Kalangalil aval vasantham – 2 (2)

1932 இல் தமிழகத்தில் கிரிக்கெட் வாரியம் அமைந்த காலம் தொட்டு அதில் இவர்களது குடும்பத்தின் ஆதிக்கம் உண்டு. அவை அனைத்தும், வெளியிலிருந்து ஆதரவை கொடுத்த வகையே. ஆனால் மாதேஸ்வரன் அப்படி அல்ல. மிக தீவிரமாக பங்கு கொண்டார். தமிழக கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல… வட இந்தியர்கள் கோலோச்சும் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் இவரது கொடி தான் பறந்து கொண்டிருந்தது.

சுழற்சி முறையில் வரும் போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இப்போதும் மாதேஸ்வரன் சொல்வதுதான் அங்கு வேதம். எத்தனையோ அரசியல்கள் நடந்தாலும், அதைத் தாண்டி வாரியத்தில் ராஜபாட்டை போட அவருக்கு தெரியும்.

ஆனால் மாதேஸ்வரனுக்கு பின் மகன் இவற்றை தூக்கிப் பிடிப்பானா என்ற கவலையும் உண்டு அவருக்கு! ஆனால் மகள், மருமகன் வகையில் அவர் கொடுத்து வைத்தவர் என்று எவ்வளவோ முறை எண்ணியிருக்கிறார்.

இவரை விடவும் கிரிக்கெட்டிலும், வாரியத்திலும் அதிக ஆர்வம் ரவிக்கு உண்டு. அதன் மதிப்பையும் மரியாதையையும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பவன். விளையாட்டு என்பது அவனுக்கும் மிக மிக விருப்பமான ஒன்று.

சொல்லப் போனால், வைஷ்ணவி ரவியை சந்தித்ததே ஷட்டில் கிரவுண்டில் தான். விளையாட்டு மட்டுமே இருவருக்கும் பொதுவானது. அந்த ஆர்வம் மற்றவற்றிலும் தொடர, இருவரது வாழ்க்கையும் ஒன்றாக பிணைக்கப்பட்டு விட்டது.

ரவி, ஐபிஎல் மேட்ச் பற்றி பேச்சை எடுக்க, மடை திறந்த வெள்ளமாக, கவலைகளை மறந்து பேசத் துவங்கினார் மாதேஸ்வரன். வைபவ் பள்ளிக்கு கிளம்ப வைஷ்ணவியை படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தாள் அவள்!

அவர் ஆர்வமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடியே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் சஷாங்கன்!

மாமன் வருவதை பார்த்த வைபவ்வுக்கு உற்சாகம் பீறிட்டது.

“மாமாஆஆஆ…” என்று கத்தியபடி அவனை நோக்கிப் போனவனை அதே வேகத்தில், “ஹேய் கேப்டன்…” என்று சிரிப்போடு ஓடி வந்த சஷாங்கன், அவனை அப்படியே கையிலேந்தி, ஏந்திய வேகத்தில் தலைக்கு மேல் தூக்கிப் போட்டு பிடிக்க, வாய் நிறைய பல்லாக சிரித்தான் வைபவ்.

அனைவரையும் விட மாமன் என்றால் உயிர்! ஆனால் இப்போதெல்லாம் அதிகமாக தன்னருமை மாமனை காண முடிவதில்லை என்ற ஏக்கமும் அந்த பிள்ளைக்கு இருந்தது. அந்த ஏக்கம் தீர, ஷானை பார்த்த மகிழ்ச்சியில் வைபவ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“டேய் பார்த்துடா… பார்த்து…” மகனது சட்டை கசங்கி விடும் என்ற எண்ணம் தோன்றினாலும், இது அபூர்வம், இந்த நிலை, இந்த புன்னகை, இந்த சஷாங்கன்!

