UUP–EPI 17

அத்தியாயம் 17

கோல்சிஸ்டோகினின் (cholecystokinin) எனும் ஹார்மோன் தான் நமது டைஜசன் மற்றும் உணவு உண்ணும் ஆவலை உண்டாக்கும் ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் குறையும் போதுதான் அதிக பசி ஏற்பட்டு உடல் பருமன் ஏற்படுகிறது.

 

“அம்மா, அழாதம்மா”

“எப்படிடி அழாம இருக்கறது? எனக்கு அப்படியே நெஞ்சை அடைக்கற மாதிரி இருக்குடி சண்மு! இனிமே எந்த எழவெடுத்த வேலைக்கும் நீ போக வேணாம். வீட்டுலயே இரு! வத்தலோ தொத்தலோ, கட்டையோ நெட்டையோ, எவன் கையிலாச்சும் உன்னைப் புடிச்சுக்குடுத்துட்டுத்தான் மறுவேளை எனக்கு” சொன்னவர் கண்ணில் இருந்து சரம் சரமாக கண்ணீர் இறங்கியது.

வெள்ளியன்று எப்பொழுதும் போல வேலை முடித்து ஊருக்குக் கிளம்பிய சண்மு பஸ் நிறுத்தத்துக்கு நடந்துப் போன வேளையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. அவள் அருகே உரசியபடி வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய ஆசாமி ஒருவன், அட்ரஸ் கேட்கும் சாக்கில் கிட்டே வர, அடுத்தவன் அவளது இடது பக்கம் வந்து நின்றுக் கொண்டான். இவள் சுதாரிப்பதற்குள் அலேக்காக கோழி அமுக்குவதைப் போல அமுக்கி அவளை அள்ளிப் ஆட்டோவில் போட்டுக் கொண்டு பறந்துவிட்டனர். திடீரென நடந்த இச்சம்பவத்தில் இவளுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. புத்தி நடப்பதை விளங்கிக் கொண்ட நொடி, கடுமையாக போராட ஆரம்பித்தாள் சண்மு.

“விடுடா, டேய் விடுடா என்னை!” என இவள் கை காலை உதறி கத்த, அதில் ஒருத்தன் விட்டான் செவுனி அறை ஒன்று. அதில் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது சண்முவுக்கு.

“பேசாம வந்தா, முடிச்சதும் பொழச்சிப்போன்னு அப்படியே விட்டுருவோம்! முரண்டு பண்ணா உருத்தெரியாம அழிச்சிருவோம். எப்படி வசதி?” என ஒருத்தன் கேட்க இன்னொருத்தன்,

“உன்னை ஒவ்வொரு நாளும் வேலை இடத்துல பார்த்துட்டேத்தான்டி இருக்கோம். எம்மாடி, என்னா ஒரு அழகு நீ! இப்படி ஓவர் அழகா இருந்தா தொட்டுப் பார்க்கனும்னு தோணுமா, இல்லையா? நீயே சொல்லு!” என கேட்டு கன்னத்தைத் தடவினான்.

அவளைப் பிடித்திருந்த இருவரும் வாட்டசாட்டமாக இருந்தனர். ஆட்டோ ஓட்டுபவன் எப்படி இருந்தான் எனக்கூட கவனிக்கும் நிலையில் இல்லை சண்மு.

அறை கொடுத்த வலியிலும், இருபக்கமும் இறுக்கமாகப் பற்றியிருந்தவர்களின் உடல் உரசிய உரசலிலும் சண்முவின் கண்களில் கண்ணீர் கரை புரண்டது.

“வி..விட்டுருங்க அண்ணா!” பயத்தில் நாக்கு மெலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள திக்கித் திணறி கெஞ்ச ஆரம்பித்தாள் சண்மு.

“அண்ணான்னா சொல்லுற? பாரு மச்சி அண்ணான்னு சொல்லி மூட்ட ஆப் பண்றா! வாயப் பொத்துடா மொதல்ல!” என ஒருத்தன் சொல்ல, இன்னொருத்தன் கர்ச்சிப் வைத்து சண்முவின் வாயை அடைத்தான்.

