Kanavu 11

கனவு – 11

மால்-ஐ விட்டு வெளியே வந்தவள் மீண்டும் அனேகனுக்கு அழைப்புக் கொடுத்தாள். இன்னும் அவளது எரிச்சல் குறைவதற்கான வழி அங்கு பிறக்கவில்லை.

“இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல… இதே இரிட்டேஷனோட அவன போய் பார்த்தா நானே அவன கடிச்சி முழுங்கிடுவேன்… பேசாம சி.சி.டி.வி. வேலைய ஆரம்பிப்போம்” என்று வாய்விட்டு கூறியவள் அங்கு வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை கை அசைத்து நிறுத்தினாள்.

ஏற்கனவே அதிக அளவு சனங்களை ஏற்றி வந்த அந்த ஷேர் ஆட்டோ தட்டுத்தடுமாறி நின்றதில் அதன் பலவீனத்தை உணர்ந்தவள் ஏறவா வேண்டாமா என விழித்துக்கொண்டிருந்தாள்.

“ஏறு மா!! எத்தினி நேரம் வெயிட் பண்ணுவாங்க உன்கு” என்று கனைக்கத் துவங்கினான்.

“இல்ல ப்ரோ… இடம் இல்லை…” என்று இழுத்தவளின் மூளையில், இங்கு வரும்பொழுது நசுங்கிக்கொண்டும் திட்டுவாங்கிக்கொண்டும் வந்த ஷேர் ஆட்டோ பல்லை இளித்துக்கொண்டு நின்றது.

”இல்ல ப்ரோ… வேணாம்… நீங்க போங்க” என்று அங்கலாப்பாய் கூறினாள் ஆஷ்ரிதா.

“நமக்குனு வருது பாரு” என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த ஷேர் ஆட்டோ டிரைவர் வண்டியை கிளப்ப, தன்னை வேண்டாமென சொன்னவளின் முகத்தில் புகையை வாரி இறைத்தது அந்த ஆட்டோ. புகை நெடியால் இருமிக்கொண்டிருந்தவளை பின்னால் இருந்து ஒரு கை அழைக்க, திரும்பிப்பார்த்தாள் ஆஷ்ரிதா.

“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” என்றான் ஒரு பத்து வயது சிறுவன்.

“யாரு தம்பி நீ?” கேட்டாள் ஆஷ்ரிதா.

“நான் யாரா இருந்தா உங்களுக்கு என்ன? நீங்க போக வேண்டிய இட்த்துக்கு கூட்டிட்டு போறதுதான் என் வேலை. வாங்க” என்றவன் அவளது கையை பிடித்து தனது சைக்கிள் ரிக்‌ஷாவுக்கு அழைத்துச் சென்றான்.

“ஏறு கா” என்றான் அச்சிறுவன்.

பார்க்க முகம் சுளிக்கும் விதமாய் இல்லாமல் ஓரளவு சுத்தபத்தமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல் மேற்கூரையுடன் கூடிய குஷன் சீட் போடப்பட்டு இருந்தது அந்த சைக்கிள் ரிக்‌ஷா.

ஏறிக்கொள்ளலாம் என ஒரு மனம் கூறினாலும் இந்த சிறுவனா ஓட்டுனர் என அவள் இன்னொரு மனம் தடுமாறவே செய்தது.

“ஏறு கா… யோசிக்காத… வயித்து புலப்புக்கு ஏதாவது பண்ணிக் கொடு கா…” என்று அச்சிறுவன் கூறிட, அவனிடம் வேண்டாம் என்று சொல்ல மனமின்றி ஏறிக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“ஆஷ்ரிதா……” தூரத்தில் இருந்து குரலெழுப்பினான் திரவியம்.

“தம்பி… வேகமா வண்டிய எடு பா… சி.சி.டி.வி. கேமரா வாங்குற கடைக்கு போகனும்” என்று ஆஷ்ரிதா கூற, படு சுட்டியாக மிதிவண்டியை அழுத்தத்தொடங்கினான் அச்சிறுவன்.

