Kalangalil aval vasantham -9(2)

Kalangalil aval vasantham -9(2)

கண்களை மூடியபடி அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. வேறு சந்தர்ப்பமாக இருந்தால், ஏதாவது கலாய்க்கத் தோன்றும், கிண்டலாக பதில் கூறத் தோன்றும்.

ஆனால் இப்போது அந்த மனநிலையில் அவளில்லை… அவனும் இல்லை!

“ஏதாவது பேசுடா…” அவளது குரலை கேட்டே ஆக வேண்டும் போல தோன்றியது அவனுக்கு!

கரகரத்த குரலை செறுமிக் கொண்டவள், “உங்க சாய்ஸ் பாஸ். நீங்க தானே இந்த லைப்ஃப சூஸ் பண்ணீங்க…” என்று கூற, அவன் பதிலேதும் கூறவில்லை.

ஸ்வேதா மேல் அவன் கொண்ட கண்மண் தெரியாத காதல் தான் இந்த வாழ்க்கைக்குள் அவனை இழுத்துக் கொண்டது. ஆனால் அது காதலா மோகமா? மோகமாக இருந்தால் முப்பது நாள் தான். ஆசை என்பது வெறும் அறுபது நாட்கள் தான்.

அதைத் தாண்டி அவனால் ஸ்வேதாவுடன் ஒன்ற முடியவில்லை என்றால், வெறும் மோகம் இந்த உறவுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறதா என்ற சந்தேகம் அவனுக்குள் வந்தது. அதை அவன் விரும்பவில்லை.

இன்னமும் அவளைத்தான் காதலிக்கிறான். இதுவரை அவளது போக்குக்கே தான் அவன் போயிருக்கிறான். வாழ்வென்பது ஒருத்தியுடன் மட்டும் தான் என்பதுதான் அவனது கொள்கை. அது திருமண உறவாக இருந்தால் என்ன, திருமணமில்லாத உறவாக இருந்தால் என்ன?

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் தான்!

காதல் தான் அடிப்படை என்றால் அவளது குறைகளோடு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவன் அறிவான். அந்த குறைகளை எப்போதும் சொல்லிக் காட்டிவிட கூடாது என்பதிலும் தெளிவாக தான் இருந்தான். ஆனால் இப்போது சொல்லிக் காட்டியதை நினைத்து அவனுக்கு அவமானமாக இருந்தது.

மெளனமாக காரை செலுத்திக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. இப்போது சற்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருந்தாள். ட்ராஃபிக் வேறு அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை கூட கூட்டம் குறைவதில்லை.

“சாரி ப்ரீத்…” மௌனத்தைக் கலைத்தான் சஷாங்கன்!

“ம்ம்ம்…”

“எனக்கு பழகிடுச்சு… ஆனா உன்னை அவ இந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது…” இறங்கிய குரலில் கூறியவனை ஓரக்கண்ணில் பார்த்தவள்,

“விடுங்க பாஸ்… எனக்கும் இது ஃபர்ஸ்ட் டைமா… அதான் எமொஷனலாகிட்டேன். இனிமே பழகிக்கறேன்…” என்று ட்ராஃபிக்கை பார்த்துக் கொண்டே, காரை செலுத்தியபடி கூற, அவளது பதிலில் சட்டென சிரித்து விட்டான் அவன்!

“வாங்க பழகலாம்ன்னு ஸ்வேதா கிட்ட போய் சொல்லப் போறியா?”

“நல்ல ஐடியா பாஸ். பத்து தடவை பழகிட்டா இன்னும் சுத்தமா சொரணை போயிடும். சொரணை மட்டும் போயிட்டா போதும், எவ்ளோ கழுவி ஊத்தினாலும் ஃபீல் பண்ண மாட்டோம்ல…”

“எப்படி இதே மாதிரி பழகப் போறியா?” கிண்டலாக அவன் கேட்க,

“எப்படியோ ஒன்னு… பழகனும்… அவ்வளவுதான்…”

“நிஜமாவே நார்மல் ஆகிட்டியா ப்ரீத்?” அவனுக்குள் குற்ற உணர்வு அழுத்தியது.

