Oviyam 8

மாதவி மெதுவாகப் புரண்டு படுத்தாள். இன்றைக்கு ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பிக்கிறது. பாவம், அம்மாவிற்கு அதற்கு முன்பாகக் கொஞ்சம் காய்கள் நறுக்கிக் கொடுக்க வேண்டும். தனியாகக் கிடந்து அல்லாடுகிறார்.
அன்றைய நாளை மனதுக்குள் திட்டமிட்டபடி தலையணையில் முகத்தை மெதுவாகப் புரட்டினாள். எதுவோ வித்தியாசமாக இருந்தது. அவள் தலையணை இத்தனை தூரம் மெத்து மெத்தென்று இருக்காதே!
மெதுவாகக் கண் விழித்தாள் மாதவி. தலை லேசாகப் பாரமாக இருந்தது. இது தனது ரூம் இல்லை என்பதை மூளை லேசாக உணர்த்த அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
தான் எங்கே இருக்கிறோம்? இது யார் வீடு? நான் எப்படி இங்கே வந்தேன்?
எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதத் தன்னை அவசரமாகக் குனிந்து பார்த்தாள். நேற்று ஃபங்ஷனுக்கு அணிந்து போன அதே பட்டுப்புடவை.
நேற்று ஃபங்ஷனில் லேசான மயக்கம் வந்ததே! அப்போதுதான் டாக்டர் செழியனோடு காரில் புறப்பட்டது மாதவிக்கு ஞாபகம் வந்தது. அதன்பிறகு என்ன ஆனது? டாக்டர் எங்கே?
கட்டிலை விட்டு அவசரமாக எழுத்தவள் தலையைக் கையால் கோதிக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தாள். இளஞ்செழியன் ஹாலில் நின்றபடி எதிரே தெரிந்த அந்த மலையைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான். டாக்டரைப் பார்த்தபோதுதான் மாதவிக்கு லேசாக மூச்சு வந்தது.
“டாக்டர்!” அவள் அதிர்ந்த குரலில் சட்டென்று திரும்பினான் இளஞ்செழியன்.
“மாதவி… எந்திரிச்சுட்டீங்களா?” நிதானமாக வந்தது அவன் குரல்.
“டாக்டர்! நாம இங்க என்ன பண்ணுறோம்? இது யார் வீடு? நான் எப்படி இங்க வந்தேன்?”
“மாதவி… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…”
“ஐயையோ! வீட்டுல என்னைத் தேடுவாங்க டாக்டர்.‌ நைட் பூரா நான் இங்கேயா இருந்தேன்?”
“மாதவி…‌ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?”
“நான் வீட்டுக்குப் போகலைன்னா அங்க எல்லாரும் துடிச்சுப் போவாங்க டாக்டர். உங்களுக்குத் தெரியாது.”
“நீங்க எங்கூடத்தான் இருக்கீங்கன்னு உங்க வீட்டுல மட்டுமில்லை… எங்க வீட்டுலயும் தெரியும்.” நிறுத்தி நிதானமாக செழியன் சொல்ல மாதவி டாக்டரை விழியகலப் பார்த்தாள்.
“புரியலை டாக்டர்.”
“போய் ப்ரஷ் பண்ணிக்கிட்டு வாங்க. எல்லாத்தையும் சொல்றேன்.”
“கார் வழியில பழுதாப் போச்சா டாக்டர்?” முட்டாள்தனமான கேள்வி என்று தெரிந்த போதும் கேட்டாள் பெண். செழியன் சின்னதாகப் புன்னகைத்தான்.
“போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான்தான் எல்லாத்தையும் சொல்லுறேன்னு சொல்றேன் இல்லை…”
“அம்மா… தேடுவாங்க…”
“அருண் கிட்டத் தகவல் சொல்லிட்டேன். உங்கக்கா எங்கூடத்தான் இருக்கான்னு… போதுமா? இப்போவாவது ப்ரஷ் பண்ணுற ஐடியா இருக்கா? இல்லை இதுதான் பழக்கமா?” அவன் கேலியில் இறங்க இப்போது பெண்ணும் புன்னகைத்தாள். வீட்டிற்குத் தகவல் போய் விட்டது என்ற ஒன்று மட்டுமே அவளுக்குப் போதுமானதாக இருக்க மனம் லேசானது.
