Kanavu 17

கனவு – 17

“அம்மு… நான் காலை சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன்…” என சோபாவில் இருந்து எழுந்தான் திரவியம்.

“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” அனேகனும் உடன் எழுந்தான்.

“இல்ல இருக்கட்டும்… நானே போய்டுவேன்… பக்கத்துல தான்…” என்று கூறிய திரவியம் அங்கு ஒரு வினாடி கூட நிற்கவில்லை.

திரவியம் சென்றதும் அனேகன் திரும்பி இரட்டை சகோதரிகளை காண, ஆஷ்ரிதா மட்டும் ‘சாரி’ என்பது போல கண்களால் கெஞ்சினாள். “நோ ப்ராப்ளம்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்துக்கொண்டான் அனேகன்.

“அச்சு… நீ போய் முகத்த கழுவிட்டு வா…” என்று அம்ரிதா ஆஷ்ரிதாவை பணிக்க, அவளும் எழுந்து உள்ளே சென்றாள்.

தற்பொழுது ஹாலில் தனிமையில் விடப்பட்ட அனேகனுக்கும் அம்ரிதாவுக்கும் இடையில் சில மணித்துளிகள் அமைதியாய் விளையாடின. அனேகனது பார்வை, கலைந்த குழலோடு வாடிய மலரை போல அமர்ந்திருக்கும் அம்ரிதாவை தொட்டுத் தொட்டு மீண்டது.

‘இத்தனை அருகில் இருந்தும் என்னை யார் என உணராமல் சிவனே என அமர்ந்திருக்கிறாளே!’ என அவனது மனம் கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருந்தது. அதனை சிறிதும் தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் எந்த சலனமும் இல்லாதவன் போல அமைதியாய் அமர்ந்திருந்தான் அனேகன்.

“ரொம்ப தேக்ஸ் சார்…” மெளனத்தை உடைத்து தானே தொடங்கினாள் அம்ரிதா.

“எதுக்கு?” – அனேகன்.

“கூப்பிட்ட உடனே என்ன ஏதுனு கூட கேட்காம ஓடி வந்துட்டீங்க… டைம்லி ஹெல்ப்… நீங்க இல்லைனா நான் எப்படி சமாளிச்சிருப்பேன் –னு தெரியல…” சிறிதாய் புன்னகைத்தாள் அம்ரிதா.

“இதுல என்ன இருக்கு…” அனேகன் சொல்லும்போதே அங்கு வந்திருந்தாள் ஆஷ்ரிதா.

“இல்ல சார்… நேத்து தான் உங்க அப்பாவோட காரியம் எல்லாம் முடிஞ்சுது… அதுக்குள்ள நான்…” என்று இழுத்தவள் ஆஷ்ரிதாவை கண்டதும் “இது என் அக்கா ஆஷ்ரிதா… அச்சு… இதுதான் என் மேனேஜர் மோகனோட பையன்… அனேகன்…” என்றாள்.

ஆஷ்ரிதாவோ செய்வதறியாது திகிலுடன் விழித்துக்கொண்டிருந்தாள்.

“ஆமா… நீங்க அக்கா நம்பருக்கு தானே கால் பண்ணீங்க? அக்காவ ஏற்கனவே தெரியுமா உங்களுக்கு?” புதிரை நினைவுக்கூர்ந்து கேட்டாள் அம்ரிதா.

“ஆமா… எனக்கு தெரியும்…” – மிகவும் சாந்தமாகதான் கூறினான் அனேகன். ஆஷ்ரிதாவுக்கு தான் பீதியை கிளப்பியது.

“இஸ் இட்? அச்சு உனக்கு இவர தெரியுமா?” இப்பொழுது ஆஷ்ரிதாவிடம் கேட்டாள்.

அவன் தான் தெரியும் என கூறிவிட்டானே! பற்றாக்குறைக்கு அலைபேசியின் அழைப்பை வேறு அம்ரிதா பார்த்துவிட்டாள். இல்லை என்று சொல்லதான் முடியுமா? சொன்னாலும் அவள் தான் நம்புவாளா? அதனால் நடுக்கத்தோடு “ஆம்” என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் ஆஷ்ரிதா.

“எப்படி தெரியும்?” அம்ரிதா அடுத்த கேள்வியை கேட்டவும் உள்ளே வந்திருந்தான் திரவியம்.

