Kalangalil Aval vasantham – 6

6

‘மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்

சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்.

உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி’

அலெக்ஸா மெலிதாகப் பாடிக் கொண்டிருந்தது.

அதை கேட்டபடியே படுக்கையை விட்டு எழ முடியாமல் படுத்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. காலை முதலே சற்று சுனக்கத்திலேயே இருந்தது மனது. எழும் போதே கடும் தலைவலி கூடவே மாதாந்திர தொல்லை வேறு. மற்ற நாட்களிலெல்லாம் பறந்து பறந்து வேலை செய்பவளுக்கு இந்த நாட்களானால் கடும் கடுப்பாகி விடும்.

அசையக் கூட முடியாது. சில நாட்கள் மயக்கம் வருமளவு கூட இருக்கும். அதிலும் வீட்டுப் பிரச்சனை வேறு சேர்ந்து கொண்டதில் அவளது உடலும் மனமும் சேர்ந்து சோர்ந்து போனது.

ஆனால் வேலையிலிருந்து ஓய்வெடுக்க முடியாது. அவள் சுனங்குவதை பார்த்து சஷாங்கனாக புரிந்து கொள்வான், உடல்நிலை சரியில்லை என்று!

எப்போதுமே அவளை உடன் வைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தாலும், அந்த நாட்களில் மட்டும் அவளை கொஞ்சம் ஓய்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்வான்.

இவை அத்தனையும் கூட கண்களை பார்த்துப் புரிந்து கொள்வதுதான். எப்போதும் வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டது கிடையாது.

அதுவும் கூட அவன் வெளியூரில் போகும் நாட்களில் இல்லையென்றாகிவிடும்.

மணி ஏழாகியதை பேசியின் அலாரம் அறிவித்தது. இந்நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும். ஆனால் அவளால் முடியவில்லை. யாரேனும் கொஞ்சம் சூடாக காபியோ ஹார்லிக்ஸோ கலந்து தந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது! ஊரிலிருந்தால் சீதாலக்ஷ்மி எழும் போதே ஹார்லிக்ஸ் போட்டு தயாராக வைத்திருப்பார்.

சுத்தம் செய்தவுடன் அவளது முதல் வேலை சூடாக பானத்தை உள்ளே இறக்குவது தான்.

அதற்குப் பின் அன்றைய தின மெனுவில் வெந்தயக் களியோ, உளுந்தங்கஞ்சியோ கட்டாயமிருக்கும்.

சிறு வயதில் அவற்றை சாப்பிட ஏக போராட்டமாக இருக்கும்!

செய்து வைத்துக் கொண்டு ப்ரீத்தியையும் காயத்ரியையும் மிரட்டிக் கொண்டிருப்பார்.

ஆனால் இப்போதெல்லாம் அந்த தேங்காய் பால், சுக்கு, ஏலக்காய் வாசத்தோடு கூடிய அந்த உளுந்தங்கஞ்சிக்கு ஏங்கியது மனது. அதென்னவோ சீதாலக்ஷ்மி சொல்லி சொல்லி, அதைக் குடித்தப் பின், உடலே புத்துணர்வு கொண்டது போலத்தான் இருக்கும்.

இங்கு ஹாஸ்டலில் அவளாக எதையாவது வாங்கிப் பருகினால் தான் உண்டு! என்ன செய்வது? ஹாஸ்டல் எல்லாம் அம்மா வீடாக இருக்க முடியுமா?

செல்பேசி அழைத்தது!

உடலை முறுக்கிக் கொண்டு திரும்பி பேசியைப் பார்த்தாள்.

எடுக்க சொன்னது அறிவு. எடுக்க முடியாமல் திணறியது உடல். ஒரு வழியாகத் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, பேசியை எடுத்தாள்!

வேறு யார்? சஷாங்கன் தான்!

உற்சாகம் வருவதற்கு பதில் சலிப்புத்தான் வந்தது!

இந்த நேரத்தில் லீ மின் ஹோவும் லீ ஜோங் சுக்கும் சேர்ந்தது போல யாரேனும் வந்தாலும் கூட, மண்டையை உடைக்கலாமா என்று தான் கோபம் வரும். இவ்வளவுக்கும் அவர்கள் இருவரின் அடிமை இவள். அதாவது கொரியன் டிராமா ப்ரியை. ஒய்வு நேரம் கிடைப்பதே அரிது.

அப்படி அரிதாக கிடைக்கும் நேரங்களிலும் அவளது பொழுதுபோக்கு கொரியன் டிராமாவும், நாவல்களும் தான். தினசரி வாழ்க்கையின் கனத்தை போக்க வேறென்ன செய்ய முடியும்? அலுத்து சலித்து வந்து படுக்கும் போது, சம்பூர்ண ராமாயணமா படிக்க முடியும்? அவளுக்குத் தேவை சற்று நேர ஒய்வு… அதோடு மூளைக்கும் சற்று புத்துணர்வு!

