மாயவனின் மயிலிறகே
அத்தியாயம் 13
அபிஜித்தின் மனக் கொண்டாட்டங்கள் அவனோடே, தனி உலகில் லயித்திருக்கும் அவனை தொல்லை செய்வார் யாரும் இல்லை.
இப்போதைக்கு தன் மனதை எவருக்கும் அறிவிக்கலாகாது! முதலில் பாப்புவிடம்தான் கூற வேண்டும். ஆனால் அவள் இப்போது இருக்கும் நிலையில் அதுவும் இயலாது.
அதனால் அவனுக்குள்ளாகவே கரைந்துக் கொண்டிருந்தான். ‘நீ எப்படா பாப்பு குணமாவ’ என ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டான். ஆனால் குணமானால் அவளுக்கு தன்னை நினைவிருக்குமா? என்பதை யோசிக்க மறந்தான்.
காபி, தேயிலைத் தோட்டத்திற்கு வந்திருந்தனர். பச்சைப் பசேலென்று இருக்கும் மலைச் சரிவுகளில் மனமும் சற்று சரியத்தான் செய்தது.
மதிய நேரமாதலால், உணவு இவர்கள் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற வசதிகளை விடுதி நிர்வாகமே பார்த்துக்கொள்ளும்.
எங்கும் கண்களை குளிர்விக்கும் பசுமை, சில்லென்று தீண்டிச் செல்லும் குளிர் காற்று, அதில் இதமாய் கலந்து வரும் காபி வாசனை! அதோடு சேர்ந்து வயிற்றிற்கும் சுவையான விருந்து, வாவ்! இதுவல்லவோ சொர்க்கம்.
விதவிதமாக வரவழைக்கப்பட்ட அசைவ உணவை அனைவரும் ஒரு பிடிபிடித்தனர். அபிஜித் இப்போதும் காரியத்தில் கண்ணாய், பாப்புவின் வயிற்றை சிறப்பாய் கவனித்து விடலானான்.
அவள் “போதும் ஜித்து சாப்பிட முடியல” என சிணுங்கினாலும், “என்ன சாப்பிடற நீ! என்ன ஆட்டம் போடற இங்க வந்ததுல இருந்து, உடம்புக்கு தெம்பு வேண்டாம். இப்ப நீ சாப்பிடல இப்படியே ஊருக்கு கூட்டிட்டு போயிடுவேன்” என மிரட்ட அதில் அரண்டவள் அவனைத் திட்டிக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.
அதன்பின் அனைவரும் சற்று காலாற நடக்கத் திட்டமிட்டனர். ஜித்துவிற்கு பாப்புவுடன் தனிமையில் நடக்க ஆசைதான். ஆனால் நம் நாயகி கண்டுகொண்டால்தானே!
வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்ததால், அவன் மேல் கோபம் கொண்டு அவனிடம் பேசாமல், அவள் ஷாலினியுடன் வால் பிடித்துக் கொண்டே செல்ல, சற்று சுணங்கினாலும் ‘இன்று ஒருநாள் தானே!’ என தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
சந்தோஷ், அமலா தனியாக ஒரு பக்கம் செல்ல, ரித்விக் ஷாலினி பவன் இவர்களோடு பாப்புவும் இணைந்துக் கொண்டாள். அதற்கும் அவளை ஆயிரம் பத்திரங்கள் கூறிதான் அனுப்பி வைத்தான் அபிஜித்.
“நான் இல்லைன்னு அவங்ககூட சேர்ந்து ஒரேடியா கும்மாளம் போடக்கூடாது சரியா! சரிவுல பாத்து நடக்கனும். ஷாலினி வேண்டாம், அவளால உன்னை பிடிக்க முடியாது, அதனால ரித்வி நீ பாப்புவ புடிச்சிக்கோ.” எனக் கூறிக் கொண்டிருக்க, பதிலுக்கு மூவரும் இவனை முறைத்தனர்.
“டேய் இதெல்லாம் ஓவரு, ஒரு ஒரு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள இத்தனை அட்வைசா! அதுக்கு பேசாம நீயும் எங்க கூட வரலாம்தானே!” ஷாலினி கடுப்புடன் கேட்டாள்.
