Kanavu 6

கனவு – 6

எதிர்பாராத விதமாக தன் அறைக்குள் வந்து கதவினை சாத்தியபடி நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் அம்ரிதா.

“ஏய்.. யா..யா..யார் நீ..?” என்றாள் திக்கித்திணறி.

“நான் யாருனு தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வமா..?” மெல்ல மெல்ல அவளை நோக்கி அடி எடுத்துவைத்துக் கொண்டே கேட்டான் அனேகன்.

“என்ன பேசிட்டு இருக்க..? எதுக்கு இப்ப கதவை மூடின..?” – பதட்டம் குறையவே இல்லை அம்ரிதாவுக்கு.

“நீதான என்ன பார்க்கனும்னு துடிச்சிட்டு இருந்த.. அதனால தான் வந்தேன்..” – தற்பொழுது அவளை முற்றிலுமாக நெருங்கியிருந்தான் அனேகன்.

‘நாம இவனை பார்க்கனும்னு நினைச்சது இவனுக்கு எப்படி தெரியும்’ என அவள் யோசித்துக்கொண்டிருக்க அவனது வாசனை மீண்டும் அவளது உயிரினுள் பிரவேசிக்கத் தொடங்கியது. அதனை இன்பத்தோடு நுகர்ந்தவளாய் மெல்ல மெல்ல கண்களை மூடினாள் அம்ரிதா. தன்னவள் இமை மூடிய அழகிய கற்சிலையாய் நிற்பதை கண்ட அனேகன் ஒரு நிமிடம் ஆடிப் போனான். தங்கள் இருவருக்கும் இடையில் செல்ல காற்றுக்கு கூட தடை விதித்திருந்தான் அவன். அவனது அருகாமை அவள் மனதினுள் ஏகாம்பர அமைதியை பரவச்செய்தது. அதிலிருந்து சிறிதும் விலகாதவளாய் மெல்லிய சிரிப்பு ஒன்றை அவள் வெளிப்படுத்த அனேகனது நெஞ்சமோ வஞ்சம் இன்றி அவள் காலடியில் வீழ்ந்தது.

“சகி….” என்று காற்றுக்கும் வலிக்காதபடி இதமாய் அழைத்தான் அவன்.

தற்பொழுது அவளுடைய புன்னகை கூடுதல் அடர்த்தியானது. அதனை ரசித்தபடியே மீண்டும் அழைத்தான் “சகி….” என்று.

இந்த முறை அந்த பொற்சிலை அசையத்தொடங்கியது. கண்களை திறக்காமலேயே அருகில் இருந்தவனின் கழுத்தினை தன் கரங்களால் வளைத்தது. அதனை அமோதித்தவனாய் அவள் இடையினை இறுக்கிக்கொண்டான் அனேகன். நகமும் சதையுமென ஒட்டியிருந்த அனேகனும் அம்ரிதாவும் வேறொரு உலகினில் பிரவேசித்துக் கொண்டிருக்க திடீரென கேட்ட “அம்மு” என்ற கர்ஜனை குரல் அவர்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. இருவரும் ஒருசேர வாசலை நோக்க அங்கு காளியின் அவதாரம் எடுத்து நின்றுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு” என மிகவும் சாந்தமாக கேள்வியை கண்ணில் கொண்டு அழைத்தாள் அம்ரிதா.

“என்ன டி இது??” ஆத்திரம் வெடிக்க ஆஷ்ரிதா கேட்ட பின்புதான் அனேகனுடன் தான் அத்தனை நெருக்கமாய் நின்றிருப்பதை உணர்ந்தாள் அம்ரிதா. அதிர்ச்சியில் மின்சாரம் தூக்கி அடித்தது போல அவனிடம் இருந்து விலகி பின்னே சென்றவள் நாற்காலியின் கால் தடுக்கி கீழே விழ, அவளை ஓடிச்சென்று தாங்கிப்பிடித்தான் அனேகன். அவனது செயலைக் கண்டு மீண்டும் கொதித்த ஆஷ்ரிதா, அனேகன் அம்ரிதாவை நிலையாய் நிறுத்தவும் விரைந்து அவனிடம் சென்று அவன் கன்னத்தில் அறைய முற்பட அவளது கையை தடுத்துப்பிடித்தாள் அம்ரிதா.

