KP-7

KP-7

குறும்பு பார்வையில் – 7

ஆகாஷ் அவன் எதிரே இருந்த நாற்காலியை நோக்கிக் கைகாட்ட, அதில் அமர்ந்த கார்த்திக் சிறிதும் தயக்கமின்றி நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“ஆகாஷ்! நீங்க எந்த நோக்கத்தில் ஸ்ருதியோட பழகுறீங்க?” என்று கார்த்திக் ஆகாஷின் கண்களைப் பார்த்துக் கேட்க, ‘இவன் என்னை பத்தி என்ன நினச்சிட்டு இருக்கான்? பணக்கார பசங்கன்னா… அரசியல்வாதியோட பையன்னா… பிக் ஷாட்ன்னா… மோசமா தான் இருக்கணுமா? இவனும் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை தானே?’ என்ற எண்ணத்தோடு ஆகாஷின் கை முஷ்டிகள் இறுகி, கண்கள் சிவந்து கோபம் விர்ரென்று ஏறியது.

ஆகாஷ் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். அங்கு மௌனமே நிலவியது.

‘கார்த்திக் ஏன் இப்படி கேட்குறான்? நம்ம கிட்ட மரியாதையா நடந்துப்பானே? ஸ்ருதி மேல் உள்ள அக்கறையா? இந்த அக்கறையின் அளவு என்ன?’ என்ற யோசனையோடு ஆகாஷ் தன் கண்களைச் சுருக்கி கார்த்திக்கை அளவிடும் விதமாகப் பார்த்தான்.

‘ஏதோ ஒரு கேள்விக்குப் பதில் வேண்டும்…’ என்பது போல் கார்த்திக் ஆகாஷை கூர்மையாகப் பார்த்தான்.

‘இவனின் அக்கறை எந்த அளவுக்கு போகும்?’ என்ற எண்ணம் தோன்ற ஆகாஷின் குறும்பு எட்டிப் பார்த்தது.

“என்ன கேள்வி கார்த்திக் இது? என்னை மாதிரி பணக்கார பசங்களுக்கு, என் ஸ்டேடஸ்க்கு இல்லைனாலும், ஓகே ஸ்டேடஸ்ல இருக்கிற ஸ்ருதி மாதிரி பொண்ணுங்க குட் டைம் பாஸ்…” என்று அசட்டையாகக் கூறினான் ஆகாஷ்.

“ஆகாஷ்…” என்று கர்ஜித்தான் கார்த்திக்.

கார்த்திக்கின் கோபம், ஆகாஷின் குறும்பை இன்னும் சீண்டியது. கார்த்திக்கின் கோபத்தின் அளவை பார்த்துவிட முடிவு செய்தான் ஆகாஷ்.

“ஸ்ருதி… என் கண்டுபிடிப்பை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்தியிருக்கா. நான் யாருன்னு ஸ்ருதி தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று ஆகாஷ் அவன் ஒற்றை புருவத்தை உயர்த்த, “எனக்கும் அது தான் சந்தேகம்.” என்று கார்த்திக் முணுமுணுத்தான்.

“அது தான் ஸ்ருதியை விரும்புற மாதிரி நடிச்சி, அவளுக்கு நான் யாருன்னு காட்டணுமுன்னு… மொத்தத்தில் உங்க தோழியோட வாழ்க்கை, பிசினெஸ் ரெண்டையும் ஒண்ணுமில்லாம பண்ணனும்னு…” என்று ஆகாஷ் பேசிக்கொண்டே போக, “ஏய்! என்ன சொன்ன?” என்று கேட்டுக்கொண்டே, ஆகாஷின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் கார்த்திக்.

‘கார்த்திக் கோபப்படுவான்…’ என்று எதிர்பார்த்திருந்த ஆகாஷ், அவனின் இந்த செய்கையை எதிர்பார்க்கவில்லை.

“யாரை பார்த்து டைம்பாஸ்ன்னு சொல்ற? யார் வாழ்க்கையை யார் அழிக்குறது? உன்னை… உன்னை…” என்று மேலும் வார்த்தை வராமல் தடுமாறினான் கார்த்திக்.

கார்த்திக்கின் கைகள் இன்னும் ஆகாஷின் சட்டையைக் கொத்தாகவே பிடித்திருந்தது.