அப்படியொரு கொரியன் டிராமா ரசிகையின் முன் அவர்கள் வந்தாலே எரிச்சலாக தான் இருக்கும் என்றால்? எப்போதும் அவளை படுத்தியெடுத்துவரும் சஷாங்கன் என்றால் வராதா? இப்போது பார்த்து ஏதாவது ஃபீல்ட் வொர்க் என்று அழைத்துப் போகப் போகிறான், சித்திரை வெயிலில் குளிர் காய வைக்கப் போகிறான் என்ற எண்ணம் வந்தவுடனேயே, அந்த எரிச்சல் இன்னும் பல மடங்காகியது. முதலாளியோ, தோழனோ, தோழியோ எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது!

“சொல்லுங்க பாஸ்…” எரிச்சலை எல்லாம் அடக்கிக் கொண்டு கேட்க, அவளது தொனியிலேயே ஏதோ சரியில்லை என்பது புரிந்தது அவனுக்கு!

“என்ன பண்றீங்க ஆபீசர்?” எப்போதும் போல கிண்டலாக கேட்க,

“நடுவானத்துல பறந்துட்டு இருக்கேன் பாஸ்…” சிரிக்காமல் கூற,

“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் ஏன் போனீங்க ஆபீசர்?”

“உங்க கிட்ட சொல்லிட்டு போனா எதுவுமே உருப்புட மாட்டேங்குது பாஸ்… அதான் நான் தனியா பறக்க வந்தேன்…”

“சொல்லீட்டீங்கள்ல ஆபீசர்… இனிமே எப்படி நீங்க உருப்படறீங்கன்னு நானும் பார்த்துடறேன்…” என்று சிரிக்க,

“அது தெரிஞ்ச கதை தானே பாஸ். என் விதி… உங்க கிட்ட வந்து சிக்கிட்டேனே!”

“திருவாரூர் பார்ட்டில கூப்பிட்டாக… பொன்னமராவதி பார்ட்டில கூப்பிட்டாக… அவ்வளவு ஏன்? காரைக்குடி பார்ட்டில கூட கூப்பிட்டாக… அங்கெல்லாம் போகாம, என் கெரகம்… இந்த கெரக கும்பல்ல வந்து மாட்டிகிட்டேன்…” என்று கோவை சரளாவின் பாணியில் கரகாட்டக்காரன் பட வசனத்தை அவன் சொல்லி சிரிக்க, அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“பாஸ்…” என்று சிரித்தவள், மீதம் உள்ளதை சொல்ல முடியாமல் சிரிக்க,

“ஸ்டாப்… ஸ்டாப்… ஐ நோ… ஐ நோ… ஐ நோ…” ரகுவரன் பாணியில் கூறியவன், “செந்தில் மாதிரி திருட்டு முழியோட நான் நிக்கற மாதிரி உனக்கு தோணி இருக்குமே…” என்று கேட்க,

“எக்சாக்ட்லி பாஸ்…” என்று சிரித்தாள்.

“கூடவே கோவை சரளா ட்ரெஸ்ல நீங்க நிக்கறது உங்களுக்குத் தெரியலையா ஆபீசர்…”

“அந்த அளவுக்கு நான் இன்னும் வைல்ட்டா இமேஜின் பண்ணல பாஸ்.” சிரிக்காமல் அவள் கூற,

“எல்லாம் என் நேரம் தான்…” என்றவன், “சரி… படுக்கைய விட்டு எழுந்திருங்க ஆபீசர்…” நக்கலாக கூறிவிட்டு, “உனக்கு பதினஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். குவிக்கா கிளம்பி வா. ஐ ம் வெய்ட்டிங்…” என்று அவளை விரட்ட,

‘அடப்பாவி… இத்தனை வாயடித்துவிட்டு இனிமேல் உடல்நிலையை காரணம் கூட காட்ட முடியாதே முருகேசா…’ என்று அலுத்துக் கொண்டாலும், அவளையும் அறியாமல் உற்சாகம் பிறந்திருந்தது.

“பாஸ்… இப்பத்தான் ஏழரை…”

“இருக்கட்டும்… இப்பவே கிளம்பினாத்தான் சென்னை ட்ராஃபிக்ல நீந்தி ஏர்போர்ட் போக முடியும் ஆபீசர்…” அலட்டிக்கொள்ளாமல் கூற,

“எங்க பாஸ் போறீங்க?” பொதுவாக அவன் வெளியூர் வெளிநாடு போகும் போதெல்லாம், அவள் வண்டியோட்டிப் போவதுதான் வழக்கம். அதை நினைத்துக் கொண்டு அவள் கேட்க,

“போறீங்க இல்ல. போறோம்…” என்று கூற, ‘ஓ மை கடவுளே’ என்று கற்பனையில் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.

“பாஸ்…”

“கம்மான் கெட் ரெடி…” என்று பேசியிலேயே விரட்ட, கண்களில் நின்ற கண்ணீர், விழவா எழவா என்று கேட்டது!

“ஓகே பாஸ்…” என்றவள், அதே சுணக்கத்தோடு எழுந்து ஏனோதானோவென்று கிளம்பி, முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டே அவனது காரிலும் ஏறி விட்டாள். காலை உணவை கூட அவள் உண்ணவில்லை!