“நீங்க நார்மலாகுங்க பாஸ். ஸ்வேதா இப்படி பிஹேவ் பண்றதுக்கு காரணம், உங்க மேல இருக்க டூ மச் லவ் தான். பொசசிவ்நஸ். ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. தனிப்பட்ட முறைல சார்ட் அவுட் பண்ணுங்க. யாரா இருந்தாலும், அவங்களை விட்டுட்டு ஃப்ரெண்ட்டுக்கு சப்போர்ட் பண்ணா கோபம் தான் வரும்…” நிதானமாக ப்ரீத்தி கூறியதனைத்தையும் கேட்டான் சஷாங்கன்.

“அதுக்காக இப்படி தப்பா பேசனும்ன்னு அவசியமில்ல ப்ரீத். அப்படி உன்னை பேசித்தான் என்கிட்ட அவளோட பவரை நிலைநாட்டனுமா? கிடையாது… ஐ நோ வாட் இஸ் ரைட் அண்ட் வாட் இஸ் ராங்க்…”

“உங்க கேரக்டர புரிஞ்சு, அதுக்கு செட்டிலாக இன்னும் கொஞ்சம் டைம் தேவைப்படும்… அவங்களை நீங்களும் புரிஞ்சுக்கனும்… நீங்க அவங்களுக்கு உங்களை புரிய வைங்க. அவங்க இன்செக்யுரிட்டி ஃபீலிங்க மாத்துங்க. உங்களை புரிஞ்சுகிட்டா தான் என்னையும் விட்டு வைப்பாங்க. கொஞ்சம் மனசு வைங்க…” என்று அவள் சிரித்தபடி முடிக்க, அவளது அந்த புரிதலும் முதிர்ச்சியான பேச்சும் அவனுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

“இந்த லொள்ளு தான் உன்னோட ட்ரேட் மார்க்…” என்றவன், “இனிமே இப்படி நடக்காது ப்ரீத். இன்னொரு தடவை அவ இருக்கும் போது அவளை நீ ஃபேஸ் பண்ற மாதிரி வெச்சுக்க மாட்டேன். ரியலி சாரி…”

“என்ன பாஸ் நீங்க? லைஃப் முழுக்க அப்படியே இருக்க முடியாது. ஒன்னு, நான் அவங்களுக்கு பழகிக்கணும். இல்லைன்னா, அவங்க, எனக்கு பழகிக்கனும்… அவங்க பண்ண மாட்டாங்கன்னா நான் பண்ணிட்டு போறேன். விடுங்க. இதுக்காக இவ்வளவு ஃபீல் பண்ணுவீங்களா?”

“ஒவ்வொரு தடவையும் உன்னோட சுயமரியாதை காலியாகும் ப்ரீத். அவளோட தப்பை அவ உணரனும்…”

“யாருக்காக விட்டுக் கொடுக்க போறேன்? உங்களுக்காக தானே?” என்று சாதாரணமாக அவள் கூறிய வார்த்தையில் அவனது மனதுக்குள் ஏதோவொன்று ஆட்டம் கண்டது.

அவளது சுயமரியாதையை எப்போதும் அவள் விட்டுக் கொடுத்ததேயில்லை. அப்படி விட்டுக் கொடுத்து ஒரு காரியத்தை செய்ய வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை என்று சொல்பவள் அவள்!

அவளிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்டபோது ஏனோ ஆசீர்வதிக்கப்பட உணர்வு!

பிரதிபலன் பாராத தோழமை எனும் விதையின் விருட்சம் அவள்!

ஆனால் ரொம்பவும் சுயநலமாக யோசிப்பதை போல தோன்றியது அவனுக்கு! அவள் அவனுக்காக விட்டுக் கொடுக்கிறாள் என்றால், இனியொருமுறை ப்ரீத்தியை இப்படி ஒரு சங்கடத்துக்குள் தள்ளக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான்.