“நாங்க வேலைக்கு வந்த இந்த சில மாசத்துல, எத்தனை நாளா உன்னைப் பார்த்து பார்த்து ஏங்கியிருக்கோம் தெரியுமா? மண்ணும் மணலுமா கிடக்கற அந்தக் கம்பெனியில நீ ஒருத்தி தான் எங்கக் கண்ணுக்கு குளிர்ச்சியா குளு குளுன்னு தெரிஞ்ச! இத்தனை நாளா ஃபோலோ பண்ணதுல இன்னிக்குத்தான் வசமா தனியா மாட்டுன! உன் கெட்ட நேரம், எங்க நல்ல நேரம் ரோட்டுல ஒரு ஈ காக்கா இல்ல! மழை டைம்ல, எல்லாம் வீட்டுல அடைஞ்சிருப்பாங்க! நீ கவலைப்படாத கண்ணு! குளிருக்கு இதமா நாங்க ஒன்னுக்கு ரெண்டு பேரு இருக்கோம் உனக்கு!”

“டேய், என்னை கழட்டி விட்டுட்டீங்களே பாவிகளா!’ என ஆட்டோ ட்ரைவர் குரல் தர சண்முவுக்கு குலை நடுங்கிப் போனது.

“உனக்கு இல்லாமலா! கடைசி ரவுண்டு உனக்குத்தான்யா!” என இருவரும் சொல்லி நாராசமாக சிரிக்க, உள்ளுக்குள் ஒடுங்கிப் போனாள் இவள்.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” கதிரின் குரல் காதில் கேட்பது போல இருக்க, கண்களை மூடி தன்னை ஒரு நிலைப்படுத்த முயன்றாள்.

‘தப்பிக்கனும், எப்படியாவது தப்பிக்கனும்’ மனதிற்குள்ளே உருப்போட்டாள் சண்மு. வாய் அடைக்கப்பட்டிருந்தாலும் கை காலைக் கட்டாமல் தான் விட்டிருந்தார்கள். இருவரும் இறுக்கிப் பிடித்திருக்க, மீறி எங்கே ஓடி விடுவாள் எனும் எண்ணமாக இருக்கலாம்.

ஆட்டோ மெயின் சாலையைக் கடந்து காட்டுப்பாதைக்குள் பயணித்தது. மழை நேரம் வேறு இன்னும் அவ்விடத்தை இருட்டாய் காட்டியது.

“யோ ஆட்டோ, ஓரம் கட்டுய்யா! அடிச்ச சரக்கு, இப்போ அடி வயித்த முட்டிக்கின்னு நிக்கிது!” என ஒருத்தன் சொல்ல, ஆட்டோ ஓர் ஓரமாக நின்றது.

 

அவன் இறங்கி ஓரமாகக் போக, சண்முவைப் பிடித்திருந்த மற்றொருத்தனுக்கு அவளிடம் லேசாக சில்மிஷம் செய்துப் பார்க்கத் தோன்றியது.

கர்சிப்பை இவள் வாயிலிருந்து அகற்றி முத்தமிட வந்தவனை பலமனைத்தும் திரட்டி ஓங்கி விட்டாள் ஒரு எத்து. அதிர்ச்சியில் இருந்து அவன் சமாளிப்பதற்குள் ஆட்டோவில் இருந்து வெளியே பாய்ந்து கண் மண் தெரியாமல் ஓடினாள் சண்மு. பட்சி ஓடியதைக் கண்டு மூவரும் துரத்திக் கொண்டே வர, காட்டுக்குள் புகுந்தவள் சரசரவென ஒரு மரத்தில் ஏறி அப்படியே ஒடுங்கி அமர்ந்துக் கொண்டாள்.