சோர்வான முகத்தோடு, உற்சாகமே இல்லாமல் கிளம்பி வந்தவளை பார்த்தவனுக்கு, ஏதோ சோர்வில் இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. முந்தைய தினம் அவனது பேசிக்கு வந்த படங்கள் நினைவிலேயே ஓடிக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றி பேச முனையவில்லை.

சொல்வதாக இருந்தால், எப்போதோ சொல்லியிருப்பாளே!

“என்னாச்சு?” காரோட்டிக் கொண்டே அவன் கேட்க,

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “என்ன பாஸ்?” என்று கேட்க,

“ஒரு மாதிரியா இருக்க ப்ரீத்…”

“இன்னைக்கு பவுடர் போடல பாஸ்…” என்றவளின் குரலில் சோர்வு.

“அப்படீன்னா ரெண்டு கிலோ குறைஞ்சு இருப்பீங்களே ஆபீசர்?” சிரிக்காமல் அவன் கேட்க,

“அப்சலியுட்லி பாஸ்…” அலட்டிக் கொள்ளாமல் பதில் கூறினாள் ப்ரீத்தி.

“பாண்ட்ஸ் பவுடரை வாழ வைக்கும் வள்ளலேன்னு போஸ்டர் ஒட்டிரலாமா ஆபீசர்…”

“ஒரு கரெக்ஷன் பாஸ்… இப்ப நான் யார்ட்லி லண்டன தான் வாழ வெச்சுட்டு இருக்கேன்…”

“இந்திய துரோகி…” என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான்.

“அப்படீன்னா ஜாகுவார் மேட் இன் மடிப்பாக்கமா?” அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் காரை சொல்லி அவள் கிண்டலாக கேட்க,

“இல்லையே… மேட் இன் போட் கிளப்…”

“ரூவாய்க்கு நாலா பாஸ்?”

“ஏன் பிசுனாரியா இருக்க? ஒரு ஏழெட்டு வெச்சுக்க…”

“எது? அந்த தாவர சிறுத்தைபுலியா? தவ்வறது கூட கிடைக்காதே பாஸ்…”

“தவ்வித்தான் பாருங்க ஆபீசர்!” மனம் விட்டு சிரித்தான்.

“எனக்கு தேவையா பாஸ்? நான் பாட்டுக்கு முடியாம படுத்துட்டு இருந்தா, வம்படியா இழுத்துட்டு வந்துட்டு, இப்ப தவ்வ சொல்றீங்க?”

“எனக்கும் தான் முடியல. சைட்டை உன்னையே பாக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன்…”

“அதான் எப்பவும் பண்ணுவீங்களே பாஸ்…”

“பண்ணிருப்பேன். ஆனா அதுக்குள்ளே நம்ம ஸ்வேதா இருக்கால்ல…” என்றவன் இழுக்க,

“உங்க ஸ்வேதா…” அவனை வெகு சிரத்தையாக திருத்தினாள் ப்ரீத்தி.

“சரி… எங்க ஸ்வேதா தான்…” என்று சிரித்தபடி நிறுத்தியவன், “ஒரு பெரிய சண்டைக்கு ப்ளான் பண்ணிட்டு இருந்தா… எஸ்கேப் ஆகிடுங்க தலைவரேன்னு ஓடி வந்துட்டேன்…” என்று சிரிக்க, அவனையே ஆழ்ந்து பார்த்தாள் ப்ரீத்தி.

“என்ன?” என்று புருவத்தை உயர்த்தியபடி இவன் கேட்க,

“ஸ்வேதாவ ரொம்ப லவ் பண்றீங்களா பாஸ்?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க, புன்னகையோடு சாலையை பார்த்தான் சஷாங்கன்.

“ஏன்டா? திடீர்ன்னு இந்த சந்தேகம்?” அவனது குரல் அவ்வளவு மென்மையாகி இருந்தது.

“சும்மாதான்… சொல்லுங்க…”

“எஸ்… பிடிச்சிருக்கு…”

“பிடிக்கும் வேற… லவ் வேற…”

“ம்ம்ம்… அப்படியா? எப்ப இருந்து இதுக்கெல்லாம் டிக்ஷனரி போட ஆரம்பிச்சீங்க ஆபீசர்?” கேலியாக கேட்டான்.

“எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிடறது தான் பாஸ்…” என்று அவனுக்கே திருப்பிக் கொடுத்தவள், “பதிலை சொல்லுங்க…” விடாப்பிடியாகக் கேட்டாள்.

“ம்ம்ம் பிடிச்சிருக்கு. இதுக்கு பேர் தான் லவ்னா, அப்போ இது லவ் தானே ஜெஸி?” கர்மசிரத்தையாக கேட்க, எந்த பதிலும் கூறாமல் அவனையே பார்த்தாள்.

விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்து, புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க, ஒன்றுமில்லையென தலையை இடம் வலமாக ஆட்டினாள். என்ன சொல்வதென்று புரியவில்லை.

இந்த ஒரு விஷயத்துக்காக இவனது மரியாதையை ஒவ்வொருவரும் ஏலம் விடுவதை ஏற்கவும் முடியவில்லை.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமே…?” என்று இழுக்க,

“லாமே…” என்று சிரித்தவன், “தாலி கட்டினாத்தான் கல்யாணமா ஆபீசர்?” என்று கேட்க,

“சமுதாயத்துக்கு அதுதான கல்யாணம் பாஸ்?” என்று பதிலுக்கு இவள் கேட்டாள்.