மெளனமாக கண்களை மூடியபடியே படுத்திருந்தான்! ப்ரீத்தியை பொறுத்தவரை மிகத் திறமையான டிரைவர் அவள். அடிக்கடி ப்ரேக்கடிக்க மாட்டாள், சட்டென கட்டடிக்க மாட்டாள். வழுக்கிக் கொண்டு போவதைப் போலத்தான் இருக்கும் அவளது ட்ரைவிங். அதனாலேயே அவளை மட்டுமே காரை ஓட்டுவதற்கு இருத்திக் கொள்வான். கூடுதலாக பேசும் ரகசியங்கள் அனைத்தும் அவர்கள் இருவருக்குள்ளாகத்தான் இருக்கும். வெளியே கொஞ்சமும் கசிந்து விடாது!

இப்போதும் அப்படித்தான், வழுக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவனது மண்டைக்குள் குடை ராட்டினம் சுற்றும் உணர்வு!

எங்கோ பறப்பது போல தோன்றியது.

சீக்கிரமாக வீட்டுக்குப் போய்விட்டால் பரவாயில்லை என்று கூட தோன்றியது!

சற்று நேரம் மெளனமாக இருந்தவள், “பாஸ்… என்னாச்சு… திடீர்ன்னு தலை சுத்தல்? கூடுதலா இந்த வாந்தி எதாவது இருக்கா?” சாதாரணமாக கேட்பது போல கேட்டு வைக்க,

“வாமிட் இல்லையே… ஏன்?” கண்களை மூடியபடியே பதில் கூறியவனை நமுட்டு சிரிப்போடு பார்த்தாள் ப்ரீத்தி.

“இல்ல… பொண்டாட்டிங்க பிரெக்னன்ட் ஆகறதெல்லாம் ஓல்ட் ஃபேஷன் பாஸ்…” என்று நக்கலாக இழுக்க,

“நான் அன்கண்டிஷனா இருக்கறதால இவ்வளவு வாய் பேசற நீ…” சிரித்தவன், “இருக்கு உனக்கு…”

“ஓகே… ஜோக்ஸ் அப்பார்ட்…” என்று சமநிலைக்கு வந்தவள், “என்னாச்சு? நல்லாதானே இருந்தீங்க?” என்று கேட்க,

“ம்ம்ம்… என்னவோ தெரியல. ஒரு மாதிரியா தலை சுத்திகிட்டே இருக்கு. எல்லாம் கலங்கலா தெரியுது… எங்கயோ மிதக்கற மாதிரி…”

“ஓ… வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போயிட்டு போலாமா…” சொன்னவளின் குரலில் தீவிரமிருந்தது!

“இல்ல… வைஷு அர்ஜன்ட்ன்னு சொன்னா. என்னன்னு பார்த்துட்டு போலாம்…”

“ஆனா ஒரு மாதிரியா இருக்கீங்க. எதுக்கும் ஹாஸ்பிடல் போயிட்டே போகலாம்…” என்று கூறும் போதே சஷாங்கனின் செல்பேசி அழைத்தது.

வைஷ்ணவி தான்!

கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தவன், “பாரு கூப்டுட்டா…”

“ம்ம்ம்…” என்று ம்மிட்டவள், “ஏன் எடுக்கல?” அவன் பேசியை அட்டன்ட் செய்யாமல் விட்டதை பார்த்துக் கேட்க,

“போறோம்ல… விடு…” என்றான் அசட்டையாக, குழறலாக!

இதற்கும் மேல் அவனிடம் சொல்ல முடியாது. முடியாதென்றால் முடியாதுதான்! அவனது பிடிவாதத்தை மொத்தமாக அறிந்தவள் அவள். அந்த நேரத்தில் எப்படி அவனை அணுகுவது என்பதும் அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

இரவாகிக் கொண்டிருந்தது!

திரும்பத் திரும்ப வைஷ்ணவி அழைத்தாள். ஆனால் ஷான் எடுக்கவில்லை.

