Kadhal 26

சித்தார்த் தன் தந்தையின் முன்னால் கைகளைக் கட்டிய படி நின்று கொண்டிருக்க அவரோ தங்கள் வீட்டுத் திண்ணையில் பலத்த சிந்தனைக்குட்பட்டவராக அமர்ந்திருந்தார்.

மறுபுறம் யசோதா சமையலறைக்குள் பாத்திரங்களை எடுப்பதும் வைப்பதுமாக நின்று கொண்டிருக்க இன்னொரு புறம் கண்ணன் மற்றும் கார்த்திக் திண்ணைப் பகுதியில் நின்றவாறே அவர்கள் இருவரையும் குழப்பமாக மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றனர்.

“அண்ணா என்னண்ணா ஆச்சு?” கண்ணன் தன் குழப்பம் தாளாமல் அங்கிருந்த தூண் அருகே சாய்ந்து நின்று கொண்டிருந்த சித்தார்த்திடம் மெல்லிய குரலில் கேட்க அவனோ தன் தம்பியைப் பார்த்து இதுவரை நடந்த விடயங்களை எல்லாம் சுருக்கமாக கூறினான்.

அவன் கூறியதை எல்லாம் அமைதியாய் கேட்டுக் கொண்டு நின்றவன் அவன் இறுதியாக சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக திரும்பி பார்த்தான்.

“நீங்க சொல்றது உண்மையா அண்ணா? நம்ம அத்தையோட பொண்ணா அந்த கொலையை பண்ணாங்க?”

“டேய்! இவ்வளவு நேரமா நான் என்ன சொல்லுறேன் நீ என்ன கேட்குற? அந்த கொலையை அவ பண்ணலடா! அந்த எம்.எல்.ஏ தான் பண்ணான் அதை சாட்சியங்களோடு நிரூபித்து அவனுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தாச்சு ஆனா அம்…”

“என்ன அங்கே வெட்டி பேச்சு கார்த்தி?” சமையலறைக்குள் இருந்தவாறே யசோதா சற்று கோபமாக அதட்டலாக குரல் கொடுக்க அவர் குரல் கேட்டு அண்ணனும், தம்பியும் சட்டென்று அமைதியாகிப் போனார்கள்.

தன் அன்னையின் கோபமான குரலுக்கான காரணம் ஏற்கனவே சித்தார்த்திற்கு தெரிந்திருந்ததால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தவன் உடனே அவர் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்து சென்றான்.

நீதிமன்றத்தில் வைத்து சித்தார்த் மேக்னாவை தன் தாய் தந்தையருக்கு அறிமுகப்படுத்தி வைக்க அதைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்றவர்கள் அந்த உண்மையை முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துப் போனார்கள்.

எங்கோ ஓரிடத்தில் தனது தங்கை அவளது கணவன், பிள்ளைகளுடன் நிம்மதியாக இருப்பாள் என்று இத்தனை காலமாக எண்ணியிருந்த தாமோதரன் இன்று தன் கண் முன்னால் நின்ற தன் தங்கையின் மகளை பார்த்து தான் அன்று சுந்தரியை வீட்டை விட்டு அனுப்பியதால் தானே இன்று இவளுக்கு இந்த நிலைமை என்ற குற்ற உணர்வில் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தார்.

மறுபுறம் யசோதா தன் மகன் சொன்ன‌ செய்தியின் தாக்கத்திலிருந்து முழுதாக வெளிவர முடியாமல் தன் முன்னால் நின்று கொண்டிருந்த மேக்னாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்.

தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணா என்ற ஒரு எண்ணமே அவர் மனதிற்குள் விடாமல் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

“அம்மா அப்பா என்ன ஆச்சு? ஏதாவது பேசுங்க” தன் பெற்றோரின் அமைதி சித்தார்த்திற்கு வித்தியாசமாக படவே அந்த அமைதியைக் கலைக்கும் வகையில் அவன் தன் பேச்சை ஆரம்பித்தான்.

“இதற்கு மேல என்ன பேசணும்னு எதிர்பார்க்கிற சித்தார்த்?” யசோதாவின் கேள்வியில் அங்கிருந்த அனைவருமே அவரை அதிர்ச்சியாக திரும்பி பார்த்தனர்.

