Kalangalil aval vasantham – 28(1)

“சாக்கி ஆன்ட்டி…” ப்ரீத்தியை எதிர்பார்க்காத வைபவ் வைஷ்ணவியை விட்டுவிட்டு அவளை நோக்கி ஓடி வந்தான்.

“ஹாய் வைபவ் குட்டி…” அவனை கையிலேந்திக் கொண்டவள், இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“சாக்கி எங்க?” பிரீத்தியிடம் வம்பை ஆரம்பித்தான், அந்த குறும்பன்.

“உனக்காகவே வெச்சுருக்கேனே…” அவனை கிச்சுகிச்சு மூட்டியவள், அவளது கைப்பையிலிருந்து எடுத்துத் தர, அப்போதுதான் உள்ளே வந்த வைஷ்ணவி, ப்ரீத்தியை பார்த்து வியந்தாள்.

“ஹேய் ப்ரீத்தி… என்ன இவ்வளவு காலைலயே?” என்று அவளைப் பார்த்து வைஷ்ணவி கேட்க, அதற்கு ப்ரீத்தி பதில் கூறும் முன்,

“ஆஃபீஸ்ல நைட் வேலை முடிய ரொம்ப லேட்டாகிடுச்சு வைஷு. அதான் ப்ரீத்தியை இங்க கூட்டிட்டு வர சொன்னேன்.” என்று அவர் முடித்துவிட, வைஷ்ணவியின் முகம் அதிருப்தியாக கோணியது.

“நைட் லேட்டானா வேலை பார்க்கறவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது எப்ப இருந்து ஆரம்பிச்சுது ப்பா? இது சத்திரமா சாவடியா?” மாதேஸ்வரனுக்கு மட்டும் கேட்பது போல அவள் கேட்டாலும், அது ப்ரீத்தியின் காதிலும் விழுந்தது.

மனம் சுருக்கென்றாலும் வைஷ்ணவியின் இயல்பே அதுதான் என்பதால் அதை பெரிதுபடுத்தவில்லை அவள்.

“வாயை அடக்கு வைஷு.” பல்லைக் கடித்தார் மாதேஸ்வரன்.

“இது நல்லதா படலப்பா… அவ்வளவுதான் சொல்லிட்டேன். இதுக்கு மேல இதை பத்தி நான் பேசலை…” என்று சிடுசிடுத்தவள், தயாராக இருந்த பொங்கலை தட்டில் எடுத்துக் கொண்டாள், வைபவ்வுக்கு ஊட்டுவதற்காக, “வாசுண்ணா, முறுகலா ஒரு தோசை…” என்று சமையலறையை பார்த்தபடி!

“சரிங்கம்மா…” என்று சமையலறையிலிருந்து பதில் கொடுத்தார் வாசு.

எதுவும் பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

“டிபனை சாப்பிடு ப்ரீத்திம்மா. சீக்கிரம் கிளம்பனும்ன்னு ஷான் சொன்னானே…” என்று அவர் கூறும் போதுதான் அவனும் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான்.

“வா க்கா…” வைஷ்ணவியை பார்த்து அழைக்க, அவள் சிறு புன்னகையை பதிலாக கொடுத்தாள். வைபவ்வை பார்த்தவன், “டேய் குண்டா…” என்று அவனை தூக்கி சுற்றியபடி கீழே இறக்கி விட்டான்.

“பாரும்மா… மாமா என்னை குண்டா சொல்றாங்க…” தாயிடம் புகார் தெரிவித்த மருமகனை, மீண்டும், “உங்கம்மாட்ட சொன்னா பயந்துடுவேனா குண்டா?” என்று அவனை மீண்டும் வம்பிழுத்தான் ஷான்.

பொறுமையை இழந்த வைபவ், “போடா மாமா…” என்று கூறிவிட்டு ஓடப் பார்க்க, தாவிப் பிடித்துக் கொண்ட ஷான், “என்னடா சொன்ன குண்டுப்பயலே…” என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டினான்.

