kurumbuPaarvaiyile-29

குறும்பு பார்வையிலே – 29

ஆகாஷ் கேட்பது போல், அவன் சட்டையைப் பிடித்துக் கேட்கும் கோபம் அவளுள் இருக்கத்தான் செய்தது. ஆனால், அந்த கோபம் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது அவள் நெஞ்சில் மறைந்திருப்பது வருத்தம் வருத்தம் மட்டும் தான்.

‘நான் சொல்லித்தான் ஆகாஷுக்கு என் வருத்தம் புரியுமா? இல்லை சொன்னாலாவது புரியுமா?’ என்ற எண்ணம் தோன்ற ஸ்ருதியின் முகத்தில் ஏளன புன்னகை.

“எனக்கு பதில் வேணும் ஸ்ருதி.” ஆகாஷின் முகத்தில், குரலில் பிடிவாதம்.

“உன் பதில் தப்பா இருந்தா கூட, என் பொண்டாட்டி சொன்னா சரி தான்னு ஏத்துக்கிறேன்.” அவன் கேலி மீண்டு கொண்டது.

“எனக்கு இந்த கேலி பிடிக்கும் ஆகாஷ். ரொம்ப பிடிக்கும். ஆகாஷை ரொம்ப பிடிக்கும்.” ஸ்ருதியின் குரல் மீண்டும் உடைந்தது.

“ஸ்ருதி…” பதறிக் கொண்டு அவன் நெருங்க, சரேலென்று விலகிக் கொண்டாள் ஸ்ருதி.

சுவிட்ச் தட்டினார் போல் அங்கே நின்றான் ஆகாஷ்.  “ஆனால், பேச வரவங்க என்ன பேச வராங்கன்னு கூட தெரியாமல் கேலி பேசும் ஆகாஷை, அவன் கேலி பேச்சை எனக்கு பிடிக்கலை. பிடிக்கலை. சுத்தமா பிடிக்கலை.” ஸ்ருதியின் குரல் உயர்ந்தது.

இப்பொழுது ஸ்ருதியின் குரல் உடையவில்லை. கண்ணீர் இல்லை. அவள் அழுத்தம். அவள் கோபம். அவள் உறுதி. அவள் பிடிவாதமும்!

மொத்தத்தில் அவன் விரும்பிய அதே ஸ்ருதி தான் முழு வடிவமாக!

“அதுவம் அந்த பேச்சு. கேலி பேச்சு இல்லை. ஒரு பெண்ணோட தன்மானத்தை சீண்டும், காயப்படுத்தும் பேச்சு. அந்த ஆகாஷை நான் அன்னைக்கு மட்டும் தான் பார்த்தேன். அந்த ஆகாஷை நான் சுத்தமா வெறுக்குறேன்.” என்று ஸ்ருதி பேசப் பேச, அவளை இடைமறித்தான் ஆகாஷ்.

“ஒரே ஒரு  நாள். ஒரே ஒரு தவறு. அதையும் நீ தான் சொல்ற. அந்த ஒரு நாளுக்காக என்னை பிடிக்காமல் போய்டுச்சா ஸ்ருதி?”  அவன் தன் கண்களைச் சுருக்கி கேட்டான்.

ஸ்ருதி மௌனித்தாள். “அதுவும் நான் திட்டமிட்டு எல்லாம் பேசலை ஸ்ருதி. என் டாலி என்கிட்டே அப்பவே கோபப்படுவான்னு எதிர்பார்த்தேன். உன்னை எப்படிப்படியோ சமாதானம் செய்யணுமுன்னு…” ஆகாஷ் சலிப்பாக உதட்டைச் சுழித்தான்.

“அன்னைக்கு உன் பிறந்த நாளைக்கு…” மேலும் ஆகாஷ் பேசவில்லை. ‘இவளிடம் நான் விளக்கம் கூறி, எனக்கான அன்பை யாசிப்பாக பெற வேண்டுமா? இல்லை அவள் புரிதலை யாசிப்பாகப் பெற வேண்டுமா?  இவளாக என்னைப் புரிந்து கொள்ள மாட்டாளா?’ அவன் கோபமும் வைராக்கியமும் சிலிர்த்துக்கொண்டது.

அங்கு மௌனம்!