தாமோதரன் தான் மேக்னாவை பார்த்ததும் கோபப்படுவார் என்று ஜெஸ்ஸி மற்றும் சித்தார்த் எண்ணியிருக்க அவர்கள் இருவரது எண்ணத்தையும் பொய்யாக்கும் வகையில் அமைத்திருந்தது யசோதாவின் கேள்வி.

“அம்மா நீங்கதானே அன்னைக்கு சுந்தரி அத்தையை பற்றி அவ்வளவு தூரம் மனம் வருந்தி பேசுனீங்க! இப்போ இப்படி கேக்குறீங்க? என்னாச்சும்மா?”

“ஆமாம் அன்னைக்கு நான்தான் சுந்தரியைப்பற்றி அவ்வளவு தூரம் மனம் வருந்தி பேசினேன் ஏன்னா சுந்தரியை எனக்கு உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிட்டு வந்த நாளில் இருந்தே தெரியும் அவளோட பழக்கவழக்கமும், ஒவ்வொரு குணமும் எனக்கு தெரியும் அப்படிப்பட்ட எங்க சுந்தரிக்கு இப்படி ஒரு பொண்ணான்னு நினைக்கும் போது என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும் சித்தார்த்?”

“அம்மா! ஏன்மா இப்படியெல்லாம் பேசுறீங்க?” தன் அன்னையின் கூற்றில் சற்று தர்மசங்கடமாக உணர்ந்த சித்தார்த் மேக்னாவின் புறம் திரும்பி பார்க்க அவளோ தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் கல்லைப் போல இறுகிப் போய் நின்றாள்.

“இதைத்தான் ரொம்ப முக்கியமான விஷயம்னு சொல்லி எங்களைக் கூட்டிட்டு வந்தாயா?” அவனை குற்றம் சாட்டும் வகையில் திரும்பி பார்த்தவர் கோபமாக அங்கிருந்து கிளம்பி செல்ல அதுவரை நேரமும் அமைதியாக நின்று கொண்டிருந்த தாமோதரனும் அவரை பின் தொடர்ந்து அங்கிருந்து சென்றார்.

நான் நினைத்தது ஒன்று இங்கு நடந்தது ஒன்றாக இருக்க கவலையுடன் தன் தலையில் கை வைத்துக் கொண்டவன் ஜெஸ்ஸியின் புறம் திரும்பி
“ஜெஸ்ஸி நீ மேக்னாவையும், நர்மதாவையும் அவங்க போக வேண்டிய இடத்துக்கு கூட்டிப்போய் விட்டுடு நான் வீட்டுக்கு போய் வந்து நர்மதாவை அவ போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போவேன் நான் எப்போ வருவேன்னு வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று விட்டு தன் பெற்றோரை பின் தொடர்ந்து ஓடிச் சென்றான்.

அங்கிருந்து கோபமாக வந்தவர்கள் தான் இப்போது வீட்டிற்கு வந்த பின்பும் சித்தார்த்திடம் ஒரு வார்த்தை வாய் திறந்து பேசவில்லை.

சமையலறை வாயிலில் சித்தார்த்தின் நிழலாடுவதை கண்டுகொண்ட யசோதா தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு நிற்க புன்னகையுடன் அவர் முன்னால் வந்து நின்று கொண்டவன்
“அம்மா உங்களுக்கு என் மேல என்ன கோபம்?” அவர் தாடையை பிடித்து ஆட்டிய படியே கேட்க கோபமாக அவனது கையை தட்டி விட்டவர் மற்றைய புறம் திரும்பி நின்று கொண்டார்.

“அம்மா!” சற்று கண்டிப்பாக அவரை அழைத்தபடி அவர் முன்னால் வந்து நின்றவன்

“அம்மா! இப்ப என்ன ஆச்சு? எதற்காக இவ்வளவு கோபம்? அன்னைக்கு நீங்க அந்த போட்டோவை பார்த்து ரொம்ப பீல் பண்ணி பேசவும் நான் உங்களுக்கு வாக்கு தந்தேன் இல்லையா? எப்படியாவது அத்தையைப் பற்றி உங்களுக்கு தகவல் சொல்வதாக சொல்லியிருந்தேன் தானே அதைத்தானேம்மா நான் செய்தேன் வேறு என்ன நான் தப்பாக செய்துட்டேன்னு இவ்வளவு தூரம் கோபப்படுறீங்க?” என்று கேட்கவும்

கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவர்
“ஆமாடா நான்தான் அன்னைக்கே சுந்தரியை பற்றி தகவல் தெரிந்துட்டு வந்து சொல்ல சொன்னேன் அதை பற்றி ஒவ்வொரு நாளும் நீ சொல்லுவேன்னு ஆர்வமா பார்த்துட்டே இருந்தேன்

சுந்தரி அவ புருஷன், பிள்ளைகளுடன் சந்தோசமாக இருப்பான்னு நினைத்திருந்தேன் ஆனால் நீ இன்னைக்கு சொன்னதை என்னால ஜீரணிக்க முடியலைடா சுந்தரி ஒரு பூச்சி, புழுக்கு கூட தீங்கு நினைக்காதவ அவளுக்கு போய் இப்படி ஒரு பொண்ணா? அதுவும் ஜெயிலுக்கு போற அளவுக்கு? அதை நினைக்கும்போதே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது அதுதான் நான் அங்கிருந்து கோபமாக வந்துட்டேன் இப்போ சொல்லுறேன் சித்தார்த் நான் எதற்காக அன்னைக்கு சுந்தரியை பத்தி கேட்டேன்னு இப்போ ரொம்ப கவலைப் படுறேன் அவளைப் பற்றியே நான் கேட்காமலேயே இருந்திருக்கலாம் இன்னொரு தடவை நீ அவங்களை சந்தித்து பேசுவதையோ, இல்லை எங்ககிட்ட பேசுவதையோ வைத்துக் கொள்ளாதே!” அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் அங்கிருந்து சென்றுவிட அவனோ அவர் கூறியதைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றான்.

‘செய்யாத குற்றத்திற்கு ஜெயிலில் தண்டனை அனுபவித்ததற்கே அம்மாவும், அப்பாவும் எவ்வளவு தூரம் கோபப்படுறாங்கன்னா மேக்னா செய்த மற்ற தப்பெல்லாம் அவங்களுக்கு தெரிந்தால்! ஜென்மத்துக்கும் அவளை மன்னிக்க மாட்டாங்க போலவே! கடவுளே இது என்ன சோதனை?’ தனக்குள் புலம்பியபடியே சித்தார்த் நின்று கொண்டிருக்க

அத்தனை நேரமும் சமையலறை வாயிலில் நின்றுகொண்டிருந்த கார்த்திக்
“என்னண்ணா தனியா எல்லாம் புலம்ப ஆரம்பிச்சுட்ட?” அவனைப் பார்த்து சிரித்தபடியே அவன் முன்னால் வந்து நின்றான்.

“ஏன் கேட்க மாட்ட? இங்க ஒருத்தன் யார் பக்கம் பேசுறதுன்னு தெரியாம மண்டை காய்ந்து போய் இருக்கேன் உனக்கு நக்கல் கேட்குதா?”

“அப்படி இல்லண்ணா! உனக்கு என்ன பிரச்சினை? அம்மா, அப்பாவும் நம்ம அத்தை பொண்ணை ஏத்துக்கல அது தானே?”

“அதுவும் தான் அதோட நான் சொல்ல வர்றதையும் கேட்குறாங்க இல்ல”

“அண்ணா நம்ம ஜெனரேஷன் யோசிக்கிற விதம் வேற அம்மா, அப்பா யோசிக்கிற விதம் வேற அம்மாவும், அப்பாவும் இத்தனை வருஷம் கழிச்சு பார்த்த நம்ம அத்தையோட பொண்ணை உடனே தங்கமே! வந்திட்டியான்னு ஏத்துக்குவாங்கன்னு நீ எதிர்பார்க்கிறது தப்பு தானே?

அவங்க சாதாரணமான நிலைமையிலிருந்து அம்மா அப்பாவை சந்தித்திருந்தால் பரவாயில்லை ஆனா அவங்க சந்தித்தது ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்ததுக்கு அப்புறம்! அவங்க தப்பு செஞ்சாங்களோ, இல்லையோ அது இரண்டாம் பட்சம் ஆனா அவங்க சந்தித்த இடம் அதை நீ யோசிக்கணும்
நம்மள மாதிரி எல்லாவற்றையும் அவங்க சாதாரணமாக எடுப்பாங்கன்னு நினைக்க முடியாதுண்ணா நீ சொன்ன விடயத்தை உள்வாங்க எனக்கே ஐந்து நிமிஷம் ஆச்சு அவங்களுக்கு கொஞ்சம் நேரம் ஆகாதா?

