Thithikuthey 13 & 14

Thithikuthey 13 & 14

பதிமூன்று

சித்ராவின் வருகை அவளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் இன்னொரு புறம் குற்ற உணர்ச்சியை கொடுத்தது… சித்ரா எந்தளவு சக்திவேலை காதலித்தாள் என்பது அவள் அறிந்ததுதான்… அதையும் அவள் வெளிப்படையாகவே நந்தினியிடமும் வளர்மதியிடமும் கூறியிருந்தாள்… அதை தானும் எதிர்த்து பேசியிருந்தோம் என்பது நினைவுக்கு வந்து அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது… அப்படி பேசிவிட்டு அவனையே திருமணமும் செய்திருந்ததை சித்ரா எப்படி எடுத்து கொள்வாள் என்பது அவள் முன் நின்ற மிகப்பெரிய கேள்வி?

எப்படி இருந்தாலும் அவளுக்கு தான் திருமணம் நிச்சயமாகிவிட்டதே என்பது நந்தினியின் மனதின் ஓரத்தில் ஆறுதலை தந்தாலும் ஒன்றை நினைத்தால் அந்த ஒன்றிலேயே நிற்பதில் தன்னை கொண்டிருந்த சித்ராவை நினைத்து மனதின் ஓரத்தில் அவளுக்கு பயம் இல்லாமல் இல்லை.

நந்தினியை இழுத்து கொண்டு முகம் முழுக்க சிரிப்பாக அலுவல் அறையை நோக்கி சென்றாள் பார்கவி… கால்கள் பின்ன அவளிடம் வர மறுக்கவும் முடியாமல் அதே சமயத்தில் சித்ராவை எதிர்நோக்கவும் முடியாமல் தடுமாறினாள் நந்தினி.

“ஹேய் சித்து…” புன்னகையோடு அவள் முன் சென்ற பார்கவி…” எப்படிடி இருக்க? டிசி வாங்க வந்தியா?” இயல்பாக அவளை விசாரிக்க… சிறு புன்னகையோடு.

“ஆமா கவி…”

குரலில் இருந்த சோகத்தை கண்டுகொண்ட பார்கவி.

“சித்து… ஆல் தி பெஸ்ட்டி… கவலைப்படாத… நல்லதே நடக்கும்ன்னு நம்புடா…”

சித்ராவுக்கு ஆறுதல் கூறிகொண்டிருந்த பார்கவியை மட்டும் பார்த்த சித்ரா… எதேச்சையாக தலையை திருப்ப… அலுவலக அறை வாசலில் நின்று கொண்டிருந்த நந்தினியை பார்த்தாள்… முகம் கறுத்தது… ரணமாகிவிட்ட காயத்தை திரும்ப கீறியது போன்ற உணர்வில் முகத்தை சுருக்கி கொண்டு திரும்பி கொண்டாள் சித்ரா.

அந்த ஒரு நொடியில் நூறு முறை இறந்து பிறந்தாள் நந்தினி… உதடு துடிக்க… கண்கள் கலங்க.

“சி… சித்து…” தடுமாறி அழைக்க… நிமிர்ந்து வெறுமையான பார்வை பார்த்துவிட்டு முகத்தை திருப்பினாள்… பதில் பேசாமல் மெளனமாக அலுவலக அறையை கடந்து கல்லூரி பூங்காவை நோக்கி போக.

“சித்து ப்ளீஸ்… என் கிட்ட பேசுடி…” உணர்வுகளை இழுத்து பிடித்து கொண்டு அவளை மீண்டும் கெஞ்சினாள் நந்தினி.

“என்ன பேச சொல்ற? நான் ஏமாந்து போன கதைய பேச சொல்றியா? இல்ல ப்ரெண்டுங்கற பேர்ல ஒரு துரோகிய நம்பிட்டு இருந்தேனே அதை பேச சொல்றியா?”

வார்த்தைகள் விஷமாய் அவளை தீண்ட… அதன் உள்ளே பொதிந்த அர்த்தத்தில் துவண்டு போனாள்.

“சித்து ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேசாத… மனசுக்கு கஷ்டமா இருக்கு!”

“எனக்கும் தான்டி கஷ்டமா இருக்கு… மனசெல்லாம் எரியுது… காந்துது… இத்தனை நாளா மனசுக்குள்ள வெச்சு அழகு பார்த்துட்டு இருந்த என்னோட காதலை இப்படி நீ கேலி கூத்தாக்கிட்டியே… என்னால முடியல…” சித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய.

“சித்து… உனக்கு நிச்சயமாகிருச்சே… மறந்துட்டு பேசறியா?” அதிர்ச்சியாக கேட்க.

“நிச்சயமானா… நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேனா? என்கிட்டே கேட்டியா? அப்படின்னாலும் எப்படிடி உன்னால முடிஞ்சுது? உனக்கெல்லாம் அடுத்தவ லவ் பண்றவன் தான் கிடைச்சானா? இல்ல முன்னாடியே நடந்துட்டு இருந்த அசிங்கமா இது?” அவளது கோபத்தை வெளிப்படுத்த வழி தெரியாது நந்தினியை வார்த்தைகளால் குதறி கொண்டிருந்தாள் சித்ரா.

