kamyavanam5

மாயா தன் தோழி மகதியுடன் நீர் நிலையைத் தேடிக் கிளம்பினாள். அவள் கனவில் கடந்து சென்ற பாதையை நினைவு வைத்துக் கொண்டு சென்றாள்.

ஒவ்வொரு இடமும் மரமும் அங்கே விழுந்து கிடைத்த இலைகளும் கூட கனவில் அவள் பார்த்தது போல இருக்க, சற்று பிரமித்தாள். ஒரு வேளை அது கனவில்லையா என்று கூட நினைக்கத் தோன்றியது.

மகதிக்கு சற்று ஆச்சரியமானது.
“என்ன நீ ஏற்கனவே இங்க வந்த மாதிரி வழி கண்டுபிடிச்சு போற!” என அவளிடம் கேட்க ,

“உன்கிட்ட நான் என்னனு சொல்றது. எனக்கு நேத்து கனவுல இந்த இடம் வந்துச்சு. அதான் அதை வெச்சு போய்ட்டு இருக்கேன்” மாயா அரைகுறையாக விஷயத்தைச் சொன்னாள்.

“ஹே!  என்ன டீ சொல்ற?” மகதி வாய் பிளக்க,

“கொஞ்ச நேரம் பேசாம வா” எரிந்து விழுந்துவிட்டு, விறு விறு வென நடந்தாள்.ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தாள் மகதி.

வெகு தூரம் செல்வது போல இருந்தாலும் பாதை ஒவ்வொன்றும் நினைவில் பதிந்து இருந்தது மாயாவிற்கு. மனதின் ஆர்வம் அவளை விரட்டியது.

சிறிது தூரத்திலேயே நீரின் சலசலப்புச் சத்தம் காதில் விழ, மகதி ஆச்சரிய பட்டாள்.

கண்களில் மின்னல் தெறிக்க மாயா அந்த இடத்தை அடைந்தாள். கனவில் கண்ட இடத்தை  நேரில் உணரும் போது அது எல்லையில்லா இன்பமாக இருந்தது.

அங்கிருந்த மரங்களும், நீர்நிலையும் , பூக்களும் அதன் வாசமும் கூட அப்படியே இருந்தது. இரவும் நிலவும் மற்றும் அந்த அழகனும் மட்டும் இல்லை. ஆனாலும் அவளது கண்கள் அலைபாய்ந்தது. அவனைத் தேடி.

 

“வாவ் என்ன ஒரு அழகான இடம். உனக்கு இப்படி ஒரு இடம் கனவுல வந்துச்சா?” வியந்தாள் மகதி.

மாயாவிற்கு அவள் பேச்சு எதுவும் காதில் விழவில்லை. அவள் கவனம் முழுவதும் ப்ரத்யும்னன் எங்கிருப்பான் , எப்போது வருவான் என்பதில் இருந்தது.

“வா டி குளிக்கலாம்” என மகதி ஒரு குரல் கொடுத்துவிட்டு கையில் கொண்டு வந்திருந்த உடைகளை கரையில் ஓரமாக வைத்துவிட்டு நீருக்குள் இறங்கலானாள்.

 

“நீ குளி. இதோ வரேன்” என சற்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள் மாயா. ஆள் அரவம் இல்லாத அமைதியான இடம் அது.

 

அவள் எதிர்ப்பார்த்த ‘அவன்’ கண்ணில் தென்படவில்லை. அனைத்தும் தன் மனதின் கற்பனை, கனவு காண்பதில் தான் மிகவும் தொலைந்து போவதாக நினைத்தாள். ஆனாலும் அவளது கண்கள் சுற்றித் தேடிக் கொண்டு தான் இருந்தது. ஒரு மனம் கனவைத் தேடிப் போகச் சொன்னாலும் மறு மனம் இதெல்லாம் பைத்தியக்காரத் தனம் என்று எண்ணச் சொன்னது.

சரி திரும்பி மகதியிடம் சென்றுவிடுவோம் என்று நினைக்க, அந்த இடத்தின் அழகு அவளைக் கட்டிப் போட்டது. அப்போது ஒரு பொறி தட்டியது. கனவில் வந்த அவன் மட்டும் தன் கற்பனை என்றால், இந்த இடம்!

