எடுத்த எடுப்பிலேயே வண்டியை முழு வேகத்தில் எடுத்தவன், வடபழனி ஆற்காடு ரோட்டில் வண்டியை விட்டான்.
இரவில் ஆளரவம் இல்லாத சாலையில் முழுவேகத்தில் போன வண்டியை பார்த்து உள்ளுக்குள் பயமாக இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை ப்ரீத்தி.
“கொஞ்சம் கூல் டவுன் ஆகுங்க பாஸ்…” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
அதை காதில் வாங்கவில்லை அவன்!
“ஷான்…” மீண்டும் மெதுவாக அழைத்தவள், “இப்ப என்னாச்சுன்னு இவ்வளவு கோபப்படற?” கடுப்பாக கேட்டாள்.
“ஒண்ணுமே ஆகலையே. நான் எதுக்கு கோபப்படனும்?” பல்லைக் கடித்துக் கொண்டு அவளை பார்த்து கேட்டான் ஷான்.
“கண்ட்ரோல் யுவர்செல்ஃப்… நீ இந்தளவு டென்ஷனாக அங்க ஒண்ணுமே இல்ல…”
“என்ன இல்ல? இல்ல… என்ன இல்லைங்கறேன்? அவன் முழியப் பார்த்தியா? அப்படியே உன்னை முழுங்கிடுவான் போல. அப்படி பார்க்கறான். இதுல டபுள் மீனிங் வசனம் வேற…” என்று கடுகடுத்தவன், ஸ்டியரிங் வீலை குத்த, அது ‘பாங்க்க்க்’ என்று ஹாரனடித்தது.
“அவன் மூஞ்சி, அவனோட கண்ணு… பார்த்தா பார்த்துட்டு போறான் ஷான்… அதனால நமக்கென்ன?” அவனை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது, அவனது கோபத்தை இன்னும் விசிறி விட்டது.
“அறிவிருக்கா உனக்கு? அவனோட பார்வையோட அர்த்தம் உனக்கு நிஜமாவே புரியலையா? இல்லைனா அவன் வழியறதை என்ஜாய் பண்றியா?”
கேட்க கூடாத கேள்வி தான். ஆனால் கோபத்தின் உச்சியில் கேட்டிருந்தான் அவன்.
“எஸ் என்ஜாய் பண்றேன். போதுமா?” எரிச்சலாக கூறிவிட்டாள்.
ஹாரிங்க்டன் சாலைக்குள் நுழைந்திருந்தான் அனிச்சையாக. அதற்கும் மேல் காரை ஓட்ட விரும்பாமல் ஹாரிங்க்டன் கோர்ட் கார் பார்க்கிங்கில் நிறுத்தியவன், கீழே இறங்கினான்.
மறுபுறம் கதவைத் திறந்து, அவளை வெளியே இழுத்தவன், அவளது கையை இறுக்கமாக பற்றி, “வாட் த ஹெல் இஸ் திஸ். ப்ளடி ஹெல்… என்ஜாய் பண்றியா?” என்று கத்தினான் உச்சபட்ச கோபத்தில்!
சுற்றும் முற்றும் பார்த்தவள், “ஷான் ஏன் கத்தற? ப்ளீஸ்… இங்க பேச வேண்டாம். நாளைக்கு பேசிக்கலாம். என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுடு…” என்று தணிந்த குரலில் கேட்டவளை, கோபமாகப் பார்த்தான் ஷான்.
“எனக்கு இன்னைக்கு பேசியாகணும் ப்ரீத்தி. எப்படி நீ அப்படி சொல்லலாம்?”
“நீ கேட்டதுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? எப்படி சொன்னாலும் வளைச்சு வளைச்சு கேட்கற…” என்றவளின் குரலில் கோபம்.
எதுவும் பேசாமல் அவனது அப்பார்ட்மென்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் போகாமல் கார் பார்க்கிங்கிலேயே நின்று கொண்டாள் ப்ரீத்தி. இப்போது அவனிருக்கும் மனநிலையில் என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. மலை ஏறியது தானாக இறங்கினால் தான் உண்டு என்பதை உணர்ந்தவள், போனில் கேப் எதுவும் அருகில் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தாள்.
பின்னால் அவள் வராததை உணர்ந்தவன், பார்க்கிங்கை பார்க்க, அவள் அங்கேயே நிற்பதை கண்டு, அவனது கோபம் இன்னும் பலமடங்கானது.
