கனவு – 13
‘என்ன இவ அதுக்குள்ள வந்துட்டா?’ என எண்ணியவள் எந்த அடாவடியையும் காண்பிக்காமல் வீட்டிற்கு உள்ளே முன்னேறி நடந்தாள். ஆனால் அவளது கை தன்னிச்சையாக அலைபேசியை எடுத்து அனேகனுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிக்கொண்டு இருந்தது.
“ஐயம் ட்ரையின் டு ரீச் யூ ஃபார் அ லாங் டைம்… யூ டிட்டிண்ட் ரெஸ்பாண்ட்… ஐ வான்ட் டு மீட் யூ நவ்… ப்ளீஸ்…” என டைப் செய்து அனேகனுக்கு அனுப்பியவள் அம்ரிதாவிடம்,
“என்ன டி… இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என கேட்டாள்.
“அச்சு… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” – அம்ரிதா.
“என்ன டி…? சொல்லு…” – தன் கைப்பையை கழற்றி சோபாவின் ஓரமாய் வைத்தவள் அம்ரிதாவின் அருகே அமர்ந்தாள்.
“நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா… வந்து காஃபி குடி… அப்பறம் பொறுமையா பேசலாம்” – அம்ரிதா.
“என்ன டி? எதுவும் பிரச்சனையா? முகமே டல்லா இருக்கு?” – ஆஷ்ரிதா.
“இல்ல டி… நீ கூட தான் பார்க்க ரொம்ப டயர்ட்டா தெரியுற… நீ ஃப்ரெஷ் ஆகி வா முதல… நான் அப்பறம் சொல்லுறேன்…” – அம்ரிதா.
“சரி வர்றேன் இரு” – சொல்லிவிட்டு குளிக்கச்சென்றாள் ஆஷ்ரிதா.
ஆஷ்ரிதா குளித்துவிட்டு வெளியே வரவும் பொன்னம்மா மூவருக்கும் தேனீர் தயாரித்து எடுத்து வரவும் நேரம் சரியாக இருந்தது. ஆஷ்ரிதா, அம்ரிதா இருவருக்குமான தேனீரை கோப்பையில் ஊற்றி உணவு மேஜையில் வைத்த பொன்னம்மா, தனக்கான தேனீர் கோப்பையுடன் அடுப்பங்கறைக்கு அருகில் இருக்கும் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டார்.
“என்ன பொன்னம்மா… இன்னைக்கு சைலண்ட் மோட் –ல யே இருக்கீங்க?” கேட்டுக்கொண்டே இரு தேனீர் கோப்பைகளையும் எடுத்து வந்து ஒன்றை அம்ரிதாவிடம் நீட்டினாள் ஆஷ்ரிதா.
பொன்னம்மா பதில் எதுவும் தெரிவித்ததாய் தெரியவில்லை. அம்ரிதாவும் ஆஷ்ரிதாவும் ஒன்றும் விளங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, பொன்னம்மா தன்னிடம் மனமுடைந்து பேசிய வார்த்தைகள் ஆஷ்ரிதாவுக்கு நினைவு வந்தது. பாறையென கனமாய் இருந்த தன் மனதை அடக்கிக்கொண்டு எழுந்த ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அறைக்கு சென்றாள்.
“என்ன பொன்னம்மா தனியா வந்து உக்காந்துருக்கீங்க? வாங்க… வந்து எங்களோட இருங்க!!” – ஆஷ்ரிதா.
“இருக்கட்டும் பாப்பா… வேலை எல்லாம் முடிஞ்சிது… பசிக்கும்போது சொல்லுங்க, சாப்பாடு எடுத்து வைக்குறேன்” – அதிநிதானமாக பேசினார் பொன்னம்மா.
வலியின் வீரியம் கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுவது ஒரு விதம் என்றால், பூ இதழை விட மென்மையாய் வெளிப்படுவது மற்றொரு விதம். கூர்மையான கத்தியாய் கொந்தளித்து மனவலியை வெளிப்படுத்தும் திடம் இழந்து நிற்கும் பல நேரங்களில் கையாளப்படுவதுதான் இத்தகைய மென்கோடாரிகள்.
