Kandeepanin Kanavu-10

WhatsApp Image 2020-07-22 at 9.05.41 AM

                                                         காண்டீபனின் கனவு 10

 

படகை மீண்டும் செலுத்தியபடியே அவர்கள் பழைய இடத்திற்கு வந்து சேர, கில் அங்கே காணவில்லை. அவர் டென்ட்டை விட்டு எழுந்து வெளியே வந்திருப்பார் என மூவருமே எதிர்ப்பார்த்தனர்.

“என்ன கில் இன்னும் எழுந்துக்கலையா?” வருண் கேட்க, படகை கரையில் இழுத்துப் போட்டுவிட்டு அவசரமாக மூவரும் அவர் இருந்த டென்டை நோக்கிச் சென்றனர்.

அங்கே கில் எழுந்து அமர்ந்திருந்தார். மூவருக்கும் “அப்பாடா” என்றிருந்தது.

“என்ன கில் இப்போ எப்படி இருக்கு?” வீரா அருகில் வர,

“இல்ல வீர், காலே தூக்க முடியல. அதான் எழுந்து வெளிய கூட வர முடியல. உங்கள கூப்பிட்டுப் பார்த்தேன், யாரும் வரல. வாக் போயிருப்பீங்கன்னு நெனச்சேன்.” காலைத் தூக்க முடியாமல் தவித்தார்.

வருணும் அவர் அருகில் வந்தான்.

“காலைக் கொஞ்சம் தூக்குங்க” என அவரது காலில் அவன் காலையில் போட்ட கட்டை அவிழ்த்தான்.

கால் இப்போது இன்னும் நன்றாக வீங்கி இருந்தது. இந்த நிலையில் கண்டிப்பாக அவரால் மலை ஏற முடியாது.

“இது ஸ்ப்ரைன். நிச்சயமா மலை ஏறுவது கஷ்டம் கில்.” வருண் கூறினான்.

“எஸ் ஐ நோ. நீங்க ரெண்டு பேரும் வேணா போங்க. நான் இங்கயே இருக்கேன். அட்லீஸ்ட் இங்க ஸ்டே பண்ணி உங்க வொர்க்க்கு  சப்போர்ட் பண்றேன். நான் இப்போ திரும்பிப் போகவும் முடியாது இந்த நிலைல.” வருத்தமாகக் கூறினார் கில்.

“இது உங்களுக்குக் கஷ்டமா தான் இருக்கும்னு எனக்குப் புரியுது கில். பட் கவலை படாதீங்க. இது நம்மோட பாஃர்ஸ்ட் வீக் தான். இன்னும் நாம அடிக்கடி இங்க வருவோம்ல.” வீர் அவரை உற்சாகப் படுத்த முயன்றான்.

“எஸ். நீ சொல்றது கரெக்ட்தான் வீர். அத நெனச்சு தான் மனச தேத்திக்கணும். சரி நீங்க எங்க போனீங்கன்னு சொல்லுங்க” கில் விசாரிக்க,

“சும்மா கயாக் எடுத்துட்டு அந்த குகைய பாத்துட்டு வந்தோம். உள்ளலாம் ரொம்ப போகல. நாளைக்குப் போலான்னு இருக்கோம்.” வீரா தான் பதில் தந்தான்.

மீண்டும் மருந்து வைத்து அவரது காலைக் கட்டினான் வருண்.

“தேங்க்ஸ் வருண்.” உணர்ந்து கூறினார் கில்.

“இட்ஸ் ஃபைன் கில். இப்படிப் பட்ட நேரத்துல நாம தான் ஹெல்ப் பண்ணிக்கணும். சரி நாங்க டின்னர் ரெடி பண்றோம்.” வருண் அங்கிருந்து வெளி வர, மெல்ல எழுந்து கில் நடக்க முயன்றார்.

மலை சுற்றி இருப்பதால் சீக்கிரமே இருட்டத் தொடங்கியது. அவர்கள் கொண்டு வந்திருந்த மரக்கட்டைகளை சுற்றி அடுக்கி வைத்துத் தீ மூட்டி அந்த இருளைப் போக்கினர்.