“சித்ரா… அசிங்கம் அது இதுன்னெல்லாம் பேசாத… வார்த்தையை அடக்கு…” நந்தினியின் காதலை குறைவாக பேச துவங்கிய சித்ராவை பார்த்து முறைத்தபடி அவள் கூற.

“அசிங்கம் இல்லாம வேற என்ன? மூணு மாசம்ன்னு வேற சொல்லிருக்க…” சித்ராவின் குரல் உடைய… வார்த்தைகள் வெளிவர யோசித்தது… நந்தினியை நோக்கி திரும்பிய சித்ரா…”சத்தியமா சொல்லு நந்தினி… நிஜமாவே நீ சக்தியை லவ் பண்ணியா?…” ஏக்கமாக அவள் கேட்டது நந்தினியின் மனதை வாள் கொண்டு அறுத்தது… தலையை குனிந்து கொண்டு மெல்லிய குரலில் கூறினாள்.

“ஆமா சித்து… லவ் பண்ணேன்… பண்றேன்… இனிமேலும் பண்ணுவேன்…”

“அப்போ அன்னைக்கெல்லாம் அவனை கேவலமா பேசினது வேற வாயா?” முகத்தில் கோபம் கொந்தளிக்க சித்ரா கேட்க… நந்தினியும் கோபமாக நிமிர்ந்தாள்.

“இங்க பார் சித்து… நீ என்னைய என்ன வேணும்னாலும் பேசு… ஆனா என் புருஷனை பத்தி பேசும்போது யோசிச்சு பேசு… அவன் இவன்னு பேசின… மரியாதை இல்ல சொல்லிட்டேன்…” சக்திவேலின் மனைவியாக சிலிர்த்து கொண்டு நின்றவளை கூர்மையாக பார்த்த சித்ரா… சிறிது நேரம் மௌனமாகினாள்.

“நிச்சயம் பேசினாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை நந்தினி… அதாவது உன் கல்யாணம் நடக்கற வரைக்கும்… சாப்பிடாம இருந்து பார்த்தேன்… விஷம் குடிச்சுடுவேன்னு மிரட்டி கூட பார்த்தேன்… எங்க அம்மா கிட்ட… அவங்களுக்கு தான் அது பழக்கமாகிடுச்சே… சரி குடிச்சுக்கோன்னு சொன்னாங்கடி…” என்று கூறிவிட்டு மடிந்து அமர்ந்து சப்தத்தை அடக்கி கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நந்தினியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிய… அவளும் அவளுடன் மடிந்து அமர்ந்தாள்.

“சித்து…”

“அதெல்லாம் எதுக்காக? படிக்கவா? இல்லையே… சக்திக்காக தான… இப்படி ஒரே நாள்ல நீ தட்டிகிட்டு போகவா நான் அப்படி போராடினேன்? சத்தியமா நீ கல்யாணம் செய்ததை விட… அதுக்கு சொன்ன காரணத்தை கேள்விப்பட்டு செத்துட்டேன்டி… விஷம் கூட பெட்டர் நந்தினி…”

அழுகையை நிறுத்தாமல் அவளது உள்ள குமுறலை கொட்டிகொண்டிருக்க… நந்தினிக்கு தலை சுற்றியது… எதையும் யோசிக்காமல் சக்திவேல் மேல் கொண்ட திடீர் காதலை மட்டும் அடிப்படையாக கொண்டு, தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தாள் அந்த பேதை.

“சத்தியமா சொல்லு நந்தினி சக்தி உன்கிட்ட அப்படி பழகி இருக்காறா?” குமுறிக்கொண்டு அவளது முகத்தை சித்ரா ஏக்கமாக பார்க்க… நந்தினிக்கு அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தெம்பும் அற்றுவிட்டிருந்தது.

“கண்டிப்பா எனக்கு தெரியும் நந்தினி… நீ சொன்னது பொய் தான்… ஏதோ ஒரு கம்பல்ஷன்ல தான் சக்தி உன்னை கல்யாணம் பண்ணிருக்கார்…” சித்ராவின் கண்களில் ஒளி தெரிய நந்தினியின் முகமோ இருண்ட நிலவானது.

“அந்த இடத்துல நீ இருந்ததால இப்போ சக்தியோட மனைவியா இருக்க… இதே நானிருந்துதிருந்தா…”

சித்ராவின் முகத்தில் ஒரு நொடியில் காதலை தவறவிட்ட வலி தெரிய… நந்தினி அதிர்ந்து போயிருந்தாள்… இதை மறுக்க முடியுமா? வழியே இல்லையே… உண்மையும் அதுவாகத்தானே இருக்கிறது… அந்த இடத்தில் தான் இல்லையென்றால்… அதன் விளைவை சிந்தித்து பார்க்கவும் நந்தினியின் மூளை வேலைநிறுத்தம் செய்திருக்க… வார்த்தைகள் சிறைபிடிக்கபட்டிருந்தன… மெளனமாக தன்னிலையையும் சக்தியிடம் தனக்கான இடத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தவள்… ஒரு முடிவாக சித்ராவை பார்த்தாள்.

“சித்ரா… நீ முடிஞ்சு போன விஷயத்தை பேசிட்டு இருக்க… அவர்என்னோட சக்தி… என் ஹஸ்பன்ட்… அதை நினைப்புல வெச்சுக்கோ… அவங்களை மறந்துடு…” உணர்ச்சியை துடைத்து கொண்டு அவள் கூற… ஏளனமாக பார்த்த சித்ரா.