“நான் இருக்கேன்ல… என்னோட கேப்டனை நான் விட்டுடுவேனா?” என்றபடி, அவனுக்கு கிச்சு கிச்சு மூட்ட, சஷாங்கனின் கைகளை எடுத்து விட்டபடி கத்திக் கொண்டே சிரித்தான் வைபவ்.

இருவரும் விளையாடுவதை ரசித்துப் பார்த்தார் மாதேஸ்வரன்.

‘இவன் இப்படியே எல்லோரிடமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ தகப்பனாக அவர் மனம் ஏங்கியது. ஸ்ரீமதி இறந்த பின் தந்தைக்கும் மகனுக்குமிடையில் பெரும் இடைவெளி விழுந்து விட்டதை அவர் மனம் உணர்ந்தது. ஆனால் எப்படி அது உருவானது என்றே அவருக்கு தெரியவில்லை. என்ன தவறு நேர்ந்தது என்றும் புரியவில்லை.

“எப்ப வந்த ஷான்?” ஷானை கூர்மையாக பார்த்தபடி ரவி கேட்க,

“நான் எப்ப வந்தேன்னு உங்களுக்கு தெரியாதா மாமா?” வைபவ்வை துரத்திப் பிடித்தபடியே கேட்டவன், சற்று நின்று, சிறிதாக புன்னகைத்தபடி, “வாங்க மாமா…” என்று கூற,

“இதுக்கு நீ வான்னு கூப்பிடாமையே இருக்கலாம் மாப்ள…” என்று சிரித்தான் ரவி.

“இருக்கலாம் தான். ஆனா அக்கா இருக்காளே. அவளுக்காகவாவது கூப்பிட்டுத்தானே ஆகணும்…” என்றவன், தப்பிக்கப் போன வைபவ்வை சிரித்தபடி வாரியெடுத்துக் கொண்டான்.

“எங்கடா தப்பிச்சு ஓடற?” என்றபடி மீண்டும் அவனுக்கு கிச்சுக்கிச்சு மூட்டியபடி, அவனிடமிருந்து தப்பிக்கப் பார்த்த வைபவ்வை ஷான் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“மாமா… மாமா… ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்சியபடியே வைபவ் சிரிக்க,

“சார் கொஞ்சி முடிச்சாச்சா? அவனுக்கு லேட் ஆகுது…” என்று அவனுக்கு முன்னால் வந்து நின்ற வைஷ்ணவி இடுப்பில் கைவைத்தபடி முறைத்தாள்.

“கெடாக்குட்டி…” என்று இறுக்கி அணைத்து முத்தமிட்டப் பின் வைபவ்வை விடுவித்தவன், “உன் பையன் என் மேல மூச்சா போய்ட்டான்… அவனை என்னன்னு கேளு…” தமக்கையை பார்த்து சிரிக்காமல் சஷாங்கன் கூற,

“ம்மா… மாமா பொய் சொல்றான்… அவனை நம்பாத…” என்று வீறிட்டான் வைபவ்.

“அடேய்… அவன் இவன்னா சொல்ற…” என்று வைபவ்வை பிடிக்க ஓடி வந்தவனுக்கு சிக்காமல் அவனுக்கு அழகு காட்டிவிட்டு ஓடினான் அந்த திருடன்.

“இருடா… சாய்ந்தரம் இங்க தான வருவ? அப்ப உனக்கு இருக்குடிய்யே…” என்று ஷான் மிரட்ட, வைபவ் வேண்டுமென்றே இடுப்பை மட்டும் பின்னால் தூக்கி ஆட்டிக் காட்டிவிட்டு சிரித்தபடி காரில் ஏறினான்.

“வானரம்…” என்று சிரித்தபடி ஷான் உள்ளே வர, இந்த காட்சிகளை எல்லாம் ஆனந்தமாக கண்டுகொண்டிருந்த மாதேஸ்வரன் அப்படியே அமர்ந்திருந்தார்.

“உஃப்ப்ப்ப்…” என்றபடி அந்த சோபாவில் சரிந்தான் சஷாங்கன்.