என்ன சொல்வான் அவள் கண் காணும் தூரத்தில் இருந்தால், குறும்புப் புன்னகையும் துறுதுறு விழிகளும் அவனைக் கட்டி இழுக்க, அவளையே பார்க்கச் சொல்லி தூண்டும் உள்ளத்தை அடக்கத் தெரியாமல் அல்லவா தனித்துச் செல்ல நினைத்தான். “சரி சரி ஒன்னும் சொல்லல பத்திரமா போய்ட்டு வாங்க. பாப்பு…” என ஏதோ சொல்ல வந்தவனை, “டேய் சும்மா கடுப்படிக்காம ஓடிரு, அவள நாங்க தொலைக்காம கூட்டிட்டு வந்துடறோம்” ஆனால் அந்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும் எனவும், பாப்பு சிறிது நேரமேனும் அவர்களைத் தவிக்க விடுவாள் என நினைத்திருக்க மாட்டாள்.
இவர்கள் நால்வரும் பேசிக் கொண்டே சிறிது தூரம் நடந்த பின், பவன் அவன் மூன்றாம் கண்ணான கேமிராவோடு வேறு பக்கம் நகர்ந்துவிட, மீதி மூவரும் தேயிலைத் தோட்டத்தின் நடுவே உள்ள பாதையில் நடக்கத் தொடங்கினர். பாதை சரிவாக இருந்ததால் பாப்புவின் கையை தன் கைக்குள்ளேயே வைத்திருந்தான் ரித்விக். அவளும் அபி கூறியதாலோ என்னவோ அமைதியாக வந்தாள். ஆனால் அவள் வாய், “அது என்ன, இது என்ன, இந்த செடிய எப்படி இவ்ளோ அழகா வெட்டி விட்றுக்காங்க,” சரிவான பாதையில் சற்று கால் சறுக்கிவிட, “இது சமமான இடத்துல நட்டு வைக்காம ஏன் இப்படி வச்சிருக்காங்க? நடக்கவே முடியல சறுக்குது.” என தோட்டக்காரனுக்கு ஒரு குட்டு வைத்துவிட்டு அடுத்த கேள்விக்கு தாவிக் கொண்டிருந்தாள்.
ஷாலினி நமட்டுச் சிரிப்போடு, “பதில் சொல்லுடா போலிஸ்காரா” என ரித்விக்கை மாட்டிவிட்டாள்.
ஏற்கனவே பாப்புவின் கேள்வியில் மூச்சு வாங்கியவன், ஷாலினியும் கலாய்க்க, “ஹையோ! இதுகள எல்லாம் கோர்த்துவிட்டு என்னை ஏன் ஆண்டவா சோதிக்கற? ரெண்டு ஜோடியா சுத்துது. இன்னொன்னு தனியா போறன்னு போயிருச்சு! இந்தா இங்க ஒன்னு அப்படியே பெரிய போட்டோகிராபர்னு நினைப்பு, எந்நேரமும் கேமிராவும் கையுமா அலையுது. இதெல்லாம் கூட பரவால்ல ஆனா இன்னொன்னு இருக்கு பாரு என்ன பண்றதுன்னே தெரியாம பேக்கு மாதிரி முழிச்சிட்டு வருது. ஆனா பாப்பு! நீதான்டா இங்க வந்த நோக்கத்த சரியா பண்ற” என அவள் கேள்வியால் துளைப்பதை மனதில் வைத்துக் கொண்டு கூற, பாப்பு ஏதோ அவார்டு வாங்கியதைப் போல சிரித்து வைத்தாள்.
அவன் பேக்கு எனக் கூறியதில் கடுப்பான ஷாலினி, “அடேய் எரும யாரப் பார்த்து பேக்கு சொன்ன ” எனப் பாய,
“ஏன் உன்னைப் பார்த்துதான் சொன்னேன். தலையப் பாரு வைக்கப்போராட்டம், நெருப்பு பத்த வச்சா சும்மா குபுகுபுன்னு எரியும். அந்த அளவுக்கு காஞ்சு கெடக்கு.” என அவள் சுருள் சுருளான அடங்காத தலை முடியைக் கிண்டலடித்தான்.
