Kalangalil aval vasantham – 7(2)

“சரி நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க…” என்று அவள் ஆரம்பிக்க,

“சரி சொல்லு. ரொம்ப கடிச்சா, நான் உன்னை கடிச்சு வெச்சுருவேன் பார்த்துக்க…”

“அவ்ளோலாம் இல்ல பாஸ். சாதாரண கேள்வி தான்…”

“சரி சொல்லு…” என்றான்.

“எலிக்கு ஏன் வாலிருக்கு?” என்று வண்டியை ஒட்டிக் கொண்டே கேட்க,

“ஏன் வாலிருக்கு?” உண்மையாகவே யோசித்தான் அவன்! பதில் தெரியாததால், “தெரியலையே…” என்று கூற,

“செத்தா தூக்கிப் போடத்தான்…” என்று அவள் கூற, அவளது மண்டையை பிடித்து மாவாட்டியவன்,

“உன்னை…” பல்லைக் கடித்தான். அவனது மாவாட்டலில் வண்டி கிழக்கும் மேற்குமாக போய் வர,

“பாஸ்… நாம உசுரோட சென்னை போக வேண்டாமா?” என்று கேட்டாள்.

“அதுக்காக தான் விட்டு வைக்கிறேன்…” சிரித்தான்.

பதிலுக்குப் பதில் வம்பிழுத்துக் கொண்டு, ஒவ்வொரு இடமாக பார்க்க ஆக்டிவாவிலேயே போய்க் கொண்டு, ஆங்காங்கே நிறுத்தி இளநீர், ஜூஸ், பீர்மானந்தா சர்பத் என்று பருகிக் கொண்டு, உண்மையில் அது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது அவனுக்கு.

மற்ற ஊர்கள் என்றால் டேக்ஸியில் போவார்கள், வேலையை முடித்துக் கொண்டு வருவார்கள். பெங்களூர், ஹைதராபாத் என்றால், சைட்டிலிருந்து ஆட்கள் வந்துவிடுவார்கள். ஆனால் இங்கு ப்ரீத்திக்கு பேச நிறைய இருந்தது. வெயிலாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனுபவிக்க நிறைய இருந்தது!

நடுநடுவே ஸ்வேதா வேறு, அவனை அழைத்துக் கொண்டே இருந்தாள். ப்ரீத்தியோடு திருச்சி வந்த விஷயத்தை அறிந்தது முதல் அவளால் சென்னையில் அமைதியாக அமர முடியவில்லை.

சந்தேகம்… சந்தேகம்… சந்தேகம்!

“யார் கூட போன ஷான்?”

“அவசியம் தெரிஞ்சே ஆகணுமா?”

“அந்த ப்ரீத்தி தானே?” பல்லைக் கடிப்பது அங்கு வரை கேட்டது.

“என்னோட வேலைல தலையிடாத ஸ்வேதா… ஐ டோன்ட் லைக் இட்…”

“அப்படீன்னா ஏன் அவளைக் கூட்டிட்டு போன?”

“ஷீ இஸ் மை ஸ்டாஃப் இடியட். இன்னொரு தடவை இப்படி கேட்காதே…”

“அவ உன் கம்பெனில இருக்கக் கூடாது ஷான்…” எப்போதுமில்லாமல் வெகு பிடிவாதமாக அவள் கூறியது அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“அதை நீ டிஸைட் பண்ணாத…”

“நான் டிஸைட் பண்ணாம அவளா பண்ணுவா?” குத்தலாக இவள் கேள்விக் கேட்க, ஷான் பல்லைக் கடித்தான்.

“அப்படிதான்னு வெச்சுக்க…” என்றவன், அழைப்பை துண்டித்தான். சைலன்ட் மோடில் போட்டவன், எதையும் காட்டிக் கொள்ளாமல் வேலையைப் பார்த்தான். அவன் ஏதோ வாக்குவாதம் செய்கிறான் என்பதை மட்டும் தான் ப்ரீத்தி கவனித்தாள். என்னவென்று இவளாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை!

ஒரு வழியாக நான்கு இடங்களை பார்த்து முடிக்க, பசி வயிற்றைக் கிள்ளியது ஷானுக்கு!