சாமும் இப்போது வருணுடன் நன்றாகவே பேச ஆரம்பித்தாள். அனைவரும் இயற்கை வாழ்வை நன்றாக ரசித்து, பேசி சிரித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வுகளால் அவள் கண்ட வெள்ளி மானைப் பற்றி மறந்தே போனாள்.

உண்டு முடித்து பின் கில் மருந்து எடுத்துக் கொண்டதினால் மீண்டும் உறக்கம் வர,

“சரி நீங்க பேசிட்டு படுங்க. நான் என் டென்ட்க்கு போறேன். குட் நைட் கைஸ்!”

“குட் நைட் கில். மார்னிங் அஞ்சு மணிக்கு எழுப்பறேன்.” வீரா அவருடன் சென்று அவரைப் படுக்க வைத்துவிட்டு வர,

“வீர்!” அழைத்தார் கில்.

“சொலுங்க கில். எதாவது வேணுமா?”

“இல்ல வீர். இந்த ப்ராஜெக்ட் நீ தனியா பண்ணனும்னு இருக்கு. டூ யுவர் பெஸ்ட்.” அவனுக்குக் கை கொடுத்தார்.

அவர் அறையை விட்டு ஏதோ சிந்தனையிலேயே வெளி வந்தான்.

சாம், அந்த குளிரில் தனது போர்வையுடன் வந்து நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, வருணிடம் தனது கல்லூரியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“தூக்கம் வந்தா தூங்க போ” வருண் சொல்ல,

அந்த நேரம் வீராவும் வந்தான்.

“ஏன் என்ன அனுப்பிட்டு நீங்க ரகசியம் பேசணுமா?” நக்கலாகக் கேட்டாள்.

“நீ காலைலேந்து ரெஸ்ட் எடுக்கல. இப்போ போய் படுத்தா தான் காலைல சீக்கிரம் எந்திருச்சு போக முடியும். இல்லனா நீ கில் கூட இங்கயே இரு. நாங்க போறோம்.” வீரா சற்று பயம் காட்டினான்.

தன் தூக்கத்தைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் உடனே கிளம்பினாள்.

“வா! உனக்கு தூங்க எல்லாம் செட் பண்ணிக் கொடுக்கறேன்” பொறுப்பாக அழைத்துச் சென்றான் வீர்.

அவளுக்கு ச்லீபிங் பேக்கை எடுத்துக் கொடுத்து, அவளுக்காக கொண்டு வந்திருந்த குஷன் பில்லோவை கொடுத்தான்.

“ஹே!!! நீ சான்சே இல்ல டா.. நான் எப்படி இதுல தூங்கப் போறேன்னு நெனச்சுட்டே இருந்தேன்.நல்ல வேளை கொண்டு வந்த.” தனது ஆச்சரியத்திலேயே அவனுக்கு நன்றி கூற அழகான புன்னைகையில் அவளை உணர்ந்ததைக் கூறினான்.

“சரி தூங்கு.நான் வருண் கிட்ட பேசிட்டு வந்து தூங்கறேன்.” கிளம்ப எத்தனிக்க,

“வீர். இங்க தானே வருவ? வேற டென்ட்ல தூங்க போய்டாத டா.” அந்த இடத்தினால் ஏற்பட்ட பயத்தில் சொல்ல,

“பயப்படாம தூங்கு. இங்க தான் வந்து தூங்குவேன்.” அவளுக்கு நம்பிக்கை வர, தனது ஸ்லீபிங் பேக்-ஐ பக்கத்தில் எடுத்து வைத்து விட்டுச் சென்றான்.

காலையில் இருந்து வந்த களைப்பு அவளை உடனே தூக்கத்தில் ஆழ்த்தியது. ஐந்து நிமிடத்தில் உறங்கிப் போனாள்.

வெளியில் வருண், அனைய இருந்த தீயை மேலும் இரண்டு கட்டைகளை வைத்து எரியவிட்டான்.

வீராவும் வருணின் அருகில் வந்து அமர, இருவரும் குளிர் காய்ந்தனர்.

“ஒரு ப்ளாக் டீ குடிக்கலாமா வீரா?” அவனை உற்சாகப் படுத்த எண்ணி, தன்னிடம் இருந்த டீ கூஜாவை எடுத்து வந்தான்.