“அடிங்க முட்டைக்கோஸ் மண்டையா, என் தலையவா கிண்டலடிக்கற, உன்னை!” என அவனை அடிக்க சுற்றி முற்றிப் பார்த்து ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு துரத்த, “மீ எஸ்கேப்” என கத்திக்கொண்டு அவன் பாப்புவை விட்டு தலைத் தெறிக்க ஓட ஆரம்பித்தான்.
அவர்கள் துரத்தி விளையாடுவதைப் பார்த்து பாப்பு அடங்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். சிறிது தூரம் துரத்திச் சென்று சில அடிகளை ரித்விக்கு கொடுத்த பின்னரே அமைதியானாள் ஷாலினி. பின் இருவரும் பாப்பு இருக்கும் இடத்திற்கு வர, அங்கு அவளைக் காணவில்லை.
இங்குதான் எங்கேயாவது இருப்பாள் என எண்ணி, “பாப்பு… பாப்பு…” என சத்தமிட பதிலே இல்லை. சரி பவன் வந்து அழைத்துச் சென்றிருப்பானோ! என நினைத்து பவனிடம் போன் செய்து கேட்டனர். அவன் “இல்லை நான் அங்கு வரவே இல்லை” எனக் கூற இருவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள்தான். எங்கு சென்றிருப்பாள் என ஆளுக்கொரு பக்கம் தேட, அதற்குள் பவனும் என்னவோ ஏதோ என்று வந்துவிட்டான்.
அவனும் தேடிப்பார்க்க பாப்பு கிடைக்கவேயில்லை. அதனால் மற்ற மூவருக்கும் போனில் அழைத்துச் சொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் பதறியடித்து இவர்கள் இருக்கும் இடம் வந்துவிட்டான் அபிஜித்.
சந்தோஷ் அமலாவும் கூட வந்துவிட, அனைவரும் திசைக்கொருவராய் தேடியும் அவள் கிடைக்கவில்லை. ஏமாற்றமும், பதற்றமுமாக மீண்டும் அனைவரும் ஓரிடத்தில் கூடினர்.
“எங்கே சென்றிருப்பாள்? தொலைத்து விட்டேனா? இல்லை இங்குதான் எங்கேயாவது?” என பதற்றத்தின் உச்சியில் புலம்பிய அபிஜித் அதற்கு மேல் தாளாமல் கால்கள் மடங்க நிலத்தில் வீழ்ந்தான்.
மற்றவர்களுக்கும் பதற்றம்தான். ஏனென்றால் நாட்டு நடப்பு அப்படி. ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது மூதாட்டி வரை பாதுகாப்பில்லாமல் போயிற்றே. சதைப் பசிக்காக வெறியுடன் காத்திருக்கும் கழுகுகள் சூழ் உலகாக மாறி வருகிறதே!
அதிலும் இவள் நிலையோ இன்னும் மோசம். ஷாலினியோ அழுது விடுபவள் போல கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.
மெல்ல கலங்கத் தயாரான கண்களுடன் தவிப்புடன் அமர்ந்திருந்த அபிஜித்தின் அருகில் சென்ற ரித்விக், “அபி” என தோளைத் தொட, பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தவன், “உன்கிட்டதான அவளப் பார்த்துக்க சொன்னேன். எங்கடா என்னோட பாப்பு?” என சிவந்த விழிகளுடன் மீசைத் துடிக்க ஆவேசமாக கேட்டவனைப் பார்த்த நண்பர்கள் பதறினர்.
“அபி” என நாலாபுறமும் இருந்து குரல்கள் வர அதைச் சட்டை செய்யாதவனாய், “சொல்லு உங்கிட்டதான் கேக்கறேன். நம்பிதான விட்டேன்” என மேலும் காலரை இறுக்க, ரித்விக் பதில் வினை எதுவும் காட்டாமல் அமைதியாக இருந்தான் கவனக்குறைவு அவனுடையதல்லவா!