அம்ரிதாவிடம் இருந்து இதனை எதிர்பார்க்காத ஆஷ்ரிதா கோபத்தில் மூச்சிறைத்தபடி அவளை திரும்பிப் பார்த்தாள். தீர்க்கமான பார்வையுடன் துளியும் கண்ணிமைக்காமல் ஆஷ்ரிதாவை பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

“அம்மு.. என்ன பண்ணுற நீ” – அடக்க முடியா கோபத்தில் ஆஷ்ரிதா கத்தினாள்.

அம்ரிதாவிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை. மாறாய் தன் கைகளில் வெறி கூட்டியவளாய் ஆஷ்ரிதாவின் கையினை இறுக்கிக்கொண்டிருந்தாள் அம்ரிதா. வலி தாங்க முடியாமல் அவளது கையில் இருந்து தன் கையை விடிவிக்க முயன்றுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. ஆனால் பலனோ பூஜ்யம் தான். கையின் பிடி வழுவாய் இருக்க அதன் வீரியம் எவ்வளவு என்று ஆஷ்ரிதாவின் கண்களில் தெரிந்தது. கோபம் நிறைந்திருந்த கண்கள் தற்போது வலி தரும் வேதனையில் கண்ணீரை கொட்டிக்கொண்டிருந்தது. தன்னை காப்பாற்றும்படி வேண்டும் பாணியில் அனேகனை நோக்கினாள் ஆஷ்ரிதா. அதுவரை அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அனேகன் “சகி” என்றபடி அம்ரிதாவின் தோளில் கைவைக்க, அது என்ன செய்தி சொன்னதோ தெரியவில்லை அம்ரிதா தன் இறுக்கத்தை மெல்ல விடுவித்தாள்.

சிறிய தளர்ச்சி கிடைக்கப் பெற்றவுடன் வேகமாக தன் கையினை உருவிக்கொண்ட ஆஷ்ரிதா சிவந்த தன் மணிகட்டுகளை கண்ணீர் மல்க தடவினாள்.

“ஆஷ்ரிதா” – அனேகன் அழைத்தான்.

“யாரு டா நீ..? என்ன செஞ்சிக்கிட்டு இருக்க..?” – கை வலி தரும் வேதனையை விட, தான் கண்ட காட்சியும் அம்ரிதாவின் செய்கையும் மனதில் அதிகம் வலியை தந்திருந்தது ஆஷ்ரிதாவுக்கு.

“நான் சொல்லுறத கொஞ்சம் கேளு..” – அனேகன்.

“இன்னும் என்ன கேட்க சொல்லுற..? ஆரம்பத்துல இருந்தே உன்ன நான் நம்பல.. நீதான் என்னென்னவோ பேசி என்ன குழப்பிட்ட.. இப்ப என்னடானா என் அம்முவ.. ச்சீ.. நீயெல்லாம் மனுஷனா..? என் அம்முவ என்ன செஞ்சி வச்சிருக்க..? அவ என்கிட்ட இப்ப இப்படி நடந்துக்க நீதான் காரணம்.. நான் உன்ன சும்மா விடமாட்டேன்..” – என எள்ளும் கொள்ளுமாக வெடித்தாள் ஆஷ்ரிதா.

இவர்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டிருக்க, தனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுபோல அமைதியாக நின்றிருந்தாள் அம்ரிதா.

“என்ன டா நினைச்சிட்டு இருக்க..? ஆம்பளை இல்லாத வீடு-னு என்ன வேணும்னாலும் பண்ணலாம்-னு நினைச்சிட்டியா..? கழுத்த அறுத்து கீழ வச்சிருவேன் ஜாக்கிரதை” – ஆதங்கம் அடங்காமல் சீறிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவிடம் ஆயிரம் காளியின் பிம்பத்தை காண முடிந்தது அனேகனுக்கு. இருந்தும் அவன் முகத்தில் எந்த ஒரு சலனமும் காணப்படவில்லை. அது இன்னும் ஆத்திரத்தை ஏற்றியது ஆஷ்ரிதாவுக்கு.

