Kanavu 12

கனவு – 12

“எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க தாத்தா?” – திரவியம்.

“அஞ்சு வருஷம் ஆகுது தம்பி இங்க வந்து… தம்பி என்ன உத்யோகம் பண்ணுறீங்க?” – பெரியவர்.

“நான் இங்கதான் ஒரு மால் –ல பொக்கே ஷாப் –ல இருக்கேன் தாத்தா” – என்றவன் சி.சி.டி.வி. விஷயத்திற்கு எப்படி வருவது என யோசித்தான்.

“கல்யாணம் எல்லாம் ஆகிருச்சா? எத்தன புள்ள குட்டிங்க?” – பெரியவர்.

“இன்னும் கல்யாணம் ஆகல தாத்தா” – திரவியம்.

“காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சிருங்க தம்பி! வயசு போய்டுச்சின்னா பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாகிடும்” – பெரியவர்.

“பொண்ணு இருந்தா சொல்லுங்க தாத்தா… உடனே கல்யாணத்தை முடிச்சிட்டு உங்க ஃப்ளாட் பக்கத்துலையே ஒரு ஃப்ளாட் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று தூண்டிலைப் போட்டான் திரவியம்.

“ஹாஹா… வாங்க வாங்க… நல்லா பேசுறீங்க தம்பி! இந்த காலத்துல யாரு இப்படி பேசுறா? பக்கத்து வீட்டுல மனுஷன் இருக்கானா செத்தானானு கூட தெரியாம இருக்குறாங்க” – அலுத்துக்கொண்டார் பெரியவர்.

“நான் இங்கே வந்த பிறகு உங்களுக்கு பேச்சு துணைக்கு நான் இருப்பேனே.. அப்புறம் என்ன தாத்தா கவலை உங்களுக்கு?” – தன் திட்டத்தில் தீவிரமாய் ஈடுபட்ட திரவியம், அடுத்து தாத்தாவை பேச விட்டால் அவர் வேறு தலைப்புக்குள் புகுந்து விடுவார் என்று சுதாரித்தவன் நேராக விஷயத்துக்குள் புகுந்தாள்.

“இந்த அப்பார்ட்மெண்ட் எப்படி தாத்தா? எல்லா வசதியும் நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு… சேஃப்டி எல்லாம் எப்படி?” என கேட்டான்.

“அது எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை தம்பி! எப்பவும் செக்யூரிட்டி இருப்பாங்க… என்னவா இருந்தாலும் உடனே ஓடி வந்திடுவாங்க… நேத்து கூட கீழ ஒரு ஃப்ளட் –ல கேஸ் வெடிச்சிட்டு… செக்யூரிட்டி கோபால் தம்பி தான் ரொம்ப ஹெல்ப் பண்ணாப்ல” என்றார் தாத்தா.

“ஆமா தாத்தா… பார்த்தேன்” – திரவியம்.

“என்ன தம்பி??” – பெரியவர்.

“இல்ல தாத்தா… நியூஸ் பார்த்தேன் –னு சொன்னேன்” – திரவியம்.

“சரிங்க தம்பி” – பெரியவர்.

“திருட்டு பயம் எல்லாம் கிடையாதே?? எல்லா ப்ளோர் –லயும் சி.சி.டி.வி. கேமரா இருக்கும் தானே” – ஒரு வழியாக கேட்டுவிட்டான் திரவியம்.

“ஹாஹா… என்ன தம்பி… இங்க எல்லாம் திருடிட்டு தப்பிச்சிட முடியுமா? எல்லா இடமும் சி.சி.டி.வி. கேமரா இருக்கு” – பெரியவர்.

“அது இருந்து என்ன ப்ரயோஜனம் தாத்தா… நாம ஏதாவது எமர்ஜன்சினு சொல்லி கேட்டா ஈசி –யா ஃபூட்டேஜ் –ஐ காட்டிட மாட்டாங்களே… இந்த மாதிரி இடத்துல நமக்குனு கைக்குள்ள ஒரு ஆளு இருந்தா நல்லதுல?” – திரவியம்.

“அதெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க தம்பி… அதுக்குள்ள வேற மாதிரி ஆளுங்க தான் இருப்பாங்க… அவங்க கிட்ட எல்லாம் பாசம் பேசாது… பணம் தான் பேசும்” – பெரியவர்.

“அதுவும் சரிதான்” என்று கூறிவிட்டு ‘எப்படியாவது சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தாக வேண்டும். அதை ஆஷ்ரிதாவுக்கு காண்பித்தால் நிச்சயம் அவள் நம்புவாள். ஆனால் எப்படி ஃபூட்டேஜ் –ஐ வாங்குவது?’ என தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்த திரவியத்தை தடுத்தது பெரியவரின் குரல்.

