Kalangalil aval vasantham – 13(2)

Kalangalil aval vasantham – 13(2)

“என் வீட்ல நின்னுட்டு, என்னையே வெளிய போக சொல்றியா?” பதிலுக்கு மாயா கத்த, அவன் பேண்ட்டில் சொருகி வைத்திருந்த பிஸ்டலை எடுத்து ஸ்வேதாவின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.

“ஷான்…” நடுங்கிக் கொண்டு அறைக்குள், அவனருகில் வந்தாள் ப்ரீத்தி. எது நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தாளோ அது நடந்து விடும் போல இருந்தது.

“வேண்டாம் ஷான்… பாப்பாவை விட்டுடு…” என்று பயந்த மாயா, “பாய்ஸ்…” என்று கத்தினாள்.

வெளியே நின்றிருந்த பாதுகாவலர்கள் உள்ளே நுழைய முனைய, ஸ்வேதாவின் நெற்றிப் பொட்டிலிருந்த பிஸ்டலை இன்னொருமுறை நன்றாக அழுத்திக் காட்டியவன்,

“யாராவது பக்கத்துல வந்தா, ஷூட் பண்ணிருவேன்…” அதீத கோபத்தில் அவன் கத்த,

“ஷான்… உங்க வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்காதீங்க… ப்ளீஸ்…” என்று ப்ரீத்தி, கண்ணீர் மல்க அவனைப் பார்த்து கையெடுத்து வணங்கி கெஞ்சினாள்.

அவளது கெஞ்சலை கண்டுகொள்ளாமல், “மாயா… வெளியப் போ…” மாயாவையும் அவளது பாதுகாவலர்களையும் பார்த்துக் கத்தியவன், பிஸ்டலை இன்னும் அழுத்த, மாயா நடுங்கியபடி வெளியே போனார்.

“ப்ரீத்தி… கதவை மூடு…” என்று ப்ரீத்திக்கு உத்தரவிட, அவள் நடுங்கியபடி கதவை மூடினாள்.

இந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்று சஷாங்கன் ஸ்வேதாவை சுட்டு விடலாம். அல்லது அவளது பாதுகாவலர்கள், ஷானை எதாவது செய்து விடலாம். இதில் எது நடந்தாலும், அது நடக்கவே கூடாததுதானே!

இப்போது அந்த அறையில் அவர்கள் மூவர் மட்டும் தான் இருந்தனர்!

ஷான், பிஸ்டலை அவளது நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்தியிருந்தாலும், அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. கொஞ்சமும் பயப்படவில்லை. என்ன நேர்ந்தாலும் அதைபற்றிய கவலை எனக்கில்லை என்ற மனப்பான்மை வந்திருந்தது. ஆனால் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்திக்கு, அவளது மனம் சொன்னது,

இதில் இவள் வெறும் அம்பு தானென!

ஆனால் சஷாங்கனுக்கு மனம் கொஞ்சமும் இளகவில்லை.

மெதுவாக அவன் பிஸ்டலை கீழிறக்க, ப்ரீத்தி பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டாள்.

“வேண்டாம் ஷான். இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். இவங்க இப்படித்தான்னு தெரிஞ்சு போச்சு. போதும் விடுங்க… இந்த விஷயத்துக்காக உங்க வாழ்க்கைய, நீங்க தொலைக்க முடியாது.” அவனை எப்படியாவது அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டால் போதுமென்று இருந்தது ப்ரீத்திக்கு!

சக்தி அனைத்தும் வடிந்தார் போல, முழுவதுமாக தளர்ந்தவன், அப்படியே கீழே சரிந்து அமர்ந்தான். அவனது வேதனையை பார்க்கும் போது அவ்வளவு துயரமாக இருந்தது ப்ரீத்திக்கு. அதே துயரம் ஸ்வேதாவுக்கும் இருந்தாலும், அதை அவளால் வெளிப்படுத்திக் கொள்ள முடியாது.