“களவும் காதல் தான் ஆபீசர்!”

“ரொம்ப முக்கியம்… அப்படியே இலக்கியம் மாறா தலைவன் தலைவின்னு நினைப்பா?” சற்று கடுப்பாக இவள் கூற,

“அப்கோர்ஸ்…” மீண்டும் சிரித்தவன், “உனக்குப் பொறாமை… எங்க ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தத்தை பார்த்து…” என்று அவளையும் வார, அந்த கிண்டலில் பொங்கி விட்டாள் ப்ரீத்தி.

“என்னாது? பொறாமையா? எல்லாம் நேரம் தான். அப்படியே இவங்க ரெண்டு பேரும் லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, ரோமியோ ஜூலியட்… இவங்கள பாத்து பொறாமைப் பட…”

“சரி சரி… விடு… உனக்கொருத்தனை பாத்து செட் பண்ணி விடல… என் பேர்…” என்று ஆரம்பிக்க, ப்ரீத்தி பட்டென கையெடுத்து கும்பிட்டாள்.

“வேண்டாம். நிறுத்துங்க. அந்த வேலைய நானே பார்த்துக்கறேன்…”

“இனிமேதான் பார்க்கனுமா? இல்ல பார்த்துட்டீங்களா ஆபீசர்?” முழு ஃபார்மில் இருந்தான், அவளை கலாய்ப்பது என்று முடிவு செய்து கொண்டு!

“காலைல ஏழரை மணிக்கே என்னை கிளப்பிட்டு போய், நைட் ஒம்பது மணிக்கு ஹாஸ்டல்ல தள்ளிவிட்டு போறீங்க. அதுக்கப்புறம் எவனை பார்த்து, நான் கரெக்ட் பண்ணி…” என்று நிறுத்தியவள், “சான்ஸே இல்ல…” என்று முடிக்க, வாய் விட்டு சிரித்தவன்,

“ப்ச்… அப்படி ஒன்னு இருக்கோ?” என்று உரக்க யோசித்து விட்டு, “இனிமே நம்ம டெய்லி அஜெண்டால உனக்கொருத்தனை கரெக்ட் பண்றதையும் சேர்க்கலாம். ஓகேவா?” கொஞ்சம் கூட சிரிக்காமல் சீரியசாகவே சொல்ல,

“நிஜமாத்தான் சொல்றீங்களா பாஸ்?” என்று சிரிக்காமல் அவளும் கேட்க,

“அப்கோர்ஸ்… எஸ்…” என்றான், அவனது சீரியஸ் முகத்தை மாற்றாமல்!

“கிரேட் பாஸ். செம… செம… சோ…” என்று நிறுத்தியவள், “இனிமே நீங்க எனக்கு அஃபிசியலாக மாமா வேலை பார்க்கப் போவதால், இன்றுமுதல் நீங்கள் மாமா என்றே அறியப்படுகிறீர்கள்…” என்று இம்சை அரசியாக கூற, அதுவரை அவளைக் கலாய்ப்பதில் பிசியாக இருந்தவனுக்கு நெஞ்சில் வலி வந்துவிடும் போல இருந்தது.

“இன்னாது… மாமாவா?” என்றவன், “விட்டா எனக்கொரு வெத்தலைப் பொட்டி குடுத்து உக்கார வெச்சுருவ போல இருக்கே…” என்று பல்லைக் கடிக்க,

“நீங்க தான பாஸ் ஆசைப்பட்டீங்க. பார்க்கறதுதான் பார்க்கறீங்க, ஒரு லீ ஜோங் சுக் அளவுக்காச்சும் பாருங்க. அதுக்கு கீழ இருந்தால்லாம் நான் அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்.” சீரியசான மோடில் சொல்வது இப்போது இவளது முறையானது.

“எவன் அவன்?”

“என்ன பாஸ் நீங்க? லீ ஜோங் சுக் தெரியலன்னு சொல்றீங்க? நீங்க வேஸ்ட்…” என்று கிண்டலாக கூறியவள், “என்னோட கனவுகண்ணன் நம்பர் ஒன் அவன்தான்…” என்று சிரிக்க,

“அந்த நம்பர் டூ, நம்பர் த்ரீ எல்லாம் இருக்கா?” என்று கேட்க,

“அப்கோர்ஸ்… லீ மின் ஹோ தான் நம்பர் டூ… லீ ஜூன் கி தான் நம்பர் த்ரீ… ஆனா லிஸ்ட் இதோட முடியல பாஸ். அது ரொம்ப பெருசு…” கண்கள் முழுக்க காதலோடு அனுபவித்து கூறியவளை, வேற்று கிரக பிராணியை பார்ப்பது போல பார்த்து வைத்தான்.

