m7

மகிழம்பூ மனம்

மனம்-7

 

திருமணம் முடிந்த கையோடு, மனைவியுடன் வீடு வந்து சேர்ந்திருந்தான், யுகேந்திரன். பத்து நாள் தனிமையைப் போக்க வந்துவிட்டவளை எண்ணி, மனம் கொள்ளா மகிழ்ச்சி இருந்தாலும், அதை அவளிடம் வெளிக்காட்டாமல், தவிர்த்து, ஆராய்ச்சிக் கண்ணோடு அவளறியாமல் பார்வையாலேயே அணுகியிருந்தான்.

அவள் தன்னைத் தேடாத கோபம் இருந்தாலும், தன் தேடலை நிறுத்தவில்லை.

இதையறியாத யாழினி, கணவனின் அமைதி, தவிர்ப்பு ஏனென்று தெரியாமல் குழம்பித் தவித்தாள்.

கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியவன், ஆடத் தொடங்கியிருந்தான்.  ஆட்டத்தில் கலந்து கொள்ளாதவளோ, கண்களில் கலக்கம் குடிவந்திருக்க கவலையோடு நேரத்தை நெட்டித் தள்ளினாள்.

இருபது நாட்களுக்கு முன்பே ஒரு முடிவுக்கு வந்தவன், தன்னவளை பெயர் சொல்லி அழைக்கத் துவங்கியிருந்தான்.  அவனது மனமாற்றத்தினால், உறவில் வந்த முன்னேற்றம் அப்படி அழைக்கக் சொல்லியது என்பதைக்கூட அறியாதவளாய், வளைய வந்திருந்தாள்.

ஊரிலிருந்து வந்து வாரமொன்று கடந்தும், இயல்பு நிலைக்கு வரஇயலாமல், ஏதோ ஒன்று பெண்ணின் மனதை வாட்டியது.  ஊருக்குச் சென்று பத்து நாட்கள் அவனைத் தேடாத தான் மட்டுமே, அவனது தற்போதைய செயல்களுக்கு மூலகாரணம் என்பதை அறியாதவளாய் மனதோடு அரற்றினாள்.

இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்போடு, சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கருத்தில் கொண்டு விடுப்பு எடுத்து வீட்டிலேயே தங்கிவிட்டான், யுகேந்திரன்.

விடுப்பு பற்றி எதையும் கூறாமல், காலையில வழக்கம்போல எழுந்து குளித்து, உண்டுவிட்டு, அறைக்குள் சென்று, பகலில் படுத்திருந்தவனை அதிசயமாகப் பார்த்து, “ஏன் உடம்புக்கு எதுவும் முடியலயா? இன்னிக்கு கவன்மெண்ட் ஹாலிடே கூட இல்லையே… என்ன செய்யுது? டாக்டர்கிட்ட போயிட்டு வருவமா?”, எனத் தயங்கியவாறே கணவனைக் கேட்டிருந்தாள் பெண்.

வாண்டடாக வந்து சிக்கிக் கொண்ட தனது மனவாட்டியை விட்டுவிடும் எண்ணமில்லாதவன், “ஆமா முடியல…! எல்லாம் உன்னாலதான்…! நீ பாட்டுக்கு பத்து நாள் விட்டுட்டுப் போயிட்ட…! வெளிச் சாப்பாடு எதுவும் எனக்கு ஒத்துக்கல அதான் முடியலனு வீட்டுல இருக்கேன்!”, என யாழினியிடம் கிண்டல் பேசினான்.

சித்திபெண்ணின் திருமணத்திற்கு வந்தபோது, எந்த சுணக்கமும் இல்லாமல் இருந்தவனை நினைவு கூர்ந்தவள், “கல்யாணத்துக்கு வந்தப்போ எல்லாம் நல்லாத்தானே இருந்தீங்க! இப்ப என்ன திடீர்னு?”, என்று தயங்கி பேசினாள்.

“அங்க வச்சி முடியலனு எப்டி சொல்லமுடியும்?  அதான் சொல்லலை!”, யுகேந்திரன்

“முடியலைனா… எப்பனாலும், எங்கனாலும் சொல்லத்தானே செய்வோம்?”, என்று துளைக்கும் பார்வையோடு கேட்டவளை

“ம்… ஏன்… எல்லாரும் முடியாதவனை கல்யாணம் பண்ணியிருக்கனு கேட்டே, கொஞ்ச நஞ்ச என் நல்ல மூடையும் அப்செட் பண்ணவா?”, யுகேந்திரன்.

