Kadhal 25

Kadhal 25

டிசிபி எட்வர்டின் உதவிக்கு அமைய சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி ஒரு தனிக் குழுவை அமைத்து தனபாலன் மற்றும் சுதர்சனை கண்காணிக்கும் வேலையை செய்து வந்தனர்.

நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டிருக்க அதற்கிடையில் அவர்களை சட்டத்திற்கு முன்பு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தக் குழுவில் இருந்த அனைவரும் மும்முரமாக திட்டம் தீட்டத் தொடங்கினர்.

இன்னொருபுறம் அந்த ரகசிய குழு இருக்கும் விடயம் காவல்துறையில் இருக்கும் மற்ற எந்த அதிகாரிகளுக்கும் தெரியாமல் பாதுகாப்பாக மறைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

அந்த வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பித்ததிலிருந்து சுதர்சன் தனபாலனை எப்போதும்போல ஒவ்வொரு நாளும் சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

மணிவேலும் தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்களுக்கு உதவி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி இருக்க இந்த வழக்கு முடியும் வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் முடிவு எடுத்திருந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவு எடுத்து அதற்கேற்ப நடந்து கொண்டிருக்க மறுபுறம் அவர்களுக்கே தெரியாமல் ஒரு திட்டம் நடந்து கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றத்தில் தனபாலன் உயிருடன் இருப்பதற்கான சாட்சியங்களை கொண்டுவர சொன்னதை மணிவேல் சுதர்சனிடம் தெரிவித்திருக்க உடனே அவரை அந்த ஊரை விட்டு வெளியூருக்கு மாற்றுவதற்காக முடிவெடுத்தவர் அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி பல நாட்கள் கழித்து தனபாலனை சந்திக்க அந்த கட்டடத்தை நோக்கி சென்றார்.

ஏற்கெனவே அந்த கட்டிடத்தை சுற்றி எப்போதும் காவலுக்கு இருந்த வந்த அந்த ரகசிய குழுவினர் சுதர்சன் தனபாலனை சந்திக்க வருவதை பார்த்துவிட்டு அவர்கள் இருவரையும் ஒன்றாக கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உடனடியாக அந்த தகவலை சித்தார்த்திற்கு தெரிவித்திருக்க அந்த தகவலை கேள்விப்பட்டவன் உடனே ஜெஸ்ஸியுடன் அந்த இடத்தை வந்து சேர்ந்தான்.

பல நாட்களாக சித்தார்த் எதற்காக காத்திருந்தானோ அது இன்றைக்கு அவனுக்காக நிறைவேற காத்திருந்தது.

பல பேரின் வாழ்க்கையை அழித்த ஒரு கொடியவனைப் பிடித்து அவனுக்கு தன் கையால் தண்டனை வாங்கிக் கொடுத்து அந்த பேரும் புகழும் தனக்கு வர வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு கண்டவன் அது உண்மையாகத்தான் வாழ்வில் நடக்கப் போவதை எண்ணி ஒரு பக்கம் மகிழ்ச்சி கொண்டது மட்டுமின்றி மறுபக்கம் மேக்னா ஆசைப்பட்டது போல அந்த ஜெயிலில் இருந்து வெளியே வரப் போகிறாள் என்ற சந்தோஷத்துடனும் தன் அடுத்த அடியை எடுத்து வைக்க காத்திருந்தான்.

சுதர்சன் மற்றும் தனபாலன் யாருக்கும் தெரியாமல் இரவோடிரவாக அந்த ஊரை விட்டு வெளியேற எண்ணி தங்கள் உடைமைகளை எல்லாம் தயார்படுத்தி விட்டு ஊர் அடங்கும் நேரத்திற்காக காத்திருக்க சரியாக அவர்கள் வெளியேறும் நேரம் பார்த்து சித்தார்த் தலைமையிலான குழு அந்த இடத்தை சுற்றிவளைத்தது.