“ஸோ… உங்க தோழிக்காக நீங்க எந்த அளவுக்குனாலும் போவீங்க. என்னை உங்க தோழி எதிர்த்தப்ப உங்களுக்கு பிடிக்கலை. எதுக்கு வம்புன்னு சொன்னீங்க? ஆனால், அதெல்லாம் இப்ப இல்லை. ம்…” என்று ஆகாஷ் சிரித்துக் கொண்டே புருவம் உயர்த்தினான்.

‘ஆகாஷ் அப்பொழுது பேசிய வார்த்தைகள் வேறு. இப்பொழுது பேசுவது வேறு, ஆனால் அவன் உடல் மொழி கூறுவது?’ கார்த்திக் குழப்பத்தில் திடுக்கிட்டான்.

‘ஆகாஷ் நினைத்திருந்தால், என்னை விலக்கி விட முடியாதா?’ என்ற கேள்வி மனதில் எழ, கார்த்திக்கின் கைகள் தானாகக் கீழே இறங்கியது.

கார்த்திக், நல்ல வாட்டசாட்டமான இளைஞன் தான். ஆகாஷும் அவனுக்குச் சளைத்தவன் இல்லையே?

கார்த்திக் விலகி நிற்கவும், புருவம் உயர்த்தி கேலியாகச் சிரித்தான் ஆகாஷ்.

‘ஆகாஷுக்கு கோபம் வராதா? இவன் என்னைக் கேலி செய்திருக்கிறானா? சட்டென்று கோபப்படும் ஸ்ருதிக்கும், இவன் குறும்பு பேச்சுக்கும் ஒத்துவருமா? ஸ்ருதிக்கு இவன் சரி வருவானா?’ போன்ற கேள்விகளோடு, கார்த்திக் மௌனித்தான்.

“முதல்ல உட்காரு கார்த்திக்.” என்று கார்த்திக் பிடித்திருந்ததால் கசங்கி இருந்த சட்டையைச் சரி செய்தான் ஆகாஷ்.

“உங்க தோழியை விட, உங்களுக்கு கோபம் அதிகமா வருதே? ரெண்டு பெரும் எப்படி பிசினெஸ் பார்த்துக்க போறீங்க? வாழ்க்கையில் பொறுமை ரொம்ப முக்கியம்.” என்று நமுட்டு சிரிப்போடு பேசினான் ஆகாஷ்.

‘இவன் பேசியது கேலியா? கேலிக்கு ஒரு அளவில்லையா?’ என்ற எண்ணத்தோடு, “நீங்க சொன்ன வார்த்தை…” என்று கார்த்திக் தடுமாறினான். கார்த்திக் இப்பொழுதும் மன்னிப்பு கேட்க வில்லை. ஆகாஷ் பேசிய வார்த்தைகள் இன்னும் கார்த்திக்கின் மனதில் நெருஞ்சி முள்ளாக!

“ஒரு கேலி தான்… உன் கோபம் எவ்வளவு தூரமுன்னு பாரக்கனுமுனு தான்…” என்று சிரித்தான் ஆகாஷ்.

‘நல்ல கேலி தான். என்னிடம் தப்பித்தான். இப்படி சீண்டும் விதமா பேசிக்கிட்டே இருந்தா, ஸ்ருதி மொத்தமா குடுப்பா. அன்னைக்கு இருக்கு இவனுக்கு.’ என்று எண்ணியபடி சிரித்து வைத்தான் கார்த்திக்.

“என்ன எண்ணமுன்னு கேட்டா என்ன அர்த்தம்?” என்று குழல் ஊதும் கண்ணன் போல் குறும்பாகச் சிரித்தான் ஆகாஷ்.

‘அதை கேட்க தான் நான் வந்தேன். பிடிச்சிருந்தா கல்யாணம் பேச வேண்டியது தானே? இந்த பொறுப்பில் இருக்கிறவனுக்கு காதல் எல்லாம் தேவையா?’ என்ற எண்ணத்தோடு, ‘பொறுமையா இருப்போம்.’ என்று முடிவெடுத்துக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தான் கார்த்திக்.

“ஒரு பொண்ணு கிட்ட என்ன நோக்கத்தில் பழகுவாங்க?” இம்முறை ஆகாஷின் குரலில் தீவிரம் வந்திருந்து.