“அபி விடுடா அவனை” என பவன், சந்தோஷ் உதவிக்கு வந்தனர். ஆனால் அவனது கையை அவர்களால் விலக்க முடியவில்லை. ரித்விக்கோ குற்றவுணர்ச்சியில் தலை குனிந்து கொண்டான்.
“அபி பாப்புக்கு ஒன்னும் ஆகிருக்காது… நல்லபடியா திரும்ப கிடைப்பா, இங்கதான் எங்கயாவது இருப்பா நல்லா இன்னொரு முறை தேடிப் பார்க்கலாம்டா” அமலா ஆறுதல் கூறினாள்.
மெல்ல ரித்விக்கின் காலரை விடுவித்தவன், “ஆகக்கூடாது, ஒன்னும் ஆகக்கூடாது. அப்படி எதாவது ஒன்னுன்னா இனி இந்த அபியோட வாழ்க்கைல ஒன்னும் இருக்காது.” என திடமாக கூற, அனைவரும் அதிர்ந்தனர். இது வெறும் கடமை உணர்ச்சி இல்லையோ? என சந்தேகம் வந்தது. ஆனால் அதைத் தீர்க்க இது நேரம் இல்லையே! என அமைதியாகி, பவன் போலீசுக்கு தகவல் கூறலாம் எனக் கூற, அதற்கு அனைவரும் சம்மதித்தனர். அபி தலையை கைகளால் தாங்கியவாறு அமர்ந்திருக்க, ரித்விக் அதே நிலையில் மண்டியிட்டிருந்தான். கூடவே ஷாலினியும் ‘தன்னால்தானே ‘ என மனம் பதைத்தாள். அத்தனை பத்திரம் சொல்லியும் கோட்டை விட்டுவிட்டோமே! என மருகினாள்.
அனைவரும் ஆளுமையானவர்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள். எத்தனை இக்கட்டான நிலையிலும் நிதானம் தவறாமல் சிந்திப்பவர்கள். இன்று என்ன செய்வது என அறியாது தேங்கி நின்றனர்.
அபியின் நிலையை காணச்சகிக்காத ரித்விக், “அபி சாரிடா” என தோளைத் தொட, நிமிர்ந்து பார்த்த அபிஜித் நண்பன் வெகுவாய் கலங்கியிருப்பதைக் கண்டு, தன் மேலேயே கோபம் வரப்பெற்றவன் பாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டான்.
“சாரிடா ரித்வி… ஏதோ உணர்ச்சிவசப்பட்டு… சாரிடா சாரிடா” என புலம்ப, “இல்ல அபி நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும்… சாரிடா” என பதிலுக்கு இறுக்கிக் கொண்டான்.
“எனக்கு பாப்பு வேணும்டா!” என மேலும் புலம்ப, “கிடைச்சிடுவாடா, இங்கதான் எங்கயாவது இருப்பா” என ஆறுதல் கூறினான்.
பவன் போலீசுக்கு சொல்வதற்காக போனை எடுக்க, “ஹேய் எல்லாரும் வந்துட்டீங்களா!” என பாப்புவின் குரல் கேட்க அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி.
அபி விடுக்கென எழுந்தவன் மற்றவர்களுக்கு முன் அவள் அருகில் சடுதியில் சென்று உச்சாதி முதல் பாதம் வரை பத்திரம் பார்த்து அதன் பின்பு அவளை இறுக்கக் கட்டிக் கொண்டான்.
இருளில் தவித்தவன் அடுத்த நொடி வெளிச்சத்தைக் கண்டது போல, பிரகாசித்தது அவன் முகம். அவளை உச்சி முகர்ந்து தலையில் அழுந்த முத்தத்தைப் பதித்தான் அவளின் காவலனா? காதலனா?
