kamyavanam8

kamyavanam8

ப்ரத்யும்னன் இப்போது தன்னிலை உணர்ந்து மன்மதனாக அவன் இந்தக் காட்டில் ரதியின் நினைவு வர என்னென்ன செய்தான் என்பதை அவளுக்குக் காண்பித்தான்.
மரம் செடி கொடிகளைக் காட்டியவன், அங்கிருந்த பூக்களின் வாசத்தை நுகர வைத்தான்.

“இந்த வாசனை உனக்கு எதை நினைவு படுத்துகிறது ரதி?!” பூக்களைக் கையில் ஏந்தி நின்றான்.அவன் கையைப் பிடித்து அந்தப் பூக்களை நுகர்ந்தவள்,

“ம்ம்ம்ம்… இது நாம் முதல் முதலில் தனிமையில் சந்தித்தபோது தாங்கள் எனக்குக் கொடுத்த பூமாலையின் வாசம்” கண்மூடி அந்த நினைவிற்கு சென்றாள்.

“சரியாகச் சொல்லிவிட்டாய்” கையில் இருந்த பூக்களை அவள்மேல் தூவினான்.
மீண்டும் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அங்கே பழுப்புநிறமும் அல்லாமல் சிவப்பு நிறமும் அல்லாமல் பழங்கள் காய்த்துத் தொங்கின. அவற்றில் ஒன்றைப் பறித்து அவளுக்கு உண்ண கொடுத்தான்.

“இது நான் உங்களை விருந்துக்கு அழைத்தபோது உங்களுக்காகப் பிரத்யேகமாக கொடுத்தது.” அவளது நினைவுகள் இன்றும் அப்படியே இருந்தது.
“சரி தான் ரதி. இங்கிருக்கும் ஒவ்வொன்றிலும் நம் நினைவுகள் பதிந்துள்ளது. இங்கிருந்த காதலை தான் என் தந்தையான கிருஷ்ணர் உலகெங்கும் பரவச் செய்தார். ” அவன் சொல்லிக்கொண்டே இருந்தான்.

“இதெல்லாம் சரி. நான் உங்களிடம் கேட்டது வேறு.” தன் விருப்பத்தைச் சொல்ல,
“ம்ம் நினைவிருக்கிறது. அடுத்து அங்கு தான் போகப் போகிறோம்.” சிரித்துக் கொண்டே அவளைக் கூட்டிச் சென்றான்.

அந்த இடத்திற்கு செல்லும் முன்பே அங்கிருந்து வந்த வாசனை அவளை அது என்னவென்று யூகிக்க வைத்தது. இத்தனை காலம் அவளும் அந்த வேலயில் தான் ஈடுபட்டிருந்தாள். அதனால் அங்கிருப்பவை சமையலில் சேர்க்கும் வஸ்துக்கள் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டாள்.

“ரதி, இங்கிருப்பவை என்ன என்பது உனக்கு நன்றாகவே தெரியும். அதனால் உனக்கு ஒரு சோதனை!” சற்று பீடிகையுடன் ஆரம்பித்தான்.

“என்ன சோதனை? இவை அனைத்தும் உணவில் சேர்க்கப் படும் பதார்த்தங்கள்.” சாதாரணமாகக் கூறினாள்.

“உண்மை தான். இங்கே நான் பலவிதமான தானியங்களை விதைத்துள்ளேன். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. சுவையில் மட்டுமல்ல. குணத்திலும். அதை உனக்குப் பிறகு கூறுகிறேன்.இப்போது நீ அவற்றில் உனக்குக் கண்ணில் படும் முதல் பதினோரு வஸ்துக்களை என்னிடம் கொண்டு வந்து தர வேண்டும். அவற்றின் குணங்களை உன்னோடு நான் சேர்த்து விடுவேன். அது உனக்கு அனைத்து பிறவிகளிலும் துணை இருக்கும்.” அவளிடம் அங்கிருந்த பெரிய இலைகளைக் கொண்டு பை போலச் செய்து கொடுத்தான்.

வெறும் தானியங்களை வைத்து என்ன செய்ய முடியும் என யோசித்துக் கொண்டே, தேடல் வேட்டையில் இறங்கினாள்.

முதலில் அவளது கண்ணில் பட்டது வெள்ளை மிளகும் கருப்பு மிளகும். அதனைச் செடியிலிருந்து ஒரு கையளவு பறித்து அந்த இலைபையில் போட்டுக் கொண்டாள்.
பிறகு சீரகம், பட்டை, சிவப்பு மிளகாய், மஞ்சள் என ஒவ்வொன்றாகப் பறித்துச் சேகரித்தாள்.

மொத்தம் பதினோரு வைகை சேர்ந்தவுடன் அதை எடுத்துக் கொண்டு ப்ரத்யும்னனிடம் சென்றாள்.

அவன் அங்கே எதுவும் இல்லாத மண் தரையில் தன் சக்தியால் தீமூட்டி வைத்திருந்தான்.