“வருண், இத எடுத்துட்டு வந்திருந்தியா..? கூல் மேன்.” வீரா ஓடும் நீரில் சிறிது நீரை எடுத்து வர,

வருண் அந்த எரியும் தீயின் அருகில் இரு குச்சிகளை நட்டு, குறுக்கில் ஒரு நீண்ட குச்சியில் இந்த டீ கூஜாவை மாட்டினான். அது நன்றாக அந்தத் தீயில் சூடானது.

வீரா கொண்டு வந்த நீரை அதில் ஊற்ற, வருண்  இரண்டு டீ பைகளை  அதில் போட்டான். நன்றாகக் கொதித்த பின் அதை இரு கோப்பையில் ஊற்றி இருவரும் அந்த குளிருக்கு இதமாக அருந்தத் துவங்கினர்.

“சாம் இத பாத்தா, என்ன விட்டுட்டு குடிச்சியான்னு சண்டைக்கு வருவா..” சிரித்தான்.

“உனக்கு அவ மேல ரொம்ப அக்கறை இல்ல..?” உள்ளர்த்தத்தோடு வருண் கேட்டதும்,

“சின்ன வயசுலேந்து ஒண்ணா தான் இருக்கோம். அவ என்கூட போட்டி போடுவா, ஆனா நான் அவள போட்டியாலாம் நெனைக்கல, இப்போ அவள என் பாதுகாப்புல விட்டதுனால அவள கேர் பண்ண ஆரம்பிச்சுட்டேன். கிரேசி அவ.” சிரித்தான்.

மெல்ல தலையசைத்தான் வருண்.

“வீர், உனக்கு சைன்ஸ் எவ்ளோ புடிக்கும்? இங்க வந்து ஆராய்ச்சி பண்ணனும்னு எப்படி தோனுச்சு?” விஷயத்தைத் துவக்கினான்.

“எனக்கு சின்ன வயசுலேந்தே என் தாத்தா இந்த டிஸ்டன்ஸ் ஸ்பீட் இது பத்தி எல்லாம் சொல்லி சொல்லி ரொம்ப ஆர்வத்தை வளர்த்துட்டாரு. சோ மைன்ட்லயே நிறைய கால்குலேட் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்படித் தான் பிசிக்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சது.

எனக்கு இங்க வந்து ஆராய்ச்சி பண்ண புடிக்கும். ஆனா வந்தே ஆகணும்னு நினச்சதில்ல. எங்க அப்பா கொஞ்சம் ஃபோர்ஸ் பண்ணாரு. அதுனால வந்தேன்.” சகஜமாக அவனிடம் அனைத்தும் கூறினான்.

“யூ நோ வீரா. எதுவுமே எதேர்ச்சியா நடக்கறதில்ல. எல்லாமே ப்ளான் பண்ணினது. ஐ மீன் டெஸ்டினி. அந்த விதி தான் எல்லாத்தையும் நடத்தி வைக்குது. நீயும் நானும் சந்திக்கணும், நட்பாகனும்னு கூட விதி இருக்கு.” வருண் எதையோ மறைமுகமாக கூற வந்ததை உணர்ந்தான் வீரா.

“என்ன சொல்ற வருண்?” அவனிடமே கேட்க,

“நீ மொதல்ல உன் மனசுல இருக்கறத சொல்லு.” அவனைப் பேச வைத்தான்.

“ம்ம்.. நானே சொல்லனும்னு தான் இருந்தேன் வருண்.. எனக்குக் கொஞ்ச நாளா ஒரு கனவு வருது. தினமும் அந்த ஒரு கனவு தான் வரும். அப்பறம் அரை குறையா முடிஞ்சிடும். அப்படி கனவுல வந்தது தான் இந்த குகை.

ஆனா இன்னிக்கு நாம போன குகை மாதிரி இல்ல. நான் பாத்ததுல சில ஓவியங்கள் இருந்தது. முக்கியமா தூரத்துல ஒரு ஒளி. அந்த ஒளிய நோக்கித் தான் நான் ஓடிக்கிட்டே இருக்கேன்.

இதெல்லாம் என்னனு எனக்குப் புரியல. அதுனால தான் நீ அன்னிக்கு அந்த போட்டோ எல்லாம் காட்டினப்ப நான் ஆர்வமானேன்.