“அதுக்குள்ளவா?” என்று ப்ரீத்தி சிரிக்க,

“ரெண்டாவது ஷிப்ட் அம்மா கையால சாப்பிட்ட லொள்ளு…” என்று அவளது மண்டையில் தட்டியவன், முருகனை பார்த்து,

“இன்னும் கொஞ்சம் பெட்டரா பாருங்க முருகன்…” என்று கூற,

“கண்டிப்பா சார். உங்க தேவை என்னன்னு தெரிஞ்சிடுச்சுல்ல. நான் முடிச்சு தரேன் சார்…” என்று சிரித்தார்.

“சியூர். பார்த்துட்டு என்னை காண்டாக்ட் பண்ணுங்க. இல்லைன்னா இந்த மேடமை காண்டாக்ட் பண்ணுங்க. உங்க ஊர் தான் இவங்களும்…” என்று அவரிடம் புன்னகையோடு கூற,

“நினைச்சேன் சார். அதான் ரொம்ப பழக்கமா வண்டில வந்துட்டுட்டீங்களா?” என்று கேட்க, அவள் புன்னகையோடு, “ஆமாங்க…” என்று தலையாட்டினாள்.

“நீங்க எந்த பக்கம் மேடம்?” முருகன் கேட்க,

“ஸ்ரீரங்கம் தாங்க…” என்றாள்.

“நம்ம பக்கத்துக்கு வர்றீங்க மேடம்… அங்க யார் வீடு?” யோசனையாக முருகன் கேட்க,

“எங்கப்பா பேர் சந்திரமோகன்… அவங்களும்…” என்று அவள் முடிக்கும் முன்பே,

“நம்ம மோகன் பொண்ணா நீங்க?” என்று ஆச்சரியப்பட்டார் அவர்!

“நீங்க எந்த மோகனை சொல்றீங்க?” யோசனையாக அவரைப் பார்த்தாள் ப்ரீத்தி.

“ரியல் எஸ்டேட் பண்றாரே. அவர் தான மா?”

“ஆமா…” என்று கூறியவளை, பெரிய புன்னகையோடு பார்த்தார் அவர்.

“மோகனுக்கு இவ்வளவு பெரிய பொண்ணாம்மா? உங்க அப்பாரெல்லாம் நம்ம செட்டு தான். முருகன் மாமான்னு சொல்லுங்க… நல்லா தெரியும். நேத்துக் கூட பஞ்சாயத்துப் பேச போனோம்ல…” என்று அவசர அவசரமாக அவரது நட்பின் ஆழத்தை அவர் விவரிக்க, இவள் அதைவிட அவசரமாய் இடையிட்டாள். எதையாவது சொல்லிவிடப் போகிறாரோ என்று,

“ரொம்ப சந்தோஷங்க…” என்று முடிக்கப் பார்த்தாள்.

“இவங்க அப்பாவே ரியல் எஸ்டேட் தான பாக்கறாங்க சார்…” என்று முருகன் கூற, அது ஷானுக்கும் புதிய தகவல். ப்ரீத்தி கூறியதில்லை. அதுவும் திருச்சியில் இடம் பார்க்கிறோம் என்று தெரிந்த போதும் கூட அவள் ஏதாவது வாயை திறந்தாளா? ‘இருக்கட்டும்’ என்று நினைத்துக் கொண்டான். வைஷ்ணவி, அவரது அக்கௌன்ட்டுக்கு தானே பணத்தை அனுப்பி இருந்தாள். அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்கு இப்போது தெரிந்து கொண்டாக வேண்டும்.

அவளிடம் எதையும் கூறவில்லை. கூறினால் அவளை சந்தேகப்படுவதாக தெரியும் என்பதால் அவளிடம் சொல்லாமல், மெசேஜ் வந்த ஃபோன் நம்பரை மட்டும் அவளிடமே கொடுத்து, அது யாருடையது என்று விசாரிக்கச் சொன்னான். அவளும் அவன் முன்னமே, அவர்களுடைய வாடிக்கையான துப்பறியும் நிறுவனத்துக்கு அழைத்து, செல்பேசி எண்ணை கொடுத்து விசாரிக்க சொல்லியிருந்தாள்.