அந்தத் தீ கொழுந்து விட்டு விண்ணை தொடும் அளவு நீண்டு, பின் கோபத்தை குறைத்துக் கொண்டு மெல்ல மெல்ல தரை இறங்கியது.
ப்ரத்யும்னனின் உயரத்திற்கு ஏற்ப அது எரியும்போது , ரதி அவனிடம் தான் சேகரித்தவற்றைக் கொடுத்தாள்.

அதனை வாங்கிப் பிரித்துப் பார்த்தான். பின் மாயாவதியை ஏறிட்டுப் பார்த்து, ‘நீ நிச்சயம் என்னிடம் வந்து சேருவாய்’ என நினைத்துக் கொண்டான்.
அவள் கொண்டு வந்த பதினோரு வகை தானியங்களைத் தரையில் பரப்பி வைத்தான். அவற்றின் முன் அமர்ந்து மந்திர ஜபம் செய்து, ஒவ்வொன்றிலும் அவனுடைய எண்ணத்தைச் சிறிது சிறிதாக அனுப்பினான்.

ஒவ்வொரு தானியம், ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கும் குணத்தில் அவனது எண்ணத்தையும் ரதியின் எண்ணத்தையும் பதிக்க நினைத்தான்.
அப்படி செய்து, எத்தனை ஜென்மத்திற்கு பிறகும் இவர்களுக்குள் இருக்கும் உறவு நீடிக்கும்படி வேண்டினான்.

உலகில் இருக்கும் அனைத்து வாசனைப் பொருட்களும் அவன் சொல்படி கேட்கும். அப்படி இருக்க அவற்றையே அவன் தனக்கும் ரதிக்கும் பாலமாக அமைக்க நினைத்தான்.

அவன் செய்வது அனைத்தையும் ரதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் மந்திரங்களைக் கூறி முடித்ததும், அவளை அருகே அழைத்தான்.

“ரதி இந்த நெருப்பிற்கு முன் நின்று நீ சத்தியம் செய்.”

“என்னவென்று சத்தியம் செய்வது?” திரு திருவென விழித்தாள்.

” உங்கள் அனைவரையும் நான் மதிக்கின்றேன். உங்களை ஒரு நாளும் மறக்கமாட்டேன். நான் எப்போது உங்களை மனதார நினைத்து வேண்டினாலும் எனக்கு நீங்கள் உதவ வேண்டும். நான் உங்களை ஒரு போதும் மறக்கமாட்டேன். நீங்களும் என்னை மறக்காமல் இருக்க வேண்டும்… இப்படி சொல்” எனவும்
அச்சுப் பிசகாமல் அவள் அதே போன்று சொல்லி முடித்தாள்.

“நல்லது ரதி. இப்போது ஒவ்வொரு வஸ்துவாக எடுத்து நான் உடலில் தீண்டுவேன். பின்பு நீ அதை வாங்கி அந்தத் தீயில் போட வேண்டும்.” அவன் சொல்லவும், சரியெனத் தலையாட்டினாள்.

அவன் முதலில் மஞ்சளை எடுத்தான். அவளது தலையில் வைத்து விட்டு அவள் கையில் கொடுத்தான். மாயாவதி அதை இரு கைகளாலும் பெற்றுக்கொண்டு மனதில் வேண்டிவிட்டு தீயில் எறிந்தாள்.

அடுத்து அவளது நெற்றி, கண், மூக்கு, வாய், கழுத்து, மார்பு, இடை, கை, தொடை, காலென ஒவ்வொன்றாகத் தீண்டினான்.

அவன் தீண்டிய ஒவ்வொரு இடமும் அவளுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கியது.
அவனோடு அவள் கூடி இருந்த நாட்களை நினைவு படுத்தியது. எண்ணம் எங்கெங்கோ ஓடியது. நெருப்பில் எரிந்து கொண்டிருந்த அந்த வஸ்துக்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு புகை மூட்டத்தை உண்டாகியது.

அந்த இடத்தை நிரப்பியது. அதில் இருவரும் சூழப்பட்டு, அந்தப் புகைக்குள் மறைந்து போயினர்.

மன்மதன் கூறிய மந்திரமும் ரதியின் தற்போதைய நினைவுகளும் அவர்களைப் பிணைத்தது. அந்தப் புகை காற்றில் கலைந்து மறையும்வரை இருவரும் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக நின்றனர்.

தீ இன்னும் எரிந்து கொண்டிருந்தது. இருவரும் புது வித பந்தத்தில் இணைந்தது போல உணர, பிரத்யும்னன் அவளது தோள்களைப் பற்றினான். அவனது பார்வை அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனாலும் அவளுக்குள் பெரிய உறுத்தல் இருந்தது. இப்போது தான் அவனுக்குச் சாப விமோசனம் கிடைத்து பழைய உடல் கிடைத்திருக்கிறது. அதில் மேலும் ஒரு பாவம் செய்ய அவள் விரும்பவில்லை.

பிரத்யும்னன் அவளது எண்ணத்தை நன்றாக உணர்ந்தான்.