“தம்பி இங்க யார பார்க்க வந்தீங்கனு சொல்லவே இல்லையே?!” எலி பொறியென கேள்வி கேட்டார் அந்த பெரியவர்.

“நான் இங்கே… நான்… யாரையும் பார்க்க வரல…” தடுமாறிக் கொண்டிருந்தான் திரவியம்.

“யாரையும் பார்க்க வரலையா? உங்க வேலைய கெடுத்துட்டேனா தம்பி?” – பெரியவர்.

“அய்யோ இல்லை தாத்தா!! என் ப்ரெண்டு ஒருத்தன் வர்றேன் –னு சொன்னான். அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்த பக்கமா ஒரு நாய் குட்டி வந்துது. அத பார்த்துட்டே அப்படியே உள்ளே வந்துட்டேன்” என்று உப்பு சப்பில்லாத சாக்கினை திரவியம் கூற, ‘இதெல்லாம் நம்புற மாதிரியா டா இருக்குது?’ என அவனது மனசாட்சியே அவனை காரித் துப்பியது.

‘சரி… நம்புறதும் நம்பாததும் அவர் இஷ்டம்… நம்ம வேலை முடிஞ்சிது’ என்று நினைத்தவன், “சரி தாத்தா… நான் கிளம்புறேன்… நேரமாகிடுச்சு” என்று அவரிடம் இருந்து விடைப்பெற வேகமாக எழுந்தவன் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறிச் சென்ற ஆஷ்ரிதாவை தன் மனதில் நிறுத்தி “சீக்கிரம் உனக்கு புரிய வைக்கிறேன் அச்சு” என்று கூறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

இதே நேரம் கண்களை மூடி அயர்ந்தாவாறு பயணப்பட்டுக் கொண்டிருந்த ஆஷ்ரிதாவை சுமந்துச் சென்றுக்கொண்டிருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஓரிடத்தில் நின்றிட, தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள் ஆஷ்ரிதா. “என்ன தம்பி இங்க நிறுத்தியிருக்க? எதுவும் வேலை இருக்கா உனக்கு?” என கேட்டாள்.

“எனக்கு வேலை இல்லை கா… உனக்கு தான் இங்க வேலை இருக்கு… இறங்கி வா…” என்றான் அச்சிறுவன்.

புருவத்தை சுருக்கியபடி ரிக்‌ஷாவில் இருந்து கீழே இறங்கிய ஆஷ்ரிதாவுக்கு அந்த சூழல் மிகவும் விசித்திரமாக இருந்தது. அரண்மனையை ஒத்த மாபெரும் கலைநய கட்டிடம் ஒன்று அவள் முன் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்க, அதன் விசாலமான தோற்றத்திற்கு திருஷ்டி கழிப்பதுபோல அத்தனை அழுக்காய் காணப்பட்டது அதன் மதில் சுவர்.

பல நாள் காற்றோடு உறவாடி துரு ஏறிய அந்த பெரிய இரும்பு கதவை அசாதாரணமாக திறந்துவிட்டான் அச்சிறுவன். ‘இந்த பிஞ்சு கைகளா பஞ்சை நகர்த்துவது போல இக்கதவை அசைத்தது?’ என்கிற ஆச்சரியம் ஆஷ்ரிதாவுக்கு வந்ததில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் அந்த கதவின் எடையோ பல டன்கள் இருக்கும் என அதன் பிரம்மாண்டமே கூறியது.

“உள்ள வா கா” என்றவன் முன்னே நடக்க, அவனை பின்தொடர்ந்தாள் ஆஷ்ரிதா.

வழியெங்கும் பாசிபிடித்தாற் போல மழுங்கிய பச்சை நிறம் காணப்பட்டாலும், எந்த ஒரு இடத்திலும் அவள் காலை அது வழுக்கி விடவில்லை. மாறாக பஞ்சு மெத்தையில் நடப்பது போல கால்களில் சுகம் கண்டு அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

குறுக்கும் நெடுக்கும் பாய்ந்திருக்கும் மரத்தின் வேர்கள், ஆங்காங்கே தென்படும் எட்டு கால் பூச்சியின் வலைகள், சுற்றத்திற்கு முற்றிலும் முரண்பட்டிருக்கும் மலர்களின் நறுமணம் என அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது அவ்விடத்தில்.

“தம்பி… இது என்ன இடம்? ரொம்ப வித்தியாசமா இருக்கு? இங்க எதுக்கு என்ன கூட்டிட்டு வர்ற?” – ஆஷ்ரிதா.