“மறந்துட்டு…” கேலியாக கேட்க

“என்ன மறந்துட்டு? வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்க… என் புருஷனை பத்தி நினைக்காத…” கடுப்படித்தாள் நந்தினி.

“கல்யாணம் செய்துக்கத்தான் போறேன் நந்தினி… உன்னால தான் எங்கப்பா சொன்னவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்…” என்று கூறிவிட்டு… முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு.

“என்னை இரட்டை வாழ்கை வாழ தயார் பண்ணிட்டடி…” எங்கோ பார்த்தபடி கூறியவளை வெறித்து பார்த்தாள் நந்தினி.

********

கண்களை கட்டி விட்டது போல பரிசோதனை கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் நந்தினி… காதுகளில் சித்ரா பேசியவை மட்டுமே ஒலித்து கொண்டிருந்தன… என்னவெல்லாம் பேசிவிட்டாள்? இவள் ஒரு காலத்தில் சக்தியை காதலித்திருக்கலாம்… ஆனால் அது கடந்த காலம் என்பது ஏன் அவளுக்கு புரியவில்லை?

ஆனாலும் அவள் முழுவதுமாக நியாயமற்று நடக்கவில்லை… அன்று அவளிடம் நீ ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று மனம் இடித்துரைக்க,… பேச என்ன இருக்கிறது என்று இன்னொரு மனம் வாதாடியது.

அவள் காதலித்தது உனக்கும் தெரிந்திருக்க… அப்படியிருந்தும் சக்தியை நீ மணந்திருக்கிறாய் என்று மனம் மீண்டும் இடிக்க… அவள் தான் காதலித்தாலே தவிர சக்தி? அவன் அதற்கு உடன்பட்டானா?

பரிசோதனை கூடத்திற்கு வந்தால் வேறு எந்த சிந்தனையும் செய்யாத நந்தினி அன்றோ குழப்பங்களின் பிடியில் தன்னை தொலைத்திருந்தாள்.

“கேர்ல்ஸ்… இன்னைக்கு ஆர்கானிக்ல மெத்தில் சாலிசிலேட் ப்ரிபரேஷன் அன்ட் பிசிகல்ல மெல்டிங் பாயின்ட் ஆப் வேக்ஸ்… லேப் அசிஸ்டன்ட் கிட்ட உங்களுக்கு தேவையான கெமிகல்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்ட் செட் வாங்கிகங்க…”

விரிவுரையாளர் கொடுத்து கொண்டிருந்த அறிவுரை காதில் விழாமல்… தன் முன் இருந்த பியுரட்டையே பார்த்து கொண்டிருந்தவளை சற்று சப்தமாக அழைத்தார் அந்த விரிவுரையாளர்.

“நந்தினி… வாட் ஹேப்பன்ட்? நான் சொன்னதை காதில் வாங்கினாயா இல்லையா?” சற்று கோபமான அந்த உத்தரவு அவளை சட்டென்று செயல்பட வைக்க… அதற்கு பின் தனது பிரச்சனைகளை மறந்து… பரிசோதனைகளில் ஆழ்ந்தாள்.

முழு நாளும் அங்கேயே கழிய… உணவு உண்பதற்காக மற்றவர்களெல்லாம் போன போதும் நந்தினி அசையாமல் அங்கேயே இருந்தாள்… பசி என்ற உணர்வே அவளை ஆட்கொள்ளவில்லை… தனக்கே தனக்கான தன் கணவனை இன்னொருத்தி நினைத்து கொண்டிருப்பதை அவளால்ஏற்க முடியவில்லை.

ஒரு வழியாக செய்முறைகளை முடித்து விட்டு விடுதிக்கு யாரிடமும் பேசாமல் தளர்ச்சியாக சென்று கொண்டிருக்க… அலுவலக உதவிக்கு இருக்கும் அந்த பெண் அவசரமாக நந்தினியை நோக்கி வந்தாள்.

“நந்தினி அக்கா…” சற்று சப்தமாக அழைத்து கொண்டு அவளை நோக்கி வந்தவளை கேள்வியாக பார்த்தாள் நந்தினி.

“என்ன வாசு?” வாசுகி என்பதின் சுருக்கமே வாசு.

“அக்கா… உங்களுக்கு விசிட்டர் வந்திருக்காங்க…” என்று அந்த பெண் கூறியவுடன் தன்னை பார்க்க விசிட்டரா என்று ஜிவ்வென்று உயரத்தில் பறந்த அவளது உணர்வுகள்… சட்டென்று தரையில் விழுந்தன… தன்னை பார்க்க யார் வருவார்கள்? பெற்றவர்கள் விட்டிருக்க கை பற்றியவனோ வரவே மாட்டேன் என்றல்லவா கூறி விட்டான் என்ற சுயபச்சாதபம் அவளை ஆட்டி படைத்தது… அதோடு சித்ரா வந்து பேசிவிட்டு சென்றதும் அவளது மனதை கனக்க செய்ய… ஆர்வமே இல்லாமல் விசிட்டர் அறையை நோக்கி சென்றாள்.