“ரதி!” தோள்களைப் பற்றியவாறே அவளை உற்று நோக்க,

“அது தான் இப்போது பிரச்சனை.” அவனது கைகளை மெல்ல விலக்கினாள்.

“நீ நினைப்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்சனையே அல்ல.” அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.

“இல்லை. உங்களுக்குத் தான் புரியவில்லை. நானும் நீங்களும் ரதி மன்மதன் என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் இந்த உலகம் நம்மை வேறு விதமாகப் பார்க்கும்.” அழுத்தமாகக் கூறினாள்.

“எனக்கு என்றோ ஒரு நாள் அழியப் போகும் இந்த உலகத்தைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை ரதி. எத்தனையோ யுகங்கள் காத்திருந்து உன்னை அடைந்திருக்கிறேன். என்னால் உன்னைப் பார்த்துக் கொண்டு மட்டும் வாழ முடியுமா? அதுவும் நீ என்னை வளர்த்தவள் என்ற நினைப்புடன்? அது கொடுமை. தெரியாமல் இருந்த வரை எனக்குள் ஒன்றும் இல்லை. இப்போது தெரிந்த பிறகு … என்னால் இயலாது ரதி!” அவனது குரல் தேய்ந்தது.

“உங்களிடம் நான் ஒன்று கூற வேண்டும்.” அவனுக்கு நேர் எதிரே சென்று நின்றாள்.
என்னவென்பது போல அவளைப் பார்க்க,

“இந்தக் காம்யவனத்திற்கு வரும் முன்பே, உங்களை என்னால் ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து பார்க்க முடியவில்லை. நாரதர் உங்களைச் சிறு பிள்ளையாக என் கையில் கொடுத்தபோது, உங்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றேன். ஆனால் என்னால் உங்களை வளர்க்கும்போது எனக்குத் தாயுணர்வு வரவில்லை.
உங்களது பருவ வயதில் நீங்கள் வேறு பெண்களிடம் பேசினால் என் மனம் பொறுக்காது. அது எப்படிப் பட்ட உணர்வு என்று எனக்குத் தெரியவில்லை.
உங்களது அழகைக் கண்டு நான் பலமுறை மனதில் ரசித்திருக்கிறேன். ஆனால் வயது, நமக்குள் இருந்த உறவு என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கும். மிகவும் சிரமப் பட்டு அதை அடக்கிக் கொள்வேன். பல முறை என் மன உறுதியை பிடித்து வைக்கும்படி அந்த ஈசனிடம் வேண்டிக் கொள்வேன்.

அப்படி இருந்த நான், இன்று தான் அவை அனைத்திற்கும் என்ன காரணம் என்பதை நான் உணர்ந்தேன். நீங்களும் நானும் காதலர்கள், காந்தர்வ மனம் செய்து கொண்டவர்கள் என்ற உண்மை விளங்கினாலும், நான் எடுத்திருக்கும் இந்தப் பிறப்பிற்கு அந்த வாழ்வை வாழ முடியாது.

பார்க்கும் ஒவ்வொருவருக்கும் சென்று நம் உறவை விளக்கவும் முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக என் மனம் இதை ஏற்றுக் கொள்ளா மறுக்கிறது.
அதனால்…!” சொல்லமுடியாமல் தவித்தாள்.

அவள் கூறிய அனைத்தையும் நிதானமாகக் கேட்டவன், அவள் அடுத்துக் கூற இருப்பதை யூகிக்க முடியாமல் அவளிடமே கேட்டான்.
“அதனால்??”

“அதனால் நாம் என்னுடைய அடுத்த ஜென்மத்தில் நம்முடைய வாழ்வைத் தொடரலாம். இந்த ஜென்மத்தை நான் வெறுக்கிறேன். இருந்தாலும் உங்களுக்கு இனி அழிவும் இல்லை பிறப்பும் இல்லை. நான் ரசித்த இந்த உருவத்தை மீண்டும் காண நான் விரைந்து வருகிறேன். எனக்கு விடை கொடுங்கள்.” பேசிக்கொண்டே அவள் பின்னால் நகர்ந்தாள்.

“மாயா..நில்..எங்கே போகிறாய்?” அவனது இதயமும் கண்களும் கலங்க ஆரம்பித்தது.

“நான் மீண்டும் இந்தத் தீக்கு என்னை இறையாக்க போகிறேன். மீண்டும் நான் இதே காட்டில் உங்களைச் சந்திப்பேன். விதி நம்மை நிச்சயம் ஒன்று சேர்க்கும். என்னைத் தடுக்காதீர்கள்.வருகிறேன்.” அடுத்த நொடி அவன் பேசுவதைக் கேட்கக் கூட அவள் அங்கு இல்லை.

வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே தீக்குள் சென்றுவிட்டாள்.
எதுவும் செய்ய முடியாமல் உயிர் கிழியும் அளவிற்கு ஓலமிட்டு கதறினான் அவளது உண்மையான அன்பான காதலன். அந்தக் காடே அவளது மறைவை நினைத்துக் கலங்கியது. பித்துப் பிடித்துப் போனான் பிரத்யும்னன்.

error: Content is protected !!