கண்களில் கண்ணீர் படலம்!

“இனிமே தொலைக்க என்ன இருக்கு…?” அவனது ஒற்றை வரியில், அவனது வேதனை முழுவதும் புரிய, அவனது கையைப் பிடித்து தூக்க முயற்சித்தாள்!

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீங்க எழுந்திருங்க… போகலாம்… நிதானமா பேசலாம்…” எனும் போதே ப்ரீத்தியின் குரலும் உடையப் பார்த்தது. சஷாங்கனை இப்படி உடைந்த நிலையில் அவள் பார்த்ததே இல்லையே!

“விடு ப்ரீத்தி…” என்று கையை உதறியவன், ஸ்வேதாவை நோக்கி, “நிஜமா என்னை நீ லவ் பண்ணவே இல்லையா?” கடைசி நம்பிக்கையை குரலில் தேக்கியபடி கேட்டான்.

அவனுக்குள் ஏதோவொன்று ஒட்டிக் கொண்டிருந்தது!

அவள் இடம் வலமாக தலையை அசைத்து, “இல்ல…” என்றாள் உறுதியாக!

ஆக்ரோஷமாக எழுந்தவன், “அப்புறம் ஏன்டி என்கூட…” என்று ஆரம்பித்துவிட்டு, அருகில் ப்ரீத்தி இருந்ததால் சட்டென்று நிறுத்தியவன், “இருந்த…” என்று சற்று வார்த்தையை மாற்றி கேட்டான். ப்ரீத்தி இல்லாமலிருந்தால், அவன் கேட்கும் கேள்விகளே வேறுதான்!

“ப்ராஜக்ட்…” ஒற்றை வார்த்தை பதில் ஸ்வேதாவிடமிருந்து!

“இத்தனை நாளா உருகினது எல்லாம்?”

“ப்ராஜக்ட்…”

“நீ இல்லைன்னா செத்துடுவேன்னு சொன்னது?”

“ப்ராஜக்ட்…”

“நீ மட்டும் தான் என்னோட உலகம்ன்னு சொன்னது?”

“ப்ராஜக்ட்…”

“ப்ராஜக்ட்… ப்ராஜக்ட்… ப்ராஜக்ட்…” அடிவயிற்றிலிருந்து கத்தியவன், “பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவ? இல்லையா?” என்று அவன் கேட்டபோது, அவளது உயிரில் பாதி போய் விட்டதாகத் தோன்றியது!

“எஸ்… ஆமா…” மனதை கல்லாக்கிக் கொண்டு அவள் கூற, கையிலிருந்த பிஸ்டலால், அருகிலிருந்த பித்தளை பூந்தொட்டியை சுட்டான். அவனால் அவனது கோபத்தை அடக்க முடியவில்லை. அவளை சுட முடியவில்லை. அந்த ஆத்திரத்தை இப்படி தீர்த்துக் கொள்ள பார்த்தான்!

“ஸ்வேதா… ஸ்வேதா…” என்று மாயா கதவுக்கு பின்னால் நின்று கதறினார். மகளுக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்ற பயத்தில்!

“ஐ ஆம் ஃபைன் மா…” நின்ற இடத்திலிருந்து குரல் கொடுத்தாள்!

அவளை கூர்மையாக பார்த்தவன், பல்லைக் கடித்தபடி, “சரி… நான் பணம் தர்றேன். நீ சொன்னது உண்மை இல்லைன்னு மீடியா கிட்ட சொல்லு…”

“இல்ல… முடியாது…” இறுக்கமாக கூறியவளை அற்ப புழுவாகப் பார்த்தவன்,

“ஆப்டர் ஆல் அந்த பணத்துக்காகவா இப்படியொரு நாடகமாடின ஸ்வேதா? என் கிட்ட கேட்டிருந்தா எவ்வளவு வேணும்னாலும் குடுத்து இருப்பேனே…” அவனது குரலிலிருந்த வலி அவளையும் தொட்டிருக்க வேண்டும்.