“சத்தம் போடாம பக்கத்துல போய்ருக்கனும்” என தன் தலையில் அடித்துக்கொண்டவன் “அண்ணே… உங்க ஃபோன் கொஞ்சம் கொடுங்களேன்” என அருகில் இருந்த அந்த மால் –ன் செக்யூரிட்டி ஒருவரிடன் தொலைபேசியை வாங்கியவன் ஆஷ்ரிதாவின் இலக்கங்களை தட்டி அழைப்பு கொடுத்தான்.

ஆஷ்ரிதா புதிய இலக்கங்களைக் கண்டதும் முந்தைய தினம் சி.சி.டி.வி. கேமராவின் பிரத்யேக கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஒருவரிடம் பேசியது நினைவுக்கு வர, ‘இது அவரு கொடுத்த நம்பர் போலவே இருக்குதே’ என்று யோசித்தவள், அவர்தான் அழைப்பு கொடுக்கிறார் என்று எண்ணி, “அண்ணே.. உங்கள பார்க்கதான் வர்றேன்… நான் தான் சி.சி.டி.வி. கேமரா பத்தி விசாரிச்சது” என்றாள்.

“நான் திரு பேசுறேன்” என்றது குரல்.

“என்ன வேற நம்பர் வருது?” ஆஷ்ரிதா கேட்க,

“மேடம் கோபத்துல இருந்தா என் நம்பர் அட்டண்ட் பண்ண மாட்டீங்களே!!” என்று துடிப்பான உச்சரிப்போடு கூறினான்.

“எனக்கு வேலை இருக்கு… நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்… தொந்தரவு பண்ணாத” என்று சினந்து நின்றாள் ஆஷ்ரிதா.

“ஓகோ… மகாராணிக்கு வேலை இருக்கும்… நாங்க எல்லாம் வெட்டியா –ல இருக்கோம்…” கத்தியவனின் குரலை கேட்க விரும்பாதவள் சட்டென இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

“கட் பண்ணிட்டா… இவள என்னனு சொல்லி திட்டுறது… ச்சே… எப்படி உண்மைய புரியவைக்கிறது?? ‘அண்ணா… உங்கள பார்க்க தான் வர்றேன் – ஆம்…’ எவன் எவங்கிட்டயோ எல்லாம் நல்லா பேசுவா… நாம அவ நல்லதுக்கு சொன்னா ஏறாது காதுல…” புலம்பிக்கொண்டிருந்தவனின் பிடறியில் அப்பொழுதுதான் படார் என விழுந்தது சி.சி.டி.வி. கேமரா என்று ஆஷ்ரிதா சொன்ன வார்த்தை.

“யஸ்…” என உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவன் செக்யூரிட்டியிடம் அவரது தொலைபேசியை கொடுத்துவிட்டு “ரொம்ப தேங்க்ஸ் அண்ணே” என்றவாறு தனது பொக்கே ஷாப்பிற்கு சென்றான்.

“டேய் ஷ்யாம்… கொஞ்சம் பார்த்துக்கோ… நான் ஒரு டூ அவர்ஸ் –ல திரும்பி வந்திடுறேன்…” என சொல்லிவிட்டு தனது வருகை பதிவேட்டில் இரண்டு மணி நேரம் பெர்மிஷனுக்கான பதிவை பதிவு செய்துவிட்டு பார்க்கிங் –கை நோக்கி விரைந்தான்.

விரைந்தவன் ஓடிச்சென்று தன் ஸ்ப்லெண்டர் பைக்கில் இருபுறமும் கால் போட்டு லாவகமாக அமர்ந்த பின்னர் தனது ஐ.டி. கார்ட்டை கழற்றி, தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் –ன் இட பக்க பாக்கெட்டினுள் நுழைத்தான்.

“திரவியம் தம்பி… இத்தனை வேகமா எங்க ஓடுறீங்க??” பார்க்கிங் ஏரியாவின் செக்யூரிட்டி கேட்க,

“ஒரு சின்ன வேலை அண்ணே… இப்ப வந்திடுவேன்” என அவருக்கு பதிலைக் கொடுத்துவிட்டு தன் ஸ்ப்லெண்டரில் அதிவேகமாக பறந்தான்.