“இந்தா அம்மு… எல்லாருக்கும் இட்லி வாங்கிருக்கேன்” என நீட்டினான்.

“சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்று எழுந்த அம்ரிதா, உணவை மேசையில் பரத்த ஆரம்பித்தாள்.

“எனக்கு சாப்பாடு வேணாம் அம்மு… தலை வலிக்குது… வாந்தி வரும்போல இருக்கு…” – ஆஷ்ரிதா.

“வயிறுல எதும் இல்லைனா புரட்ட தான் செய்யும்… நீ வா…” என அவளை இழுத்து அமர்த்திய அம்ரிதா அனேகன் மற்றும் திரவியத்தை பார்த்து “நீங்க ரெண்டு பேரும் கைய கழுவிட்டு வாங்க… சாப்பிடலாம்…” என்றாள்.

ஆஷ்ரிதாவுக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்ட அம்ரிதா, அனேகனுக்கும் திரவியத்திற்குமான பார்சலை அவர்கள் அருகே நகர்த்தினாள்.

திரவியம் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து பார்சலை எடுக்க தத்தளித்துக்கொண்டு இருக்க, அவனருகே இருந்த அனேகன் சுலபமாய் இரண்டு பார்சலையும் எடுத்து ஒன்றை திரவியத்திடம் கொடுத்தான்.

“எவ்வளவு வளர்ந்திருக்கான் பாரு… வளர்ந்து கெட்டவன்… இவன் கையால வாங்கி சாப்பிடனும்னு தலையில இருக்கு” என்று தன் வாய்க்குள் அர்ச்சித்துக்கொண்டு அந்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டான்.

“மிஸ்டர்… நேத்துல இருந்து ஏதோ என்ன திட்டிட்டே இருக்கீங்க போல தெரியுதே?” திரவியத்தை நோக்கி கேட்டான் அனேகன்.

“அதான் பேரு கேட்டு தெரிஞ்சிகிட்டீங்கள்ள? அப்பறம் என்ன மிஸ்டர்? திரு –னு கூப்பிடுங்க?” கொதித்தபடி கூறினான் திரவியம்.

“ரெண்டும் ஒன்னுதான்… நீங்க தமிழ் –ல சொல்றீங்க… நான் இங்கிலீஷ் –ல சொல்லுறேன்… ஹேவ் ஃபன் ப்ரோ” – அனேகன்.

“சகிக்கல…” என்றான் திரவியம்.

அனேகன் எதையும் பெரிதாய் சட்டை செய்துக்கொள்ள மாட்டான் என்பதால் திரவியம் வெடித்து சிதறிய வண்ணம் பேசுவதை தன் மூளை வரை எடுத்துச் செல்லவில்லை அவன். ஆனால் அம்ரிதாவோ ஒன்றும் விளங்காமல் இவர்கள் இருவருக்கும் ஏன் முட்டிக்கொள்கிறது என்ற யோசனையில் பார்த்துக் கொண்டிருக்க, எல்லாம் அறிந்த ஆஷ்ரிதாவால் அமைதியாய் இருக்க முடியவில்லை. தேவையற்ற பிரச்சனை அங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் “திரு ஸ்டாப் இட்…” என்று முதலில் அவனை மிரட்டியவள் பிறகு பொதுவாக “சாப்பிடும் போது எதுக்கு இது எல்லாம்… அமைதியா சாப்பிடுங்க…” என்றாள்.

அவளை காரமாக ஒரு பார்வை பார்த்த திரவியம் நாற்காலியில் இருந்து எழுந்துக் கொள்ள முற்பட்டான். அவனது செயலை முன்னதாகவே யூகித்த அம்ரிதா விரைந்து அவன் அருகில் சென்று அவனை நாற்காலியோடு அழுத்திப் பிடித்தாள்.

“மவனே… எழுந்திருச்ச… செத்த… நீ இத தான் செய்யுவனு எனக்கு தெரியும்… ஒழுங்கா சாப்பிட்டு முடிச்சிட்டு எழுந்திரு… உங்க டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்ட அப்பறமா வச்சிக்கலாம்” என்று கூறியதோடு திரவியத்தின் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு மீண்டும் ஆஷ்ரிதாவுக்கு உணவை ஊட்டிவிடத் தொடங்கினாள்.

