மேக்னாவின் குரலை கேட்ட அந்த நொடி சித்தார்த்தின் இதயத்திற்குள் தாறுமாறாக புயலடிக்கத் தொடங்கியது.
என்னவென்று சொல்ல முடியாத ஒரு புத்துணர்ச்சி அவன் உடலெங்கும் பரவ அவனது மனமோ தாளமே இல்லாமல் குத்தாட்டம் போடத் தொடங்கியது.
“ஹலோ! இன்ஸ்பெக்டர் ஸார் லைனில் இருக்கீங்களா?” சித்தார்த்தின் புறம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே மேக்னா பதட்டத்துடன் மறுபடியும் அவனை அழைத்தாள்.
“ஹான்…சொ…சொல்லுங்க மேக்னா என்ன விஷயம்?”
“காலையில் நான் உங்க கூட கோபமாக பேசிட்டேன் ஐ யம் ஸாரி ஸார்”
“அது அது பரவாயில்லை மேக்னா நீங்க என்ன விஷயமாக எனக்கு போன் பண்ணிங்க?”
“அது வந்து ஸார்…”
“ஒரு நிமிஷம் இருங்க ஆமா நீங்க இப்போ எப்படி போனில் பேச முடியும்? செல்லில் இருக்குறவங்க போன் பாவிக்க முடியாதே! யாருக்கும் தெரியாமல் போன் வைத்து இருக்கீங்களா? எத்தனை நாளாக இந்த வேலை நடக்குது? இல்லை யாராவது போன் சப்ளை பண்ணுறாங்களா? எதுவாக இருந்தாலும் வார்டன் முன்னாடி பண்ண முடியாதே? அப்புறம் எப்…” சித்தார்த் அந்த வசனத்தை முழுமையாக கூறி முடிப்பதற்குள் மேக்னா தன் அழைப்பை துண்டித்து இருந்தாள்.
“என்ன ஆச்சு ம்மா?” மேக்னாவின் அருகில் நின்று கொண்டிருந்த வார்டன் பெண்மணி அவளது தோளில் தன் கை வைத்து கேட்க
பதட்டத்துடன் அவரைத் திரும்பி பார்த்தவள்
“இது சரியா வராது விமலாம்மா ஒரு போன் பண்ணதற்கே அந்த இன்ஸ்பெக்டர் ஆயிரம் கேள்வி கேட்குறாரு இதில் நமக்கு எங்கே அவர் உதவி செய்ய போறாரு? வேண்டாம் விமலாம்மா விட்டுடுங்க நான் வேறு ஏதாவது வழி இருக்கான்னு பார்க்குறேன் நீங்க ரொம்ப நேரம் இங்கே இருக்குறது சரி இல்லை கிளம்புங்க” என்று கூறவும் அவரும் அவளை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி சென்றார்.
அவர் சென்றதை உறுதிப்படுத்திய பின் அங்கிருந்த திட்டில் வந்து அமர்ந்து கொண்டவள் மனமோ தனது பழைய நினைவுகளையே அசை போட்டு கொண்டு இருந்தது.
தனபாலன் என்கிற அந்த தனி மனிதனால் தானே தன் வாழ்க்கை இன்று இந்த நிலைக்கு மாறி இருக்கிறது.
அந்த தனபாலன் தங்கள் வாழ்க்கையில் வந்து இருக்காவிட்டால் அவள் இன்று இந்த நிலைக்கு வந்து இருக்க கூடுமா என்பது அவளுக்கு தெரியாது.
அந்த தனி மனிதன் தன் வாழ்க்கையில் நுழைந்தது நல்லதற்கா? கெடுதலுக்கா? அதுவும் அவளுக்கு இன்று வரை தெரியாது.
தன் கல்லூரி படிப்பை முடித்த கையோடு மேக்னாவிற்கு குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் ஒரு கம்பெனியில் கணக்காளராக வேலையும் கிடைத்தது.
தனக்கு வேலை கிடைத்த சந்தோசமான செய்தியை ராணியிடம் பகிர்ந்து கொள்வதற்காக வெகு ஆவலுடன் அவரைத் தேடி துள்ளலோடு ஓடி சென்றாள் மேக்னா.