இன்னைக்கும் என்னை அறியாம கனவு மாதிரி அந்தக் குகைக் குள்ள நடக்க ஆரம்பிச்சுட்டேன்.”

“அப்படியா? எத்தன நாளா உனக்கு அந்த கனவு வருது?” வீராவை ஆராயும் விதமாகக் கேட்டான்.

“இந்த ஊருக்கு வந்த பிறகு தான் இந்த மாதிரி கனவு வர ஆரம்பிச்சது. அல்மோஸ்ட் ஒரு வருஷம் ஆயிடுச்சு.” டீயை ருசித்த படியே சொல்ல,

“திஸ் இஸ் சீரியஸ். உன் வாழ்க்கைல நிச்சயமா ஏதோ ஒரு பெரிய விஷயம் அல்லது ரகசியம் இருக்கு.” திடமாகக் கூற,

“எப்படி அவ்வளோ உறுதியா சொல்ற?”

“நான் என்னோட ப்ரோபசர் வாழ்க்கைல நடந்த எல்லா விஷயத்தையும் பாத்திருக்கேன் வீர். அவருக்கும் இது மாதிரி அடிக்கடி கனவு வரும். பகல்ல உக்காந்துட்டு இருக்கும் போதே அவர் மைன்ட் வேற எங்கயோ ட்ராவல் பண்ணும். உண்மையிலேயே அவர் ஒரு ஜீனியஸ். யார் கிட்டயும் அதிகமா பேச மாட்டார். ஆனா ஒரு தீர்க்க முடியாத ப்ராப்ளம் கொடுத்தா அத ரெண்டு நொடில சால்வ் பண்ணிடுவாரு. கேட்டா எனக்கு கனவுல வருதுன்னு சொல்வாரு. ஒரு பூட்டின அறைல உட்கார்ந்த இடத்துலேந்தே பல மைல் தூரத்துல என்ன நடக்குதுன்னு பல விஷயங்கள சரியா சொல்வாரு.

அவர் சொல்ற பல விஷயம் கற்பனைக்கே எட்டாத ஒண்ணா தான் இருக்கும். ஆனா நம்ப வேண்டிய ஒன்னு. அது அங்க நடந்துட்டு இருக்கும்.

அது மாதிரி தான் உனக்கும். உன் கனவுல ஒரு விஷயம் தொடர்ந்து வந்தா அதை நீ ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சுக்கனும்.

இந்த விஷயத்துல கண்டிப்பா நான் உனக்கு ஒரு தளபதியா இருப்பேன்.” அவனது வார்த்தைகைளால் வீராவிற்கு நம்பிக்கை அளித்தான்.

வீரா விற்கு அவனது நட்பும் அவன் கொடுத்த நம்பிக்கையும் பேரும் பலமாகத் தோன்றியது.

“நாளைக்கு நாம வேற குகைக்கு போலாம் வருண். நிச்சயம் இங்க தான் என் கனவுல வந்த ஓவியங்கள் நிச்சயமா இருக்கும்னு எனக்குத் தோணுது.”

“கண்டிப்பா போலாம். சாம் வரணுமா?” எதற்காகவோ அவன் கேட்க,

“அவளும் வரட்டுமே! இதுல என்ன இருக்கு. நீ வேண்டான்னு சொன்னாலும் கண்டிப்பா அவ வருவா.அவளுக்கும் என் கனவு பத்தி நல்லாவே தெரியும்.” வீரா அவளைப் பற்றிப் பேசும்போது அவனையும் அறியாமல் அவனிடம் ஒரு மென்மை தெரிவதை வருண் உணர்ந்தான்.

“நான் ஒன்னு சொல்லலாமா?” பீடிகையுடன் வருண் சொல்ல,

“சொல்லு டா.”

“நீ அவளை விரும்பற..”

“வாட்.. ச்ச ச்ச… அப்படி ஒரு எண்ணமே எனக்கும் இல்ல. அவளுக்கும் இல்ல.” அவரசமாக மறுத்தான்.

“ம்ம் மே பீ உனக்கே அது தெரியாது. ஆனா கண்டிப்பா ஒரு நாள் உணருவ” எழுதி வைத்தது போல வருண் சொல்ல,

டேய்.. கண்டிப்பா நடக்காது. அவளோட டேஸ்ட் வேற, நான் வேற எங்களுக்குள்ள செட்டே ஆகாது.” மிகவும் சாதரணமாக உள்ளதைச் சொன்னான் வீரா.