“ஸோ… அந்த ஒரு நாள் செயலில், என்னை பிடிக்காமல், என்னை விட்டுட்டு எங்கையோ போய்ட்ட ஸ்ருதி? அப்படித்தானே? சொல்லு ஸ்ருதி.” எங்கோ பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியை  தன் பக்கம் திருப்பினான்.

“உங்களை பிடிக்காமல் தான் உங்க மகனை என் வயிற்றில் சுமந்தேனா? இந்த குழந்தை வேண்டாமுன்னு எத்தனை திட்டு? எத்தனை அடி? இதெல்லாம் ஆகாஷை பிடிக்காமல் தான் ஸ்ருதி தாங்கிகிட்டாளா? எல்லாத்தையும், மறந்துட்டு வேற கல்யாணம் செய்ய சொல்லி எனக்கு எத்தனை அழுத்தம், எத்தனை அறிவுரை, எத்தனை வற்புறுத்தல்? ஆகாஷை பிடிக்காமல் தான் ஸ்ருதி அனைத்தயும் ஒதுக்கி, அவனுக்காக காத்திருந்தாளா?” ஸ்ருதி ஆகாஷை பார்த்து கேட்க, ‘இப்படி எல்லாமும் நடந்திருக்குமோ?’ அவன் ஸ்தம்பித்து நின்றான்.

“ஆகாஷ் என்னைக்காவது வருவான். நான் உன் மனசு புரியாமல் பேசிட்டேன். தப்பு தான்னு என் குறும்பா வருவான்னு நான் நினைத்தது எவ்வளவு முட்டாள் தனம்முன்னு எனக்கு பல வருஷங்கள் புரியலை. உங்க தங்கை கல்யாணத்துக்காக தேடி வந்தீங்களே அன்னைக்கு புரிஞ்சிக்கிட்டேன் நான் ஒரு அடி முட்டாள்ன்னு. உங்க மகனை தேடி வீடு வரைக்கும், வந்தீங்களே அன்னைக்கு புரிஞ்சிக்கிட்டேன், ஸ்ருதி எவ்வளவு வித்தியாச வித்தியாசமா பொம்மை செய்தாலும், அவள் துறையில் சாதித்தாலும், உங்க ரோபோட் துறையில் சாதித்தாலும் காதலில் விழுந்த ஸ்ருதி அன்புக்கு ஏங்கும் பொழுது அடி முட்டாள். ஒரு பைத்தியக்காரின்னு.” என்று ஸ்ருதி தன்னை தானே நிந்தித்துக் கொண்டிருக்க, அதைக் கேட்க சகியாமல், பொறுக்க முடியாமல் அவளை இடைமறித்தான் ஆகாஷ்.

“பூனை கண்ணை மூடிட்டா உலகம் இருட்டுன்னு சொல்லுமா! அது மாதிரி, நீ செய்தது சரி. மத்தவங்கெல்லாம் தப்புன்னு சொல்ற.” நக்கலாகக் கூறினான் ஆகாஷ்.

ஸ்ருதி அவனைப் புரியாமல் பார்க்க, “என்னை வேண்டாமுன்னு எங்கயோ விட்டுட்டு காணாமல் போனது நீ. என்னை தப்பு சொல்ற?” என்று ஆகாஷ் கேட்க, “எங்க போய்ட்டேன் ஆகாஷ்? காணாமல் போகணுமுன்னு நினைச்சிருந்தா, இந்த பரந்து விரிந்த உலகத்தில் எனக்கு மாயமா  மறைய தெரியாது? நான் எங்கயோ போய், ஒரு சாதாரண உங்கள் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத வேலையை செய்ய எனக்கு தெரியாது? நான் நினைத்திருந்தால் கார்த்திக் குடும்பத்தை விட்டு விலகி ஓட எனக்கு தெரியாது. நீங்க வேண்டாமுன்னு நினைச்சிருந்தா, நீங்க தேடி வர கூடிய இடத்திலா நான் இருந்திருப்பேன்?” ஸ்ருதி நிதானமாகக் கேட்டாள்.

“உங்க தொழிலில் நான் ஏன் இறங்கணும்?” ஸ்ருதி கேள்வியாக நிறுத்தினாள்.