“அம்மா! எனக்கு வேலை கிடைச்சாச்சு!” சந்தோஷ ஆரவாரத்துடன் சத்தமிட்ட படி ராணியின் அலுவலக அறையை நோக்கி ஓடி வந்தவள் அங்கே ராணியுடன் மும்முரமாக பேசி கொண்டிருந்த அந்த புதிய நபரைப் பார்த்து சட்டென்று தடுமாறி அந்த இடத்திலேயே நின்றாள்.
மேக்னா அங்கே வரக்கூடும் என்று எதிர்பார்த்திராத ராணி அதிர்ச்சியோடு எழுந்து நிற்க அந்த நபரும் ஆச்சரியமாக அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றார்.
அவசரமாக தன் முகத்தை சரி செய்து கொண்டு மேக்னாவின் முன்னால் பதட்டத்துடன் வந்து நின்ற ராணி
“இங்கே எல்லாம் எதற்கு வந்த மேக்னா? முதலில் இங்கே இருந்து கிளம்பு என் அனுமதி இல்லாமல் இந்த இடத்திற்கு நீ வரக்கூடாது” சற்று அதட்டலான குரலில் கூற அவளோ அவரது அந்த பதட்டத்தையும், அதட்டலையும் பார்த்து திடுக்கிட்டு போய் நின்றாள்.
“அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு ம்மா? எதற்கு எவ்வளவு பதட்டமாக இருக்கீங்க?” தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டு கேட்ட மேக்னாவின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அவளது கையை பிடித்துக் கொண்டு ராணி அங்கிருந்து செல்லப் போக அந்த நபரோ அவர்கள் இருவருக்கும் முன்னால் வந்து நின்றார்.
மேக்னா நல்ல மெலிந்த தேகத்தை கொண்டவளாக இருந்தாலும் அவள் அணிந்திருந்த வெண்ணிற காட்டன் சுடிதார் அவளது வெண்ணிற தேகத்திற்கு வாகாகப் பொருந்தி இருந்தது.
“என்ன ராணி உனக்கு இவ்வளவு அழகான பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லை” அந்த நபரின் பார்வை மேக்னாவை அளவிடுவதைப் பார்த்து கோபமாக அவர் முன்னால் வந்து நின்றவர்
“தேவையில்லாத பேச்சு எல்லாம் உங்களுக்கு வேண்டாம்” என்று கூறவும்
மேக்னாவோ பதட்டத்துடன்
“அம்மா ப்ளீஸ் அமைதியாக இருங்க எதற்காக இவ்வளவு கோபப்படுறீங்க?” என்று கேட்டாள்.
“ராணி அது தான் உன் பொண்ணு கேட்குறா இல்லை சொல்லும்மா நான் யாருன்னு”
“தனபாலன் இது எனக்கும், என் பொண்ணுக்கும் இடையில் நடக்கும் விஷயம் அதில் நீங்க தலையிட வேண்டாம் நீங்க அங்க போய் உட்காருங்க” சற்று தள்ளி இருந்த கதிரை ஒன்றை சுட்டிக் காட்டியவர் மேக்னாவை அங்கிருந்து இழுத்து கொண்டு சென்றார்.
“அம்மா! என்னம்மா ஆச்சு உங்களுக்கு? எதற்கு இப்படி எல்லாம் பண்ணுறீங்க?” மேக்னா எழுப்பிய கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் அவள் கை பற்றி இழுத்துக் கொண்டு வந்தவர் அவளது அறைக்குள் அவளை விட்டு விட்டு
“நான் சொல்லாமல் என் ஆபிஸ் பக்கம் இனிமேல் நீ வரக்கூடாது எதுவாக இருந்தாலும் நான் உன் ரூமிற்கு வந்த பிறகு பேசலாம் இப்போ நீ இங்கேயே இரு” சற்று கண்டிப்பான குரலில் கூறி விட்டு செல்ல அவளோ கண்கள் கலங்க அவரைப் பார்த்து கொண்டு நின்றாள்.
