Kadhalfinal
Kadhalfinal
காதல் – 2௦
“இளமைக்கு புன்னகையாக முதல் காதல் தோன்றும்,
இதயங்கள் புன்னகை செய்தால் இடம் மாறிப் போகும்,
வீட்டுக்கு புன்னகையாக மழலைகள் பூக்கும்…
நம் மழையின் புன்னகையாக இரு இதயம் கூடும்…”
அந்த குறிப்பிட்ட மண்டபம் மாலை நேரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்களின் முறைப்படி திருமண முந்தின நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆயத்தமாக அந்த மண்டபமே கலகலப்புடன் இருந்தது. இரு கல்யாணத்தையும் ஒரு மண்டபத்தில் வைத்துக் கொண்டனர்.
மதியும், கௌதமும் கீழே முதல் வரிசையில் அமர்ந்துக் கொண்டனர். தன் இந்தர் திருமணத்தை ஒவ்வொரு நொடியும் ரசிக்க எண்ணினாள் மதி.
இந்தரும், அஷோக்கும் மாலையுடன் மேடையில் தன் துணைகளுக்காய் காத்திருக்க, மெல்லிய விசில் சத்தத்தில் அந்த பக்கமாய் திரும்பினர்.
அந்த ரம்பை, ஊர்வசியை தோற்கடிக்கும் அழகுடன் ரதியும், சுபியும் மேடையை நோக்கி நடந்து வர, தன் ஜோடிகளின் அழகில் ஒரு நிமிடம் சொக்கி தான் போயினர்.
பின்னால் வந்துக் கொண்டிருந்த உறவு பெண்களின் கேலிக்கு அழகாய் வெட்கப்பட்டுக் கொண்டே மேடையை நோக்கி வர,
ரதியை நோக்கி தன் கையை நீட்டினான் இந்தர். அவனின் ஆபிஸ் நண்பர்கள் “ஓஹோ” என குரல் கொடுக்க, வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் அவள்.
அசோகிற்காய், சுபி நிற்க, அவளை கண்டு அழகாய் புன்னகைத்தவன் மேடையை விட்டு இறங்கி வந்து அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
கீழே அமர்ந்திருந்த கெளதம் அதிர்ச்சியில் எழுந்தே விட்டிருந்தான். “டேய் அஷோக்” என அவன் அழைத்திருக்க, அவனின் மாணவர்களோ “ஹே… சார்க்கு ஒரு ஓ போடு” என பெரிய ஓவுடன் சேர்ந்து கரகோஷம் எழுந்தது.
சுபிக்கு தான் ஒரே ஷையாக இருக்க அவன் கையை பிடித்தபடி, அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
பல வண்ண வண்ண விளக்குகளால் அந்த மேடை ஜொலிக்க, அந்த வண்ணத்தையே தோற்கடிக்கும் ஜொலிப்பில் ஜொலித்தனர் இரு ஜோடிகளும்.
இரு வீட்டு மனிதர்களுக்கும் மனது நிறைந்துப் போனது. நாகு மதியையே பார்த்திருந்தார். அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் ஜொலித்தது. தனக்காக, தன் காதலியையே ஒதுக்கி வைத்திருந்தான் இந்தர். இன்று எல்லாம் சரியாகிவிட்டது. அவளுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.
“ஏய்… என்னடி இப்படி பார்க்குற. உன் புருஷனை கூட இப்படி பார்த்ததில்லையே” அருகிலிருந்த கெளதம் கூட அவளை கிண்டலடித்தான்.
“உனக்கு அவனை பத்தி தெரியாது கிச்சா… அவன் என் சந்தோசத்துக்காக, அவனோட சந்தோசத்தை எல்லாம் அழிச்சுகிட்டான். அப்பவே அவனுக்கு கல்யாணம் முடிந்திருந்தா இந்நேரம் அவனுக்கு ஒரு குழந்தையே இருந்திருக்கும்”
அவளின் கையை மெதுவாக தட்டிக் கொடுத்தான் அவன். அவனுக்கு தான் எல்லாம் தெரியுமே.