மெளனமாக தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்!

அவளது மௌனம் அவனை இன்னமும் வெறியேற்ற, ஆக்ரோஷமாக முன்னே வந்தவன், அவளது நெற்றிப் பொட்டில் மீண்டும் பிஸ்டலை வைத்து,

“சரி… இந்த ப்ராஜக்ட்டை…” என்று கூறி நிறுத்தினான். அவனுக்கே தன்னை நினைத்துக் கேவலமாக இருந்தது. ஒருத்தி அவனை ப்ராஜக்ட் செய்தேன் என்று கூறுமளவா ஏமாளியாக இருந்திருக்கிறான்? அவனது இயலாமையை அவனுள்ளே புதைத்துக் கொண்டு, “யார் செய்ய சொன்னது?” என்று கேட்க, அதற்கும் அவள் மௌனத்தையே பதிலாக கொடுக்க, அவனுடைய கோபம் இன்னமும் இரட்டிப்பானது.

“சொல்லு…” என்று அவளை அறைய, ப்ரீத்தி பதறியபடி, ஸ்வேதாவை தூக்கினாள். ஸ்வேதாவின் கன்னம் இரண்டிலுமே அறைந்த தடயங்கள்!

சிவந்து கன்றியிருந்தது, ஆனால் அவளது முகத்தில் கொஞ்சமும் வேதனையில்லை!

வாயையும் திறக்கவில்லை!

அவளை அணைத்துக் கொண்டு, “தயவு செஞ்சு அவங்களை அடிக்காதீங்க ஷான். நீங்க என்ன நினைச்சாலும் பரவால்ல, ஒரு பொண்ணை இப்படி அடிக்கறதுக்கு பேர் வீரமில்லை. உட்கார்ந்து பேசுங்க… அவங்க, உங்க கிட்ட அவங்க வீரத்தை காட்டலை…” சற்று குரலை உயர்த்தினாள். ப்ரீத்திக்கு ஏனோ ஸ்வேதாவின் மேல் கோபம் வரவில்லை. அவள் யாரிடமோ சிக்கியிருப்பதாக தோன்றியது! பரிதாபமாக இருந்தது!

“எனக்கு வலிக்கல ப்ரீத்தி…” முதல் முறையாக பிரீத்தியிடம் லேசாக தன் மனதை காட்டினாள் ஸ்வேதா. அவளை அதிர்ந்த பார்வை பார்த்தவளை நேராக பார்த்த ஸ்வேதா, “அடிச்சு கொன்னுட்டா கூட நிம்மதியா போய்டுவேன்…” உணர்வில்லாமல் கூற, ப்ரீத்தியின் அதிர்வு இன்னும் அதிகமானது!

ஆனால் ஷான் இதை நம்ப தயாராக இல்லை. அவன் கண்டிருக்கிறான், இதை விட அதிகமாக இவள் நடித்திருப்பதை. உயிரே உருகும் படிதான் இருக்கும் அவளது நடிப்பு என்று ஏளனமாக எண்ணியபடி,

“போதும் ப்ரீத்தி. அவளை நிறுத்த சொல்லு. மொத்தமா அடிச்சு என்னை உட்கார வெச்சது போதாதா? இன்னும் எதுக்காக அவ நடிப்பை தொடர்ந்துட்டு இருக்கா?” என்று கேட்க,

“என்ன இப்ப கெட்டுப் போச்சு? இவங்க சொன்ன ஒரே ஒரு வார்த்தைல தான் உங்க வாழ்க்கையே இருக்கா? இவங்க மூலமா யாரோ உங்களை அழிக்க நினைக்கறாங்க. உங்க வாழ்க்கைய பந்தாட நினைக்கறாங்க. உங்களையே இல்லாம ஆக்கனும்ன்னு நினைக்கறாங்க. அவங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டாமா? இப்படி கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, நீங்க ரியாக்ட் பண்றதுக்காகத்தான் அவங்க வெய்ட் பண்றாங்க. இனிமே எந்த பழிய வேணும்னாலும் உங்க மேல தூக்கி போட அவங்க தயங்க மாட்டாங்க. அதுதான் உங்களுக்கு வேணுமா?”