‘எனக்கு வேலை கிடைத்ததும் எவ்வளவு சந்தோசமாக அம்மா கிட்ட சொல்ல வந்தேன் ஆனா அம்மா அதை சொல்ல கூட விடாமல் இப்படி கோபமாக பேசிட்டு போறாங்க! எல்லாம் அம்மா முன்னாடி இருந்த அந்த ஆளால் வந்தது யாரு அந்த ஆளு? அம்மா ஏன் அந்த ஆளை பார்த்து டென்ஷன் ஆகணும்? இதற்கு முன்னாடி அந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!’ ஆசையாக சொல்ல வந்த விடயம் மறந்து போய் அந்த இடத்தை பல கேள்விகள் சூழ்ந்து கொள்ள அந்த கேள்விக்கான பதில் தெரியாமல் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள் மேக்னா.
மறுபுறம் கோபமாக தனது அலுவலக அறைக்குள் நுழைந்த ராணி அங்கிருந்த நாற்காலியில் சட்டமாக அமர்ந்து கொண்டிருந்த நபரின் முன்னால் வந்து நின்று
“தனபாலன் இது வரை நீங்க பல வகையில் எனக்கும், இந்த ஆசிரமத்திற்கும் தொந்தரவு தந்து இருக்கீங்க இருந்தாலும் நீங்க எங்களுக்கு இந்த ஆசிரமத்தை நடத்த பல வகையில் உதவிகள் பண்ணுறதால நீங்க பண்ண தொந்தரவு எதையும் நான் பெரிதாக எடுக்கல ஆனா அதையே காரணமாக வைத்து என் பொண்ணு கிட்ட வம்பு வளர்க்க நினைக்காதீங்க” என மெல்லிய குரலில் அதே நேரம் அழுத்தமாக கூற
அந்த நபரோ புன்னகையுடன்
“என்ன ராணி வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு என் பொண்ணுன்னு சொல்லுற? அவ நீ பெத்த பொண்ணா? இல்லை தானே? இங்கே இருக்கும் அனாதை பசங்க மாதிரி அவளும் ஒரு அனாதை தானே?” என்று கூறவும்
“தனபால்!” ராணி சீற்றத்தோடு சத்தமிட்டார்.
“ஹே! என்ன ராணி புதுசா குரல் எல்லாம் உயர்த்துற? என்ன பழசு எல்லாம் மறந்து போச்சா? நான் வேணும்னா மறுபடியும் ஞாபகப்படுத்துவா?” தனபாலனின் கேள்வியில் பதில் பேச முடியாமல் தலை குனிந்து நின்றார் ராணி.
“இது என் ராச்சியம் நடக்கும் ஏரியா இங்கே என்னை மீறி உன்னால் எதுவும் பண்ண முடியாது அதனால இந்த உணர்ச்சி வசப்பட்டு வார்த்தை விடுற வேலை எல்லாம் விட்டுட்டு வழக்கம் போல இங்கே இருக்கும் பசங்களை வெளியூரில் நல்ல விலைக்கு அனுப்பும் வழியை பாரு அப்புறம் உன் பொண்ணு தானே அவ? இன்னும் எத்தனை நாளைக்கு அவளை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றிக்கோ ஏன்னா என் கண்ணில் பட்ட எந்த பொருளையும் நான் அவ்வளவு சாதாரணமாக மங்கி போக விட்டதில்லை நான் வரட்டா?” என்று விட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற ராணியின் தோளில் தட்டிக் கொடுத்தவாறே தனபாலன் அங்கிருந்து வெளியேறி செல்ல அவரோ தன் தலையில் கை வைத்த வண்ணம் இடிந்து போய் அமர்ந்தார்.
‘எது நடக்க கூடாதுன்னு தயங்குனேனோ அது இப்போ நடக்க போகுதே! மற்ற பிள்ளைகளுக்கு நான் செய்த பாவம் இப்போ நான் ஆசையாக வளர்த்த என் பொண்ணுக்கு திரும்ப பார்க்குதே! அந்த தனபாலன் மேக்னா கிட்ட! இல்லை! இல்லை! அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது முதலில் மேக்னாவை இங்கே இருந்து அனுப்ப வேண்டும் அந்த தனபாலன் கண்ணில் அவ படவே கூடாது’ ராணி வெகு தீவிரமாக தனபாலன் கண்ணில் இருந்து மேக்னாவை தப்பிக்க செய்ய எண்ணி இருக்க காலத்தின் கோலமோ அவளே மீண்டும் அந்த வலையில் சிக்க வேண்டும் என்று விதித்து இருந்தது.