“எல்லாம் உன்னோட கொரியன் டிராமா ஹீரோஸா…” என்று பாகற்காயை தின்ற குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டவன், “அப்ப கூட நம்மளை கனவு கண்ணன்ன்னு சொல்ல மாட்டீங்க… உவ்வேக்…” என்று வேன்றுமென்றே வாந்தி வருவதை போல நடித்து, “அதுங்களை எல்லாம் பாத்தா ஹீரோயின்ஸ் மாதிரி இருக்குங்க… அதுங்கள போய்?” என்று தலையிலடித்துக் கொள்ள,

“ஹலோ… அவங்க என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சா போதும். உங்க கண்ணுக்கு தெரிய தேவையில்ல. உங்களுக்கு உங்க ஸ்வேதா அழகுன்னா, எனக்கு லீ மின் ஹோ தான் அழகு…” பொங்கியெழுந்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

“அடப்பாவி… ஸ்வேதாவுக்கும் லீ மின் ஹோவுக்கும் என்னய்யா சம்பந்தம்? அவ என்னோட…” என்றவன், சற்று யோசித்து, “பார்ட்னர்…” என்று கூற,

“உங்களுக்கு உங்க பார்ட்னர்ஷிப் பெருசுன்னா, எனக்கு என்னோட கனவு கண்ணன்கள் முக்கியம் பாஸ்…” சொன்னவளின் கடைவாயில் குறும்புச் சிரிப்பு!

கார் விமானநிலையத்தினுள் நுழைந்தது. அது உள்நாட்டு விமான முனையம். ஆக, எங்கேயோ பக்கம் தான் என்று முடிவு செய்து கொண்டாள். அவனோ கார் பார்க்கிங்கை நோக்கி செலுத்திக் கொண்டே,

“வயித்துக்கு ஒன்னும் குடுக்காதப்பவே இத்தனை பேசினா, உள்ள போச்சுன்னா என்ன பேச்சு பேசுவ… இதுல வேற உடம்பு சரியில்லன்னு ஒரு சாக்கு வேற…” என்று அவளது தலையிலேயே கொட்ட,

அவனை முறைத்துப் பார்த்தபடியே கீழே இறங்கினாள். அவன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வரும் வரை அங்கேயே பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பாள். அதுவரை உணராத உடல் சோர்வும், பசியும் சேர்ந்து கொள்ள, அப்படியே அமர்ந்து விட்டாள்.

நிஜமாகவே பறப்பது போலத்தான் இருந்தது!

செல்பேசி அழைத்தது!

தாயின் எண் ஒளிர, எடுத்தாள்!

“சொல்லும்மா…”

“ப்ரீத்தி…” என்று இழுத்தார் சீதாலக்ஷ்மி.

“சொல்லும்மா… என்ன விஷயம்?” கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பொதுவாக அவர் காலையில் அழைக்க மாட்டார், காலையில் அவளுக்கிருக்கும் வேலைப்பளுவைப் பற்றி அவருக்கு தெரியும். அதுவும் இத்தனை காலையிலேயே அழைக்கவே மாட்டாரே!

“உங்க அப்பாவ நினைச்சா பயமா இருக்கு கண்ணு…” என்று குரல் நடுங்க கூற,

“என்னாச்சு?” கூர்மையாகக் கேட்டாள். இனியும் என்ன செய்து வைக்கப் போகிறாரோ என்ற பயம்!

“நைட்டெல்லாம் ஒரே பினாத்தல் தான். மானம் போச்சு மரியாதை போச்சுன்னு…”

“ஏனாம்?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“பஞ்சாயத்து பேச போன இடத்துல அந்த நடேசன் உங்கப்பா சட்டையை புடிச்சிட்டான் போல இருக்குடா. தூக்குல தொங்கப் போறேன், அது பண்ண போறேன், இது பண்ணப் போறேன்னு ஏக ரகளை பண்ணிட்டு இருக்காங்க…”

சீதாலக்ஷ்மியின் குரலில் ஏக பயம். கணவன் எதையாவது செய்து வைத்துக் கொள்வானோ என்று!

“இதெல்லாம் வெத்து சீனு. நீ கிடந்து பயப்படாத…” என்றாள் படு கோபமாக!

அதென்ன பயமுறுத்துவது? வாங்கி செலவு செய்யும் வரை ஒன்றும் தெரியவில்லையாமா? இப்போது மட்டும் மானம் கப்பலேறுகிறதா?

“அது வெத்து சீனோ, இந்தாள் வெத்து மனுஷனோ… பேருக்கு உங்கப்பான்னு இருக்கான். எதையாவது பண்ணி வெச்சுகிட்டா உங்க ரெண்டு பேரையும் நான் எப்படி கரையேத்துவேன்?” அவருக்கும் கோபம்! அதை யாரிடம் காட்டுவதென்று தான் தெரியவில்லை. மகளிடம் கோபப்பட்டு என்னாக போகிறது? அவள் தான் இப்போது வரை குடும்பத்தை காப்பாற்றுகிறாள் என்பது புரியாமலில்லை. ஆனாலும் அவருக்கு கோபத்தை எங்கு காட்டுவது என்ற குழப்பத்தில் இவளிடம் எரிந்து விழுந்தார்.

“நான் பார்த்துக்கறேன்…” என்று முடிக்க பார்க்க, அவரோ,

“நீ இழுத்துப் போட்டுக்காத ப்ரீத்தி…” என்றும் கூறினார். இவர் என்னதான் கூற வருகிறார் என்று அவளுக்கே பிடிபடவில்லை.