“டாக்டர்… ஐயையோ! எனக்கு இன்னைக்கு ஒன்பது மணிக்கு ட்யூட்டி.” மாதவி பதற… செழியனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
தானொரு அந்நிய ஆடவனுடன் யார் வீடென்றே தெரியாத இடத்தில் ஒரு ராத்திரி முழுவதும் தங்கி இருந்திருக்கிறோமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல்…
அம்மா தேடுவார்கள்… வேலைக்கு நேரமாகிறது… என்று வருந்தும் பெண்ணை என்னவென்று சொல்வது? அவளின் அவன் மீதான அந்த நம்பிக்கையில் இப்போது வாய்விட்டுச் சிரித்தான் இளஞ்செழியன்.
தூங்கி எழுந்ததால் கலைந்து போயிருந்தாள் பெண். அவள் கூந்தலிலிருந்து பிரிந்து கிடந்த ஒன்றிரண்டு மயிர்க்கற்றைகள் அவளுக்கு இன்னும் எடுப்பாக இருந்தது.
காதோரம் ஆடிய ஜிமிக்கி, காய்ந்திருந்த மல்லிகைச் சரத்தில் சிக்கியிருந்தது. நேற்று இரவு காரிலிருந்து அவளை அள்ளிக்கொண்டு உள்ளே வந்த போது அவள் கூந்தலில் மணம் பரப்பிய மல்லிகையின் வாசத்தை இப்போதும் அவன் நாசி உணர்ந்தது.
“மாதவி… ப்ளீஸ்…” ரூமை நோக்கி அவன் கையைக் காட்ட இப்போது எதுவும் பேசாமல் எழுந்து போனாள் பெண்.‌ அவள் திரும்ப வந்தபோது சூடாக ஆவி பறக்க டீ காத்திருந்தது.
வெளியே மழை பெய்த அறிகுறிகள் தென்பட அந்த நேரத்திற்குச் சூடான டீ இதமாக இருந்தது. டீயைப் பருகிய போதும் அவள் கண்கள் தன்னையே வட்டமிடுவதை செழியனால் உணர முடிந்தது. அவள் முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தான்.
“மாதவி…”
“சொல்லுங்க டாக்டர்.”
“இன்னும் ஒரு வாரத்துக்கு நாம இங்கதான் தங்கப் போறோம்.”
“எதுக்கு?”
“……………”
“டாக்டர்… எனக்கு…”
“என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடு மாதவி.”
“…………!”
“நான் உனக்கு டாக்டரா? எதுக்கு எப்பப் பாரு என்னை டாக்டர் டாக்டர் எங்கிறே?”
“வேற… எப்படிக் கூப்பிடுறது?”
“ஏன்? எனக்குப் பெயர் இல்லையா?”
“அதுக்காக… சட்டுன்னு கூப்பிட்டுற முடியுமா டாக்…”
“நீ கூப்பிடத்தான எனக்குப் பெயர் வெச்சிருக்காங்க. அதால நீ தாராளமாவே கூப்பிடலாம்.” செழியனின் பேச்சில் வியந்தது பெண்.
“புரியலை…” அவள் பதிலில் செழியனுக்கு இப்போது லேசாகக் கோபம் வந்தது. இவளுக்கு உண்மையாகவே புரியவில்லையா? இல்லை… புரியாதது போல நடிக்கிறாளா?
“இந்தச் செழியன் வாழ்க்கையில வந்த முதல்ப் பொண்ணும் நீதான்… கடைசிப் பொண்ணும் நீதான். நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை. ஆனா… இந்த ஒரு வாரம் எனக்கு மட்டும். இந்த மாதவி எனக்கு மட்டும் தான்.”
அவன் சொல்லி முடிக்க மாதவியின் நெற்றியில் சில சுருக்கங்கள். சோஃபாவில் அமர்ந்திருந்தவள் தன்னிச்சையாக எழுந்து நின்றாள்.
‘மாதவி எனக்கு என்றால்… என்ன அர்த்தம்?’ மாதவியின் மன ஓட்டம் இப்படித்தான் இருந்தது.
“மாதவி! உம்புத்தி இப்போத் தப்புத் தப்பா யோசிக்குது. அது இந்த இளஞ்செழியனுக்குக் கொஞ்சமும் பொருந்தாது.” அவள் எண்ணவோட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டான் டாக்டர்.