“அப்படி காதலிச்ச பொண்ணு, உங்களை நம்பி அவளையே ஒப்படைச்ச பொண்ணு, ஒரு நாள் பேச்சில் உங்களை வேண்டாமுன்னு போவாளா? அவ கோபத்தில் என்னவேனாலும் பேசிருக்கட்டும். ஒரு நாளில் போய்ட்டா ஏன்னு யோசிக்கனுமில்லை? யோசிச்சீங்களா? நீங்க ஏன் யோசிக்கலை?” அவள் கேட்க, அவன் புருவங்கள் முடிச்சிட்டது.

“போய்ட்டா… போய்ட்டான்னா? செத்தா போய்ட்டா? இல்லை ஓடி ஒளிஞ்சிகிட்டாளா? கம்பீரமா வளர்ந்து தானே நிக்குறா? உங்களக்கு சமம்மா வளர்ந்து நிக்குறா? அதை ஏன்னு யோசிக்க மாட்டீங்களா?” ஸ்ருதி கிடுக்கு பிடியாக நின்றாள்.

“போன அன்னைக்கும் யோசிக்கலை. இன்னைக்கு வரைக்கும் யோசிக்கலை. உங்களை யோசிக்க சொல்லி நான் கெஞ்சவுமில்லை. கோபம் எல்லாம் எனக்கு இல்லை ஆகாஷ். வருத்தம் தான். பரவால்லை விடுங்க. உங்களுக்கு கிருஷ் இருக்கான். அவனுக்காக நான் இருக்கேன். சந்தோஷமா இருங்க.” கூறிக்கொண்டு, தன் பேச்சு முடிந்தது என்பது போல் படுத்துவிட்டாள் ஸ்ருதி.

“பூனை போல் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டுன்னு சொல்றது யாராம்?” ஸ்ருதியின் முணுமுணுப்பு மீண்டும் ஒலித்தது. அவள்  முகம் திருப்பி படுத்துக்கொண்டாள்.

ஆகாஷின் முகத்தில் புன்முறுவல். ‘செய்றதெல்லாம் தப்பு. சொல்லாமல் போனது தப்பு. குழந்தை விஷயத்தை என்னிடம் மறைச்சது தப்பு. ஆனால், அவ செஞ்சது எல்லாம் சரி போல பேசுறாளே? கெட்டிகாரி தான்!’ தன் மனைவியைச் சிலாகித்துக் கொண்டான்.

‘ஆக, என் டாலி நான் வேணாமுன்னு போகலை? நான் அவளை தேடி வரணுமுன்னு போயிருக்கா? அது வந்தால் நான் உயிரோட இருக்க மாட்டேன்னு மிரட்டல் வேற? இதுல, அவ கோபத்தில் என்ன வேணா பேசிருக்கலாமுன்னு நொண்டி சாக்கு வேற?’ ஆகாஷுக்கு கோபம் வரவில்லை.  அவள் நியாயங்களை நினைத்து, அவனுக்கு அவள் பால் இளகித் தான் போனது.

‘நான் அவளைத் தேடிப் போயிருக்க வேண்டுமோ? அவள் பேசுவதில் நியாயம் இருக்கிறதோ? போயிருந்தால், குழந்தை விஷயம் தெரிந்திருக்கும். ஸ்ருதி சொல்வது போல், அவள் மறைந்து வாழவில்லையே? குழந்தையிடம் என் பெயரைச் சொல்லித் தானே வளர்த்திருக்கிறாள்.’ என்ற யோசனை அவனுள் மெல்லப் பரவ ஆரம்பித்தது.

‘ஆகாஷிடம் கேட்க வேண்டியதை ஓரளவுக்கு கேட்டுவிட்டோம்.’ என்ற நிம்மதியில் ஸ்ருதி, உறங்கிவிட்டாள். உறங்கி விட்ட மனைவியை, தலை முதல் பாதங்கள் வரை பார்த்தான் ஆகாஷ்.

அவள் இரவு உடை கணுக்காலை தாண்டி, அவள் கால்களை காட்டியது.  அதில் கொலுசு இல்லை. ‘முன்னெல்லாம் கொலுசு போட்டிருப்பாளே? யூ.எஸ். ல ஷூ, சாக்ஸ் போடுறதால போடலியோ? இப்ப வாங்கி குடுத்தா என்ன பண்ணுவா?’ அவன் மனம் கேள்வி கேட்க, அவன் அறிவோ, ‘கொலுசை உங்க மகனுக்கு கொடுங்கன்னு சொல்லுவா.’ என்று அவனை பார்த்து நக்கலாக சிரித்தது.