“ஷான்… டிஃபனுக்கு என்ன செய்றதுன்னு வாசு கேக்கறார்டா…” என்ற தமக்கையை பார்த்து,

“எதுன்னாலும் ஓகே கா… நீயே சொல்லு…” என்று கூறினான் ஷான்.

“வாசுவ பால் கொலுக்கட்டை செய்ய சொல்லு வைஷு…” மாதேஸ்வரன் பரிவாகக் கூறினார். சஷாங்கனுக்கு மிகவும் பிடித்தது பால் கொலுக்கட்டை.

“வேண்டாம்…” என்றான் நிர்தாட்சன்யமாக!

“ஷான்…” தவிப்பாக அழைத்த தமக்கையை பார்த்து கசப்பாக புன்னகைத்தவன், முகத்தை அழுத்தமாக தேய்த்து விட்டுக் கொண்டான்.

“இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்கப் போற ஷான்?” ரவி காரமாக கேட்க,

“அதை நீங்க தான் டிசைட் பண்ணனும் மாமா…” இயல்பாக கூறுவதைப் போல தோன்றினாலும் அவ்வளவு கசப்பாக இருந்தது அவனது குரல்.

“கல்யாணாம் பண்ணாம இப்படி அவ கூட இருக்கியே… இது உனக்கே நல்லா இருக்கா?” மாதேஸ்வரன் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க, ரவி தான் கேட்டான்.

“நல்லா தான் இருக்கு மாமா… நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்…” என்று சிரித்தான் ஷான்.

“கன்றாவியா இருக்கு ஷான்…” வைஷ்ணவி அவளது பங்குக்கு கொதித்தாள்.

“சரி இருக்கட்டும்…” அலட்சியமாக தோளை குலுக்கியபடி அவன் கூற,

“சரி அதையெல்லாம் விடு… மாமாவோட எந்த ஆக்டிவிட்டீஸ்க்கும் நீ ஹெல்ப் பண்ண மாட்டேங்கற… எதுக்கும் வர மாட்டேங்கற… ஏன்டா இப்படி இருக்க?” ரவி பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“அது என் இஷ்டம்…” மாதேஸ்வரனை பார்த்தபடி இறுக்கமாக அவன் கூறிவிட்டு எழுந்து அறைக்கு செல்ல முயன்றான்.

“ஈஸிஆர்ல அவ கட்டற ஹோட்டலுக்கு நீ பணம் கொடுத்தியா?” ரவி கேட்க, அவன் பக்கம் திரும்பிய சஷாங்கன்,

“அதை கேக்க நீங்க யாருன்னு கேக்க மாட்டேன்…” என்றவன், இடைவெளி விட்டு, “அது என் இஷ்டம்…” என்றான்.

ரவியால் கோபத்தை அடக்க முடியவில்லை!

“நீலாங்கரை ப்ராஜக்ட்ல வேற ஒரு ஃப்ளாட்டை அப்படியே தூக்கிக் குடுத்துருக்க… ஃப்ரீயா…”

“எவ்வளவு வேகமா உங்களுக்கு இன்பர்மேஷன் வருது…” என்று ஆச்சரியப்பட்டவன், “ஆமா… நேத்துதான் சைன் பண்ணேன்…” என்று கூறி, இடைவெளி விட்டு, “அதுவும் என் இஷ்டம்…”

அதை கேட்டுக் கொண்டிருந்த மாதேஸ்வரனுக்கு ரத்தம் கொதிக்கவாரம்பித்தது.

“ச்சை…” என்றபடி தலையில் கை வைத்துக் கொண்டார்.

“நீ இப்படி இருந்தவனில்லையே ஷான். ஏன் இப்படி?” வைஷ்ணவி அவனைத் தடுத்தபடி கேட்டாள்.

“அது என் இஷ்டம் கா…” மீண்டும் அதே இறுக்கமான தொனி!

