Kalangalil aval vasantham 19(1)

19

மணி பன்னிரண்டை தாண்டியது!

“எப்படி இந்தளவு கேர்லஸ்ஸா இருந்தீங்க ரவி?” தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டபடி ரவியை கேட்டார் சரண் சிங்.

அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். ஐபிஎஸ்ஸின் 1993 ஆம் வருட பேட்ச். முதல் போஸ்டிங் சென்னையில் தான். இன்னும் நான்கு வருடத்தில் ரிட்டையராக போகிறவர். எப்படியும் டிஜிபியாக தான் பணி ஓய்வு பெற வேண்டும் என்பது லட்சியம். கண்டிப்பாக அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

மனைவி ஐஏஎஸ். அவரும் இப்போது சென்னை தான். செக்ரட்ரியேட்டில் மிக முக்கிய பணி. ஒரே பெண். மாடலிங் செய்து கொண்டிருக்கிறாள். பஞ்சாபி கிரிக்கெட் வீரருடன் காதல். கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வாள் என்று எதிர்பார்க்கிறார். நடக்க வேண்டும், ரவி மனது வைத்தால் நடக்கும். பத்து வருட பழக்கம் இருவருக்கும்.

“எப்படின்னு தெரியல சரண் சர். எப்பவும் போல தான் செக்யுரிட்டீஸ் இருந்து இருக்காங்க. ஸ்டுடியோல பெரிய பிரச்சனை எல்லாம் வந்ததில்ல. இதை எக்ஸ்பெக்ட் பண்ணல.”

அவனது முகத்தில் குழப்ப மேகம். சுற்றிலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் நின்றிருந்தது. பதினைந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கிளம்புவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தனர். தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தியதே அவர்களது பெரும் சாதனை. தீ பரவியிருந்தால், அது பெரும் விபத்தாகி இருக்கக் கூடும். அது உயிரழப்புகளையும் கொண்டு வந்திருக்கக் கூடும். ஏனென்றால் அந்த இடத்தின் நெருக்கடி அப்படி.

வடபழனியில் அந்த ஸ்டுடியோ மட்டும் தான் பரந்து விரிந்த ஒன்று. ஆனால் நிர்வாகப் பிரிவு இருந்த அந்த கட்டிடம், நுழைவாயிலருகே இருக்கும் கட்டிடம். தீ இன்னும் கொஞ்சம் பரவியிருந்தால், பக்கத்தில் இருக்கும் மற்ற கட்டிடங்களையும் கண்டிப்பாக பாதித்திருக்கும். அங்கு யாராவது ஆட்கள் இருந்திருந்தால் நிலைமை படுமோசமாக மாறியிருக்கும்.

அது நிர்வாகப் பிரிவு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் தான் ஆட்கள் இல்லை. ஆனால் படப்பிடிப்பு தளங்களில் ஆட்கள் நிறைய இருந்தார்கள். அங்கு பரவியிருந்தாலும் கண்டிப்பாக உயிரழப்புகள் நேர்ந்திருக்கும். நிலைமை அந்த அளவுக்கு போகாததில் மகிழ்ச்சி தான் அவர்கள் அனைவருக்கும்.

அவர்களைத் தவிர அந்த ஏரியா போலீசாரும் துப்பு துலக்கிக் கொண்டிருந்தனர். ஃபாரன்சிக் அதிகாரிகளுக்காக ரவி காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் சரண் சிங் அங்கு வந்தார்.

“யாராவது செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறீங்களா?”

“அப்படி செய்யற அளவு யாருக்கு துணிச்சல் இருக்கும்?”

“ஏன்னா இன்னைக்குத்தான் ஜுபிடர ஹேக் பண்ணோம். அதான் எனக்கு சின்ன டவுட் ரவி…” என்று அவரது சந்தேகத்தை தெரிவிக்க,

“ச்சே… சே… ஷான் ரொம்ப அடங்கி இருக்கான். ஸ்வேதா கிட்ட வாங்கின அடி அந்த மாதிரி…” என்றவனுக்கு ஷான் மேல் சிறிய சந்தேகமும் எழவில்லை. “அதுவுமில்லாம ஹேக் பண்ணதை எல்லாம் மீட்டெடுக்கவே பல வாரமாகிடும். இந்த டென்ஷன்ல இருக்கவன், இப்படி செய்வானா?” என்று கேட்டுக் கொண்டவனுக்கு கொஞ்சமும் சந்தேகம் எழவில்லை.