இதுவரை பொறுமையாக கெஞ்சிக் கொண்டிருந்தவளின், பொறுமை பறந்து போக, சஷாங்கனை கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டாள். அவளை சற்று வியந்த பார்வை பார்த்தாள் ஸ்வேதா!

அவளுக்கில்லாத தெளிவு… அவளுக்கில்லாத தைரியம்… அவளுக்கில்லாத துணிச்சல்! அனைத்தும் ப்ரீத்தியிடத்தில் கண்டபோது உள்ளுக்குள் சற்று தைரியம் பிறந்தது!

“ரவி… ரவிச்சந்திரன்…”

எதுவும் புரியாமல், “என்ன?” என்று ஷான் கேட்க,

“ரவியோட இன்ஸ்ட்ரக்ஷன் படிதான் நான் எல்லாம் செஞ்சேன்…” நிதானமாக எங்கோ வெறித்தபடி அவள் கூறியதை முதலில் அவனால் நம்ப முடியவில்லை.

“என்ன சொல்ற?” அழுத்தமாக இவன் கேட்ட கேள்விக்கு,

“ரவி தான் என்னை இப்படி பண்ண சொன்னான்…” அழுத்தம்திருத்தமாக கூறியவளை வெறித்துப் பார்த்தான்!

சொந்த தமக்கையின் கணவன்!

இதுவரை எத்தனையோ சதிகள் அவன் செய்திருக்கலாம்! அவனது அன்னைக்கு ரவி மேல் நல்ல அபிப்ராயம் என்றுமே இருந்ததில்லை. அவரைப் போலவே தான் இவனுக்கும்… சொத்துக்காக எதையும் செய்யக் கூடியவன் அவன் என்பது தெரிந்தது தான்!

ஆனால் அந்த சொத்துக்காக இந்தளவு ஒரு மனிதன் போவானா?

“வெறும் பணத்துக்காக, சொத்துக்காகவா? இத்தனையும்?” அவனால் சற்றும் ஏற்க முடியவில்லை.

“உன்னோட பணமெல்லாம் அவனுக்கு எம்மாத்திரம்?” என்றவளின் குரலில் அவளையும் அறியாமல் ஏளனம் வந்து ஒட்டிக் கொண்டது. அவளை நேராக நிமிர்ந்து, ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களுக்கும் வன்மம் பரவிக் கொண்டிருந்தது!

“பின்ன?”

“உன்னோட வால்யு உனக்கு தெரியல ஷான்…” மெல்லிய புன்னகையோடு அவள் கூற, கண்டிப்பாக அவள் ஏதோவொரு மிகப்பெரிய விஷயத்தைத்தான் கூறப் போகிறாள் என்பது மற்ற இருவருக்குமே உறுதியானது!

“வாட் டூ யூ மீன்?”

“எஸ்… ஐ மீன் யூ ஆர் எ ஸ்டுபிட்… இடியட்… ஃபூல்…”

“யூ…” என்று அவளை நோக்கி வந்தவனை, வலது கையை உயர்த்தி நிறுத்தி,

“எவனோ சொன்னான்னு உன் அப்பாவை ஒதுக்கி வைப்பியா? எவனோ சொன்னான்னு உன்னோட வீட்டை ஒதுக்கி வைப்பியா? எவனோ சொன்னான்னு உன்னோட தொழிலை ஒதுக்கி வைப்பியா?” என்று வரிசையாக கேட்டவள், “எவனோ சொன்னான்னு கிரிக்கெட் வாரியம் கூட வேண்டாம்ன்னு ஒதுக்கி வெச்சுட்டு உட்கார்ந்து இருப்பியா?” ஆவேசமாக ஸ்வேதா கேட்க, சஷாங்கனுக்கு பேசத் தோன்றவே இல்லை.