அப்போதும் கூட அவள் என்னவென்று மேற்கொண்டு கேட்கவில்லை! அவன் சொன்னான். செய்தாள்! அவ்வளவே!

ஆக, அவளுக்குத் தெரியாமல் ஏதோ சதிவலை பின்னப்படுகிறது என்று உணர்ந்து கொண்டான். ப்ரீத்தியை இதில் சம்பந்தப்படுத்திப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ரொம்ப சந்தோஷங்க முருகன். இவ்வளவு க்ளோஸா வருவீங்கன்னு தெரியல…” என்றவன், ப்ரீத்தியை பார்த்து, “ப்ரீத்தி… உங்கப்பாவும் ரியல் எஸ்டேட் பிசினஸ் தான் பண்றாங்களா?” என்று கேட்க, அவள் சங்கடமாக தலையாட்டினாள்.

“எஸ் பாஸ்…”

“அப்படீன்னா உங்க அப்பாவையும் கூட கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல?”

“அப்பா வீட்ல இல்ல பாஸ்…”

“சரி…” என்று யோசித்தவன், “ஓகே முருகன்… பார்த்துட்டு கூப்பிடுங்க…” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு,

“கிளம்பலாமா?” என்று ப்ரீத்தியை பார்த்துக் கேட்டான்.

“எங்க பாஸ்?”

“இப்ப ஃப்ரீ தான். எங்க போலாம் சொல்லு?” என்று அவளையே கேட்க,

அவள் தயங்கியபடியே, “நீங்களே சொல்லுங்க பாஸ்…” என்று அவன் புறமே தள்ளிவிட,

“ஓகே… நல்ல நான்-வெஜ் ஹோட்டலா சொல்லு… மொதல்ல சாப்பாடு. அப்புறம் தான் மத்தது…” என்று கேட்டவனை தயக்கமாகப் பார்த்தவள்,

“ஹக்கீம்ல நல்லா இருக்கும்ன்னு சொல்வாங்க பாஸ்…” என்று இழுத்தவள், “வீட்டுக்கு வர்றீங்களா?” என்று இன்னமும் தயங்கியபடியே தான் கேட்டாள்.

“அதுக்கு ஏன்டா இவ்வளவு இழுவை?”

“இல்ல… வருவீங்களோ மாட்டீங்களோன்னு தான் பாஸ்…” என்றவளின் குரலில் இன்னமும் தயக்கம் போகவில்லை.

“எங்க நீ கூப்பிடாமையே இருந்துடுவியோன்னு நினைச்சேன். ஷப்பா… இப்பத்தான் மனசு வந்திருக்கு…” என்று பெருமூச்சு விட்டவனை பார்க்கையில் அவளது முகம் தவுசன்ட் வாட்ஸ் பல்பாகி இருந்தது.

“அப்படீன்னா வர்றீங்களா?” என்று பெரியப் புன்னகையோடு கேட்க,

“இதையெல்லாம் கேட்கணுமா? விடு வீட்டுக்கு…” என்று சிரித்தான்.

“ஆனா எங்க வீட்ல வெறும் வெஜ் தான். பரவால்லையா?” என்று தயக்கமாக கேட்க,

“எனக்கு இப்ப இருக்க பசில இலை தழைய போட்டா கூட சாப்ட்ருவேன் பாத்துக்க…” என்று சிரிக்காமல் சொல்ல,

“அப்படீன்னா வண்டிய தோட்டத்து பக்கமா விடட்டுமா பாஸ்?” என்று அவளும் கலாய்த்தாள்.

“விடுங்க, கூடவே நீங்களும் கம்பெனி குடுங்க ஆபீசர்!”

இருவருக்கும் இந்த பேச்சு ஓயவே ஓயாது!