தேடி வந்த மூன்று தடிமாடுகளும் காடெல்லாம் அலசியும் அவள் கையில் அகப்படவேயில்லை. தரையில் தேடியவர்களுக்கு நம் குரங்கு சேட்டை சண்மு மரம் ஏறி ஒளிந்திருப்பாள் என தோணவேயில்லை. காட்டை அலசியவர்கள் ஒரு கட்டத்தில் சலிப்படைந்து ஆட்டோவில் ஏறிப் போய் விட்டார்கள். இவள் மட்டும் விடிய விடிய பயத்துடன் அந்த மரத்திலேயே அமர்ந்திருந்தாள். அவளது பேக்கும் போனும் அவர்களிம் சிக்கி இருக்க, யாருக்கும் அவளால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பொழுது நன்கு புலர்ந்ததும், மெல்ல மரத்தில் இருந்து இறங்கினாள் பெண். இரவெல்லாம் பனியில் கிடந்ததில் உடம்பு நடுங்கியப்படியே இருந்தது. கை கால்களில் வேறு சிராய்த்து அங்கங்கே ரத்தம் எட்டிப் பார்த்தது. பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தவள், ஓட்டமும் நடையுமாக மெயின் ரோடுக்கு போனாள். வழியில் கடந்துப் போனவர்களைக் கண்டுக் கொள்ளவேயில்லை. தன்னுடன் வேலை செய்யும் அக்காவின் வீடு மெயின் ரோட் அருகே இருக்க, அங்குதான் போய் நின்றாள் சண்மு.

அந்தக் கோலத்தில் சண்முவைக் கண்டவர் பதற, இவள் முடிந்த அளவு திடமாக எல்லாம் சொன்னாள். போலிசுக்குப் போகலாம் என அவரின் கணவர் சொல்ல, முதலில் அம்மா பயப்படுவார் போன் செய்ய வேண்டும் என அவரின் போன் வாங்கி அம்மாவுக்கு அழைத்தாள்.

தம்பி ஹாஸ்டலில் தங்கிப் படிக்க, இவளும் ஹாஸ்டலில் தங்கி வேலை செய்ய, ஆத்திர அவசரத்துக்கு வீட்டுக்குப் போன் கனேக்‌ஷன் கொடுத்திருந்தனர். போன் எடுத்தவர் நடுங்கிய குரலிலே பேசினார். இவள் குரலைக் கேட்டதும் அப்படி ஒரு அழுகை. இரவெல்லாம் மகளைக் காணோமே, ஒற்றை மனுஷியாய் எங்குப் போய் தேட என தவித்தப்படியே அமர்ந்திருந்திருக்கிறார். பெண் பிள்ளை வாழ்க்கை என அக்கம் பக்கம் சொல்லவோ, போலிஸ் போகவோ வேறு பயம். அழுதாவாறே அவர் இருக்க, இவளுடன் வேலை செய்யும் அக்காவும் அவர் கணவரும் சண்முவை வீட்டில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

அவர்கள் இருவரும் எடுத்து சொல்லியும் போலிசுக்குப் போகவே கூடாதென கதறிவிட்டார் மீனாட்சி.

“ஏற்கவனே மாப்பிள்ளை தேட, இவ அப்பனால நாங்க கூனி குறுகி நிக்க வேண்டி இருக்கும். இது வேற சேர்ந்துட்டா இவள நான் எப்படி தம்பி கரை ஏத்துவேன் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு விட்டுரலாம். என் மக மானத்தோட பொழச்சு வந்ததே எனக்குப் போதும். தயவு பண்ணி வெளிய யார் கிட்டயும் இதப் பத்தி சொல்லிறாதீங்க” என அவர் கண்ணீர் வடிக்க, இவர்களும் சரியென கிளம்பி விட்டார்கள்.

மகளைக் கட்டிக் கொண்டு உடல் நடுங்க அழுதவரை, சண்முதான் சமாதானப்படுத்தும்படி ஆனது. அன்று பகலே விஷயம் கேள்விப்பட்டு கண்ணன் வந்திருந்தான். கூடவே அவனுடன் ஆஜானுபாகுவாக, பணக்காரக்களை முகத்தில் சொட்ட, சிரித்த முகத்துடன் பிரதாப்பும்.