“என்ன நாடகம் டா நடத்திக்கிட்டு இருக்க..? எங்க உன் தலையில பாதி முடிய காணோம்..? தரைய தூக்குற மாதிரி வளர்த்து வச்சிருப்ப.. என்கிட்ட அப்படி முகத்தை காட்டிட்டு என் அம்முவ ஏமாத்த இந்த வேஷமா..? இது வேஷமா இல்லை அது வேஷமா..? என்ன பார்க்க வரும் போது விக் வச்சிட்டு வருவியா..?” – அவனை பேசவிடாது மேலும் மேலும் சாட்டையடியாய் கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள் ஆஷ்ரிதா.

“கேன் யூ ஷட் ஆப்” – பொறுமை இழந்தவனாய் இடியென கத்தினான் அனேகன்.

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு தன் வாயை கைகளால் மூடியபடி நின்ற ஆஷ்ரிதா யாரேனும் வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் நடுங்கியபடியே வாசலை திரும்பிப்பார்த்தாள். அவள் மனதின் அச்சத்தை புரிந்துக்கொண்டவன் “யாரும் வர மாட்டாங்க.. ஏ.சி. ரூம் தான். சத்தம் வெளியில போகாது..” என்றான்.

யாரும் அறிய மாட்டார் என்ற செய்தி நிம்மதியளித்தாலும் அந்த சூழலில் அவளது மனது நொந்துப்போய் தான் இருந்தது.

“உன் அம்முவ தொட்டு பாரு..” என்றான் அனேகன்.

எதற்கு சொல்கிறான் என்று புரியாமல் திருதிருவென விழித்தாள் ஆஷ்ரிதா.

“டச் ஹெர்..” என மீண்டும் சீறினான் அனேகன்.

அந்த அலறலில் பதறிய ஆஷ்ரிதா தனது நடுங்கும் கைகளால் மெல்ல அம்ரிதாவை தொட்டு உலுக்க அங்கேயே மயங்கி விழுந்தாள் அம்ரிதா.

“அம்மு.. அம்மு.. என்ன ஆச்சு அம்மு..” என்று வேகமாக அவள் கன்னத்தில் தட்டினாள் ஆஷ்ரிதா. அம்ரிதா எழுந்துக்கொள்ளவில்லை என்கவும் அனேகனை வினாவாக பார்த்தாள் ஆஷ்ரிதா.

“வா.. வந்து இங்க உட்காரு..” என அருகில் இருந்த சோபாவை காட்டிய அனேகன் அவளுக்கு முன் அங்கு போய் அமர்ந்தான். அம்ரிதாவின் அருகில் இருந்து எழுந்தவள் மெல்ல மெல்ல நடந்து அனேகனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தாள்.

“உன் கோபம் எனக்கு புரியுது.. ஆனால் இது எல்லாம் உன் அம்மு-வ அதாவது என் சகி-ய சரி செய்யுறதுக்குதான்..” – அனேகன் சொல்லி முடித்ததுதான் தாமதம்.

“என்ன உன் சகியா..?” – ஆஷ்ரிதாவின் கண்கள் மீண்டும் அனலை கக்கத் தொடங்கியிருந்தது.

“கொஞ்சம் நேரம் நான் பேசுறத அமைதியா கேளு..” என்று அனேகன் கூறவும் தனக்கு வந்த ஆத்திரத்தை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்தினாள் ஆஷ்ரிதா. அவளை சொல்லியும் குற்றமில்லை. யாருக்கும் வரக்கூடிய கோபம் தானே. அப்படி ஒரு காட்சியை கண்ட பின்னர் அவளால் எவ்வாறு அமைதியாய் இருந்திருக்க முடியும்.