அத்தனை சீக்கிரத்தில் மணிவேலின் உதவியை தாண்டி காவல்துறையினர் தங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்திராத தனபாலன் மற்றும் சுதர்சன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க சித்தார்த்தோ நான் எதிர் பார்த்ததை செய்து விட்ட வெற்றிகளிப்போடு அவர்களை கைதுசெய்து அழைத்துச் சென்றான்.

அதன் பிறகு அவர்கள் இருவரையும் அடுத்த வழக்கு விசாரணையின் போது ஆஜர் செய்ய தனபாலன் உயிருடன் இருப்பதை பார்த்த வெளியாட்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்து போயினர்.

அதன் பிறகு தொடர்ந்து வந்த ஒன்று இரண்டு வாரங்களுக்கும் தனபாலனின் இந்த செயலே எல்லோர் மத்தியிலும் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வந்தது.

தன் பல நாள் எதிராளியை இத்தனை நாட்கள் கழித்து நேருக்கு நேராக பார்த்த கோபத்தில் மேக்னா, சுதர்சன் மற்றும் தனபாலன் ஒருவரையொருவர் பார்வையாலே கொன்று விடும் அளவுக்கு அத்தனை வெறியுடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.

மேக்னா மீதான கொலை வழக்கில் தற்போது திருப்பமாக தனபாலன் ஆஜர்படுத்தப்பட்டு இருக்க அவர் மீதான சந்தேகம் முழுமையாக ஊர்ஜிதப்படுத்தப்படாத நிலையில் அந்த வழக்கு மீண்டும் இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனக்காக ஒவ்வொரு விடயங்களையும் இத்தனை தூரம் சிரத்தை எடுத்து செய்யும் சித்தார்த்தை பார்த்து மேக்னாவிற்கு மனதிற்குள் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு பரவ ஆரம்பித்தது.

அவனை மதிக்காமல் பல முறை தான் மிரட்டி இருந்தும் தன் மேல் எந்த ஒவ்வொரு கோபத்தையும் காட்டாமல் தனக்காக அவன் எவ்வளவு வேலைகள் செய்கின்றான் என்று எண்ணி வியந்து போனவள் இதற்கு பதிலாக தான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போனாள்.

அவன் தனக்காக தான் இத்தனை தூரம் பாடுபடுகிறான் என்று நினைத்திருந்தவளுக்கு தெரியவில்லை இந்த உதவியில் சித்தார்த்துக்கும் தனிப்பட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது.

இத்தனை நாட்களாக எந்த நபரையும் பார்த்து சலனப்படாத அந்த வலிமையான மனம் கொண்ட பெண்ணின் மனது முதன்முதலாக இன்று சித்தார்த்தைப் பார்த்து வலிமையிழந்து சலனம் கொள்ள ஆரம்பித்தது.

அந்த வித்தியாசமான ஒரு உணர்வை கூட வேறு பிரித்து அறிந்து கொள்ளமுடியாமல் போனவள் மனதிற்குள் அவள் அனுமதியின்றியே சித்தார்த் வந்து குடிகொண்டிருந்தான்.

ஒரு புறம் மேக்னா சித்தார்த்தை பற்றியே எண்ணிக் கொண்டிருக்க மறுபுறம் அவனோ தனபாலனுக்கு எதிரான தகுந்த சாட்சியங்களை திரட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு அடுத்த நாளே கொலை நடந்த இடத்துக்கு ஜெஸ்ஸி மற்றும் தங்கள் குழுவினருடன் இணைந்து புறப்பட்டுச் சென்றான்.

ஏற்கனவே அந்த இடத்தில் பல தடவைகள் ஜெஸ்ஸியினால் அந்த கொலைக்கு தேவையான சாட்சியங்கள் தேடப்பட்டு இருந்தாலும் இறுதி முயற்சியாக இன்னொரு தடவை சென்று பார்க்கலாம் என்று அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

அந்த வீட்டின் வெளிப்புறமாக இருந்த பகுதியில் ஒவ்வொரு இடங்களையும் பொறுமையாக, நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்துக் கொண்டே வந்த சித்தார்த்தின் கண்களில் தனபாலனின் விசிட்டிங் கார்டு மற்றும் ஒரு ஆடையின் கிளிஞ்சல் ஒன்றும் தென்பட்டது.