இந்த இடத்தில் தானே அவனை கண்டேன். அப்போ இந்த இடம் மட்டும் எப்படி உண்மையாக அதே போன்று இருக்க முடியும்! இல்லை ..நிச்சயம் அவன் கனவில் மட்டும் இல்லை, இங்கேயே தான் அவனும் இருக்க வேண்டும் என்றும் உறுதியாக அவளது மனம் நம்பத் தொடங்கியது. அந்த நம்பிக்கையில் மீண்டும் திரும்பி சற்று தூரம் நடந்தாள். அவனைத் தேடி!

அந்த நதியில் குளிக்கச் சென்ற மகதி கண்ணில் மறையும் தூரம் வந்துவிட்டாள். இப்போது நல்ல மனம் வீசியது. அங்கிருந்த பூக்கள் அவளை மயக்கியது. அத்துடன் மெல்லிதாக மிகவும் மெல்லிதாக யாரோ பாடுவது போல் இருந்தது.

காதை தீட்டிக் கொண்டு அந்த இசையில் கவனத்தைக் குவித்தாள். இல்லை! அது பாட்டில்லை, யாரோ புல்லாங்குழல் வாசிக்கிறார்கள். மனம் பூரித்தது.

முதுகுத் தண்டு வரை அந்த இசை சிலிர்க்கவைத்தது. வாயில் வரும் வார்த்தைகள் போல அத்தனை துல்லியமான இசை. கண்மூடி , கன்னத்தில் கை வைத்து அந்த இசையில் மூழ்கினாள் மாயா.

கால்கள் தானாக அந்த இசையை நோக்கிப் பயணித்தது. அவள் செல்லும் பாதை, சரியாக அந்த புல்லாங்குழலை அடையும் வழி ஆனது. இப்போது மிக அருகில் அந்த இசை கேட்கவும் கண்விழித்துக் கொண்டாள் மாயா.

இதுவும் கனவோ என எண்ணியவள் தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். இல்லை , இது கனவில்லை. இந்த காணம் பொய் இல்லை. யார் வாசிப்பது? அங்கிருந்த பெரிய மரத்தின் பின்னால் இருந்து தான் சத்தம் வருகிறது.

 

மரத்தின் பின்னால் இவள் நின்றுகொண்டிருக்க, முன்னால் இருப்பது யாரெனத் தெரியவில்லை. மெல்ல அந்த இசையினைக் கலைத்துவிடாமல் அடி மேல் அடி வைத்து நகர்ந்து சென்றாள்.

அன்று கனவில் வந்தவனே தான். வெள்ளை நிற பட்டு, மேல் ஆடை இன்றி அவனது வெற்று மார்பை காற்றில் குளிரவிட்டு கையில் புல்லாங்குழல் ஏந்தி இருந்தான். தலை முடி அன்று போல் இன்றும் காற்றில் அசைந்து மாயாவை இம்சித்தது.

அவனது இசையை விட இப்போது அவனே மாயவை மயக்கிக் கொண்டிருந்தான். மீண்டும் ஒரு முறை தன்னை கிள்ளிக் கொண்டாள்.

மனம் துள்ளாட்டம் போட்டது. இவன் கனவல்ல. மெய் மறந்து வாசிக்கும் அவனுக்கு எதிரே சென்று நின்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள நினைத்தாள்.

அவனது இடப்பக்கத்தில் நின்றிருந்தவள் , மெல்ல அவன் முன் வந்து நின்றாள்.

அவனது பெயர் நன்றாக அவள் நினைவில் இருந்தது. பிரத்யும்னன்.

அவனைக் கூப்பிட வாயைத் திறக்க எண்ணினாள். அதற்குள் புல்லாங்குழல் இசை நின்றது.

‘மாயா’ என அவன் கண்திறந்து அழைத்தான். அவளை அவன் மடியில் ஏந்தி இருந்தான். அனைத்தும் க்ஷண நேரத்தில் நடந்திருந்தது.

மாயா திகைத்தாள். ‘இப்போது தான் இவன் எதிரில் வந்து நின்றோம் அதற்குள் அவன் கைகளில் எப்படி வந்தோம்.’ சட்டென அவன் பிடியில் இருந்து விலகினாள்.

“நீங்க பிரத்யும்னன்..?” அவனிடம் கோபமாக பேச முயன்று தோற்றாள்.

வசீகரமாக அவன் புன்னகைத்து, “ஆமா” என்றான்.