“நான் இந்த கேஸ் –க்கு சம்பந்தம் இல்லாத எதையும் உன்கிட்ட பேசவோ கேட்கவோ மாட்டேன் –ன்னு ஆல்ரெடி சொல்லியிருக்கேன்..” என அனேகன் சொல்ல அவனை இடை வெட்டிய ஆஷ்ரிதா

“ஆமா சார்.. அவசியம் இல்லாததை என்கிட்ட பேசமாட்டேன் –னு சொன்னீங்க.. ஆனால் அவசியம் இல்லாத அநாகரீகமான செயலை செய்ய மாட்டேன் –னு நீங்க எனக்கு சொல்லலையே.. பின்ன நான் எப்படி உங்கள சத்தம் போட முடியும்..” என்று வலி நிறைந்த புன்னகையோடு கூறிய ஆஷ்ரிதா அநாகரிகம் என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தம் அனேகனின் சினத்தைத் தூண்டிட

“எது அநாகரிகம்..? என் சகி -அ நான் பார்த்துகிறதா..?” என்று சோபாவின் இருபுறமும் ஓங்கி அடித்தபடி ஆக்ரோஷமாய் எழுந்து நின்றான் அனேகன்.

நடப்பவை புரியாமல் வெதும்பிப்போய் இருந்த ஆஷ்ரிதாவுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. ஒரு வித அசவுகரியமான அமைதி அங்கு நிலவ அதை கலைக்கும் விதமாய் ஒலித்தது அனேகனின் அலைபேசி.

“யஸ் பா..” – அனேகன்

“என்ன டா.. பதில் சொல்லாம எழுந்து போய்ட்ட..? க்ளையண்ட் –அ தான் கல்யாணம் பண்ணிக்க போறியா..?” – அலைபேசியில் மோகன் கேட்டார்.

“பேஷண்ட் –அ” என அஷ்ரிதாவின் விழிகளை கூர்மையாக பார்த்தபடி கூறிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் அனேகன்.

வாசலில் அவன் பிம்பம் மறையும் வரை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆஷ்ரிதா, மயக்கத்தில் இருந்து முனங்கிக்கொண்டே எழும் அம்ரிதாவை கண்டதும் வேகமாக எழுந்து அவள் அருகே ஓடினாள்.

“தலை வலிக்குது அச்சு” – பாவமாக கூறிய அம்ரிதாவை கண்டு கண்கள் கலங்கித்தான் போனது ஆஷ்ரிதாவுக்கு.

“எழுந்து உட்காரு வா” – என அவளை தூக்கி சோபாவில் அமரவைத்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு.. ஆபீஸ்லயா இருக்கேன்.. இங்க போய் நான் ஏன் தரையில படுத்திருந்தேன்..? ஆமா நீ எப்படி இங்க..?” – அம்ரிதா.

“சாப்பாட வீட்டுல வச்சிட்டு வந்துட்ட.. இதோ இந்த ஃபைலும் இருந்தது.. ஏதாவது முக்கியமான ஃபைலானு தெரியல.. உனக்கு கால் பண்ணா ஸ்விட் ஆஃப்.. ஆதான் இங்க வந்தேன்..” – ஆஷ்ரிதா.

“ஆமா.. நேத்து நைட் பேசிட்டே உட்கார்ந்துட்டோம்.. ஃபோன எடுக்கவும் இல்லை, சார்ஜ் போடவும் இல்லை..” என்றபடி எழுந்து தன் கை பையில் இருந்த அலைபேசியை எடுத்து சார்ஜரில் மாட்டி வைத்தாள் அம்ரிதா. அவள் மயங்கிக்கிடந்ததன் காரணத்தை தான் கூறாமல் விட்டதை அவள் கேட்கவில்லை என சிறியதாய் ஆசுவாசமடைந்தாள் ஆஷ்ரிதா.

ஆனால் அந்த நிம்மதி அவளுக்கு சற்று நேரம் கூட நிலைக்கவில்லை. சார்ஜ் போட்டு திரும்பிய முதல் கனமே அதை பற்றிதான் கேட்டாள் அம்ரிதா.