“பாஸ்…” என்று இவள் அழைக்க,

“அடிக்கட்டும் விடு…” கண்களை மூடியபடியே கூறினான். அவனது குரலில் இன்னும் கொஞ்சம் தடுமாற்றமும், குழறலுமிருந்தது!

வைஷ்ணவி இப்போது ப்ரீத்தியின் செல்பேசிக்கு வந்தாள். இப்போது ப்ரீத்தியால் எடுக்காமல் இருக்க முடியாதே! ஓரப்பார்வையாக ஷானை பார்த்தபடியே பேசியை எடுத்தவள், பச்சையத்தை வலப்புறம் தள்ளி விட்டு காதில் வைத்தாள், ஸ்டியரிங்கை இன்னொரு கையால் பிடித்தபடியே!

“சொல்லுங்க மேம்…”

“எங்க ப்ரீத்தி இருக்க?”

“வந்துட்டு இருக்கோம் மேம்…”

“ஷான் கூடத்தான் இருக்கியா?”

“எஸ் மேம்…”

“ஓகே மா… சீக்கிரம் வந்துருங்க. இங்க எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க…” என்றவளின் குரலில் சிறு அவசரம்!

‘யார் காத்திருக்கிறார்கள்?’ என்று கேட்கத் தோன்றியது. இடதுபுறம் திரும்பி, ஷானை பார்த்தாள். அவன் இன்னமும் கண்களை மூடியபடி தான் படுத்திருந்தான்.

“பாஸ்… என்னாச்சு… இப்படியே ஹாஸ்பிடல் போய்டலாம். ஐ தின்க் உங்களுக்கு வேற என்னமோ பண்ணுது…” என்றவளின் குரலில் இப்போது பயத்தோடு, பதட்டமும் சேர்ந்திருந்தது.

அடையாறுக்குள் அப்போது தான் நுழைந்திருந்தாள். ஐந்தாவது நிமிடத்தில் அவனது வீடு வந்துவிடும் என்ற அளவு! இன்னும் மிக அருகில் அந்த பெரிய மருத்துவமனையும் இருந்தது.

“நத்திங் மச்… ஒரு பத்து நிமில்ஷ்ம்… போயிட்டே லாம்…” பேச்சு இன்னும் கொஞ்சம் தடுமாறவும், வீடு வரவும் சரியாக இருந்தது.

காரை நிறுத்தியவள், “வீடு வந்திருச்சு பாஸ்…” என்று அவனது தோளை தொட்டு எழுப்ப,

“ம்ம்ம்…” என்றவன், கண்களை சிரமமாக பிரித்துப் பார்த்தான்.

அனைத்தும் கலங்கலாகத்தான் தெரிந்தது. ஏதோவொரு போதையில் மிதப்பவனை போல காரிலிருந்து குத்துமதிப்பாக இறங்கியவன், சிரமப்பட்டு நடக்க முயல, கார் கதவை மூடிவிட்டு வந்த ப்ரீத்தி, அவசரமாக அவனைத் தாங்கிக் கொண்டாள்.

அவனால் நடக்க முடியவில்லை என்பதுதான் உண்மை!

நடப்பது அவனுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது!

அவனையும் அறியாமல் சிரிக்கத் தோன்றியது!

சிரித்தான்!

உளறத் தோன்றியது!

ஏதேதோ உளறினான்!

அவனை வித்தியாசமாகப் பார்த்தாள் ப்ரீத்தி!

‘எதற்காக சிரிக்கிறான் இவன்?’ அவளது முகத்தைப் பார்த்த சஷாங்கன், இன்னமும் சிரித்து, அவளது தோளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவனது எடை முழுவதையும் தாங்கும்படி அவள் மேல் சரிந்திருந்தவனை சுமக்க முடியாமலும், என்ன நடக்கிறது என்று புரியாமலும், வாட்ச்மேனை அழைத்தாள்!