எப்படியோ ஜுபிடரின் பிரச்சனைக்குரிய கணக்குகளை தூக்கியாகிவிட்டது என்ற நிம்மதியில் இருந்த போது தான் இந்த தீவிபத்து.

“லாஸ் கொஞ்சம் அதிகமா இருக்கும் போல இருக்கே… இன்ஷியுரன்ஸ் இருக்கா?” என்று சரண் சிங் கேட்க,

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல சர். அப்பா, தாத்தா காலத்துல இருந்து வர்றது. அப்ப இருந்தே மோஸ்ட்லி அன்ஆர்கனைஸ்ட் செக்டார் தான் இதெல்லாம். இப்ப எனக்கு ஸ்டுடியோவ பார்க்க நேரமில்ல. மேனேஜர்ஸ் மட்டும் தான் பார்த்துட்டு இருந்தாங்க. அவனுங்களை நம்பி முழுசா விட்டதுதான் தப்பு…”

“ம்ம்ம்… எதுக்கும் ஒரு தடவை தரோவா விசாரிச்சுடலாம்…”

“ம்ம்ம்…” என்றவன் சைமனை அழைக்க, பேசியை எடுத்தான். வைஷ்ணவி அழைத்தாள்.

“என்னங்க பிரச்சனை. ஸ்டுடியோல ஃபயர் ஆக்ஸிடென்ட்ன்னு அப்பா சொல்றாங்க?” பதட்டமாக கேட்டாள்.

“பெருசா ஒண்ணுமில்லம்மா. ஃபயர் சர்விஸ்ல இருந்து வந்துட்டாங்க. அதுக்கு முன்னாடியே ஆல்மோஸ்ட் அணைச்சுட்டாங்க.” குரலே வேறு தொனிக்கு மாறியிருந்தது. அன்பும், காதலும் அதோடு கொஞ்சம் பதட்டமும் சோர்வுமான குரல். எந்த பெண்ணும், ‘ஐயோ பாவம்’ என்று கூறிவிடுவாள்.

“நான் நேர்ல வரட்டா?” விட்டால் அழுது விடுவாள் போல, லேசாக புன்னகைத்துக் கொண்டவன்,

“அதெல்லாம் வேண்டாம் வைஷு குட்டி. நீ தூங்கு. நான் வர்றதுக்கு மட்டும் கொஞ்சம் லேட் ஆகும்…” என்று முடிக்க, அவளுக்கோ மனம் தாங்கவில்லை.

“காலைல ஆஃபீஸ்ல சிஸ்டம்ஸ் ஹேக் ஆகுது. நைட் ஸ்டுடியோல ஆக்ஸிடென்ட்… என்னதான் ஆச்சுங்க? ஏன் மாத்தி மாத்தி நம்மளை இப்படி வாட்டுது?” என்றவளின் குரல் சற்று தேம்ப ஆரம்பித்தது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ மனசை குழப்பிக்காத. நீ எங்க இருக்க?” என்று கேட்டான்.

“அப்பா வீட்ல தான். அப்பா அங்க வர்றதுக்கு கிளம்பிட்டு இருக்காங்க…” என்றவளை கடிந்தான்.

“இந்த நேரத்துல மாமாவை இங்க வர சொல்றியா? அவர் அங்கேயே இருக்கட்டும். தூக்கம் ஸ்பாயிலாகிடும். நீ அவரைப் பார்த்துக்க வைஷு. ஆஃபீஸ் டென்ஷன்ல இருப்பார். இதுல இந்த டென்ஷன் வேற தேவையா?” என்றவன், சற்று நிறுத்தி, “ஷான் வந்துட்டானா?” என்று கேட்டான்.