மேக்னா தனபாலனின் கீழே வேலை செய்ததால் அந்த கார்டு அங்கே கிடக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் பின்னர் எதற்கும் அது உபயோகமாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தோடு அதை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்தான்.

அவர்கள் எதிர்பார்த்து வந்ததை போல அந்த இடத்தில் தனபாலனுக்கு எதிராக எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் போகவே மனம் சோர்ந்து போனவர்கள் தங்கள் ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டனர்.

சித்தார்த் தான் கண்டெடுத்த விசிட்டிங் கார்டு மற்றும் அந்த துணியை ஜெஸ்ஸியிடம் கொடுத்து அதில் ஏதாவது தடயங்கள் தமக்கு உபயோகமாக இருக்கின்றதா என்று பார்க்கச் சொல்ல அவளும் சரி என்று விட்டு அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அதன்பிறகு வந்து ஒரு சில நாட்களும் அவனை அவனது வேலைகள் தங்களுக்குள் மூழ்கடித்து கொண்டது.

அன்றிலிருந்து இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவனை தொடர்பு கொண்ட ஜெஸ்ஸி அந்த விசிட்டிங் கார்டு மற்றும் அந்த ஆடை கிளிஞ்சல் மேக்னாவினுடையது அல்ல கொலையாளியிடமிருந்து கிடைக்கப்பெற்றது என்று கூறியிருக்க அதைக் கேட்டவன் முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக மாறியது.

“ஜெஸ்ஸி நீ சொல்றது உண்மையா?” அவள் கூறியதை இன்னும் முழுமையாக நம்பமுடியாமல் சித்தார்த் கேட்கவும்

“உண்மையாகத் தான் சித்! நான் கூட இதை எதிர்பார்க்கவே பார்க்கல ஆரம்பத்தில் அது மேக்னாவோட கார்டாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் இப்போ டெஸ்ட் பண்ணி பார்த்ததில் தனபாலன் தவறுதலாக விட்டுச் சென்றதுன்னு உறுதியாகி இருக்கு அதோடு இதில் மூணு பேரோட ப்ளட் சாம்ப்ள் கிடைத்தது இரண்டு சாம்ப்ள் வள்ளி மற்றும் நடராஜனோடது அப்புறம் இன்னொன்னு தனபாலனோடது அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் கைரேகை தனபாலனோடது தான்னு கன்பார்ம் ஆகி இருக்கு இவ்வளவு நாள் நான் இதை எப்படி பார்க்காமல் விட்டேன் என்றே தெரியல நான் ஆரம்பத்தில் இன்வெஸ்டிகேஷன் பண்ணும்போது இதைக் கவனிக்காமல் விட்டு எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கும்போதே ரொம்ப கவலையா இருக்கு” மனம் நிறைந்த வருத்தத்துடன் அவள் கூறவும்

அதைக் கேட்டுக் கொண்டு நின்றவன் “பரவால்ல விடு ஜெஸ்ஸி! இவ்வளவு பெரிய வழக்கு இந்த ஒரு சின்ன விசிட்டிங் கார்டில் மறைந்து இருந்து இருக்கு பாரேன் அதோட நான் வந்ததுக்கு அப்புறம்தான் இதை நீ கண்டுபிடிக்கனும்னு இருந்திருக்கு போல!” தன் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு கூற

அவளோ
“டேய்! டேய்! இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.

அதன் பிறகு சிறிது நேரம் அவளுடன் பேசிவிட்டு தன் தொலைபேசியை வைத்தவன் தான் எதிர்பார்த்ததைப் போல எல்லா விடயங்களும் தங்களுக்கு சாதகமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அடுத்த விசாரணைக்கான நாளுக்காக வெகு ஆவலுடன் காத்திருந்தான்.

*********************************************

அன்று சித்தார்த் மற்றும் மேக்னா எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த வழக்கின் விசாரணைக்கான இறுதி நாள்.

