந்த தன் அத்தையை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொண்டு தான் வருவேன் என்று கூறி விட்டு சென்று இருந்தவன் இப்போது அவர்களை பற்றிய தகவல்கள் தெரிந்தும் அதை சொல்ல முடியாமலேயே இத்தனை அவசரமாக தன்னறைக்குள் வந்து சேர்ந்து இருந்தான்.

கையில் தன் தொலைபேசியை வைத்து பார்த்து கொண்டு இருந்தவன் மேக்னாவிடம் நாளை சந்திக்க வருவதாக சொல்வதா? வேண்டாமா? என்று யோசித்த வண்ணம் அமர்ந்திருக்க அந்த நேரம் பார்த்து சரியாக அவனது தொலைபேசிக்கு அழைப்பும் வந்தது.

நேரம் வேறு இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் யார் தன்னை அழைப்பது என்ற யோசனையோடு தொலைபேசியை திருப்பி பார்த்தவன் மேக்னாவிடம் இருந்து அழைப்பு வருவதைப் பார்த்ததுமே முகமெல்லாம் பிரகாசிக்க அந்த அழைப்பை எடுத்தான்.

“ஹலோ! இன்ஸ்பெக்டர் ஸார்!” மெல்லிய குரலில் மேக்னா அழைத்ததோ அவனுக்கு மயிலறகால் வருடுவது போல அத்தனை தூரம் மென்மையாக இருந்தது.

சித்தார்த் எதுவும் பேசாமல் இருக்க சுற்றிலும் ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்டவள்
“ஹலோ! இன்ஸ்பெக்டர் ஸார்! நான் பேசுறது கேட்குதா?” அதேபோல் மெல்லிய குரலில் ஆனால் முன்பை விட சற்று அழுத்தி மீண்டும் அவனை அழைத்தாள்.

“ஆஹ்! ஹான் கேட்குது மேக்னா சொல்லு” அவனது ஒருமை அழைப்பில் சிறிது நேரம் புருவம் சுருங்க அமைதியாக இருந்தவள் பின் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு

“என்ன ஸார் எனக்கு உங்களால் உதவி பண்ண முடியுமா?” என்று கேட்க

நாளை அவளை நேரில் வந்து சந்திப்பதாக கூறி விடலாமா என்று யோசித்தவன் சிறிது நேரம் அவளிடம் விளையாடிப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டே
“ஐ யம் ஸாரி மேக்னா!” குரலில் வருத்தத்தைத் தேக்கிய படி வெளியில் புன்னகையுடன் கூறினான்.

“எ…என்ன ஸார் சொ…ல்லுறீங்…க?”

“என்னால எதுவும் பண்ண முடியாது மேக்னா கடைசியாக நடந்த கொலைக்கு நீங்களே உங்க வாயால் வாக்குமூலம் கொடுத்து இருக்கீங்க அதோடு இது ஜட்ஜ்மெண்ட் கொடுத்த கேஸ் அதை ரீஓபன் பண்ண ஸ்ட்ராங் எவிடன்ஸ் வேணும் அதற்கு சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி உங்களுக்கு மட்டும் தான் தனபாலன் இதை பண்ணதாக தெரியும் வெளி உலகிற்கு தனபாலன் இறந்து போன மனுஷன் என்னால உங்களை அங்கே இருந்து வெளியே கொண்டு வர முடியாது ஷோ இட்ஸ் நாட் பாஸிபிள் மேக்னா!”

“இது நாட் பாஸிபிள் இல்லை இட் கேன் பாஸிபிள்” மேக்னாவின் குரலில் தெரிந்தது உறுதியா? வெறியா? என்னவென்று சித்தார்த்தால் பிரித்தறிய முடியவில்லை.

“மேக்னா என்ன ஆச்சு?”

“இத்தனை நாளா நான் இந்த ஜெயிலில் இருந்து வெளியே வர ஒரு வினாடி கூட நினைத்தது இல்லை எப்போ அந்த தனபாலன் உயிரோடு இருக்கான்னு தெரிந்ததோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் என்ன செய்தாவது இந்த இடத்தில் இருந்து வெளியே போயே ஆகணும் அதற்கு தானாக வந்து சிக்குனது நீங்க என் வட்டத்திற்குள் ஒரு தடவை யாராவது வந்தால் அவங்க என் அனுமதி இல்லாமல் விலகி போக முடியாது அதே மாதிரி நான் அனுமதிக்காமல் யாரும் வெளியே போகவும் முடியாது இப்போ நீங்க என் வட்டத்துக்குள் இருக்குறீங்க இன்ஸ்பெக்டர் என் அனுமதி இல்லாமல் அவ்வளவு சீக்கிரமாக உங்களை நான் அனுப்ப மாட்டேன்”

“மேக்னா நீங்க இப்படி!” அவளது கட்டளையான கண்டிப்பு மிக்க பேச்சில் சற்று நேரத்திற்கு முன் காணாமல் போய் இருந்த பன்மை தானாக அவன் பேச்சில் வந்து ஒட்டிக் கொண்டது.

“எஸ் நான் தான் எனக்கு ஒண்ணு வேணும்னா நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் எனக்கு இங்கே இருந்து வெளியே போகணும் அதற்கு என்ன வேணும்னாலும் பண்ண நான் தயார் நான் எதை செய்யவும் தயங்க மாட்டேன்னு என் டைரியை படிச்சப்போவே உங்களுக்கு தெரிந்து இருக்கும்ன்னு நினைக்குறேன் இல்லையா இன்ஸ்பெக்டர் ஸார்?”

“ஆ…ஆமா!”

“ம்ம்ம்ம் நானா விலகிப் போன நேரம் நீங்களும் உங்க வழியில் போய் இருக்கலாம் ஆனா இப்போ எல்லாம் கால தாமதம் ஆகிடுச்சு நான் சொல்றதை நீங்க செய்து தான் ஆகணும் வேற வழி இல்லை எனக்கு தெரியாமல் வேறு ஏதாவது செய்ய நினைத்தால் அதற்கு அப்புறம் நடக்க போகும் விபரீதங்களை நீங்க தாங்க மாட்டீங்க அதனால என்னை எப்படி வெளியே கொண்டு வர்றதுன்னு மட்டும் யோசிங்க” சித்தார்த்தின் பதிலை எதிர்பாராமலேயே மேக்னா அழைப்பை துண்டித்து இருக்க அவனுக்கோ உடலெல்லாம் சிலிர்த்து போய் இருந்தது.

‘உண்மையாகவே நான் ஒரு சிங்கத்தின் குகைக்குள் போய் சிக்கிட்டேனோ!’ காலமும், நேரமும் தன் கையை விட்டு நழுவிச் சென்ற பின்பே சித்தார்த்திற்கு அந்தளவிற்கேனும் ஒரு சிந்தனை வந்து உதித்தது……