“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” ஐயரின் ஒலி மண்டபத்தை அதிரச் செய்ய மங்கள ஒலியோடு மாதவியின் கழுத்தில் அந்தப் புது மஞ்சள் தாலியைக் கட்டினான் இளஞ்செழியன்.
மாதவியின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாத அளவிற்கு அட்சதை அவர்கள் மேல் பொழிந்த வண்ணம் இருந்தது. மலர்களின் நறுமணமும் பன்னீர் சந்தன வாசமும் ஹோமப் புகையின் மணமும் அங்கே நின்றிருந்தவர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
அட்சதை தூவி ஓய்ந்த அனைவரும் அவரவர் இடங்களில் அமர்ந்து கொள்ள மாதவியைத் திரும்பிப் பார்த்தான் இளஞ்செழியன். முழு அலங்காரத்தில் அந்த வானலோகத்து இரம்பை போல அத்தனை அழகாக இருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டாரின் அந்தஸ்து ஏற்கனவே நன்றாகத் தெரிந்ததாலோ என்னவோ பெண் வீட்டார் எந்தக் குறையும் வைக்காமல் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்.
உமாசங்கர் மகளை நகைகளால் அலங்கரித்திருந்தார். கற்பகம் தனது மருமகளின் முகூர்த்தப் பட்டிற்காக செழியனின் இரண்டு வாரச் சம்பளத் தொகையை வெகு அசால்ட்டாகச் செலவு பண்ணி இருந்தார். ஆரஞ்சும் சிவப்பும் கலந்து நெய்யப்பட்டிருந்த அந்தச் சாமுத்திரிகாப் பட்டு மாதவிக்கு வெகு எடுப்பாக இருந்தது. தங்கப்பாவை போல ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
செழியன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியின் அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான். விட்டால் அவளை அப்போது அள்ளிக்கொண்டு போயிருப்பானோ!?
கருணாகரன் மகனின் கல்யாணத்தை வெகு கோலாகலமாக அரங்கேற்றி முடித்திருந்தார். நகரின் அனைத்து முக்கிய வியாபாரப்புள்ளிகள்,
அரசியல்வாதிகள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. வந்திருந்த ஜனத்திரளைப் பார்த்த பெண் வீட்டார் கொஞ்சம் பயந்துதான் போனார்கள். மாதவி மலைத்துப் போனாள்!
கல்யாணம் நகரத்தின் மிகச்சிறந்த மண்டபத்திலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தது. கல்யாணத்திற்கு அடுத்த நாளே ரிசப்ஷனை வைத்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் பிரியப்பட்டபோதும் அதற்குச் செழியன் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் ஒரு வாரம் கழித்தே ரிசப்ஷனை வைத்திருந்தார்கள்.
ஐயர் சொன்ன சடங்குகள் அனைத்தையும் முடித்து விட்டுப் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள் தம்பதியினர். கற்பகம் மருமகளை வாரி அணைத்துக் கொண்டார். கண்கள் கலங்க மகனையும் அணைத்துக் கொண்டவர்,
“இப்போ சந்தோஷமாடா?” என்றார். செழியனின் முகம் சிவந்து போனது. பக்கத்தில் நின்றிருந்த கருணாகரன் கொஞ்சம் இறுக்கமாகத்தான் நின்றிருந்தார். இதுவரை மாதவியிடம் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.
அடுத்து கண்கலங்க நின்றிருந்த மணமகளின் பெற்றோரிடம் ஆசி வாங்கிவிட்டு விஜயலக்ஷ்மி பரமசிவம் தம்பதியினரிடம் வந்தான் செழியன். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் மாதவியின் முகம் லேசாகக் கலங்கிப் போனது. ஆனால் அவர்கள் முகத்தில் எந்தச் சுணக்கமும் இருக்கவில்லை. மனம் நிறைய மணமக்களை வாழ்த்தினார்கள்.
“பெரியம்மா… சித்ரா…” மாதவி இழுக்கவும் சட்டென்று பேசினார் விஜயலக்ஷ்மி.
“அவ கிடக்குறா கழுதை விடும்மா. இன்னைக்கு உங்க வாழ்க்கையில மறக்கவே முடியாத நாள். இன்னைக்குப் பூரா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமானதை மட்டும் தான் யோசிக்கணும். வேற எந்த நினைப்பும் வரக்கூடாது புரியுதா?”
“ம்…” சரியென்று மாதவி தலையை ஆட்டிக் கொண்டாலும் அவள் மனதில் வருத்தம் இருந்தது. ஏனென்றால் சித்ரா திருமணத்திற்கு வரவில்லை.
அன்றைய பிரச்சனைக்குப் பிறகு என்ன நடந்தது என்று மாதவி எவ்வளவு செழியனைக் கேட்டிருந்த போதும் அதற்கு அவன் பதில் சொல்லியிருக்கவில்லை.