“அய்யயோ…! வெளிச்சாப்பாடு ஒத்துக்கலைன்னு முன்னமே சொல்லியிருந்தா…! நான் அப்பவே கிளம்பி வந்திட்டுருப்பேனே, எதுக்கு முன்னயே சொல்லல…! சரி.  இப்ப என்ன செய்யுது?  அதையாது சொல்லுங்க…! எனக்குப் பயமா இருக்கு”, என உரிமையாகவே யாழினி கேட்டாள்

“நெஞ்செல்லாம் எனக்கு ஒரே பாரமா இருக்கு!  மனசெல்லாம் ஏதோ விரக்தியா இருக்கு! இப்ப சொல்லிட்டேன்!  அதான் இங்க வந்திட்டல்ல…! எங்க சரி பண்ணுவேன்!”, என எடக்காக கேட்டிருந்தான் யுகேந்திரன்.

கேள்வியாக நோக்கிய தன் மனையாளை,

“முடியலல்ல…! போ. அந்த அடுப்படியவே போயி கட்டிக்கோ…!”, என்று கூறி குப்புறப்படுத்து கண்களையும் மூடிக் கொண்டான்.

‘என்னடா இது? நமக்குத்தான் நெஞ்செல்லாம் பாரமா, விரக்தியா இருக்குனா!, இவரும் இப்ப அதையே சொல்றாரு!’, என்று எண்ணியவளாய். அறையை விட்டு வெளியே போனவள் யோசித்தாள்.

மனம் யுகேந்திரனின் வயப்பட்டிருந்தாலும், ஒரு பெண் தானாகவே முன்வந்து தன்மனதைத் திறக்கத் தயங்கும் சமுதாயத்தில் வளர்ந்தவளாதலால், யாழினியும் தயங்கினாள்.

ஏதோ புரிவதுபோல தோன்றினாலும், புரியாமலும் இருந்தது.

என்ன செய்யலாம்? என்று நீண்ட நேரம் யோசித்தபடியே மனம் ஒருபுறம் இயங்க, கை அடுக்களை வேலைகளைச் செய்த வண்ணம் இருந்தது.

‘இந்த அத்தையாவது போனைப் போட்டா…, இந்த துரையப் பத்தி போட்டுக் கொடுக்கலாம்.  அத்தை ஏன் இன்னும் பேசாம இருக்காங்க?’, என்று எண்ணியவளாய் மணியைப் பார்க்க, இன்னும் ஒரு மணித் தியாலம் அதற்கு உள்ளது என்பதை உணர்ந்து, சோர்ந்து போனாள் பெண்.

சற்றுநேரம் கழித்து, எழுந்த காலிங் பெல் சத்தத்தில் வந்து கதவைத் திறந்தவள், கொரியர்காரனைப் பார்த்து, ‘யாருக்கு? என்ன கொரியர்?’, என்று யோசித்தபடியே கொரியரை வாங்கினாள்.

தந்தையிடமிருந்து வந்திருந்ததைப் பார்த்து, ‘போன வாரந்தான ஊருக்குப் போயிட்டு வந்தோம்.  அப்பவும் ஒன்னும் சொல்லலையே.  இப்ப என்ன இது?’, என்று யோசனையாக வாங்கிக் கொண்டு திரும்பியவள், காலிங்பெல் சத்தத்தில் அறையிலிருந்து வெளிவந்தவன், தனக்குப் பின்னால் நின்றிருந்ததை கவனிக்க மறந்திருந்தாள். திரும்பிய வேகத்தில் தனக்குப் பின்னால் நின்றவன் நகராமல் நின்றிருக்க, எதிர்பாராமலேயே தன்னவனின்மேல் இடித்திருந்தாள்.

வேகமான அவளின் செயலில், மோதியதை உணர்ந்து, பதறி விலகியவளை, தன் இரு கரங்களால் அணைத்துப் பிடித்திருந்தான் யுகேந்திரன்.

எதிர்பாரா தருணத்தில் நடந்த செயலின் வீரியத்தை யாழினி உள்வாங்க சற்றுத் தடுமாற, எந்தத் தடுமாற்றமும் இன்றி, அணைத்தவளை விடுவிக்காமல், ஒரு கையால் அவளை விடாமல் அணைத்தபடியே, மறுகையால் அணைப்பில் இருந்தவளின் கையில் இருந்த கவரை யோசனையோடு வாங்கியிருந்தான் அந்தக் கள்ளன்.

“என்ன கொரியர் யாயு? எங்க தா பாப்போம்”, என்று இயல்பாகப் பேசியவாறு, கையிலிருந்ததை வாங்கி கவரில் இருந்த முகவரியை திருப்பிப் பார்த்தவன், “இந்தா உனக்குத்தான்! உங்க அப்பா ஏதோ அனுப்பியிருக்கார்”, என்று அவளிடமே திருப்பிக் கொடுத்திருக்க

இதுவரை (யாழினியை) யாழு… யாழு என்று தன்னை அழைக்கிறான் என்று எண்ணியிருந்தவளுக்கு, அணைப்பிற்குள் அவனோடு நெருக்கமாக இருந்தபோது, அவனின் அழைப்பின் அட்சரம் பிசகாமல் காதில் விழுந்திருந்த ‘யாயு’வில் கவனம் நின்று, உண்மை அறிந்திருந்தாள். 