நந்தினி சோர்வாக உள்ளே வருவதை கண்டவுடன் முகம் சுருக்கி அவளை வரவேற்றது… சாட்சாத் சக்திவேலை தவிர வேறு யாராக இருக்க முடியும்?

பதினான்கு

நம்ப முடியாமல் தலையை உதறிக்கொண்டு மீண்டும் பார்த்தாள் நந்தினி.

“என்ன… இப்படி ஒரு ரியாக்ஷன்? ? என்னாச்சு?” அதே கடின முகம்… வார்த்தைகளில் மட்டும் சிறிது மென்மை.

“வ… வர மாட்டேன்னு சொன்னீங்க…” அவளது குறும்பை எல்லாம் அவளது குழப்பங்கள் தின்று கொண்டிருக்க… சக்தியின் பார்வை அவளை கூர்மையாக அளவெடுத்து கொண்டிருந்தது.

“ஒரு வேலை… அதான் வந்தேன்…” அப்போதும் உன்னை பார்க்க தான் வந்தேன் என்று ஒரு வார்த்தையாவது சொல்வானா என்ற அவளது ஏக்கம் நிறைவேறாமல் போக… மனம் தவித்தது.

“என்ன வேலை?” ஏமாற்றத்தினை மறைத்து கொண்டு அவள் கேட்க… சக்திவேல் ஒரு கவரை எடுத்து அவள் முன் நீட்டினான்… அவனை கேள்வியாக பார்த்து கொண்டு வாங்கியவள்… பிரித்து பார்க்க… உள்ளே இருந்தது சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கான விண்ணப்படிவம்.

முகம் மலர படிவத்தை திருப்பி திருப்பி பார்த்தவளுக்கு மகிழ்ச்சி அலையாக பொங்கியது… அதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் கண்காணாத தூரத்திற்கு போய்விட்டது போன்ற பிரம்மை… அவளது ஆசை… கனவு… லட்சியம்… தன் கண் முன்னே உயிர்பெற்று விட்டது போல தோன்றியது நந்தினிக்கு.

“call for பண்ணிட்டாங்களா? நான் பார்க்கவே இல்லையே…” சந்தோஷமாக கேட்க.

“call for பண்ணி ஒரு வாரமாச்சு… ஜேன் டுவன்ட்டியத் லாஸ்ட் டேட்… அதான் இப்போ அப்ளை பண்ணிடலாம்ன்னு வாங்கிட்டு வந்தேன்…” அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயத்தை கூறிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில் சக்தியின் முகமும் மென்மையை தத்தெடுத்தது.

“தேங்க்ஸ்… ரொம்ப தேங்க்ஸ்…” மகிழ்ச்சியாக கூறியவள் முகம் சட்டென இருண்டது.

“நான் ஒண்ணுமே படிக்கலையே… எப்படி எக்ஸாம் அட்டென்ட் பண்ணுவேன்… எதை படிக்கறதுன்னு கூட தெரியலையே…” முகம் வாடி அவள் மனதை கூற.

“அதனால என்ன? இனிமே படிச்சா போதும்… அப்ளை பண்ணிட்டு இப்போ இருந்து படிக்க ஆரம்பிச்சுடு… லைப்ரரி இருக்கு… உங்க லெக்சரர்ஸ் இருக்காங்க… ஜஸ்ட் இப்போ ஒரு ட்ரை… எக்ஸாம் எப்படி இருக்குன்னு மட்டும் பார்த்துட்டு வந்துடு… ஓகே வா…” அவளது மனதை புரிந்த தோழனாக அறிவுரை கூற… செல்பேசியில் அவ்வளவு கடினமாக பேசியவன் இவன்தானா என்ற சந்தேகம் வந்தது நந்தினிக்கு!

“எக்ஸாம் பேட்டன் கூட எனக்கு தெரியாது… நான் எப்படி?” முகம் முழுக்க பதட்டமாக அவளது உண்மை நிலையை கூற… சக்திவேலுக்கோ அவளது அப்பாவித்தனத்தை நினைத்து வருத்தமாக இருந்தது… ஒன்றும் கூறாமல் அவளது முகத்தையே பார்த்து கொண்டிருக்க.

“ப்ளீஸ்… அப்படி பார்க்காதீங்க… எனக்கு ஐஏஎஸ் பாஸ் பண்ணனும்ன்னு ரொம்பவே ஆசை இருக்கு… ஆனா அதுக்கு என்ன பண்ணனும்ன்னு இன்னும் எனக்கு சரியா தெரியல…” என்று கூறி நிறுத்தியவள்…” சொல்லி கொடுக்க யாருமில்ல… அதுக்குதான் சென்னைல இன்ஸ்டியுட்ல சேரனும்ன்னு நினைச்சேன்…” குரல் தேய்ந்து நிறுத்தினாள்.

நந்தினியை குறை கூறி என்ன ஆக போகிறது? இருப்பது சிறிய கிராமம்… படிப்பின் அருமை உணராத பெற்றோர்… பெரிய அளவில் இது போன்ற தேர்வுகளில் புரிதல் இல்லாத கல்லூரி… அவளது நிலை அதுதானே என்று நினைத்து கொண்டவன்.