“ஓகே லெட்ஸ் சீ. சரி வா நேரம் ஆச்சு. கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.” சிரித்துக் கொண்டே எழுந்தான்.

‘இவன அவ கரெக்ட் பண்ணுவான்னு பாத்தா, இவன் என்ன என்னையே கோத்துவிடறான்.’ சிரிப்புத் தான் வந்தது வீராவிற்கும்.

டெண்ட்டுக்குள் அவர்கள் நுழைவதை, சாம் கண்ட அந்த வெள்ளி மான்கள் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தன.

தாத்தா, கோடங்கியை அவர்களது வீட்டின் பின்னால் இருக்கும் சிறு ஒட்டு வீட்டில் தங்க வைத்தார்.

அவரும் குளித்து முடித்து சுத்தமாக தாத்தாவின் பெரிய வீட்டிற்குள் வர, வேதாவும் சுஜாதாவும் சகடமாக அவரை எதிர்கொண்டனர். வேறு வழியின்றி,

“வாங்க ஐயா. வீட்ல எல்லாரும் நலமா? இருங்க மாமாவ கூப்பிடறேன்.” வேதா அவசரமாக தாத்தாவின் அறைக்கு ஓடினார்.

சுஜாதா அவரை அமர வைத்து, செம்பில் தண்ணீர் கொடுக்க,

“சம்ரக்க்ஷா நல்லா இருக்காளா சுஜாதா?” பொதுவாகக் கேட்க,

“ம்ம் இருக்காங்க. அவளும் நம்ம வீரா கூட அமேரிக்கா போயிருக்கா..” அதிகம் பேசாமல் முடித்துக் கொண்டார்.

சிறு வயது முதலே வல்லய்யாவை பார்த்தால், சுஜாதாவிற்கு ஒரு பயம். தன் தாயின் இறப்பிற்கு முன்பு கூட இவரும் தாத்தாவும் இப்படித் தான் வெகு நாள் ஒன்றாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அதற்கும் முன் சுஜாதாவின் தாத்தா இறப்பின் போதும் இவரின் தந்தையும் இவரும் தான் அருகில் இருந்தார்.

இவர் வந்தாலே யாராவது இறந்துவிடுகிறார்கள் என்கிற பயம் அவளுக்குத் தோன்றியிருந்தது.

அவர் குறி சொல்லுவார் என்று தாத்தா கூறக் கேட்டிருக்கிறாள், ஆனால் ஒரு முறை கூட கண்டதில்லை. இன்று எதற்கு வந்திருக்கிறாரோ என்று மீண்டும் அச்சம் வந்து ஒட்டிக் கொண்டது.

தாத்தா தன் அறையிலிருந்து வெளியே வந்ததும், சுஜாதா இடத்தைக் காலி செய்தாள். கிச்சனுக்குள் சென்று வேதாவிடம் புலம்ப ஆரம்பித்தாள்.

“அண்ணி, இவர் வந்தாலே எனக்கு பயம். இப்போ எதுக்கு வந்திருக்காரு?”

“தெரியலையே. எதுக்கு பயப்படற. அவர் நம்ம குடும்பத்துக்கு நல்லது தான் செய்வாரு. கவலைப் படாம இரு. மாமா ஏதோ விஷயமா தான் வரச் சொல்லியிருப்பாரு.” தைரியம் கூறினாள்.

தாத்தா கோடாங்கியை தனது அறைக்கு, அதாவது நீலக்கல் இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார்.

அவர் கை நிறைய மலர்களை அள்ளி நீலக்கல் மீது போட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பின்பு நீலக்கல்லின் எதிரில் அமர்ந்து தாத்தா பூஜை செய்த பிறகு, கோடங்கி தனது சோழியை எடுத்து நெற்றியின் மையத்தில் வைத்து வாய் மட்டும் அசைந்த படி மந்திரத்தைக் கூறினார்.

பிறகு கையைச் சுழட்டி சோழியை உருட்ட, அது சிதறிப் போய் விழுந்தது.