“அவனும் இன்னும் வரல. நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கல. அங்கயும் டென்ஷனா வொர்க் போயிட்டு இருக்குன்னு அப்பா தான் சொன்னாங்க…” என்றதும், சற்று நிம்மதியாக மூச்சு விட்டான் ரவி.

“சரி மாமாவ அலைய வேண்டாம்ன்னு சொல்லு. நானே பார்த்துக்குவேன். நீ தூங்கும்மா…” என்றவனின் குரலில் கண்ணீர் கோர்த்தது அவளது விழிகளில்!

“ஓகே ரவி. பார்த்து ஜாக்கிரதை…” என்று அவள் வைக்கவும், இவன் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை ‘புஸ்ஸ்’ என்று வெளியே விட்டான்.

“ஒய்ஃப்பா?” என்று கேலியாக சிரித்தார் சரண்.

“ம்ம்ம்…”

“ஓகே ரவி. இந்த ஏரியா இன்ஸ்பெக்டர விசாரிச்சுட்டு இருக்கார். மோஸ்ட்லி எலெக்ட்ரிக்கல் ஷார்ட் சர்கியுட்டா இருக்க நிறைய சான்ஸ் இருக்கு…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கார் ஒன்று ஸ்டுடியோ வளாகத்தினுள் நுழைந்தது.

அவர்கள் அருகில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினான் ஷான். ஓட்டுனர் இருக்கையில் ப்ரீத்தி.

இருவரது முகத்திலும் சோர்வு அப்பிக் கிடந்தது.

அவனை எதிர்பார்க்கவில்லை ரவி. அதிலும் இந்த நேரத்தில், அதுவும் ப்ரீத்தியுடன்!

“வா ஷான்…” என்றவன், பின்னால் வந்த ப்ரீத்தியை பார்த்து லேசாக புன்னகைத்தான்.

அவள் சுற்றிலும் பார்வையை பதித்திருந்தாள்.

“என்ன மாமா ஆச்சு? கேஷுவலிட்டி எதுவும் இல்லல்ல…?” என்று கேட்டவனின் குரலில் லேசான பதட்டம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஷான். எல்லாம் ஓகே. பிரச்சனை இல்ல. சின்ன ஆக்ஸிடென்ட் தான். சரி… உனக்கு யார் சொன்னது?” என்று கேட்க,

“அப்பா தான். ஆஃபீஸ்ல வேலை இன்னும் முடியல. நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டப்ப விஷயத்தை சொன்னாங்க. அதான் என்னன்னு பார்க்க வந்தேன்…” ஒன்றுமறியாதவனைப் போல கூறியவனை பார்க்கையில் எந்த சந்தேகமும் வரவில்லை ரவிக்கும் சரணுக்கும். அவனைப் பொறுத்தவரை, ரவிக்கு தன் மீது சந்தேகம் வரக் கூடாது. அவன் எப்படி உறவாடிக் கெடுத்தானோ, அதை காட்டிலும் அதிகமாக அவனுடன் உறவாட வேண்டும்.

அதனாலேயே ரவிக்கு கொஞ்சமும் சந்தேகம் வராத வகையில் பேச வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டுத்தான் வந்திருந்தனர். நாள் முழுக்க வேலை இருந்தாலும், இந்த இடத்தை விட்டுவிட விரும்பவில்லை, அவன்!

“அதுக்காக ப்ரீத்தியையும் இந்நேரம் வரைக்கும் வெச்சுட்டு சுத்துவியா?” கிண்டலாகக் கேட்டான் ரவி.

“வேலை இருக்கே மாமா…” என்றவனை பார்த்து,

“என்னோட செக்ரட்டரியே ஏழு மணிக்கு மேல இருக்க மாட்டேங்கறான்யா…” என்றபடி சிரித்தான் ரவி.