‘இப்போ எதுக்கு மாதவி இந்தத் தேவையில்லாத பேச்சு?’ என்று அவள் வாயை மூடி விட்டான். அதற்கு மேலும் வற்புறுத்திக் கேட்டால் கோபப்படுவானோ என்று மாதவி பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால் தகவல் வேறொரு இடத்தில் இருந்து கிடைத்தது.
அக்காவின் முகத்தில் பழைய சந்தோஷத்தைக் காணாமல் அருண் லேசாக வருத்தப்பட்டான்.
ஆனால் டாக்டர் கலகலப்பாகத்தான் இருந்தார். இப்போதெல்லாம் மாமனும் மச்சானும் ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டார்கள். அருண் லேசாகத் தயங்கிய போதும் செழியனுக்கு அதெல்லாம் ஒன்றுமே தோன்றவில்லை.
அன்று காலேஜில் வைத்து அர்ச்சனாவிடம் தகவலைக் கறந்திருந்தான் அருண். என்றைக்கும் இல்லாத வழமையாக கேன்டீனில் அமர்ந்திருந்த நண்பன் ஜூனியரைப் பற்றி விசாரிக்கவும் திகைத்துப் போனான் விஷால். அதுவும் அர்ச்சனா!?
‘என்னடா மச்சான்? என்ன ஆச்சு? திரும்பவும் ஏதாவது பிரச்சனையா?’
‘சேச்சே… அதெல்லாம் இல்லை. மாதவி முகத்துல ஏதோ மிஸ்ஸிங் டா. கேட்டாச் சொல்ல மாட்டேங்கிறா. ஒருவேளை இந்தப் பொண்ணுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமோன்னு நினைக்கிறேன்.’
‘ஓ… அப்போக் கேட்ரலாமா?’
‘ம்…’ அருண் சம்மதம் வழங்க சற்று நேரத்திலெல்லாம் வந்து சேர்ந்தாள் அர்ச்சனா. அருண் அத்தனை சுலபத்தில் பேச்சை ஆரம்பிக்க மாட்டான் என்பதால் நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டான் விஷால். பெண்கள் இருவரும் அன்று வந்திருக்கவில்லை. அருணும் விஷாலும் மாத்திரமே அமர்ந்திருந்தார்கள்.
‘உக்காருங்க அர்ச்சனா.’
‘கூப்பிட்டீங்களா சீனியர்?’ விஷாலைக் கேள்வி கேட்டாலும் கண்கள் அருணையே தொட்டு மீண்டது.
‘ஆமா… அருண் உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்னு சொன்னான்.’
‘ஓ…’ அவள் அருணை நிமிர்ந்து பார்க்க, அருணிற்குச் சங்கடமாக இருந்தது. காஞ்சனாவையும், முல்லையையும் தவிர வேறு எந்தப் பெண்களிடமும் அவ்வளவு பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டான். ஜூனியர் என்று அடாவடித்தனம் பண்ணியது கூட இவளிடம் தானே!
‘உங்க வீட்டுல ஏதாவது பிரச்சனையா?’ சட்டென்று அருண் கேட்கவும் இப்போது அர்ச்சனா திருதிருவென முழித்தாள்.
‘ஏன்… ஏனப்படிக் கேக்குறீங்க?’
‘இல்லை… ரெண்டு நாளா மாதவி முகம் டல்லா இருக்கு. கேட்டா என்னன்னு சொல்ல மாட்டேங்கிறா. இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்ச நாள்ல இருந்து ரொம்பக் கலகலப்பா இருந்தா. திடீர்னு என்ன ஆச்சு?
உங்கண்ணாக்கும் அவளுக்கும் பிரச்சனை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை.’ சொல்லி முடித்து விட்டு எதிரில் நின்றவளைக் கேள்வியாகப் பார்த்தான் அருண். அர்ச்சனா தர்மசங்கடமாக விஷாலைப் பார்த்தாள்.
‘மச்சான்… நான் முல்லைக்கு ஒரு ஃபோன் பண்ணிட்டு வர்றேன். நீங்கப் பேசிட்டு இருங்க.’ பெண்ணின் தயக்கம் பார்த்து நகர்ந்தான் விஷால். அருணிற்கு எதிரில் அமர்ந்த அர்ச்சனா சித்ரா அன்று வீட்டில் பண்ணிய அத்தனை ரகளையையும் சொல்லி முடித்தாள். அருணின் முகம் சிவந்து போனது.
‘அன்னைக்கு நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த பொண்ணு தானே?’
‘ம்…’
‘இதுக்கும் எங்கக்கா டல்லா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?’ வெடித்தது அருணின் குரல்.
‘அதுதான் எனக்கும் புரியலை?’