“ப்ரிலிம்ஸுக்கு புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்… உன்னோட பைனல் எக்ஸாம்க்கு படிக்கற மாதிரி படி… ஏதாவது டவுட்னா கேளு… ஜஸ்ட் ஒரு அட்டெம்ப்ட் பண்றதுல தப்பில்ல… ஒரு வார்ம் அப் மாதிரி நினைச்சுக்கோ… ஓகே வா…” பொறுமையாக அவளிடம் எடுத்து கூற… அவளது முகமோ தெளியாமலிருந்தது.

“என்னாச்சு? இந்த பயம் பயந்துட்டு தான் நான் ஐஏஎஸ் ஆகனும்ன்னு அன்னைக்கு பினாத்திட்டு இருந்தியா?” அவனது நக்கல் அவளது தன்மானத்தை தாக்க.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” சிலிர்த்து கொண்டு.

“படிக்கனும்ன்னு நினைச்சா நானெல்லாம் எவ்வளவு வேணும்னாலும் படிப்பேன்… ஆனாபுக்ஸ் எல்லாம் ரொம்ப காஸ்ட்லியாச்சே…” என்று கூறிவிட்டு அவனது முகத்தை பார்க்காமல்.

“என்கிட்டே பணம் இல்ல…” மெல்லிய குரலில் முடிக்க… சக்தியின் முகத்தில் வெப்பம் ஏறுமுகம் கண்டது.

“உன் கிட்ட இல்லையா? நம்ம கிட்ட கிட்ட இல்லையா?” கோபமான குரலில் அவன் வினவினான்.

“என் கிட்ட தான்…” இன்னமும் மெலிதான குரலில் அவள் கூற.

“இப்போ உனக்கு தேவையான புக்ஸ் நான் வாங்கிட்டு வந்துட்டேன்… இன்னமும் ஏதாவது தேவைன்னா… பிடி இந்த பணத்தை வெச்சுக்கோ… என்று பர்சிலிருந்து எடுத்து அவளிடம் பணகற்றையை அவன் கொடுக்க… அவள் பதறினாள்.

“ஐயோ பணமெல்லாம் வேணாம்…” அவளது பதட்டம் அவனை குழப்பியது… அவளது மனமோ சித்ரா கூறிய வார்த்தைகளில் நிலைகொண்டிருந்தது என்பதை அவளே உணராத போது அவன் எப்படி உணர்வான்? அந்த நேரத்தில் சித்ரா இருந்திருந்தால்? சக்தி அவளை மணம் செய்திருக்க கூடுமோ? தனது ஆழ்மனதின் போராட்டம் அவனது பணத்தை மறுக்க சொன்னது.

“ஏன் வேணாம்?”

“இல்ல… வேணாம்…” அவளது பதட்டம் சற்றும் குறையவில்லை… அவளது தயக்கம் அவனுக்கும்ஏதோ புரிந்தது… சற்று யோசித்தவன்.

“சரி அதை விடு… கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா… உன்னை வெளிய அழைச்சுட்டு போக பர்மிஷன் வாங்கியிருக்கேன்…” என்று அவன் கூறியபோது ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தாள்… இதென்ன அதிசயம்? இவனை மோகினி பேய் எதுவும் அடித்து விட்டதா? என்று ஒரு மார்கமாக பார்த்து வைக்க.

“என்ன… பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்… சீக்கிரம் கிளம்பி வா…” அவளை சற்று வேகமாக விரட்டியவுடன் அடித்து பிடித்து கொண்டு அறையை நோக்கி ஓடினாள்… மின்னல் வேகத்தில் குளித்து சேலைமாற்றிக்கொண்டு அவனோடு கிளம்பினாள்.

மாலையாகிவிட்டதால் வெளியே பேருந்து நிறுத்துமிடத்தில் சப்தங்கள் இல்லாமல் அமைதியாக இருக்க வெளியே வந்தவள் வேனை தேடினாள்… சக்திவேலுக்கோ பொறுமை வேகமாக கரையசற்று சப்தமாக அழைத்தான்.

“நந்தினி… என்ன பண்ணிட்டு இருக்க?”

“இல்ல… வேன் எங்கன்னு பார்த்துட்டு இருந்தேன்…” சுற்றும் பார்த்தபடி அவள் கூற.

“நான் வேன் எடுக்க மாட்டேன்… ஒரு தடவை சொன்னா சொன்னதுதான்… வண்டில ஏறு…” என்று அவனது ஸ்பெளண்ரை காட்ட.

“இது யாரு வண்டி?”

“ம்ம்ம் ஊரான் வண்டி… இப்போ ஏற போறியா இல்லையா?” கடுப்பாக பதில் வர… திரும்ப பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“நல்லா பிடிச்சியா?” எங்கே விழுந்து வைத்துவிட போகிறாளோ என்று நினைத்து கொண்டு அவன் கேட்க

“ம்ம்ம்…”என்று மறுமொழி உரைத்தாள்… எதை நினைத்து இந்தளவு சோர்வாக இருக்கிறாள் என்பது சக்திக்கு புரியவில்லை… தான் இரவு சற்று அதிகமாகத்தான் பேசிவிட்டமோ என்று பாவமாக இருந்தது… இந்த சிறு பெண்ணை இனி அது போல பேச கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.