“அண்ணா… சீக்கிரம் வாங்க…” எனும் போதே, அவர்களை நோக்கி ஓடி வந்தார் அந்த வாட்ச்மேன்.

கேட்டிலிருந்து உள்ளே வருவதற்கே நூறடி நடக்க வேண்டும். காரை உள்ளே கொண்டு வந்தும் நிறுத்தலாம், கார் ஷெட் உள்ளே தான் இருந்தது. ஆனால் ஷானுடன் வரும் போதெல்லாம் அவனுக்கு கேட்டுக்கு வெளியே காரை நிறுத்தித்தான் பழக்கம் என்பதால் அவளும் அவ்வாறே நிறுத்தியிருந்தாள். ஏனென்று கேட்டதில்லை. கேட்கும் பழக்கமில்லை. அவன் சொல்வதை அவள் செய்வாள்… அது மட்டுமே!

ஆனால் அவனிப்போதிருக்கும் நிலையை காணும் போது, பேசாமல் காரை உள்ளேயே எடுத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

வாட்ச்மேன் தாங்கிப் பிடித்தும், எடை முழுவதையும் அவள் மேலேயே அவன் சரித்திருந்ததால், அவளால் நடக்க முடியவில்லை.

“பாஸ்… என்னாச்சு…” என்று அவள் கேட்க,

“என்ன என்னாச்சு…” என்று சொல்லி அவன் சிரிக்க,

‘அடக்கடவுளே’ என்று தான் தோன்றியது அவளுக்கு!

தெய்வாதீனமாக வைஷ்ணவி வெளியே வர, ‘ஷப்பா’ என்றிருந்தது ப்ரீத்திக்கு!

ப்ரீத்தி தாங்கிப் பிடித்திருந்த ஷானை பார்த்தவுடன் பதறியது வைஷ்ணவிக்கு!

“ஷான் என்னாச்சு?” என்று பதட்டத்தோடு அவள் கேட்க, பதிலுக்கு ஏதோவொன்றை போல சிரித்தான் ஷான்!

“என்ன ப்ரீத்தி? என்னாச்சு இவனுக்கு?” சந்தேகமாக அவள் கேட்க,

“எனக்கும் தெரியல மேம். தலை சுத்துது வான்னு சொன்னார். போனேன். ஆனா இப்ப தான் இப்படி பண்றாங்க…” என்று அவள் கூற,

“அந்த சினிமாக்காரி கூட இருந்தாளா?” வைஷ்ணவிக்கு ஸ்வேதாவின் பெயரை சொல்லக் கூட பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது.

“ம்ம்ம்…”

“அவ சகவாசம் தான் இவன் கெட்டு போறதுக்கு காரணமே…” என்று கொதித்தவள், “நீயாவது சொல்லலாம்ல ப்ரீத்தி?” என்றவளின் குரலில் அத்தனை கோபம்!

இன்று அங்கு நடந்ததை சொன்னால் என்னாவது?

கோபத்தில் இன்னும் கொதித்து, வேறு ஏதாவது இவர் செய்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் வைஷ்ணவியை முழுமையாக நம்பவும் முடியாது.

தன்னை விலைக்கு வாங்க முயன்றவர் என்ற எண்ணம் அவளுக்குள் நெருடியது. ஆனால் உண்மை என்னவென அவளும் அறியமாட்டாள் அல்லவா. அதனால் அதைக் கொண்டு வைஷ்ணவியை தீர்மானிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

“உல்டன் பிழப்பேஏஏ…” வைஷ்ணவியை பார்த்து கோணலாக சிரித்தபடி அழைத்தவன், அவனுடைய கட்டுபாட்டில் இல்லாமல், ஏதேதோ உளற ஆரம்பிக்க,

“ஷான்…” என்று அதிர்ச்சியாக பார்த்தாள் வைஷ்ணவி. அதே அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு ஜீவன், வேறு யார், ப்ரீத்தி தான்!

இவ்வளவு நேரம் ஓரளவு நன்றாகத்தானே பேசிக் கொண்டிருந்தான்? எப்படி இப்படி ஆனது? என்று எதுவும் புரியாமல் பார்த்தபடி, அவனைத் தாங்கிக் கொண்டு நின்றாள்!