மாதவி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அப்படியே நின்றிருந்தாள். டாக்டர் சொன்னதன் அர்த்தம் அவளுக்கு அத்தனை தெளிவாகப் புரியவில்லை. அதற்காக தன்னெதிரில் நிற்கும் மனிதன் மேல் அவளுக்குக் கிஞ்சித்தும் சந்தேகமோ, கிலியோ தோன்றவில்லை தான். ஆனாலும்…
“டாக்டர்…”
“அப்படிக் கூப்பிடாதே மாதவி… ப்ளீஸ்…”
“எங்க வீட்டுல என்ன சொன்னீங்க?”
“மாதவி இன்னும் ஒரு வாரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டா… எங்கூடப் பத்திரமா இருக்கா. அதால எந்தக் கவலையும் படாம நீங்க வழமை போல உங்க வேலையைப் பாருங்கன்னு சொன்னேன்.”
“யாருக்கிட்ட?”
“அருணுக்கிட்ட.”
“ஆண்டவா!” மாதவி தலையில் கையை வைத்துக்கொண்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்து விட்டாள்.
“எனக்கு வேற வழி தெரியலை மாதவி. என்னோட நிலைமையில இருந்து யோசிச்சுப் பாரு. நானா உம்மேல ஆசைப்படலை. அங்கிள் தான் இந்தப் ப்ரப்போஸலையே கொண்டு வந்தாங்க. எங்கம்மாக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால தான் உன்னைப் பார்க்கவே வந்தாங்க.”
“உங்கம்மா… உங்கம்மா எப்போ என்னைப் பார்க்க வந்தாங்க?”
“அன்னைக்கு அங்கிளோட கோயிலுக்கு வந்திருந்தது எங்க அம்மாதான்.”
“ஓ…!”
“எல்லாருமாச் சேந்து ஆசையைக் காட்டிட்டு இப்போ என்னை நிராகரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்? ஏன் யாரும் என்னைப்பத்தி யோசிக்க மாட்டேங்கிறீங்க?”
“…………”
“அப்படி எந்த வகையில நான் குறைஞ்சு போயிட்டேன் மாதவி?” இந்தக் கேள்வியில் மாதவி திடுக்கிட்டுப் போனாள்.
“உனக்கு நான் பொருத்தமில்லையா மாதவி? நீ சொல்லு… உங்க வீட்டுல இருக்கிற அத்தனை பேரும் என்னை ஒட்டுமொத்தமா நிராகரிக்கிறது எனக்கு எவ்வளவு வேதனையா இருக்குத் தெரியுமா? அவங்களையெல்லாம் என்னோட உறவுகளா ஆக்கிக்கணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன். அருணை என் தம்பி மாதிரித்தானே நினைச்சேன். அதே அருண் இன்னைக்கு எனக்கு எதிரா நிக்குறான். ஏன்? இந்த இளஞ்செழியன் எதுல கொறைஞ்சு போயிட்டேன்?”
“டாக்டர்…”
“அப்படிக் கூப்பிடாதே…” பல்லைக் கடித்துக்கொண்டு வார்த்தைகளைத் துப்பினான் செழியன். அவன் வருத்தமான குரல் மாதவியை என்னவோ பண்ணியது.
சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் ஓர் ஆண் மகன். இவனை யார் வேண்டாம் என்று சொல்லுவார்கள்? ஆனால் அப்படித் தன் வீட்டாரைச் சொல்ல வைத்த விதியை என்ன சொல்வது?
“என்னால உன்னை மறக்க முடியாது மாதவி. உன்னோட இடத்துல வேற யாரையும் வைக்கவும் முடியாது.‌ ஆனா… உன்னோடான ஒரு வாழ்க்கை எனக்கு வேணும். என் வாழ்நாள் முழுக்க நான் நினைச்சு நினைச்சு சந்தோஷப்படுற மாதிரி ஒரு வாழ்க்கை வேணும். அதுக்காக உன்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நான் கேக்கலை. ஒரு வாரம்… ஒரேயொரு வாரம் குடு. எனக்கு அது போதும். அதுக்கப்புறம் இந்த இளஞ்செழியனை நீ பார்க்க மாட்டே.”
