Kanavu 20

கனவு – 20

ஆஷ்ரிதா மற்றும் அனேகன் திட்டத்தின் படி அம்ரிதாவை அனுப்பி வைத்துவிட்டு இருவரும் சந்தித்தனர்.

“ரொம்ப நாளைக்கு அப்பறமா அம்மு விஷயத்த மறுபடியும் கையில எடுத்துருக்கோம். இவ்வளவு டிலே ஆனது என்னால தான… சாரி அனேகன்” – ஆஷ்ரிதா.

“நோ அச்சு… உன்னோட மென்டல் ஹெல்த் –ம் எங்களுக்கு முக்கியம். நீ எதும் நினைச்சிக்காத” – அனேகன்.

“பொன்னம்மா இறந்ததுக்கு அப்பறம் வாழ்க்கையில எவ்வளவு சேஞ்சஸ் இல்ல அனேகன்?” – ஆஷ்ரிதா.

“ஆமா… அதுக்கு முன்னால என்ன மரியாதையா சார், டாக்டர் –னு கூப்பிடுவ. இப்ப எல்லாம் பேர சொல்லி கூப்பிடுற… ஹாஹா” சரியான நேரம் பார்த்து பலி தீர்த்துக்கொண்டான் அனேகன்.

“நீங்க அப்போ எல்லாம் முறைச்சிட்டே திரியிவீங்களே! உங்கள பார்த்தாலே பயமா இருக்கும். இப்ப தான் ஃப்ரெண்ட்லியா இருக்கீங்க” – ஆஷ்ரிதா.

“ஓ… அப்ப மரியாதை வேணும்னா முறைச்சிட்டே இருக்கனுமா?” – மீசையை முருக்கினான் அனேகன்.

“இனி நீங்க முறைச்சாலும் மரியாதை எல்லாம் வராது… சிரிப்பு வேணும்னா வரும்” புன்னகை முகமாய் கூறினாள் ஆஷ்ரிதா.

“ஹாஹா… ஜஸ்ட் ஃபார் ஃபன் அச்சு… நாம ஸ்டார்ட் பண்ணலாமா?” – அனேகன்.

“ஓ எஸ்” என கையில் வைத்திருந்த தன் கைப்பையை அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு இரண்டு மெழுகுவர்த்தியின் வெளிச்சமே இருக்கக்கூடிய அந்த அறைக்குள் அனேகனுடன் சென்ற ஆஷ்ரிதா அங்கு இருந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்துக்கொண்டாள்.

“நல்லா சாஞ்சி உட்கார்ந்துக்கோ அச்சு” என்று அனேகன் கூற தன் உடலின் பாரம் மொத்தத்தையும் அந்த நாற்காலியிடம் ஒப்படைத்து சவுகரியமாக அமர்ந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்” – அனேகன்.

“கேமராவ ஆன் பண்ணுங்க அனேகன். பின்ன நான் என்ன பேசினேன்னு எப்படி தெரிஞ்சிக்கறது?” – ஆஷ்ரிதா.

“எல்லாம் ஆன் பண்ணியாச்சு அச்சு. நான் சொன்ன வாக்கு தவறமாட்டேன்” – அனேகன்.

“ஓகே ஓகே… ஸ்டார்ட் பண்ணலாம்” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“யா… ரிலக்ஸ்… கண்கள மூடி உன் மனச ரொம்ப அமைதியா வை… இப்ப நான் ரெகுலர் இண்டர்வல் –ல வன் –ல இருந்து ட்வெண்டி வரை எண்ணுவேன். என்னோட ஒவ்வொரு கவுண்ட் –க்கும் உன்னோட மனம் ஆழ்கடல போல டீப் –ஆன அமைதிக்கு போகப்போகுது” என்று ஏகாந்த குரலில் அனேகன் பேசத் தொடங்க, ஆஷ்ரிதாவின் மனமோ நீண்ட அமைதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

“வன், …, டூ, …, த்ரீ…, – இடைவெளி விட்டு அனேகன் எண்ணத் தொடங்கினான்.

“அமைதியா இருக்கு… உன் மனம் இப்ப ரொம்ப அமைதியா இருக்கு… அத ஃபீல் பண்ணுறியா ஆஷ்ரிதா” – அனேகன்.