வரவேற்பு முடிந்து எல்லாரும் அமர்ந்து சாப்பிட, அங்கு சிரிப்புக்கும், கேலிக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
காலை முகூர்த்த வேளைக்கு, இரு குடும்ப பெரியவர்களும் ஆயத்தமாக, சிறுவர்களை உறங்க அனுப்பினர் அவ்வீட்டு பெரியவர்கள்.
கமலாவும், சுபி சித்தியும் பம்பரமாக சுழல அவர்களுக்கு வேலையை சொல்லிகொண்டிருந்தார் நாகு.
அடுத்த நாள் காலை மிக அழகான விடியலாக விடிந்தது.
காலையிலையே முகூர்த்தம் என்பதால் ஐயர் தன் வேலையை ஆரம்பித்திருந்தார்.
சில மணி நேரங்கள் கழித்து, ரதி அழகான அரக்கு வண்ண பட்டுப்புடவையில், பூ மாலை மணக்க மேடையில் அமர்ந்திருந்த இந்தர் அருகில் வந்து அமர்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்கள் கழித்து, பச்சை வண்ண பட்டுடுத்தி, அவளையே பார்த்தபடி மந்திரத்தை கூறிக் கொண்டிருந்த அஷோக் அருகில் வந்தமர்ந்தாள் சுபி.
இந்தர் பார்வை வருடலில் ரதி முகம் தானாகவே சிவந்தது. அவளின் சிவந்த முகம் அவனுக்கு அன்றைய நாளை நினைவு படுத்த சிறு கண்சிமிட்டலுடன் மந்திரத்தை கூற ஆரம்பித்தான்.
சுபி அருகில் வந்தமரவும் அவளை பார்த்து மெலிதாக சிரித்த அஷோக். அதன் பிறகு ஐயர் கூறிய மந்திரத்தில் மூழ்கிப் போனான்.
மொத்த குடும்பமும் அவர்கள் அருகில் நிற்க, ஐயர் மாங்கல்யத்தை எடுத்து முதலில் இந்தர் கையில் கொடுத்தார்.
மன நிறைவுடன், ரதி மேல் அளவுக்கதிகமாக காதலுடன் கையில் மாங்கல்யத்தை வாங்கினான் இந்தர்.
சந்தோசம், பாசம், அன்பு, காதல், ஆர்ப்பாட்டம் இப்படி பல உணர்வுகளின் பிடியில் திளைத்திருந்தாள் ரதி.
அவள் ஆசை இத்தனை சீக்கிரத்தில் நிறைவேறும் என அவள் எண்ணவே இல்லை. கௌதமின், அதிரடி முடிவில் அவளுக்கு இந்த சந்தோஷ நாள் சீக்கிரமே கிட்டியது.
தன்னை அணுவணுவாய் காதலிக்கும், தன்னை அத்தனை புரிந்து வைத்திருக்கும் ஒருவனை கைபிடிக்கும் பாக்கியத்தை விட வேறென்ன வேண்டும் அவளுக்கு.
சுற்றி இருக்கும் எல்லார் மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க. மனம் நிறைய காதலுடன் ரதி கழுத்தில் மாங்கல்யத்தை பூட்டினான் இந்தர்.
இத்தனை நாளில் ஒரு முறை கூட அஷோக் சுபியிடம் தன் காதலை கூறியதில்லை. அதே போல் சுபியும், அவனிடம் கூறியதில்லை.
அதே நிலையில் இப்பொழுது மணமேடை வரை வந்தமர்ந்திருந்தனர். ஐயர் அஷோக் கையில் மங்கல நாணை கொடுக்க, அதை கையில் வாங்கிய அஷோக் சுபி முகத்தை பார்த்து அவளின் கழுத்தில் நாணை பூட்டினான்.