எந்நேரமும் கீச் கீச் எனும் தொண்டையை கொண்டு பொன்னம்மா ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பதுதான் அவர்களது வீட்டின் முழுநேர சுப்ரபாதமாய் இருக்கும். தற்பொழுது எந்த அறிவிப்புமின்றி அது தடைப்பட்டிருக்க, அவ்வீட்டின் கற்சுவருக்கு கூட அந்த அமைதி வருத்தத்தையே தந்தது.
தானும் மிகுந்த மன அழுத்தத்திலும், குழப்பத்திலும் இருந்ததாலோ என்னவோ தற்பொழுது அவரை அதிகம் தொந்தரவு செய்யவேண்டாம் என எண்ணியவள் வார்த்தையை உதிர்க்க மறந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் ஆஷ்ரிதா.
தன் பதிலுக்கு எந்த ஒரு எதிர் பதிலும் தராமல் செல்லும் ஆஷ்ரிதாவை ஏறெடுத்து பார்த்த பொன்னம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தாலும் தன் கைகளால் வாய் பொத்தி அதனை அடக்கிக்கொண்டார். அவ்வீட்டில் ஒருவருக்கொருவர் எதையும் பகிர்ந்துக்கொள்ளாமல் மெளனத்தின் வழியே நடத்திக்கொண்டிருக்கும் இத்தனை வகையான மனப்போராட்டங்களை வரைஉருவாய் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் தாய் யசோதா.
பொன்னம்மாவிடம் விடைப்பெற்ற ஆஷ்ரிதா அம்ரிதாவிடம் வந்து அமர்ந்து “என்ன அம்மு?? இப்ப சொல்லு…” என்று வாஞ்சையாக பார்த்தபடி கேட்டாள்.
அப்பொழுது ஆஷ்ரிதாவின் அலைபேசி அவளுக்கு குறுஞ்செய்தி வந்திருப்பதாய் ஒலியெழுப்ப, அதை எடுத்துப் பார்த்தாள் ஆஷ்ரிதா. அனேகனிடம் இருந்து பதில் வந்திருந்தது. “மீட் மீ அட்” என தாங்கள் சந்திக்க ஒரு இடத்தையும், சந்திக்க வேண்டிய நேரத்தையும் குறிப்பிட்டிருந்தான் அனேகன். நிம்மதி பெருமூச்சுடன் அந்த குறுஞ்செய்தியை படித்தவள் கடிகாரத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் மனதோ தங்கள் சந்திப்பிற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருப்பதாக கூறியது.
“அம்மு… அடுத்து நீ எங்கயும் போகலல..? எனக்கு ஸ்கூட்டி வேணும்… மார்னிங் மெக்கானிக் கிட்ட பேசினேன், கார் நாளைக்கு வீட்டுக்கு வந்திடும்” என்றாள் ஆஷ்ரிதா.
“நான் எங்கயும் போகல டி” – அம்ரிதா.
“சரி என்ன பேசணும்னு சொன்ன?? சொல்லு…” – ஆஷ்ரிதா.
“அச்சு… இன்னைக்கு மோகன் வீட்டுல அவரோட பையனை பார்த்தேன்” – நேரடியாக விஷயத்திற்கே வந்தாள் அம்ரிதா.
“அப்படியா??” – அனேகன் தான் மோகனின் மகன் என்று அறியாத ஆஷ்ரிதா கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஆமா… அவங்க வீட்டுக்கு மோகனோட உடலை எடுத்துட்டு வரல அச்சு…” – அனேகன் விஷயத்தை எவ்வாறு சொல்வதென தெரியாமல் தற்பொழுது பேச்சு தடம் புறண்டது அம்ரிதாவிடம்.
“எடுத்துட்டு வரலையா?? அப்ப ஹாஸ்பிட்டல் –லயே எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிச்சிட்டாங்களா?” – ஆஷ்ரிதா.
“ஆமா டி… ஆனா அவங்க வீட்டுல சொந்தகாரன்னு சொல்லி யாருமே வரல டி!!” – அம்ரிதா.