அனேகனோ நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, தான் உண்டு தன் உணவு உண்டு என சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“போதும் டி… நீ சாப்பிடு…” ஆஷ்ரிதா அம்ரிதாவிடம் கூற,

“இன்னும் மிச்சத்த சாப்பிடு… நான் வேற வச்சி சாப்பிடுறேன்…” என்று தட்டில் வைத்திருந்த மொத்தத்தையும் ஆஷ்ரிதாவின் வாய் –க்குள் நுழைத்த பின்பு தான் அவள் தன் வயிறுக்கு உணவெடுத்துக் கொண்டாள்.

அனைவரது வயிரும் சமாதானமானாலும் மனம் சமாதானமாகவில்லை. உணவு உண்டு வெகு நேரம் அனைவரும் அமைதியாய் இருப்பதை கண்டவுடன்,

“ஆளாளுக்கு மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்… அடுத்த வேலைய பாருங்க…” என்று அனேகன் கூற, அது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதாயிற்று.

“உங்கள மாதிரி கல்லு மனச எல்லாராலும் இருக்க முடியாது மிஸ்ட்ட். அனேகன்…” என்றான் திரவியம்.

“திரு…” – அதட்டினாள் ஆஷ்ரிதா.

“என்ன அச்சு? இதுக்கு மேல என்னால் சும்மா இருக்க முடியாது… இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகனும்…” – கொந்தளித்தான் திரவியம்.

“என்ன டா திரு? என்ன தெரியனும்?” ஒன்றும் புரியாதவளாய் கேட்டாள் அம்ரிதா.

“எல்லாம் உன் அக்காவுக்கு தெரியும்… அவகிட்டயே கேளு… இதோ நிக்குறானே அனேகன்… இவன் யாருனு கேளு… இவன் என்ன செஞ்சான் –னு கேளு” தீக்கனலின் பொறியாய் பறந்தது திரவியத்தின் கேள்விகள்.

ஆரம்பத்தில் திரவியத்தின் நடவடிக்கைகளை ஒன்றும் இல்லாததாகக் கருதிய அனேகனுக்கு தற்பொழுதும் அவ்வாறு நினைக்க முடியவில்லை. போருக்கு தயாராகும் வீரன் போல முகத்தை திடமாக வைத்துக் கொண்டு, புருவத்தை சுருக்கி, நெஞ்சை நிமிர்த்தி நின்று திரவியத்தை கூர்மையாகப் பார்த்தான் அனேகன்.

“திரு… ஸ்டாப் இட்… இத பேசுறதுக்கு இட்ஸ் நாட் தி ரைட் டைம்…” கத்தினாள் ஆஷ்ரிதா.

“ஏய்… நீ ஏன் டி இவ்வளவு டென்ஷன் ஆகுற? அமைதியா இரு!” – அம்ரிதா.

“இல்ல அம்மு… உனக்கு ஒன்னும் தெரியாது… நீ உள்ள போ… நான் பேசிக்கறேன்…” – படபடத்தாள் ஆஷ்ரிதா.

“எனக்கு தெரியாம அப்படி என்ன தான் டி நடக்குது உங்க மூனு பேருக்கும் இடையில?” – விளங்காமல் கேட்டாள் அம்ரிதா.

“அம்மு உன்ன உள்ள போக சொன்னேன்” மீண்டும் கனைத்தாள் ஆஷ்ரிதா.

“எதுக்கு அச்சு? நான் ஏன் உள்ள போகனும்? நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுற அளவு என்ன நடந்தது? இந்த வீட்டுல என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க எனக்கு உரிமை இல்லையா?” – அம்ரிதா.

“அய்யோ அம்மு… தயவு செஞ்சி நான் சொல்லுறத புரிஞ்சிக்கோ… நீ உள்ள போ… ஏற்கனவே டென்ஷன் ஆகி கத்தி பொன்னம்மாவ இழந்துட்டேன்… இனி இருக்கறது நீ மட்டும் தான்… உன்னையும் இழக்க நான் தயாரா இல்ல அம்மு… ப்ளீஸ்… கோ இன்சைட்…” – ஆஷ்ரிதா.

“ஹேய்… என்ன டி லூசு மாதிரி பேசுற?” – அம்ரிதா.

“ஆஷ்ரிதா… பொன்னம்மா உன்னால இறக்கல… இட்ஸ் அ சிவியர் அட்டாக்… பிரெஷர் வேற ரொம்ப அதிகமா இருந்துருக்கு… இது நடக்குறது தான்… டோண்ட் பீ கில்டி…” சாந்தப்படுத்தினான் அனேகன்.