‘அது என்ன யாயு?’ என்று யோசனையோடு கணவனைப் புரியாத பார்வை பார்த்திருந்தாள் பெண்.

“என்ன பார்வை? பிரி…! எதாவது அவசரமா இருக்கப் போகுது!”, என்று கூறினான்.

கணவனின் அணைப்பு புதிது, அதிலும் யாயு என கணவன் தன்னை அழைப்பதை அறியாமல், இதுநாள் வரை ‘யாழு’ என்று அழைக்கிறான் என்று உவகை கொண்டிருந்தவளுக்கு, ஏனோ ஏமாற்றமாகத் தோன்றினாலும், ‘யாயு’விற்கான அர்த்தம் உடனே தெரிந்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுத்திருந்தது.

நீண்ட நேரமாகியும் எந்த செயலையும் செய்ய விடாமல் மூளை ஒத்துழைக்க மறுத்திருக்க, மனைவியின் செயல் கண்டு, அணைத்தவாறே சோஃபாவின் அருகே அழைத்துச் சென்று, “இப்டி உக்காரு… முதல்ல…”, என்று தன்னருகே அமரச் செய்துவிட்டு, மனைவியின் கையில் இருந்த கவரைக் காட்டி, “நீ பிரிக்கிறியா, இல்லை நான் பிரிக்கவா?”, என்று கேட்டான்.

பேச்சை மறந்து ஊமையாகிப் போயிருந்தவள், கையில் இருந்ததை அவனிடமே நீட்ட, வாங்கியவன், பிரித்து அதிலுள்ள செய்தியை நிதானமாக வாசித்தான்.

“வாவ் கன்கிராட்ஸ் டியர்”, என்று அவளின் தோளை தன்னோடு இழுத்தணைத்து வாழ்த்துக் கூறினான்.

“சொல்லவேயில்ல…! யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்னு…!

பயங்கர படிப்ஸ்ஸா நீ? அப்ப… ஏன் நீ பீஜி படிக்கல?”, என்று ஆர்வமாக அடுத்தடுத்த கேள்வி கேட்டவனை, மலங்க மலங்கப் பார்த்தாளேயொழிய, பதில் பேச முனைந்தாலும், அவளால் முடியவில்லை.

தேகம் தொட்டவனின் உள்ளத்தில் மறைந்து கிடந்த உணர்வுகளை, தொடுகை மூலமாக தன்னவளுக்கு கடத்தியிருப்பானோ? என்னவோ!  பெண்ணவள் மனது தன்னவனின் அருகாமையில் மயங்கித் திளைத்து மூழ்கத் துவங்கியிருந்தது.

ஆனாலும், வாழ்த்துக் கூறியவனுக்கு, நன்றி கூற எண்ணியவளாய், “தேங்க்ஸ்ங்க”, என்று கூறியவளின் குரலின் நடுக்கம் கண்டவனாய், “என்ன யாயு?  சந்தோசமான விசயந்தான…! அதுக்கு… ஏன் அப்செட்டா தெரியற?”, என்று யுகேந்திரன் கேட்கவும்

“’யாயு’ன்னா என்னது?”, என்று தயங்கிக் கேட்டவளை, புரியாமல் பார்த்தவன், சில நொடியில் வாய்விட்டுச் சிரித்தபடியே, “ஏய்… ஒரு மாசமில்லைனாலும்… இருபது நாளுக்கு மேல, உன்னை அப்டித்தான் கூப்டிட்டு இருக்கேன்.  இன்னிக்கு என்ன திடீர்னு? என்ன ஆச்சு உனக்கு?”, என்று திருப்பியிருந்தான் கேள்வியை அவளிடமே,

“ம்… சொல்லுங்க… யாயுன்னா என்னனு! நீங்க என்னை ‘யாழு’ன்னு கூப்பிடறீங்கனு நினைச்சேன்.  இன்னிக்குத்தான் ‘யாயு’ன்னு நீங்க கூப்டது எனக்குத் தெரியும்”, என்று கூறியவள் தலையைக் குனிந்து கொள்ள

“சரி… அது போகட்டும்.  யாயுவுக்கு விளக்கம் சொன்னா… எனக்கு என்ன தருவ?”, என்று பேரத்தில் இறங்கினான்.

“என்ன தர?  இனிமேதான் சமைக்க ஆரம்பிக்கனும்”, என்று கூறியவளை, “அதுதான் தினசரி செய்து தருவியே…! ஸ்பெசலா எனக்கு என்ன தருவனு கேட்டேன்”, என்று மீண்டும் ஸ்பெசல் என்பதை அழுந்தக் கூறினான் யுகேந்திரன்.  அதில் தொனித்த உல்லாசத்தை அவள் உணரவேயில்லை.