ப்ரீத்தி தான் சிரித்தபடி, “அவ்வளவெல்லாம் நான் கேக்கல ரவி சர். என்னை தூங்கறதுக்கு அனுப்புனா கூட போதும்… பேய் கூட தூங்கும் போல, பாஸ் தூங்கலைன்னா நானும் தூங்க கூடாதாம்! ஆஃபீஸ் சோபாவுல ஒரு ஓரமா படுத்து தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி வண்டிய எடுன்னு சொல்றாங்க. இந்த கொடுமை எங்க நடக்கும்?” சோகமாக சொல்வது போல சொன்னாலும், அதை பார்த்த ஷானுக்கு சிரிப்புதான் வந்தது.

சிரித்தவளை விழுங்குவது போல பார்த்தார் சரண் சிங். அவருக்கு பெண்கள் வீக்னஸ் உண்டு. ரவியின் தயவால் சினிமா நடிகைகளை அவ்வப்போது பதம் பார்ப்பதுண்டு அவர். ஆனால் ப்ரீத்தியை பார்க்கும் போது, வேறு யாரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாது என்று தோன்றியது அவருக்கு.

சாதாரண சுடிதார் தான். அதிலும் ஷாலை ஏனோதானோவென போட்டிருந்தாலும் கண்ணியமாக இருந்தாள்.

பவித்ரமான அழகு! அதிலும் சிரிக்கும் போது விழும் அந்த கன்னக் குழியில் தொபுக்கடீர் என விழுந்தே விட்டார் அந்த பெரிய மனிதர். எங்கோ பார்த்திருக்கிறார். ஆனால் எங்கு என்று தான் தெரியவில்லை.

இத்தனை நாட்களாக எப்படி விட்டுவைத்திருக்கிறான் இந்த ரவி என்று கேட்க தோன்றியது.

“அநியாயம் பண்ணாத ஷான். பாவம் ப்ரீத்தி…” ப்ரீத்திக்கு பரிந்து கொண்டு வந்தான் ரவி.

அவளும் விடாமல், “நீங்களாவது சொல்லுங்க சர். ஒரு வேலைன்னா பரவால்ல. முழு நேரமும் நான் தான் டிரைவர், நானே தான் செக்ரட்டரி, அதுவும் இல்லாம அப்பப்ப சைட் இஞ்சினியர். லேட்டஸ்ட்டா அக்கௌண்ட்ஸ் பாடம் வேற எடுக்கறாரு. எனக்கு பயமா இருக்கு…” என்று நிறுத்தியவள், சற்று குரலை தழைத்துக் கொண்டு, “இப்ப பரவால்ல, மொதல்ல எல்லாம் மேஸ்தரி வரலைன்னா, செங்கல்லை எடு, நீயே கட்டுன்னு சொல்லிடுவாங்க. ஒரு அடிமை சிக்கிட்டேன்னு வெச்சு செய்றாங்க சர்… கொஞ்ச நாள்ல ஓடப் போறேன்… பார்த்துக்கங்க…” என்றவளின் புன்னகை சொன்னது, அத்தனையும் விளையாட்டுக்காக அவனை வாருகிறாள் என்று!

ஆனாலும் அவள் கூறிய அத்தனையும் உண்மைதானே?!

“எங்க ஓடப் போறீங்க தலைவரே?” என்று சிரித்தபடி ஷான் கேட்க,

“உங்க கிட்ட சொல்லிட்டு போக நான் என்ன கூமுட்டையா தலைவரே?”

“நீங்க எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும் தலைவரே. உங்க தலையெழுத்து அப்படி. வேற வழியே இல்ல…” என்று உதட்டைப் பிதுக்கினான்.

“இதுக்காகவே சொல்லாம கொள்ளாம எங்கயாவது பத்து நாள் போய்ட போறேன் தலைவரே…”

“பத்து நாள் எதுக்குங்க தலைவரே?”

“உங்க தொந்தரவே இல்லாம நிம்மதியா தூங்கனும் தலைவரே…”

“அப்படியென்ன நான் கொடுமை பண்றேன்?”

“நீங்க என்ன கொடுமை பண்ணல?”

“வண்டிய எடுக்க முடியுமான்னு கேட்டது தப்பா கோப்பால்?”