ஆஷ்ரிதாவும் திரவியமும் தீர்க்கமாக அவனை நினைத்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ வீடே அதிர அங்கு தும்மிக்கொண்டிருந்தான் அனேகன். அந்த சமயம் சரியாக அம்ரிதா உள்ளே நுழைய, மனோஜ் அவளை நோக்கி நடந்து வந்தான்.

வாசல் படி ஏறும் பொழுதே அனேகன் தும்மிக்கொண்டிருப்பதை கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டே வந்த அம்ரிதா, தன்னை நோக்கி வரும் மனோஜையும் கவனிக்காது அனேகனை அடைந்தாள்.

தான் அமர்ந்திருந்த நாற்காலியே அதிரும் வண்ணம் அடங்காமல் தும்மிக்கொண்டிருந்தவனை பார்த்த அம்ரிதா, “என்ன இப்படி தும்மிட்டு இருக்கீங்க??” என்று கேட்கவும் அவளை நிமிர்ந்துப் பார்த்த அனேகன் ஏதோ சொல்ல வர, மிஞ்சியது தும்மல் மட்டுமே.

“அடடே… இருங்க… சுக்கு தண்ணி போட்டுக் கொண்டுவர்றேன்” என நகரச்சென்றவளின் கரத்தினை பிடித்து நிருத்தினான் அனேகன். அவன் மேனியின் உஷ்ணம் அவளிடம் ஏதோ செய்தி உறைக்க, திரும்பி அவனுக்கு அருகிலேயே நின்றுக்கொண்டாள் அம்ரிதா.

இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனான மனோஜ் “பாஸ் –க்கு ஏற்கனவே மேடம் -அ தெரியும் போலயே… சரி அவரு சொல்லிப்பாரு” என்று மீண்டும் அவன் நின்றிருந்த இடத்திற்கே திரும்பினான்.

“சார்… ஹேவ் சம் வாட்டர்” என பக்கத்தில் நின்றிருந்தவன் தனது ஆறடி உடலை வளைத்து குனிந்து நின்றபடி கேட்க, அதை வாங்கி பருகிய அனேகன் “ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஓவர் தானே?” என கேட்டான்.

“யஸ் சார்… வீ க்ளியர்டு எவ்ரிதிங்” என்றான் அவன்.

“ஓகே… தென் கோ அஹேட் வித் யுவர் வர்க்ஸ்… நெக்ஸ்ட் மண்டே ஆஃபிஸ் வில் பிகின் அஸ் யூஸ்வல்… அம்ரிதா… கம் வித் மீ…” என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்து ஒரு அறையை நோக்கி நடக்க, சாவி கொடுத்த பொம்மை போல அவன் பின்னாடியே சென்றாள் அம்ரிதா.

“டன் சார்…” என்ற அந்த ஆறடி மனிதனும் கிளம்பிவிட, அவன் வாசல் தாண்டும் முன்னர் இடை மறித்த மனேஜ், “அவ்வளவு தானா?” என கேட்டான்.

“யெஸ் ப்ரோ” என்றான் அவன்.

“என்ன ப்ரோ….” என்று குழப்பமாய் மனோஜ் கேட்க,

“இது பெரிய இடம் ப்ரோ… இங்க எல்லாம் அப்படிதான்… ஏன், எதுக்குனு எல்லாம் நாம கேட்க்க்கூடாது… சரினு சொல்லிட்டு நகர்ந்திடனும்… வேலைக்கு புதுசு தானே… போக போக பழகிடும்… வாங்க கிளம்பலாம்” என்றுவிட்டு சென்றான்.

“என்ன டா நடக்குது இங்க?” மனோஜ் திகைத்து நின்றுக்கொண்டிருந்தான்.

தீ விபத்து என்று சொல்லப்பட்ட கொலை சம்பவத்தால் மோகனின் உடல் விவரிக்க இயலாத அளவு சேதாரம் அடைந்திருக்க, சம்பவ இடத்தில் இருந்து மோகனது உடல் நேரடியாக தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்திருந்தது. ஆகையால் வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் அனேகனை பார்த்து துக்கம் விசாரித்துவிட்டு உடனடியாக கிளம்பிக் கொண்டிருந்தனர். அம்ரிதா வருவதாக கூறியதால் அவளுக்காகவே காத்துக்கொண்டிருந்தான் மனோஜ்.

