பரபரப்பான சென்னை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த சித்தார்த்தின் மனம் முழுவதும் நேற்று நடந்த சம்பவங்களே நிறைந்து இருந்தது.
அசிஸ்டெண்ட் கமிஷனர் வரை மேக்னாவை பற்றி அவர்கள் விசாரித்த விடயங்கள் போய் இருக்கிறது என்றால் அது சாதாரணமான விடயமாக அவனுக்கு படவில்லை.
தன் மனதில் உள்ள கேள்விகளையும், குழப்பங்களையும் எல்லாம் ஜெஸ்ஸியிடம் கூறினால் அவளும் அதை சரியாக புரிந்து கொள்ள மாட்டாள் என்று அவனுக்கு படவே இன்று என்ன நடந்தாலும் மேக்னாவை சந்தித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு யாரிடமும் சொல்லாமல் சென்னை மத்திய சிறைச்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தான் சித்தார்த்.
தன்னுடைய பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திய பின்பே மேக்னாவிடம் சென்று என்ன பேசுவது என்று சித்தார்த் யோசிக்கலானான்.
‘அய்யய்யோ! ரொம்ப தைரியமாக மேக்னாவை பார்க்க வந்துட்டோம் இப்போ அவ கிட்ட என்ன பேசுறது? நர்மதா பற்றி கேட்டால் என்ன சொல்லுறது?’ என தன் மனதிற்குள் யோசித்து கொண்டு நின்றவனுக்கு தாமதமாகவே ஒரு விடயம் பிடிபட்டது.
பார்வையாளர் நேரம் தவிர்த்து வேறு நேரத்தில் ஒரு சிறைக் கைதியை சந்திக்க வேண்டும் என்றால் முன்னரே அனுமதி வாங்கி இருக்க வேண்டும் ஆனால் இங்கு சித்தார்த் அதைப் பற்றி யோசித்து கூட இருக்கவில்லை.
‘அட கடவுளே! பர்மிஷன் வாங்குறதை மறந்தே போயிட்டேனே! ஜெஸ்ஸி இருந்தாலாவது அவ டீல் பண்ண கேஸ்னு சொல்லி மேக்னாவை பார்த்து பேசி இருக்கலாம் ஆனா இப்போ அது கூட முடியாதே!’ கவலையுடன் தன் தாடையில் கை வைத்து யோசித்து கொண்டு நின்றவன்
‘சரி சமாளிப்போம்! இது வரை எத்தனை பேரை சமாளித்து இருக்கோம்!’ என புன்னகையோடு தனக்குத்தானே தைரியம் அளித்து கொண்டு சிறைச்சாலை வாயிலை நோக்கி சென்றான்.
காக்கி உடையில் சித்தார்த் வந்து இருந்ததனால் வாயிலில் இருந்த காவலர்கள் எதுவும் கூறாமல் அவனை உள்ளே செல்ல அனுமதிக்க சற்று நிம்மதியாக உணர்ந்தவன் அவர்களை தாண்டி உள்ளே இருந்த இன்னொரு காவலரின் முன்னால் வந்து நின்றான்.
“இன்ஸ்பெக்டர் ஸார்! குட் மார்னிங்!” அந்த காவலர் சித்தார்த்தை ஏற்கனவே நன்றாக தெரிந்தவர் போல புன்னகையோடு சல்யூட் அடிக்க
“அட நம்ம மணி அண்ணா! குட் மார்னிங்! நீங்க இப்போ இங்கே தான் வேலை பார்க்குறீங்களா?” பதிலுக்கு அவனும் புன்னகையோடு அவர் முன்னால் வந்து நின்றான்.
“ஆமா ஸார் உங்க கூட ஆவடி ஸ்டேஷனில் வேலை பார்த்ததுக்கு அப்புறம் பெஷன்ட் நகர் ஸ்டேஷனில் வேலை பார்த்தேன் ஆறு மாதத்திற்கு முன்னாடி தான் இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க”
“அப்படியா! அதுவும் நமக்கு வசதியாக தான் போச்சு”
“வசதியா? என்ன வசதி ஸார்?” சித்தார்த் கூறியதன் அர்த்தம் புரியாமல் அவர் அவனை குழப்பமாக பார்க்க
‘அய்யோ! அவசரப்பட்டு மைண்ட் வாய்ஸ்னு சத்தமாக பேசிட்டோம் போல!’ மனதிற்குள் தன்னை தானே கடிந்து கொண்டவன்
“அது ஒண்ணும் இல்லை அண்ணா ஏதாவது உதவி தேவை பட்டால் கேட்கலாம் இல்லையா அதை சொன்னேன்” என்று கூற அவரும் புன்னகையோடு அவனை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தார்.