“சரி… நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணம் மட்டும் பண்ணிக்க…” அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா ரவி தான் கேட்டான்.

“எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்ல…”

“டேய்… நம்ம அம்மா அப்பா கல்யாணம் பண்ணாமையா குடித்தனம் பண்ணாங்க? நானும் மாமாவும் கல்யாணம் பண்ணாமையா இருக்கோம்?” குரலை உயர்த்தினாள் வைஷ்ணவி.

“அதனால தான் எனக்கு நம்பிக்கை இல்லைங்கறேன்…” என்றவன், டைனிங் டேபிள் நோக்கிப் போனான்.

“தாந்தோணித்தானமா இருக்காத மாப்பிள்ளை…” ரவியின் குரலில் சூடு தெறித்தது.

“கண்டிப்பா பண்ணிக்கறேன்… ஆனா என்னோட கண்டிஷன் உங்களுக்கு முன்னாடியே சொன்னதுதான்.” என்று இடைவெளி விட்டவன், “பொண்ணு ஸ்வேதா தான்…” என்று நிறுத்தியபடி, “என்ன ஓகே வா?” என்று புருவத்தை உயர்த்தி ரவியை பார்த்து கேட்க,

“சை… அவள்லாம் ஒரு பொண்ணு? தூ…” என்று அதுவரை மௌனமாக இருந்த மாதேஸ்வரன், துப்பிவிட்டு கோபமாக எழுந்தார். அவரை பார்த்த ரவி, ஷான் பக்கம் திரும்பி,

“எனக்குத் தெரிஞ்சே எத்தனையோ பேர் கிட்ட போனவடா அவ… அவளைப் போய்…” என்று தலையிலடித்துக் கொண்டான்.

“நீங்க எத்தனை பேர் கிட்ட போனீங்க மாமா?” கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சஷாங்கன் கேட்க,

“ஷான்…” கத்தினாள் வைஷ்ணவி.

இந்த வாக்குவாதங்களை பார்த்த மாதேஸ்வரனுக்கு தலை சுற்றியது. பிபி அதிகமாகியிருந்தது. கீழே விழ போனவரை வைஷு தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

“ஏன்டா தம்பி இப்படி பண்ற?” ஆவேசமாக கேட்ட தமக்கையை உணர்வில்லா பார்வை பார்த்தவன், அமைதியான குரலில்,

“கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்…” என்று கூறிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் மாடியேறினான்.

இது போல பதில் கூறும் நேரத்திலெல்லாம் ஒரு வக்கிரமான திருப்தி தோன்றும் அவனுக்கு! கண்ணுக்கு தெரியாத பலவற்றுக்கு தான் தண்டனை கொடுப்பது போல தோன்றும். தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதை போலவும்!

அவனுக்கும் வலிக்கிறது… அவனும் அந்த வலியை அனுபவிக்கிறான்… அனுபவித்துக் கொண்டே வலிகளை கொடுக்கிறான்!

தவறுதான்… தெரிந்தே செய்யும் தவறுதான்… மன்னிக்க முடியாத தவறுதான்!

ஆனாலும் செய்வான்!

***

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா

இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா?

இல்ல பகலா? எனக்கும் மயக்கம்!

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும் தான் நினைச்சேன், ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும், யோசனை வரல

தூங்கினா விளங்கும், தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா உறங்கு

செல்போனில் பாடலைக் கேட்டபடியே லெட்ஜரை பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. நாள் முழுக்க இடைவிடாமல் வேலை பார்த்ததில் கண்களெல்லாம் வலித்தது. கிட்டதட்ட நான்கு கட்டுமான பிராஜக்ட்களின் வரவு செலவு கணக்குகளை அன்று முழுவதுமாக பார்த்து முடித்திருந்தான் சஷாங்கன், ப்ரீத்தியை உடன் வைத்துக் கொண்டு.

இரவு மணி எட்டரையாகியிருந்தது.