“நான் ஸ்ருதியை விரும்புறேன்.” ஆகாஷின் குரலில், முகத்தில் காதல் வழிந்தோடியது.

“அப்ப கல்யாணம் பேச வரவேண்டியது தானே?” என்று கார்த்திக் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

ஏதோ உணர்ந்தவன் போல், “ஸ்ருதி ஏதாவது சொன்னாளா?” என்று ஏக்கமாக, ஆசையாக, ஏமாற்றமாக குரலில் அனைத்தும் கலந்து கேட்டான் ஆகாஷ்.

‘எதுவும் சொல்லிருப்பாளோ?’ என்ற ஏக்கம் , ‘தன் கேள்விக்குப் பதில் கிடைக்குமோ?’ என்ற ஆர்வம், ‘தன்னை விட கார்த்திக் நெருக்கமோ?’ என்ற ஏமாற்றம் என அனைத்தும் கலந்து ஒலித்தது ஆகாஷின் குரல்.

ஆகாஷின் கேள்விக்குப் பதில் போல், மறுப்பாகத் தலை அசைத்தான் கார்த்திக்.

“உங்களை முதல் முறை சந்தித்ததை சொன்னா ஸ்ருதி. ஆனால், மீட்டிங் அப்புறம் நீங்க ஒரு தடவை சந்திச்சிருக்கீங்க.. அதை ஸ்ருதி என்கிட்ட சொல்லலை.” என்று கார்த்திக் கூறினான்.

அந்த கடற்கரை சந்திப்பு, பூவென அவள் தேகம் நினைவு வர, ஆகாஷின் முகம் வெட்கம் கலந்த பூத்தது. ‘சொல்லவில்லை…’ என்பதிலும் ஒரு மகிழ்ச்சி.

ஸ்ருதிக்கு தனக்கும் ஏதோ புது உறவு முளைத்தது போல் ஆகாஷின் முகத்தில் பிரகாசம்.

“ஓ…” என்றான் சொல்லில் வடிக்க முடியாத உணர்ச்சியோடு.

கார்த்திக் ஆகாஷை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், “நானும், ஸ்ருதியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், எங்க வீட்டிலும், அவ வீட்டிலும் நாங்க ஒரே பிள்ளை தான். ஆனால், எங்களுக்கு அந்த எண்ணமே வந்ததில்லை. அவ என்னை ஒரு நண்பனா மட்டும் பார்க்கலாம். ஆனால், நான் ஸ்ருதியை தோழியா மட்டுமில்லை, அதுக்கும் மேல ஒரு சகோதரியோ தான் பாக்குறேன். சில நேரங்களில் அவ அக்கா. பல நேரங்களில் அவ எனக்கு தங்கை தான்.” என்று நீண்ட விளக்கமாக பேசினான் கார்த்திக்.

தன் பேச்சால், கார்த்திக்கிற்கு உண்டான கோபத்தை, ஆகாஷால் இந்த நொடி முழுதாக புரிந்து கொள்ள முடிந்தது.

ஆகாஷ் தலை அசைத்துக் கொண்டான்.

“எங்க குடும்பத்திற்கும் எல்லா செல்வாக்கும் இருக்கு. ஆனால், உங்க குடும்பம் அளவுக்கு கிடையாது. நீங்க ஒரு பெரிய பிசினெஸ் டைக்கூன். காதல், அப்படி இப்படின்னு பேச்சு வந்தா ஸ்ருதி பெயர் கேட்டு போயிரும். ஸ்ருதியின் பெயர் எந்த விதத்திலும் கெட்டு போயிட கூடாது. அதனால் தான்…” என்று கார்த்திக் தன்னிலை விளக்கம் போல், தான் வந்ததற்கான காரணத்தைக் கூறிவிட்டு, மேலும் பேச முடியாமல் தடுமாறினான்.

கார்த்திக்கிற்கு மேலும் சங்கடத்தை கொடுக்க விரும்பாமல், “இல்லை கார்த்திக்… நீ சொல்றது சரி தான். நானும் இந்த விஷயத்தை மேலும் இழுக்க விரும்பலை. ஆனால், உங்க தோழியோட சம்மதம் வேணும். அட்லிஸ்ட் அவங்க மனசாவது தெரியணும். அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என்று ஆகாஷ் இறங்கிப் பேச, கார்த்திக் தடுமாறிவிட்டான்.