விறுவிறுவென வந்தவன், “ஏன் இங்கயே நிக்கற?” என்று கேட்க,
“கேப் பாக்கறேன்…” என்றாள்.
“பளார்ன்னு ஒன்னு விட்டேன்னா தெரியும். நானே உன்னை இந்த நேரத்துல கூட்டிட்டு வந்துட்டேனேன்னு எரிச்சல்ல இருக்கேன். இன்னும் நீ தனியா கேப்ல போறியா? பிச்சுருவேன்…” என்றவன், அவளது கையைப் பற்றிக் கொண்டு வேகமாக அவனது அப்பார்ட்மெண்ட்டை நோக்கிப் போனான்.
அவளால் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. எப்போதும் நடப்பது தானே இது? எந்த நேரத்தில் அழைத்தாலும் கேப் எடுத்துக் கொண்டோ, இரு சக்கர வாகனத்திலோ போய் அவளுக்கு பழக்கம் தானே? இன்று என்ன இப்படி பேசுகிறான் என்று தோன்றியது.
“என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடு ஷான். எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.” என்று மேல்ஸ்தாயில் ஆரம்பித்து கெஞ்சியபடி கீழ்ஸ்தாயில் முடித்தாள் ப்ரீத்தி. அவனிடம் எந்த பதிலும் இல்லை.
கதவை திறந்தவன், நேராக போய் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
“இன்னைக்கு இங்கயே படுத்துக்க. ரூம்ல படுத்துக்க. நான் இங்க ஹால்ல படுத்துக்கறேன். நல்லா தூங்கு. ரெஸ்ட் எடு. நானும் தூங்கனும்…”
இவனிடம் இனி பேசி ஒன்றுமாக போவதில்லை என்று முடிவு செய்தவள், கதவை மூடித் தாள் வைத்தாள். நேராக கிச்சனுக்கு சென்று ப்ரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டாள். அவளுக்கும் கோபம் தான், எரிச்சல் தான். அந்த நேரத்தில் ஆண்களோடு தனித்திருக்க வேண்டிய சூழ்நிலை தான். ஆனால் ஷானின் மேலுள்ள உச்சபட்ச நம்பிக்கை, அவனை நம்பி எந்த நேரமானாலும் போக சொன்னது. ஆனால் அவனைப் போலவே அனைவரும் இல்லையே!
எதுவானாலும் அவளுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள தெரியும் எனும் போது, ஷானுடைய இந்த பதட்டமும் கோபமும் தேவையற்றது என்று தான் தோன்றியது.
தண்ணீர் பாட்டிலை அவன் முன் நீட்டினாள் ப்ரீத்தி. வாங்கிக் குடித்தவனிடம், “வேற எதாவது வேணுமா? காபி போடட்டுமா?” என்று கேட்க,
“வேண்டாம். தூக்கம் வருது. படுக்கணும்…” என்றவன், “உனக்கெதாவது வேணுமா?” என்று கேட்டான்.
“ம்ஹூம்…” என்றவள், “கோபப்படாத ஷான். இதெல்லாம் சகஜம்…” என்று மெதுவாக கூற,
“எனக்கு சகஜமில்ல. நீ என்னை நம்பி வர்ற. என் கூட வர்ற பொண்ணு மேலயே இவன் கண்ணு இவ்வளவு மேஞ்சுதுன்னா, இவனெல்லாம் எப்பேர்பட்ட பொறுக்கியா இருப்பான்… ஆளும் அவனும்… பாஸ்டர்ட்… ஸ்கௌன்றல்… ப்ளடி ராஸ்கல்…” என்றவன், இன்னும் அர்ச்சிக்க, அந்த அர்ச்சனைகளை கேட்க முடியாமல், முகத்தை சுளித்தாள் அவள்.
அவன் இப்படித்தான். கோபம் வந்துவிட்டால் எதிரில் இருப்பவர்கள் காலி! காதும் காலி!
“எல்லாரும் உன்னை மாதிரியே இருக்க மாட்டாங்க. விட்டுத் தள்ளு… அவன் ஜொள்ளு விடறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? தெரியும். ஆனா அதை வெச்சு என்ன நாம பண்ண முடியும்ன்னு தான் பார்க்கணும். கோபப்பட்டு காரியத்தை கெடுத்து விட்டுட்ட…” நிதானமாக கூற, அவனுக்கு கோபம் இன்னும் உச்சத்தை தொட்டது.
இதுவரை அவள் அறியவில்லை என்று தான் நினைத்திருந்தான். ஆனால் தெரிந்து கொண்டே, அதை எப்படி சாதகமாக உபயோகப்படுத்துவது என்று திட்டமிடுகிறாள் என்றால்?