அபிஜித், “எங்கடா போன நீ” எனக் கேட்க, அவளை நினைத்து இத்தனை நேரம் அனைவரும் கலங்கியிருப்பதை அறியாதவள், “ஜித்து, இங்க பாரேன்” என தன் ஒரு கையை தூக்கிக் காட்ட அதில் ஒரு வண்ணத்துப் பூச்சி சிறகுகள் பிடிபட்ட நிலையில் ‘என்னை விட்டுடுங்களேன்’ என துடித்துக் கொண்டிருந்தது.
“எவ்ளோ அழகா இருக்கில்ல, பிடிக்க போனேனா! பறந்து பறந்து போச்சு, விடாம ரொம்ப தூரமா துரத்திட்டு போய் புடிச்சிட்டேன் பார்த்தியா” என பெருமைப் பட்டுக் கொள்ள, ஷாலினிக்கு வந்ததே கோபம் அவள் மண்டையில் நறுக்கென கொட்டியவள், “பேசாத நீ! சொல்லிட்டு போறதில்ல. இவ்ளோ நேரம் உன்னைக் காணாம பயந்துபோய் தேடிட்டு திரியறோம். இப்ப வந்து பட்டாம்பூச்சி பிடிக்க போனேன்னு, கூலா சொல்ற” எனக் கடிய மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல அமைதியாக நின்றனர். சிறிது நேரமாயினும் பதறிய மனங்களல்லவா?
அதில் அவள் பயந்து அழ ஆரம்பிக்க, அணைப்பை விலக்கி அவள் தலையைத் தேய்த்தவாறு, “விடு ஷாலு ஏதோ விளையாட்டுத்தனமா போய்ட்டா”
“ஆமாண்டா நல்லவனே சொல்லுவ நீ! இவ்ளோ நேரம் இவளைக் காணாம டேமை திறந்து விட்டவன்தான நீ. என்ன இன்னும் சின்ன பிள்ளைனு நினைப்பா?” என எகிற,
“ஆமா நான் சின்ன பிள்ளைதான் ஒன்லி சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு இல்ல ஜித்து” அழுது கொண்டே கூற, அனைவரின் முகத்திலும் இறுக்கத்தை மீறிய மெல்லிய சிரிப்பு உதயமானது.
மாலை நேரமாதலால் சுற்றியது போதுமென ரிசார்டிற்கு திரும்பி விட்டனர். சற்று நேரம் ஓய்வெடுத்து பின் சந்திக்கலாம் என அவரவருக்கு பதிவு செய்யப்பட்ட அறையை நோக்கிச் செல்ல, “நான் ஷாலு கூட போக மாட்டேன். என்னை கொட்டிட்டாங்க அவங்க ” எனக் கையைக் கட்டிக் கொண்டு பிடிவாதமாக நிற்க, வேறு வழியின்றி அவள் ஜித்துவுடன் செல்ல மீதியிருந்த இரண்டு அறைகளை ஆண்கள் ஒன்றும் பெண்கள் ஒன்றும் என எடுத்துக் கொண்டனர்.
தங்களது அறைக்கு வந்த சந்தோஷை கண்டு மற்ற இருவரும் கேலிச்சிரிப்பு சிரிக்க, “போங்கடா டேய்” என அலுத்தவாறு குப்புறப் படுத்துக் கொண்டான் அவன்.
பாப்புவும் அலுப்பில் படுத்தவுடன் உறங்கிவிட, அபிஜித் அவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். ஜன்னல்கள் திறந்து இருந்ததால் உள்ளே வீசிய வாடைக் காற்றில் உடல் சிலிர்த்தவாறு திரும்பிபடுத்து கை கால்களை குறுக்கிக் கொள்ள, அருகில் வந்து அவளுக்கு போர்த்தி விட்டவன் மீண்டும் அவளைப் பார்த்தவாறு அமர்ந்து உறங்கிவிட்டான்.
சிறிது நேரம் உறங்கி எழுந்தவர்கள், இரவு உணவை உண்டுவிட்டு அனைவரும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். பாப்பு கூட ஷாலினியுடன் சமாதானமாகி விட்டாள்.