வாழ்க்கையில் இது போன்ற அதிர்ச்சியை அவன் அனுபவித்ததே இல்லை!

“எஸ்… கிரிக்கெட்… அதுதான் அவனுக்கு தங்க முட்டையிடற வாத்து…” என்றவள், “அதுக்காகத்தான் அவன் வந்தான். அதுக்காகத்தான் உன் அக்காவை அவன் இம்ப்ரெஸ் பண்ணி கல்யாணம் பண்ணினான். அதுக்காகத்தான் அவன் உன்னை உன் குடும்பத்துக்குள்ள இருந்து பிரிச்சான். இப்ப அதுக்காகத்தான் உன்னை செல்லாக்காசாக்கி உட்கார வெச்சு இருக்கான்…”

அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாக பாய்ந்தது!

அவன் பேசவில்லை!

அவனது அதிர்ச்சி அப்படி!

முதலில் சுதாரித்தது ப்ரீத்தி தான்!

“நீங்க சொல்றதை நம்ப முடியல ஸ்வேதா…” சற்று கீழிறங்கி ஒலித்தது அவளது குரல்!

“பத்து வருஷமா அவனோட இருக்கேன் ப்ரீத்தி. அவனோட நூக் அன்ட் கார்னர் எனக்குத் தெரியும்…”

அவள் கூறுவதின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு ஷானுக்கு சற்று நேரம் பிடித்தது. அர்த்தம் புரிந்தபோது, அவனது உடலெங்கும் அருவருப்பு!

‘இருந்தேன் என்பது வேறு… இருக்கேன் என்பது வேறு தானே!’

“இப்ப ஏன் சொன்னீங்க?” ப்ரீத்தியின் குரலில் சற்று ரவுத்திரம் ஏறியிருந்தது!

“இதுக்கு மேல என்ன பண்ண முடியும் இவனால? நாடு முழுக்க பரவியாச்சு… மாதேஸ்வரன் பையன் இப்படின்னு. இதுக்கும் மேல இவனுக்கு மேரேஜ் லைப்ங்கறதை யார் யோசிப்பா? சான்ஸே இல்ல…” என்று சிரித்தவள், “இப்பவே பாதி முடக்கியாச்சு… இனிமே முழுசா முடங்கிடுவான். இவங்க அப்பா, இந்த அசிங்கத்தை நினைச்சு இனிமே வெளியவே வர மாட்டாங்க. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் அவனுக்குத்தான்… அடுத்ததா இந்திய கிரிக்கெட் வாரியமும் அவனுக்குத்தான்…” உறுதியாக கூறியவளின் கழுத்தைப் பிடிக்க வந்து, கையை இழுத்துக் கொண்டான் சஷாங்கன்!

அவளைப் பார்க்கும் போதே அருவருப்பு படர்ந்தது!

“இதெல்லாம் நடக்கும்ன்னு நீ நம்பற… இல்லையா?” கேலியாக அவன் கேட்க,

“கண்டிப்பா… அவன் நடத்திக் காட்டுவான்… இட்ஸ் எ சேலஞ்ச்…” உறுதியாகக் கூறினாள் ஸ்வேதா.

“சேலஞ்ச் அக்செப்டட்… முடிஞ்சா அவனை நடத்திக் காட்ட சொல்லு…”

அத்தனை தீவிரமாக கூறியவன், மனம் முழுக்க வன்மமும், விரோதமும், உடல் முழுக்க வெப்பமுமாக அங்கிருந்து வெளியேறினான், ப்ரீத்தியோடு!

error: Content is protected !!