முந்தைய நாள் இரவில் இருந்தே அங்கு இருக்கும் மனேஜ் –க்கு நடப்பவை எல்லாம் வியப்பாகவே இருந்தது. பொதுவாக துஷ்டி வீடுகளில் நடக்கும் சடங்குகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை என்றாலும், சொந்தம் என சொல்லிக்கொண்டு வந்து, அனேகனுடன் அமர்ந்து, கண்ணீர் சிந்தி யாரையும் அப்பொழுதுவரை அவன் காணவில்லை. அன்று அவ்வீட்டை நிறைத்திருந்தது அவர்களது கம்பெனியின் எல்லா கிளையிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் சில பிஸ்னஸ் மேக்னட்கள் மட்டுமே.

அவர்களும் வந்தோமா, பார்த்தோமா, வேலை முடிந்ததென கிளம்பிவிட்டிருந்தனர். அம்ரிதாவும் அவனோடு உள்ளே சென்றாகிற்று. இனி இங்கு நமக்கென்ன வேலை என எண்ணிய மனேஜும் தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

“கம் அம்ரிதா” என்று அவளை அனேகன் அழைத்து செல்ல, அந்த அறையில் அழுது வீங்கிய முகத்தோடு அமர்ந்திருந்தார் அனேகனின் அம்மா. அம்ரிதா உள்ளே வந்ததும் அவளைக் கண்டு கூப்பாடுப் போட்டு ஓடி வந்தவர், கை எடுத்து கும்பிட்டு, என்னை “மன்னிச்சிடு மா” என்று சொல்ல வந்து, அதை முடிக்காமலேயே மயங்கி விழுந்தார்.

“அய்யோ… ஆண்டி…” என அம்ரிதா அவரை தாங்கிப்பிடிக்க, அனேகனோ “மாம்…” என அவரை தூக்கிக்கொண்டு கட்டிலில் கிட்த்தினான்.

என்ன ஆச்சு என்பது போல அனேகனை பார்த்துக்கொண்டிருந்தாள் அம்ரிதா. தன் தாயை கட்டிலில் கிடத்திவிட்டு திரும்பியவன், அம்ரிதாவின் விழிகளை ஒருமுறை உற்று நோக்கிவிட்டு, வீட்டின் வரவேற்பு அறைக்கு வந்து அமர்ந்தான்.

அனைவரும் கிளம்பலாம் என அவன் கூறியதும், அக்கணமே அனைவரும் அவ்வீட்டை விட்டு கிளம்பியிருந்ததால் வீடே மயான அமைதிக் கொண்டிருந்தது. உள்ளே அறைக்குள் நின்றுக்கொண்டிருந்த அம்ரிதாவுக்கு அப்பொழுதுதான் சுயநினைவு வர, தான் எங்கு நின்றுக் கொண்டிருக்கிறோம் என சுற்றும் முற்றும் பார்த்தவள் கட்டிலில் சோர்ந்துக்கிடந்த அனேகனின் தாயை கண்டதும் தான் மோகன் வீட்டிற்கு வந்தோம் என்பது நினைவிற்கு வந்தது.

வேகமாக அந்த அறையை விட்டு அவள் வெளியே வர, நடுக்கூட்த்தில் அனேகன் மட்டுமே அமர்ந்திருந்தான். ஒரு நிமிடம் நடப்பவை என்ன என விளங்காது தவித்த அம்ரிதா, அனேகனை நோக்கி “நீங்க…..” என்று இழுத்தாள்.

அவள் வீட்டிற்குள் நுழையும் போதே அனேகனை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு வர, அதுவே அவனுக்கு சாதகமாய் அமைந்திருந்தது. அவனது கண்களால் அவளுக்கு தங்கள் உறவின் அர்த்தத்தை அவன் கடத்தியிருக்க, அதன் விளைவாய் வந்த அக்கறையில் சுக்கு காபி போடுகிறேன் என்று சொன்னவள் தற்பொழுது நினைவு திரும்பிய நிலையில் அவன் முன்னே நின்றுக்கொண்டிருந்தாள்.

