Kalangalil aval vasantham – 7(1)

Kalangalil aval vasantham – 7(1)

7

“சார்… மொத்தம் இருபதாயிரம் ஸ்கொயர் பீட். தாராளமா அப்பார்ட்மென்ட்ஸ் கட்டலாம். இவ்வளவு மெயின் ஏரியான்னா எவ்வளவு விலை வெச்சாலும் வித்திடும்…” ப்ரோக்கர் சஷாங்கனுக்கு இடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்.

“இந்த இடம் போதாது முருகன். நாம கட்ட போறது இன்டர்நேஷனல் லெவல்ல, எல்லா வசதியோட, ஸ்விம்மிங் பூல், ஜிம், மார்க்கெட்ன்னு அத்தனையும் உள்ள இருக்கும். குறைஞ்சபட்சம் அம்பதாயிரம் ஸ்கொயர் பீட் வேணும்… நல்லா வசதியான்னா மூணு ஏக்கர்…” என்று அவனது தேவையைக் கூற,

“அவ்வளவு இடம் தில்லை நகர்ல கிடைக்காதுங்க. வெளிய வேண்ணா பாக்கலாமா?” என்று அந்த முருகன் கேட்க,

“இல்ல. இந்த மாதிரி பாஷ் ஏரியா தான் வேணும்…” அவன் உறுதியாக கூறினான்.

“தில்லை நகர்ல அவ்வளவு இடம் கிடைக்காது பாஸ். கஷ்டம்…” அவன் புறம் குனிந்துபடி கூறினாள் அருகிலிருந்த ப்ரீத்தி.

“ட்ரை பண்ணட்டும்…” என்றான் அவளைப் போலவே கிசுகிசுப்பாக!

“இங்க ட்ராஃபிக் ஜாஸ்தி. அதுவுமில்லாம, இடத்துக்கே நாம நிறைய இன்வஸ்ட் பண்ற மாதிரி இருக்கும். அதோட உங்க எக்ஸ்பெக்டேஷனுக்கு இங்க கிடைக்கறது நிஜமாவே கஷ்டம்…”

“என்னோட எக்ஸ்பெக்டேஷன் என்னன்னு உனக்குத் தெரியுமா?” என்றான் கிண்டலாக!

“ஓரளவு கெஸ் பண்ண கூட தெரியலைன்னா ஆறு வருஷமா உங்க கிட்ட குப்பைக் கொட்டினதுக்கு என்ன பாஸ் அர்த்தம்?” என்று சிரித்தபடி கிசுகிசுத்தவள், அந்த முருகனை நோக்கி,

“கேகே நகர், அண்ணா நகர் ஏரியான்னா மூணு ஏக்கர் வரைக்கும் பண்ணலாம் தானே?” என்று கேட்க,

“ட்ரை பண்ணலாம் மேடம்…” என்றவர், சஷாங்கனை பார்க்க, அவனும்,

“தில்லை நகர் பர்ஸ்ட் சாய்ஸ், கேகே நகர் அன்ட் அண்ணா நகர் நெக்ஸ்ட்…” என்று அவரிடம் கூறியவன், இவள் புறம் திரும்பி, “ஓகேவா?” என்று கேட்க, அவள் ஆமென்று தலையசைத்தாள்.

அப்பார்ட்மென்ட் கட்டுவதற்கான இடங்களை தில்லை நகரில் பார்வைட்டுக் கொண்டிருந்தான் சஷாங்கன். உடன் ப்ரீத்தியும்!

திருச்சி வந்தவுடன் சஷாங்கனை சங்கம் ஹோட்டலில் விட்டுவிட்டு, நேராக சென்றது அவளது வைகுண்டமான ஸ்ரீரங்கத்துக்குத்தான். ஏனென்றால் அந்த வீடு அவளுக்கு மிக மிகப் பிரியமானது!

காலை எழுந்தவுடன் மொட்டை மாடியில் ரங்கநாதர் கோவிலின் கோபுரத்தை கண்கள் குளிர தரிசிக்கலாம், கோவிலிலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது அவளது வீடு. இந்தப்பக்கம் பார்த்தால் சற்று தூரத்தில் மலைக்கோட்டை!

சிறு வயதில் அதையெல்லாம் ஆழ்ந்து அனுபவித்து இருக்கிறாள். அவளுக்கு மிகவும் பிடித்தது அந்த மொட்டை மாடி வாசம் தான்!