‘இவன் எத்தகைய மனிதன். இவன் இடத்தில் இருக்கும் யாரவது இப்படி எனக்கு விளக்கம் கொடுப்பாங்களா?’ என்ற எண்ணம் தோன்ற, “இல்லை… நான் அப்படி நடந்துக்கிட்டது…” என்று கார்த்திக் ஆரம்பித்தான்.

“உங்க பார்வையில் சரி தான்.” என்று ஆகாஷ் புன்னகையோடு முடித்து விட்டான்.

“தேங்க்ஸ்…” என்று தான் வந்த வேலை முடிந்துவிட்டது போல், கார்த்திக் எழுந்து கொள்ள, அவனுக்கு ஜூஸ் கொடுத்து விருந்தோம்பல் செய்து அனுப்பி வைத்தான் ஆகாஷ்.

நாட்கள் அதன் போக்கில் நகர, இவர்கள் சந்திக்கும் வாய்ப்பும் அத்தனை எளிதில் அமையவில்லை. இல்லை ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்புகளை அவர்களாகவே தவிர்த்து விட்டார்களோ?

‘கார்த்திக் கூறுவதிலும் ஓர் அர்த்தம் இருக்கு. அடிக்கடி நான் ஸ்ருதியை பீச்சில் சந்திக்குறது நல்லதில்லை…’ என்று எண்ணிக்கொண்டு ஆகாஷ் தன் நேரத்தை மாற்றிக்கொண்டான்.

ஸ்ருதியின் எண்ணப்போக்கு அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

அன்று ஆராய்ச்சி சம்பந்தமான சந்திப்பு.

ஸ்ருதி அரக்கு நிறத்தில் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள், சந்தன நிறத்தில் பூக்கள். அதே சந்தன நிறத்தில் டாப்ஸ். மெலிதான முத்து மாலை. ஒரு குட்டி முத்து ஜிமிக்கி. கார்த்திக் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.

கார்த்திக் அவளை மேலும் கீழும் பார்த்தான். அலங்காரம் செய்திருந்தாள் என்றெல்லாம் கூற முடியாது. ஆனால், ‘வழக்கத்தை விடச் சற்று அதிகமோ?’ என்ற எண்ணம் தோன்ற, “மீட்டிங்க்கு வர மாதிரி இல்லை. ஏதோ கல்யாண வீட்டுக்கு போற மாதிரி இருக்கு.” என்று கார்த்திக் நக்கலடித்தான்.

“உங்க ஊரில், கல்யாணத்துக்கு இவ்வளவு சிம்பிளா தான் போவாங்களா?” என்று ஸ்ருதி அவனிடம் மல்லுக்கு நிற்க, “சரி… சரி… வா போவோம்.” என்று சமாளித்தான் கார்த்திக்.

இருவரும் இம்முறை ஒன்றாகவே நேரத்திற்கு வந்துவிட்டனர். ‘பார்க்காத… பார்க்காத…’ என்று ஸ்ருதி உருபோட்டுக்கொண்டாலும், அவள் கண்கள் அவனைத் தேடியது.

‘ஆகாஷை காதலிச்சு… கீதலிச்சு தொலைச்சிருவேனோ?’ என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டாள் ஸ்ருதி.

‘சீக்கிரம் போகவேண்டாம். தேவை இல்லாத பேச்சு வரும். நானும் என் வசமில்லை.’ என்று வழக்கம் போல் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தான் ஆகாஷ்.

அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டான். அவளும் புன்னகை புரிந்தாள்.

அழகாக, ஆனால் அளவாக…

ஆகாஷின் கண்கள் யாரும் அறியாமல் அவளைப் படம் பிடித்துக்கொண்டது.

‘ஆழகான ராட்சசி…’ அவன் எண்ணம் தறிகெட்டு ஓட ஆரம்பித்தது.

‘அழகு தான்…ஆனால் அதை விட… அப்பப்பா…’ அவன் மேலும் சிந்திக்காமல் தன் எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினான்.

அங்கு நடந்து கொண்டிருந்த உரையாடலில் அவன் கவனத்தைத் திசை திருப்பினான்.