“இல்ல… நான் தான்… நான் தான் பொன்னம்மாவ கவனிக்காமலே விட்டுட்டேன்…” என ஸ்ருதியெடுத்து அழத் தொடங்கினாள் ஆஷ்ரிதா.

“அச்சு அப்படி இல்ல டா” அவளது அருகே நெருங்கினான் திரவியம்.

“நீ அங்கேயே நில்லு… கிட்ட வராத… எல்லாம் உன்னால தான்… என்னைக்கு நீ இந்த விஷயத்துல உள்ள வந்தியோ அன்னைல இருந்து தான் ஏகப்பட்ட குழப்பம்…” – கண்கள் விரிய பல்லை கடித்துக்கொண்டு கூறினாள் ஆஷ்ரிதா.

இதுவரை இவர்களுக்கு இடையில் வரும் சண்டைகளை வெறும் விளையாட்டு என எண்ணிக்கொண்டிருந்த அம்ரிதாவின் நினைப்பு இன்று சுக்கு நூறாய் போனது. இருவருக்குள்ளும் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது என தனக்குள் சொல்லிக் கொண்டவள் நிலமையை சரி செய்யும் பொருட்டு,

“அச்சு… ஷட் யுவர் மெளத்… உங்களுக்குள்ள என்ன ப்ராப்ளம் வேணும்னாலும் இருக்கட்டும்… ஆனா வீட்டுக்கு கூப்பிட்டு வச்சி இப்படியா பேசுறது? நைட் நான் கால் பண்ண உடனேயே ஓடி வந்தான் திரு… அவன்கிட்ட இப்படியா பிஹேவ் பண்ணுவ நீ?” – அம்ரிதா.

“அவன எதுக்கு நீ வர சொன்ன? நானா கூப்ட சொன்னேன்?” – ஆஷ்ரிதா.

“அச்சு… எவ்ரிதிங் ஹெஸ் அ லிமிட்… நேத்து நீ வெக்ஸ் ஆனத பார்த்து அவன் எவ்வளவு ஃபீல் பண்ணான் –னு தெரியுமா?” என்று அம்ரிதா பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அங்கு வந்திருந்தார் திரவியத்தின் தாயார்.

பொன்னம்மாவின் விஷயம் கேள்விப்பட்டு திரவியம் முந்தைய தினம் இரவு கிளம்பும்போதே தானும் உடன் வருவதாய் கூறியிருந்தார் அவனின் தாயார். இரவு வெகு நேரம் ஆகிவிட்ட காரணத்தினால், தான் மட்டும் இப்போது செல்கிறேன் என்றும், வீட்டை கண்டுக் கொண்ட பின்னர் அவர்கள் வழக்கமாக சவாரி செய்யும் ஆட்டோ ட்ரைவரிடம் முகவரியை சொல்லி காலையில் தங்களை அழைத்துக் கொள்கிறேன் எனவும் கூறியிருந்தவன், உணவு வாங்க சென்றிருந்த நேரம் அந்த வேலையை செய்து முடித்திருந்தான்.

எதிர்பாராத சமயம் உள்ளே வந்த திரவியத்தின் தாயாரை கண்டு அனைவருமே தங்கள் வாக்குவாதத்தை நிறுத்தியிருந்த நேரம்,

“என்ன பசங்களா ஆச்சு? சத்தம் வெளியில வர கேட்குது?” என்றார் திரவியத்தின் தாய்.

“என் அம்மா” என்று அனைவரிடமும் கூறினான் திரவியம்.

“அம்மா… வாங்க மா… உட்காருங்க…” அம்ரிதா கூறிட, ஆஷ்ரிதா எழுந்து நின்றாள்.

“இதுல அச்சு யாரு, அம்மு யாரு??” தளர்ந்த குரலில் கேட்டார் அவர்.

“நான் தான் மா அம்மு… இவ அச்சு…” என்று தங்களை அம்ரிதா அறிமுகப்படுத்த, ஆஷ்ரிதா வணக்கம் மட்டும் வைத்துவிட்டு அமைதியாய் நின்றாள்.

“சரி… சரி… விஷயத்த சொன்னான் பையன்… கஷ்டமா போய்டுச்சு… நைட் கிளம்பி வரனும்னு தான் நினைப்பு… திரு தான் வேணாம்னு சொல்லிட்டான்” – திரவியத்தின் தாய்.