ஹைட்ரபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் நெஷனல் போலிஸ் அகடேமியில் ஐ.பி.எஸ் ட்ரைனிங்கில் இருந்த கதிருக்கோ மனதெல்லாம் ஒரே கலக்கமாக இருந்தது. சண்முவுக்குப் போன் போட, லைன் கிடைக்கவேயில்லை. அவள் வீட்டுப் போனுக்கு முயல அதுவோ அடித்தப்படியே இருந்ததே தவிர, யாரும் எடுக்கவில்லை. ஒரு வாரம் ட்ரெக்கிங் செல்ல வேண்டிய ஆயத்தத்தில் வேறு இருந்தான் அவன். அவர்கள் செல்லப் போகும் இடத்தில் பேசிக் பெசிலிட்டி எதுவும் இல்லை. போன் டவர் கூட இல்லாத காட்டுப் பகுதி. போவதற்குள் தன்னவளின் குரலைக் கேட்டுவிட தவியாய் தவித்தவனுக்குக் கிடைத்தது தோல்விதான். பரமு வேறு பார்வதியுடன் சென்னைக்கு சென்றிருந்தார். கண்ணனுக்கு போன் போட்டால் அவனும் எடுக்கவில்லை.

‘என்னடி ஆச்சு சம்மு? மூனு நாளா உன் கிட்ட பேசாம என்னால முடியலடி! போனை எடு ப்ளிஸ்!’ என முயன்று கொண்டே இருந்தவனுக்குத் தெரியவில்லை, அவன் சம்மு இனி வேறொருவன் சம்மு ஆகப் போகிறாளென!

 

இன்று

கடம்பூவனத்தின் திறப்பு விழா இன்று. அவ்விடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தன் கால் அனுமதித்த வரை ஓடி ஆடி வேலைகளைப் பார்த்தான் கதிர்வேலன். அவன் மனைவியின் கனவு அல்லவா கடம்பூவனம்!

ஊரையே அழைத்திருந்தார்கள் இந்த நிகழ்வுக்கு. சிம்பிளாக செய்யலாம் என ஒற்றைக் காலில் நின்றவளை, கேஷ் ரிஜிஸ்டரில் நான்கு கால் நாற்காலியில் அமரவைத்து விட்டு எல்லா வேலையையும் அவனே உடனிருந்து கவனித்தான் கதிர். வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் இருந்து, ஃகூடி பேக் தருவது வரை எல்லாம் அவன் ஆட்டுவிக்க சண்முவிடம் வேலைக்கு சேர்ந்த பெண்களும், சின்னராசுவும் தாளம் தப்பாமல் ஆடினார்கள்.

விதைகளை ஃகூடி பேக்கில் வைத்து தர வேண்டும் என சண்மு ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால், அதுவே செயல்படுத்தப்பட்டது. பூ வாங்க வந்தார்களோ இல்லையோ, ஃப்ரீ சாப்பாடு எனும் தூண்டில் பல பேரை இழுத்து வந்திருந்தது.

வீட்டு வாசலிலேயே நின்று, திறப்பு விழாவுக்கு வாருங்கள் என பார்வதியிடமும், மீனாட்சியிடமும் கத்தி சொல்லி விட்டு வந்திருந்தான் கதிர். அவனை மதித்து வந்தார்களோ, இல்லை ஊர் வாய்க்குப் பயந்து வந்தார்களோ, இரு அம்மாக்களுமே வந்திருந்தார்கள்.

சண்மு கல்லாவில் இருக்க, அடிக்கடி அவள் அருகே போய் பேச்சுக் கொடுத்தப்படி, ஜீஸ், காபி கொடுத்து வழிந்தப்படி நிற்கும் கதிரையும் கவனித்தப்படி இருந்தனர் இரு பெண்மணிகளும். பார்வதி பல்லைக் கடிக்க, மீனாட்சியோ ‘பாரு உன் பையன் லட்சணத்த’ என்பது போல இவரை நக்கல் பார்வைப் பார்த்தார்.

பரமுவுக்கோ அன்று கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

“யோவ் மீஜை! ஜாப்டு அப்டியே ஓடிடாத! ஒழுங்கு மருவாதையா ரெண்டு ஜெடி வாங்கிட்டுப் போ”

“என்னா ஜாமந்தி! உன் பேருக்கேத்த மாதிரி ரெண்டு ஜாமந்தி வாங்கறது! வீடே மணக்கும்ல”

“அடேய் ஜின்ராசு! நம்ம தோஸ்துக்கு பிரியாணிய அள்ளி வைடா! அப்படியே லெண்டு ஜாடி ஹையீ பிஜ்ஜிக்கச்ச (ஹைபிஸ்கஸ்) தூக்கி அவன் கார்ல ஏத்துடாவ்! காஜ நான் இவன் பாக்கேட்ல இருந்து இப்பவே எடுத்துக்கறேன்” என ஒரே ஆர்ப்பாட்டம். அவரால் கல்லாவும் களைக்கட்டியது.