“ஐயோ சொல்ல மாட்டேன்… சொல்ல மாட்டேன்…” என்று சிரிக்க முடியாமல் கெக்கபெக்க என்று சிரித்தபடி கூறிய வைபவ், அவன் விட்டதும், “போடா டேய்…” என்று கூறிவிட்டு பறக்கப் பார்த்தவனை மறுபடியும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான் ஷான்.

“ஃபிராடு பயலே… என்னயவா ஏமாத்துற?” என்று அவனை அமுக்கிப் பிடித்தவன், சோபாவில் வாகாக அமர்ந்தபடி மடியில் மருமகனை வைத்துக் கொண்டு அவனது கன்னத்தை கடித்து வைத்தான்.

“தாத்தாஆஆ…” என்று கத்திய அந்த குறும்பன், “என்னை காப்பாத்துங்க…” என்று இன்னும் கத்த,

“ஷான்… அவனை விடு. ஸ்கூலுக்கு கிளம்பனும்ல…” என்று மாதேஸ்வரன் கூறிய பின் தான், “பொழைச்சு போடா குண்டா…” என்று விட்டான்.

“சாப்பிடு ப்ரீத்திம்மா.” இருவரது விளையாட்டையும் பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருந்த ப்ரீத்தியை பார்த்து திரும்பவும் மாதேஸ்வரன் கூற,

“இல்லப்பா… இன்னைக்கு வியாழக்கிழமை. சாய்பாபாவுக்கு காலைல விரதம்.” என்று சிரித்தபடியே கூறியவளை நம்பாமல் பார்த்தார் மாதேஸ்வரன்.

“நிஜமாவா சொல்ற?”

“ஆமா ப்பா… நிஜமாத்தான் சொல்றா. ரெகுலரா வியாழக்கிழமை விரதம் தான்…” என்று ஷானும் கூறிய பின்னரும் கூட அவருக்கு நம்பமுடியவில்லை. வைஷ்ணவி பேசியது கண்டிப்பாக காதில் விழுந்திருக்கும் என்பதை உறுதியாக நம்பினார். உணவுக்கு முன் இந்த பெண் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று தோன்றினாலும், பெற்ற மகளை என்ன சொல்லி பேசுவது? தானே விட்டு தரலாமா என்றும் தோன்ற, எந்த பக்கம் பேசுவது என்று புரியாமல் பார்த்தார்.

ப்ரீத்தியின் செல்பேசி அழைத்தது.

எடுத்து யாரழைத்தது என்று பார்த்தாள்.

சீதாலக்ஷ்மி தான் அழைத்துக் கொண்டிருந்தார்.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “சொல்லும்மா…” என்று கூறினாள், சற்று கீழிறங்கிய குரலில், அருகில் மாதேஸ்வரன் இருப்பதால்!

“ஆபீசுக்கு கிளம்பிட்டியா அம்மு?” என்று அவர் கேட்க,

“பாஸ் வீட்ல இருக்கேன்ம்மா. கிளம்பிட்டே இருக்கேன். சொல்லு…” என்று கூற,

“ரொம்ப ஜாக்கிரதை அம்மு. ரொம்பவும் ஒட்டாத, ரொம்பவும் வெட்டிக்காத…” ஜாக்கிரதை உணர்வோடு கூறினார். அவர் தான் பார்த்துவிட்டாரே, ஒரு சம்பவத்தை. ஆனால் அவர் பார்க்காமல் எத்தனை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரியாதே!

“கண்டிப்பாம்மா…”

“இன்னைக்கு பணம் போட்டு விடறியா அம்மு. கொஞ்சம் செலவும் இருக்கு. மளிகை சாமான் எல்லாம் வாங்கனும்.” என்று அவர் கேட்க,

“முன்ன குடுத்துதது என்னம்மா ஆச்சு?” கணக்காக தான் கொடுப்பாள். கொடுத்தது போக சேர்த்தெல்லாம் வைக்க முடியாது. செலவு செய்வதற்கும் கடனை கட்டவும் சரியாக இருக்கும். அதனால் பண விஷயத்தில் அவள் சற்று கறார் தான்.