“ம்ம்ம்… ஆமா… அமைதியா இருக்கு” – கண்களை மூடியவாறு அமைதியாய் சொல்லிக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“குட்… கொஞ்சம் கொஞ்சமா… கொஞ்சம் கொஞ்சமா உன்னோட லைஃப் –ல பின் நோக்கி பயணம் பண்ணுறோம் நாம இப்ப… சொல்லு, என்ன பார்க்குற இப்ப?” – அனேகன்.

“அம்மு” – ஆஷ்ரிதா.

“குட்… சொல்லு” – அனேகன்.

“அம்மு… அம்மு இருக்க என் கூட” – ஆஷ்ரிதா.

“யா… குட்… எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்?” – அனேகன்.

“கார் –ல… அம்மு என்ன கார் –ல கூட்டிட்டு போறா” – ஆஷ்ரிதா.

“கார் –ல போறீங்களா? வெரி குட்… எங்க போறீங்க?” – அனேகன்.

“ஹோட்டல் போறோம்” – அனேகன்.

“வெரி குட்… அம்மு ஏதோ சொல்லுறாளே உன்கிட்ட… என்ன சொல்லுறா?” – அனேகன்.

“பொன்னம்மா –வ பத்தி யோசிக்காம ஜாலியா இருக்க சொல்லுறா” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… இப்ப இன்னும் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி போறோம். என்ன பார்க்குற நீ… சரியா சொல்லு பார்க்கலாம்” என்று அனேகன் கேட்க கேட்க சிறு சிறு படிகளாய் அவள் கடந்து வந்த நாளை அலசிய அனேகன் அவளது ரிக்‌ஷா பயணத்திற்கு அழைத்து வந்தான்.

“ஒரு ரிக்‌ஷா –ல ஏறுறேன்” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… ரிக்‌ஷாவ யாரு ஒட்டுறா?” – அனேகன்.

“ஒரு பையன்” – ஆஷ்ரிதா.

“அந்த பையன் என்ன சொல்லுறான் உன்கிட்ட?” – அனேகன்.

“அந்த பையன் சொல்லல” – ஆஷ்ரிதா.

“அப்படியா? அப்ப யாரு சொல்லுறாங்க?” – அனேகன்.

“யாரோ… யாரோ எங்கயோ கூட்டிட்டு போறாங்க” – ஆஷ்ரிதா.

“ரிக்‌ஷா உள்ள தானே இருக்குற. வேற யாரு வந்து கூட்டிட்டு போறாங்க உன்ன? கனவு காணுறியா?” – அனேகன்.

“ம்ம்ம்… ஆமா… கனவு –ல யாரோ கூட்டிட்டு போறாங்க” – ஆஷ்ரிதா.

“ஓ… சரி சரி… அங்க என்ன பார்க்குற ஆஷ்ரிதா?” – அனேகன்.

“அழுக்கான அரண்மணை, பெரிய கதவு, வெளிச்சமா ஒளி பரவியிருக்கு ஒரு இடத்துல” – ஆஷ்ரிதா.

“என்ன ஒளி அது?” – அனேகன்.

“தெரியல… அந்த பையன் தொடறான். அது மறைஞ்சி அங்க ஒரு புக் இருக்கு” – ஆஷ்ரிதா.

“என்ன புக் மா?” – அனேகன்.

“அது நம்ம ஜென்ம சாசனமாம்” – ஆஷ்ரிதா.

“அப்படியா? யாரு சொன்னா அப்படி?” – அனேகன்.

“அர்ஜுன்” – ஆஷ்ரிதா.

“அர்ஜுன் –ஆ” – அனேகன்.

“ஆமா. அர்ஜுன் தான் சொன்னான்” – ஆஷ்ரிதா.

“அப்படியா சரி. வேற என்ன சொல்லுறான்” – அனேகன்.

“ஒத்துமையா இருந்த உயிர் ஒத்தையில் விட்டுப்போட்டு ஓரமா போயிடுச்சு…
ஒத்தையா நின்ன உயிர் ஒத்துமையா இருக்கையில ஒன்னுமில்லாம ஆகிருச்சு…
ஒன்னுக்கொன்னா சுத்துறது ஒன்னுமேல நாலு கண்ணா ஒட்டிக்கிட்டு ஆடிருச்சு…
ஓயாம ஓடுறது ஒசத்தியா நினைக்கும் ஒன்னு ஒசந்த இடம் சேர்ந்துருச்சு…” – ஆஷ்ரிதா.

“என்ன மா இது?” – அனேகன்.

“அர்ஜுன் சொன்னது” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… வேற என்ன சொன்னான்?” – அனேகன்.