நேராக அவன் அழைத்து சென்றது இருவருக்கும் திருமணமான பசுபதீஸ்வரர் திருக்கோயில்… சன்னதிக்குள் செல்லாமல் பக்கவாட்டில் இருந்த கருவூரார் சமாதி சன்னதிக்கு சென்று மௌனமாக அமரும் வரை வார்த்தைகள் ஏதுமில்லாமல் கரைய… சற்று அதிகமாகவே இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

“என்ன கலெக்டரம்மா மூட் அவுட்டா இருக்காங்க போல இருக்கு… என்னாச்சு?” சிறு புன்னகையோடு அவன் கேட்க… ஆச்சரியமாக தலையை உயர்த்தினாள்… இவன் எப்போது சிரிப்பான் எப்போது முறைப்பான் என்று புரியவே புரியாத நிலையில் என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…”

“சரி அப்ளிகேஷனை பில் பண்ணிடலாமா?” இயல்பாக அவன் கேட்க… நந்தினிக்கு உள்ளுர சற்று பயமாகவே இருந்தது… தன்னால் தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்கிற பயம்.

ஆனாலும் சக்தி கூறுவது போல ஒரு வார்ம் அப் போல இருக்கட்டுமே என்ற முடிவுக்கு வந்து… அப்ளிகேஷனை நிரப்ப ஆரம்பிக்க… பெயர் என்ற இடத்திலேயே குழப்பம் வந்தது.

“என்ன இனிஷியல் போடறது?”

“உங்க அப்பா பேர் என்ன?” என்று சக்தி கேட்க.

“வேலுச்சாமி…” என்றாள் சற்று வெறுப்பாக

“அப்போ வி நந்தனி போடு… அதுதானே உன் சர்டிபிகேட்ஸ்ல இருக்கும்?”

“ம்ம்ம் ஆமா…” என்று கூறிவிட்டு பெயரை நிரப்பி விட்டு coding ஷேட் செய்தாள்… மிகவும் எச்சரிக்கையாக… அதன் பின்.

“அப்பா இல்லைன்னா ஹஸ்பன்ட் நேம் கேட்டு இருக்காங்க…” அவனை நிமிர்ந்து பார்க்காமல் மெல்லிய குரலில் கேட்க… அவன் இயல்பாக

“உனக்கு என்ன விருப்பமோ அந்த பேரை போட்டுக்க…” என்று கூற

“உ… உங்க புல் நேம்…” மிகுந்த தயக்கத்துக்கிடையில் அவள் கேட்டு முடிக்க… ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன்.

“சக்திவேல் அருணாச்சலம்…” என்று கூறிவிட்டு அவளை உற்று நோக்கி…”என் அஞ்சு வயசு வரைக்கும் என் பேரன்ட்ஸ் இருந்தாங்க… அதனால எங்க அப்பா பேர் தெரியும் நந்தனி… நீ இவ்வளவு தயங்க தேவையில்லை…” என்று முடிக்க

“ஹய்யோ அப்படி எல்லாம் நான் நினைக்கல…” அவசரமாக அவனை மறுத்து கூற.

“நானும் தப்பா சொல்லலைம்மா… நீ பில் பண்ணு…”

அப்ளிகேஷனை நிரப்பி கொண்டிருந்தவள் அடுத்து கேட்கப்பட்ட தகவலை பார்த்து பெரிதும் தயங்கி கையில் இருந்த அப்ளிகேஷனையும் சக்தியையும் மாறி மாறி பார்த்தாள்.

“என்னம்மா?”

“போஸ்டல் அட்ரெஸ் கேட்டு இருக்காங்க…”

அதை கூறும் போது அவளது நெஞ்சுக்குள் ஒரு பந்து உருண்டது… இருக்க ஒரு வீடும் இல்லாத நிலையில் அப்ளிகேஷனை கூட கோயிலில் அமர்ந்து நிரப்புகிறோமே என்று நினைத்தவளுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமிருந்தாலும்… சக்தி கண்டிப்பாக பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை மட்டும் மலையளவு இருந்தது… அவனது பொறுப்பு அவளறிந்த ஒன்றானதால் அவன் மேல் இருந்த நம்பிக்கையில் பயத்தை புறம் தள்ளி வைத்தாள்.

“அதை விட்டுட்டு மத்ததை பில் பண்ணு நந்தினி… அதை நான் பார்த்துக்கறேன்…”

அவன் கூறியவாறே நிரப்பி முடித்தவளிடமிருந்து வாங்கி கவரில் போட்டு பத்திரமாக வைத்தவன்… கருவூராரை பார்த்து ஒரு வணக்கம் கூறிவிட்டு நந்தினியை அழைத்து கொண்டு கிளம்பினான்… நேராக அழைத்து சென்றது அவனது வாகனத்தை நிறுத்தி வைக்கும் ஷெட்… அங்கிருந்த அந்த சிறிய அறைதான் இதுவரை அவனது புகலிடமாக இருந்தது என்பதால் வலது காலை எடுத்து வைத்தே உள்ளே வந்தாள்.