‘அவ அப்படித்தான்… லூசு மாதிரித் தியாகி ஆகுவா?’
‘ஐயையோ! அதுக்கு எங்கண்ணா சம்மதிக்கணுமே?’ அர்ச்சனா அவசரமாகச் சொல்லவும் அருணின் முகத்தில் திருப்தி தெரிந்தது.
‘அண்ணா அன்னைக்கு ஒரு டான்சே ஆடினான். அத்தை மாமா மேல ரொம்பப் பாசம் இருக்கிறதால அம்மாக்கும் அப்பாக்கும் என்னப் பேசுறதுன்னே புரியலை. அம்மா ஓரளவு நிதானமா எடுத்துச் சொன்னாங்க. ஆனா அண்ணா அத்தைக்கிட்ட ஆடித்தீர்த்துட்டான்.’
‘ம்…’
‘பாவம் அத்தை… சித்ராவால அண்ணன் கிட்டத் திட்டு வாங்கினாங்க.’
‘ஓ…’
‘ரெண்டு நாள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா. உம்பொண்ணைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பத்தைன்னு அண்ணா கண்டிப்பாச் சொல்லிட்டான்.’
‘ம்…’ உறுமிக் கொண்டிருந்தான் அருண்.
‘அதுக்கப்புறம் என்னப் பண்ணுறதுன்னு புரியாம அத்தையும் கிளம்பிட்டாங்க.’
‘அத்தை… நல்ல மாதிரியோ?’
‘ஆமா… மாமாவும் தான். ரொம்பவே நல்ல மாதிரி. கல்யாணத்துக்கு நாள் இருக்கிறதால அந்தச் சமயத்துல வருவாங்கன்னு அம்மா சொன்னாங்க.’
‘ம்…’
‘எனக்குக் க்ளாசுக்கு டைம் ஆகுது சீனியர்.’ படக்கென அவள் எழுந்து கொள்ள,
‘தான்க்ஸ்.’ என்றான் அருண். ஒரு மலர்ந்த புன்னகையோடு தலையசைத்துவிட்டுச் சென்று விட்டாள் அர்ச்சனா.
காலையிலேயே நல்ல முகூர்த்த நேரம் கிடைத்ததால் எல்லாச் சடங்குகளும் முடியும் போது மதிய நேரம் நெருங்கி இருந்தது. அப்போதே பந்தியையும் ஆரம்பித்து விட்டார்கள்.
வந்திருந்த அத்தனை பேருக்கும் விருந்து வைத்து முடிப்பதற்குள் மாலை நெருங்கிவிடும் என்பதால் மணமக்களை முதல் பந்தியிலேயே உட்கார வைத்துவிட்டார் கற்பகம்.
“சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிருங்க. ஹாஸ்பிடல் ஸ்டாஃபை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” கற்பகம் சொல்லவும் செழியனைப் பார்த்தாள் மாதவி.
“அம்மா சொல்றது சரிதான் மாதவி. எல்லாரையும் கவனிக்க இப்போ நம்மால முடியாது. அவங்களும் அதைப் புரிஞ்சுப்பாங்க.”
“ம்… எந்தக் குறையும் வந்திரக் கூடாது.”
“இல்லையில்லை… அதையெல்லாம் இளங்கோ பார்த்துப்பான். நீ சாப்பிடு.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே யாரோ என்னவோ அவனிடம் கேட்கவும் அதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தான் செழியன்.
மாதவி ஒரு கணம் மண்டபத்தைத் தன் கண்களால் அளந்தாள். எள் விழ முடியாத அளவு கூட்டம் கூடியிருந்தது. செழியனின் அந்தஸ்து அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உயரத்தில் இருந்தது. தூரத்தில் அருண் நிற்பது இவளது பார்வையில் பட்டது. அக்காவின் முகத்தைப் பார்த்தவன் சட்டென்று பக்கத்தில் வந்தான்.
“என்ன மாதவி?”
“அருண்…” அவளுக்குத் தொண்டைக்குள் எதுவோ அடைத்தது.
“என்னாச்சு?”
“பயமா இருக்கு டா.”
“ஏன்?”
“தெரியலை…”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. புது இடத்துக்குப் போகப் போறோமேன்னு உனக்குப் பதட்டமா இருக்கும்.”
“இவ்வளவு பேர் கல்யாணத்துக்கு வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை…”
“ம்… சரி சரி… அதை விட்டுட்டு நீ ஒழுங்காச் சாப்பிடுற வழியைப் பாரு.” அருண் ஒரு அதட்டல் போடவும் மாதவி தலையை ஆட்டிக் கொண்டாள். அக்காவைப் பார்ப்பதற்கு அருணுக்கே பாவமாக இருந்தது.
அவனுமே கொஞ்சம் மலைத்துத்தான் போயிருந்தான்.