“எல்லாம் நீ வர வேண்டிய இடம் தான் கா… வா…” என்றவன் முன்னேறி நடந்துக்கொண்டே இருந்தான்.

‘பார்க்க வித்தியாசமா இருக்கேனு ஒரு ஆர்வத்துல இந்த பையன் கூப்பிட்டதும் உள்ள வந்துட்டேன்… ஆனால் உள்ள போக போக பயமா இருக்கே… இந்த குட்டி வேற ஏன்னவோ போல பேசுறான்… நல்லா மாட்டிகிட்ட டி அச்சு” என்று பீதியுடனே தன் நடையின் வேகத்தை குறைத்தாள் ஆஷ்ரிதா.

ஆஷ்ரிதாவின் காலடிகளின் சத்தம் மாற்றத்தை காண்பிக்க, அவள் புறம் திரும்பியவன், “என்ன கா… பயப்படாம வா…” என்றவன் தற்பொழுது அவள் கரத்தை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

‘அய்யோ… தப்பிச்சு ஓட கூட விட மாட்டான் போலயே’ என தன் மனதினுள் நினைத்தவள் “உனக்கு பயமா இல்லையா பா?? பலமுறை இங்க வந்திருக்க போல? அவ்வளவு பெரிய கதவையே அசால்ட்டா திறந்துட்டியே??” அடங்கமறுத்து தன் கேள்வியை கேட்டாள் ஆஷ்ரிதா.

“பல தடவ வருவேனா -வா?? இதுதான் நம்ம இடம் கா… ஹாஹா” – புன்னகைத்தான் அச்சிறுவன்.

“நம்மனு என்னையும் ஏன் குட்டி கூட்டு சேர்க்கற??” – திக்கியபடியே வார்த்தை வந்தது ஆஷ்ரிதாவுக்கு.

“அட… நான் தான் இருக்கேன் –ல… பயப்படாம வா கா…” – சிறுவன்.

“இன்னும் எவ்வளவு தூரம் தான் உள்ள போகனும்?? அனுமன் வால் மாதிரி போய்கிட்டே இருக்கே… தம்பி ஏதாவது பேச்சு கொடுத்துட்டே வாயேன்… அக்காவுக்கு பயமா இருக்குல…” – பாவமாய் கெஞ்சினாள் ஆஷ்ரிதா.

“தம்பி இருக்குறப்ப நீ ஏன் பயப்படுற??” – தன் நடையை நிறுத்திவிட்டு அவளை நோக்கி கேட்டு நின்றான் அச்சிறுவன்.

“இல்ல பா… இந்த இடமே ரொம்ப வித்தியாசமா இருக்கு!! இங்க ஒரு மரம் கூட இல்லை… ஆனா தரையில நிறைய இடத்துல வேர்கள் படர்ந்திருக்கு… வழியெல்லாம் பாசி பிடிச்சு இருக்கு… ஆனா எங்கையுமே சறுக்கல… சிலந்தி வலை இருக்கு… அதுல சிலந்தி இல்ல… இது எல்லாத்தையும் கூட விட்டுடலாம்… இங்க எங்கயுமே பூக்கள் இல்லை.. எங்க இருந்து இப்படி ஒரு வாசனை?? இடம் முழுக்க இவ்வளவு பளுதாகி கிடக்குறப்ப இங்க புழுங்குற நாற்றம் வராம இப்படி மணம் வீசுதுனா இது சாதாரணமான இடமா இருக்கும்னு எனக்கு தோணல..” என்றாள் ஆஷ்ரிதா.

“இது சாதாரண இடம் –னு நானும் சொல்லவே இல்லையே… உனக்கு தேவையானது இங்க தான் இருக்குது… நம்பிக்கையோட வா” என்றவன் மீண்டும் நடக்கலானான்.

“என்ன? எனக்கு தேவையானது இங்க இருக்கா? சி.சி.டி.வி. கேமரா இங்க எல்லாம் கிடைக்குமா?” என்று ஆஷ்ரிதா கேட்க அவளை திரும்பிப்பார்த்த அச்சிறுவன் தன் தலையில் அடித்துக் கொண்டு “மிஷின் –அ நம்புற உலகம் மனுஷன நம்புறதில்ல…” என்றான்.

‘என்ன இவன்? ஏழு அங்குலம் இருந்துகிட்டு ஏழாம் அறிவு இருக்குற மாதிரியே பேசிட்டு இருக்குறான்?!’ என யோசித்தவளை ஏற இறங்க பார்த்துவிட்டு “அக்கா… உனக்கு இப்ப தேவை படுறது சி.சி.டி.வி.-ஆ இல்ல உன் தங்கச்சியோட நிம்மதியா?” என்றான் பொட்டில் அடித்தாற் போல.