“அப்புறம் என்ன ஸார் இந்த பக்கம்?”
‘ஹப்பாடா! விஷயத்திற்கு வந்துட்டாரு இவரை வைத்து எப்படியாவது மேக்னாவை பார்த்துட வேண்டியது தான்’ என தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்
“அது வந்து மணிண்ணா எனக்கு ஒருத்தரை மீட் பண்ணணும்” சற்று இழுத்து கொண்டே அவன் கூற
“யாரைப் பார்க்கணும் ஸார்?” என அவர் கேட்டார்.
“மேக்னா ன்னு…”
“மேக்னாவா?” சிறிது நேரம் யோசித்து பார்த்தவர்
“ஆஹ்! அந்த இரட்டை கொலை பண்ண அந்த பொண்ணு தானே?”
“ஆமா ண்ணா அந்த பொண்ணு தான் நேற்று தான் வந்து அவங்களை பார்க்குறதா இருந்தேன் ஒரு சின்ன வேலை வந்துடுச்சு அது தான் இப்போ பார்க்கலாம்னு வந்தேன்”
“அதற்கு என்ன தாராளமாக பாருங்க ஸார் பர்மிஷன் லெட்டர் கொண்டு வந்து இருக்கீங்களா?”
“இல்லையே!”
“இல்லையா? அப்புறம் எப்படி ஸார்?”
“அது தான் ண்ணா சொல்றேன் நேற்று விஷிட்டிங் டைம் வர முடியல அது தான் இன்னைக்கு வந்து இருக்கேன்” சித்தார்த் சற்று கெஞ்சலாக அவரை பார்க்க அவரோ சிறிது நேரம் யோசித்து கொண்டு இருந்தார்.
“அண்ணா நீங்க பயப்படுற மாதிரி நான் பிரச்சினை எதுவும் பண்ண வரலண்ணா அவங்க கேஸைப் பற்றி எனக்கு தகவல் வேணும் அவ்வளவு தான் ப்ளீஸ் ண்ணா”
“அய்யோ! என்ன ஸார் நீங்க ப்ளீஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? சரி நான் போய் அந்த பொண்ணை வரச்சொல்லுறேன் ஆனா பதினைந்து நிமிஷம் தான் டைம் அதற்கு மேல் நீங்க இங்க நின்னு பேசுறதைப் பார்த்து யாரும் விசாரித்து கம்ப்ளெயிண்ட் பண்ணா பெரிய பிரச்சினை ஆகிடும் அது தான்”
“இல்லை அண்ணா! அப்படி எல்லாம் எதுவும் ஆகாது நான் உடனே பேசிட்டு உடனே கிளம்பிடுவேன்” அவர் மேக்னாவை பார்க்க அனுமதித்ததே அவனுக்கு பெரிய விடயமாக பட உடனே அவன் அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டான்.
“சரி இருங்க நான் போய் அவங்களை வரச்சொல்லுறேன்” என்று விட்டு அவர் எழுந்து செல்ல சித்தார்த்தின் மனமோ படபடவென அடித்துக் கொண்டது.
‘எனக்கு என்ன ஆச்சு? அந்த கேஸைப் பற்றி விசாரித்து பார்க்க தானே வந்தேன் ஆனா இப்போ மேக்னாவை பார்க்க போறதை நினைத்தாலே மனசு படபடவென அடிச்சுக்குது
டேய்! சித்தார்த் கன்ட்ரோல் யுவர் செல்ப் மேன்! கன்ட்ரோல்!’ என தன் படபடப்பான மனதை அடக்கி வைத்தவன் மேக்னாவின் வருகைக்காக ஆவலுடன் காத்து நின்றான்.