உறங்கிவிட்ட மனைவி அருகே சென்றான் ஆகாஷ். அவள் அருகே அமர்ந்தான். அவள் தலை கோதினான்.

“எனக்கு எது தெரியுதோ, தெரியலையோ டாலி… உன்னால், நம் காதலை பற்றிய கேலியை, நம் உறவை பற்றிய கேலியை தாங்க முடியலை. ஒருவேளை அன்னைக்கு திருமணமாகிருந்தா, இந்த மாதிரி சட்டையை பிடித்திருப்பியோ? என்னவோ? நம் உறவே முழுதாக உறுதியில்லை நீ நினைச்சிருக்க நேரத்தில், என் பேச்சை உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், நீ பண்ணது தப்பு தான் டாலி. அதை நீயா உணர்ந்து என்கிட்டே வருவ.”  அவன் தன் மனைவியின் தூக்கம் கலையாமல் மெல்லப் பேசினான்.

அவள் நெற்றியை நெருங்கி இதழ் பதிக்க எத்தனித்து, விலகிக் கொண்டான். மறுப்பாகத் தலை அசைத்துக் கொண்டான்.

அவள் கன்னங்களை மெதுவாக தட்டிவிட்டு, கிருஷ்க்கு அந்த பக்கம் படுத்துக்கொண்டான் ஆகாஷ்.

ஆகாஷ், ஸ்ருதி இருவருக்கும் கேலி பேசவா, சண்டையிட்டுக் கொள்ளவோ அதன்பின் நேரமில்லை. கார்த்திக், கீதா திருமண பேச்சு, நிச்சய வேலை என அவர்கள் விறுவிறுப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தனர். ஆகாஷும் தேவையில்லாமல் எதுவும் பேசவில்லை. ஸ்ருதியும் எதுவும் பேசவில்லை. அவர்கள் பேச்சு, அலுவலக வேலை, திருமண வேலை, கிருஷை சுற்றி மட்டுமே இருந்தது.

கார்த்திக் வீட்டில், கார்த்திக்கின் தாயார் செல்வி வெளிநாட்டு ப்ரீ வெடிங் ஷூட் பற்றி பேச, கீதாவின் வீட்டில் அனைவரும் யோசனையாக பார்த்தனர்.

“அது சரி ஊரான் வீடு பொண்ணு மாதிரி உங்க வீட்டு பொண்ணு ஆகுமா?” என்று ஸ்ருதி, ஆகாஷின் காதை கடிக்க, நிலைமையை புரிந்து கொண்டு கார்த்திக், “அம்மா… வெளிநாடு போற அளவுக்கெல்லாம் நேரம் இல்லை. எனக்கு ஆஃபீசில் நிறைய வேலை இருக்கு. ஒரே நாளில் இங்கயே முடிச்சிருவோம்.” கார்த்திக் முடித்துவிட்டான்.

‘எதுவும் எல்லை மீறாத வரை, எல்லாம் சரி தான்.’ என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர்.

ஸ்ருதி ஆகாஷை மேலும், கீழும் பார்த்தாள். அந்த பார்வையில் பல அர்த்தம் பொதிந்து இருந்தது.

திருமண வேலைகள் அதிவேகமாக நடந்தது. ஸ்ருதியின் பெற்றோர் கார்த்திக்கின் திருமணத்திற்கு வந்தனர். ஸ்ருதியை முன் வைத்தே, சுமதி அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். சுமதியின் முகத்தில் ஒரு விலகல் தன்மை இருந்தாலும், ஸ்ருதிக்கு மரியாதை கொடுப்பது அவர் செயலில் தெரிந்தது.

பார்வதிக்கும், ஈஸ்வரனுக்கும் தன் மகளின் வாழ்வைப் பற்றிய நிம்மதி பரவியது.  கார்த்திக், கீதாவின் கழுத்தில் அனைவரும் வாழ்த்த தாலியைக் கட்டினான். ஆகாஷின் திருமணத்தைப் பார்க்காத குறையைச் சுமதியும், சங்கரனும் கீதாவின் திருமணத்தில் நிவர்த்தி செய்து கொண்டனர்.