“என்… என் தங்கச்சி பத்தி உனக்கு எப்படி தெரியும்?? நீ யாரு?” -கேட்டாள் ஆஷ்ரிதா.

“உன்னோட எல்லா கேள்விகளுக்கும் இங்க பதில் இருக்கு… நீ வா” என்று அவன் கூறிய பின் இருவரும் சில அடிகள் எடுத்து வைக்க, அங்கே ஒரு நீள கதிர்வீச்சு மேலிருந்து கீழாக நிலைக்குத்தி நின்றிருந்தது. தங்க துகள்களாய் மின்னிக்கொண்டிருக்க, கண்கள் கூசும் அளவிலான பிரகாசத்தை உடைய அக்கதிர்வீச்சை கண்டு ஆஷ்ரிதாவால் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன டா குட்டி இது? சோலார் ரேஸ் போல இருக்குது? அதுவும் இவ்வளவு ப்ரைட்டா??” – வியப்போடு கேட்டாள் ஆஷ்ரிதா.

அவளது கேள்விக்கு சிறு புன்னகையை மட்டுமே விடையாகக் கொடுத்த அச்சிறுவன் தனது கரம் நீட்டி அந்த கதிர்வீச்சை கலைத்தான். காற்றில் மறையும் நீராவியாய் அந்த தேஜஸ் மறைந்திட, அவ்விடத்தில் தற்பொழுது ஒரு ஏடு மிதந்துக்கொண்டிருப்பது தென்பட்டது.

நடப்பவை அனைத்தும் கனவா நிஜமா என பிரித்து ஆராயும் முயற்சியில் ஆஷ்ரிதா ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதற்கு சிறிதும் கால அவகாச கொடுக்காமல் அடுத்தடுத்த மாயாஜாலங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தான் அச்சிறுவன்.

“இது என்ன –னு தெரியுமா கா உனக்கு?” என்று அவன் கேட்க, திக்பிரம்மை தெளிந்தவளாய் திடுக்கிட்டவள் “இல்லை” என மறுப்பாக தலையாட்டினாள் ஆஷ்ரிதா.

“உன் தங்கச்சி பத்தி எனக்கு எப்படி தெரியும்-னு கேட்டியே… இதுதான் எனக்கு சொல்லுச்சு!” – சிறுவன்.

“என்ன இது சொல்லுச்சா?” – ஒன்றும் புரியாதவளாய் ஆஷ்ரிதா.

“ஆமா… இது நம்மளோட ஜென்ம சாசனம்” – சிறுவன்.

“நம்மளோட ஜென்ம சாசனமா?? என்ன பேசுற நீ? நீ யாரு முதல? இது என்ன இடம்? இவ்வளவு பெரிய சிட்டிக்கு உள்ள யாருக்கும் தெரியாம இப்படி ஒரு இடமா? ஏதோ சரி இல்லை… ஒழுங்கா உண்மைய சொல்லு யாரு நீ?” – ஆஷ்ரிதா.

“உனக்கு உண்மை தெரியவேண்டிய காலம் கை கூடி வந்தாச்சு” – சிறுவன்.

“என்ன உண்மை?” – ஆஷ்ரிதா.

“ஒத்துமையா இருந்த உயிர் ஒத்தையில் விட்டுப்போட்டு ஓரமா போயிடுச்சு…
ஒத்தையா நின்ன உயிர் ஒத்துமையா இருக்கையில ஒன்னுமில்லாம ஆகிருச்சு…
ஒன்னுக்கொன்னா சுத்துறது ஒன்னுமேல நாலு கண்ணா ஒட்டிக்கிட்டு ஆடிருச்சு…
ஓயாம ஓடுறது ஒசத்தியா நினைக்கும் ஒன்னு ஒசந்த இடம் சேர்ந்துருச்சு…”

என்று தன் கண்களில் தீர்க்கத்தை நிறைத்து, பேச்சில் ஈட்டியை குழைத்து பாறை போல நின்று கூறினான் அச்சிறுவன். இதுவரை அவன் அன்பாய் அக்கா என்று பேசிய தொனிக்கும், தற்பொழுது விறைப்பாய் நின்று வசனம் பேசும் தொனிக்கும் இமாலய வித்தியாசத்தை உணர்ந்த ஆஷ்ரிதாவுக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

“தம்பி! உன் வயசுக்கும் நீ பேசுறதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல… நீ சொல்லுறது எதுவும் எனக்கு புரியல… தயவு செய்து சொல்லு… நீ யாரு?”