“வேற சொல்லல… முழிச்சிட்டேன். கனவு போய்டுச்சு” – ஆஷ்ரிதா.

“ஓகே மா. வெரி குட். இப்ப ஒரு பத்து வயசுக்கு முன்னாடி போறோம். இப்ப என்ன பண்ணுறீங்க?” என்று சில வருடம் வருடமாக குறைத்து அவள் கருவாய் இருந்த நாட்களுக்கே அழைத்து செல்கிறான் அனேகன்.

“இப்ப என்ன பார்க்குறீங்க ஆஷ்ரிதா?” – அனேகன்.

“ஒன்னும் பாக்கல” – ஆஷ்ரிதா.

“ஏன் மா ஒன்னும் பார்க்கல?” – அனேகன்.

“இருட்டா இருக்கு” – ஆஷ்ரிதா.

“இருட்டா இருக்கா? ஏன் இருட்டா இருக்கு? எங்க இருக்கீங்க?” – அனேகன்.

“அம்மா வயித்துக்குள்ள” – ஆஷ்ரிதா.

“ஓ கருவறையில இருக்கீங்களா? வெரி குட். பயமா இருக்கா ஆஷ்ரிதா?” – அனேகன்.

“இல்ல… அம்மு இருக்கா” – அனேகன்.

“வெரி குட்… இப்ப அப்படியே இன்னும் முன்னாடி போறோம். உங்களோட முந்தைய பிறப்புக்கு போறோம். எல்லாம் நியாபகம் வருது பாரு… வருது பாரு… அப்படியே சொல்லிட்டு வாங்க, என்ன பார்க்குறீங்க? அப்படியே சொல்லிட்டே வாங்க பார்ப்போம்” – அனேகன்.

“இரத்தம்” – கண்களில் கண்ணீர் வடிந்தது ஆஷ்ரிதாவுக்கு.

“இரத்தமா? எங்க வருது இரத்தம்?” – அனேகன்.

“கழுத்துல வருது… வலிக்குது” – துடித்துக்கொண்டே கூறினாள் ஆஷ்ரிதா.

“ஒன்னுமில்ல… இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே… சரியாகிடும்… ரிலக்ஸ்… ரிலக்ஸ்” – அனேகன்.

“செத்துப்போய்ட்டேன்” – ஆஷ்ரிதா.

“எப்படி மா? என்ன ஆச்சு?” – அனேகன்.

“கார் –க்கு அடியில படுத்திருந்தேன். டயர் கழுத்துல ஏறிடுச்சு” – அழுதுக்கொண்டே கூறினாள் ஆஷ்ரிதா.

“இட்ஸ் ஓகே மா. ஒன்னும் இல்ல… ரிலகஸ்… அடுத்து யாராவது பார்த்தாங்களா உன்ன?” – அனேகன்.

“ம்ம்ம்… அழுறா” – ஆஷ்ரிதா.

“யாரு மா அழுறா?” – அனேகன்.

“சகி” – ஆஷ்ரிதா.

“அப்படியா? சகிக்கு உன்ன ரொம்ப பிடிக்குமா?” – அனேகன்.

“ம்ம்ம்… எனக்கும் அவள ரொம்ப பிடிக்கும்” – ஆஷ்ரிதா.

“வெரி குட். இப்ப இன்னும் ஒரு வருஷம் முன்னாடி போறோம். இப்ப என்ன மா பண்ணுற நீ?” – அனேகன்.

“பிஸ்கட்… பிஸ்கட் சாப்பிடுறேன்” – ஆஷ்ரிதா.

“ஓ பிஸ்கட் –னா பிடிக்குமா உங்களுக்கு?” – அனேகன்.

“ம்ம்ம்” – ஆஷ்ரிதா.

“ஓகே. குட். இப்ப உங்க பேரு என்ன? எப்படி கூப்பிடுறாங்க உங்கள?” – அனேகன்.

“ஜூலி” – ஆஷ்ரிதா.

“ஓ குட்… ஜூலி –னு கூப்பிடுறாங்களா உங்கள? நீங்க என்னவா இருக்கீங்க? சொல்லுங்க பார்ப்போம்” – அனேகன்.

“நாய்” – ஆஷ்ரிதா.

“ஓ நாய் –ஆ இருக்கீங்களா?? எந்த ஊருல இருக்கீங்க” – அனேகன்.

“தெரில… வயல் இருக்கு. சகி வந்து என்ன தூக்கிட்டு போறா” – ஆஷ்ரிதா.