“இப்ப என்னதான் சொல்ல வர்றமா? இழுத்துப் போட்டுக்காதன்னா, உன் புருஷன் அடைக்கறாராமா?” குத்தலாக இவள் கேட்க,

“அந்த மனுஷனுக்கு அவ்வளவு திறமை இருந்தா நான் ஏன் இப்படி இருக்கப் போறேன்?” என்றவருக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

“அவருக்கும் திறமை இல்லைங்கற… என்னையும் இழுத்துப் போட்டுக்காதன்னு சொல்ற. இப்ப என்ன தான் சொல்ல வர்ற?” கடினமான குரலில் கேட்டவளுக்கு என்ன சொல்வது?

அவள் திருமணம் வரைதான் அவளுடைய சம்பாத்தியத்தை தாங்கள் உரிமை கொண்டாட முடியும் என்ற உண்மை வேறு அவரது முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. அவள் போய்விட்டால், இந்த மனிதனை வைத்து எப்படி குடும்பம் நடத்துவது என்ற கேள்வி வேறு இரவு முதலாக!

“ஒன்னும் சொல்லல. நாங்க இருந்தா தானே இந்த ஈனப் பிழைப்பு! அதுக்கு பேசாம போய் சேர்ந்துடலாம்.” என்றவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அப்போதும் கூட நாங்கள் என்று தான் வாய் வருகிறது என்பது அவளுக்கு எங்கோ அடி வாங்கியதை போல இருந்தது. அந்த நாங்களில் ‘நான்’ இல்லையா? கலங்கப் பார்த்தக் கண்களை இமை கொட்டி விழித்து, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு என்று எப்படி எப்படியோ போராடி அணை போட்டாள்.

இது பொது இடம்! உணர்வுகளை விற்க இது இடமல்ல!

“நான் பாத்துக்கறேன்… கவலைப்படாத…” என்று உறுதி கொடுத்தவள், செல்பேசியை அவர் வைத்தப்பின்னும் அதை காதிலேயே வைத்திருந்தாள்.

வைக்கத் தோன்றவில்லை.

அவள் தனி என்ற உணர்வு வந்தபோது நெஞ்சுக்குள் ஏதோவொன்று அடைப்பதைப் போலிருந்தது.

சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள், எப்போது வேண்டுமானாலும் சஷாங்கன் வந்துவிடுவான் என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால் அங்கேயே சிலையாகி விட்டிருப்பாள்.

குடும்பம் குடும்பம் என்று அதற்காகவே இத்தனை ஆண்டுகளாக உழைத்தும் அந்த ‘நாங்களில்’ அவள் இல்லையென்ற கொடூர உண்மையை அவளால் ஏற்க முடியவில்லை.

முகத்தை அழுத்தமாக துடைத்தவளை கலைத்தது சஷாங்கனின் குரல்.

“ப்ரீத்…” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

லேசாக கலங்கியிருந்த அந்த கண்கள் அவனை ஏதோ செய்தன. அந்த கண்களில் கண்ணீரை பார்க்கவே கூடாதென்ற அவனது பிடிவாதம் இன்னும் இறுகியது.

“எழுந்திரிடா! ஏன் இங்க கீழ உட்கார்ந்துட்ட? உள்ள வெய்ட்டிங் ஹால்ல உட்காரலாம்ல…” என்று கேட்க, அவளது உணர்வுகளை சடுதியில் மறைத்துக் கொண்டு,

“என்னைக் காணோம்ன்னு நீங்க தேடக் கூடாதில்ல பாஸ்…” என்று சிரிக்க, அந்த சிரிப்பு அவள் கண்களை அடையவில்லை.

“உன்னை நான் எப்பவும் அப்படி மிஸ் பண்ணிற மாட்டேன். டோன்ட் ஒர்ரி…” என்றவன், அவளது கையைப் பிடித்து எழுப்பி விட, பிடித்த கையை அவள் விடவில்லை.

அந்த வெம்மை அவளுக்குத் தேவையாக இருந்தது.

அவளது உடல் சோர்வை காட்டிலும், இப்போது மனம் மிக மோசமாக சோர்வடைந்து இருந்தது.

அவளது கையை பிடித்தபடியே விடாமல் நடந்தவன், செக் இன் கவுண்ட்டரை அடைந்து செக் இன் செய்தான். அவளது உடல் உபாதையும் மன உபாதையும் அவனுக்கு புரிந்திருந்தது. அதனாலேயே அவளை தன்னுடைய கை வளைவிலேயே வைத்துக் கொண்டான்.

போவது திருச்சிக்குத்தான்!

சிறு புன்னகையோடு அவனைத் திரும்பிப் பார்க்க, “அங்க ஒரு ப்ராஜக்ட் பண்ணலாம்ன்னு ப்ளான். ரொம்ப நாளா உள்ள ஓடிட்டு இருந்தது. ஒரு நாலஞ்சு சைட் சொல்லி இருக்காங்க. போய் பார்க்கலாம். ஓகேன்னா செய்யலாம்…” என்று விளக்கியவனை அதே புன்னகையோடு தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

என்னதான் இருந்தாலும் திருச்சிக்கு போவதென்றால் அவளுக்குக் குஷி தான் என்பதை அவன் அறியாதவனா என்ன?