இன்றைய விசாரணையின் பின்னர் எப்படியும் சுதர்சன் மற்றும் தனபாலன் தண்டனை பெற்று மேக்னா வெளியே வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் இருந்த சித்தார்த் அன்றைய விசாரணை நேரத்தின்போது நீதிமன்றத்திற்கு யசோதா மற்றும் தாமோதரனை அழைத்துச்சென்றான்.

எதற்காக தாங்கள் வரவேண்டுமென்று கேட்ட தன் பெற்றோரிடம் எல்லாம் நல்ல விடயமாக தான் என்று கூறியிருந்தவன் அவர்களிடம் மேக்னாவைப் பற்றி, அவளது பெற்றோரைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கே அழைத்துச் சென்றான்.

சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி எதிர்பார்த்தது போல சுதர்சன் மற்றும் தனபாலனுக்கு எதிரான சாட்சியங்கள் தகுந்தமுறையில் நிரூபிக்கப்பட்டு விட மேக்னா மீது விதிக்கப்பட்டிருந்த தண்டனை நீக்கப்பட்டு ஆள் மாறாட்டம், போதைப்பொருள் கடத்தல் இன்னும் பல குற்றங்கள் செய்ததன் பேரில் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்கிடையில் மேக்னா தனக்கு செய்த அநியாயங்களை பற்றி தனபாலன் எவ்வளவு தூரம் கூற முயன்றும் அங்கிருந்தவர்கள் அவர்களது பேச்சை கேட்கவில்லை.

சுதர்சன் மாத்திரம் தான் மேக்னாவால் கடத்தப்பட்டதைப்பற்றி ஒரு சிறு வார்த்தையேனும் அந்த இடத்தில் வாய் திறந்து கூறாமல் இருக்க சித்தார்த் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட ஜெஸ்ஸி மாத்திரம் அதை தன் மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

அதில் ஏதோ மர்மம் இருப்பதாக அவளுக்கு தோன்றவே அந்த விடயத்தைப் பற்றி பிறகு சித்தார்த்திடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் தான் நினைத்ததை நடத்தி விட்ட வெற்றிக் களிப்போடு நின்று கொண்டிருந்த தன் நண்பனை வந்து ஆரத்தழுவிக்கொண்டு
” உன்னை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சித்தார்த்! நீ ஆசைப்பட்டது போலவே தப்பு பண்ண ஒரு பெரிய வில்லனை பிடித்து கொடுத்து அவனுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்துட்ட ஃபைனலி நீ ஹீரோ தான்னு நிரூபித்து காட்டிட்டே!” சிரித்துக்கொண்டே கூறவும்

அவளது தலையில் செல்லமாக தட்டியவன் “ஹலோ மேடம்! நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் நான் எப்பவுமே ஹீரோ தான்!” பதிலுக்கு தன் சட்டை காலரை உயர்த்தி விட்டபடியே கூறினான்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வந்துசேர்ந்த யசோதா மற்றும் தாமோதரன்
“எங்க ரெண்டு பேருக்கும் ஏதோ முக்கியமான விஷயம் சொல்றதா சொல்லி இங்கே வரச் சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” ஒருமித்த குரலில் கேட்கவும்

புன்னகையுடன் அவர்களைத் திரும்பிப் பார்த்தவன்
“ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க” என்றுவிட்டு சற்றுத்தள்ளி நர்மதாவுடன் பேசிக்கொண்டு நின்ற மேக்னாவையும், நர்மதாவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்தான்.

“அம்மா அப்பா இது தான் மேக்னா!” தன் தாய், தந்தையின் புறம் பார்த்து கூறியவன்

மேக்னாவின் புறம் திரும்பி
“மேக்னா இதுதான் என்னோட அம்மா அப்பா!” அவர்கள் எல்லோரையும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

“ஓஹ்! வணக்கம் ஆன்ட்டி! வணக்கம் அங்கிள்!” மேக்னா புன்னகையோடு அவர்கள் இருவரையும் பார்த்து இரு கரம் கூப்பி வணங்க

யசோதா மற்றும் தாமோதரன் பதிலுக்கு அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு சித்தார்த்தின் புறம் திரும்பி
‘என்ன இது?’ என்பது போல கேள்வியாக நோக்கினார்.