“பரவாயில்ல மா… திரு ரொம்பவே உதவி பண்ணாரு… இது என் மேனேஜரோட பையன்… பேரு அனேகன்…” – அம்ரிதா.

“வாங்க தம்பி” – திரவியத்தின் தாய்.

“வணக்கம் மா” என்ற அனேகன், அவரது பாதத்தை தொட்டு வணங்கினான்.

இதை கண்ட திரவியத்திற்கு ஆத்திரம் எல்லை மீறியது. “எங்க இருந்துதான் படிக்கிறானுங்களோ இப்படி ஏமாத்துறதுக்கு” என்று வாய்க்குள் கூறிக்கொண்டு தன் பற்களை நறுநறுத்தான்.

“நல்லா இருப்பா” என அவன் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் திரவியத்தின் தாயார்.

“அம்மா… சாப்பிடுங்க… வாங்க…” – அம்ரிதா.

“இல்ல தங்கம்… இருக்கட்டும்… நான் சாப்பிட்டு தான் வந்தேன்… வருத்தப்பட்டுக்காம இருங்க சரியா… படிச்ச புள்ளைங்க… வாழ்க்கைய புரிஞ்சு நடந்துக்கோங்க…” அக்கறையாய் கூறியவரிடம்

“சரிங்க மா” என்றனர் ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும்.

“சரி… இன்னொரு வேலை இருக்கு… நான் கிளம்புறேன்… திரு… புள்ளைங்களுக்கு என்ன தேவை -னு இருந்து கவனிச்சுட்டு வா பா” என சொல்லிவிட்டு நாகரிகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டார் அவன் தாயார்.

தன் அம்மாவை வாசல் வரை சென்று வந்த ஆட்டோவிலேயே ஏற்றிவிட்டவன் “ஜாக்கிரதையா கூட்டிட்டு போங்க அண்ணே” என்று கூறிவிட்டு மீண்டும் அம்ரிதாவின் வீட்டிற்குள் வந்தான் திரவியம்.

“அச்சு… ஐ அம் சாரி… உன் வீட்டுல இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது இத நான் பேசுறது சரியா தப்பானு எனக்கு தெரியல… ஆனா இப்பதான் இவன் கையும் களவுமா மாட்டியிருக்கான்… இந்த சந்தர்ப்பத்த விட்ட அடுத்து இவன பிடிக்க முடியாது” உறுதியாய் பேசினான் திரவியம்.

“என்ன கையும் களவுமா மாட்டியிருக்கானா?” இம்முறை சினந்துக்கொண்டது அம்ரிதா.

“ஆமா அம்மு… அவனோட அப்பா முந்தானேத்து தானே இறந்தாரு?” – திரவியம்.

“ஆமா… நியூஸ் –ல பார்த்தியா நீ?” – அம்ரிதா.

“இல்ல… நேர் –ல பார்த்தேன்…” – திரவியம்.

“என்ன நேர்ல பார்த்தியா??” – அதிர்ச்சியில் உறைந்தாள் அம்ரிதா.

“திரு…” – கத்தினாள் ஆஷ்ரிதா.

“சும்மா கத்தாத அச்சு… உன் முன்னாடி தானே நிக்கறான்… கேளு அவன்கிட்டயே… நான் உன்கிட்ட சொன்ன ஒவ்வொன்னும் உண்மை… அதனால தான் சம்பத்தப்பட்ட ஆள முன்னாடி வச்சிட்டே இவ்வளவு தைரியமா பேசுறேன்… இத விட பெரிய ஆதாரம் வேணுமா அச்சு உனக்கு?” – திரவியம்.

ஆஷ்ரிதாவுக்கு எல்லாம் தெரியும் என திரவியம் சொன்னதோடு இப்போது அவன் அவளிடும் பேசிக்கொண்டிருக்கும் விதத்தில் இருந்து ஆஷ்ரிதா தன்னிடம் பெரிதாய் ஏதையோ மறைத்திருக்கிறாள் என்று புரிந்து போனது அம்ரிதாவுக்கு. அதனால், வாயடைத்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறிது நேரம்.

“நீ சொல்றது உண்மையாவே இருந்துட்டு போகட்டும் திரு… அத பத்தி உனக்கு என்ன கவலை? அவர கேள்வி கேட்குற உரிமைய உனக்கு யாரு கொடுத்தா?” – கொந்தளித்தாள் ஆஷ்ரிதா.