“இந்த மாசம் செலவு கொஞ்சம் அதிகமாகிடுச்சு அம்மு. ஒரு ரெண்டாயிரம் போதும்…” என்று அவர் கூற,

“சரிம்மா… பார்த்து போட்டு விடறேன்…” என்று மிகச்சிறிய குரலில் கூறினாள். தன்னுடைய இக்கட்டை மற்றவர்கள் அறிவதில் அவளுக்கு பிரியமில்லை. அதிலும் வைஷ்ணவி இருக்கும் இந்த நேரத்தில் அதை மிகவும் முக்கியமாக கருதினாள்.

“அப்புறம் இன்னொரு விஷயம்…” என்று அவர் கூறும் போதே அவருக்கு சற்று தயக்கமாக இருந்தது. இந்த பேச்சை இப்போது எடுக்க அவர் பிரியப்படவில்லை. அவரது மகளின் தேவை அவருக்கு இருந்தது. காயத்ரி படித்து முடிக்க வேண்டிய கட்டாயமிருந்தது. எல்ஐசி கடன் பாக்கியிருந்தது.

“காலங்கார்த்தாலையே நம்ம வாத்தியார் வீட்டுக்கு வந்திருந்தார் அம்மு.”

“ம்ம்ம் சரி…”

“ஒரு வரன் வந்திருக்காம். உன்னை பார்த்து ரொம்ப பிடிச்சு போச்சாம். பொண்ணை மட்டும் கொடுத்தா போதும்ன்னு சொல்றாங்களாம்.” என்று கூற, ப்ரீத்தியே சற்று ஆச்சரியபட்டாள்.

ஜாதக கட்டை எடுக்க வேண்டும் என்று சீதாலக்ஷ்மி சொல்வாரே தவிர, இதுவரை எடுத்ததில்லை. பெண்ணை கட்டிக் கொடுத்து விட்டால், தங்கள் தேவைகளுக்கு யாரை அணுகுவது என்ற அவரது எண்ணம் அவளுக்கும் தெரியும். அதனால் அவளது திருமணத்தைப் பற்றிய பெரிய எண்ணங்கள் ஆசைகள் என்று எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஷான் முதலில் கேட்கும் போது கூட இதே எண்ணம் தான். இப்போதும் கூட காதலித்தால் மட்டும் சொல் என்று அவன் கூறும் போதும் கூட இதே இக்கட்டில் தான் அவளிருந்தாள்.

தனக்காக யாரிடமும் கையேந்த கூடாது என்ற பிடிவாதம் அவளிடம் நிறைய உண்டு!

“ம்ம்ம். அதனால என்னம்மா?”

“அவங்க போட்டோவும், ஜாதகமும் வாத்தியார் கிட்ட குடுத்து விட்ருக்காங்க. என்ன பண்றது அம்மு?” என்று அவர் கேட்க, தானென்ன பதில் கூறுவது என்று கேட்க தோன்றியது.

“சரி போட்டோவ அனுப்பி விடும்மா. நான் பார்த்துட்டு சொல்றேன்.” என்று கூறிவிட, சீதாலக்ஷ்மிக்கும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் வயது வந்த பெண்ணை சம்பாத்தியத்துக்காக கூடவே வைத்துக் கொள்ள நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதையும் அவர் உணராமலில்லை. இப்போதே இருபத்தியெட்டு வயதை தொடப் போகிறாள். இன்னும் இரண்டு வருடங்கள் போனால் முப்பதாகி விடும். அதன் பின்னும் மனம் நிறைந்த வாழ்க்கையை அவரால் அமைத்துக் கொடுக்க முடியுமா என்ற கேள்வி அவர் முன் பிரம்மாண்டமாக எழுந்து நின்றது. தங்களுக்கு பிறந்து விட்டதற்காக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழாமல், அவர்களுக்கே சம்பாரித்து போட வேண்டுமா என்று அவரது மனசாட்சியும் கேட்டது.