யாயுவிற்கான விளக்கம் அறியாவிட்டால், அடுத்து இன்று தன்னால் சமையல்கூட செய்ய இயலாது என்று தன்னைப் பற்றியே எண்ணியவள், “சாயங்காலம் உங்களுக்கு பாயாசம் பண்ணித் தரேன்”, என்று சிரித்தபடியே தலையை வேகமாக ஆட்டி சந்தோசமாகக் கூறியவளை முறைத்தவன், ‘பேசாம… பாய்சனைக் கொடு’, என்று முனகியிருந்தான்.

கணவனின் முறைப்பில், மீண்டும் மனம் வாடியவள், அவனின் பாய்சனைக் கொடு எனும் முனுமுனுப்பில், நொந்திருந்தாள்.

“அதுக்கு ஏன் இப்டி சொல்றீங்க?”, என்று நேரடியாகக் கேட்டவளிடம், எதுவும் பேசாமல் சோஃபாவில் இருந்து எழுந்து அறையை நோக்கி நடந்தவன், “ஸ்பெசல்னா பாயாசம் தானா, வேறெதுவுமே உனக்குத் தெரியாதா?”, என்றவாறே திரும்பினான்.

மனைவியின் வாடிய வதனத்தைக் கண்டு, “சரி.. சரி.  இன்னிக்கு ஈவினிங் வெளியே எங்காவது போயிட்டு வரலாம்”, என்று அவளின் வாட்டத்தைப் போக்கவும், கொரியரில் வந்த சந்தோசத்தைப் பகிரவும் வழிகூறிவிட்டு, அறைக்குள் சென்றிருந்தான்.

“எதுக்கு இவ்வளவு கோபப்படறாரு இன்னிக்கு?”, என்று யோசித்தபடியே அடுக்களைக்குள் சென்று, மதிய உணவிற்கான பணிகளை ஈடுபாடில்லாமல் துவங்கியிருந்தாள்.

யாழினியின் பாதி வேலைகள் நிறைவு பெற்றிருக்கவும், அம்பிகா அழைக்கவும் சரியாக இருந்தது.

யுகேந்திரன் இன்று பணிக்கு செல்லவில்லை என்பதையும், ஆகையால் தற்போதுதான் சமைத்துக் கொண்டிருப்பதாகவும், தனக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த அழைப்பைப் பற்றியும் மூச்சுவிடாமல் மாமியாரிடம் கூறிமுடித்தாள்.

அதன்பிறகு சில இலகுவான பேச்சிற்குப்பின், அறைக்குள் இருந்தவனிடம் அலைபேசியைக் கொண்டு வந்து தந்துவிட்டு, அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அம்பிகாவின் அழைப்பிலிருந்து, மனைவியின் பேச்சுகளை கேட்டவாறே படுக்கையில் படுத்திருந்தவன், அலைபேசியை வாங்கியவுடன், “நான் நல்லாதான் இருக்கேன்.  இரண்டு நாள் நானாதான் லீவு போட்டேன்.  வேற ஒன்னுமில்லை.  அவளை நல்லா பாத்துப்பேன்.  இப்ப சொல்லுமா?”, என்று அம்பிகா பேசும்முன் பேசியவனின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்துக் கொண்ட அம்பிகா,

“என்ன யுகி, எதுவும் பிரச்சனையா?  லீவெல்லாம் போடுன்னு சொன்னா யோசிப்பியே? இப்ப என்னனா.. நீயா லீவப் போட்டுட்டு வீட்டில இருக்க?”, என்று துவங்க

“ஒரு பிரச்சனையும் இல்லம்மா!”, என்று எரிச்சலை மறைத்திருந்த மகனின் குரலை, கண்டு கொண்டார்.

“ஐயா…! உனக்கு என்ன தேவையோ, அதை நீதான் பாத்துக்கணும்.  பசிச்சா நீதானே சாப்பிடனும்.  உனக்கு தேவையானதை மத்தவங்க புரிஞ்சிட்டு வந்து, கைல எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கனும்னு நினைச்சா அது நடக்கிற காரியமில்லை.  கோபத்தைக் குறை. 

என்ன… நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?”, என்று கேட்டவரிடம்,

“எல்லாம் புரியுது. நீ பொடி வச்சிப் பேசாம… போனை வையி!”, என்று யுகி கூற

“அப்ப அம்மா சொன்னது, புரிஞ்சிருச்சா யுகி”, என்று சிரித்துக் கொண்டே மகனிடம் கேட்டவர், “யாழினிகிட்ட போனைக் கொடு”, என்று கூறியிருந்தார்.

“திரும்பவுமா?”, என்று கேட்டவன், அலுப்பாக எண்ணியபடியே எழுந்து, “இந்தா… அம்மா உங்கிட்ட ஏதோ பேசணுமாம்”, என்று கொடுத்துவிட்டு, ஹாலில் உள்ள சோஃபாவில் வந்து அமர்ந்திருந்தான்.