இந்தர், ரதி கையுடன் தன் கையை இணைத்து அக்கினியை வலம் வர, அஷோக், சுபி கையுடன் தன் கையை இணைத்து அக்கினியை வலம் வந்தான். தங்களது குழந்தைகளின் திருமணத்தை முடித்த சந்தோசத்தில் எல்லார் முகங்களும் புன்னகையை தழுவி இருந்தது.
இரு ஜோடிகளையும் எல்லாரும் மாறி மாறி மனமார வாழ்த்திக் கொண்டிருந்தனர். புது ஜோடிகள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க, மனம் நிறைவுடன் தன் ஆசிகளை வழங்கினர்.
கொஞ்சம் தூரத்தில் கைகளை கட்டியபடி இந்தரையே பார்த்திருந்தாள் மதி. அவளை தோளோடு அணைத்தபடி கெளதம் நின்றிருந்தான். இந்தர் மேல் எப்பொழுதும் தனி பாசம் உண்டு மதிக்கு. அது கௌதமும் அறிந்ததே.
எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மதி அருகில் வந்தமர்ந்தான் இந்தர். பல சுவாரஸ்யமான பேச்சுக்கள் நீண்டுக் கொண்டே போனது.
மாலை நான்கு மணியாகவே ரதியை, இந்தர் வீட்டில் கொண்டு விட கிளம்பினர் மதியும், கௌதமும். நான்கு மணிக்கு மேல் தான் நல்ல நேரம் என கூற இவள் அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.
சுபியை அவளின் சொந்த பந்தம் அஷோக் வீட்டில் விட வந்தனர்.
முதலிரவுக்கான அனைத்து
அம்சங்களுடன் இருந்தது அஷோக் அறை. மணி பத்து என அவன் அறையில் இருந்த குருவியார் இப்பொழுது தான் உரக்க கூவியிருந்தார்.
சிறிது நேரத்திற்கு முன்பு வர சொந்த பந்தங்களுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவனை மீசை தான் விரட்டி விட்டிருந்தார்.
‘எப்பவும் மீசைக்கு என் மேலயே கண்ணு’ எப்பொழுதும் போல் இப்பொழுது கருவியபடியே தான் அறைக்கு வந்தான். அப்படியே அறையை கண்டு ஒருநிமிடம் தயங்கி பின் உள் சென்றான்.
இன்று அவன் அறையே புதிதாய் மாறி போயிருந்தது. சிங்கிள் அறையும் தெருவில் இருக்கும் குப்பை தொட்டியும் ஒன்று என்று தான் எப்பொழுதும் கமலாவிடம் வாதிடுவான் அவன்.
ஆனால் இன்றோ எல்லாத்திலும் ஒரு நேர்த்தி வந்திருந்தது. பொருட்கள் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் அழகாய் வீற்றிருந்தது அவன் அறையே அவனுக்கு ஒரு நிமிடம் அந்நியமான உணர்வு. இன்றில் இருந்து அவன் அறையில் அவன் மனம் கவர்ந்தவளின் வாசம் வீச போகிறது.
கதவு திறந்து, மூடும் சத்தம் கேட்டு வாசல் பக்கமாய் திரும்பினான் அஷோக். கையில் சொம்போடு அவனின் மனம் கவர்ந்தவள் அவனின் மோகினி தான் வந்துக் கொண்டிருந்தாள்.
வெட்கப்பட்டுக் கொண்டே வருவாள் என இவன் எதிர் பார்த்திருக்க, நேராக இவனை நோக்கி நடந்து வந்திருந்தாள் இவள்.
‘இதென்னடா!’ என இவன் பார்த்திருக்க, அவன் கையை பிடித்து இந்த பக்கமாய் இழுத்தாள் அவள்.
தன் மனைவி முகத்தில் முதல் முறையாக வெட்கத்தை பார்க்கும் ஆவலில் இருந்த சிங்கிள் அஷோக் முகம் ஏமாற்றத்தில் சிங்கிளாகவே சுருங்க,
“கிழக்கு பக்கமாய் பார்த்து நில்லுங்க” என்றாள் அவள்.