“என்ன ப்ரீத்தி ஆச்சு? ஏன் இப்படி இருக்கான்?” என்று கேட்டவள், “குடிச்சா கூட இப்படி இருக்க மாட்டானே…” குரல் கீழிறங்கி விட்டது வைஷ்ணவிக்கு!

“இல்ல மேம். குடிக்கல. இவ்வளவு நேரம் ஓரளவு ஸ்டெடியாத்தான் என்கிட்ட பேசிட்டு வந்தாங்க. ஒரு பத்து நிமிஷமாத்தான் இப்படி…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவன் நிலையில்லாமல் இன்னுமே தள்ளாட, சத்தத்தை கேட்டு வெளியே வந்தார் மாதேஸ்வரன்.

உடன், அவருடன் நான்கு பேர் வேறு!

பதட்டமாக சஷாங்கனை தாங்கிக் கொண்டவர், “ஆகாஷ்…”என்று அவரது உதவியாளரை நோக்கிக் கத்த, உள்ளிருந்து அவன் ஓடி வந்தான்.

அந்த இடம் பரபரப்பானது!

உடனிருந்தவர்களின் முகம் தெளிவில்லாமல் கருத்திருந்தது!

“அப்ப இன்னொரு நாள் சாவகாசமா வர்றோம் மாமா…” என்று அவர்களில் ஒருவர் கூற, அதை கவனிக்கும் மனநிலையில் மாதேஸ்வரன் இல்லை. அவரது மகனின் முகம் மட்டுமே அவரது பார்வை வட்டத்தில் இருந்தது.

அவரது வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை தீபம் அவன்!

அவனை எந்தளவு பொக்கிஷமாக நினைக்கிறார் என்பதை அவர் ஒருவர் மட்டுமே உணர்வார்!

அவனில்லாவிட்டால் அவர் கண்டிப்பாக இல்லை!

அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான் சஷாங்கன்!

***

கைகளை கட்டியபடி மாதேஸ்வரன் இறுக்கமாக அந்த எமர்ஜென்சி வார்டில் நின்று கொண்டிருக்க, தலை மேல் கை வைத்தபடி அமர்ந்து, தலைகுனிந்திருந்தாள் வைஷ்ணவி.

இருவருக்கும் நடுவில், கலக்கமாக நின்று கொண்டிருந்தாள் ப்ரீத்தி. என்ன நடக்கிறது என்பதை அவளால் உணர முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக சஷாங்கன் குடிக்கவில்லை என்பதை மட்டும் அவளறிவாள்!

குடிக்காமல் எப்படி இப்படி ஆனது என்று அவளுக்குப் புரியவில்லை. சொல்ல முடியாத ஏதோவொரு அச்சத்தில் மனம் கலக்கமடைந்து கண்கள் கண்ணீரில் பளபளத்தது!

அவளது கலக்கத்தை மாதேஸ்வரன் அவ்வபோது பார்த்துக் கொண்டுதானிருந்தார்! அவளது அச்சமும், கலக்கமும், கண்களின் நீரின் பளபளப்பும் பொய்யில்லை…!

“எப்படியாவது ஷானுக்கு கல்யாணத்தை முடிச்சிட்டா போதும்ன்னு நினைச்சு தப்பு கணக்கு போட்டுட்டோம் ப்ரீத்தி…” தலையிலிருந்து கையை எடுக்காமலே வைஷ்ணவி கூற, ப்ரீத்தி அவளைப் புரியாதப் பார்வை பார்த்தாள்.

“பொண்ணு வீட்டுக்காரங்க முன்னாடி இப்படி பண்ணி வெச்சுட்டானே இவன்…” என்றவள், முகத்தை மூடிக் கொண்டாள் வைஷ்ணவி!

இப்போது அதிர்வது ப்ரீத்தியின் முறையானது!

error: Content is protected !!