“நீங்க… உங்கள அன்னைக்கு ஆஃபீஸ் –ல…” என்று மீண்டும் இழுத்தாள் அம்ரிதா.

“ஆமா… நான் தான்” – அனேகன்.

“நீங்க எங்க இங்க?” – அம்ரிதா.

“என் வீட்டுல தானே நான் இருப்பேன்” – அனேகன்.

“வாட்…! உங்க வீடா??” – அதிர்ச்சித்தாள் அம்ரிதா.

“எஸ்” – அனேகன்.

“அப்டீன்னா… நீங்க… மோகன் சார்…” – கேள்விகள் தடுமாறின அம்ரிதாவிடத்தில்.

“ஹிஸ் சன்” – அனேகன்.

உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் அம்ரிதா. அவர்களது முதல் சந்திப்பன்று அனேகன் அவளை முத்தமிட்டது அவளுக்கு நினைவில் இல்லை என்றாலும் அவனது நறுமணத்தை முதன்முதலில் சுவாசித்த போதே, அவனது பின் பிம்பம் கண்டு ஏங்கிய போதே தன்னை அறியாமல் அவனை முழுதாய் தன் உயிருடன் கரைத்துவிட்டிருந்தவளுக்கு அவளையும் மீறி தோன்றியதெல்லாம் ஒன்று தான்.

“தான் பலிவாங்கத் துடித்துக்கொண்டிருந்த ஒருவனது மகனையா மனதின் இத்தனை ஆழத்தில் விதைத்திருந்தோம்” என்பது மட்டுமே.

அந்த கனநேரத்தின் மன ஓட்டம் தான், தான் அவனை விரும்பியிருக்கிறோம் என்பதை முழுதாய் உணர்ந்துக்கொண்டாள் அம்ரிதா.

வாழ்க்கை எனும் நாடகம் தன்னிடம் இன்னும் எத்தனை வேடிக்கை காட்டப்போகிறது என்று கலங்கி நின்றுக்கொண்டிருந்தவளை பார்த்து “டோண்ட் கெட் மேட் அம்மு… ஐ திங்க் யு ஆர் நாட் வெல்… வீட்டுக்கு போங்க… நாளைக்கு மீட் பண்ணலாம்” என்றவன் மேஜையில் இருந்து தனது அலைபேசியை எடுத்தான்.

பலமுறை வந்து தவறியிருந்த ஆஷ்ரிதாவின் அழைப்புகள் இருந்தன. அதை பார்த்துவிட்டு அம்ரிதாவையும் நிமிர்ந்து பார்த்தவன் “தீ டைம் கம்ஸ்” என்று புன்னகைத்துவிட்டு அந்த தொடு திரையில் எதையோ தட்டிட, அவனது டிரைவர் உள்ளே ஓடி வந்து “சொல்லுங்க அய்யா” என்றார்.

“இவங்கள அவங்களோட வீட்டுல ட்ராப் பண்ணிடுங்க” என்றான்.

“சரிங்க அய்யா” என்று டிரைவர் கூற, அம்ரிதா வாசலை நோக்கி நடந்தாள்.

“சகி” என்று புன்னகை மாறாமல் அழைத்தான் அனேகன்.

திடுமென அவனை திரும்பிப்பார்த்தவள், கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருந்த அவனது தோற்றத்தை தன் கண்களால் உள்வாங்கிட, அவனும் தன் விழியின் வழியே செய்தியை செம்மையாக அனுப்பிவிட்டு “பத்திரமா போய்ட்டு வா” என்றான்.

மால் பார்க்கிங் -ல் புறப்பட்ட திரவியத்தின் ஸ்ப்லெண்டர், அனேகனை அன்று சந்தித்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் -ல் தான் நின்றது. விபரீதம் நடந்த மறுநாள் என்பதால் அன்றும் அங்கு இரண்டு போலீஸ்கள் தங்கள் ஜீப்பில் அமர்ந்தவாறும், ஒருவர் ஒரு அடி தள்ளி நின்று வாக்கி டாக்கியில் எதையோ பேசியவாறும் நின்றிருந்தார்.