“……………..!”
“உங்கண்ணுல படாம எங்கேயாவது தூரத்துக்குப் போயிடுறேன்… அவ்வளவுதான். அதுக்கப்புறமா உனக்குப் பிடிச்ச வாழ்க்கையைச் சந்தோஷமா நீ வாழு. சந்திரமோகன் அங்கிளுக்கும் தகவல் சொல்லி இருக்கேன். நீயும் நானும் ஒரு மெடிக்கல் காம்ப் விஷயமா வெளியூர் போயிருக்கிறதாத்தான் ஹாஸ்பிடல்ல சொல்லச் சொல்லி இருக்கேன். உங்க வீட்டுலயும் சரி, எங்க வீட்டுலயும் சரி…‌ அப்படித்தான் சொல்லி இருக்கேன். என்ன… நாம எங்க இருக்கிறோம்னு மட்டும் தெரியாது அவங்களுக்கு. மத்தப்படி நான் எதையும் மறைக்கலை. இப்போக்கூட உனக்கு இங்க இருக்கிறது பிடிக்கலைனா நீ தாராளமாச் சொல்லு. இந்த நிமிஷமே உங்க வீட்டுல உன்னைக் கொண்டு போய் விட்டுர்றேன். நீ எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன் மாதவி.”
கோர்வையாகத் தன் மனதில் இருந்ததைக் கொட்டி விட்டு முன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் நின்றான் இளஞ்செழியன். மாதவி கொஞ்ச நேரம் அப்படியே அசையாமல் இருந்தாள். நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் தான் பாதுகாப்பான கைகளில் தான் இருக்கிறோம் என்ற நினைவு அவளுக்குத் தைரியமூட்டியது.
தான் தூங்கிய ரூமிற்குள் எழுந்து போனாள். இது யாருடைய வீடு, எந்த ஊர் ஒன்றும் தெரியவில்லை. வீடு கொஞ்சம் பழையதாக இருந்தது.‌ ஆனால் வசதிகளுக்குக் குறைவு இருக்கவில்லை. சுற்றிவர ஒரு பசுமை தெரிந்தது. வீட்டிற்கு அண்மையிலேயே பெரிதாக ஒரு மலை தெரிந்தது.
அக்கம்பக்கத்து வீடுகளிலும் மனிதர்களின் நடமாட்டம் தெரிந்தது. அந்த நடமாட்டம் இல்லாமல் இருந்தால் கூட அவள் கவலைப் பட்டிருக்கப் போவதில்லை. ஏனென்றால் கூட இருப்பது அவள் மரியாதைக்குரிய மனிதன்.
அவன் ஏதேதோ சொல்கிறான். இதுவெல்லாம் வாழ்க்கைக்குச் சாத்தியமா? என்னோடு ஒரு வாரம் வாழ்ந்துவிட்டு எங்கே போகப் போகின்றானாம்?
என்னை மறக்க முடியாதாமா?‌ என்னிடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாதாமா? அதுசரி… அவன் மனதில் என் இடம்தான் என்ன? என்னை அவன் மனைவியாக நினைத்திருக்கிறானா?‌ இது என்ன முட்டாள்தனம்! குடும்பத்தில் யாருக்கும் பிடிக்காத இந்தத் திருமணத்தால் எவ்வளவு மனக் கஷ்டங்கள் வரும். அது ஏன் டாக்டருக்குப் புரியவில்லை. இதில் டாக்டர் என்று வேறு அழைக்கக் கூடாதாம்!‌
நடுத்தரக் குடும்பம், குடும்பத்தின் மூத்த மகள். பெற்றோருக்கு எந்த அவப்பெயரும் வந்து விடாமல் குடும்ப பாரங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணப்போக்கிலேயே வளர்ந்த மாதவிக்கு செழியனைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
ஆனால்… அவன் கேட்ட கோரிக்கையை மறுக்கவும் அவளால் முடியவில்லை. வீட்டுக்குத் தகவல் சொல்லி இருக்கிறான். சீஃபுக்கும், அவன் வீட்டிற்கும் கூடத் தகவல் போயிருக்கிறது. தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று மட்டும் தான் தெரியாது. மற்றப்படி அவன் எதையும் மறைக்கவில்லையே?