அவன் என்ன சொன்னாலும் செய்து முடித்துவிட்டே போகும் ஒரே ஒரு அடிமையான ப்ரீத்தியை தவிர அலுவலகத்திலிருந்த அத்தனை பேரும் எஸ்கேப் ஆகியிருந்தனர். பொதுவாக இது எப்போதும் நடப்பதுதான். வேலை பார்ப்பதில் சஷாங்கன் கால நேரம் எப்படி பார்ப்பதில்லையோ, அது போலவே பிரீத்தியும் பார்ப்பதில்லை. எப்போது வேண்டுமென்றாலும் உட்கார்ந்து விடுவாள். அந்த கடமையுணர்ச்சியை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அது போலவே அவளிடம் எதை வேண்டுமானாலும் பேச முடியும், வானத்துக்கு கீழுள்ள எந்த விஷயத்தையும்! முன்முடிவுகள் இல்லாமல் இவர்கள் இப்படித்தான் என்று தீர்ப்பெழுத முயலாமல் எதையும் பரந்துபட்ட பார்வையோடு அணுகுவாள். அதை விடவும் சிறந்த தீர்வுகளை மிக எளிதாக கொடுப்பாள். வேலை பார்க்கும் நேரத்தில் கூட இருவரும் நல்ல நண்பர்கள் தான், அதிலும் தன்னுடைய எல்லையுணர்ந்த அவனது ஆகச்சிறந்த தோழி அவள் தான்!

சுழற்நாற்காலியில் சாய்ந்தமர்ந்து ஷான் கைகளை உயர்த்தி நெட்டி முறிக்க, முன்னால் அமர்ந்திருந்த ப்ரீத்தி வாய் மூடியபடி மெல்லிய கொட்டாவியை வெளியேற்றினாள்.

“தூக்கம் வருதா ப்ரீத்தி?”

கை கடிகாரத்தை தூக்கிக் காட்டியபடி, “தூக்கம் வராம டைனோசரா வரும் பாஸ்?” என்று சிரிக்காமல் கேட்க,

“அதுக்குள்ள தூங்கி என்ன பண்ண போற?” உள்ளே சிரித்தபடி கேட்டான்.

“மனுஷங்கன்னா நைட் தூங்குவாங்க பாஸ்…” என்றபடி அவளது லேப்டாப்பை மூடிவிட்டு செல்போன் பாடலையும் நிறுத்திவிட்டு எழ, கால்கள் இரண்டும் மரத்துப் போய் தகராறு செய்தது.

“என்னாச்சு?” அவள் நிற்க தடுமாறுவதை பார்த்த சஷாங்கன் கேட்க,

“சும்மா ஒரு வேண்டுதல் பாஸ். உங்களை பார்க்கும் போது என்னை நானே சுத்திக்கணும்ன்னு… மறந்துட்டேன்ல, அதான் கடவுள் மண்டைல அடிச்சு புரிய வைக்கறார்…” அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.

“அப்பவும் புரியலைன்னா சொல்லு… நான் அதை விட சூப்பரா உன் மண்டைல கொட்டி புரிய வைக்கிறேன்…” என்று இவனும் சிரிக்காமல் கூறினான்.

“போதும் பாஸ்… புரிய வெச்சது… இதுக்கே எட்டரையாச்சு… நாளைக்கு வேணும்னா ஓவர்டைம் பேமெண்ட் குடுக்கறேன்னு சொல்லுங்க… நான் இன்னும் ரெண்டு மணி நேரம் இங்கயே உக்காந்து உங்க கதாகாலட்சேபம் கேக்கறேன்…” என்று சிரித்தாள்.