எச்சில் விழுங்கி வறண்ட தொண்டையை சரி செய்து கொண்டு, “எதுக்கு என்னை தொல்லை பண்ணிட்டே இருக்கீங்க , கனவுல இப்போ நேர்ல… இதுவும் கனவான்னு எனக்குத் தெரியல! இந்தக் காட்டுக்கு வந்ததுலேந்து எல்லாமே கொழப்பமா இருக்கு” தனக்குத் தானே புலம்புவது போல அவனிடம் புலம்பினாள்.

அவன் சலனமற்ற சிரிப்புடன் அவளுக்கு பதில் தந்தான்.

“மாயா.. எல்லாத்தையும் நான் உனக்கு தெளிவு படுத்தறேன். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட வாழக்கை எங்கிருந்து ஆரம்பிச்சது, உன்னோட பிறப்பின் ரகசியம்..,நோக்கம் தெரிஞ்சா உனக்கு எல்லாமே விளங்கிடும்..” அவளின் கையைத் தொட வந்தான்.

இரண்டடி தள்ளி நின்றாள் மாயா.

“இதைத் தான் சொல்றேன். என்கிட்ட உனக்குத் தயக்கமே வேண்டாம். உனக்கு நான் எல்லாத்தையும் சொன்ன பிறகு, நீயே என் மடில இருக்கறத தான் விரும்புவ..” சிரித்தபடி பிரத்யு கூற,

“ச்சி ச்சி… எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் வராது” என்று அவனிடம் மாயா சொல்லும்போதே ‘ஒரு வேளை வருமோ’ என்ற நினைப்பும் கூடவே வந்தது.

“சரி எப்படியும் உன்னிடம் எல்லாத்தையும் விளக்கத் தான் வேண்டும்..ஆனா நம்ம இந்தச் சந்திப்பு யாருக்கும் தெரியாமல் நீ பாத்துக்கணும். என்னைப் பத்தி உன்னோட நண்பர்களுக்கோ இல்ல இந்த ஊரில் இருக்கறவங்களுக்கோ நீ சொல்லவே கூடாது.” என அவளிடம் உறுதியைக் கோரினான்.

“சரி..நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். ஆனா என்னை நீங்க இப்படி அருகில் வந்து சீண்ட கூடாது.” அவளும் பதிலுக்குக் கேட்க,

சத்தமாக சிரித்தான். அவள் உதட்டை சுழித்து கொண்டு அவனைப் பார்க்க,

“அது உன் கைல தான் இருக்கு. நீ கற்பனைல ஒரு முறை என்னை என் அருகாமைய நினைத்தாலும் என்னால் அதை புரிஞ்சுக்க முடியும். அப்போ நான் சும்மா இருக்க மாட்டேன். “ குறும்பாக அவளைப் பார்த்துக் கொண்டு அவளை மடக்கினான்.

“எனக்கு அப்படி எல்லாம் தோணாது.” முறுக்கிக் கொண்டு உடனே பதில் தந்தாள்.

“சரி பார்க்கலாம். முதல்ல உனக்கு இந்த காட்டை பத்தி சொல்றேன். இது உருவான விதம், எங்க தொடங்கிச்சு எல்லாம் சொல்றேன். வா” என அவளை அழைத்தான்.

“இங்கயே சொல்லுங்க” அவள் அங்கேயே நிற்க,

பிரத்யும்னன் கண் மூடி ஒரு நொடி நின்றான். அந்த இடம் புகை மூட்டமாக மாறியது. மாயா அந்தப் புகையில் கண்ணை மூடிக் கொண்டாள்.

பிறகு கண் திறந்து பார்க்க, முன்பு இருந்ததை விட அழகான இடமாக மாறி இருந்தது. லேசான பனி, இளஞ்சிவப்பு நிறத்தில் மலர்களைக் கொண்ட மரங்கள், பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் காலின் கீழே புல் தரை, ஆங்காகே துள்ளி ஓடிய முயல் குட்டிகள், மான்கள்.. மெல்லிய மனதை வருடும் புல்லாங்குழல் இசை..அவள் அமர்ந்திருந்தது இதமளிக்கும் மயில் தோகையினால் செய்த மெத்தை.

எதிரே அவன்!

அதே உடையில் ஆனால் இன்னும் அழகாகத் தெரிந்தான். மனம் ஒரு நொடி அவன் அழகை ரசிக்க அவனும் அருகில் வந்து அமர்ந்தான்.