இன்றைக்குத் தன்னைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகிறது, இப்படி ஒரு வார காலம் இங்கே வாழ்ந்துவிட்டு மீண்டும் வழமைக்குத் திரும்பும் போது தனது எதிர்காலம் என்ன என்பதெல்லாம் மாதவிக்கு அப்போது ஞாபகம் வரவில்லை.
தன் குடும்பம் அவனை நிராகரித்துவிட்டது.‌ இப்போது அதே தவறைத் தானும் செய்தால் அவன் தாங்கிக் கொள்ள மாட்டான். இந்த நிமிடமே அவள் மறுத்தால் வீட்டுக்குப் போய்விடலாம் தான். ஆனாலும் அதைச் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை.
இத்தனை வருட கால வாழ்க்கை கற்றுக் கொடுத்திருந்த மேடு பள்ளங்கள் அவளை நிதானமாக முடிவெடுக்கச் செய்தது. தன்னைச் சார்ந்த அத்தனை பேரையும் மறந்து செழியனுக்காக மட்டுமே இப்போது அவள் மனது யோசித்து. அந்த அக்கறைக்கு வேறு பெயரும் சொல்லலாம் என்று அப்போது மாதவிக்குப் புரியவில்லை!
தலையிலிருந்த காய்ந்த மலர்ச்சரங்களை உருவி எடுத்தவள் போட்டிருந்த நகைகளையும் கழட்டி வைத்து விட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். எதை அணிந்து கொள்வது?
அவள் கட்டிலுக்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய பை இருந்தது. எடுத்துப் பார்த்தாள். அத்தனையும் அவளுக்கான ஆடைகள் தான். அத்தனையையும் வெளியே எடுத்தவள் அங்கிருந்த கப்போர்டில் அடுக்கி வைத்தாள். தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. டாக்டர் பக்காவாக ப்ளான் பண்ணி இருப்பது அதிலிருந்தே புரிந்தது.
முகம் சிவந்து போக அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு ஒரு புடவையோடு பாத்ரூமிற்குள் போனாள் மாதவி. முடிவு எடுத்த பிறகு மனம் இப்போது லேசாக இருந்தது.
மாதவிக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இளஞ்செழியன் இடத்தில் வேறு யாராவது இருந்து இப்படி நடந்திருந்தால் தனது ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்? அப்படியென்றால்… அதற்குமேல் யோசிக்கும் தைரியம் மாதவிக்கு இருக்கவில்லை.
கத்தரிப் பூக் கலரில் இருந்தது அந்தக் காட்டன் புடவை. நல்ல அடர் ஊதாக்கலரில் ஜாக்கெட். புடவையை உடுத்திக் கொண்டு தலையைத் துவட்டியவள் கூந்தலைக் கொண்டையிட்டுக் கொண்டாள்.
லேசாகப் பசித்தது. ரூமை விட்டு வெளியே வர இளஞ்செழியன் இன்னும் வெளியே நிற்பது தெரிந்தது. லேசான புன்னகையோடு கிச்சனைத் தேடிப் போனவள் அதை ஒரு கணம் கண்களால் அளவிட்டாள்.
ப்ரெட், முட்டை எல்லாம் இருப்பது தெரியவே ஆம்லெட்டுக்கு ரெடி பண்ணிக் கொண்டே ப்ரெட்டை டோஸ்ட் பண்ணினாள். ஃப்ரிட்ஜில் பட்டரும் இருக்கவே அவசர அவசரமாக டோஸ்டில் பட்டரைத் தடவினாள். பசி வயிற்றைக் கிள்ளியது.
அதுவரை மாதவியின் அரவம் கேட்காததால் உள்ளே எட்டிப் பார்த்தான் இளஞ்செழியன். மனம் மத்தளம் கொட்டியது. என்ன முடிவு எடுத்திருப்பாள்? சண்டை போடுவாளோ? இல்லை ஒட்டுமொத்தமாகத் தன்னை வெறுத்து விடுவாளோ?
கிச்சனில் சத்தம் கேட்கவும் மெதுவாக எட்டிப் பார்த்தான் டாக்டர். மாதவி மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கக் கண்டவன் மலைத்துப் போனான். தூக்கிக் கட்டிய கூந்தலும், தான் வாங்கி வைத்திருந்த புடவையுமாக நின்றவளைப் பார்த்த போது கண்கள் லேசாகப் பனித்தது.