பெயருக்குத் தலையைக் காட்டிவிட்டு மீனாட்சியும் பார்வதியும் கிளம்பிவிட, பரமு மாலை வரை இருந்து விட்டு தாஸ்மாக்கிற்கு கிளம்பி விட்டார். கூட்டம் குறைய ஐந்து மணிக்கே அன்று கடையை அடைத்தார்கள். கடை அடைத்ததும், நர்சரிக்குப் போய் செடிகளை கொஞ்சிவிட்டு தேவையானவற்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவள் முன்னே சுட சுட இஞ்சி டீ நீட்டப்பட்டது.

“என்ன?”

“டீ, ஜிஞ்சர் டீ”

“நான் உன்னைப் பஞ்சர் ஆக்கறதுக்குள்ள ஜிஞ்சர தூக்கிட்டுக் கிளம்பிடு! செம்ம கடுப்புல இருக்கேன் உன் மேல”

“மகாராணிக்கு என்ன கடுப்பு என்று இந்த மகாராஜன் அறிந்துக் கொள்ளலாமா?”

“ஏன்டா இப்படிலாம் பண்ணுற?”

“எப்படிலாம்?”

“கதிரு!!!!!”

“சரி, சரி கத்தாதே! காது வலிக்குது! ஒழுங்கா கேள்விய கேளு ஒழுங்கா பதில சொல்லுறேன். அதுக்கு முன்ன டீ குடி! ரொம்ப களைச்சுப் போய் தெரியற”

“யாரு நானு? களைச்சிப் போய் தெரியறேன்? என்ன எங்கடா வேலைப் பார்க்க விட்ட! எல்லாமே நீதானே பார்த்த! நீ முதல்ல உட்காரு! ஓட்டைக் கால வச்சிக்கிட்டு ஒரே ஓட்டம்”

நாற்காலியை இழுத்துப் போட்டவள், அவனை கைப்பிடித்து அமர்த்தினாள். அவன் கையில் இருந்த டீ கப்பை அவனிடமே நீட்டி,

“குடி!” என்றாள்.

“இது உனக்கு சம்மு”

“நான் வேற கப்புல எடுத்துக்கறேன்” என்றவள் ப்ளாஸ்கில் இவன் போட்டு எடுத்து வந்திருந்த டீயை ஊற்றிக் கொண்டு அவன் அருகே தரையில் அமர்ந்துக் கொண்டாள்.

“ஏ, மேல உட்காரு சம்மு!”

“மேலன்னா எங்க? உன் மடியிலயா?”

“அப்படி உட்கார்ந்தாலும் எனக்கு ஓகேதான்”

“உன் தலை! மூஞ்சப் பார்த்தாலே தெரியுது உனக்கு காலு எவ்ளோ வலிக்குதுன்னு! அப்புறம் ஏன்டா அங்கயும் இங்கயும் அலையற! கடை வாங்கி எல்லாம் செஞ்ச எனக்கு கடைத்திறப்பு விழாவ நடத்தத் தெரியாதா?”

“இதுக்குத்தான் கடுப்பா! அப்படி ஒன்னும் வலியில்லடி. காயம் நல்லா ஆறிப்போச்சு! அப்பப்போ லேசா வலிக் கொடுக்கும். மனசுல ரணமா வலிச்ச வலிய தாங்கிட்டே இத்தனை வருஷம் இருந்துட்டேன். இது என்ன ஜூஜூபி, கால் வலி தானே!”

இவளிடம் பதில் இல்லை. மெல்ல டீயை உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டது.

“எப்படி அடிப்பட்டுச்சு கதிரு?”

“பிள்ளைப் பெத்துக் குடுக்கற மிஷின் பத்தி கேள்விப் பட்டுருக்கியா சம்மு?”

“என்ன உளறல் இது? எப்படி ஒன்னு எங்கடா இருக்கு!”