“வீட்டுலதான் நான் தூங்கிட்டே இருக்கேன் –னு பார்த்தா ஆஃபீஸ்க்கும் வந்தும் இப்படிதான் இருக்கேனா..?” தன் நிலையை நினைத்து வருந்தியவளாய் கேட்டாள் அம்ரிதா.

நடந்தவை எதுவும் அம்ரிதாவுக்கு நினைவில் இல்லை என புரிந்தது ஆஷ்ரிதாவுக்கு. ‘என் அம்முவ இவன் என்ன செஞ்சி வச்சிருக்கான்னு தெரியலையே.. ஒன்னுமே நியாபகம் இல்லைனு சொல்லுறா.. இவன நம்புறதா வேணாமா..? ஒரே குழப்பமா இருக்கே இறைவா’ என மனதினுள் நொந்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஏய் என்ன..? எனக்கு ஒன்னும் இல்லை டி.. டேபிலெட் டோசேஜ் அதிகமாகிடுச்சுனு நினைக்குறேன்.. அதனால தான் இங்க வந்து தூங்கிட்டேன். நல்ல வேளை அந்த காண்டாமிருகம் என்ன பார்க்கல..” என்று ஆஷ்ரிதாவை சமாதனப்படுத்தும் வண்ணம் அம்ரிதா பேசிக்கொண்டிருக்க வேகமாக எழுந்து அந்த அறையின் வாயிலை நோக்கி நடந்தாள் ஆஷ்ரிதா.

“எங்க டி போற..?” – குழப்பமாய் அம்ரிதா கேட்க

“நீ உன் வேலையை கவனி.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. போய்டு வர்றேன்..” என்றவள் அம்ரிதாவின் அலுவலகத்தின் கார் பார்க்கிங் –க்கு விரைந்தாள். அங்கு அனேகனது கார் இல்லை. அவன் சென்றுவிட்டான் என உணர்ந்தவள் வேகமாக தனது அலைபேசியை எடுத்து அனேகனுக்கு அழைப்புக் கொடுத்தாள்.

அவன் அழைப்பை எடுக்காமல் போக, அதில் உட்சபட்ச கோபத்தை அடைந்தவள் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு டாக்டர் பிரபாகரன் க்ளீனிக்கிற்கு விரைந்தாள். வெளி நோயாளிகளை பார்ப்பதில் டாக்டர் பிரபாகரன் பரபரப்பாக இருக்க சிறிது நேர காத்திருப்புக்கு பின்னரே அவரை சந்திக்க முடியும் என்றார் வரவேற்பரையில் இருந்த பெண்.

“எனக்கு இப்பவே டாக்டரை பார்க்கனும் சிஸ்டர்.. என்ன உள்ள அனுப்புங்க” -ஆங்காரமாய் அவள் கத்தியதில் அங்கிருந்த நோயாளிகள் அனைவர் கண்களுக்கும் வேடிக்கை பொருளானாள் ஆஷ்ரிதா.

“சொன்ன புரியாத உங்களுக்கு.. இத்தனை பேஷண்ட் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. பார்த்தா தெரியலையா..?” -வரவேற்பறை பெண் காட்டமாக கூற

“என்ன வேலைக்கு புதுசா.. ரிஷப்ஷனிஸ்ட் ஸ்ரீஜா எங்கே..? அவங்க கிட்ட கேளுங்க நான் யாருனு..” – ஆஷ்ரிதா.

இவ்வாறு இங்கே சண்டை நடந்துக்கொண்டிருக்க அங்கு எதர்ச்சையாக தன் அம்மாவை சிகிச்சைக்காக கூட்டிக்கொண்டு வந்திருந்த திரவியம் ஆஷ்ரிதாவை கண்டு அதிர்ச்சியானான். அவனது அம்மாவை ஒரு நாற்காலியில் அமரவைத்துவிட்டு ஆஷ்ரிதாவின் அருகே வந்தவன்

“அச்சு.. வாட் ஆர் யூ டூயிங்..? பிஹேவ் யுவர்செல்ஃப்..” என அதட்டினான்.