“உன்னைய உக்கார வைக்க நான் டபுள் பேமெண்ட் குடுக்கணுமா? சான்ஸே இல்ல…” என்றபடி அவனும் எழுந்துகொள்ள,

“பின்ன… இங்க ஒரு ஈ காக்காவாச்சும் இருக்கா பாருங்க பாஸ். அப்படியும் ஒரு அழகான பொண்ணு உங்களை நம்பி, உங்க கதாகாலட்சேபத்தை கேக்க உக்கார்ந்து இருக்கேன்னா, அந்த தைரியத்துக்கே எனக்கு நீங்க தனி பேமெண்ட் குடுக்கணும்…” என்று கிண்டலாக சிரித்தாள். இருவருக்குமே தெரியும். இது கிண்டல் தான் என!

அவன் தன்னை மறக்கவெனவே பிரீத்தியோடு வம்பு வளர்த்துக் கொண்டிருப்பான். பிரீத்தியும் வெகு இயல்பாக அவனை கலாய்ப்பதும், காலை வாருவதும் உண்டு. சீரியசாக இருக்கும் நேரங்களில் மிகவும் சீரியசாக வேலைப் பார்த்தாலும், அவ்வப்போது இவள் அவனையும், அவன் இவளையும் கொஞ்சமாவது கலாய்க்கவில்லையென்றால் உண்ட உணவு செரிக்கவே செரிக்காது என்னும் ரகம் இந்த இரண்டும்!

“அடிங்க… கதாகாலட்சேபம்ன்னு சொல்றதுக்கே, உன் மண்டையில நாலு கொட்டு கொட்டனும்…” என்றபடியே கேபினை மூடியவன், சாவியை அவளிடம் தூக்கிப் போட, எதிர்பாராவிட்டாலும், அதையும் கேட்ச் பிடித்தாள் ப்ரீத்தி. இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்! அவனது செல்பேசி அழைத்தவாறு இருக்க, அதை அவ்வப்போது மௌனிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

“நீங்க எனக்கு சம்பளம் குடுக்கறீங்க தான். ஆனா அதுக்காக மனசறிய என்னை பொய் சொல்ல சொல்றீங்களா யுவர் ஆனர்?”

“சொன்னாத்தான் என்னவாம்? இனிமே தினம் ரெண்டு பொய் சொல்வியாம்… அதுக்கு தகுந்த மாதிரி நான் உனக்கு சம்பளத்தை சேர்த்தி தருவேனாம்! எப்படி டீல்?” கண்ணை சிமிட்டியபடி சஷாங்கன் கேட்க, அவனுக்கு முன் வந்தவள், பெரியதாக வணங்கி,

“பொய் சொன்னா போஜனம் கிடைக்காது பாஸ்… அதனால நான் பொய்யே சொல்ல மாட்டேன்…” அப்பாவியாக கூறியவளை பார்த்தவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

“இதுவே ஒரு மிகப் பெரிய பொய் தான் ஆபீசர்…”

“தருமரும் துரியோதனனும் நகர்வலம் போனாங்களாம்…” என்று அவள் ஆரம்பிக்க,

“பத்தாயிரத்து பதினொன்னு…”

“என்ன பாஸ்?”

“உங்க தத்துவ முத்துக்கள் ஆபீசர்…”

“உண்மை கசக்கும் பாஸ்…”

“டேஸ்ட் பண்ணி பார்த்தீங்களா ஆபீசர்?”

“பாஸ்… ரொம்ப கடிக்கறீங்க…”

“சரி சரி ஒரு ஜோக் சொல்றேன்…” என்றவனின் ஜோக்குகளை கேட்க ஆயத்தமானாள், “சரி சொல்லுங்க, வேற வழி…”

“ஒரு பொண்டாட்டியும் புருஷனும் வீட்டு செலவை எப்படி குறைக்கறதுன்னு பேசிட்டு இருந்தாங்களாம்…”

“ம்ம்ம்ம்…” தலையாட்டினாள்.