மறுபுறம் மேக்னா தன்னை பார்க்க ஒரு நபர் வந்து இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதுமே
‘அந்த இன்ஸ்பெக்டர் தான் வந்து இருப்பார்’ என உறுதியாக தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டு அவசர அவசரமாக அவனை காண விரைந்து வந்தாள்.
அவனை காண்பதற்கு எதற்காக தான் இத்தனை தூரம் ஆவலாக இருக்கிறோம் என்று எல்லாம் அவள் யோசிக்கவில்லை.
நேற்று வருவதாக சொன்னவன் வராமல் போய் விட்டானே என்ற ஏமாற்றத்தோடு இருந்தவள் இன்று மீண்டும் வந்து விட்டான் என்று தகவல் அறிந்ததும் அந்த ஏமாற்றம் எல்லாம் தூசாக பறந்து செல்ல வெகு ஆவலுடன் அவன் முன்னால் வந்து நின்றாள்.
மேக்னா தடுப்புக் கம்பிகளுக்கு அந்தப் புறமாக வந்து நிற்க சித்தார்த் அந்த கம்பிகளுக்கு மறுபுறம் வந்து நின்றான்.
ஒப்பனையின்றிய அவள் முகத்தில் இருந்த ஆவல் ததும்பும் இரு மணி விழிகளும் தன்னை உள்ளிழுத்துக் கொள்வது போல ஒரு பிரமை சித்தார்த் மனதிற்குள் எழுந்து கொள்ளவே உடனே தன் பார்வையை தாழ்த்தி அந்த எண்ணத்தை தன் மனதிலிருந்து விலக்க செய்தவன் இயல்பாக புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
மேக்னாவின் முகத்தில் தெரிந்த ஆவலைப் பார்த்ததும் சித்தார்த்தின் மனமோ வீணாக ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து ஏமாற்றுகிறோமோ என கவலை கொண்டது.
சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக அவளது முகத்தை பார்த்து கொண்டே நிற்க
“ஸார்! இன்ஸ்பெக்டர் ஸார்!” அவன் முன்னால் இருந்த கம்பியில் தட்டிய மேக்னா
“ஏன் ஸார் நேற்று வரல? உங்களுக்காக ரொம்ப நேரம் காத்து இருந்தேன் தெரியுமா நீங்க ஏன் வரல?” என்று கேட்டாள்.
தனது வருகைக்காக அவள் காத்திருந்தாளா? என ஆச்சரியமாக அவளை அவன் நிமிர்ந்து பார்க்க அவன் மனமோ
‘அவ நர்மதா பற்றி தெரிந்து கொள்ள தான் இவ்வளவு ஆர்வமாக இருக்கா உன்னை பார்க்க இல்லை’ என நிதர்சனத்தை அவனுக்கு இடித்துரைத்தது.
“ஸார்! என்ன ஸார் எதுவும் பேசாமல் இருக்கீங்க?” மேக்னா மீண்டும் அவன் முன்னால் தன் கையை இடம் வலம் ஆட்ட
தன் தலையை உலுக்கி கொண்டு தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன்
“அது வந்து மேக்னா அது ஒரு சின்ன வேலை அது தான் வரல ஸாரி அதனால தான் இப்போ வந்தேன்” என்று கூற
“அப்படியா?” என்று கேட்டுக் கொண்டவள்
“நர்மதா பற்றி ஏதோ தெரியும்னு சொன்னீங்களே என்ன அது?” தயக்கம் எதுவும் இன்றி அவன் கண்களை நேராகப் பார்த்து கொண்டே வினவினாள்.
‘ஆஹா! நேரடியாக மெயிண்ட் பாயிண்டை பிடிச்சுட்டாளே!’ என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்டவன்
“அது வந்து மேக்னா அது நர்மதா வந்து” என்று இழுக்க
“எதற்கு இவ்வளவு இழுக்குறீங்க? எதுவாக இருந்தாலும் ப்ளீஸ் தயங்காமல் சொல்லுங்க” மேக்னா தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு கூறினாள்.