“சொல்லுங்க அத்தை”, என்று யாழினி கூறி முடிக்கும்முன், எதிர்முனையில் இருந்தவர்

“என்னம்மா? என்ன பிரச்சனை”, என்று அம்பிகா கேட்க

“பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லை அத்தை”

“அப்ப ஏன், அவன் குட்டிபோட்ட நாயி பக்கத்தில வர விடாம வள்னு விழுகற மாதிரி பேசறான்”, என்று மனதில் தோன்றியதை மறைக்காமல் கேட்டிருந்தார், அம்பிகா.

“தெரியலை அத்தை. ஆனா ஒரு வாரமா அப்டித்தான் இருக்காங்க!”, என்று பற்ற வைத்திருந்தாள் பெண்.

“ஒரு வாரமாவா?”, என்று கேட்டு ஒரு கனம் யோசித்தவர், சிரித்தவாறே, “அவன் எதாவது கேட்டா… நீங்களே சொல்லுங்க, நீங்களே செய்யுங்கனு சொல்லு… எதுவும் சரியா வேலைக்கு ஆகுதான்னு பாப்போம்”, என்று மருமகளிடம் ஐடியா தந்துவிட்டு அலைபேசியை வைத்திருந்தார்.

அம்பிகா போனை வைக்கவும், “ஒரு வாரமா எப்டி இருக்கேன்?”, என்று எதிரில் வந்து ருத்ரமூர்த்தி வேடமிட்டு வந்து நின்றவனிடம், என்ன பேசுவது என்று தெரியாமல், அவனின் வெளித்தோற்றம் தந்த பயத்தில், கண்களில் அழுகை எட்டிப் பார்க்க,

‘சும்மா வந்து எப்டி இருக்கேன்னு கேட்டதுக்கே… அழுகையா… முடில’, என்று மனைவியின் நிலையைப் பார்த்துப் பதறி சமாதானம் செய்ய, அவளருகில் வருமுன் அழத் துவங்கியிருந்தாள்.

“ஏய்… என்ன சொல்லிட்டேனு இப்ப அழற?”, என்று அவளை நெருங்கியவன், அவளின் அழுகையினைக் கண்டு, மனம் தவிக்க தன்னோடு  அணைத்திருந்தான்.

அணைப்பில், அழுகையைத் தொடர்ந்தவளின் கண்ணீர் அவனின் தேகம் தொட்டிருக்க, அதை உணர்ந்தவன், “சின்னப் புள்ளை மாதிரி அழற… நான் சும்மாதான கேட்டேன்.  இதுக்கெல்லாமா அழுவாங்க? நீ என்ன எல்.கே.ஜி. புள்ளையா?”, என்று வாய் கேட்க, கை முதுகைத் தட்டி தன்னவளை சமாதானம் செய்ய முயல, ஒரு வாரமாக தன்னோடு முகம் கொடுத்து பேசாமல், தன்னை திணறச் செய்தவனை, விடாத தனது அழுகையால் திணறச் செய்திருந்தாள்.

அழுகையோடு மார்பில் ஒன்றியிருந்தவளின் நெற்றியில் குனிந்து தன் இதழ் பதித்து, “சரிம்மா… அழாத… இனி நான் உன்னை ஒன்னுமே கேக்கலை!”. என்று சரண்டராகி இருந்தான்.

சற்று மீண்டவள் யுகேந்திரனை நிமிர்ந்து பார்த்து, “யாயுன்னா என்ன?”, என்று மீண்டும் கேட்க

“உண்மையிலேயே யாயுன்னா என்னனு தெரியலையா?”, என்று மெல்லிய குரலில் தன்னோடு ஒன்றியிருந்தவளின் காதில் கேட்டிருந்தான்.

“ம்..”, என்று ஆமோதித்து தலையாட்டியவளை இறுக அணைத்தபடியே, “யாயுன்னா… யாழினி யுகேந்திரன்!”, என்று காதில் சற்று சத்தமாகவே கூறிவிட்டு, அவளின் முகத்தை ஆராய்ச்சியாக நோக்கியிருந்தான். 

தன்னவனை நிமிர்ந்து அதிசயமாக, ஆச்சர்யம் கலந்த புன்னகையோடு சந்தோச பார்வை தன்னைப் பார்த்தவளைக் கண்டு சிரித்தவன், “என்ன? அதத்தான் சுருக்கி “யாயு” ன்னு கூப்பிட்டேன்”, என்று கூறியவனின் மார்பில் தன் இதழ்கொண்டு முதல் அச்சாரம் தன்னையறியாமலேயே பதித்திருந்தாள்.