“என் கண்ணு முன்னாடி நிக்காத ப்ரீத்தி. கோபத்துல அறைஞ்சுற போறேன்…” பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவனை பார்த்தவள், சோபாவில் அவனருகில் அமர்ந்து கொண்டு,
“கூல் ஷான். ப்ளீஸ்…” என்று அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“என்ன தைரியம் இருந்தா இப்படி நீ ப்ளான் பண்ணுவ? நான் என்னடி சொம்பையா? எனக்கு அறிவில்ல? உன்னை அடமானம் வெச்சுத்தான் நான் ஒன்னு செய்யனும்னா, அதை ஈன்னு இளிச்சுக்கிட்டு பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா? வேண்டாம் ப்ரீத்தி. என்னை இன்னும் கோபப்படுத்தாத. ரூம்ல போய் படு. தூங்கு…” பல்லை நறநறவென கடிப்பது அவளுக்கே கேட்டது.
“ஷான், இது ஜஸ்ட் ஒரு தூண்டில்.”
“ஒரு மயிரும் வேணாம். இடத்த காலி பண்ணு. போய் படுத்து தூங்கி தொலைன்னு சொல்றேன்ல… தூண்டிலாம் தூண்டில். அவன் தூண்டில்ல நீ சிக்கினா தெரியும்…” என்று அவளை கிளப்புவதிலேயே குறியாக இருந்தான். இன்னும் கொஞ்சம் பேசினால் தான் தன்னுடைய கட்டுபாட்டை மீறி கைநீட்டி விடுவோம் என்று பயமாக இருந்தது.
“என்னை பாதுகாத்துக்க எனக்கு தெரியாதா? ஐ நோ ஹவ் டூ டிஃபென்ட் மைசெல்ஃப். லூசா நீ?” கோபமாக திருப்பிக் கேட்க, அருகில் அமர்ந்திருந்தவளை கூர்ந்து பார்த்தான்.
“உன்னை நீ ஓவர்எஸ்டிமேட் பண்ணிக்கற ப்ரீத்தி…” அவள் மேலிருந்த பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை. அவளும் நேருக்கு நேர் பார்த்தவள்,
“நீ என்னை அண்டர்எஸ்டிமேட் பண்ற ஷான்…”
“ஸ்டுப்பிட் மாதிரி பேசாத…”
“நீ லூசு மாதிரி நடந்துக்காத…”
“சரி சேலஞ்ச்… என்ன பந்தயம்…” விடாக்கண்டனாக கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்,
“நான் வின் பண்ணா, நான் என்ன சொன்னாலும் கேட்கணும். என்ன சொல்ற?” என்று ஷானை பார்த்து கேட்க,
“டன்… அதே மாதிரி நான் வின் பண்ணா நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும்.” நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.
“என்ன பண்ணலாம்?” அவள் கேட்க,
“ஜூடோ. உனக்கும் தெரியும்ல… வா… நான் அஃபென்ஸ்… நீ டிஃபென்ஸ்… ஓகே வா? எவ்வளவு தூரம் உன்னை பாதுகாக்க முடியுதுன்னு பார்த்துடலாம்…” என்றதும், அவள் சுடிதாரை இறுக்கமாக கட்டிக் கொண்டு தயாராகிவிட்டாள்.
இருவருமே கையை தயாராக நீட்டியபடி பொசிஷனில் நிற்க, அஃபென்சிவ் மூவ் செய்தவன், பின்னாலிருந்து அவளை மொத்தமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவள், ஷானை தூக்கி கீழே போட வேண்டும். அதுதான் அடுத்த மூவ்.
அவளும் எப்படியெல்லாமோ முயன்று பார்த்தாள், ஒரு இன்ச் கூட அவனை அசைக்க முடியவில்லை.
தன்னுடைய பலத்தையெல்லாம் உபயோகித்துப் பார்த்தாள்.
ம்ஹூம்… முடியவில்லை!
அவள் இந்தளவு வலு குறைத்தவள் கிடையாது. பத்து எண்ணுவதற்குள் நிறைய பேரை கீழே தள்ளியிருக்கிறாள். ஆனால் இப்போது? வலி உயிர் போனது.