“திரு.. வா.. வந்து என்ன உள்ளே விட சொல்லு.. நான் டாக்டர் பிரபாகரன உடனே பார்க்கனும்..” என்று அவனிடமும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அப்படி என்ன தலை போற விஷயம்..? எல்லாரும் உன்னதான் பார்க்குறாங்க.. பாரு..” என்றான் திரவியம்.

அப்பொழுது சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்ட ஆஷ்ரிதா தான் செய்துக்கொண்டிருக்கும் காரியத்தை எண்ணி தன்னை தானே நொந்துக்கொண்டாள். அனைவரும் தன்னையே நோக்கிக்கொண்டிருக்க அவமானமாய் உணர்ந்தவள் அதற்கு மேல் அங்கு இருக்க இயலாதவளாய் க்ளீனிக்கை விட்டு வேகமாக வெளியேறி அவளது இருசக்கர வாகனம் அருகே சென்று நின்றுக்கொண்டாள்.

அவள் பின்னாடியே ஓடி வந்த திரவியம் அவளது கைகளை பற்றிக் கொண்டு “என்ன ஆச்சு அச்சு..” என்றான் சாந்தமாக.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அவள் வாயின் மீது கைவைத்தவன் “ஒன்னும் இல்லை.. நான் பாத்துகறேன்னு மட்டும் சொல்லாத அச்சு..” என்றான்.

இதை கேட்ட ஆஷ்ரிதா தன் உதட்டில் மெளத்தை ஒட்டிக்கொண்டு கண்கள் கலங்கி நின்றாள். எப்பொழுதும் அவள் முகத்தில் சிரிப்பை மட்டுமே கண்ட திரவியத்தால் அந்த அழுகை தொற்றிய முகத்தை காண இயலவில்லை. தன் நெஞ்சில் ஆயிரம் ஈட்டி பாய்ந்தது போல உணர்ந்தான்.

“உன்ன நான் இப்படி பார்த்ததில்லை அச்சு.. நீ இப்படி நடந்துகிறவளும் இல்லை.. என்னாதான் நடக்குது..? என்மேல நம்பிக்கை இருந்தா சொல்லு.. என்னால முடிஞ்ச உதவிய நான் செய்யறேன்.. இல்லை சொல்லக்கூடாத விஷயம்னா வேணாம்.. நான் உன்ன கம்பல் பண்ணல..” என்று அவன் சொல்லவும் நடந்த எல்லா விஷயத்தையும் ஒட்டு மொத்தமாய் கூறினாள் ஆஷ்ரிதா.

அதை கேட்டவுடன் “ஹாஹாஹா” என இடைவிடாது வாய்விட்டு சிரித்தான் திரவியம். ஒன்றும் புரியாதவளாய் அவனை பார்த்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதா ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவளாய் “ஷட் அப் திரு.. வாட் நான்சென்ஸ்” என்று கர்ஜித்தாள்.

அவளுக்கு கோபம் வந்துவிட்டதே என எண்ணி தன் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிய திரவியம் சிற்சில இடைவெளியில் சிரித்த வண்ணம் “எது நான்சென்ஸ் அச்சு.. நீதான் நான்சென்ஸ் மாதிரி பேசுற” என்று கூறினான்.

“என்ன நான் நான்சென்ஸ் –ஆ” என கண்கள் சிவக்க அவள் கேட்க

“கூல் கூல்.. என்ன பேசுற நீ.. முன் ஜென்மமாம் மறு ஜென்மமாம்.. அது யாரு அவன் அனேகனா.. அவன் கண்டுபிடிச்சி சொன்னானா இத..? படிச்ச பொண்ணு தான நீ..வெரி சில்லி..” என்று சிறிய முறுவலோடு கேட்டான் திரவியம்.

“டோண்ட் ஹர்ட் மை ஃபீலிங்க்ஸ் திரு.. ஜஸ்ட் ஸ்டாப் லாஃபிங்” என்று வலிகள் நிறம்பிய குரலில் கூறினாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)