பலரும் பல கண்டுபிடிப்புகளைக் கூறினர். வாக்குவாதங்களும் அரங்கேறின.

இம்முறை ஸ்ருதி அவள் ப்ரொஜெக்ட்டை விளக்கினாள். வாகனங்களில், பயணிக்கும் பொழுது விபத்து ஏற்பட்டுவிட்டால், பக்கத்தில் இருக்கும் அவரச மருத்துவ ஊர்திக்குத் தானாகவே செய்தி அனுப்புவது போன்ற கருவி.

சில கேள்விகள் மட்டுமே எழும்பின.

கடந்த சந்திப்பின் எதிரொலி போல் ஆகாஷிடமிருந்து பல கேள்விகள் வரும் என்று பலர் எதிர்பார்த்திருக்க, ஆகாஷ் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவளை மௌனமாகப் பார்த்து தலை அசைத்தான்.

அடுத்த கட்டம் பற்றி பேச்சு எழும்ப, “ஐடியா நல்லாருக்கு. ஆனால், இதெல்லாம் செய்றதுக்கு தேவையான வசதி உங்க கம்பெனியில் இருக்கா?” என்று ஒருவர் கேள்வி கேட்க, ஸ்ருதி அவள் திட்டத்தை செயல்படுத்தும் விதமும், வேறு ஒரு கிளைன்ட் பற்றி பேசவும் இடைமறித்தான் ஆகாஷ்.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, எங்க கம்பெனியோடு சேர்ந்து ஒர்க் பண்ணலாம்.” என்று அவன் யோசனைக்கு விடை கிடைத்தவன் போல் பேசினான் ஆகாஷ்.

‘ஸ்ருதி அருகே இருக்கும் வாய்ப்பு. யாரின் வம்புப் பேச்சுக்கும் இடம் கொடுக்காமல்.’ என்று கணக்கிட்டுக் கொண்டான் ஆகாஷ்.

கார்த்திக், ‘ஆ…’ என்று கண்களை விரிக்க, “பெரும்பாலான வேலைகள் எங்க கம்பெனியில் தான் நடக்கும். உங்களுக்கு சம்மதம்னா எனக்கு ஒகே.” என்று ஸ்ருதி சட்டென்று பதில் கூறினாள்.

‘ஆகாஷ் கம்பெனியோடு ஒரு வாய்ப்பு. ஆனால், இந்த பொண்ணு இப்படி பேசுதே?’ என்று அனைவரும் சிந்திக்க, தன் நெற்றி புருவத்தைச் சுருக்கினான் ஆகாஷ்.

நொடியை விடக் குறைவாக, யாரும் அவனைக் கவனிக்குமுன் “ஒகே… தட்ஸ் குட்.” என்று முடித்துவிட்டான் ஆகாஷ்.

வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் ஆகாஷ்.

மீட்டிங் முடிந்ததும், “அது தான் நீங்க இணக்கமாகிடீங்கல்ல?அப்புறம் எதுக்கு முறைச்சிக்குற?” என்று கார்த்திக் ஸ்ருதியிடம் கேட்டான்.

“எது தான்?” என்று புரிந்தும் புரியாதது போல் கேட்டாள் ஸ்ருதி.

“ம்… நீயும், ஆகாஷும்…” என்று கார்த்திக் கூற, “ஓ… என்ன இணக்கம்?” என்று அதே பாணியில் கேட்டாள் ஸ்ருதி.

“அ… இணக்கம் இல்லை. திணக்கம்…” என்று பற்களை நறநறத்தான் கார்த்திக்.

ஸ்ருதியாக கூறாமல், எதையும் கேட்கக் கூடாது என்று முடிவோடு இருந்தான் கார்த்திக்.

ஸ்ருதியின் உதடுகள் மெலிதாக வளைந்தது. “நட்பு வேற… பிசினெஸ் வேற… இது நம்ம பிசினெஸ்… நம்ம உழைப்பு… நம்ம தன்மானம். ஐடியா நம்மளது. நம்ம கம்பெனியில் தான் நடக்கணும். நோ காம்ப்ரமைஸ்.” என்று ஸ்ருதி உறுதியாகக் கூற, தலை அசைத்துக்கொண்டான் கார்த்திக்.