“இருக்கு, நம்ம நாட்டுல மட்டும் இல்ல, பல நாட்டுல இருக்கு. பொண்ணுங்கள கடத்தி வச்சுப் பலான பிஸ்னஸ் செஞ்சாங்க! இப்போ கடத்தி வச்சி பிள்ளப் பெத்துக்க வைக்கறாங்க! நெறைய ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிஸ்னஸ் இது. ரிசேர்ச்னு கூட சொல்லலாம். பொண்ணுங்கள அடைச்சு வச்சு, அவங்க உடம்புல ஹேர்மோன் ஏத்தி, நல்ல பிரபலங்களோட ஸ்பேர்ம் யூஸ் பண்ணி பிள்ளைப் பெத்துக்க வைக்கறாங்க. இந்தப் பிள்ளைகளுக்கு ஹை டிமாண்ட். இங்க இல்லடா, வெளிநாட்டுல! டாக்டரே கடவுளாகி இங்க பிள்ளை வரம் குடுக்கறானுங்க! ஒரு பிள்ளை பெத்ததும், மூனு மாசம் ரெஸ்ட், அதுக்கப்புறம் அடுத்த பிள்ளைக்கு ஏற்பாடு. எல்லாம் 15-30 வயசுக்குள்ள பொண்ணுங்க! இந்த சின்டிகேட்டைப் பிடிக்கத்தான் இன்சார்ஜா இருந்தேன். வளைச்சிப் புடிச்சுட்டோம். அப்போ நடந்த துப்பாக்கி சண்டையில ஒரு பொண்ண காப்பாத்தறப்போ காலுல சூடு பட்டுருச்சு சம்மு”

“சே இப்படிக் கூட மிருகத்தனமா நடந்துக்கறாங்களா?”

“பிள்ளைப் பெத்துக்கற கெபபிலிட்டி பலருக்கு குறைஞ்சிட்டே வருதுடி சம்மு! இப்போ எல்லாமே கெமிக்கல். அத சாப்பிட்டு வளருற வருங்கால ஜெனரெஷன் இப்படி பிள்ளைங்கள வாங்கனா தான் உண்டு. எதிர்காலத்த நினைச்சா பயமாத்தான் இருக்கு”

அதன் பிறகு அமைதி இருவருக்கும் இடையே.

“சம்மு”

“ஹ்ம்ம்! உனக்கு குழந்தைங்கனா ரொம்பப் பிடிக்குமே! உன் தம்பியையே அப்படி பார்த்துப்பியே! வந்து, நீ ஏன்டி குழந்தைப் பெத்துக்கல இந்த மூனு வருஷத்துல? அந்தப் பரதேசி வேண்டாம்னு சொல்லிட்டானா?”

“எங்கம்மா மாதிரியே ஏன் புள்ள உண்டாவல, ஏன் இன்னும் குண்டாவலன்னு கேட்டன்னு வை, மண்டையைப் பொளந்துருவேன். அவங்க ஒரு ஆளு பண்ண டார்ச்சரே காலாகாலத்துக்கும் போதும். ஏன் என்னால புள்ள பெத்துக்க முடியலைன்னா, தொரை விட்டுட்டுப் போயிடுவியோ?”

“சத்தியமா போகமாட்டேன்! நமக்குப் புள்ள இருந்தா சந்தோஷம்! இல்லைன்னா புள்ள இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்ச மாதிரி, கிழவனானாலும் உன் துப்பாட்டாவப் புடுச்சுக்கிட்டே சுத்திக்கிட்டு, உன் மடியில படுத்துகிட்டு, உன் கையால ஊட்ட சொல்லி சாப்டுகிட்டுன்னு நானே குழந்தையா இருந்துருவேன்” படு சீரியசாக அவன் சொல்ல, கலங்கிய கண்களை மறைக்க சட்டென எழுந்து உள்ளேப் போய்விட்டாள் சண்மு.

அன்று இரவு சண்மு ஒற்றைக்கட்டிலில் சுருண்டு படுக்க, கதிர் அவள் கட்டிலின் கீழே குட்டி மெத்தையை விரித்துப் படுத்துக் கொண்டான். இருவரும் தூங்காமல் தான் இருந்தனர். ஆனால் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

சண்மு அவள் குட்டி ரேடியோவை திறந்து வைத்திருக்க, அதில் ம்ம்ம்ம்ம் என ஹம்மிங் வரும் போதே கதிருக்கு சிரிப்பு முட்டிக் கொண்டது.