“சரி அம்மு.” என்றவர் வைத்துவிட்டார்.

அவளது செல்பேசி உரையாடலை கேட்டுக் கொண்டிருத்த ஷான், “என்னவாம்?” என்று கேட்க, ஒரு சிறு புன்னகையோடு, “நத்திங் பாஸ்… ஆஸ் யூஸ்வல் தான்…” என்று முடிக்கப் பார்த்தாள்.

மாதேஸ்வரனுக்கும் அதே கேள்வி இருந்தது.

“போட்டோ அது இதுன்னு பேசினீங்களே மேடம்?” என்று சிரித்தான்.

“நான் என்ன பேசறேன்னு ஒட்டு கேட்கறதுதான் உங்க வேலையா பாஸ்?” என்று அவளும் சிரித்தாள்.

டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு டிபனை எடுத்து தனக்கு வைத்துக் கொள்ள துவங்கினான். அது ஸ்ரீமதி பழக்கிவிட்ட பழக்கம். யாரும் பரிமாறுவதற்காக காத்திருக்க கூடாதென்பது அவரது கண்டிப்பு. அதனாலேயே அனைவரும் அவர்களாகவே தான் எடுத்துப் போட்டுக் கொள்வது.

“இங்க வந்து உட்கார் ப்ரீத்தி…” என்று அவனுக்கு பக்கத்திலிருந்த இருக்கையை காட்ட, அவளும் வந்து அமர்ந்தாள்.

“விரதமெல்லாம் மத்த நாள்ல வெச்சுக்கலாம். இன்னைக்கு சாப்பிடு…” என்று அவளுக்கும் சேர்த்து தட்டை வைத்தான். மாதேஸ்வரன் சிரித்துக் கொண்டார். மகன் தேறிவிடுவான் போல என்று நினைக்கையில் அவரையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.

“இல்ல பாஸ். அப்படியெல்லாம் பண்ண முடியாது…” என்று கூறும் போதே, அவளது தட்டில் பொங்கலை பரிமாறினான், அவள் வேண்டாமென தடுக்கும் போதே!

உடன் மாதேஸ்வரனும் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“வாசு… எனக்கொரு காபி…”

“அப்பா… இது எத்தனையாவது காபி?” அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி வைபவ்வுக்கு உணவை ஊட்டியவாறே கேட்க,

“ரெண்டாவதுதான் வைஷு…” என்றார்.

“பத்து மணிக்குள்ள நாலாகிடும்…”

“ரெண்டு கிலோமீட்டர் சேர்த்து நடந்துடறேன் குட்டிம்மா…” என்று சிரித்தார்.

“என்னவோ பண்ணுங்க…” என்று கடுப்பாகினாள்.

தமக்கையின் கோபத்தைப் பார்த்து சிரித்தவன், “வைஷு சொல்றதைத்தான் கேளுங்களேன்ப்பா.” என்று கூற,

“நல்லா சொல்லு ஷான். ஒரு நாளைக்கு பத்து காபி. அந்த உடம்பு என்னாகறது? காப்பிய குடிக்க வேண்டியது, சாப்பிடாம ஓட்ட வேண்டியது.”

“என்ன?” என்றவனின் முகத்திலும் கோபம்.