“ஏனாம், மரியாதை எல்லாம் பலமா வருது” என்றபடியே அவள் சொன்ன திசையில் நிற்க அவன் காலில் விழுந்து வணங்கினாள் அவள்.
‘இதென்னடா இப்படி எல்லாம் பண்ணுறா’ என அவன் நினைத்திருக்க, ஆனாலும் “ரொம்ப நல்லா இரு, என்கூட சேர்ந்து இன்னும் சுகமாய் இரு” வாழ்த்தி அவளை தூக்கி விட,
“நாகு பாட்டி தான் உங்க காலில் விழ சொன்னாங்க?”
‘அதான பார்த்தேன்’ எண்ணியவன் “வேறென்ன சொன்னாங்க?”
“நல்லா படுத்து தூங்க சொன்னாங்க” கூறியவள் அப்படியே வந்து கட்டிலில் அமர,
“ஏய் என்னடி இதெல்லாம். இந்த பொண்ணுகளுக்கு இந்த நேரத்துல வெட்கம் இப்படி எல்லாம் வரும்னு டீவில பாத்திருக்கேன்டி, கொஞ்சமாச்சும் அதை எனக்கு காட்டேன்?” அவள் முன் நின்றான் அவன்.
“இங்க வரதையும், இருக்கிறதையும் தான் காட்டமுடியும். பேராசை பட்டா நான் என்ன பண்ணுறது?”
“இதெல்லாம் பேராசை இல்லடி மிங்கிள் ஆகுறதுக்கான முதல் ஸ்டெப்” கெஞ்சலாக கூறினான் அவன்.
எப்பொழுதும் அவனிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டு, இப்பொழுது அடக்க ஒடுக்கமாக நடிக்க அவளுக்கு வரவில்லை. அதிலும் அவளின் சித்தி நிறையவே கூறியிருந்தார்.
அப்படி இருக்காதே, சத்தமா பேசாதே இப்படி பல அட்வைஸ் இன்னைக்கு மட்டுமே. ஒரே நாளில் எப்படி சுயத்தை மாற்றுவதாம்?
அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன், அவளின் கையை மெதுவாக பிடித்துக் கொண்டான்.
இப்பொழுது உண்மையாகவே அவளுக்கு ஒரு கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது. மெதுவாக அவனிடமிருந்து கையை விலக்க பார்க்க, அவளின் கையை கெட்டியாக படித்துக் கொண்டான்.
தலைகாணி அருகில் இருந்த சின்ன டப்பாவை எடுத்தவன் அதை மெதுவாக திறந்தான். உள்ளே அழகாக சிரித்துக் கொண்டிருந்தது இரு இதயம் இணைந்த மோதிரம்.
அவள் கண்கள் அவனையே நோக்க, அவளின் விரலை மெதுவாக பிடித்து வலிக்கா வண்ணம் அவளுக்கு போட்டுவிட்டவன் “ஐ லவ் யூ சுபி… ஒரு நாளும் இந்த வார்த்தையை உன்கிட்ட நான் சொன்னதில்லை. இன்னைக்கு என்னமோ உன்கிட்ட இதை சொல்ல அத்தனை ஆசையா இருக்கு” கூறியபடியே அவளின் கையில் முத்தமிட்டான் அவன்.
என்னமோ இப்பொழுது அதற்கும் மேல் சிலிர்த்தது அவளுக்கு. ‘இது தான் வெட்கமோ?’ மனம் கேள்விக் கேட்டுக் கொண்டது.
அவள் தலை குனிந்ததைக் கண்டவன் “மிங்கிள் ஆக சிக்னல் வந்துட்டு டோய்” புன்னகைக்க,
“ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் மொட்டையாய்.
“என்ன பிடிச்சிருக்கு மோதிரமா?” கேள்வியாக இழுத்தான் அவன்.