ப்ரீத்தி பதில் எதுவும் பேசவில்லை.

அவனும் அவளது பதிலை எதிர்பார்க்கவில்லை. அவள் பேசிக்கொண்டிருந்தபோதே வந்துவிட்டான். அவள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்ததை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஆனால் என்னவென்று தான் புரியவில்லை. அவனும் எப்படியெல்லாமோ, அவளிடம் வாங்கிவிடலாம் என்றுதான் பார்த்தான். பேசும் நேரத்தில் எப்படியாவது அவள் சொல்லிவிடுவாள் என்று ரொம்பவும் எதிர்பார்த்தான்.

ஆனால் பிடிவாதமாக அவள் என்ன பிரச்சனை என்றும் சொல்லவில்லை. எதற்காக கோவிலில் தந்தையையும் தமக்கையையும் சந்தித்தாள் என்பதையும் சொல்லவில்லை.

இதற்கு நடுவில் ஏதேனும் கோடு இருக்கிறதா என்பதும் அவனுக்கு தெரியவில்லை.

ஆனால் ப்ரீத்தி தன்னை விட்டுக் கொடுத்துவிட மாட்டாள் என்பது மட்டும் திண்ணம்!

அதை நினைத்தபோது அவனையும் அறியாமல், அவன் பிடித்திருந்த ப்ரீத்தியின் கரத்தை இறுக்கமாகப் பிடித்தான், அவளை எந்த நேரத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுத்துவிட கூடாது என்று சொல்வதை போல!

அவனுக்கு ஏனோ ப்ரீத்தியை யாரோ குறி வைத்து விட்டார்கள் என்றுதான் தோன்றியது. அதுவும் இல்லாமல், மெனக்கெட்டு ஸ்வேதா இப்போது அழைத்து உனது தோழியின் வண்டவாளத்தைப் பார் என்று ஏன் விளம்ப வேண்டும்?

வண்டவாளம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை என்பதை அவளுக்கு எப்படி புரிய வைப்பது?

ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு, செக் இன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அவர்களது கேட் டுக்கு வந்தபோது அவனுக்குமே பசி!

நேராக கேட் காம்ப்ளெக்சில் இருந்த இட்லி கடையை தஞ்சமடைந்தான்!

சூடாக இட்லியும் அதை விட சூடாக பில்டர் காபியும் உள்ளே போனபின் தான் ப்ரீத்திக்கு சற்று தெம்பு வந்தது.

“இன்னொரு காபி வாங்கறேன்…” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல், வாங்கி வர, காபி தேவாம்ருதமாக இருந்தது.

அவள் குடிக்கும் போதே அவளது முதுகைத் தடவிக் கொடுத்தவன்,

“ரொம்ப முடியலைன்னா டேப்லட் எதாவது போட்டுக்கறியாடா?” என்று கேட்க, நிமிர்ந்து சிறு புன்னகையோடு அவனை பார்த்தவள்,

“இல்ல ஷான். சமாளிச்சுக்குவேன்.” என்றாள்.

முதுகை இதமாக தடவிக் கொடுப்பதை அவன் நிறுத்தவில்லை. இந்த நேரங்களில் ப்ரீத்தியால் சமாளிக்க முடியாதென்பது அவனுக்குத் தெரியும்.

“சாப்பிட வேற எதாவது வேணுமா?”

“இல்ல. போதும். இதுவே அதிகம்…”

“எனக்கிருக்க கோபத்துக்கு உன்கிட்ட பேசவே கூடாதுன்னு நினைச்சேன் ப்ரீத்தி. ஆனா நேர்ல பார்த்தா கோபத்தை இழுத்து பிடிச்சு வைக்க முடியல…” அவனது கோபம் வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.

பதில் எதுவும் கூறவில்லை அவள். அவளிருக்கும் மனநிலையில் நிமிர்ந்து அவனைப் பார்த்தால் பொதுவெளி என்றும் பார்க்காமல் அழுது வைத்துவிடுவோம் என்று தோன்றியது.

“எதையுமே சொல்லிடாத ப்ரீத். சொன்னா உன்னோட ப்ரைவசி என்னாகறது?” என்று முகத்தை இன்னமும் கடினமாக வைத்துக் கொண்டு கூற, அவள் பதில் கூறாமல் காபியை விழுங்கிக் கொண்டிருந்தாள், கூடவே கண்களை மீறத் துடித்தக் கண்ணீரையும்!

“சொன்னாதானே தெரியும்? என்ன என்னன்னு நானும் கரடியா கேட்டுட்டேன். ஏன் இப்படி பண்ற?” அவனது கோபத்தை எங்கு கொட்டுவது?

அப்போதும் அவள் பதிலேதும் பேசாமல் காபியை குடிக்க, பொறுமை கைமீறிப் போய் அவன் எழ, சட்டென அவனது கையைப் பிடித்து அமர வைத்தாள், ஆனால் பேசவில்லை.