ஒரு ரெண்டு மூணு நாள் போகட்டும்ண்ணா அதுக்கப்புறம் நீ வேணும்னா பாரு அம்மாவே தானாக உன் கிட்ட வந்து அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்ல போறாங்க நீ அதையே யோசிச்சுட்டு இருக்காமல் போய் உன் வேலையை பாரு நம்ம அம்மாவோட கோபம் பற்றி நமக்கு தெரியாத எல்லாம் ரெண்டு நிமிஷம்தான் விடுண்ணா எல்லாம் சரியாயிடும்” தன் தம்பியின் கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்து கொண்ட சித்தார்த் சற்று மனம் லேசானதைப் போல உணரவே அதே மனநிலையுடன் தன் ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டுச் சென்றான்.

தனபாலனின் வழக்கில் வெகு சாதுரியமாக செயல்பட்டதற்காக பலரிடமிருந்தும் பலவகையான பாராட்டுக்கள் அவனுக்கு குவிந்த வண்ணமே இருக்க அந்த பாராட்டுக்களை எல்லாம் கேட்டு அவன் தற்காலிகமாக இந்த பிரச்சினையைப் பற்றி மறந்து போயிருந்தான்.

மாலை வேளை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக தன் ஸ்டேஷனில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன் ஜெஸ்ஸியிடம் இருந்து அழைப்பு வந்த பின்பே காலையில் நடந்த சம்பவங்களைப் பற்றி மீண்டும் நினைவு கொண்டான்.

‘ஐயோ இதைப்பற்றி சுத்தமா மறந்தே போயிட்டேனே!’ தன் தலையில் தட்டிக்கொண்டே தொலைபேசியை எடுத்து தன் காதில் வைத்தவன்

“ஹலோ! ஜெஸ்ஸி ம்மா! எப்படி இருக்கீங்க? வேலையெல்லாம் எப்படி போகுது?” சாதாரணமாக உரையாடுவது போல் கேட்க மறுபுறம் அவளோ அவனை சரமாரியாக திட்டத்தொடங்கினாள்.

“ஏன்டா எருமை! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? மூணு பொண்ணுங்களை தனியா அனுப்பி விட்டு போனோமே அவங்களுக்கு என்னாச்சோ? ஏதாச்சோ? ஒரு அக்கறை வேணாமா? நானும் காலையில் இருந்து பாத்துட்டே இருக்கேன் ஒரு கால் கூட இல்லை என்ன சார் பாராட்டுகளை எல்லாம் பாத்து அப்படியே மத்ததெல்லாம் மறந்தாச்சோ?”

“அய்யோ! அப்படியில்லை ஜெஸ்ஸி ஸ்டேசனில் கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு நான் பாராட்டை எல்லாம் பார்த்து உன்னை மறப்பேனா? அவ்வளவு தானா நம்ம நட்பு?”

“போதும் போதும் உன் டயலாக்கை கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு நான் இப்போ போன் பண்ணது மேக்னாவையும், நர்மதாவையும் பற்றி சொல்லத்தான்”

“மேக்னாவா! அவளுக்கு என்னாச்சு? ஏதாவது பிரச்சினையா?” மேக்னாவின் பெயரைக் கேட்டதுமே சித்தார்த் பதட்டமாகத் தொடங்க

மறுபுறம் தன் தலையில் கை வைத்துக் கொண்ட ஜெஸ்ஸி
“சித்தார்த் கொஞ்சம் பொறுமையா இருடா நான் மேக்னான்னு ஒரு வார்த்தை தானேடா சொன்னேன் அதற்கே இவ்வளவு பதட்டப்படுற! இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்” அவனை மிரட்டும் தொனியில் கூறினாள்.

“அதெல்லாம் எனக்கு தெரியும் நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு என்ன விஷயம்?”