இவர்கள் எல்லோரும் ஒரு நாள் கூத்தோடு கலைந்து போய் விடுவார்கள். தங்கள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்ட திருப்தி அப்பா அம்மாவிற்கும் வந்துவிடும். ஆனால் மாதவி அந்த வீட்டிலேயே போய் வாழ வேண்டும் அல்லவா? அவர்கள் பழக்கவழக்கங்களுக்கு ஈடுகொடுத்து, அவர்களைச் சார்ந்தவர்களை அனுசரித்து…
மாதவி மிகவும் பொறுப்பான, பொறுமையான பெண்தான். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வாள்தான். இருந்தாலும் அருணின் மனம் அக்காவிற்காகக் கவலைப்பட்டது. இந்தப் பெண்கள் பாவம்தான்! இரட்டை வாழ்க்கை வாழ்வது எத்தனை கஷ்டம்.
***
அர்ச்சனா ஆரத்தி எடுக்க வீட்டினுள் வலது காலை எடுத்து வைத்தாள் மாதவி. மாதவி முன்பொருமுறை வந்த வீடுதான். ஆனாலும் இன்றைய வருகை போல் அல்லவே அன்று!
அந்த வீட்டின் மருமகளாக, செழியனின் மனைவியாக…
மாதவிக்குக் கொஞ்சம் அழுதால் நன்றாக இருக்கும் போல இருந்தது. செழியனைத் திரும்பிப் பார்த்தாள். அவனுக்கும் அவள் நிலைமை புரிந்திருக்குமோ என்னவோ… அவள் கையை லேசாகத் தட்டிக் கொடுத்தான். நானிருக்கும் போது உனக்கென்ன கவலை என்பது போல இருந்தது அத்தத் தீண்டல்.
“வாம்மா மாதவி… வந்து விளக்கேத்து.” கற்பகம் அழைக்கவும் பூஜையறைக்குப் போனாள் மாதவி. செழியன் மாடிக்குப் போய்விட்டான்.
பெண்கள் அத்தனை பேரும் கூட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள். சொந்தபந்தத்தில் இருந்த அனைத்து இளவட்டங்களும் மாதவியைச் சுற்றி அமர்ந்துகொண்டு சற்று நேரம் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அம்மாடி பொண்ணுங்களா… போதும் கதை பேசினது. மாதவிக்கு டயர்டா இருக்கும். உங்க கதையை அப்புறமாப் பேசலாம், முதல்ல பொண்ணைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க.” விஜயலக்ஷ்மி ஒரு அதட்டல் போட்டுவிட்டு அர்ச்சனாவிடம் திரும்பினார்.
“அர்ச்சனா… உங்கண்ணியை மேல ரூமுக்குக் கூட்டிட்டுப் போ.”
“சரிங்கத்தை.” அர்ச்சனா மாதவியைப் பார்க்கவும் மாதவியும் எழுந்து கொண்டாள். தலையில் இருக்கும் அலங்காரங்களைக் களைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.
“வாங்கண்ணி.” அர்ச்சனா அழைத்துச் செல்ல அவளைப் பின் தொடர்ந்தாள் பெண். மாடியும் நல்ல விசாலமாகவே இருந்தது. நான்கைந்து அறைகள் தென்பட்டது.
“இதுதான் அண்ணா ரூம். இப்போதைக்கு உங்க திங்ஸ் எல்லாம் அங்கதான் இருக்கு.” சொன்னவள் கதைவைத் தட்டினாள்.
“அண்ணா…”
“வா அர்ச்சனா.” உள்ளிருந்து செழியன் குரல் கொடுக்கவும் கதவைத் திறந்தாள் இளையவள்.
“டட்டடாய்ங்… உங்க மகாராணி வந்துட்டா…ங்க…” ராகமாகத் தங்கை சொல்லவும் அவள் தலையில் தட்டினான் இளஞ்செழியன்.
“அதான் வந்துட்டாங்க இல்லை… நீ இடத்தைக் காலி பண்ணு.”
“ம்ஹூம்… நான் அண்ணிக்கு ஹெல்ப் பண்ணப் போறேன். வேணும்னா நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க டாக்டர்.” கேலியாகச் சொன்னவள் மாதவியின் கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தாள்.
“நான் கொஞ்சம் கொஞ்சமா ரிமூவ் பண்ணுறேன் அண்ணி, வலிச்சுதுன்னா சொல்லுங்க… சரியா?”
“ம்…” மாதவி ஒரு சிரிப்போடு தலையாட்டவும் அவள் தலையின் அலங்காரத்தை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தாள் அர்ச்சனா. செழியன் அவர்கள் இருவருக்கும் பக்கத்தில் கால்நீட்டி அமர்ந்து கொண்டான். வேஷ்டி சட்டையில் இருந்து அவனது சாதாரண உடைக்கு மாறி இருந்தான்.