“இப்ப எதுக்கு லூசு மாதிரி சிரிக்கற நீ?” என இவள் கேட்க, பாடல் ஆரம்பித்திருந்தது.

“கோழி ரெண்டு முழிச்சிருக்கு

ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க

நாடு சாம வேளையில் வாடையடிக்க”

என கொஞ்சினார்கள் பாடலில்.

படக்கென எழுந்து அமர்ந்தவள்,

“ராத்திரில போடற பாட்டப் பாரு! கர்மம் புடிச்சவனுங்க!” என எகிறினாள்.

“ராத்திரியில இந்தப் பாட்டுத்தான் போடுவானுங்க. அப்புறம் என்ன பொம்ம பொம்மதா

தைய தையனுக்கு

தின்னாக்கு நக்குதின்

பஜன்கரே” அப்படின்னா பாட்டுப் போடுவான்?” என கிண்டலாக கேட்டான் கதிர்.

“இப்போ எதுக்கு புள்ளையாரு பாட்டப் பாடிக் காட்டுற? கல்யாணம் ஆகியும் மிஸ்டர் கணேஷ் மாதிரி பிரம்மச்சாரிய இருக்கேன்னு சிம்போலிக்கா சொல்லறியா?”

“அப்படிலாம் இந்த வாயால நான் சொல்லுவேனே! சம்மு, ஷ்ஷ்ஷ். இந்த வரிய கேளேன்! செம்மல”

அந்தப் பலான பாட்டில் அடுத்த வரி வந்திருந்தது.

“இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது

பின்பு வாராது இள வயது

மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்

இது தோதான ஏகாந்த இரவு”

“ஓஹோ! ஐயாவ அள்ளித் தாலாட்டி, மெல்ல சீராட்டனுமா? தோ வரேன்” என கடுப்பில் தலையணையோடு அவன் அருகே நெருங்கியவள், அதை வைத்தே மொத்த ஆரம்பித்தாள்.

அடிப்பவளை சிரிப்புடன் இவன் தடுக்க, அந்த சின்ன இடத்தில் கால் தடுமாறி கதிரின் மேலேயே விழுந்தாள் சண்மு. பஞ்சு மூட்டையென மேலே விழுந்த சண்முவை, ஆசையாக அணைத்துக் கொண்டான் கதிர்.

“விடுடா என்னை”

“முடியாதுடி”

“விடுன்னு சொல்லறேன்ல”

“ஒன்னும் செய்ய மாட்டேன்! கொஞ்ச நேரம் இப்படியே இருடி! நான் வயசுக்கு வந்ததுல இருந்துக் கண்ட கனவுடி இது. நானும் என் சம்முவும் இப்படியே கட்டிப் புடிச்சுக்கிட்டு உலகத்த மறந்து எங்களுக்குள்ள மூழ்கிப் போயிடனும்னு. மூழ்கறதுக்கு கொஞ்ச நாள் ஆகும் போல! சோ கட்டியாச்சும் புடிச்சிக்கிறனே! ப்ளீஸ்டி!”

“உனக்கு வேற யாருமே கிடைக்கலியாடா? என்னை ஏண்டா இப்படி பைத்தியம் மாதிரி லவ் பண்ணற?” கேட்டவளின் குரல் கம்மி இருந்தது. எவ்வளவு அடக்கியும் முடியாமல், கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அழுபவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், மெல்ல அவள் முதுகைத் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.

“இந்த ஒன்றைக்கண்ணனயும் மனுஷனா நினைச்சு அன்பு காட்டனது நீ ஒருத்தி தானேடி! உன்னைத் தவிர வேற யார நான் லவ் பண்ணுவேன்?”

அவன் பதிலில் இன்னும் அழுகை முட்டிக் கொண்டது அவளுக்கு. ராத்திரி முழுக்க எதை எதையோ நினைத்துக் கண்ணீரில் கரைந்தவளை தன் நெஞ்சில் தாங்கி தூங்க வைத்தான் சம்முவின் கதிர்.

 

(உயிர் போகும்…)