‘அப்போ இந்த பசங்க?’ மீண்டும் அவர் மனம் கேள்வி எழுப்ப
‘மறுபடியும் வேறு எங்காவது போயிடலாம்’ என அவரது ஒரு புற மனது பதில் அளித்தது.
‘இது நடக்குமா?’ மறுபுற மனது முரண்டு பிடிக்க
‘வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை தனபாலன் மாதிரி கழுகுகள் இல்லாத நிம்மதியான, பாதுகாப்பான இடத்திற்கு சென்றால் போதும்’ காலம் கடந்த ஞானோதயம் அந்த முரண்டு பிடித்த மனதை அடக்கி வைத்தது.
தன் மனதிற்குள் இருந்த திட்டத்தை உடனே செயல்படுத்தும் விதமாக தனக்கு தெரிந்த ஒன்றிரண்டு நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் இருந்து செல்வதற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் வேக வேகமாக செய்து முடித்தார்.
அதே வேகத்தோடு மேக்னாவை காண விரைந்து வந்தவர் அவளது அறைக் கதவை தட்டி விட்டு விட்டு காத்து நிற்க அவளோ
“கதவு திறந்து தானே இருக்கு!” என்று ஒற்றை வாக்கியத்தோடு தன் பேச்சை நிறுத்தி கொண்டாள்.
பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே சாத்தி இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு ராணி உள்ளே நுழைய அங்கே மேக்னா ஜன்னல் ஊடாக வெளியே பார்த்து கொண்டு நின்றாள்.
சற்று தயக்கத்துடன் அவளருகில் வந்தவர் அவளது தோளில் தன் கையை வைக்க அவளோ எதுவும் பேசாமல் வெளிப்புறமாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.
“மேக்னா! என் மேல் கோபமாக இருக்கியா?”
“உங்க மேல கோபப்பட நான் யாரு?”
விட்டேற்றியாக வந்த மேக்னாவின் பதிலிலேயே அவளது கோபம் நன்றாக தெரிந்தது.
“இங்கே பாரு மேக்னா”
“ஒண்ணும் வேணாம்” தன் தாடையில் வைத்த ராணியின் கையை தட்டி விட்டவள் கோபமாக நடந்து சென்று அந்த அறையின் மூலையில் இருந்த மேஜை மீதிருந்த காகிதத்தை அவரது கையில் திணித்து வைத்தாள்.
கேள்வியாக அவளை நோக்கியவாறே அந்த காகிதத்தை பிரித்து பார்த்தவர் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்து போனது.
“மேக்னா உனக்கு வேலை கிடைச்சுடுச்சா? ஹைய்யோ! என் பொண்ணு வேலைக்கு போற அளவுக்கு வளர்ந்துட்டாளா? என் கண்ணே!” மேக்னாவின் கன்னத்தை அவர் தட்டி கொடுக்கப் போக அவளோ வேண்டாம் என்பது போல தன் ஒற்றை கையை அவர் முன்னால் காட்டி விட்டு சற்று விலகி நின்றாள்.
“மேக்னா உன் கோபம் எனக்கு புரியுது ம்மா ஆனா என் பக்கம் இருக்கும் நியாயத்தை கொஞ்சம் கேளுடாம்மா”
“என்ன நியாயம்? பணத்திற்காக உங்களை நம்பி இருக்கும் ஆதரவற்ற பசங்களை எல்லாம் ஏதோ ஒரு ஜடம் மாதிரி விலை பேசி விற்குறீங்களே! அது தான் உங்க நியாயமா?” மேக்னாவின் கேள்வியில் ராணி அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றார்.
“என்ன அம்மா எதுவும் பேசாமல் இருக்கீங்க? ஓஹ்! இது எல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு ஷாக் ஆகி இருக்கீங்களா? நீங்க ப்ரியாவை அன்றொரு நாள் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்தீங்க இல்லையா? அந்த நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் ஒவ்வொரு பசங்க காணாமல் போவது எனக்கு நல்லா தெரியும் ஆனா அதற்கு நீங்களும் உடந்தையாக இருக்குறது தான் என்னால தாங்கிக்க முடியல ம்மா”
“இது எல்லாம்?”