அவளது சிக்கலான மனநிலையை அவனால் உணர முடிந்தாலும், அவனால் எதையும் செய்யமுடியவில்லையே என்ற கோபம் தான் அவனுக்கும்! அதை அவளும் அறிவாள்!

மீண்டும் அவள் முதுகை மென்மையாக அவன் தடவிக் கொடுக்க, அந்த வருடல் அவளுக்கு அவ்வளவு இதமாக இருந்தது!

வேறெந்த விஷயத்தைப் பேசினாலும் பேசுபவள், என்ன பிரச்சனை என்று கேட்டால் மட்டும் மௌனமாகிக் கொண்டிருந்தது அவனுக்கு இன்னமும் கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.

விமானப் பயணம் முடியும் வரை கூட அப்படியேத்தான் இருந்தாள்.

திருச்சியில் செக் அவுட் செய்துவிட்டு வெளியே வந்தவுடன் அவனது செல்பேசி அழைத்தது!

பாக்கெட்டில் வைத்திருந்த செல்பேசியை எடுத்து, பார்க்க, அழைத்தது, அவனது தமக்கை!

“ம்ம்ம்…” என்றவனை எதைக் கொண்டு அடிப்பதுன்று தெரியவில்லை வைஷ்ணவிக்கு!

“எங்க இருக்க ஷான்?”

“நீ விஷயத்த சொல்லு…” என்றான் அவளிடம் சிக்க விரும்பாமல்!

“ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் ஷான்…” என்று குத்த, அந்த தொனி அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

“சொல்ல வந்ததை சொல்லு…”

“இன்டர்னல் ஆடிட்டை தடுத்து நிறுத்திட்டா எங்களால எதுவும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுகிட்டயா?” என்றவள், “எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்குடா தம்பி…” என்றாள் விளையாட்டாக!

“இப்ப சொல்றியா இல்ல போனை வைக்கட்டா?” என்று இவன் கேட்க,

“ஒரு பிளாட் ரேட் நாலு கோடி. அதுல ரெண்டு பிளாட்டை அந்த மாயாஜாலக்காரிக்கு எழுதி வெச்சிருக்க… இதெல்லாம் உனக்கே தப்பா தெரியல?”

“நான் என்ன பண்ணா உனக்கென்ன வைஷு? உன்னோடதை எடுத்தா கொடுத்தேன்?” என்று கேட்டவனின் கேள்விக்கு அவளால் பதில் கொடுக்கமுடியவில்லை.

“எதை எடுத்துக் கொடுத்தா என்ன? கொடுத்தல்ல?”

“மைன்ட் யுவர் பிசினஸ் வைஷு…” என்றவனை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை அவள்!

“எட்டு கோடி ருபாய் உனக்கு சாதரணமா தெரியுதா ஷான்?” என்று விடாமல் அவள் கேட்க, அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“உனக்கு யார் சொன்னது?” அதே எரிச்சலோடு இவன் கேட்க,

“யாரா இருந்தா என்ன? உண்மைய தானே சொல்லி இருக்காங்க…” என்றவள், “அசிங்கமா இருக்குடா… இங்க எப்படியெல்லாம் பேசறாங்க தெரியுமா? தொங்கிடலாம் போல இருக்கு. உனக்கு எதை பத்தியுமே கவலை இல்லையா?” என்று சரமாரியாக கேட்க, எதுவும் பேசாமல் காலை கட் செய்தான்.

பேசினால் தானே பிரச்சனை!

ஆனால் அப்படி விட்டுவிட மாட்டேன் என்று மீண்டும் வைஷ்ணவி அழைக்க, பேசியை ஆப் செய்து பாக்கெட்டில் போட்டபடி நடந்தான்.

அவனது வாக்குவாதம் காதில் விழுந்தாலும் அதை பற்றி என்னவென்று கேட்கவில்லை அவள்!

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவன், எதுவும் பேசாமல் டாக்சியை பிடித்தான். ப்ரீத்தியை ஏற சொல்லி, “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சங்கம் வந்துடு ப்ரீத்…” என்று கூற,

“நீங்களும் வாங்க பாஸ். ஒன்னாவே போலாம். சங்கத்துல இருந்து நான் போய்க்கறேன்…” என்று ப்ரீத்தி கூற, சற்று யோசித்தவன், அதே யோசனையோடு டேக்ஸியில் அமர்ந்தான்.

அவனது இறுகிய முகத்தைப் பார்த்தவள், “ஏதாவது புது பிரச்சனையா பாஸ்?” என்று கேட்க,

“ம்ம்ம்… நீ சொல்ற மாதிரி நத்திங்…” தட்டையாக இவன் முடிக்க,

“எல்லாம் நேரக்கொடுமை முருகேசா…”

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் புன்னகை!

அவனை சங்கத்தில் விட்டுவிட்டு, அதே டேக்ஸியில் இவளது வீட்டை நோக்கிப் போனாள் ப்ரீத்தி.

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

வைஷ்ணவியின் அக்கௌன்ட்டிலிருந்து ப்ரீத்தியின் தகப்பனாரின் அக்கௌன்ட்டுக்கு பத்து லட்ச ரூபாய் போனதை ஆதாரத்துடன் கூறிய அந்த புகைப்படம் அவனது செல்பேசியை அடையும் வரை!