“இந்த வாத்தியை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் அவள். அங்கு காதலாய், காமமும் தன் இடத்தை பிடித்திருந்தான்.
வீட்டு ஹாலில் எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் மதியும் இணைந்துக் கொண்டாள். இந்தரையும், ரதியையும் வைத்து ஒட்டி தள்ளிவிட்டாள் அவள்.
“ரதி பொண்ணு பாக்க வந்தன்னக்கே இந்தர், உனக்கு தலை எல்லாம் வாரி விட்டானாமே?”
“அச்சோ அண்ணி” அழகாய் வெட்கபட்டாள்.
“அட சும்மா சொல்லு ரதி. இந்தர் தான் சொல்லிட்டு இருந்தான் உனக்கு ரொம்ப அதிக முடியாம்?”
“ஏய் நான் எங்கடி சொன்னேன்? ரதி நீ நம்பாத? இவ சும்மா வம்பிழுக்கா?”
“அட என்ன இந்தர் இப்படி சொல்லிட்ட? நீ தான அன்னைக்கு சொன்ன. ரதி அப்படி என்னை பாத்துகிறா? அவளுக்கு எவ்ளோ முடி தெரியுமா? அப்படி இப்படி சொன்ன”
“அவங்க சும்மா சொல்லிருப்பாங்க அண்ணி… என்னை விட உங்களுக்கு தான் நிறைய முடி. அவ்ளோ அழகா இருக்கு” சிலாகித்து கூறினாள் ரதி.
ரதிகொன்றும் அத்தனை குறைவான முடி இல்லை. அழகா சரியான அளவு முடி. இந்தர் அவளை கட்டிப் பிடிக்கும் பொழுது அவன் கையை உரசி தனி காதல் பேசுமாம்? அதை அன்று ரதியிடம் காதலாக கூறியதை, இவள் தற்செயலாக கேட்டதில் இருந்து தனி கதை அளக்க ஆரம்பித்து விட்டாள் மதி.
“மதி நேரம் ஆகிட்டு வீட்டுக்கு போகலாமா?” மெதுவாக அவளிடம் கேட்டான் கெளதம்.
“ஆமா மதி சீக்கிரம் கிளம்புங்க. நல்ல நாள் அதுவுமா உன் வீட்டுல இருக்காம இங்க இருக்கது நல்லா இருக்காதுடா?” சத்தியநாதனும், பாட்டியும் கூற,
“எதுனாலும் போன் பண்ணுங்க… நான் உடனே மதியை அழைச்சுட்டு வந்துடுறேன். மீதியை காலையில் பேசலாம்” என்றபடி எல்லாரிடமும் விடைபெற்று கிளம்பினர் மதியும், கௌதமும்.
ரதியை இந்தர் அறையில் உறவினர்கள் விட்டு செல்ல, அவன் அறைக்குள் கண்களை சுழல விட்டாள் ரதி.
அன்று அவன் அறைக்கு வந்தும் ஒன்றையும் ரசிக்க விடாமல் மொத்தமாய் அவளை ரசித்து சென்று விட்டான். சிறு புன்னகையுடன் அவன் அறையை சுற்றிப் பார்க்க,
பின்னால் தாள் போடும் சத்தம் கேட்டு மெதுவாக திரும்பிப் பார்த்தாள் ரதி.
அவனின் வசீகரமான புன்னகையுடன் அவள் அருகில் வந்தவன், அவள் மருண்ட விழிகளில் விரல்களால் வருட, அவள் விலகவும், அவளை திருப்பி தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான் இந்தர்.
“என்னை உருகி உருகி காதலித்த என் காதலியின் காதலை அதிகமாய் உணர்ந்த இந்த அறை எப்படி இருக்கு” மயக்கமும், கிறக்கமுமாக கேட்டான் இந்தர்.
“ரொம்ப நல்லா இருக்கு” தயக்கமும், மயக்கமுமாக கூறினாள் ரதி.