“நீங்க உங்க ஆபிஸ் ரூம் பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னீங்க தான் இருந்தாலும் என்னால அதை அப்படியே விட முடியல அது தான் மறுபடியும் அங்கே வந்தேன் அப்போ தான் நான் கேட்டேன் ம்மா அந்த ஆளு உங்க கூட பேசுனதை எல்லாம் கேட்டேன் உங்களுக்கு தெரியாமல் நான் நீங்க பேசுவதை கேட்டது தப்பு தான் ஆனா அப்படி கேட்டதால் தான் எனக்கு உங்க உண்மையான ரூபம் தெரிய வந்தது உங்களை நம்பி வந்த பசங்களை எல்லாம் நீங்க…ச்சே!”
“போதும் மேக்னா நிறுத்து!” ராணியின் அதட்டலான குரலில் தூக்கி வாரிப் போட மேக்னா அவரை நிமிர்ந்து பார்க்க
கண்கள் சிவக்க அவள் முன்னால் வந்து நின்றவர்
“நீ பார்த்ததையும், கேட்டதையும் வைத்து நீயாகவே ஒரு முடிவுக்கு வராதே மேக்னா! உண்மையில் என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா? சொல்லு! உனக்கு தெரியுமா?” என்றவாறே அவளது தோள் பற்றி உலுக்கி கேட்க அவளோ அவரது கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தாள்.
“இத்தனை நாளா என் மனதிற்குள் மறைத்து வைத்த விஷயம், யாருக்கும் தெரியக்கூடாதுன்னு பாதுகாத்த விஷயம் இப்போ உனக்கும் தெரியப் போகுது” கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டு மேக்னாவை நிமிர்ந்து பார்த்தவர் தன் மனதிற்குள் மறைத்து வைத்த விடயங்களை எல்லாம் ஒன்று விடாமல் கூறத் தொடங்கினார்.
அவர் கூறியவற்றை எல்லாம் கேட்டு அதிர்ச்சியாகி நின்றவள் அவரருகில் வந்து அவர் தோளில் தன் கையை வைத்து
“இது…இது எல்லாம் உண்மையாம்மா?” என்று கேட்க
“நீ நம்பலனாலும் இது தான் உண்மை இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்தால் மீதமிருக்கும் பசங்களையும் இழந்துடுவேன்னு பயமாக இருக்கு அது தான் எங்கேயாவது போயிடலாம்னு இருக்கேன் நீயும் என் கூட வந்துடு மேக்னா இந்த ஊரு, இங்கே இருக்கும் ஆட்கள் யாரும் நமக்கு வேண்டாம்” அவர் அவளது கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தி கொடுத்தார்.
“எங்கேன்னு தெரியாத இடத்திற்கு எப்படிம்மா போறது? நமக்கு இவங்களை எல்லாம் பார்த்து கொள்ளும் அளவுக்கு வசதியும் இல்லையே!”
“வேற வழி இல்லை மேக்னா இதை தவிர வேற வழி இல்லை”
“இருக்கு ம்மா வழி இருக்கு”
“என்ன?” ஆச்சரியத்தோடு மேக்னாவை பார்த்து கொண்டு நின்றார் ராணி.
“எனக்கு இங்கே நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து இருக்கு ஒரு இரண்டு, மூன்று வருடங்கள் நான் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் கண்டிப்பாக நம்ம ஆசிரமத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்மா”
“ஆனா மேக்னா இங்கே எப்படி நாம தொடர்ந்து இருக்க முடியும்? அந்த தனபாலன்!?”
“நீங்க இங்கே இருக்க வேண்டாம்மா நீங்க எல்லோரும் நீங்க முடிவு பண்ண இடத்திற்கே போங்க நான் மட்டும் இங்கே இருக்கேன்”
“மேக்னா! உனக்கு என்ன மூளை குழம்பிடுச்சா? அந்த தனபாலன் இருக்கும் இடத்தில் உன்னை தனியாக விட்டுட்டு நான் எப்படி அங்கே நிம்மதியாக இருக்க முடியும்?”