“அதுக்கு நீ ஏன் டி இவ்வளவு ஃபீல் பண்ணுற?? போகும்போது நீதான சொன்ன, இவ்வளவு பாவம் பண்ணவன வழி அனுப்ப எல்லாரும் வரனுமானு? அவனோட ஃபேமிலில உள்ளவங்களுக்கு அவன பத்தி தெரிஞ்சிருக்கலாம்…” – ஆஷ்ரிதா.
சில வினாடி அமைதி காத்த அம்ரிதா மீண்டும் தொடர்ந்தாள் “அவரோட வைஃப் என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அப்படியே மயங்கி விழுந்துட்டாங்க டி… எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு…”
“சரி விடு டி… எதுக்கு அதையே போட்டு யோசிச்சிட்டு இருக்குற… நான் சொல்லுறத கேளு… இனி நீ ஆஃபீஸ் –க்கு எல்லாம் போகவேணாம்… என் கூட ஸ்கூலுக்கு வா… இல்லைனா நம்ம எஸ்டேட் பார்த்துக்கோ… அதுவும் வேணாம்னா எதாவது பிஸ்னஸ் ஸ்டார்ட் செய்யணும்னு நினைச்சா பண்ணு… உன்ன ஆக்டிவ் –ஆ வச்சிக்கோ…” – ஆஷ்ரிதா.
“இல்ல… என்னால ஆஃபீஸ் போகாம இருக்க முடியாது…” – வேகமாய் சொல்லி முடித்தாள் அம்ரிதா.
அவள் பதில் வந்து விழுந்த வேகத்தை கண்டு திகைத்துப்போன ஆஷ்ரிதா “என்ன டி? அவன் தான் செத்துட்டானே… அப்பறமும் நீ ஏன் அங்க போகனும்?” என கேட்டாள்.
மோகன் உடலும் உயிருமாய் அங்கிருந்து நீங்கிவிட்டாலும், தன் உயிருக்கு உயிரானவன் உடலோடு உருவமாய் அங்கு தானே வலம்வந்துக் கொண்டிருக்கிறான். அதனை எவ்வாறு சொல்வது என்றல்லவா கன்னி அவள் திணறிக்கொண்டிருக்கிறாள்.
“இப்ப நீ எதையும் முடிவு பண்ண வேணாம்… கொஞ்சம் நாள் போகட்டும் பார்த்துக்கலாம்… ஆஃபீஸ் உடனே திறக்கப்போறது இல்ல தானே” – ஆஷ்ரிதா.
“நெக்ஸ்ட் மண்டே” – அம்ரிதா.
“வன் வீக் இருக்கு… பார்த்துக்கலாம்… இப்ப வா சாப்பிடலாம்… சாப்ட்டு நீ தூங்கு… எனக்கு ஸ்கூல் விஷயமா வெளியில ஒரு வேலை இருக்கு… போய் முடிச்சிட்டு வந்திடுவேன்” – ஆஷ்ரிதா.
“நானும் வர்றேன்” – அம்ரிதா.
“நீ தூங்கி ரெஸ்ட் எடு… நான் போய்ட்டு வர்றேன்” – ஆஷ்ரிதா.
“எப்பவும் நான் தூங்கிட்டே தான இருக்கேன்…” – பாவமாய் கூறினாள் அம்ரிதா.
அவள் வார்த்தையில் நிறைந்திருந்த வலியையும் இயலாமையையும் புரிந்துக்கொண்ட ஆஷ்ரிதாவுக்கு அவளை எப்படி தடுப்பது என்பது தெரியவில்லை. அனேகனை காணச் செல்லும் பொழுது இவளை கூட்டிச்செல்ல இயலாது என எவ்வாறு அவளிடம் சொல்ல முடியும். ‘கஷ்டப்பட்டு எட்டிப்பிடிக்கும் ஒவ்வொறு கயிற்றிலும் இத்தனை முட்களை ஏன் வைக்கிறாய் இறைவா’ என தன்னுள் நொந்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, அம்ரிதாவை வீட்டில் விட்டுச் செல்ல என்ன செய்யலாம் என்ற யோசனையோடு மதிய உணவு உண்ண அவளை அழைத்து வந்து மேசையில் அமர்த்தினாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பது பொன்னம்மாவுக்கும் கேட்டுக்கொண்டிருக்க, தனக்கு அழைப்பு கொடுக்கும் வேலையை ஆஷ்ரிதாவுக்கு வைக்காமல் தானே எழுந்து உணவு பாத்திரங்களை எடுத்து வைக்கலானார் அவர்.