அதைக் கண்டு கணக்குப் போட்டவர்,

“ஐயா, நாம கிராமத்துக்கு போய்டுவோமா?” தாத்தாவிடம் கேட்டார்.

“என்ன ஆச்சு வல்லய்யா. இங்க சரிப்படாதா? எதுவானாலும் சொல்லு.” கவலையாகக் கேட்க,

“என்னால முடிஞ்ச வரை உங்க குலதெய்வம் கட்டுலேந்து வெளிவர நான் உதவனும்னு எனக்கு உத்தரவு வந்திருக்கு.

அதுக்கு இங்க இருந்து செய்யறத விட நாம அங்கேயே போறது நல்லதுங்க.” வல்லையா சோழியின் பதிலைக் கூற,

“உங்கிட்ட சொன்னேனே, ரெண்டு பேர் உயிர் பலி ஆயிடுச்சு. அங்க நாம நீலக்கல்லை கொண்டு போக முடியுமா?”

“நம்ம குடும்ப பிரச்சனைய நாம தான் தீர்க்கணும். ஏற்கனவே சொல்லி வச்சது தான. வெளியாள் உள்ளே வந்தா அது நிச்சயம் பாத்துட்டு இருக்காது. அதுக்கு நீங்க கவலைப் படாதீங்க. நாம அங்க போய் இனி வரப் போற ஒவ்வொரு ஏகாதசிக்கும் பூஜை செய்வோம். அது நம்ம தம்பிக்கு உதவும்.” கோடங்கி உறுதியாகக் கூறினார்.

“சரி. வீட்டுல என்ன சொல்றது? அவங்களுக்கு இதப் பத்தி எதுவுமே தெரியாது. இன்னும் நான் காண்டீபன் கிட்ட எந்த விஷயத்தையும் சொல்லல. அதை எப்போ சொல்லலான்னு பாத்து சொல்லு. அவன் இப்போ போகற மலை தான் அவனுக்கு வழிகாட்டின்னு தமாவும் சொன்னான்.

இப்போ என் பேரன் அந்த மலைல தான் இருக்கான். கூட நம்ம பாப்பா, அப்பறம் வருண்ன்னு சொன்னான். நம்ம குடும்பம் இல்லாதவங்களும்

அங்க இருக்காங்க. அவங்க உயிருக்கு எதுவும் ஆபத்து வருமான்னு பயமா இருக்கு. கொஞ்சம் எல்லாத்தையும் பாத்து சொல்லு.” அனைத்து விஷயத்தையும் சொல்லி, தாத்தா அவரிடம் குறி கேட்க,

கோடங்கி தன் பையிலிருந்து குங்கும பொட்டலைத்தை எடுத்து ஒரு பெரிய தட்டில் பரப்பினார். பின் அதற்கு நடுவில் கற்பூரம் ஏற்றி அதில் சில இலைகளை வைத்து எரித்தார். அது அணையும் வரை தன் குலதெய்வத்தை வேண்டித் துதித்தார்.

கண்ணை மூடிக் கொண்டே, தாத்தாவின் முன் கை நீட்ட, தாத்தா அவரின் இடது கையை அவரிடம் கொடுத்தார்.

அவரது கட்டை விரலைப் பிடித்து, கற்பூரம் அணைந்த இடத்த்தில் வைத்தார். இலைகளும் அதனுடன் கருகி அது ஒரு மை போல ஆகியிருந்தது.

தாத்தாவின் கட்டை விரலில் இப்போது மை ஒட்டிக் கொண்டிருக்க, கோடங்கி அதை ஒரு வெற்றிலையில் அச்சு போல வைத்தார்.

கோடங்கி இப்போது அந்த வெற்றிலையில் படம் பார்ப்பது போல எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

“உங்க பேரன் உங்க குடும்பம் இல்லாதவங்க ரெண்டு பேர் இருக்காங்க. அதுல ஒருத்தன், நிச்சயம் அந்த மலைல காலை வைக்க முடியாது. அவன் அடிவாரம் வரைக்கும் தான் போக முடியும்.

இன்னொருத்தன்..இன்னொருத்தன்…!!!” கோடங்கி கண்களைச் சுருக்கி வருணைப் பார்க்க முயற்சி செய்தார். ஆனால் அங்கே தெரிந்தது வெள்ளி மான்கள்.