அவள் காதோரமாய் “ஆஹா… அப்படியா?” என்றான் காதலாய்.
“உன்னை ரொம்பவே காக்கவச்சுடேன்ல?” கழுத்தில் இதழ் பதித்தவாறே வினவினான்.
கிறக்கம் மாறி நாணம் வந்து ஒட்டிக் கொண்டது அவளிடம்.
“என்ன பதில் சொல்லாமல் இருக்க?” கைகள் தானாக அவளின் கைகளை வருட, மொத்தமாய் மயங்கிப்போனாள்.
நேரம் செல்ல செல்ல, அவனின் கைகள் செய்த மாயத்தில் மொத்தமாய் இவனின் ஆதக்கத்தில் இருந்தாள்.
அந்த விடிகின்ற வேளையில் இரு உள்ளங்களும் காதலால் கசிந்துருகி வாழ்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்த மகிழ்ச்சி இருவர் முகத்திலும் ஜொலித்து நாணம் கொள்ள வைத்தது.
அந்த இரவில் கார் மெதுவாக வந்துக் கொண்டிருந்தது. வானம் மழை வருவதைப் போல் இருட்டிக் கிடந்தது.
கார் கண்ணாடிகளை திறந்து வைத்து கையை வெளியே நீட்டியபடி வந்துக் கொண்டிருந்தாள் மதி. மழை வருவதற்கான அறிகுறியாக மெலிதாக குளிர்ந்த காற்று அவளின் கைகளை வருடிசென்றது.
“கிச்சா மழை வரும் போல இருக்குல்ல?”
“ஆமா மதி அப்படி தான் இருக்கு. மழை வரதுக்கு முன்ன வீட்டுக்கு போகணும் மிக பெரிய வேலை ஒன்னு இருக்கு?”
“வேலையா? என்ன வேலை கிச்சா?”
“அதுவா ஒரு ரகசியத்தை நான் தெரிஞ்சுக்கணும்?” கண்ணடித்துக் கூறினான் அவன்.
“ரகசியமா?”
“என்னோட நிலாகுட்டிகுள்ள இருக்கும் ரகசியம்” மிக மிக மெதுவாக அவளை நெருங்கிக் கூறினான்.
“ச்சீ” முகத்தை மறைத்துக் கொள்ள, அதே நேரம் வெளியில் வெளிச்சத்துடன் கூடிய மெலிதான இடி சத்தம்.
கண்களை திறந்தவள் வெளியில் பார்க்க… மெலிதான தூரலுடன் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.
“ஹே… கிச்சா மழை… வண்டியை நிறுத்து” உற்சாகமானாள் அவள்.
“மழை பெய்யட்டும்டி நல்லதுதானே. நாம சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” வண்டியை வேகமெடுத்தான் அவன்.
“நான் கொஞ்சம் நனைஞ்சுட்டு வர்றேனே? மழை வரும் போது நான் நனையாத நாளே இல்லை பிளீஸ்” கண்களை சுருக்கிக் கேட்டாள் மதி.
சும்மா கேட்டாலே அவன் சரி என்று சொல்பவன். இதில் பிளீஸ் என்று கண்களை சுருக்கி கேட்டால் அவனால் எப்படி மறுக்க முடியுமாம்?
“சரி… ஆனா சீக்கிரம் வந்திரணும்?” கூறி காரை நிறுத்தும் முன் அவள் இறங்கி விட்டிருந்தாள்.
அந்த ஆள் அரவமற்ற சாலையில் அவள் மழையுடன் ஆடி… பாட… தன்னவளை ரசித்து பார்த்திருந்தான் கெளதம்.
கொஞ்ச நேரத்தில் மழையின் வேகம் அதிகரிக்க, அவளை வலுகட்டாயமாக தூக்கிக் வந்து காரில் ஏற்றினான் அவன். மழையை பிரிய அவளுக்கு கொஞ்சமும் மனம் வரவில்லை போலும்?