மூவரின் மனதிலும் ஒவ்வொறு சிக்கல் நிறைந்து, அவர்களை சின்னாபின்னமாக மாற்றியிருக்க, அந்த உணவு பொழுது அன்று மிகுந்த அமைதியாகவே கழிந்தது. அனேகன் கூறிய நேரமும் நெருங்கியது.
ஆஷ்ரிதா வேகமாய் கிளம்பிக்கொண்டிருக்க, தானும் உடன் வருவதாய் அடம் பிடித்த அம்ரிதா அவளுக்கு முன்பாக தயாராகி அமர்ந்திருந்தாள்.
“சொன்னத கேட்கவே மாட்டியா அம்மு… இப்பதான் மோகன் வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்க… ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே… முகத்தை பாரு எப்படி இருக்கு?” – தன் கூந்தலைப் பிண்ணிக்கொண்டே கேட்டாள் ஆஷ்ரிதா.
“எப்பவும் ஆக்டிவ் –ஆ இருக்க சொல்லுற… சரி உன்னோட சேர்ந்து வேலைய பாக்குறேன்னு சொன்னா தூங்க சொல்லுற… நான் என்ன அச்சு பண்ணட்டும்??” – சிணுங்கினாள் அம்ரிதா.
இதற்கு என்ன பதில் கொடுப்பது என ஆஷ்ரிதாவுக்கு தெரியவில்லை. என்ன பதில் கொடுத்தாலும் அம்ரிதா கேட்கப்போவது இல்லை என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது அவளுக்கு. கிளம்பிக்கொண்டே அம்ரிதாவுக்கு சந்தேகம் வாராத வண்ணம் தன் அலைபேசியை எடுத்த ஆஷ்ரிதா, அனேகனுக்கு அடுத்த குறுஞ்செய்தியை தட்டினாள்.
“அம்ரிதா என் கூட வரனும்னு அடம் பிடிக்கிற… வாட் ட்டு டூ??” என தன் கைபேசியின் திரையில் விரிந்திருந்த செய்தியை பார்த்துக்கொண்டிருந்த அனேகன் புன்னகைத்தவாறு “இட்ஸ் கெட்டிங் மோர் இண்ட்ரஸ்டிங்” என பதிலளித்தான் ஆஷ்ரிதாவுக்கு.
அவனது பதிலை கண்டு காட்டமான ஆஷ்ரிதா, தன் பற்களை கடித்தவாறு சிகப்பு நிற முகம் கொண்ட பொம்மைகளை அளவின்றி தட்டி அவனுக்கு அனுப்பினாள்.
அவளிடம் இருந்து வந்த இக்குறுஞ்செய்தியை கண்டு வாய்விட்டு சிரித்த அனேகன் “கெட் ஹெர் வித் யூ… இட்ஸ் டைம் டு க்னோ ஆல் தி ட்ரூத்” என்று தட்டச்சிட்டு அனுப்பினான்.
அதை கண்டவள், “ஏற்கனவே நான் குழம்பிப்போய் இருக்கேன்… இதுல இவன் படுத்துற பாடு… நல்லா இருக்கறவங்கல லூசு ஆக்குற டாக்டர் தான் இவன்… ச்சை…” என்று தன் வாய்க்குள் முனகிக்கொண்டவள் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தயாராகி முடித்தாள்.
“எங்கே போகனும்னு சொல்லு… நான் வண்டி ஓட்டுற…” – சாவியை ஆணியில் இருந்து எடுத்தவாறு கூறினாள் அம்ரிதா.
“நானே ஓட்டுறேன் நீ வா…” என அவளது கையில் இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு நடந்தாள் ஆஷ்ரிதா.
“ஸ்… குரங்கு… எப்படு பிடுங்குத் பாரு!!” என்ற அம்ரிதா அவள் பின்னே செல்ல இருவரும் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தனர்.