கண்கள் இரண்டையும் மூடி ஒரு முறை தன்னை சமன் செய்து கொண்டவன்
“ஐ யம் ஸாரி மேக்னா எனக்கு நர்மதா பற்றி எதுவும் தெரியாது உங்க வீட்டுக்கு முன்னால் இருக்கும் டீ கடையில் தான் உங்களை பற்றி விசாரித்து பார்த்தேன் அப்போ தான் எனக்கு நர்மதா என்கிற பெயரே தெரியும் மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது உங்களை எப்படியாவது பேச வைக்கணும்னு தான் அன்னைக்கு நான் நர்மதா பற்றி தெரியும்ன்னு பொய் சொன்னேன் தயவுசெய்து என்னை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கூறி முடிக்க மேக்னாவோ அவன் கூறியவற்றை எல்லாம் ஏற்கனவே யூகித்து இருந்தாலும் இப்போது தான் அவை எல்லாம் தனக்கு தெரியும் என்பது போன்ற பாவனையுடன் கேட்டுக் கொண்டு நின்றாள்.
“உங்களுக்கு அப்படி என் கிட்ட என்ன ஸார் தெரிஞ்சுக்கணும்?”
“இந்த கேஸ் பற்றி ஆரம்பத்தில் இருந்து தெரியணும் மேக்னா உண்மையான கொலையாளி யாரு? என்ன? எல்லாம் எனக்கு தெரிஞ்சுக்கணும் அது உங்க கிட்ட இருந்து மட்டும் தான் எனக்கு கிடைக்கும்”
“நீங்க எதற்கு ஸார் இந்த கேஸைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக இருக்கீங்க? தப்பு பண்ண நானே சொல்றேன் நான் தான் கொலை பண்ணேன் இதற்கு மேலயும் நீங்க நம்ப மாட்டேன்னு சொல்வதில் என்ன நியாயம் இருக்கு?” மேக்னா நேரடியாக தன் மனதில் இருக்கும் கேள்வியை சித்தார்த்தைப் பார்த்து கேட்டாள்.
“எனக்கு தெரியும் நீங்க இந்த கொலையை பண்ணல”
“அய்யோ! ஏன் திரும்ப திரும்ப அதையே சொல்லுறீங்க? நான் தான் கொலை பண்ணேன் நான் தான் கொலை பண்ணேன் நான் தான் கொலை பண்ணேன் இதோ இந்த கையால் தான் அவங்க இரண்டு பேரையும் கொலை பண்ணேன் போதுமா?” தன் இரு கைகளையும் கொண்டு தன் முகத்தில் அடித்த படி அவள் சத்தமிட
பயந்து போன சித்தார்த்
“அய்யோ! மேக்னா ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க! ப்ளீஸ்!” என கெஞ்சி கேட்க அந்த நேரம் பார்த்து மேக்னாவை அழைத்து வந்த காவலாளி அவசரமாக அவர்களை நோக்கி ஓடி வந்தார்.
“ஸார் என்ன ஸார் ஆச்சு?” பதட்டத்துடன் அவர் சித்தார்த்தைப் பார்த்து கேட்க
“இல்லை ஸார் சும்மா தான் பேசிட்டு இருந்தேன் திடீர்னு டென்ஷன் ஆகிட்டாங்க” என்றவனோ என்ன செய்வது என்று புரியாமல் தன் கையை பிசைந்து கொண்டு நின்றான்.
“ஸார் முதல்ல நீங்க இருந்து கிளம்புங்க யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிடும் ப்ளீஸ் ஸார் கிளம்புங்க” சித்தார்த்தின் கை பிடித்து அழைத்து கொண்டு சென்றவர் வாயில் கதவைத் திறந்து அவனை வெளியே அனுப்பி விட்டு சிறைச்சாலை வார்டனாக இருக்கும் பெண்ணை அழைத்து மேக்னாவை அங்கிருந்து அழைத்து செல்லுமாறு கட்டளையிட்டார்.
சிறைச்சாலையில் இருந்து வெளியேறி வந்த சித்தார்த் அந்த சிறைச்சாலையின் வாயிலை திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்து சென்றான்.
மறுபடியும் யாராவது வந்து அவனை உள்ளே வரும் படி அழைக்க மாட்டார்களா என்ற ஆசை அவன் மனதிற்குள் எழ அந்த ஆசையோ நிராசையாகிப் போனது.
தன் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் மீண்டும் ஐந்து நிமிடங்கள் அந்த இடத்திலேயே நிற்க அப்போதும் யாரும் அவனை தேடி வரவில்லை.