“ஹஸ்பன்ட் சொன்னானாம், நீ பொம்பளையா லட்சணமா சமைச்சா வேலைக்காரிய நிறுத்திடலாம்ன்னு…”

“ம்ம்ம்ம்…”

“அதுக்கு அவனோட ஒய்ப், நீங்க ஆம்பிளையா லட்சணமா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்ன்னு சொன்னாளாம்…”

அவன் சொன்னது புரியாமல் சற்று நேரம் விழித்தவள், சடாரென்று தலைக்கு மேல் மஞ்ச பல்பு எரிய, ‘அடப்பாவி’ என்று வாயை மூடிக் கொண்டவள், அதற்கும் மேல் பேசுவாள்?!

அவனது லூட்டிகளை முழுமையாக அறிந்தவள் ப்ரீத்தியாகத்தான் இருப்பாள். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சிரிக்காமல் ஜோக்கை சொல்லிவிடுவான். ஆனால் அதன் பின் சிரிக்காமல் சமாளிப்பதுதான் பெரிய வேலையாக இருக்கும். தனியாக இருக்கும் போதென்றால் பரவாயில்லை. ஆனால் சுற்றிலும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என்று இருக்கும் போதும் யாருமறியாமல் அவன் கூறும் போது சமாளிப்பதில் தான் அவளது திறமையே அடங்கி இருக்கிறது.

பெரும்பாலும் முடியாது. வாய்விட்டு சிரித்து விடுவாள். சுற்றி இருப்பவர்கள் இவளை ஒரு மாதிரி பார்க்கும் போதுதான் தலைகுனிந்து கொள்வாள். அப்போதும் சிரிப்பை அடக்க முடியாது. ஆனால் ஜோக்கை கூறியவனோ ஒன்றுமே அறியாதவனை போல போஸ் கொடுப்பான்.

இப்போதும் அதே போலத்தான். சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தாள்.

அவனது செல்பேசி மீண்டும் மீண்டும் அழைத்து ஓய்ந்தது. அதை பிரீத்தியும் அறிந்திருந்தாள். ஆனால் அவனிடம் பேசியை எடுக்கவா சொல்ல முடியும்? எதுவும் பேசாமல், மெல்லிய புன்னகையோடு அவனுடன் நடந்தாள்.

“என்ன ஆபீசர் சைலன்ட்டாகீட்டீங்க?”

“பசி காதை அடைக்குது பாஸ்… கொஞ்சம் சீக்கிரம் போனா மெஸ்ல தோசைய பிச்சு சாப்பிடலாம். இல்லைன்னா உடைச்சுத்தான் சாப்பிட முடியும்…” என்றவள், சிரிக்காமல் அவன் முகத்தைப் பார்க்க,

“அவ்வளவுதான? வா… ஏதாவது ரெஸ்டாரண்ட் போலாம்…” என்று அவனது லேப்டாப் பேகை காரின் பின் சீட்டுக்கு கொடுத்துவிட்டு முன்னால் ஏறினான்.

அவள் தயங்கியபடி நிற்க, “என்ன ப்ரீத்தி? உள்ள வா…” என்றழைத்தான்.

“இல்ல பாஸ்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்…” என்று தயங்க,

“எல்லாம் பார்த்துக்கலாம்… நீ வா… ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு முடிச்சு, உன்னை பத்திரமா பிஜிக்கு கூட்டிட்டு போய் சேர்க்கறது என்னோட பொறுப்பு…” என்று கூறும் போதே பேசி இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது.

பேசியை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் கசப்பு! இதற்கும் மேல் தவிர்க்க முடியாது என்று முடிவெடுத்தவன்,

“சொல்லு ஸ்வேதா…”

“எங்க இருக்க? ஏன் இவ்வளவு நேரமா ஃபோனை எடுக்கவே இல்ல? எத்தனை தடவை கூப்பிடறது?” உச்சபட்ச குரலில் அவள் காட்டுக் கத்தலாக கத்துவது ப்ரீத்தி வரை கேட்டது.