அதோடு ஷானுடன் திருச்சி வந்தது இப்போதுதான் முதல் முறை! மனம் இறெக்கைக் கட்டிப் பறந்தது. பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் போயிருந்தாலும் திருச்சி அவள் சற்றும் எதிர்பாராதது!

அவனுக்கு தன்னுடைய ஊரை சுற்றிக் காட்டும் ஆவல் வேறு! எவ்வளவு சொல்ல முடியும்? ஏர்போர்ட்டிலிருந்து சங்கம் போகும் வரை அவனது காதைத் தீய்த்து விட்டாள். அவன் போதும் என்று கையெடுத்து கும்பிடும் வரை அவளது திருச்சி புராணம் ஓயவில்லை!

திருச்சி என்றவுடனே, அவளது வருத்தங்கள் மறைந்து போய்விட்டது. அந்த மனநிலை ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்க்கச் சொன்னது!

அளவானது என்றாலும், அவர்களது, அந்த கால, கட்டு வீடு! தூண்களும், மேற்கூரையும் அந்த கால பர்மா தேக்குகளாம். அதிலும் முகப்பிலிருக்கும் தலைவாசலுக்கும் கூட அத்தனை வேலைப்பாடோடு கூடிய நிலைவாசலும், கதவுமிருந்தது.

தந்தை வழி பாட்டனாரின் பாட்டனார் அந்தக் கால நிலச்சுவான்தாரராம். ஸ்ரீரங்கத்தை சுற்றிலும் அவருக்கு ஏகபோகமாக நெல் விளையும் பூமியிருந்ததாம். தலைமுறை மாற மாற, ஒவ்வொன்றாக விட்டுச் சென்று, இந்த தலைமுறைக்கு அந்த வீடு மட்டுமே மிச்சமாக, அவர்களின் பெருமைமிகு வரலாற்றின் எச்சமாக இருந்தது.

அதிலும் ரங்கநாதரின் கைங்கர்யத்துக்காக இவளது பாட்டனார் இருபது வேலி நஞ்சை நிலத்தை தானமாகக் கொடுத்தாராம். வேலி என்பது அந்த கால நிலஅளவை. அப்போதெல்லாம் ஸ்கொயர் ஃபீட்டோ, சென்ட்டோ இல்லை. குழி கணக்கு தான். ஒரு குழி என்பது பனிரெண்டுக்கு பனிரெண்டு அடி. நூறு குழிகள் சேர்ந்தது ஒரு மா. இருபது மா சேர்ந்தது ஒரு வேலி. மூன்று மா என்பது ஒரு ஏக்கர். அதாவது ஒரு வேலி என்பது குத்துமதிப்பாக ஆறு ஏக்கருக்கும் சற்று அதிகம். இப்போதைய கணக்கில் அது நூற்றியிருபது ஏக்கராம். அதையும் சீதாலக்ஷ்மி அவ்வப்போது ஆற்றாமையோடு கூறிக் கொண்டிருப்பார்.

“ரங்கனுக்கு இருபது வேலி கொடுத்தாராம் உன் தாத்தா. என்ன பிரயோசனம்? அவன் கூட நம்மளை மறந்துட்டான் பார்த்தியா?” என்று அவர் விசனப்படும் போதெல்லாம்,

“நான் உனக்கு கொடுத்தேன், நீ எனக்கு கொடுடான்னு சுவாமிகிட்ட பேரம் பேசிட்டு இருக்கியாம்மா?” என்று சிரிப்பாள்.

அவையெல்லாம் பள்ளிப் படிப்பின் போது!

பெட்ஷீட் அடிக்கும் போதெல்லாம், இதே புராணம் தான் ஓடிக் கொண்டிருக்கும்.

பாவம்… அவரும் தான் என்ன செய்வார்!

ரங்கனை தொலைவிலிருந்து பார்த்தபடியே வீட்டுக்குள் நுழைந்தவளை,

“ப்ரீத்தி க்கா…” என்றபடி ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் காயத்ரி. கூடவே அழுது வழிந்தபடி சீதாலக்ஷ்மி.

என்னதான் வருத்தமிருந்தாலும் சீதாலக்ஷ்மியின் முகத்தைப் பார்த்தவுடனே, அவளது சோர்வெல்லாம் பறந்து விட்டது ப்ரீத்திக்கு!

கைப்பையை பிரம்பு நாற்காலியில் தூக்கிப் போட்டவள்,

“என்ன காயு? காலேஜ் இன்னைக்கு மட்டமா?” என்று கேட்டபடியே சமையலறைக்குள் நுழைந்தாள். அதுதான் உண்மையும் கூட! பிடிவாதமாக கல்லூரிக்குப் போக மாட்டேன் என்று அமர்ந்திருந்தாள். ப்ரீத்தி வருவதே எப்போதோ ஒருமுறைதான் என்பதாலும், முந்தைய தினங்களில் நடந்த களேபரத்தை தமக்கையிடம் பிரஸ்தாபிக்கவில்லை என்றால் அவளது மண்டை உடைந்து விடுமென தோன்றி இருந்ததாலும் அவள் கல்லூரிக்கு மட்டம் போட்டிருந்தாள்.

“என்ன மா இன்னைக்கு சமையல்?” என்றபடி ஒவ்வொன்றாக திறந்துப் பார்க்க,

“உனக்கு புடிச்ச பூரி கடப்பா தான். அவசர அவசரமா லக்ஸ் செஞ்சிட்டு இருந்துச்சே…” என்று காயத்ரி சிரிக்க,

“சூப்பர்…” என்றபடி, ஒரு தட்டை எடுத்துக் கொண்டு பாத்திரத்தை திறந்து உருளைக் கிழங்கோடு கடப்பாவை எடுத்தவள், அதை நாசிக்கு அருகில் கொண்டு சென்றாள்.

ஆழ்ந்து வாசத்தைப் பிடித்தபடி, “இந்த வாசத்தை தான் நான் மிஸ் பண்றேன்…” என்றவள், அந்த பருமனான உருளைக் கிழங்கை வாயில் இட்டபடி, “செம செம… சென்னைல தேடினாலும் இப்படி ஒரு கடப்பா கிடைக்குமா?” என்றபடி அனுபவித்தாள்.

“ப்ரீத்தி… உன்னோட பூரி வித் கடப்பா காம்பினேஷனே ரொம்ப வியர்ட். எப்படி இப்படியெல்லாம்?” காயத்ரி கேலியாக கேட்க,

“ஏன் பூரிக்கு சாம்பார் விட்டுக்கறவங்க இல்லையா? அதுக்கு இது தேவாம்ருதம்…” என்று சிரித்தவளை பார்க்கையில் சீதாலக்ஷ்மிக்கு மனதுக்குள் குற்றஉணர்வு. அவர் ஒரு மாதிரி அசௌகர்யமாக நிற்பதைப் பார்த்தவள்,

“என்ன மா?” என்று கேட்க,

“காலைல ஏதோ எரிச்சல்ல பேசிட்டேன்டி. மனசுல வெச்சுக்காத…” எனும் போதே அவரது கண்களில் குளம் கட்டிவிட்டது.

“ச்சே இதை போய் நினைச்சுட்டு இருப்பியா? சும்மா இரு…” என்று தாயை அடக்கி விட்டாளே தவிர, அவளது மனதுக்குள் அது வடுவாக தங்கியதென்னவோ உண்மைதான்.

அவளென்ன சீரியல் ஹீரோயினா? அப்போதே மறந்துவிட்டேன் என்று கூற? சாதாரண மனுஷி. ஒரு இரண்டு நாளைக்காவது அந்த கசப்பு இருக்காதா?

“நைட் எங்க ரெண்டு பேரையும் படுத்தி வெச்சுட்டான்டி உங்கப்பன். நானும் இன்னும் எவ்வளவு நாள் தான் அந்த மனுஷனோட மல்லுக்கட்டிட்டு இருப்பேன்னு தெரியல. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வழியக் காட்டிட்டன்னா கிருஷ்ணா ராமான்னு நான் போய் சேர்ந்துடுவேன்…”

சொல்லும்போதே சீதாலக்ஷ்மி தேம்பிவிட, ப்ரீத்திக்கு பதறியது! கடமையைச் செய்யாவிட்டால் கணவனாக இருந்தாலும் மரியாதை இவ்வளவுதான் போல!

“ம்மா… லூசா நீயி? எல்லாத்தையும் நான் தான் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கேன்ல. பார்த்துக்குவேன்மா…” என்று சமாதானம் செய்ய,

“எங்க உன்னை பணம் காய்ச்சி மரமா மட்டும் பாக்கறமோன்னு நினைக்கறச்சே ரொம்ப கஷ்டமா இருக்குடி அம்மு… பாவம் நீயும் தான் எவ்வளவு சமாளிப்ப? அதை நினைக்கும் போதும் பாவமா இருக்கு. இந்த மனுஷன் இப்படியெல்லாம் இழுத்து விட்டு வெச்சுடறானேன்னு நினைக்கும் போது கோபமா இருக்கு… நான் என்ன பண்ணுவேன்னே தெரியல…”

சற்று இளைப்பாற அவள் நினைத்தால், அவளே இளைப்பாற தோள் கொடுக்க வேண்டிய நிலை! சாய்ந்து கொள்ள தோள்கள் கிடைப்பதும் ஒருவித ஆடம்பரம் தான் போலும்!

தாயின் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தவள்,

“நான் இருக்கேன்மா… கவலைப்படாத…” என்றாள். தாயின் முதுகைத் தடவிக் கொடுக்கும் போதுதான், ஷான் இதுபோல தன்னுடைய முதுகை வருடிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அவனை நினைக்கும் போதே அவளது முகமும் கனிந்தது!

பிரதியுபகாரம் கோராத தோழமை… தாய்மையின் மறுவடிவம்!

‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள் தான். ஆனால் எப்படிப் பார்ப்பது என்று தான் தெரியவில்லை. ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று யாராவது அவளுக்குத் தோள் கொடுக்க மாட்டார்களா என்று மனம் ஏங்கியது! நான் இருக்கிறேன் என்று கூற ஷான் இருக்கிறான் தான். ஆனால் அவனிடம் இதைப் பற்றி கூற ரொம்பவும் தலையிறக்கமாக இருந்தது. அவனும் எவ்வளவு தான் செய்வான்? தோழமையை உபயோகப்படுத்திக் கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை.

முடிந்தவரை பிரச்சனையைத் தள்ளிப் போடலாம் ஆனால் தீர்வு தான் தெரியவில்லை.

எப்படியும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான்! அந்த நம்பிக்கையும் கூட எதனடிப்படையில் என்றுத் தெரியவில்லை!

ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்திவிட்டு, “அப்பா எங்க மா?” என்று ப்ரீத்தி கேட்க,

“கழுதை கெட்டா குட்டி சுவரு… எங்க ஊரை சுத்த போயிருக்கோ அந்த மனுஷன்…” குத்தலாக சொன்ன தாயை,

“ம்மா…” என்று அதட்டியவள், “விடும்மா… அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்…” என்று முடிக்க, கழுத்தை நொடித்துக் கொண்டார் சீதாலட்சுமி.

“ம்க்கூம்… இன்னும் கடனை வீட்டுக்குக் கொண்டு வராம இருந்தா போதும்டி… நான் என்ன தங்கமும் வைரமுமா கேக்கறேன்? ஒரு நாளாவது நிம்மதியா இருக்க விட்ருப்பானா அந்த மனுஷன்?” பொருமிய தாயை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது. ஆன மட்டும் கணவனை திட்டித் தீர்த்துவிட்டுத்தான் ஓய்வார்!

இவள் காயத்ரியோடு அரட்டை அடித்துக் கொண்டே இன்னொரு ஷிப்ட் காலை உணவை உண்டுவிட்டு, நிதானமாக குளித்துவிட்டு, அங்கிருந்த அவளது சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு கிளம்பினாள்.

“என்னடி கிளம்பிட்ட?” என்று கேட்ட சீதாலக்ஷ்மியிடம்,

“வேலையாத்தான் வந்தேன் மா. எம்டி வந்திருக்காங்க. சைட் பாக்க போகணும்…” என்று கிளம்ப,

“மதியத்துக்கு சாப்பிட வந்திரு அம்மு…”

“பாக்கறேன்மா. பாஸ் என்ன சொல்வாங்கன்னு தெரியல…” என்றவள், “சரி… மெனு என்ன?” என்று ஆர்வமாக கேட்க,

“உருண்டைக் குழம்பு, பூஷ்னிக்கா கூட்டு போதுமா? இல்ல வேறெதாச்சும் பண்ணனுமா?”

“இன்னுமொரு பொரியல் சேர்த்துக்கோ, ஒரு கை சாதம் சேர்த்து வடிச்சுரும்மா…” என்றவள், “பாஸ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்… அப்ப பண்ணா போதும்… இல்லைன்னா எனக்கு மட்டும் போதும்… நான் வர்றச்ச சாப்ட்டுக்கறேன்…” என்று முடித்துவிட்டு, காயத்ரியை பார்த்து, “ஆக்டிவா சாவி எங்கடி காயு?” என்றுக் கேட்டு, அவளிடமிருந்து வண்டியைப் பிடுங்கிக் கொண்டு வந்திருந்தாள் ப்ரீத்தி.

அடுத்த இடத்தை பார்வையிட இவர்கள் இருவருமாக ஆக்டிவாவில் போக, அந்த இடங்களை காட்டுவதற்காக நில ப்ரோக்கர், இவர்களை தொடர்ந்து வந்தார்.

“ப்ரீத்… பேசாம என்கிட்ட வண்டியைக் குடு… பின்னாடி உக்கார்ந்துட்டு வர்றதுக்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…”

ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு வந்தவள், சங்கத்திலிருந்து அதிலேயே போகலாம் என்று பிடிவாதமாக அவனை அழைத்து வந்து விட்டாள். ஆனால் காரிலேயே போய் பழகியவனுக்கு டூ வீலர், அதிலும் ஆக்டிவா அந்தரத்தில் பறப்பது போல இருந்தது. பள்ளிக் காலத்தில் ஓட்டியது. கல்லூரிக்கே வெளிநாட்டுக்கு போய் விட்டபடியால், இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து வெகு வருடங்களாகி இருந்தது. அதனால் தான் இந்த பிடுங்கல்!

“சும்மா உட்கார்ந்துட்டு வாங்க பாஸ். உங்களை பத்திரமா கூட்டிட்டு போறேன்…” என்று சிரிக்க,

“வேண்டாம்… ப்ளீஸ்… டேக்சி எடுத்துக்கலாம்…”

“என்ன நீங்க இப்படி அலும்பு பண்ணிட்டு இருக்கீங்க? கொண்டு போய் கொள்ளிடத்துல விட்ருவேன் பார்த்துக்கங்க…” என்று அவனை மிரட்ட,

“செஞ்சாலும் செய்வ. மொதல்ல என்கிட்ட வண்டியக் குடு. நான் ஓட்டறேன்…” பின்னால் அமர்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்தவனை, கண்ணாடி வழியாக பார்த்து சிரித்தபடி,

“சரி… நீங்களே ஓட்டுங்க… ஆனா உங்களுக்கு வழியெல்லாம் தெரியுமா?” என்று கிண்டலாக கேட்டாள்.

“அடங்குய்யா… என்ன பெரிய காஸ்மோ சிட்டியா இது?! வழி தெரியாம முழிக்க? நாலு வீதி, ரெண்டு வாய்க்கா… அவ்வளவுதான?” என்று சிரிக்க,

“ஹலோ… என்ன சொன்னீங்க? நாலு வீதி ரெண்டு வாய்க்காவா? எங்க திருச்சி உங்களுக்கு அவ்வளவு இளப்பமா போயிடுச்சா? திருச்சி எவ்வளவு பெரிய சிட்டி தெரியுமா?” என்று வெகுண்டு எழுந்தாள்.

“ஆமா… சொன்னாங்க! நியுயார்க் சிட்டியே இதுக்கு அப்பறம் தானாம்!”

“சொன்னாலும் சொல்லலைன்னாலும் எனக்கு எங்க ஊருக்கு அப்பறம் தான் நியுயார்க் சிட்டியும் கூட…”

“சரி வெச்சுக்க…”

“என்ன வெச்சுக்க? எங்க ஊர்ல இருக்க மாதிரி காவேரிப் பாலம் உங்க ஊர்ல இருக்கா? போறதுனா கூவம் பாலம் தான் போகணும்.” என்று வாதிட,

“ம்ம்ம்… அப்புறம்?”

“எங்க ஊர் மாதிரி உங்க ஊர்ல கோவில் இருக்கா பாஸ்? எங்க ஊர் ஸ்ரீரங்கம் கோவில்லையும், ஜம்புகேஸ்வரர் கோவில்லையும், மலைக்கோட்டைலையும் ஒரு ஊரையே அடக்கிடலாம்.”

“ம்ம்ம்… அப்புறம்?” என்றவன், குறும்பாக சிரிக்க,

“சிரிக்கறீங்களா பாஸ்? எங்க ஊர் மாதிரி தண்ணி உங்க ஊர்ல கிடைக்குமா? நானெல்லாம் சின்ன வயசுல காவேரியே பழியாக் கிடந்து இருக்கேன். அது மாதிரி ஒரு இடம் சொல்லுங்க?”

“ஏன் ஸ்விம்மிங் பூல்ல நீந்துனா உடம்பு வேண்டாம்ன்னு சொல்லுமா? இந்த காவேரிப் புராணம் பெரியப் புராணமா இருக்கே…” என்று சிரித்தான்.

“பின்ன? எங்க காவேரி, எங்களோட பெருமை, சொத்து, கெத்து…”

“கூவமும் அப்படி இருந்த ஆறுதான். நீங்கள்லாம் வந்துதான் இப்படி நாறடிச்சு வெச்சுட்டீங்க…” பதிலுக்கு அவன் வார,

“நமக்கு ஒன்னு வேணும்னா அதை எப்பாடுப் பட்டாலும் நாம பாதுகாக்கறம்ல. அது மாதிரி தான், உங்க கூவத்தை பெருமையா நினைச்சு இருந்தீங்கன்னா ஆரம்பத்துலையே நீங்க அதை பாதுகாத்திருக்கணும்…” நீளமாக சொற்பொழிவாற்றியவளின் வாயை அவனது கை கொண்டு மூடியவன்,

“போதும் மேடம். ரோட்ட பாத்து வண்டிய ஓட்டுங்க… ஊர் பெருமைய பேசிகிட்டு எங்கயாவது விட்டுடாதீங்க…”

“உங்களுக்குப் பொறாமை பாஸ்… பொறாமை…”

“ம்ம்ம் நாட்டாமை… போதும் ஆபீசர் உங்க தள புராணம்… காது வலிக்குது…” என்றுவிட்டு, “நான் கூட சென்னைல தான் வெயில்ன்னு நினைச்சேன். ஆனா உங்க ஊர் வெயில் இருக்கே… யப்பா… அதான் உனக்கு மண்டை ஸ்க்ரூ கழண்டுருச்சுன்னு நினைக்கறேன்…”

“அது உங்க ஸ்க்ரூ பாஸ்…” என்று சிரிக்காமல் கூற,

“சொந்த ஊர்ல இருக்கோம்ன்னு என்னமா இப்படி லொள்ளு பேசிட்டு இருக்க? நாளைக்கும் என்கூடத்தான் வொர்க் பண்ணனும். அதை ஞாபகம் வெச்சுக்க. அதுக்கு மட்டும் சிங்கார சென்னை வேணுமா?”

“அப்கோர்ஸ் பாஸ்…”

“நிலா வெளிச்சத்துல ஊர்வலம் போற மாதிரி இருக்கா… இவ்வளவு வாயாடிகிட்டு இருக்க?” என்று கிண்டலாகக் கேட்க,

“அஃப்கோர்ஸ் பாஸ்…” என்று சிரித்தாள்.

“சரி ஒரு ஜோக் சொல்வேணாம். அதை நீ கேட்டுட்டே வருவியாம்.”

“சொல்லுங்க சொல்லுங்க… யூ சர்டிபிகேட்டா ஏ சர்டிபிகேட்டா?”

“அதை நீயே முடிவு பண்ணிக்க…” என்று அவன் சிரிக்க,

“சரி சொல்லுங்க. என்னதான்னு பார்க்கலாம்…”

“ஒரு ஸ்கின் டாக்டர் கிளினிக்குக்கு போன பொண்ணு, ‘உடம்பு முழுக்க தரோவா செக் பண்ணீங்களே, எனக்கு எதாவது ஸ்கின் டிசீஸ் இருக்கான்னு’ ட்ரெஸ்ஸ போட்டுகிட்டே கேட்டாளாம். அதுக்கு அவன், ‘அதெல்லாம் டாக்டருக்குத்தான் தெரியும்’ன்னு சொல்லிட்டு ஏசி மெஷினை கழட்ட ஆரம்பிச்சானாம்.” என்று கூறியவனின் ஜோக் முதலில் அவளுக்கு புரியவில்லை. புரிந்த போது, ‘அடப்பாவமே’ என்றிருந்தது.

“அடப்பாவத்த… ஏ வா யூ வான்னே தெரியலையே…”

“புரியலைன்னா யூ, புரிஞ்சா ஏ…” என்றவன் வாய்விட்டு சிரிக்க, அவளாலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

error: Content is protected !!