“அம்மா நீங்க என்கிட்டஒரு இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னாடி ஒரு போட்டோ காட்டுனீங்க ஞாபகம் இருக்கா?” சித்தார்த்தின் கேள்வியில் தாமோதரனை சிறிது தயக்கத்துடன் திரும்பி பார்த்தவர்

மறுபடியும் அவன் புறம் திரும்பி
“ஆமா இப்ப எதற்கு அது?” என்று கேட்டார்.

“என்ன போட்டோ?” தாமோதரன் அவர்கள் இருவரையும் ஒன்றும் புரியாமல் பார்க்க

தன் சட்டைப்பையில் இருந்த போட்டோவை எடுத்து அவரிடம் நீட்டியவன்
“இது யாருன்னு தெரியுமா அப்பா?” என்று கேட்டான்.

யோசனையோடு அந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர் அதிலிருந்து தனது தங்கையின் குடும்பத்தை பார்த்ததும் பேச வார்த்தைகளின்றி அமைதியாகிப் போனார்.

“அம்மா உங்களுக்கு சுந்தரி அத்தையோட வீட்டுக்காரர் இல்லேன்னா அவங்க பொண்ணோட பேரு ஞாபகம் இருக்கா?” சித்தார்த் தன் அன்னையை கேள்வியாக நோக்கவும்

அவனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவர்
“இல்லை சித்தார்த் எனக்கு சுந்தரியோட பேர் மட்டும்தான் ஞாபகம் இருக்கு அவ பொண்ணு பேரோ, அவ வீட்டுக்காரர் பேரோ ஞாபகம் இல்லை” முகம் வாட சிறிது கவலையுடன் கூறினார்.

அவர்கள் எல்லோரும் பேசுவதை கேட்டுக்கொண்டு நின்ற மேக்னா ஏதோ அவர்களது குடும்ப விடயம் போல என்று எண்ணியபடி வேறு புறம் திரும்பி பார்த்துக் கொண்டு நிற்கையில் தனது அன்னையின் பெயர் அடிபடுவதை பார்த்து அதிர்ச்சியாக சித்தார்த்தை நோக்கினாள்.

மேக்னாவின் பார்வை தன் புறம் இருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளின் புறம் திரும்பி புன்னகைத்து விட்டு தன் கையிலிருந்த புகைப்படத்தை
“மிஸ் மேக்னா! இது உங்க போட்டோ உங்க டைரியிலிருந்து எனக்கு கிடைத்தது” என்றவாறே அவளிடம் கொடுக்க யசோதா மற்றும் தாமோதரன் உச்சகட்ட அதிர்ச்சியோடு அவளை திரும்பிப் பார்த்தனர்.

“சித்…சித்…தார்த்! அப்படின்னா இது?” அவனது அன்னை கண்கள் கலங்க தடுமாற்றத்துடன் மேக்னாவின் புறம் கைநீட்டி காட்டிய படி கேட்க

அவரருகில் வந்து அவரது தோளில் ஆதரவாக கையை போட்டு கொண்டவன்
“ஆமாம்மா இதுதான் சுந்தரி அத்தையோட ஒரே பொண்ணு மேக்னா” என்று கூற

அவரோ
“மே..க்..னா!” கைகள் நடுங்க அவளை நோக்கி தன் கையை கொண்டு சென்று விட்டு பின்பு சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக தன் கணவரின் புறம் திரும்பி பார்த்தார்.

அங்கே தாமோதரன் சித்தார்த் கூறியதை எல்லாம் கேட்டு கல்லென இறுகிப் போய் நின்று கொண்டிருந்தார்.

பல வருடங்கள் கழித்து தெரிந்து கொண்ட உண்மையின் தாக்கத்தில் யசோதா, தாமோதரன் மற்றும் மேக்னா வெவ்வேறுபட்ட மன நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தோடு அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றனர்………

error: Content is protected !!