“சகி தான் தூக்கிட்டு போறாலா? நீங்க பயப்படலையா?” – அனேகன்.

“இல்ல. நான் குட்டி நாய். அவ என்ன கொஞ்சிட்டே தூக்கிட்டு போனா. ஜூலி –னு பேரு வச்சா” – ஆஷ்ரிதா.

“வெரி குட். ஜூலிக்கு யாரெல்லாம் பிடிக்கும்” – அனேகன்.

“சகி” – ஆஷ்ரிதா.

“சகி –அ மட்டும் தான் பிடிக்குமா?” – அனேகன்.

“ம்ம்ம” – ஆஷ்ரிதா.

“சரி. சகி கூட யாருக்கு இருக்காங்க இப்ப?” – அனேகன்.

“அர்ஜுன் விளையாடிட்டு இருக்கான்” – ஆஷ்ரிதா.

“அர்ஜுன் யாரு மா?” – அனேகன்.

“தம்பி” – ஆஷ்ரிதா.

“சகி –யோட தம்பியா?” – அனேகன்.

“ம்ம்ம்” – ஆஷ்ரிதா.

“அவன பிடிக்குமா உனக்கு?” – அனேகன்.

“பிடிக்காது” – ஆஷ்ரிதா.

“ஏன் பிடிக்காது?” – அனேகன்.

“சகி –ய என் கூட இருக்க விட மாட்டான். கூட்டிட்டு போய்டுவான்” – ஆஷ்ரிதா.

“ஓ… அதனால பிடிக்காதா? ஓகே. ரிலக்ஸ்… ரிலக்ஸ்… சகி –க்கு உன்ன பிடிக்குமா அர்ஜுன் –ன பிடிக்குமா?” – அனேகன்.

“ஷ்யாம்” – ஆஷ்ரிதா.

“யாரு அது?” – அனேகன்.

“சகி கல்யாணம் பண்ணிக்கப்போறா” – ஆஷ்ரிதா.

“அப்படியா? உனக்கு புடிச்சிருந்துதா அவர?” – அனேகன்.

“நான் குலைக்கிறேன்” – ஆஷ்ரிதா.

“யார பார்த்து குலைக்கிறீங்க?” – அனேகன்.

“ஷ்யாம் –அ பார்த்து” – ஆஷ்ரிதா.

“ஷ்யாம் –அ பார்த்து ஏன் குலைக்குறீங்க? அவர பிடிக்கலையா உங்களுக்கு?” – அனேகன்.

“புதுசா இருக்காரு” – ஆஷ்ரிதா.

“புதுசா இருக்குறதால குலைச்சீங்களா? ஓகே மா. ரிலக்ஸ்… ரிலக்ஸ்… இப்ப மறுபடியும் இந்த ஜென்மத்துக்கே திரும்பி வர்றோம். ஆஷ்ரிதாவா வர்றோம். ரிலக்ஸ்… மனசு ரொம்ப அமைதியா இருக்கு. ரிலக்ஸ். ரிலக்ஸ்.” – என்று வெற்றிகரமாக தன் இலக்கை அடைந்து திரும்பினான் அனேகன்.

ஆஷ்ரிதாவை மீண்டும் தன்னிலைக்கு திருப்பி சிறிது ஓய்வுக் கொடுத்து, பின் ஹிப்னாட்டிஷம் செய்யும் பொழுது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போட்டு காண்பித்தான் அனேகன்.

“ஓ மை காட்… இட்ஸ் ஷாக்கிங் அனேகன். நான் நாயா பொறந்தேனா? அதுக்கு தான் அன்னைக்கு என்ன அவ வளர்த்த நாய் –னு சொன்னீங்களா? நான் கூட என்ன திட்டுறீங்களோனு நினைச்சி கோவப்பட்டுட்டேன். சாரி…” என்றாள் ஆஷ்ரிதா.

“தெரியாம தானே கோவப்பட்ட. நானும் கோவத்துல தான் அன்னைக்கு அத சொன்னேன்” – அனேகன்.

சிரித்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“நீ எதுக்கு எப்ப பார்த்தாலும் என்கிட்ட எரிஞ்சி எரிஞ்சி விழுந்தனு இப்ப தெரியுதா உனக்கு?” என கேட்டுக் கொண்டே காஃபி கலக்கி எடுத்து வந்தான் அனேகன்.

“எதுக்கு??” – ஆஷ்ரிதா.