அவள் நெற்றி வகிட்டில் கொஞ்சம் குங்குமமும், அவள் கழுத்தில் தான் கட்டிய தாலியும் இப்போது இருந்தால் எப்படி இருக்கும் என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதை நினைத்த மாத்திரத்தில் அவன் கண்கள் இன்னும் குளமாகிப் போனது.
சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மாதவி கண்டதெல்லாம் கண்கலங்க நின்றிருந்த டாக்டரைத்தான். பதறிப் போனவள் அவனருகே ஓடி வந்தாள்.
“டாக்டர்! என்னாச்சு? ஏன் கண் கலங்குறீங்க?” திகைத்துப்போய் பெண் கேட்க, டாக்டர் வாயைத் திறந்தால் தானே. வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தபடி இருந்தவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவள் முன்னால் அழுகிறோமே என்ற எண்ணம் கூட இல்லாமல் கண்ணீர் வடித்தான் அந்தப் பிரபல இதய நோய் நிபுணன்.
“ஐயையோ! என்னாச்சு டாக்டர்? எதுக்கு இந்த அழுகை இப்போ? என்னங்க ஆச்சு?” அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண, அவன் வாயிலிருந்து வர வேண்டிய கேள்விகள் எல்லாமே… இப்போது இடம்மாறி நிகழ்ந்து கொண்டிருந்தன.
அவன் இன்னும் தன்னிலைக்குத் திரும்பவில்லை என்று உணர்ந்த மாதவி அவன் இடது தோளைப் பிடித்துக் குலுக்கினாள்.
“டாக்டர்…”
“ம்…” அப்போதுதான் நிதானத்திற்கு வந்த இளஞ்செழியன் அங்கிருந்த டைனிங் டேபிள் செயாரில் தொப்பென்று அமர்ந்தான். இயல்பாக அவன் கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டது.
“என்னங்க ஆச்சு?” அந்தக் கேள்வியில் சடாரென்று நிமிர்ந்து பார்த்தான் செழியன். அவன் அம்மா, அப்பாவைச் சில நேரங்களில் இப்படித்தானே கேட்பார்? ஆசைப்பட்ட மனது ஏதேதோ கற்பனை பண்ணியது.
அடுப்பை ஆஃப் பண்ண மறந்தவள் அப்போதுதான் அது ஞாபகம் வர அங்கே போனாள். நல்லவேளை ஆம்லெட் தீய்ந்து போகவில்லை.
தயார் பண்ணிய அனைத்தையும் டைனிங் டேபிளில் பரப்பியவள் அவன் முன்னால் ஒரு ப்ளேட்டை வைத்து அவனுக்கும் பரிமாறினாள்.
“சாப்பிடுங்க…” டாக்டர் என்று அழைக்க ஏனோ இப்போது பயமாக இருந்தது.
“ம்…” அவன் மௌனமாகச் சாப்பிட அவனையே கடைக்கண்ணால் பார்த்தபடி அவளும் உண்டு முடித்தாள். அவள் உபயோகப்படுத்திய அனைத்துப் பாத்திரங்களையும் அவன் சுத்தப்படுத்தி அதற்குரிய இடங்களில் வைக்க இப்போது மாதவி ஆச்சரியப்பட்டுப் போனாள். கிச்சன் பக்கமே வராத அவள் தந்தையும் தம்பியும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
தன்னையே பார்த்தபடி இருந்த பெண் முன்னால் வந்து அமர்ந்தான் இளஞ்செழியன். முகம் லேசாகச் சிவந்து போனது.‌ வார்த்தைகள் வர மறுத்த போதும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
“சாரி மாதவி.”
“எதுக்கு?”
“நான் இதை எதிர்பார்க்கலை.”
“ஓ… அப்போ என்ன எதிர்பார்த்தீங்க?”
“சண்டை போடுவேன்னு நினைச்சேன்.”
“…………”
“எம்மேல கோபப்படுவேன்னு எதிர்பார்த்தேன்.”
“கோபம் இல்லைன்னு நான் சொல்லலையே.”
“ஓ… அப்போ இருக்கா?”
“ம்… கண்டிப்பா. ஒரு பொறுப்பான டாக்டர் பண்ணுற காரியம் இது இல்லையே.”