“வாட்..? வாட் அச்சு? கம் அகெய்ன்!! இப்ப வரைக்கும் நான் ஏன் இப்படி காட்டுக் கூப்பாடு போடுறேன் –னு உனக்கு புரியலையா அச்சு??” – தன்னை எடுத்தெறிந்து பேசும் ஆஷ்ரிதாவிடம் வேதனையாய் கேட்டான் திரவியம்.

“திரு ப்ளீஸ்… எனஃப்… நான் படுற அவஸ்தை உனக்கு தெரியும்… தெரிஞ்சே இப்படி பண்ணாத… இதுக்கு மேல என்னால உன்கிட்ட கெஞ்ச முடியாது… உன் காலுல வேணும்னாலும் விழுறேன்… இதோட விடு” – கெஞ்சினாள் ஆஷ்ரிதா.

ஆஷ்ரிதாவின் இந்த வார்த்தைகள் திரவியத்தின் மனதை கீறாமலே இரத்தம் சொரியச்செய்தது. அதன் வேகத்தை எல்லாம் திரட்டி அனேகனை நெருங்கியவன், அவனது சட்டையை கழுத்துக்கு கீழ் கூட்டிப் பிடித்து இழுத்து “டேய்… சொல்லு டா… உண்மைய சொல்லு…” என்று உலுக்கினான்.

திடுமென அவன் அனேகனின் சட்டையை பிடித்ததில் அதிர்ந்துப்போன ஆஷ்ரிதா “திரு… வாட் நான் சென்ஸ் யூ ஆர் டூயிங்…” என கத்தினாள். அம்ரிதா ஒரு படி மேலே சென்று திரவியத்தை தள்ளியே விட்டிருந்தாள்.

“நீ தள்ளு அம்மு… இன்னைக்கு அவன…” என்று அம்ரிதாவை தாண்டி அனேகனை நெருங்க சென்ற திரவியத்தைப் பற்றி தன் பக்கம் இழுத்தாள் ஆஷ்ரிதா. அவள் இழுத்த இழுப்பில் கால் தடுக்கி ஆஷ்ரிதாவும் திரவியமும் ஒருவர் மேலே ஒருவர் விழ,

“அய்யோ அச்சு…” என ஓடிச் சென்று தூக்கினாள் அம்ரிதா. அனேகன் அமைதியாய் கசங்கிய தனது சட்டையை சரி செய்துக் கொண்டிருந்தான்.

“சாரி அச்சு… ஐ அம் சாரி… ஆர் யூ ஓகே” – திரவியம்.

பதில் ஏதும் சொல்லாமல் முறைத்தபடியே இருந்தாள் ஆஷ்ரிதா. பதறியபடி அவளது முதுகை தடவிக்கொடுத்த அம்ரிதா,

“திரு… ப்ளீஸ்… என்ன தான் நடக்குது இங்க?? யாராவது சொல்லுங்க… அனேகன்… நீங்களாவது சொல்லுகளேன்… இவன் உங்க பேர சொல்லி இவ்வளவு ஆர்பாட்டம் பண்ணுறான்… ஏன் சிலையாட்டம் நிக்குறீங்க??” அழுதுக்கொண்டே கேட்டாள்.

அனேகன் அசைந்தானில்லை. ஆகையால் மீண்டும் திரவியத்தை திரும்பிப் பார்த்தாள் அம்ரிதா.

“அம்மு… மோகனோட டெத் ஆக்‌ஷிடட் இல்ல… இட்ஸ் அ மர்டர்… அத செஞ்சது…” என ஒரு சின்ன இடைவெளி விட்ட திரவியம் “இதோ நிக்குறானே தி க்ரேட் அனேகன்… இவன் தான்…” என்றான்.

திரவியம் சொன்ன விஷயத்தை அம்ரிதா தன்னுள் கிரகித்துக் கொண்டு, தான் காதில் கேட்ட விஷயம் நிஜம்தான் இது பிரம்மை அல்ல என்று அவள் உணர்ந்து ஊர்ஜிதப்படுத்தும் முன்னர் அது நடந்திருந்தது.

ஆம்… அனேகனை ஓங்கி ஒரு கை பலமாக அறைந்திருந்தது.

(களவாடுவான்)