“பகல்ல கேட்டா தப்பே இல்ல லதா. நட்ட நடு ராத்திரில, நல்லா தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி வண்டிய எடுன்னு ஒரு சைக்கோ தான் சொல்வான் லதா…”

“ஆக மொத்தம் என்னை சைக்கோன்னு சொல்லிட்டீங்க கோப்பால்…”

“முடிவே பண்ணிட்டேன் லதா…”

இருவரின் சண்டையை பார்த்தவன், சிரித்தபடி, “டேய் இனிமே இப்படில்லாம் பண்ணாதடா… பாவம்…” என்று கூறியவன், சரண் சிங் புறம் திரும்பியவன்,

“இது சஷாங்கன் சரண் சர். என்னோட பிரதர் இன் லா… ஷான் இவர் தான் அடிஷனல் டிஜிபி சரண் சிங்” என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தியவன், ப்ரீத்தியின் புறம் திரும்பி, “இது ப்ரீத்தி… ஷானுக்கு…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, “அல்லக்கை…” என்று முடித்தான் ஷான்.

“பாஸ்” என்று பல்லைக் கடித்தாள்.

“அழகான அல்லக்கை… இவ்வளவு அழகா இருந்தா எந்நேரமும் வெச்சுக்கத் தான் தோணும்.” என்று இரட்டை அர்த்தத்தில் சரண்சிங் ஜொள்ளி, “கூட வெச்சுக்கறத சொன்னேன் ஷான்…” என்று வழிய, ரவிக்கே அவரது அந்த வழிசலில் எரிச்சலானது. இவன் எதற்காக இந்த நேரத்தில் இவளை அழைத்து வர வேண்டும் என்று கடுப்பாக இருந்தது.

ப்ரீத்தியோ, அவளையுமறியாமல், ஷானின் முழங்கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

சரண் சிங்குக்கு ஷான் பதிலளிக்கவில்லை.

“ஓகே மாமா. எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க. என்ன நேரமானாலும் ஹெசிடேட் பண்ணாதீங்க.” என்று முடித்தவன், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஜுபிடர் போர்ட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணனும் மாமா. ஹேக்கிங் ப்ராப்ளம் ஷேர்ஸ்ல அதோட விளைவை காட்டும். மார்க்கெட்ல பேணிக் செல்லிங் கண்டிப்பா இருக்கும். அதுக்கு முன்னாடி நாம அஃபிஷியல் நோட்டிஸ் குடுக்கணும். போர்ட் மெம்பெர்ஸ்க்கு நாம எக்ஸ்ப்ளைன் பண்ணியாகணும்.” மிகவும் நல்லதனமாக பட்டியலிட்டான்.

“பார்த்துக்கலாம் ஷான். ஐ அம் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ…” என்றவனின் குரலிலிருந்த பேதத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று ரவி எண்ணினான். ஆனால் ஷான் அதை தெளிவாகக் கண்டுகொண்டான்.

“தேங்க்ஸ் மாமா. நான் கிளம்பறேன்…” என்றவன், பிரீத்தியை நோக்கி, கை நீட்டினான்.

புன்னகையோடு, சாவியை அவள் தூக்கிப் போட, அதை கேட்ச் பிடித்தவன், டிரைவர் சீட்டுக்கு போகும் முன், இறுக்கமான முகத்தோடு சரண் சிங்கை நோக்கினான்.

“அவங்க அழகா இருந்தா உங்களுக்கென்ன, இல்லைன்னா உங்களுக்கென்ன?” என்றவன், ரவியின் புறம் திரும்பி, “சாரி மாமா. உங்க ப்ரெண்டா இல்லாம இருந்தா இந்நேரம் நடக்கறதே வேற…” என்று கூறிவிட்டு சரசரவென ஓட்டுனர் இருக்கையில் ஏற, ப்ரீத்தியும் மறுபுறம் ஏறிக்கொண்டாள்.

ரவி தலையிலடித்துக் கொள்ளாத குறையாக சரணை பார்த்தான்.