‘ச்சே! நினைத்து வந்த எதுவுமே நடக்கலயே!’ சலிப்போடு தன் காலால் தரையில் உதைத்து கொண்டவன் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
மறுபுறம் மேக்னா கோபத்தோடும், படபடப்போடும் தனது சிறை அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க அங்கு பணி புரியும் இன்னொரு வார்டன் பெண்ணோ சற்று தள்ளி அவளையே பார்த்து கொண்டு நின்றார்.
அப்போது அவரது தொலைபேசி மெல்ல சத்தமிட அதை எடுத்து பார்த்தவர் சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டு விட்டு சற்று தள்ளி ஒரு மரத்தின் பின்னால் மறைவாக சென்று நின்றவாறே அந்த அழைப்பை எடுத்தார்.
“ஹலோ ஐயா! ஆமாங்க ஐயா இன்னைக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வந்து பேசிட்டு இப்போ தான் போனாரு” மறுமுனையில் என்ன பேசினார்களோ இந்த புறம் அந்த பெண் பயத்துடன் சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டு கொண்டார்.
“அந்த இன்ஸ்பெக்டரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஐயா”
“……”
“அவங்க பேசுனது எல்லாம் எனக்கு தெரியாது ஐயா ஆனா இந்த பொண்ணு திடீர்னு சத்தம் போட்டா அந்த இன்ஸ்பெக்டர் போயிட்டாங்க ஒரு பத்து நிமிஷம் தான் பேசிட்டு இருந்தாங்க”
“……….”
“சரி ஐயா சரி நான் என்ன நடக்குதுன்னு பார்த்து சொல்லுறேன்”
“……..”
“சரி சரி ஐயா அந்த மேக்னா இப்போ அவ செல்லில் தான் இருக்கா நான் பார்க்கிறேன்”
“……”
“அய்யோ! தனபாலன் ஐயா எனக்கு எல்லாம் தெரியும் நீங்க போனை வைங்க யாராவது பார்த்தால் அப்புறம் காரியமே கெட்டுடும்” அவசரமாக தன் தொலைபேசி அழைப்பை அந்த பெண் துண்டித்து விட்டு அங்கிருந்து செல்ல மரத்தின் மறுபுறம் நின்று கொண்டிருந்த மேக்னாவோ அதிர்ச்சியாகிப் போய் நின்றாள்.
“மேக்னா!” வழக்கமாக அவளை வந்து சந்திக்கும் வார்டன் பெண்மணி அவளது தோளில் கை வைக்க
கனவில் இருந்து விழிப்பது போல அவரை திரும்பி பார்த்தவள்
“நான் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகப் போச்சே விமலாம்மா அவன் செத்துட்டான்னு நினைத்து தானே நான் இங்கே வந்தேன் இப்போ அவன் என்னையே கண்காணிக்க ஆரம்பித்து இருக்கான் இப்போ நான் என்ன பண்ணுறது?” சிறு குழந்தை போல அவர் தோளில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டே கேட்டாள்.
அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்
“நீ எதற்கும் கவலை படாதே மேக்னா! எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் நடக்கும் அந்த கிரிஜா அடிக்கடி உன் செல் பக்கம் வந்து போகும் போதே எனக்கு சந்தேகமாக தான் இருந்தது அது தான் இன்னைக்கு அவ பின்னாடியே வந்தேன் எப்போ அந்த தனபாலன் இன்னும் உயிரோடு இருக்கிறான்னு தெரிய வந்தததோ இனி நீ இங்க இருக்க கூடாது ம்மா! அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்லவர் மாதிரி தான் தெரியுது பேசாமல் நீ அவர் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடும்மா கண்டிப்பாக உனக்கு அவர் உதவி செய்வாரு”
என்று கூறவும்
அவசரமாக அவரைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
“இல்லை இல்லை! என்னைப் பற்றி உண்மையை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் வேறு ஏதாவது வழி இருந்தால் பார்க்கலாம்” என்று கூற
அவரோ
“சரி வேற என்ன வழி இருக்கும் சொல்லு?” என கேள்வியாக அவளை நோக்கினார்.