“போன ஜென்மத்துலயும் என்ன பார்த்தாலே குலைச்சிட்டு தான் இருந்துருக்க” என்றபடி அவளிடம் காஃபி கப்பை அனேகன் நீட்ட, அதை வாங்காமலே

“இப்பவும் குலைக்குறேன் –னு சொல்லுறீங்களா?” – சிரித்துக்கொண்டே முறைத்தும் வைத்தாள் ஆஷ்ரிதா.

“நான் சொல்லலப்பா!” – அனேகன்.

“அதான் சொல்லிட்டீங்களே!” – ஆஷ்ரிதா.

“காஃபியை வாங்கலாமே… கை வலிக்குது” – அனேகன்.

“ஹாஹா…” சிரித்தபடி காஃபி கப்பை வாங்கியவள்,

“சரி, அப்ப அர்ஜுன் அம்ரிதாவோட போன ஜென்மத்து தம்பியா?” என கேட்டாள்.

“யஸ்… உங்களுக்கு புரிய வைக்க தான் என் மச்சான் உன்ன நினைவுகள் வழியா கடத்திட்டு போய்ருக்கான். உன்னால புரிஞ்சிக்க முடியல” – அனேகன்.

“மிஸ்டர். ஷ்யாம். இப்ப கூட அவன் சொன்ன விஷயங்கள என்னால புரிஞ்சிக்க முடியல. உங்க மச்சான் என்ன சொன்னாருனு நீங்களே சொல்லுறீங்களா எனக்கு?” – ஆஷ்ரிதா.

“ஹாஹா… ஷ்யூர்… நல்லா கவனி. முதல்ல அர்ஜுன் சொன்னது, *ஒத்துமையா இருந்த உயிர் ஒத்தையில் விட்டுப்போட்டு ஓரமா போயிடுச்சு* அதாவது, ஒற்றுமையா யசோதா அம்மாவோட அன்பா இருந்த உன் அப்பா, உன் அம்மாவ தனியா விட்டு ஓரமா போய்ட்டாரு. அதாவது உங்கள விட்டு ஒதுங்கி போய்ட்டாரு. இரண்டாவது, * ஒத்தையா நின்ன உயிர் ஒத்துமையா இருக்கையில ஒன்னுமில்லாம ஆகிருச்சு* அப்படீன்னா, உன் அம்மா தனி ஆளா நின்னு உன்னையும் அம்முவையும் வளர்த்து நீங்க மூனு பேரும் ஒன்னா இருந்த சமயம் உங்க அம்மா இறந்துட்டாங்க. புரியுதா?” என அனேகன் கேட்க, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆஷ்ரிதா “ம்ம்.. புரியுது” என்கவும் தொடர்ந்தான் அனேகன்.

“தென் *ஒன்னுக்கொன்னா சுத்துறது ஒன்னுமேல நாலு கண்ணா ஒட்டிக்கிட்டு ஆடிருச்சு* இது என்னை மென்ஷன் பண்ணுது” என்றான்.

“உங்களயா? எப்படி?” – ஆஷ்ரிதா.

“ஒன்னுக்கொன்னா சுத்துறது மீன்ஸ் நீயும் அம்முவும். ஒன்னுமேல நாலு கண்ணு அப்படீங்கறதுல ‘ஒன்னு’ –னு சொல்லுறது என்னை தான். என் மேல உன் கண்ணும் அம்முவோட கண்ணும் ஒட்டிகிச்சு –னு சொல்லுறான்” – அனேகன்.

“வாட்??” வேகமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஹே… நீ நினைக்கற மாதிரி இல்ல… உனக்கும் அம்முவுக்கும் நான் இன்ட்ரோ ஆகிட்டேன் –னு அர்த்தம்” – அனேகன்.

“அப்படி தெளிவா சொல்லனும். ம்ம்ம்… அடுத்தது என்ன?” – ஆசுவாசமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“அடுத்தது, * ஓயாம ஓடுறது ஒசத்தியா நினைக்கும் ஒன்னு ஒசந்த இடம் சேர்ந்துருச்சு* இது நீயும் திரவியமும்” – அனேகன்.

“நானும் திருவுமா? புரியல அனேகன்” – ஆஷ்ரிதா.

“அம்மு விஷயத்துல யாரு உனக்காக அடிக்கடி அலைஞ்சா?” – அனேகன்.