“பொன்னம்மா… நாங்க போய்ட்டு வர்றோம்…” – வாசலில் நிற்கும் வண்டியில் அமர்ந்திருந்தவாறு கத்தினாள் அம்ரிதா.
“பாத்து போய்டு வாங்க பாப்பா” – பொன்னம்மாவின் குரல் மட்டுமே வெளியே வந்தது. பொன்னம்மா வரவில்லை.
அவரை வெளியே எதிர்பார்த்திருந்த ஆஷ்ரிதாவுக்கு குரலை மட்டும் கேட்டதில் மனம் உருக்குழைந்து போனது.
“ஏன் டி பொன்னம்மா வெளியில வரல… எப்பவும் நம்மள வாசல்ல வந்து கைக்காட்டி, இந்த ரோடு முக்கு திரும்புற வர நம்மள பார்த்துட்டு இருப்பாங்க தானே?” – அம்ரிதா.
“என் மேல தான டி வருத்தம்… உன்ன வந்து பார்க்கலாம்ல?” – ஆஷ்ரிதா.
“உன் மேல என்ன டி வருத்தம்?” – அம்ரிதா.
“என்ன சொல்ல நான்… விடு… கிளம்பலாமா?” – ஆஷ்ரிதா.
“ம்ம்ம்ம்…” – அம்ரிதா.
வீட்டில் இருந்து கிளப்பிய வண்டி அனேகன் சொன்ன இடத்தை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்க, ஆஷ்ரிதாவின் முகத்திலோ குழப்ப ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.
“இவகிட்ட ஸ்கூல் விஷயம்னு சொல்லியிருக்கேனே… அவன என்னனு சொல்லி இவகிட்ட இண்ட்ரோ செய்யுறது? நான் முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னேன்… அது என்னனு கூட யோசிக்கல… அம்மு வர்றேன்னு சொன்னா கூட்டிட்டு வரணுமாம்.. இவள வச்சிட்டு விஷயத்த எப்படி பேசுறது… இவன் தெரிஞ்சி பண்ணுறானா தெரியாம பண்ணுறானா ஒன்னும் புரியல…” என்று மனதிற்குள் புலம்பியவாறு இருந்த ஆஷ்ரிதாவை கலைத்தது அம்ரிதாவின் குரல்.
“அச்சு… வரும்போது மால்- க்கு போய் திரு –வ பார்த்துட்டு வருவோமா?? அவன பார்த்து ரொம்ப நாள் ஆகுது…” – அம்ரிதா.
‘இருக்குறது பத்தாதுனு இதுவேறயா?’ என எண்ணிய ஆஷ்ரிதா “இன்னைக்கு வேணாம்… இன்னொரு நாள் பார்த்துக்கலாம்…” என்றாள்.
“ஏன் டி… அப்படியே கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்யலாம்னு பார்த்தேன்” – அம்ரிதா.
“அதான் இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்றனே” – ஆஷ்ரிதா.
“ஹுக்கும்… அந்த எருமைக்காவது பார்க்கனும்னு தோணுச்சா பாரு… ஒரு கால் இல்லை… ஒரு மெசேஜ் இல்லை…” – அம்ரிதா.
“யாரு அவன் தானே!! ஆமா… ஆமா…” – ஆஷ்ரிதா.
“என்ன டி…உன் டோன் சரியே இல்லையே?” – அம்ரிதா.
“எல்லாம் சரியாதான் இருக்கு” – ஆஷ்ரிதா.
“சரி விடு… இப்ப என்ன வேலையா போறோம்?” – அம்ரிதா.
‘நம்ம வாய பிடுங்காம விட மாட்டா போலயே…’ என்று எண்ணிய ஆஷ்ரிதா, “உன் வாய் கொஞ்சம் நேரம் அமைதியா இருக்காதா டி? உன்ன ஆக்டிவ் –ஆ இருக்க சொன்னது நான்தான்… அதுக்கு இப்படியா ப்ரேக் விடாம பேசுவ??” என கேட்டாள்.
“சரி… நான் வாய மூடிக்கறேன்… நீ ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டு” – அம்ரிதா.