சிறிது நேரம் எந்த பதிலும் அவளிடம் இருந்து வராமல் இருக்கவே அவளது கை பிடித்து மெல்ல அங்கிருந்து அழைத்து கொண்டு சென்றவர்
“தனபாலன் வெளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு மட்டுமல்ல உன்னோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் ஆபத்து மேக்னா அதனால நீ இங்க இருந்து முதல்ல வெளியே போகணும் அப்போ தான் அவன் ஏதாவது விபரீதமாக பண்ண முதல் உன்னால தடுக்க முடியும் அந்த இன்ஸ்பெக்டர் உன்னை இங்க இருந்து வெளியே கொண்டு போகத்தான் முயற்சி செய்யுறாரு கொஞ்சம் யோசித்து பாரும்மா அப்புறம் உன் இஷ்டம்” என்றவாறே அவளை அவளது செல்லின் உள்ளே விட்டு விட்டு செல்ல அவளோ யோசனையோடு தன் முன்னால் இருந்த சுவற்றை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.
***********************************************
தன்னுடைய வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு ஸ்டேஷனிற்குள் சித்தார்த் நுழைந்து கொள்ள எப்போதும் போல அவனது துணைக் காவலளர்கள் வைத்த சல்யூட்டிற்கு ஒரு சிறு தலை அசைவை பதிலாக கொடுத்தவன் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்து அடைந்து கொண்டான்.
தன் அறைக்குள் நுழைந்து கொண்டவனது மனம் முழுவதும் ஏதோ ஒரு வெறுமையான உணர்வு சூழ்ந்து இருந்தது.
மேக்னா திடீரென்று அவ்வளவு தூரம் கோபம் கொண்டு சத்தமிடுவாள் என்று அவன் எள்ளளவும் நினைத்து இருக்கவில்லை.
அவளது கண்கள் ஆரம்பத்தில் அவனைப் பார்த்ததுமே காட்டிய ஆர்வம் ஏதோ ஒரு புது உணர்வை அவன் மனதிற்குள் வித்திட்டு இருந்தது.
அதை தொடர்ந்து அவள் எழுப்பிய அந்த உரிமையான கேள்வி அந்த வித்தை சற்று துளிர்க்கவும் செய்தது.
ஆனால் அதை தொடர்ந்து வந்த அவளது கோபம் அந்த துளிரை சூறாவளியாக மாறி சூறையாடி இருந்தது.
ஆரம்பத்தில் அவளை நீதிமன்றத்தில் வைத்து பார்த்த போது அவன் மனதில் இவ்வாறான எந்த ஒரு எண்ணமும் இருக்கவில்லை.
நாளாக நாளாக அவளை பற்றிய எண்ணங்கள் ஏனோ அவனை ஆக்கிரமித்து கொள்வது போல இருக்க முதன்முதலாக ஒரு அச்ச உணர்வு அவனை சூழ்ந்து கொண்டது.
மேக்னாவின் எண்ணங்கள் தன்னை சூழ்ந்து கொண்டு மூச்சு முட்ட செய்வது போல இருக்கவே அவசரமாக அந்த அறையின் ஜன்னல் புறமாக வந்து நின்றவன் சற்று நேரம் வெளிக் காற்றை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டு நின்றான்.
என்னவென்று தெரியாத ஒரு உணர்வு தன்னை அவளை நோக்கி ஈர்த்து செல்கிறது என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது.
தனக்குள் ஏற்படும் இந்த மாற்றங்கள் எல்லாம் சரி இல்லை என்று அவன் தன் மனதை கட்டுப்படுத்தி இனி இதை பற்றி யோசிக்கவே கூடாது என்று நினைத்து தன் வேலைகளை பார்க்க தொடங்கி இருக்க அந்த நேரம் பார்த்து அவனது தொலைபேசியும் அடித்தது.
புதிய எண் ஒன்று திரையில் ஒளிர சிறு யோசனையோடு அந்த அழைப்பை எடுத்தவன்
“ஹலோ! யாரு?” என்று கேட்க
மறுமுனையில்
“ஹ…ஹலோ! நான் மேக்னா பேசுறேன்” என்று வந்த பதில் அவன் இத்தனை நேரமாக உருவாக்கிய கட்டுக்கோப்புக்களை எல்லாம் ஒரே நொடியில் தரைமட்டமாக்கியது…….