“அந்த தனபாலன் இருக்கும் இடத்திற்கு நான் எப்படியும் போகப் போறதில்லை அதேமாதிரி நான் இருக்கும் இடம் அந்த தனபாலனிற்கு தெரியப் போறதில்லை நான் வேலை செய்யப் போற இடத்திற்கு பக்கத்திலேயே ஹாஸ்டல் ஒண்ணு இருக்கு நீங்க என்னை பற்றி பயப்பட வேண்டாம் முதலில் இந்த பசங்களை எல்லாம்
அந்த ஆளு கிட்ட இருந்து காப்பற்றணும்மா அது தான் முக்கியம்”
“ஆனா மேக்னா! இங்கே நீ தனியாக?”
“அம்மா! நீங்க தானே அடிக்கடி சொல்லுவீங்க பொண்ணோ, பையனோ வாழ்க்கையில் தைரியம் மட்டும் தான் நமக்கு எப்போதும் துணை இருக்கும் அதனால எந்த விடயத்தையும் தைரியமாக முகம் கொடுக்கணும்னு”
“மேக்னா கண்ணா!”
“எனக்கு தைரியம் சொல்லிக் கொடுத்தவங்க நீங்க இப்போ நீங்களே இப்படி தயங்கலாமா?” மேக்னாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிப்போடு அவளை பார்த்து கொண்டு நின்றார் ராணி.
மேக்னா எந்தளவுக்கு அமைதியாக இருப்பாளோ அதே அளவுக்கு கோபமும் அவளுக்கு உண்டு.
கல்லூரியில் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து அந்த கோபத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்ததே தவிர குறைந்தபாடில்லை.
அவளுக்கு கோபம் வந்தால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட புரியாது.
அதற்காக எல்லா விடயங்களிற்கும் அவள் கோபப்படுவாள் என்றில்லை தவறான ஒரு விடயம் அவள் கண்களில் பட்டால் மாத்திரமே அவள் கோபம் கொள்வாள் அதே நேரம் அதை முழுமையாக தீர்க்காமலும் அவள் விட மாட்டாள்.
சிறு வயதில் அவள் பார்த்த, அனுபவித்த விடயங்களே இவை எல்லாவற்றிற்கும் மூலகாரணம்.
ராணிக்கு மேக்னா பற்றி இருக்கும் மிகப் பெரும் கவலை அது மட்டுமே.
தான் இல்லாத நேரம் அவளது இந்த குணத்தால் அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று ராணி பயந்து நிற்க மேக்னாவோ அதை பற்றி கவலை கொள்ளவில்லை.
ஒரு வழியாக அவரோடு பேசி பேசி அவரது மனதை மாற்றியவள் சென்னையில் வேலை செய்வதற்கு அனுமதி வாங்கி இருக்க ராணியும் அரை மனதோடு இரண்டு நாட்கள் கழித்து தன்னுடன் இருக்கும் பிள்ளைகளை எல்லாம் அழைத்து கொண்டு வேறொரு ஊர் நோக்கி இரவோடு இரவாக புறப்பட்டு சென்றார்.
தன் மனது கொடுத்த ஏதோ ஒரு தைரிய உணர்வில் ராணியை அனுப்பி வைத்தவள் அதன் பிறகே தன்னை சுற்றி உள்ள உலகை எண்ணி மலைத்துப் போய் நின்றாள்.
தனபாலனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற உணர்வோடு மேக்னா தன் ஒவ்வொரு நாளையும் கடத்தி கொண்டு இருக்க கடவுளோ அவளாகவே தனபாலனை தேடி செல்லும் நிலையை அவளுக்கு ஏற்படுத்த காத்து இருந்தார்.
மேக்னா பழைய நினைவுகளோடு லயித்து நின்ற நேரம்
“மேக்னா! மேக்னா!” பதட்டத்துடன் அவளது சிறை அறையின் முன்னால் வந்து நின்றார் அவளால் விமலம்மா என்றழைக்கப்பட்ட வார்டன் பெண்மணி.
அவரது பதட்டத்தைப் பார்த்து குழப்பத்துடன் அவர் முன்னால் வந்து நின்றவள்
“என்ன ஆச்சு விமலம்மா?” என்று கேட்க
சற்று தயக்கத்துடன் தன் தொலைபேசியை அவளது புறமாக நீட்டியவர்
“இன்ஸ்பெக்டர் ஸார் லைனில் இருக்காங்க பேசும்மா!” என்று கூறவும்
“என்ன!?” அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அவரது போனை வாங்கியவள் தயக்கத்துடன் அதை தன் காதில் வைத்தாள்………