“குறைச்சுக்கறேன்டா தம்பி. வைஷு சொல்ற மாதிரி பத்தெல்லாம் இல்ல, ஒரு அஞ்சாறு போகும். அவ்வளவுதான்… அதுவும் ஆஃபீஸ் வந்துட்டா அதுவுமில்ல…”

“அப்படீன்னா அங்க வாங்க…” என்று கூறியவன், “இப்ப என்ன உங்களுக்கு வயசாச்சுன்னு வீட்ல உட்கார்ந்துட்டு இருக்கீங்க?” என்றான் கோபமாகவே!

“அப்பப்ப வர்றதுதான் தம்பி. முக்கியமான வேலைன்னா…” என்றவரின் சுருதி இறங்கியது.

“இனிமே தினம் வாங்க. அதென்ன நீங்க மட்டும் வீட்ல உட்கார்ந்து பொழுதை போக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, மாதேஸ்வரன் நெளிந்தார்.

“சரி தம்பி…” என்று உடனே ஒப்புக் கொண்டவரை ஆச்சரியமாக பார்த்தாள் வைஷ்ணவி. இத்தனை நாட்களில் எவ்வளவோ முறை இதை கூறியிருப்பாள். ஆனால் கேட்டிருப்பாரா?

“இதே நான் சொன்னப்பல்லாம் கேட்டீங்களா ப்பா?” அதை கேட்டும் விட்டாள்.

“இல்ல குட்டிம்மா. மனசு சங்கடமா இருந்தப்ப எதுவுமே செய்ய தோணலை. இப்ப தான் தம்பி இருக்கானே… அப்புறம் எனக்கென்ன கவலை?” என்று கேட்க, அவளுக்கும் அது சரிதானென பட்டது. அவர் கூறுவதும் உண்மைதானே! ஷான் பழையது போல ஆகிவிடமாட்டானா என்பதுதான் அவளது வேண்டுதலும் அல்லவா!

வைத்த பொங்கலை சாப்பிடாமல், இவர்களின் உரையாடலை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன், “சாப்பிடு ப்ரீத்தி. டைமாச்சு… கிளம்பனும்…” என்று கூற, அனைவர் முன்னும் மறுத்துக் கூற முடியாமல் தயங்கினாள்.

“தலைவரே… பொங்கல் அப்படியே உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு. மிளகும் நெய்யுமா… மிஸ் பண்ணாதீங்க… அப்புறம் வருத்தப்படுவீங்க…” என்று அவன் சிரிக்க,

“பாஸ்…” என்று பதிலுக்கு சிரித்தாள்.

“விரதத்தை இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ப்ரீத்திம்மா. சாப்பிடு…” என்று அவரும் கூற,

“சரிப்பா…” என்றவள், உண்ண துவங்கினாள். இதற்கு மேலும் மறுத்தால் மரியாதை இல்லையென கருதி!

“ஷான் ஒரு ஒன் ஹவர் பர்மிஷன் வேணும்…” அவன் புறம் குனிந்து ப்ரீத்தி கேட்க,

“ஏன்? என்ன விஷயம்?” அவளை பார்த்தவனுக்கு நெற்றி சுருங்கியது.

“பர்சனல் வேலை…”

“என்ன… எனக்குத் தெரியாம பெர்சனல் வேலை?” கிடுக்கிப் பிடி போட்டான். அவனறியாமல் அவளுக்கு தனிப்பட்ட வேலை என்று இருந்ததில்லை. அப்படி இருந்தால், அவனிடம் சொல்லாமல் மறைக்கிறாள் என்பதுதான் அவனது அனுபவம்.

“உனக்கு தெரியாம எனக்கு எந்த பெர்சனல் வேலையும் இருக்காதா?” கடுப்பாக கேட்டாள் ப்ரீத்தி.

“இருக்காது…” சாதாரண குரலில் கூற, மாதேஸ்வரன் ப்ரீத்தியை பாவமாக பார்த்தார்.

“டேய் தம்பி… இதென்ன அராஜகம்? ஒன் ஹவர் பர்மிஷன் தான?”