அவன் அவளை தூக்கி வர, அவன் தலையில் விழுந்த நீர், அப்படியே வடிந்து சொட்டாக அவள் இதழில் விழ, அதை தன் இதழால் அணைத்திருந்தாள் மதி.
ஏதோ ஒரு சந்தோசம் மனம் முழுவதும் சுகித்து கிடந்தது. அவனையும் மழையில் நனைத்து விட்ட மகிழ்ச்சியுடன் அவனுடன் ஒன்றாக பயணித்தாள்.
மழை நீர் அவள் கன்னத்தில் ஆங்காங்கே ஒட்டி சாலை ஒளியுடன் கலந்து அவள் கன்னத்தில் வைரங்களாய் ஜொலித்தது.
அவனின் பார்வை அடிக்கடி அவளில் இதழில் குடியிருந்த மழை நீரில் பதிந்து மீழ, அவளோ எப்பொழுதும் போல் தன் நாவை மெதுவாய் வெளியே நீட்டி அந்த மழை நீரை அணைத்திருந்தாள்.
அவனின் கண்கள், அவளின் இதழோடும், அவளின் கன்னங்களோடும் ரகசிய காதல் நடத்தின.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தனர் இருவரும். காரில் இருந்து இறங்கவும் அவனின் பார்வை, மழையில் நனைந்து உடலோடு ஒட்டி இருந்த அவளின் மேல் பதிந்து மீண்டு, இடையில் அங்கொன்று இங்கொன்றாய் மீதம் இருந்த மழை சொட்டில் பதிந்து மீண்டது.
அவனின் பார்வையே வித்தியாசமாக இருக்க, அவனைப் பார்த்தபடி வீட்டின் உள்ளே நுழைந்தாள் மதி.
அவனோ “ஏய் மழையே! நான் ரசிக்கும் இடங்களில் உன் முத்திரையை பதித்து விட்டாயே? இப்பொழுது பார் என் காதலை பதிக்க போகிறேன்” அந்த மழையிடம் கூறிய படி வேகமாக அவளை தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான்.
மழையோ அவர்களை வாழ்த்துவதுப் போல கொஞ்சமாய் சாய்வாக சாரல் வீசி வீட்டு வாசலை நனைத்தது.
அவளோ, ஈர உடையை மாற்ற, மாற்றுடை எடுத்துக் கொண்டிருக்க, அறையை தாள் போட்டவன் பின்னோடு அவளை அணைத்துக் கொண்டான்.
“அட…. குளிச்சுட்டு வாறேன்?” என,
“வேண்டாம், எனக்கு இந்த மழை சொட்டுடன் கூடிய உன்னுடைய ஒர்ஜினல் வாசத்துடன் நீ வேணும்” அவளை தன்னோடு இழுத்தணைத்துக் கூற,
அவனின் ஈர உடலுடன் ஒட்டிக் கொண்டாள். அவளின் மழை காதலன் இப்பொழுது அவள் காதலனுடன் கலந்திருக்க. அவனை, அவளின் ஈரம் சுமந்த கைகள் இறுக்க அணைத்துக் கொண்டன.
அவளின் கன்னத்தில் இருந்த நீருடன், அவன் இதழ்கள் சண்டையிட சுகமாய் அவனின் சாய்ந்தாள் அவள்.
இவர்களில் காதல் விளையாட்டை, ஜன்னல் வழியாக ரகசியமாய் பாராமல் பார்த்திருந்த அவளின் மழை காதலன். வேகமாக வீசிய காற்றுடன் அவர்களின் அறை ஜன்னலில் வீசி இனிய தாளத்துடன் அவர்களின் இனிய வாழ்க்கை ஆரம்பிக்க வாழ்த்தினான்.
நாமும் அப்படியே அவர்களை தென்றலாக மாறி வாழ்த்தி செல்வோமாக.
……………………………………………………..வணக்கம்………………………………………………..