“நான் எங்க இருந்தா உனக்கென்ன? இப்ப உனக்கு என்ன வேணும்? அதை மட்டும் சொல்லு…” நறுக்குத் தெறித்தார் போல இவன் கேட்க, மறுபுறம் அமைதியானது. அமைதியானதா? ஆற்றாமையில் பொங்கிக் கொண்டிருந்ததா?

“நான் – கால் – பண்ணா – ஏன் – எடுக்க – மாட்டேங்கற?” ஒவ்வொரு வார்த்தையாக பிரித்து அழுத்தமாக உச்சரித்தாள் ஸ்வேதா.

“எனக்கு – வேலை – இருக்கு – நான் – உன்னோட – அடிமை – இல்லை.” அவளைப் போலவே நிறுத்தி நிதானமாக கூறியவனை சற்று பயத்தோடு பார்த்தாள் ப்ரீத்தி. முன்னமே அவனிடம் சொல்லிவிட்டு ஓடியிருக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய சங்கடம் அவளுக்கு!

“என்னை விட உனக்கு வேலை பெருசா?” மீண்டும் அதே கத்தல் அவளிடமிருந்து!

“என்னை விட உனக்கு உன்னோட வேலை பெருசுதானே?” அவள் கேள்வியை அவளிடமே திருப்பினான்.

“அப்படி சொல்லல சஷாங்…” என்றவளுக்கு சற்று சுருதி குறைந்தது.

“நீ எப்படி சொன்னாலும் மீன் பண்ணறது ஒரே விஷயம் தான்… யூ வோண்ட் குவிட் யுவர் ஜாப்…”

“எஸ்… ஐ வோண்ட்…” தீர்மானமாக பதில் வந்தது அவளிடமிருந்து!

“தென் கோ டூ ஹெல்…” என்றவன் அவளது மறுமொழியை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.

பேசியை வைத்து விட்டாலும் அவனது சூடு இன்னும் குறையவில்லை. உடலுக்குள் அந்த அதிர்வு மீதமிருந்தது. அவனது அந்த பதட்டம், சிகரட்டை காவு கேட்டது. கார் டேஷ் போர்டை திறந்தான், சிகரெட் இருக்கிறதா என்பதை பார்க்க! அப்போதுதான் ப்ரீத்தி வெளியே நின்று கொண்டிருப்பது அவனது புத்திக்குள் உரைக்க, அவசரமாக,

“உள்ள ஏறு ப்ரீத்தி…” அவனையும் அறியாமல் அவனது குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்ததோ? சட்டென பயந்தவள், எதுவும் கூறாமல் கார் கதவை திறந்து ஏறினாள்.

மௌனமாக காரை இயக்கிவன், உணர்வை துடைத்தபடி செலுத்தினான். அவன் கூறவில்லை என்றாலும், அவனது முகத்தை பார்த்தபோது புரிந்தது, அவர்கள் இருவருக்கும் சண்டை என்பது. ஆனால் ப்ரீத்தி எதையும் கூற முனையவில்லை.

சற்றுநேரத்தில் அந்த ரெஸ்டாரண்ட் வாசலில் நிறுத்தியவன், அவள் புறம் நன்றாக திரும்பி,

“எனக்கு கொஞ்ச டென்ஷனா இருந்துது ப்ரீத்தி…” என்றவன், சற்று தயங்கி, “உன்னையும் கொஞ்சம் கத்திட்டேனா?” என்று கேட்க,

“இல்ல பாஸ்…” அவசரமாகக் கூறினாள்.

“சாரி…” மெதுவாக அவன் மன்னிப்பை கேட்க,

“ஒண்ணுமில்ல பாஸ்…” என்றவள், “ஏன் இப்படி உங்க மூடை ஸ்பாயில் பண்ணிக்கறீங்க?” என்று கேட்க, அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்,

“என் தலைவிதி…”

சொல்லிவிட்டு ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தவனை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்தாள்!

புரியாத புதிர் அவனோ?!