“ஓகே… ஓகே…” என்றவள், “விடு… ஷான்…” என்றவளை திருகியவன், அவளது முகத்தை பார்க்குமாறு முதுகோடு சேர்ந்து இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
சற்று அசைந்தாலும், கால்களால் அவளது காலை இடறிவிட்டு, கீழே தள்ளி விடுவான். அப்படி இல்லையென்றால், கைக்குள் அவளிருப்பதால் கீழ்நோக்கி தள்ளும் அபாயம் அதிகம் இருந்தது.
சட்டென அவளுக்கு அந்த யோசனை தோன்றியது.
அவனது கவனத்தை திசைதிருப்ப வேண்டும். அவ்வளவுதானே!
அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக அணைத்தவள், சட்டென கன்னத்தில் லேசாக முத்தமிட, அவனது கவனம் சிதறியது. கைகள் தளர்ந்தன. அவனது இறுக்கமான பிடியிலிருந்து வெளிவர அவள் முயல, நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன், அவளை மேலும் இறுக்கி, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
இது அஃபென்சிவ் மூவ் அல்ல!
“ஏய் என்னடி பண்ண?”
“என்னை விடு ஷான்…” அவனது இறுக்கமான அணைப்பிலிருந்து தப்பிக்க முயன்றபடி கூறினாள்.
“திஸ் இஸ் நாட் ஃபேர்…”
“ஓகே சரி விடு. நீ தான் வின் பண்ண…” என்றவளுக்கு மூச்சு முட்டியது. அவனது இறுக்கமான அணைப்பு அவளை சங்கடப்படுத்தியது.
“இப்ப எதுக்கு நீ கிஸ் பண்ண?”
“தெரியாம பண்ணிட்டேன்…”
“அதெப்படி தெரியாம பண்ணுவ?”
“கடவுளே… என்னை விடு. இப்ப நீ பண்றதுதான் தப்பு…”
“அப்படீன்னா கிஸ் பண்ணது தப்பில்லையா?”
“ஹய்யோ அது கிஸ் இல்ல. ஜஸ்ட் எ பெக். டிபன்ஸ் கணக்குல எடுத்துக்கடா. இப்ப என்னை விடு”
“அதெப்படி முடியும்? நீ கேம்ல இருந்து டிவியேட் ஆகி என்னை டெம்ப்ட் பண்ணி தப்பிக்க பார்த்து இருக்க…”
“டிவியேட் ஆகல. பெக் பண்ணா அந்த ஷாக்ல நீ இருப்ப, நான் தப்பிக்கலாம்ன்னு மட்டும் தான் பார்த்தேன்.” ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாள் ப்ரீத்தி.
“ம்ம்ம்… சரி” என்று இழுத்தவன், “அப்படீன்னா நான் தான் வின் பண்ணேன். ஒத்துக்கறியா?” என்று கேட்க,
“சரிடா. நீ தான் வின் பண்ண. என்னை இப்ப விடு…”
“அப்படீன்னா நம்ம டீல் படி, நான் சொல்றதெல்லாம் நீ செய்யனும்…” என்று சிரித்தான்.
“ம்ஹூம் மாட்டேன்…”
“ஏய்… ஒத்துகிட்டபடி செஞ்சிடு…”
“முடியாது… மாட்டேன்…” என்றபடி, அவனது பிடியிலிருந்து தப்பிக்க பிரம்ம பிரயத்தனம் செய்தாள். அவளது முயற்சிகளை பார்த்து, அவனது அணைப்பை இன்னும் இறுக்கியவன், முதுகிலிருந்த கையை சற்று கீழிறக்கினான்.
“ஷான் இது தப்பு…”
“நானா ஆரம்பிச்சேன்?”
“சாரி. என்னோட தப்புதான்…” ஒப்புக் கொண்டாலும் அவனது பிடி தளரவில்லை.
“ஆனா இந்த தப்பை நீ ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடி பண்ணிருக்கலாமே? நான் கேட்டப்பவே…” என்று நிறுத்தியவன், “நம்ம லைஃப் வேற மாதிரி இருந்திருக்குமே…” என்றவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்.
“அந்த டாபிக் வேண்டாம் ஷான்…”
“பேசுவேன். ஏன்னா அந்தளவு கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். நான் ப்ரொபோஸ் பண்ணேன். நீ ரிஜக்ட் பண்ணிட்ட. ஆனா நான் மூவ் ஆன் பண்றேன்னு நினைச்சுட்டு போய் கிணத்துல விழுந்தேன் பார். எனக்கு ஏன் அப்படி புத்தி போச்சு…?” அவளை அணைத்தப்படி கேட்டவனை மௌனமாக பார்த்தாள்.
என்ன பதில் சொல்வது?