“மேக்னாவையும், நர்மதாவையும் அவங்க பழைய வீட்டில் தான் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன் அவ…”

“அந்த வீட்டிற்கா? அந்த வீட்டுக்கு ஏன் ஜெஸ்ஸி அவங்களை கூட்டிட்டு போன? அந்த இடம் கொலை நடந்த இடம் அதோட இன்னும் அது அப்படியே தானே இருக்கு”

“வேற என்ன பண்ணுறது? அவங்களுக்குப் போறதுக்கு வேற இடம் தெரியலை எனக்கும் அவங்களை எங்கே கொண்டு போய் விடுறதுன்னு தெரியலை நர்மதா திருப்பி போறதுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கிறதால மேக்னா அவளை தன்னோடு வைத்துவிட்டு அனுப்புவதாக சொன்னாள் நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் அந்த இடம் அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு ஆனா அவங்க அங்கேயே இருக்கிறதா சொல்லிட்டாங்க வேறுவழியில்லாமல் நான் அவங்களை அங்கே கொண்டுபோய் விட்டு விட்டேன் இப்ப வரைக்கும் யோசித்துப் பார்த்தேன் அந்த இடம் சரியானதாக எனக்குத் தோணலை என்ன பண்ணுறதுன்னும் தெரியலை அதுதான் உன் கிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன்”

“சரி நான் இப்போவே அந்த இடத்திற்கு வர்றேன் நீயும் வா அங்கேயே வைத்து என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம்”

“சரி சித்தார்த் இதோ கிளம்பறேன்”

“ம்ம்ம்ம் சரி!” ஜெஸ்ஸியிடம் பேசி விட்டு தன் போனை வைத்தவன் மனம் முழுவதும் சற்று நேரத்திற்கு முன்பு தங்கள் வீட்டில் நடந்த சம்பவங்களே நினைவுக்கு வந்தது.

மேக்னா மாத்திரம் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு இயல்பான பெண்ணாக இருந்திருந்தால் இன்று அவள் இந்த நிலைமையில் இருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே எண்ணிப்பார்த்தவன் தங்கள் வாழ்க்கையில் எதுவும் நம்மால் முடிவு செய்யப்படுவதில்லை என்பதை நினைத்துப் பார்த்துக்கொண்டே அவளை சந்திப்பதற்காக செல்வதற்கு தயாரானான்.

மேக்னாவை தன் பெற்றோர் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தவன் அது விரைவாக நடக்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு நடந்து செல்ல சட்டென்று அவனது மனசாட்சி அவனைப் பார்த்து ‘எதற்காக நீ அவளுக்காக எவ்வளவு தூரம் யோசிக்க வேண்டும்?’ என்று கேட்டது.

‘அதுதானே! நான் எதற்காக இவ்வளவு தூரம் யோசிக்கிறேன்?’ சித்தார்த் தன் மனசாட்சியைப் பார்த்து மீண்டும் கேள்வி எழுப்பவும்

அவனைப் பார்த்து கைகொட்டி சிரித்த அவனது மனசாட்சி
‘நீ மேக்னாவை காதலிக்கும் விடயத்தை இன்னுமா ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறாய்?’ என்று கேட்க

அவனோ
‘நான் மேக்னாவை காதலிக்கின்றேனா?’ அதிர்ச்சியாக தன் மனசாட்சியிடம் கேட்டவாறே அந்த இடத்தில் உறைந்து போய் நின்றான்.

மேக்னாவை முதல் முதலாக நீதிமன்றத்தில் வைத்து சந்தித்தது முதல் இன்று காலை தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தியது வரை எண்ணிப் பார்த்தவன் அவள் தன்னை பலமுறை மிரட்டியும் அதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் அவளுக்காக தான் உதவி செய்ததற்கெல்லாம் பிண்ணனியில் அவள் மேல் உள்ள காதல் தான் காரணமா என்று யோசித்துப் பார்க்க அப்போதுதான் அவனுக்கு தன் மனதின் உண்மை நிலை பிடிபட்டது.

ஜெஸ்ஸி இந்த விடயத்தைப் பற்றி விளையாட்டாக கூறிய போதெல்லாம் தான் இதை வெறும் ஈர்ப்பு என்றல்லவா எண்ணியிருந்தேன் என்று தன் அறியாமையை எண்ணி நொந்து கொண்டவன் மனமோ தான் எப்போது தன்வசம் இழந்து போனோம் இன்று சிந்திக்க ஆரம்பித்தது.

‘நடந்ததை இனி யாராலும் மாற்ற முடியாது இனி நடக்கப் போவதை மாத்திரமே நம்மால் தீர்மானிக்க முடியும்’ தன் மனதுக்குள் உறுதியாக கூறி கொண்டவன் இனி நடக்கப்போகும் விடயங்களை எல்லாம் தானே தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முடிவெடுத்துக் கொண்டு மேக்னாவை சந்திக்க புறப்பட்டுச் சென்றான்…..