தன்னவளின் செயலில், யாழினியை ‘யாயு’ என அழைத்தவாறே, காற்றுப்புக இடமில்லாதபடி இறுக அணைத்திருந்தான். அணைப்பில் அடங்கி சற்று நேரம் இருந்தவள், யுகேந்திரன் எதிர்பாராமல் அவனிடமிருந்து விலகியவள், யுகியின் மார்பில் அடித்தபடியே, “அதக்கேட்டா… ஏன் சொல்லாம இருந்ததோட மட்டுமில்லாம, பேசாம பாய்சன்லெம் தான்னு முனங்குறீங்க…”, என்று கோபத்தோடு மீண்டும் எழுந்த அழுகையோடே அவனை இருகரங்களாலும் அடித்தபடியே கேட்டாள். தன்னை அடிக்கின்ற கையைத் தடுக்க முயல, கையை அவனின் கரங்களில் இருந்து உருவி, விடாமல் அடித்தபடியே, “இனி அப்டி சொல்ல மாட்டேன்னு சொல்லுங்க…” என்றபடியே அடித்தாள்.  தன்னோடு இழுத்து, அணைத்தபடியே சிரித்தவனின் கைச்சிறையில் விரும்பிக் கைதாகியிருந்தாள்.

நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்றிருப்பதை உணர்ந்தவன், தன்னவளை அணைத்தபடி சோஃபாவில் வந்து அமர்ந்து, மடியில் அமர்த்திக் கொண்டான்.

ஒரு வழியாக அழுகையை முடிவுக்கு கொண்டு வந்தவள், கணவனோடு அணைப்பில் இதமாக உணர்ந்து அமர்ந்திருந்தாள்.

நெடிய அமைதிக்குப்பின், தன்னவளை அணைத்த நிலையிலிருந்து விடுவிக்காமல், கன்னத்தில் இதழ் பதித்தவன், அதற்குமேல் பொறுமை இழந்து, “யாயு…”, என்று காது மடலருகே வந்து அழைக்க, “ம்…”, என்ற மனைவியின் பதிலுக்கு, “நான் உனக்கு ஓகேவா…!”, என்று கேட்டான்.

கணவனின் கேள்விக்கு மீண்டும், “ம்”, என்று, அணைப்பை விட்டு விலகாமல் பதில் கூறியவளை தன்னிரு கைகளால் அணைப்பை இறுக்கியவன்,

“இப்ப உனக்கு ஓகேவா!”, என்று கேட்க… அதிர்ந்து விழித்தவள், யோசித்தபடியே அமர்ந்திருக்க,

“சொல்லு யாயு… இப்ப உனக்கு ஓகேவா…” என்று மீண்டும் கேட்க,

அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு இன்னும் யாழினி சிறியவள் அல்லவே.

“அடுப்புல குழம்பு இருக்கு!”, என்று சாக்கு கூறியது அவளது நாணம்.

மடியில் இருந்தவளை இருகைகளால் ஏந்தியன், புன்னகை மாறாமல், தங்களது அறைக்குள்ளிருந்த படுக்கையில் கொண்டு வந்து யாழினியை விட்டவன்,

நின்றவாறே, “குழப்பமில்லாம இருப்பியாம்.  மாமன் இப்ப வந்திருவேன்”, என்றபடி, அடுக்களையில் அடுப்பை அமர்த்தி விட்டு, வாயிற்கதவை ஒரு முறை அடைத்திருப்பதை உறுதி செய்தவன், அறைக்குள் வந்திருந்தான்.

அதுவரை படபடத்த இதயத்தோடு, நடக்கப்போவதை ஆவலாக மனம் எதிர்பார்த்தாலும், சற்றே பயமும், தொற்றியிருக்க, பயத்தைக் காட்டாமல் இருக்க கண்களை மூடியிருந்தாள், பெண்.

ஒருக்களித்த நிலையில் படுத்திருந்தவளை, படுக்கையில் இருந்து இதமாக தன்னோடு, இழுத்து, மார்போடு சேர்த்து அணைத்தவன்,

தயக்கத்தின் தாயகமாகத் தவித்தவளை, தன்னை நோக்கி திருப்பியிருந்தான்.

இதழால் இதழொற்றல் இதமாகத் தந்து, காமனுக்கு சேதி அனுப்பினான்.

காமன் இருவருக்கும் கைகொடுக்க, கரைகாணா முதற் பயணம் இருவருக்கும் இனிதே துவங்கியது.

தன்னவளை உணர, இதழ் கொண்டு, இதழைத் தீண்டி, தேகங்களின் மோகதாப சாந்திக்கு அழைப்பு விடுத்தான்.

ஆணவனின் இதழ் தீண்டலில் இதயம் இடி, இடியெனத் தாறுமாறாகத் துடிக்க, உணர்ச்சிக் குவியல் உடலெங்கும் பொங்க, கடினமான கவிதையாகவே படுக்கையில் கிடந்தாள் பெண்.

தடை தகர்க்கத் துவங்கியவனின் கரங்களை, நாணத்தாலும், எழுந்த எதிர்பாரா சிலிர்ப்பாலும், மூர்க்கமாக முற்றுகையிட்டவளை, முத்தமழையால் மூச்சடைக்கச் செய்து, மாரனின் துணையோடு முற்றுகையை செயலிழக்கச் செய்து முன்னேறினான்.