அனைவரும் வட்டமாக அமர்ந்திருக்க அனைவரின் பெயர்களும் காகிதத்தில் எழுதப்பட்டு ஒரு குடுவையில் போடப்பட்டது. அமலா, “இதுதான் கேம், இந்த பாட்டில் ஒவ்வொருத்தர்கிட்டயும் லைனா வரனும். தென் அவங்க அதில இருந்து ஒரு சீட்ட எடுத்து அதுல யார் பெயர் வருதோ அவங்கிட்ட எதாவது கேள்வி கேக்கனும். அதே போல பதில் சொல்றவங்க உண்மையான பதில சொல்லனும் சரியா”
அதன்படி முதலில் ரித்விக் எடுக்க அதில் சந்தோஷ் பெயர் வந்தது. “மாட்டினடா” என சிரித்தவன், “சந்தோ…ஷ்” என இழுத்து, “உன்னோட முதல் காதல் யார் மேல?” எனக் கேட்க திருதிருவென விழித்தான்.
வேறு வழியின்றி உண்மையை கூறுகிறேனென்று, “பத்தாவது படிக்கும் போது மைதிலி” என அமலாவைப் பார்த்தவாறு பாவமாக கூறினான். அநாயசமாக ரித்விக் சந்தோஷ் என்னும் வெடியை மைதிலி என்னும் திரியை கொண்டு பற்ற வைக்க, அமலா புகைந்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு அனைவருக்கும் சிரிப்பு தாளவில்லை. பாப்புவும் எதற்கென்றே தெரியாமல் அவர்களுடன் சேர்ந்து சிரித்து வைத்தாள்.
அடுத்ததாக ஷாலினி சீட்டை எடுக்க அதில் அபிஜித்தின் பெயர் வந்தது. இன்று மாலை தோட்டத்தில் நடந்ததை வைத்து மனதில் தோன்றியதை கேட்க நினைத்த ஷாலினி சிரிப்புடன், “அபி, நீ யாரையாவது காதலிக்கிறாயா?” என கேட்க, அவன் கண்கள் ஒரு நொடி தடுமாறி பாப்புவைக் கண்டு மீண்டது. இதை அனைவரும் கவனித்தாலும் அவனின் பதிலுக்காய் காத்திருக்க, உதட்டில் புன்னகை வழிய ஆமாமென்று தலையசைத்தான்.
“டேய் மச்சான் மாட்டிகிட்டயா” என அருகில் இருந்த பவன் அணைத்து விட, இந்த பக்கம் இருந்த பாப்புவும் அவனை அணைத்து விட்டாள். அவளின் செய்கையில் அனைவரும் சிரித்து வைக்க, அமலா ‘சமத்து’ என செல்லம் கொஞ்சினாள்.
சந்தோஷ அலை சற்று அடங்கவும், “யாருடா அது?” சந்தோஷ் குறுகுறுவென பாப்புவைப் பார்த்தவாறே கேட்டான். “ம்ஹீம் அவகிட்டதான் முதல்ல சொல்லனும். அப்பறம்தான் யாருண்ணு உங்ககிட்ட சொல்லுவேன்” என மெல்லிய குரலில் உரைத்தவன். “நீங்க விளையாடுங்க நான் வந்துடறேன்” என அறையை விட்டு வெளியேறி, தோட்டத்தின் புறம் சென்றான். அவனின் பின்னே பாப்புவும் நூல் பிடித்துச் செல்ல மற்றவர்கள் சிரிப்புடன் பார்வையைப் பரிமாறிக் கொண்டு விளையாட்டை தொடர்ந்தனர்
திடீரென்று ஷாலினி இப்படிக் கேட்பாள் என நினைக்காதவன் லேசாக மனதை தெரிவுபடுத்தி விட்டு வந்துவிட்டான்.
குளிர்க் காற்றை மீறியும் இன்பப் படபடப்பில் உடல் வெம்மையை உணர்ந்தது. ஆழமாக காற்றை உள்வாங்கி சுவாசித்தவன் வாய் வழியாக வெளிவிட்டான்.