“திரு தான். ஆனா அவன் எனக்கு ஹெல்ப் பண்ண அலையல. உங்கள தப்பானவர் –னு எனக்கு ப்ரூஃப் பண்ணுறேன் –னு சொல்லி உங்க பின்னால தான் அலைஞ்சான். உங்களுக்கே தெரியுமே” – ஆஷ்ரிதா.

“யாரு பின்னால அலைஞ்சானோ, அம்மு விஷயத்துக்கு தானே அலைஞ்சான்?” – அனேகன்.

“ஆ… ஆமா” – ஆஷ்ரிதா.

“அவன் உசத்தியா நினைக்குறது யாரு….?” என இழுத்தான் அனேகன்.

“யாரு??” பட்டென கேட்டாள் ஆஷ்ரிதா.

“தெரியாத மாதிரி நடிக்காத அச்சு” – அனேகன்.

“நீங்க வேற… சும்மா இருங்க அனேகன். அவன் நினைக்கறதெல்லாம் நடக்கற காரியமா?” – ஆஷ்ரிதா.

“ஏன் அச்சு? அவன் உன்ன கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறதுல தப்பு என்ன இருக்கு?” – அனேகன்.

“புரிஞ்சு தான் பேசுறீங்களா அனேகன் நீங்க? என்ன கல்யாணம் பண்ணா என்ன யூஸ் அவனுக்கு? அவனோட லைஃப் –அ நான் கெடுக்க விரும்பல” தடாலடியாய் கூறினாள் ஆஷ்ரிதா.

“அவன் தன்னோட பெனிஃபிட் பார்க்கிறவனா இருந்தா எல்லா உண்மையும் தெரிஞ்ச அப்பறம் உனக்கு ப்ரப்போஸ் பண்ணியிருக்க மாட்டான் அச்சு” – அனேகன்.

“யஸ்… அவன் பெனிஃபிட் பார்க்கல. என் மேல உள்ள சிம்பதியில தான் கல்யாணம் பண்ணிக்கறேன் –னு சொல்லுறான்” – ஆஷ்ரிதா.

“அப்படி இல்ல அச்சு. அவன் உன்னோட ஃப்ரெண்டு தானே. அவன பத்தி நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?” – அனேகன்.

“அவன் என் ஃப்ரெண்டு தான் அனேகன். ஃப்ரெண்டா மட்டும் இருந்தா நல்லது… எல்லாருக்கும்… நான் கிளம்புறேன். அம்மு வந்திடுவா” என வேகமாக தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு வெயிட்” என வேகமாய் எழுந்தான் அனேகன்.

தன் நடையை நிறுத்திவிட்டு பின்னே திரும்பிப்பார்த்த ஆஷ்ரிதா “தேக்ஸ் ஃபார் தி காஃபி” என்றுவிட்டு வாசலை கடந்துவிட்டாள்.

பின் வீட்டிற்கு உள்ளே மறைந்திருந்த திரவியம் வெளியே வர, அவனை பார்த்து தன் தோள்களை குலுக்கினான் அனேகன்.

“சரி விடுங்க ப்ரோ. எனக்கு தெரியும் என் பேர எடுத்தாலே ஓடிடுவா –னு” என்றவாறு வந்து அமர்ந்தான்.

அவனருகில் சென்றமர்ந்த அனேகன் “ஆனா அவளுக்கு உங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு திரு” என்றான்.

“காமெடி பண்ணாதீங்க ப்ரோ. நான் என்னைக்கு கல்யாணம் பண்ணிகறேன் –னு சொன்னேனோ அன்னையில இருந்து என்ன பார்க்குறதே இல்ல. நான் இருக்குற இடத்துக்கு வர்றதும் இல்ல. அதனால தான இன்னைக்கு மறைஞ்சிருந்தாவது அவள பார்த்துக்கறேன் –னு உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன்” சிரித்துக்கொண்டான் திரவியம்.

“அட… சொன்னா நம்புங்க திரு. அவ உங்கள பிடிக்கல –னு சொல்லல. உங்க லைஃப் –அ கெடுக்க விரும்பல, உங்களோட நல்லது, இப்படி தான் பேசுறா” – அனேகன்.

“எப்படி யோசிக்கிறாளோ அது தெரியல. ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டேங்கறாளே ப்ரோ” சுணங்கினான் திரவியம்.

“கவலபடாதீங்க ப்ரோ. நானும் அம்முவும் உங்க பக்கம் தான். சீக்கிரமே நல்லது நடக்கும்” என்று திரவியத்தை தேற்றினான் அனேகன்.

(களவாடுவான்)

error: Content is protected !!