சில நிமிடங்களில் அவர்களது சந்திப்பிற்கான இடம் வந்துவிட, ஆஷ்ரிதாவின் இதயம் படுவேகமாக துடிக்கத்தொடங்கியது. ‘இவன் எங்க நிக்குறான்னு தெரியலையே! இன்னைக்கு அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடா ஒரு க்ளரிட்டி கிடைக்கும்னு நினைச்சேன்… அம்மு –வ கூட வச்சிட்டு எப்படி சொல்லுறது?’ என்று எண்ணியபடியே அந்த பூங்காவின் வெளியே வண்டியை நிறுத்தினாள் ஆஷ்ரிதா.
“ஹேய் அச்சு… செம்ம டி… பார்க் –க்கு கூட்டிடு வந்திருக்க…” – சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்தாள் அம்ரிதா.
“அதுக்கு ஏன் டி இப்படி குதிக்கற??” என்று கூறியவாறு ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் தன் அலைபேசியை எடுத்து “வேர் ஆர் யூ?” என அனேகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“இன்சைட் தி பார்க்… ரைட் சைட் ஃபோர்த் பென்ச்” என்று அவன் பதில் அனுப்பினான்.
“கம்மிங்” என்று இவள் பதிலை அனுப்பிவிட்டு “வா அம்மு” என நிமிர்ந்துப் பார்த்தால் அங்கு அம்ரிதா இல்லை.
“எங்கே போனா இவ?” என்று அங்கும் இங்கும் பார்வையை வீசியவள் அம்ரிதாவின் அலைபேசிக்கு அழைப்புக் கொடுத்தாள். அந்த அழைப்பு மணி தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த கைப்பையில் இருந்து ஒலித்ததைக் கண்டு ‘இங்கதான் வச்சிட்டு போய்ருக்காளா?’ என்று எண்ணியவள் பூங்காவின் உள்ளே தேடத் தொடங்கினாள்.
அம்ரிதாவை தேடியவளுக்கு கண்ணில் பட்டதென்னவோ அனேகன் தான். இவளது விழிகள் வழியை விளாவிக்கொண்டிருக்க, தன் கையை அசைத்து அழைத்தான் அனேகன். அவனது அழைப்பை பார்த்து அவனருகே ஆஷ்ரிதா சென்றிட “கரெக்ட் –ஆ ப்லேஸ் சொன்னேன் தானே… அப்பறம் என்ன தேடிட்டு இருக்கற?” என கேட்டான் அனேகன்.
“உங்க தேடல… அம்மு என்னோட தான் வந்தா… உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு திரும்புறதுக்குள்ள ஆள காணோம்… அதான் தேடிட்டு இருக்குறேன்…” – ஆஷ்ரிதா.
“சரி அவ வர்றதுக்குள்ள நீ சொல்ல வந்தத சொல்லு” – அனேகன்.
“என்ன?? நான் அவள காணோம்னு சொல்லிட்டு இருக்கேன்… நீங்க சொல்ல வந்தத சொல்லுனு சொல்லுறீங்க??” – ஆஷ்ரிதா.
“நீதான ஏதோ அவசரமா பேசனும், அதுவும் உடனே பேசனும்னு சொன்ன??” – அனேகன்.
“ஓ… அது இப்ப தான் தெரியுதா உங்களுக்கு? அம்முவயும் என்னோட கூட்டிட்டு வர சொன்னீங்களே அப்ப தெரியலையா??” – ஆஷ்ரிதா.
“என்னோட சண்ட போடதான் எப்பவும் வருவியா?” – அனேகன்.
“உங்க கூட சண்ட போட எனக்கு ஒன்னும் ஆசை இல்லை… நீங்க தான் என் பிளெட் பிரஷரை ஏத்துறீங்க… டாக்டர் -னா பேஷண்ட் –ஐ காப்பாத்துவாங்கனு பாத்துருக்கேன்… ஆனா என்ன நீங்க தான் பேஷண்ட் ஆக்கிடுவீங்க போல…” – ஆஷ்ரிதா.
“சுப்” – என்று அதிர்வாய் கூறினான் அனேகன்.
அவனிடம் இருந்து எழுந்த திடீர் ஒலிப்பெருத்தில் திடுக்கிட்டு உறைந்தாள் ஆஷ்ரிதா.
(களவாடுவான்)