அவள் மேனியெங்கும், தன் இதழெனும் தூரிகை கொண்டு உரையெழுதத் துவங்கியிருந்தான்.

இலகுத் தன்மையில்லாமல், எஃகைப் போல இறுகியிருந்தவளின் மேனியின் மொழி உணர்ந்தவன், இதயம் தொட்டு, இறுக்கத்தை தணிக்க, செவிவழியே வழிகேட்க..

பகலில், அறைக்குள் உண்டான வெளிச்சம் தடையாக இருந்ததை அறிந்தான்.

வெளிச்சத்தால் உண்டான தயக்கத்தால், எழுந்த இறுக்கத்தைப் போக்க, அறையை செயற்கையாக, மந்திரவாதிபோல இம்மெனுமுன் இருட்டாக்கி இருந்தான்.

தன்னவளின் தயக்கங்களை ஒவ்வொன்றாகத் தகர்த்தெறிந்தவன், தயக்கமில்லாமல் பயணத்தைத் துவங்கியிருந்தான்.

பெண்ணின் தடுமாற்றமும், தயக்கமும், நாணமும், பதற்றமும், அவளின் உண்மை நிலையை பறைசாற்ற… அதை மனம் எண்ணியதை ஒதுக்கித் தள்ளினான்.

மடைதிறந்த வெள்ளமென, உடலில் பரவிய உணர்ச்சிகளை, உரிய முறையில் தணிக்கப் பழகியிராதவன், நிதான நீண்ட நெடிய மூச்சால் தனது பதற்றத்தை நிதானிக்கச் செய்து, நிதானமாகப் பயணிக்கத் துவங்கினான்.

தடுமாற்றங்கள் பலவற்றைக் கடந்து, தன்னவளோடு கைகோர்த்துப் பயணத்தைத் தொடங்கினான். காமனின் துணையோடு பெருங்கடலை தன்னவளோடு கடக்க முயல, பயணத்தின் நடுவே எந்த சுணக்கமும் இல்லாமல், கரையில்லா பயணத்தின் கரையை அடைந்திருந்தனர்.

இரவைவிட, பகல்கூடலால் உண்டான களிப்பினால், நான்கு மடங்கு, கூடுதல் களைப்பு ஏற்படும் என்பது இயற்கை நியதி. 

இருவருக்கும் களிப்பால் உண்டான களைப்பால், மீள எண்ணி, இளைப்பாறலை ஒருவர் தோளில் மற்றவர் தேடியிருந்தனர்.

அணைத்திருந்த கரங்கள் தொய்வடையாது, ஒருவர் மற்றவர் தோள்களைத் தழுவியிருக்க, முகம்பார்க்கக் கூசி நயனங்களை நயமாக மூடியிருந்தாள் பெண்.

மூடியிருந்த கண்களுக்குள், தன்னவன் முகம்பார்க்கக் கூசிய விழிகளின், கருமணிகள் உலாவியதைப் பார்த்தவன், இதமாக இமைகளில் இதழ் பதித்தான்.

அவனின் செயலில் எழுந்த உணர்வால், முன்பைவிட இன்னும் தன்னவனை இறுக அணைத்தவாறே, அவனது திண்மையான மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

புதைந்தவளை, தன்னிடமிருந்து பிரித்து முகம் பார்க்க எத்தனிக்க, சிணுங்கியவளை, கைவளைவில் சிறைசெய்து, மல்லார்ந்து படுத்தபடியே, மார்பில் போட்டுக் கொண்டான்.

“யாயு…”,

“…”

“யாயு…”

“… ம்”, என்றவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன்

“பாயாசத்தை விட, இதுதான டேஸ்டா இருக்கு?”, என்று கேட்க

‘என்னடா… இவன்… இப்ப வந்து என்ன கேக்குறான்!’, என ஒரு நொடி யோசித்தவள் திகைப்பினூடே

“ச்சீய்…!”, என்று நாணப்பட்டு, அவனிடமிருந்து விலக எத்தனிக்க,

“என்ன..? ச்சீய்…!”, என்றவாறு, தன்னிடமிருந்து விலகியவளை, விலகவிடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தான். யுகேந்திரன்.

முறையான சிற்றின்பம் தரும் ஆத்மதிருப்தி, மனதை இலகுவாக செயல்பட அனுமதிக்கும்.  குற்றங்கள் குறைக்கும். நிதானமாக நிதர்சனத்தைப் புரியவைக்கும்.

பருவம் மட்டுமே சிற்றின்ப தேடலுக்கான காரணமல்ல. உண்ட உணவு, ஏழு தாதுவாக மாறி, இறுதி நிலையான வித்து அதிகமாக எஞ்சினால், பாலுணர்வு தோன்றுதல் இயல்பு.  தோன்றிய உணர்வைத் தவிர்க்காமல், தகுந்த உறவின் மூலம் முறையாகக் கழித்தல், இன்பம்.