“உன் மனம் என்னை அருகில் அழைத்தது.” என்று அவன் கூற,

சட்டென மனதை தட்டி விழித்துக் கொண்டாள்.

“இது என்ன இடம்.. என்னோட ப்ரென்ட் மகதி அங்க என்னை தேடுவாளே!” சற்று வருத்தப் பட,

“கவலைப் படாதே அவள் பத்திரமாக வீட்டுக்கு போய் சேருவாள். நான் பாத்துகறேன். இதைக் குடி” என ஒரு அழகிய வளைந்த கோப்பையை அவளிடம் நீட்டினான்.

மாயா அன்று அந்த நீரைப் பருகியதும் அவளுக்கு ஒரு வித மயக்க நிலை வந்ததும் நினைவுக்கு வர, அவன் கொடுத்தத்தை வாங்க மறுத்தாள்.

“கவலைப் படாத, இது வெறும் பழ ரசம். என்னை நீ நம்பலாம்” என்று இன்னும் அவளிடம் கோப்பையை நீட்டிக் கொண்டிருந்தான்.

அவளும் அதை வாங்கி அருந்த, அப்படி ஒரு பழச் சாறை அவள் பருகியதே இல்லை. அத்தனை சுவை. இத தான் அமுதமோ என்று தோன்ற வைத்தது.

அதே நேரம் அங்கே குருவும் , தேவாவும் , பஞ்சபூதத்திடம் போனில் பேசிவிட்டு, கடற்கரையைத் தேடிச் சென்றனர். அந்த உடுக்கை அடிப்பவர் இவர்களுக்கு இந்தக் காட்டின் கதையைக் கூறுவதாக சொல்லி இருந்ததால் ஆர்வமாகச் சென்றனர்.

மாயா , தேவா , குரு மூவரும் ஒரே நேரம் இந்தக் காட்டின் கதையைக் கேட்கலாயினர்.

மாயா , பழச் சாரும் கையுமாய் அந்த மெத்தையில் அமர்ந்திருந்தாள். பிரத்யும்னன் அதே மெத்தையில் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்தான்.

அவளது கண்களை நேராகப் பார்த்து, அன்று நடந்த விஷயங்களை அவளுக்குச் சொல்லத் தொடங்கினான்.

இது காலங்களைக் கடந்து நடந்தது. எத்தனை யுகமோ தெரியாது. தோழிகளோடு நீரில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள் ரதி. அதாவது மன்மதனாகிய காமதேவனின் காதலி.

அவளின் சத்தத்தால் ஈர்க்கப்பட்டு,  அவளைக் காணும் ஆவலில் அவள் இடம் நோக்கி வந்தான் அவளின் ஆசைக் காதலன் மன்மதன். அனைவரும் அவனை மன்மந்தன் என்று அழைக்கையில் ரதி மட்டும் அவனைக் ‘காமா’ என்று தான் அழைப்பாள்.

கல கலவென சிரித்தபடி, தோழிகள் அவள் மேல் தண்ணீரைத் தெளிக்க பதிலுக்கு அவளும் நீரை வாரி இறைத்தாள்.

“ரதி இன்று நீ தான் பலி. உன்னை விடமாட்டோம்” என ஒருத்தி அவள் மேல் மேலும் தண்ணீர் தெளிக்க மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, “முடியவே முடியாது. நான் தப்பித்துக் கொள்வேன்” என அவர்கள் தண்ணீர் தெளிக்கும் போது அதிலிருந்து தப்பிக்கும் விதமாக நீரில் மூழ்கினாள்.

தோழிகளின் நீரில் இருந்து தப்பித்து மேலே வந்தாள். அவள் வெளியே வந்ததும் மீண்டும் தண்ணீரை தெளிக்க, மறு முறை நீரில் மூழ்கினாள்.

இப்படியே விளையாட , இது தான் சமயம் என்று காமாவும் மறு கரையில் இருந்து நீரில் குதித்தான். நீரின் உள்ளேயே நீந்தி தன்னுடைய ரதியை அடைந்தான்.

நீரில் முங்கிய ரதி , தன் காதலன் காமாவைக் கண்டதும் கண்கள் விழித்து சற்று ஆனந்த அதிர்ச்சி அடைய , அவளை நீரின் உள்ளேயே கட்டி அனைத்து இழுத்துக் கொண்டு நீந்தி அந்த இடத்தை விட்டு வெகு தூரம் சென்றான்.

 

error: Content is protected !!