ஆகாஷ், கிருஷை பார்த்தான். வேஷ்டி, சட்டை, ஜீன்ஸ் என பல உடையில் கலக்கிக் கொண்டிருந்தான் கிருஷ்.  ஆகாஷின் முகத்தில் பெருமித புன்னகை.

ஸ்ருதியை பார்த்தான். பட்டுபுடவையில் தேவதை போல் இருந்தாள். திருமண வேலைகளைச் செய்த களைப்பு. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ஆகாஷ் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். களைப்பைத் தாண்டி, அவள் முகத்தில் ஓர் மெல்லிய ஏக்கம்.

‘நம் திருமணமும் இப்படி நடந்திருக்குமோ? அது நடக்காமல் போக, இவள் தான் காரணமோ?’ என்று குற்றம் சாட்டும் நிலையில் ஆகாஷ் இல்லை. ஸ்ருதியை அவனுக்குப் பிடிக்கும். மிகவும்!

இங்கு வந்த நாளிலிருந்து, அவனுக்கு இன்னும் பிடித்துத் தான் போயிருந்தது. அவள் நிமிர்வை, சுயமரியாதையை அவள் எங்கும் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதே நேரத்தில் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்ளவில்லை.

அவளுக்கு ஜூஸ் எடுத்து சென்றான் ஆகாஷ். அங்கிருந்த பலரின் கண்கள் ஆகாஷின் செய்கையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. சந்தோஷமாகவும், பொறாமை உணர்வுடனும்.

ஸ்ருதி கேள்வியாக பார்க்க, “ஜூஸ் மீதி இருந்தது. அது தான்.” என்று ஆகாஷ் புன்னகைக்க, சிரித்துக்கொண்டாள் ஸ்ருதி.

ஜூஸ் குடித்தது அவளுக்கு தெம்பாக இருக்க, “மீதி ஜூஸ் இவ்வளவு ருசியா இருக்குமா?” அவள் கேள்வியாக நிறுத்த, “அதை கொடுத்தது நான் இல்லையா? என் அன்பும், காதலும் அதில் கலந்திருக்கும். உனக்கும் அது ரொம்ப பிடித்திருக்கும். அது தான் ருசித்திற்கும்.” என்று அவன் அடுக்க, “ஜூஸ் படு சுமார்.” என்று கூறினாள் ஸ்ருதி.

“பேச்சு மாற கூடாது டாலி!”என்று அவன் மிரட்ட, ‘இப்பொழுதெல்லாம் இவன் டாலி என்ற அழைப்பு, அடிக்கடி வருகிறது. அதாவது, உன் மேல் எனக்கு கோபம் இல்லை என்று சொல்லாமல் சொல்வது போல்.’ என்று எண்ணிக்கொண்டாள் ஸ்ருதி.

“இப்படி எல்லாம் சைட் அடிக்காத டாலி… நான் அப்படியே…” என்று கண்சிமிட்டினான் ஆகாஷ். ஸ்ருதி தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

கார்த்திக்கும், கீதாவும் தம்பதிகள் சகிதம் இருக்க, ‘நம்ம கல்யாணம் முடிந்த அன்னைக்கு என் கிப்ட்டை பிரித்து பாருங்க.’ வாலெண்டைன்ஸ் டே அன்று ஸ்ருதி கூறியது நினைவு வர, ‘இன்று பிரித்து பார்த்து விட வேண்டும்.’ என்று முடிவு எடுத்துக்கொண்டான் ஆகாஷ்.

அன்று இரவு, எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஸ்ருதி சோர்வாக உறங்கிவிட்டாள். கிருஷும் கண் அயர்ந்துவிட்டான்.

ஆகாஷ், அவள் கொடுத்த பரிசுப்பொருளை பிரித்து பார்த்தான். அவன் கண்கள் கலங்கியது. அவன் உதடுகள், “டாலி… டாலி… டாலி… நான்… நான்…” என்று மேலே பேச முடியாமல் தடுமாறியது.

குறும்புகள் தொடரும்…