“இங்க சி.சி.டி.வி. கேமரா உண்டானு இவங்கள தாண்டி எப்படி போய் பாக்குறது” யோசனையில் நின்றிருந்தவனுக்கு என்ன செய்வதென அப்பொழுது பிடிபடவில்லை. அச்சமயம் ஒரு பெரியவர் உள்ளே வர, அவர் இந்த அப்பார்ட்மெண்ட் –ல் வசிப்பவரா என ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஆர்வமாய் இருந்தான் திரவியம். அந்த பெரியவர் மெல்ல மெல்ல நடந்துவர, எப்படி அவரிடம் பேச்சுக்கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தான் திரவியம்.

பிரபஞ்சம் அந்நேரம் அவனுக்கு உதவ எண்ணியதோ என்னவோ அந்த பெரியவர் தாமாகவே திரவியத்திடம் பேசத் தொடங்கினார். “தம்பி… என் வீடு நாலாவது மாடியில இருக்கு… கொஞ்சம் தலை சுத்துற மாதிரி தெரியுது பா… என்னை லிஃப்ட் –ல கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிக் கொண்டு போய் விடுறியா பா?” என கேட்டார்.

‘கிடைத்த வாய்ப்பை விடுவேனா?’ என எண்ணியவன் “வாங்க தாத்தா… நான் கூட்டிட்டு போறேன்…” என்றவன் போலீஸ் –க்கு சந்தேகம் வராமல் அந்த பெரியவருடன் மிந்தூக்கியை அடைந்தான்.

“ஏன் தாத்தா இந்த வயசான காலத்துல வெளியில தனியா போய்ட்டு வர்றீங்க?” என இரக்கம் நிறைந்த குரலோடு கேட்டான் திரவியம்.

“எவ்வளவு நேரம் தான் வீட்டுக்குள்ளையே இருக்க முடியும் தம்பி? பேர புள்ளைங்க ஸ்கூலுக்கு போய்டும், பையனும் மருமகளும் வேலைக்கு போய்டுவாங்க. ஒத்த கட்டையா வீட்டுக்குள்ள கிடக்க மாட்டாம அப்பப்ப காலார நடந்துட்டு வருவேன்” என்று அவர் கூறி முடிக்கவும் நான்காம் தளம் வந்துவிட மிந்தூக்கியின் கதவுகள் திறக்கப்பட்டு இருவரும் வெளியேறினர்.

அந்த முதியவருடன் அவரது வீட்டு வாசல் வரை சென்றவன் “தாத்தா… சாவியை கொடுங்க… நான் டோர்-ஐ ஓபன் பண்ணுறேன்” என சாவியை வாங்கி கதவை திறந்துவிட்டான்.

“உள்ளே வாங்க தம்பி! கொஞ்சம் தண்ணியாவது குடிச்சிட்டு போகலாம்” என்றவரிடம் தனக்கு அவரிடம் வேலை ஆக வேண்டியது உள்ளது என்பதை மனதில் கொண்டவன் அவர் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் உள்ளே சென்றான்.

“இங்கே உட்காருங்க தம்பி!” என்றவரிடம் “ஐய்யோ தாத்தா… நீங்க உட்காருங்க… தலை சுத்துதுனு சொன்னீங்க தானே” என கூறிவிட்டு அடுப்பங்கறை எங்கே என தேடினான் திரவியம்.

“சமையல் கட்டு அந்த பக்கம் தம்பி!” என்று அவர் கூறவும்,

“தேங்க்ஸ் தாத்தா!” என உள்ளே சென்றவன் அங்கிருந்த நீர் சுத்தீகரிப்பானில் இருந்து கோப்பைக்குள் சிறிது நீரை கடத்தியவன் தாத்தாவிடம் சென்று

“இந்தாங்க தாத்தா… தண்ணி குடிங்க” என்றான்.

தளர்ந்த கைகள் நடுங்கியபடி தண்ணீரை அவர் குடித்து முடித்ததும், மெல்லமாக தன் பேச்சைத் தொடங்கினான் திரவியம்.

(களவாடுவான்)