“இருங்கப்பா. இவளை பத்தி உங்களுக்கு தெரியாது.” மாதேஸ்வரனுக்கு பதில் கூறியவன், முறைத்துக் கொண்டிருந்த ப்ரீத்தியை பார்த்து, “என்ன முறைக்கிற?” என்று கேட்டான்.

“இன்னைக்கு ஹாப் டே லீவ் பாஸ்…” என்று அவள் முடித்து விட பார்க்க, விடுவானா அவன்?

“நாட் கிராண்ட்டட்…”

“பாஸ்… ஐ ம் ரிசைனிங்…” பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள். மாதேஸ்வரனுக்கு புரையேறியது.

“ரிஜக்டட்…” அவள் எறியும் பந்துகளை எல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டிருந்தவனை எரிப்பது போல பார்த்தாள் ப்ரீத்தி.

“இப்ப என்ன தான்டா சொல்ல வர்ற?” மற்றவர்கள் முன் மரியாதையை கைவிட்டதில்லை அவள். ஆனால் அவளது பொறுமையை சோதித்தான் ஷான்.

“என்ன விஷயம்ன்னு சொல்லுடி.”

“முடியாது…”

“அப்ப நானும் பர்மிஷன் கொடுக்க முடியாது…”

பிடிவாதமாக கூறியவனிடம் எப்படி போராடுவது என்று புரியவில்லை. முன்பானால் வேலையை கூறிவிட்டு போய்விடுவான். ஆனால் இப்போதெல்லாம் முழுக்க முழுக்க அவனுடனே இருக்க நேரிடுவதால், அவனறியாமல் எதையுமே செய்ய முடியாது என்கிற நிலைதான்! அப்படியிருக்கும் போது என்ன செய்ய? காயத்ரிக்கு பணம் கொடுக்க பணத்தை புரட்டியாக வேண்டும். அதற்கு அவளிடமிருக்கும் செய்னை தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இதை சொல்ல முடியுமா? சொன்னால் அதை செய்ய விடுவானா என்பது அவளுக்கு தெரியாது. ஆனால் அவளது மரியாதையும், அவளது குடும்பத்தின் மரியாதையும் என்னாவது?

இடக்கையால் நெற்றியைப் பிடித்துக் கொண்டாள் ப்ரீத்தி.

“பாவம்டா தம்பி.” என்று மாதேஸ்வரன் சைகையால் உணர்த்த, அவன் தலையாட்டிக் கொண்டான்.

“பேங்க் போகணும்…” சற்று இறங்கிய குரலில் கூறினாள்.

“எதுக்கு?” டெம்போ இறங்காமலேயே கேட்டான் ஷான்.

“ம்ம்ம்… கொள்ளையடிக்க போறேன். கூட வர்றியா?” கடுப்பாக கேட்டாள் ப்ரீத்தி.

“வாவ்… சூப்பர். போலாமே! எப்ப?” என்று கேட்டவனின் மேல் சுடுதண்ணீரை ஊற்றும் ஆத்திரம் வந்தது.

“காயத்ரிக்கு ஃபீஸ் கட்டனும்…” மிகவும் இறங்கிய குரலில் கூறினாள் ப்ரீத்தி. மற்றவர்கள் எதிரில் தான் மிகவும் இறங்குவது போல தோன்றியது அவளுக்கு. தொண்டை அடைத்தது.

“அதுக்கு?” என்று அவன் கேட்க, மெளனமாக இருந்தாள். “ம்ம்ம் சொல்லு…”

“அவ்வளவு பணம் இப்ப கைவசம் இல்ல…” மிகவும் சிறுத்துப் போனது.

“அதனால கொள்ளையடிக்க போறியா?” என்று அவன் கேட்க,

“செயினை ப்ளெட்ஜ் பண்ணனும்… போதுமா?” என்று கேட்டவளுக்கு கோபம் பீறிட்டது. வாயை பிடுங்கி வார்த்தையை வாங்கி விட்டானே என்கிற கோபம்.