“மாதவி மேல ஆசைப்பட்ட இளஞ்செழியன் இதைப் பண்ணலாம் இல்லையா?”
“அப்பக்கூட இப்படிப் பண்ணி இருக்கக் கூடாது. மாதவி மேல உண்மையான நேசம் இருந்திருந்தா… அவ எதிர்காலம் பத்தி யோசிக்கத் தோணி இருக்கும்.”
“……………” இளஞ்செழியனின் தலை தானாகக் குனிந்தது. தான் செய்தது தவறுதான் என்றாலும், ‘இந்த ஒரு வார காலத்திலாவது உனக்கு என்னைப் பிடித்து விடாதா என்ற நப்பாசை தான் பெண்ணே’ என்று அவனால் சொல்ல முடியவில்லை.
தன் முன்னால் தவறு செய்து விட்டுத் தலை குனிந்திருக்கும் அந்த மனிதனை வாஞ்சையோடு பார்த்தாள் மாதவி. அவன் வருந்துவது அவளுக்குப் பொறுக்கவில்லை. பேச்சை இயல்பாக மாற்றினாள்.
“எனக்கு அவ்வளவு பெருசாச் சமைக்க வராது டாக்டர்.”
“டாக்டர்னு சொல்லாத மாதவி.”
“எனக்குச் சட்டுன்னு பெயர் வரமாட்டேங்குதே.”
“ப்ளீஸ்…”
“சுமாராத்தான் சமைப்பேன். அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்க இல்லை?”
“ஹோட்டல்ல வாங்கிக்கலாம் மாதவி.”
“ம்ஹூம்… மாதவியோட இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. அவ சமையலையும் ட்ர்ரை பண்ணிப் பாருங்க.”
“ம்…” அவன் முகம் மலர்ந்து போனது.
“ஆமா… இது யாரோட வீடு?”
“எனக்குத் தெரிஞ்சவங்க வீடு.”
“அவங்களுக்குத் தெரியுமா… இதெல்லாம்.”
“இல்லை…”
“ஓ… இது எந்த ஊர்?” அவள் கேட்க அவன் மௌனமாகப் புன்னகைத்தான்.
“சொல்லலைன்னாப் பரவாயில்லை. அதைத் தெரிஞ்சு நான் என்னப் பண்ணப் போறேன்.”
“அருணுக்குத் தான் ஃபோன் பண்ணினேன் மாதவி.” திடீரென்று அவன் பேச்சை மாற்றவும் மாதவி மௌனமாகிப் போனாள்.
“விஷயத்தைச் சொன்னேன்.”
“……………”
“சண்டை போட்டான். அது நியாயம்தான் எங்கிறதால நான் எதுவுமே பேசலை. ஃபோனைக் கட் பண்ணிட்டேன். கொஞ்சம் கழிச்சுக் கூப்பிட்டப்போ உங்கப்பா லைனுக்கு வந்தார்.”
“ஓ…”
“ரொம்ப நிதானமாப் பேசினார். உங்க பொண்ணைத்தான் எனக்கு இல்லைன்னு சொல்லிட்டீங்க. அவ மேல ஒரு துரும்பு கூடப் படாது. ஒரு வாரம் அவளை எனக்குக் குடுக்கக் கூடாதான்னு கெஞ்சிக் கேட்டேன்.” மாதவி விக்கித்துப் போனாள். தன்னிடம் அப்படி என்ன இருக்கிறதென்று இவன் இப்படிக் கெஞ்சி இருக்கிறான்!
“மாதவியை உங்களுக்கே கட்டிக் குடுக்கிறேன். அவளை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருங்கன்னு சொன்னார்.”
“ஓ…”
“ம்… நான் தேவையில்லைன்னு சொல்லிட்டேன். எந்த வற்புறுத்தலின் பேரிலும் எனக்கு நீங்க மாதவியைக் கட்டிக் குடுக்கத் தேவையில்லை. இல்லைன்னு சொன்னது அப்படியே இருக்கட்டும்னு ஃபோனை வெச்சுட்டேன்.”
“…………..”
“மாதவி…” அந்தக் குரலில் வழிந்த காதலில் மாதவி பேச்சற்று மௌனமாகிப் போனாள்.