“அடேங்கப்பா! இவ்வளவு பூவையுமா இத்தனை நேரமாத் தலையில வெச்சுக்கிட்டு இருந்தீங்க!? என்னோட கல்யாணத்துக்கு நான் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன்பா.”
“அதுக்கு முதல்ல நீ உன்னோட படிப்பை முடிக்கணும் அரட்டை.”
“அவ்வளவு நாளெல்லாம் வெயிட் பண்ண முடியாதுண்ணா.”
“அடிங்…” செழியன் அங்கிருந்த தலையணையால் அர்ச்சனாவைத் தாக்க ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டாள். மாதவியும் வாய்விட்டுச் சிரித்தபடி கழுத்தில் இருந்த நகைகளைக் கழட்ட ஆரம்பித்தாள்.
இளஞ்செழியனின் கண்கள் மனைவியை மேலிருந்து கீழாக ஒரு முறை தொட்டு மீண்டது. மாதவிக்கும் அவன் பார்வை புரிந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் நகைகள் அனைத்தையும் கழட்டி முடித்திருந்தாள்.
“இதெல்லாம் எங்க வெக்குறது?”
“அந்தக் கப்போர்ட்ல வை மாதவி.”
“ம்…” அவன் கைக் காட்டிய கப்போர்டைத் திறந்தாள் பெண். அத்தனையும் அவளுக்குரிய ஆடைகள். அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்தது போக இன்னும் புதிதாகப் பல இருந்தன. பக்கத்தில் அரவம் கேட்டது,
இருந்தாலும் மாதவி திரும்பவில்லை. அவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் தொலைந்து போயிருந்தது.
“மாதவி…” அவள் வெற்றுப் பின்னலில் பூ வாசம் பிடித்தவன் அந்தப் பின்னலை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டான். இடைவரை நெளிந்திருந்த கூந்தலைக் கலைத்தான் செழியன்.
எப்போதும் தூக்கிக் கட்டிய கொண்டையில் தான் அவளைப் பார்த்திருக்கிறான். அவள் ஸ்பரிசத்தில் அவன் உணரும் மென்மை அந்தக் கூந்தலிலும் இருந்தது.
“மாது…” அந்தக் குரலில் மாதவிக்குச் சிலிர்த்தது. லேசாக நடுங்க மெதுவாகத் திரும்பினாள். அவள் உடலின் நடு்க்கத்தை அவன் விரல்களும் உணர்ந்தது.
“ஹேய்! என்னாச்சு? எங்கிட்ட என்ன பயம் மாதவி?”
“இ… இல்லை… எனக்கு… குளிக்கணும்…” அவள் தந்தி அடித்தாள்.
“அவ்வளவுதானே?” கப்போர்டில் இருந்து ஒரு அழகிய புதுப் புடவையைத் தேர்ந்தெடுத்தவன் அதை அவள் கையில் கொடுத்தான்.
“பாத்ரூம் அங்க இருக்கு மாதவி. சரியா நாலு மணிக்கு நாம கிளம்புறோம்.”
“எங்க?”
“அதை இப்போ நான் சொல்ல மாட்டேன். போறப்போ நீயே புரிஞ்சுக்குவ.” அவன் போட்ட புதிரில் சிரித்தவள் மெதுவாக நகர்ந்துவிட்டாள். செழியன் தலையைக் கோதிக்கொண்டான். இதழில் ஒரு வெற்றிப் புன்னகை. சந்தோஷம் கொப்பளித்தது.
0-0-0-0-0
“சொன்னா எங்கம்மா கேக்குறான். அவன் பிடிச்சது தான் பிடி. கல்யாணமான அன்னைக்கே இப்படி யாராவது உலாப் போவாங்களா?” புலம்பியபடியே கிச்சனில் வேலையாக நின்றிருந்தார் கற்பகம்.
அர்ச்சனா மணமக்களுக்குத் தேவையான பொருட்களைக் காரில் ஏற்றி இருந்தாள். செழியன் ஏற்கனவே ரெடி.
அதற்கிடையில் மாதவியிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தார் மாமியார்.
“எனக்கும் எதுவும் தெரியாது அத்தை. இப்போதான் சொன்னாங்க.”
“இங்க முன்னாடியே சொல்லிட்டான். வீட்டுல இருந்தா ஹாஸ்பிடல்ல இருந்து அடிக்கடி கால் வருமாம். டிஸ்டர்பாம் ஐயாவுக்கு.” கற்பகம் சிரிக்கவும் மாதவி வெட்கத்தில் தலை குனிந்தாள். அவள் பக்கத்தில் வந்த கற்பகம் மருமகளை அணைத்துக் கொண்டார்.