ஆகாசம் கிழிய “அர்ஜுன்” என்றான்.
அந்த சத்தத்தில் அவள் அலறிக்கொண்டு விழித்திட, சைக்கிள் ரிக்‌ஷா ஒரு வாரியாகக் குலுங்கி நின்றது.

“அக்கா… என்ன ஆச்சு??” – ரிக்‌ஷாவை ஓட்டிக்கொண்டு வந்த சிறுவன் கீழே இறங்கி வந்து பதட்டத்துடன் ஆஷ்ரிதாவிடம் கேட்டான்.

வாயை திறந்த வண்ணம் மூச்சு மேலும் கீழும் இழுத்து வாங்கியபடி, கண்களை அங்கும் இங்கும் உருட்டிக்கொண்டு இருந்தவளுக்கு தான் கனவு கண்டிருக்கிறோம் என்பது பிடிபட சில நிமிடங்கள் பிடித்தது.

தன் முகத்தில் பூத்திருக்கும் வியர்வை துளிகளைத் துடைத்துக்கொண்டவள், கைப்பையில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து தன் வாயில் சரித்துக்கொண்டாள். பின் ரிக்‌ஷாவை விட்டு கீழே இறங்கிவள் அந்த குடுவையில் மீதம் இருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவி, நிதானமடைந்து, ரிக்‌ஷா ஓட்டிவந்த சிறுவனை உற்று நோக்கினாள்.

“நீ சொன்ன வீடு வந்துருச்சு கா… பத்திரமா உள்ள போய்டுவியா? இல்ல சத்தம் கொடுத்து வீட்டுல இருந்து யாரையாவது உன்ன அழைச்சுட்டு போக சொல்லி கூப்பிடட்டுமா?” – பாந்தமாக கேட்டான் சிறுவன்.

ஆஷ்ரிதாவோ முற்றிலும் தெளிவடைந்த பாடில்லை. தான் கண்டது கனவா? என்ன கனவு இது? என்ற கேள்வி அவள் மூளையை மொய்த்துக் கொண்டிருந்தது. கனவில் கண்ட சிறுவனின் முகமும் தன் முன்னே நிற்கும் சிறுவனின் முகமும் வேறு வேறாக உள்ளதே? என்று குழம்பித் தவித்துக்கொண்டிருந்தவள் அந்த கனவினை மீண்டும் தன்னுள் அசைப்போடத் தொடங்கினாள். இந்த ரிக்‌ஷா பயணத்தை மையமாக கொண்டு வந்ததுதான் இந்த கனவு. அப்படி இருக்கையில் இந்த சிறுவன் முகம் எப்படி வேறு ஒரு முகமாக காட்சியளிக்கும் என்ற ஐயப்பாடு அவளுக்கு எழுந்த போதிலும், சில சமயங்களில் நடப்பவை தான் இவை என தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

இருந்தும், அவளை விடாமல் வெருட்டி ஓட்டிக்கொண்டிருந்தது அவளுக்குள் எதிரொலித்த “அர்ஜுன்” எனும் பெயர்.

“இது அம்மு தூக்கத்துல சொன்ன பெயர் தானே!!” அதீத யோசனையில் நின்றிருந்தாள் அவள்.

“அக்கா… என்ன ஆச்சு? பேயறஞ்சா மாதிரி நிக்குற?” – சிறுவன்.

“ஒன்னுமில்லை… ஆமா நான் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போகவா சொன்னேன்?” – சி.சி.டி.வி. வாங்க ஆயத்தமான விஷயம் நியாபகத்தில் வந்தவளாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“முதல்ல எங்கயோ கடைக்கு போகனும்னு வழி சொன்ன… அப்புறமா வேண்டாம் வீட்டுக்கு வண்டிய விடுனு சொல்லி அட்ரஸ் சொன்ன… நான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்… என்ன கா ஆச்சு?” – சிறுவன்.

“ஒன்னும் இல்ல குட்டி… தேங்க்ஸ்… இந்தா வச்சுக்க…” என ரிக்ஷாவுக்கான பணத்தை அவள் கையில் கொடுத்த ஆஷ்ரிதா வீட்டை நோக்கி நடந்தாள்.

உள்ளே நுழைந்ததும் ஒரு கணம் தயங்கி நின்றவள் தன் முகத்தின் பாவணையை நிதானமாக்க மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டாள். காரணம், அங்கு அவளுக்கு முன்பாகவே வந்து அமர்ந்திருந்தாள் அம்ரிதா.
(களவாடுவான்)