“கேட்டியே நீ… வீடு வீடுன்னு… பிடிச்சிருக்கா?” நக்கலாக அவன் கேட்டது அவளுக்கும் புரிந்தது… ஆனாலும் அவனை அதற்காக விட்டு கொடுத்து விட முடியுமா? பதில் பேசாமல் அவள் அங்கிருந்த கடவுள் படத்திற்கு விளக்கேற்றி வைத்து வணங்க… அவளது மௌனம் அவனைசுட்டது… அவளிடம் ஈர்த்த விஷயமே அவளது குறும்பான பேச்சுத்தான் எனும் போது… அவளது சோர்ந்த முகம் அவனை வருத்தியது.

“ஏன் ஒரு மாதிரியா இருக்கம்மா? அம்மாவ பார்க்கனுமா?” மென்மையாக அவன் கேட்க… இவன் தானா நேற்று இரவு பேசியது என்று நந்தினிக்கு தலை சுற்றியது… அவனை அதிசயமாக பார்த்து கொண்டே… இல்லையென்று தலையாட்டினாள்.

“நான் நேத்து திட்டினது தானே ரீசன்…” அவனுக்கு தெரிந்ததை கேட்க… அவன் திட்டினான் என்றாலும் அவளுக்கு வருத்தமாக இருந்தது என்றாலும் அதை பெரியதாக எடுத்து கொள்பவளில்லையே… இல்லையென்று தலையாட்டிவிட்டு

“சித்ரா வந்திருந்தா…” மொட்டையாக கூறி விட்டு அவனது முகத்தை ஆராய… அவள் எதிர்பார்த்த பதிலை அவனது முகத்தில் தேடினாள்.

“வந்து? அந்த பொண்ணு என்ன சொல்லுச்சு?” அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதே… என்ன கூறியிருக்கும் என்று அவனுக்கு தெரியவில்லை.

“ம்ம்ம்… அவ லவ் பண்ண ஒரு முசுட்டு முத்தண்ணன நான் ஆட்டைய போட்டுட்டேனாம்…” கடுப்பாக அவள் கூறியது முதலில் புரியவில்லை சக்திக்கு… புரிந்த போதோ சிரிக்க ஆரம்பித்தவனால் அதை நிறுத்த முடியவில்லை… நந்தினியோ கடுப்பில் அமர்ந்திருக்கஅவனது சிரிப்பு அவளை மேலும் கடுப்பாக்க.

“என்ன? என்ன ஓவரா சிரிப்பு வேண்டி கிடக்கு?”

“ஹஹா… ஆக மொத்தம் காலேஜ்ல படிக்கற வேலைய விட்டுட்டு சக்களத்தி சண்டை போட்டுட்டு வந்திருக்க…” அவன் கிண்டலடிக்க

“வாட்… சக்களத்தியா?” அதிர்ச்சியாக அவள் கேட்க

“பின்ன… அதுக்கு பேர் என்ன?” இன்னமும் அவன் சிரித்து கொண்டிருக்க… சுற்றியும் பார்த்தவள்… யாருமில்லாததை உறுதிபடுத்தி கொண்டு… சட்டென்று அவனது கழுத்தில் கை வைத்தாள்… நெரிப்பதற்காக.

“மவனே… இன்னொரு தடவை அந்த வார்த்தைய சொன்ன… கொன்னுடுவேன்…”. அவனது கழுத்திலிருந்து கையை எடுத்தவள்… சரமாரியாக அவனது நெஞ்சில் அடிக்க ஆரம்பித்தாள்.

“சக்களத்தியாம் சக்களத்தி… அவ தான் அறிவில்லாம லூசு மாதிரி பேசுனா… அதுக்கு நீ சிரிப்பியா? உனக்கு என்னன்னு நினைப்பு இருக்கு? கிருஷ்ண பரமாத்மான்னா… தொலைச்சு போடுவேன் தொலைச்சு… இனிமே எவளாவது உன்னை பார்த்தா கூட… உனக்கு தான் அடி விழும்…”

சரமாரியாக அவள் வெடித்து தள்ள… பதிலே பேசாமல் வெளிகாட்டிக்கொள்ளாத புன்னகையோடு சக்தி அவளையே பார்த்து கொண்டிருக்க… அந்த பார்வையை உள்வாங்கிக்கொள்ளாமல் நந்தினி குமுறிக்கொண்டிருந்தாள்.

“அன்னைக்கு என் இடத்துல அவ இருந்திருந்தா… அவளை தான் கல்யாணம் பண்ணிஇருப்பியாம்… என் கிட்டவே சொல்றா… சொல்லுடா… நீ என்ன பண்ணிருப்ப… சொல்லு…” கோபத்தில் மரியாதை காற்றில் பறக்க அவனது சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“ஷ்ஷ்… நந்தினி… என்னதிது…” அவளை அமைதிப்படுத்த முயல.

“எனக்கு தேவை உன்னோட பதில்… ஒழுங்கா சொல்ல போறியா இல்லையா? எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு…” கண்மண் தெரியாமல் அவனை அடிக்க… அந்த கோபம் அவனை வசீகரிப்பது போல தோன்றியது… இதழில் புன்னகை மலர்ந்தது.

“ஏய்… அது என்னமோ சொல்லுச்சுன்னு என்னை ஏன் அடிக்கற?”

“உன்னை அடிக்காம… அவ எப்படி உன்னை நினைச்சுட்டு இருக்கலாம்?”