“எத்தனையோ எதிர்ப்புக்கு மத்தியில இந்தக் கல்யாணம் நடந்திருக்கு மாதவி. அது எல்லாத்தையும் என்னால உங்கிட்ட விலாவரியாச் சொல்ல முடியாதும்மா. புருஷன் பொண்டாட்டின்னா சந்தோஷம் இருக்கிற மாதிரி கஷ்ட நஷ்டங்களும் வரும். அதான் வாழ்க்கை. ஆனா எது வந்தாலும் நீயும் செழியனும் கடைசிவரை ஒன்னா நிக்கணும், ஜெயிக்கணும்.”
“சரிங்கத்தை.”
“எம்புள்ளை இதுவரைக்கும் எதையும் இவ்வளவு ஆசைப்பட்டுக் கேட்டதில்லை, பெரிய டாக்டர் தான். இருந்தாலும் அவனுக்கு இதிலெல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் வரலே. படிப்பு, ஹாஸ்பிடல்னு வாழ்ந்துட்டான். உன்னை நான்தான் செலெக்ட் பண்ணினேன் மாதவி. அதுவரைக்கும் அவனுக்கு அப்படியொரு எண்ணமே இருக்கலே.”
“தெரியும் அத்தை.”
“ஆனா… அதுக்கப்புறம் என்னாச்சுன்னு எனக்கே தெரியாது. நீதான் வேணும்னு ஒரு பிடியா நின்னுட்டான்.”
“……………..”
“நானும் ஒரு சாதாரணப் பொம்பளை தான் மாதவி. எல்லா வீட்டுலயும் வர்ற மாதிரி நமக்குள்ளயும் மாமியார் மருமகள் சண்டை வரலாம். ஆனா அதையெல்லாம் சமயோசிதமா நாம கடந்து வரணும்மா.”
“கண்டிப்பா அத்தை.”
“எனக்கு எம்புள்ளை சந்தோஷமா இருக்கணும் மாதவி.”
“இருப்பாங்க அத்தை.”
“கொஞ்சம் முன்கோபி. சட்டுன்னு கோபம் வரும். சத்தம் போடுவான். நீ கொஞ்சம் பொறுத்துப் போகணும்.”
“ம்… சரிங்கத்தை.”
“அம்மா…” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கிச்சனுக்கு வந்தான் செழியன்.
“அம்மா… லேட் ஆகுது.”
“செழியா… பத்திரம். மாதவியைக் கவனமாப் பார்த்துக்கோ.”
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம். நீங்க இப்போக் கார் வரைக்கும் வாங்க.” பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் செழியன்.
“அர்ச்சனா… எல்லாத்தையும் கார்ல வெச்சுட்டியா?”
“ஆமா… டன்.”
“அப்போ நாங்க கிளம்புறோம்மா.”
“பத்திரம்பா.” ட்ரைவர் காரை ஓட்டியதால் மாதவிக்குப் பக்கத்தில் பின்னால் அமர்ந்தான் இளஞ்செழியன். அந்த ப்ளாக் ஆடி ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தது.
0-0-0-0-0
திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இவர்களுக்காக ஏற்கனவே கார் ஒன்று காத்திருத்தது. இவர்களை இறக்கிவிட்ட ப்ளாக் ஆடி ட்ரைவரோடு வீடு திரும்பிவிட்டதால் இங்கே பாவனைக்காக வேறு ஏற்பாடு பண்ணி இருந்தான் செழியன்.
“எங்க போறோம்னு இப்போவாவது சொல்லக் கூடாதா?”
“எதுக்கு என் டார்லிங்குக்கு இவ்வளவு அவசரம்?” அவன் சரசமாகக் கேட்க முன்னால் அமர்ந்திருந்த ட்ரைவரைக் கலவரத்தோடு பார்த்தாள் மாதவி.
“அட ஆண்டவா! அப்படி என்னத்தை நான் சொல்லிட்டேன்?!”
“ஷ்…” மாதவி கண்டிப்பாகச் சொல்லவும் அமைதியாகிவிட்டான் டாக்டர். கார் சற்று மலைப்பாங்கான பாதையில் போக ஆரம்பித்த உடனேயே மாதவிக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது. செழியனைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன மேடம்? ஏதாவது புரியுதா?”
“அங்கேயா போறோம் டாக்டர்?”
“எங்க சிஸ்டர்?”
“ஐய்யே… சிஸ்டரா?”
“பின்ன நீங்களும் என்னை டாக்டருன்னுதானே கூப்பிடுறீங்க?”
“விளையாடாதீங்க… எங்க போறோம்னு சொல்லுங்க… ப்ளீஸ்…” அவள் கெஞ்சவும் அவன் சிரித்தான்.
“அதே வீட்டுக்குத்தான். அப்போ என்னோட ஃப்ரெண்ட் வீடு. இப்போ நம்ம வீடு.”
“எப்படிங்க?”