‘நட்பு?’ என்று கேலி போல் ,ஸ்ருதியிடம் வாதிட வேண்டும் என்ற ஆசை கார்த்திக்கு எழும்பியது.

‘இதை கூட சாமாளிக்கலைனா, ஆகாஷ் ஸ்ருதியை எப்படி சமாளிப்பான்?’ என்ற எண்ணம் தோன்றப் பேச்சை வளர்க்காமல் முடித்துக்கொண்டான் கார்த்திக்.

ஆகாஷ் நேராக அலுவலகத்திற்கு சென்றான். வேலை என்றெல்லாம் கூற முடியாது. ஆனால்!

‘அச்சோ… டாலி… இவளை பார்த்தாலே நான் நானா இல்லை. அந்த லாங் ஸ்கர்ட்டில்… ப்பா என்ன அழகு. கொழுகொழுன்னு கன்னம். கண்டிப்பான கண்கள். லிப்ஸ்டிக் கூட போட்ட மாதிரி தெரியலை. ஆனால், சுண்டி இழுக்குதே. உண்மையில் இவ டாலி தான்.’ என்ற எண்ணத்தோடு “டாலி…” என்று முணுமுணுத்து கொண்டான் ஆகாஷ்.

‘பார்க்க பொம்மை மாதிரி…கையில் சின்ன பிள்ளை மாதிரி பொம்மை பை வேற. அந்த கண்ணும் என்னைப் பார்த்து சிரிக்குது.’ அவன் தன் சூழல் நாற்காலியில் அரை வட்டமிட்டான்.

‘பார்க்க கூடாதுன்னு தான் நினச்சேன். ஆனால், அந்த சந்தன நிற டாப்ஸ்க்கும், மெரூன் நிற ஸ்கிர்ட்க்கும் இடையில் அந்த இடுப்பு, என்னைப் பார்… என்னை பார்ன்னு கூப்பிடுதே.’ என்று வெட்கப்பட்டு தலையில் தட்டிக்கொண்டான் ஆகாஷ்.

‘ஒருவேளை இது தான் இடையினமோ?’ என்ற எண்ணம் தோன்ற, ‘இருக்கும்… இருக்கும்… கீதா ஏதோ வில்லங்கமா வச்சிருக்கா. அது தான் நம்ம கிட்ட சொல்ல மாட்டேங்குறா.’ என்று பின்னே சாய்ந்து தலை கோதி சிரித்துக் கொண்டான் ஆகாஷ்.

‘டாலி சிரிக்க கூட யோசிக்குறா? நான் அவளைப் பார்த்தா எக்கு தப்பா பேசிருவனோன்னு பயந்து ஓடி வரேன்.’ என்று தனக்கு தானே நொந்து கொண்டான்.

‘கீதா வேற மூணு ஸ்டேஜ் சொல்றா. இதுல நான் என்னைக்கு இடையினம்ன்னா என்னனு கண்டுபிடித்து, அதை தாண்டி வல்லினம் வந்து சேர்ந்து. கல்யாணம் பேசி…’ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுக்கு ஸ்ருதி பேசியது நினைவு வந்தது.

‘பெரும்பாலான வேலைகள் எங்க கம்பெனியில் தான் நடக்கும். உங்களுக்கு சம்மதம்னா எனக்கு ஒகே’

‘இது கர்வமா? இல்லை அவள் நம்பிக்கையா?’ என்ற கேள்வி ஆகாஷின் மனதில் எழுந்தது.

‘வேலை விஷயத்தில் கூட, சற்றும் இறங்காதவள் காதலில் விழுவாளா? அப்படியே ஸ்ருதி என்னை விரும்பினாலும் அவள் மனதை வெளிப்படுத்துவாளா?’ என்ற சந்தேகம் ஆகாஷின் மனதில் விழுந்தது.

‘ஸ்ருதியின் மனதை நான் எப்படித் தெரிந்து கொள்ள? அவளிடம் என் காதலை எப்படிச் சொல்ல?’ என்ற கேள்வி ஆகாஷின் மனதில் உழல ஆரம்பித்தது.

விரைவில் தன் வாழக்கையை திருமண கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று விழைந்தான் ஆகாஷ். அவன் எண்ணம் ஈடேறுமா?

குறும்புகள் தொடரும்…

 

error: Content is protected !!