வித்தினை முறையாகக் கழிக்காத போது, உடலில் உண்டாகும் அதன் தேக்கத்தால், மனஅழுத்தம், கோபம், சிடுசிடுப்பை உண்டு செய்கிறது.

யுகேந்திரன் மட்டுமன்றி, யாழினியும் மனநிலையில் வெகுவாக மாறியிருந்தாள்.

தடைகள் தகர்ந்து, தங்கள் மனம்போல மகிழ்ச்சியாக வாழத் துவங்கியிருந்தனர்.

மனவயத்தால் இருவருக்கும் மகிழ்ச்சியான தாம்பத்யம் அரங்கேறியிருந்தது. இல்லற வாழ்வில் இருவரும் இனிமையாக அடியெடுத்து வைத்திருந்தனர்.

இருந்த ஒரு குறையையும் நிறைவாக்கியவளை, நிமிடமும் நினைக்காமல் இருக்க முடியாமல், நினைவெல்லாம் அவளாகவே மாறியிருந்தான், யுகேந்திரன்.

தனித்து வெளியே சென்று வர யாழினியால் இயன்றாலும், யுகேந்திரன் அவளை அநாவசியமாக அலைய விடாமல், அனைத்து வெளிவேலைகளையும் அவனே பார்த்துக் கொண்டான்.

வார விடுமுறை நாட்களில், கிராமத்திற்கு சென்று தங்கி வருவர்.

யுகேந்திரன், யாழினியின் மாறுதலைக் கண்ட பெரியவர்கள் மனம் நிறைந்திருந்தது.

‘இப்ப சென்னைக்கு வாங்க’, என்று இருவர் அழைத்தும், அம்பிகா வர மறுத்திருந்தார்.

—————–

மாதங்கள், அதன்போக்கில் விரைவாகப் போயிருக்க, பெரியவர்களின் ஆதரவோடும், இன்பமான வாழ்வினை இருவரும், இனிமையாக வாழ்ந்திருக்க, அன்றைய பொழுது விடித்திருந்தது.

தேர்வு சமயமாகையால், கடந்த பதினைந்து நாட்களாகவே வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே பணிக்கு சென்று விடுவது போல, இன்றும் கிளம்பியிருந்தான்.

பெண்ணவள், பணிகளோடு பழகியிருந்தாலும், ஏதோ அசௌகரியத்தை இன்று எழுந்தது முதலே உணர்ந்தாள்.

இன்னதென அறியாமல், இயன்றவரை, இலகுவாக இருக்க முயன்று, தோற்றாள்.

—————-

தேர்வுகள் முடிவுறும் நேரமாகையால், பதினோரு மணிக்கெல்லாம் அன்று பணிகள் நிறைவுற்றிருந்தது யுகேந்திரனுக்கு.

மதிய உணவைக் கையில் கொண்டு சென்றிருந்தாலும், மனைவியோடு உண்ண நினைத்து, கிளம்பியிருந்தான்.

வரும் வழிநெடுக, யாழினியை எண்ணியபடியே புன்முறுவலோடு வந்தவனுக்கு, பூட்டிய வீடு வரவேற்றது.

தன்னிடமிருந்த சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே வந்திருந்தான்.

‘இந்நேரம் எங்க போனா?’, என்று எண்ணியபடியே ‘எல்லாச் சாமானும், இருக்குனு சொன்னா? இந்த வெயில்ல எங்க போனா?’, என்று எண்ணியவனாக, அவளது அலைபேசிக்கு அழைக்க, அவனது அழைப்பிற்குரிய அலைபேசியின் அழைப்பை, அவர்கள் அறையில் இருந்து வந்த சத்தத்தில் உணர்ந்தான்.

அறைக்குள் சென்று நோக்கியவனைப் பார்த்து, அவளின் அலைபேசி சிரித்தது.

‘வெளியே போறவ, போனை பத்திரமா வீட்டுக்குள்ள வச்சிப் பூட்டிட்டு போயிருக்கா! அறிவுக் கொழுந்துதான்!  அப்டி என்ன அவசரமா போனானு தெரியலையே!’, என்று எண்ணியவாறே, உடைமாற்றி, டிவியை ஆன் செய்து அக்கடா என அமர்ந்திருந்தான்.

வந்து அரைமணித் தியாலம் முடிந்தும், வீட்டிற்கு வராத மனைவியை எதிர்பார்த்து, அக்கம், பக்கம், வெளியே சென்று வருகிறாளா? என்று பார்த்தான்.

அடுத்த ஒரு மணித் தியாலத்திற்குப் பிறகும், வீட்டிற்கு வராதவளை எதிர்பார்த்துக் காத்திருந்தவன், யாழினியை எண்ணி பதறியிருந்தான்.

//////////////

யாழினிக்கு என்னவாயிற்று?

அடுத்த அத்தியாயத்தில்…