“ஏய் லூசு… அந்த பொண்ணு நினைக்கறதுக்கு நான் என்ன பண்ணுவேன்…” என்று நிறுத்தியவன்… சிரித்துக்கொண்டே…”அந்த பொண்ணுக்காக நீ என்கிட்டே பேசுன தானே… அதை கல்யாணம் பண்ணிக்கோன்னு…”

“அன்னைக்கு நான் அப்படி சொன்னா? இன்னைக்கு உனக்கு அவ மேல சாப்ட் கார்னர் பொத்துகிட்டு வருதா? அப்படீன்னா என்னை என்ன நினைச்சுட்டு இருக்க? கேனச்சின்னா?”

அவனை விடாமல் உலுக்க… அவளது கையை பிடித்து விலக்க முடியாமல் அவனையும் அறியாமல் அவளது இடையில் கை வைத்து தள்ளி நிறுத்த பார்க்க… சட்டென்று பேச்சை நிறுத்திய நந்தினி இனிய அதிர்வோடு அவனை ஏறிட… அப்போதுதான் அவனது கை உள்ள இடத்தை உணர்ந்தான் சக்தி… சேலை மறைக்க மறந்த வழவழப்பான மெல்லிடையில் இருந்த தன் கையை சட்டென விலக்கிய சக்தி.

“சாரி… ஐம் சாரி…” அவளை பாராமல் உரைத்து விட்டு அவசரமாக வெளியேறினான்… மனதில் உணர்வுகள் கொந்தளிக்க… அதை அடக்கும் விதமாக அங்கிருந்த பைப்பை திறந்து விட்டு முகத்தில் நீரை அடித்து கொண்டான்… தலைக்கும் லேசாக நீரை தெளித்து கோதி கொண்டவனுக்கு மனம் அமைதியாக.

“கிளம்பும்மா…” உணர்வுகளை துடைத்த குரலில் கூறிய போதுதான் நந்தினியை பார்த்தான்… நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தவளின் உடலில் நடுக்கம் இன்னும் குறையவில்லை… அவனை போல் உணர்வுகளை துடைக்கும் கலை இன்னும் கைவர பெற்றிராத நந்தினி மெதுவாக நடந்து வந்து தலையை குனிந்து கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

மௌனமாகவே அவளை உணவு விடுதிக்கு அழைத்து சென்று இருவருமாக இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் அவளை கல்லூரிக்கு அழைத்து சென்ற போது மனம் நிறைந்து இருந்தது… இதுவரை தனக்கென்று உறவாக யாரும் இல்லாமல் தனியனாகவே நாட்களை கடந்து வந்திருந்தான்… இப்போதோ மனைவியாக நந்தினியை பார்த்தவனுக்கு உள்ளுர பெருமிதமாக இருந்தாலும் அதை அவளிடம் கூறி அவளது படிப்பை கெடுக்க நினைக்கவில்லை.

ஆனால் அவனது இந்த உணர்வுகளை பதின்ம வயதை கடந்து இருவருடமேயான நிலையில் நந்தினியால் புரிந்து கொள்ள முடியுமா என்பதை நினைத்து பார்க்க தவறி விட்டான்.

“பொங்கலுக்கு நான் சபரி மலைக்கு போறேன் நந்தினி… நாளன்னைக்கு மறுபடியும் மாலை போட்டுடுவேன்…” கல்லூரியில் இறக்கி விட்டு அவளிடம் தகவலாக கூற.

“இருமுடி கட்டும் போது நானும் வரட்டுமா?”

“எதுக்கு பாத பூஜை செய்யவா?” அவனது குறும்பு மீண்டிருக்க.

“பின்ன… வேற யாரு செய்வாங்களாம்?” சிலிர்த்து கொண்டு பதில் கூறியவளின் தொனியில் அவன் சிரிக்க.

“சரி… உங்க ப்ரின்சி பர்மிஷன் கொடுக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்…” என்று கூறி நிறுத்தியவன்.

“ஆல் தி பெஸ்ட் கலெக்டரம்மா…” புன்னகை மன்னனாக வாழ்த்தியவன் கையை நீட்ட… மனதில் சிலுசிலுவென குளிரடிக்க அந்த கையை பற்றினாள் நந்தினி.

அந்த இறுக்கம் அவளுக்கு மிகவும் பிடித்திருதது… அவளுள் அதிர்வினை பரவச்செய்த அந்த கைகளுக்குள்ளாக தொலைந்து போக விரும்பினாள்.

சக்தியை அந்த நிமிடங்கள் மிகவும் வசீகரித்தது… அவளது மென்மையோ அவனை வசியம் செய்ய ஆரம்பித்தது.

இருவருக்குமே கைகளை விலக்கி கொள்ள தோன்றவில்லை என்றாலும் மென்மையாக முதலில் கைகளை விலக்கியது சக்தி!

“கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ணிடுவாங்களா நந்து?” அவள் கேட்ட கேள்விகளுக்கு மனதிற்குள்ளாக பதில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான் அவளது கணவன்.

சக்தியை பார்த்து கண்களால் நிரப்பி கொண்டு மனமே இல்லாமல் அறையை நோக்கி போனாள் நந்தினி… உள்ளம் நிறைந்து தன்னுடைய ஒரே உறவாகி விட்டவளை நினைத்து மனம் இனிக்க வண்டியை ஸ்டார்ட் செய்தான் சக்தி.

error: Content is protected !!