“அது அப்படித்தாங்க.” அவள் கண்கள் எதையும் நம்ப முடியாமல் அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீடு வந்திருந்தது. அந்த இடத்திற்கே உரித்தான குளிர்ச்சி உடலைத் தாக்க சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள் மாதவி.
சாமான்களையெல்லாம் இறக்கி வைத்து விட்டு கார் போய்விட வீட்டின் உள்ளே இருவரும் வந்தார்கள். வீட்டின் வாசலிலேயே ஒரு மனிதர் நின்றிருந்தார்.
“ஐயா சாவி.” அவர் பவ்வியமாகச் சாவியை நீட்டவும் வாங்கிக் கொண்ட செழியன்,
“சாப்பாடு ரெடியா இருக்கா?” என்றான்.
“எல்லாம் ரெடியா இருக்கு ஐயா.”
“சரி, அப்போ நீங்க கிளம்புங்க. ஏதாவது தேவைன்னா நான் கூப்பிடுறேன்.”
“சரிங்கய்யா.” இருவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்த மனிதர் நகர்ந்து விட்டார். மாதவி எல்லாவற்றையும் ஒரு வியப்போடு பார்த்திருந்தாள்.
“என்ன மாதவி? வீட்டுக்குள்ள நடந்து வர்றீங்களா? இல்லை… அன்னைக்குப் போல அள்ளிக்கிட்டுப் போகட்டுமா?” அவன் கண்ணடித்துக் கேட்கவும் அவன் கன்னத்தில் ஒரு அடி வைத்தவள் நகர்ந்து விட்டாள்.
லேசான வெந்நீரில் குளியலை முடித்தவள் காட்டன் புடவை ஒன்றில் வெளியே வந்தாள். டைனிங் டேபிளில் தாளம் போட்டபடி உட்கார்ந்திருந்தான் செழியன்.
“மாதவி… சீக்கிரம் வா. ரொம்பப் பசிக்குது.”
“இதோ…” அவசரமாக வந்தவள் அவனுக்குப் பரிமாறிவிட்டு தானும் உண்ண ஆரம்பித்தாள்.
“ஆமா… இது என்ன ஊர்?”
“வண்டி பெரியார்.”
“ஓ… என்ன திடீர்னு இங்கே?”
“மாதவி நமக்கு இல்லைன்னு தெரிஞ்சப்போ எனக்கு அடைக்கலம் குடுத்த ஊரில்லையா? அதான்… அதே மாதவியோட திரும்பவும் அந்த ஊருக்கு வரணும்னு தோணுச்சு, வந்துட்டேன்.”
“நான் ஒன்னுக் கேக்கட்டுமா?”
“ம்… கேளு…”
“அவ்வளவு ஏற்பாடு பண்ணிட்டு ஏன் அப்படி ஒரு நாளையிலேயே அன்னைக்குத் திரும்பக் கூட்டிக்கிட்டுப் போயிட்டீங்க?”
“அது… தெரியலை. தப்புப் பண்ணுறோம்னு தோணுச்சு… அவ்வளவுதான்.”
“ஏன்? அதுக்கு முன்னாடி அது தோணலையா?”
“தோணலை… விடேன் மாதவி. இப்போ எதுக்கு அதைப் புடிச்சிக்கிட்டு நோண்டுறே?” சாப்பிட்டு முடித்தவள் அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினாள்.
“எத்தனை நாளைக்கு இங்கத் தங்குறோம்?”
“ஒரு வாரம்.”
“அப்போ ஹாஸ்பிடல்?” அவள் கவலையாகக் கேட்கவும் கோபமாக முறைத்தான் இளஞ்செழியன்.
“இப்போ அதுதான் முக்கியமா? சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு ரூமுக்கு வந்து சேர்ற வழியைப் பாரு.” சட்டென்று சீறிவிட்டு உள்ளே போய்விட்டான் செழியன். மாதவி நெஞ்சம் படபடக்க நின்றிருந்தாள்.
***
“மாதவி… இங்க என்னப் பண்ணுற?” ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கரிய மலையை வெறித்தபடி நின்றிருந்தாள் மாதவி. குளிர்ந்த காற்று இதமாக மேனி தழுவி அவளைச் சிலிர்க்கச் செய்தது. ரூமின் விளக்கை அணைத்து விட்டு இருளில் தான் நின்றிருந்தாள் பெண்.
போன தடவை வந்த போது இந்த ரூமைத்தான் அவளுக்குக் கொடுத்திருந்தான் இளஞ்செழியன். அதற்கு எதிர்த்தாற்போல இருந்த ரூமை அவன் பயன்படுத்தினான்.
அவளை மெதுவாகத் தன் புறம் திருப்பினான் செழியன். முகம் பார்க்க மறுத்தது பெண்மை. அவனும் குளித்திருப்பான் போலும். இதமான வாசமொன்று அவனிடமிருந்து வந்து அவள் நாசி தொட்டது.