அப்பொழுது மென்மையான கரம் ஒன்று அவன் இடுப்பின் ஊடே பயணித்து வயிற்றைக் கட்டிக் கொண்டது. ” ரொம்பக் குளிருது ஜித்து, இங்க வந்து ஏன் நிக்கற? வா உள்ள போகலாம்.” என்ற குரலில் வந்தது யாரென்று அறிந்தவன் இனிமையாக அதிர்ந்தான். இங்கு வந்ததிலிருந்து இப்படித்தான் அடிக்கடி அவனைக் கட்டிக் கொண்டு மூச்சடைக்க வைக்கிறாள் அவனின் பொம்மை.
“நீ உள்ள போடா, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” கரகரப்பாய் மொழிந்தான். “ம்ஹீம்…நீயும் வா” முதுகோடு அவள் மேலும் ஒன்ற, அவஸ்த்தையாய் நெளிந்தான்.
அவன் வெம்மையைத் தணிக்க நினைத்து, அவனைத் தழுவியக் குளிர்க் காற்று கூட தோற்று பின்வாங்கியது.
அதற்கும் மேல் கட்டுப்படுத்த முடியாமல், அவளை முன் இழுத்தவன் அவள் முகத்தைத் தாங்கி, “சொன்னா கேட்கமாட்டியா?”
அத்தனை நெருக்கத்தில் அவனைக் கண்டதும் திகைத்துப், பின் அவன் கண்கள் காட்டிய பாவனையில் தன்னைக் மறந்தவள் அவனையேப் பார்த்திருந்தாள்.
மஞ்சள் நிறத்தவளின் முகம் இங்கிருக்கும் சீதோஷ்னத்தின் விளைவாய் சிவந்திருக்க, இவன் பார்வையால் மேலும் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் அவளை அறியாமல்.
அவளின் இமை கொட்டாத பார்வையும், பருவ நிலையும், அவன் காதலும் சேர்ந்து மற்ற அனைத்தையும் மறக்க வைக்க, கட்டுப்பாடு தளர்ந்து அவள் கண்களைப் பார்த்தவாறே முன்னேறியவன் அவள் இதழ்களைச் சரணடைந்திருந்தான்.
ஏதோ உந்துதலில் அவனைப் பார்த்திருந்தவள் திடீரென அவள் இதழணைக்கவும் பெரியதாய் விழி விரித்து அவனைப் பார்க்க அவனும் காதலும், போதையும் கலந்த விழிகளுடன் பதில் பார்வை பார்த்தான்.
அவனின் ஒரு கை கீழிறங்கி அவள் இடையோடு பயணித்து இன்னும் நெருக்கமாய் இழுக்க, இயல்பாய் வயதுக்குரிய ஹார்மோன்கள் துள்ளிக் குதிக்க தானும் அவனை நெருங்கியவள் தன்னிரு கைகள் கொண்டு அவன் திண்ணிய புஜத்தை அழுத்திக் கொண்டாள். இயற்கையை சாட்சியாக வைத்து அங்கு நடக்கும் இரு மனங்களின் நேசப் பரிமாற்றத்தை மரங்களும் அசைந்து அங்கீகரித்ததுவோ? காற்று வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது.
சிறு பெண்ணாய் சேட்டை செய்துக் கொண்டிருந்தவளை இப்பொழுது அவளே அறியாமல் பருவ மங்கையாய் மாற்றிக் கொண்டிருந்தான் அவளின் ஜித்து.
அவள் எதிர்த்திருந்தாள் விட்டிருப்பானோ என்னவோ? அவள் உருகி கரைய, நிமிடங்கள் கழிந்து அவள் இதழ்களை விடுவித்தவன் மார்போடு இறுக்கமாய் அணைத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
இதயம் கரைந்துதான் தொலைந்து போவதைப் பார்க்கிறேன்… நான் பார்க்கிறேன்…
இந்த நிமிடம்தான் இன்னும் நீளுமா கேட்கிறேன்… என்னை கேட்கிறேன்…
இது என்ன இன்று வசந்த காலமா? இடைவெளி இன்னும் குறைந்து போகுமா?
இப்படி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா?
தொடரும்.