***

“வாங்க தம்பி…” வந்தவனை வாவென்று அழைத்த சீதாலக்ஷ்மிக்கு புன்னகையை கொடுத்து விட்டு, அந்த வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து ரசித்தவாறே உள்ளே நுழைந்தான் சஷாங்கன்! அவனது உயரத்துக்கு தலைவாசல் சற்று இடிக்கும் போலிருந்தது. தேக்குமர தலைவாசல் கதவின் பழைய கால வேலைப்பாடுகளும், மாடங்களும், அதிலிருந்த வேலைப்பாடுகளையும் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. பூர்வீகத்தில் அவர்களது வீடும் இதுபோலத்தான் என்றாலும், அது தெற்கத்திய முறையை ஓட்டி இருக்கும்.

இது போன்ற வீடுகளெல்லாம் சுண்ணாம்பு, கருப்பட்டி, முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு கட்டப்பட்டிருக்கும். சிமென்ட் கூட இந்த கலவையின் முன் நிற்காது. அவ்வளவு வலிமையான கலவை.

அது போன்ற பழைய வீடுகளின் மீது மிகுந்த பிரியமுண்டு அவனுக்கு! முடிந்தால் அதைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும் என்ற அளவிலான காதல், ப்ரேமம், பியார் எல்லாமுண்டு!

“ப்ரீத்… வீடு செமடா…” முகப்பிலிருந்த நிலைவாசல்படியை பார்த்தபடி ஷான் கூற,

“எல்லாம் எங்க தாத்தாவோட தாத்தா காலத்துது பாஸ்…”

“எவ்வளவு ரசனை பாரேன் உன் தாத்தாவுக்கு…”

“இருக்காதா? என்னோட தாத்தாவாச்சே…”

“அதனால தான் எனக்கு சந்தேகமா இருக்கு! உனக்குப் போய் எப்படி?” என்று சப்தமாக யோசிப்பது போல பாவனை செய்தவனை,

“பாஸ்…” எச்சரிக்கையாக அழைத்தவள், “என் தங்கச்சி முன்னாடி என்னை அசிங்கப்படுத்திடாதீங்க. ப்ளீஸ்… நான் அவகிட்ட எக்கச்சக்கமா பில்ட் அப்பெல்லாம் குடுத்து வெச்சுருக்கேன்…” பாவப்பட்ட குரலில் கூறியவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“எனக்கென்ன லஞ்சம் தருவ?”

“இன்னாது லஞ்சமா? இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியல?”

“தெரியல…” என்று சிரித்தவன், “நான் உன்னை டேமேஜ் பண்றதும் பண்ணாததும் உன் கைல தான் இருக்கு…” என்று வேண்டுமென்றே கலாய்க்க,

“இது உங்க கை இல்ல. கால்…” என்று அவனது கையைப் பார்த்து கெஞ்சினாள்.

“அதெல்லாம் செல்லாது. இதுதான் என்னோட கால்…” என்று அவள் முன் அவனது காலை நீட்டிக் காட்ட, பல்லைக் கடித்தாள். பின்னே! விழ சொல்கிறானாம்!

“வேணாம் பாஸ். நாளைக்கும் என்னைப் பார்க்க வேண்டி வரும்…” அவளது பற்கள் நறநறவென கடிபட, அவனது முகத்தில் குறும்புப் புன்னகை!

புன்னகையோடு அவர்களது பேச்சை கவனித்துக் கொண்டிருந்தனர் சீதாலக்ஷ்மியும் காயத்ரியும். விட்டால் அவனை வெளியில் நின்றே பேசி மகள் அனுப்பி விடுவாளோ என்று தோன்றியதால்,

“ப்ரீத்தி… என்ன வெளியவே வெச்சு பேசிட்டு இருக்க? தம்பிய உள்ளக் கூப்பிடு…” என்று கூறிய சீதாலக்ஷ்மியை பார்த்து புன்னகைத்தவன்,

“இதென்ன கூப்பிடறது? நானே வருவேன்ம்மா…” என்றவன், அவரைப் பார்த்து புன்னகைத்தான்!

சீதாலக்ஷ்மியிடமும், காயத்ரியிடமும் எந்தவிதமான அனாவசிய பேச்சுக்களும் இல்லாமல், தேவைக்கேற்ப அளவாகப் பேசியவனை கண் கொட்டாமல் பார்த்தாள் ப்ரீத்தி. அவள் காண்பது கனவா நனவா? தன் வீட்டில், தனது நண்பன் இருப்பதை நம்ப முடியவில்லை.

நிதானமாய் கண்களால் வீட்டை அளந்தான். அந்த காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம் என்பது புரிந்தது. பெரிய ஆடம்பரம் எதுவுமில்லை. முற்றத்தில் துளசி மாடம். ஒரு பக்க சுவற்றில் அவர்களது மூதாதையர்களின் படங்கள். மிக பழையதும் கூட இருந்தது. அத்தனையும் போற்றிப் பாதுகாத்து வருவதிலேயே, அவர்களுக்கான முக்கியத்துவம் புரிந்தது. சுற்றிலும் பவளமல்லியும் பாரிஜாதமும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன.

“இந்த வீட்டோட வயசென்ன இருக்கும் ப்ரீத்?”

“நீங்களே கெஸ் பண்ணுங்க பாஸ்…”

“ம்ம்ம் மே பி ஒரு ஹண்ட்ரட்?”

“கூட பத்து சேர்த்துக்கங்க…” என்று புன்னகையோடு கூற,

“செம… செம… ஐ சிம்ப்ளி லவ் திஸ் பிளேஸ்…” என்றவனின் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.

எத்தனையோ நவீன கட்டிடங்களை கட்டுபவனுக்கு இந்த பழைய வீடு பிடித்திருக்கிறதாமாம். ஆச்சரியமாக கண்களை விரித்தாள் காயத்ரி.

“எங்க வீடு ரொம்ப பழசு சர்… இதை போய்?” அதே வியந்த பார்வையோடு கேட்டாள் காயத்ரி. சீதாலக்ஷ்மி பித்தளை சொம்பில் நீரை கொண்டு வந்து தர, அதை வாங்கிப் பருகியபடியே,

“இதெல்லாம் பொக்கிஷம் காயத்ரி. இப்ப இதை பராமரிக்க முடியாம, இடிச்சு அப்பார்ட்மென்ட் கட்டிடறாங்க. ஆனா அது ரொம்ப தப்பு. நூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த கட்டிடகலையை கண் முன்னாடி ஒரிஜினலா பார்க்கறது எவ்வளவு பெரிய கிஃப்ட் தெரியுமா?” என்று சிலாகித்தவனை பார்த்து புன்னகைத்தாள் ப்ரீத்தி.

“ஒரு சிலதுல எல்லாம் எங்க பாஸ் கொஞ்சம் மெண்டல்டி. கண்டுக்காத…” என்று கண்ணை சிமிட்டியபடி காயத்ரியை பார்த்து ப்ரீத்தி கூற,

“எல்லாம் கொழுப்பு…” அவளது மண்டையில் தட்டியவன், “என்ன பர்சண்டேஜ் வெச்சுருக்க காயத்ரி?” சோபாவில் அமர்ந்து கொண்டவன் உரிமையாய் கேட்டான்.

“எய்ட்டி டூ சர்…” சற்று தடுமாறித்தான் கூறினாள் காயத்ரி. அவ்வளவு எளிதாக தரைக்கு வரமுடியவில்லை அவளால். உடன் படிப்பவர்களுக்கு எல்லாம் கனவு நிறுவனம் அவர்களுடையது. அதனுள்ளே செல்வது எவ்வளவு கடினம் என்று முன்தினம் கூட நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

ஏதோ ப்ரீத்தியின் புண்ணியத்தில் அவளும் அந்த நிறுவனத்தினுள் நுழைந்து விடலாமென்ற ஆசை துளிர் விட்டது.

“நல்லா படி. நல்லா என்ஜாய் பண்ணு… ரொம்பவும் ப்ரெஷர் எடுத்துக்காத…” என்றவன், “காலேஜ் டேஸ் திரும்ப வராது. இப்ப… உன் அக்காக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிஷம் நிற்க நேரமில்ல. நமக்கு எவர்க்ரீன் நாட்கள்னா அது காலேஜ் டேஸ் தான்… சோ என்ஜாய்…” என்று உணர்ந்து கூற, அவனை புன்னகையோடு பார்த்தாள் ப்ரீத்தி.

“கண்டிப்பா சர்.”