“இது நியாயமா?” அவன் குரலில் அத்தனை சரசம்.
“இத்தனைப் போராடி கல்யாணத்தையும் முடிச்சு, அத்தனைப் பேரையும் சமாளிச்சு ஏறக்கட்டி இங்கக் கூட்டிட்டு வந்தா… இப்படித் தனியா மொட்ட மலையை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு நிக்குறே?”
“மொட்டை மலை இல்லை. தேயிலை விளைஞ்சு நிக்குது.”
“அட! அப்படியா?!” அவன் வேண்டுமென்று ஆச்சரியப்படவும், அதற்கு மேலும் போராட முடியாமல் அவன் மார்பையே சரணடைந்தாள் பெண்.
“ஏய் மாதவி… உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்துறேனா?”
“இல்லையில்லை…”
“எப்பவுமே நைட்ல புடவை தானா?”
“இல்லை… இன்னைக்கு ஏனோ நைட் ட்ரெஸ் போடக் கூச்சமா இருக்கு.”
“ஆஹா! செழியா… உம்பாடு இன்னைக்குக் கொஞ்சம் கஷ்டம்தான் போல.” தனக்குத் தானே சத்தமாகப் புலம்பிக் கொண்டான் இளஞ்செழியன்.
“போதும் டாக்டர் உங்க வம்பு…”
“நான் வம்புப் பண்ண இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே மாதவி.” அவள் அதீத வெட்கம் அவனை மேற்கொண்டு நகரவிடாமல் தடுத்து நின்றது.
“இன்னைக்கு எவ்வளவு பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. நான் அப்படியே மலைச்சுப் போயிட்டேன்.” அவள் அந்த நேரத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.
“ம்…”
“நீங்க நினைச்சிருந்தா எவ்வளவு பெரிய இடத்துல வேணும்னாலும் பொண்ணு எடுத்திருக்கலாம். ஏன் டாக்டர்? எதுக்கு எம் பின்னாடி வந்தீங்க? அப்படி எங்கிட்ட என்ன இருக்கு?” அவள் நெகிழ்ந்து போய் பேசிக்கொண்டிருந்தாள். செழியனுக்கு அப்போது அவள் தயக்கம் புரிந்தது.
“தெரியலையே மாதவி.”
“உங்கப்பா இந்தக் கல்யாணத்தை மறுத்ததுலேயும் ஒரு நியாயம் இருக்குது டாக்டர்.”
“……….”
“நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்…. உங்களுக்கு நான்… எப்படி?” அவள் தடுமாறவும் அவளை விட்டுச் சற்று விலகித் தரையில் மண்டியிட்டான் இளஞ்செழியன். கைகள் இரண்டும் அவளை நோக்கி விரிந்து நீண்டது.
“எவ்வளவுதான் பெரிய குடும்பமா இருந்தாலும், பெரிய டாக்டர்னாலும்… இந்த இளஞ்செழியன் இப்போ உன் காலடியில மாதவி. நீ இல்லைன்னா நானில்லைடா.” இதைவிட அவன் மனதைத் திறந்து காட்ட இளஞ்செழியனுக்குத் தெரியவில்லை.
மாதவிக்கு எல்லாம் கனவு போல இருந்தது. ஹாஸ்பிடல் வளாகத்தில் தன்முன் மண்டியிட்டு நிற்பவனின் கவுரவம் என்னவென்று அவளுக்குத் தெரியும். அவன் கண்ணசைத்தால் எத்தனை பெண்கள் அவன் பின்னோடு வருவார்கள் என்பதையும் அவள் அறிவாள்.
தன்னை இதுவரை அவனிடமிருந்து தடுத்து நிறுத்தியிருந்த அனைத்தையும் தாண்டி அவனை நோக்கிப் போனாள் மாதவி. அந்த மெல்லிய தென்றல் காற்று கெட்டியான தேக்கு மரக் காட்டுக்குள் விரும்பிச் சிக்கிக் கொண்டது.
இத்தனை நாளும் அவன் பெயர் சொல்ல மறுத்தவள் அன்றைய இரவுப் பொழுது முழுதும் ஜபித்ததெல்லாம்,
“செழியன்… செழியன்…” என்ற வார்த்தை மட்டும்தான்.
“என்னோட பெயரை உன்னைக் கூப்பிட வெக்கிறது ‘உங்க சாமர்த்தியம்’ ன்னு சொன்னியே… இந்த சாமர்த்தியம் போதுமாடீ… இல்லை…” அவன் முரட்டுத்தனமானக் கேட்க அந்த வலிந்த தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் மாதவி. அன்றைய குளிர் இரவு… நிலவோடு அவர்களுக்கு நீண்டு போனது.
ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா… தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா…