Kandeepanin Kanavu 27
Kandeepanin Kanavu 27
காண்டீபனின் கனவு 27
“எப்படி பா? பெரியப்பா எப்படி திருநங்கை ஆனாரு? எதுக்காக?” சுஜாதா அதிர்வும் கண்ணீருமாக நின்றார்.
“இந்த குடும்பத்தை சாபத்துலேந்து விடுவிக்க அவர் செஞ்ச தியாகம். அந்த சித்தர் கிட்ட தன்னோட வாழ்நாள் இருக்கும்போதே இந்தக் குடும்பத்தில் அர்ஜுனன் பிறக்கணும்னு வேண்டிக்கிட்டாரு.
அப்போ அந்த சித்தர் சொன்னது மிகப் பெரிய ரகசியம். இப்போ வரை அதுக்கான காரணம் என்னன்னு எனக்கும் தெரியாது. அதுக்கு பிறகு எங்க அண்ணன் கிட்ட நான் பேசினதே குறைவு. அவருக்கே இஷ்டம் இருந்தா தான் ஏகாதசி அன்னிக்கு என்னைப் பார்க்க வருவாரு.
இந்த முறை அவர் வந்தப்ப, நம்ம வீரா நிச்சயம் காண்டீப வில் இருக்கும் இடத்திற்கு அடைஞ்சிடுவான்னு சொல்லிருக்காரு. இந்த நீலக்கல் பூஜை , சாபம் இதுலேந்து நம்ம வம்சம் வெளிய வரும். அதுக்கு பிறகு தான் நாங்க எங்க உயிரை விடுவோம்.” அவரது வார்த்தையில் ஏதோ திருப்தி இருந்தது.
“நீங்க எதுக்கு உயிரை விடனும். இப்படி எல்லாம் பேசாதீங்க..” வேதா வருத்தம் கொள்ள,
“இல்லம்மா. நாங்க ரொம்ப சுமந்துட்டோம். இனிமே கவலை இல்லை. அத தான் சொன்னேன்.”
“இப்போ தான் கவலையே ஆரம்பிக்குது அப்பா. அங்க வீராவும் சம்ரக்ஷாவும் எவ்வளோ கஷ்டப் படறாங்களோ!” தலையில் கை வைத்து அமர்ந்தார் மோகன்.
“அதுக்குத் தான் இன்னிக்கு தமா கிட்ட பேசினோம். கவலைப் பட வேண்டாம்.” தாத்தா சமாதானம் சொல்லி அங்கிருந்து சென்றார்.
மற்றவர்கள் சமாதானம் ஆகாமல் மன பாரத்தோடு அமைதியாகச் சென்றனர்.
வீரா இன்னும் வருண் முன்பு நின்று அவன் பதிலுக்காக காத்திருந்தான்.
“இன்னும் எத்தனை நேரம் ஆனாலும் னே பதில் சொன்னா தான் நான் இங்கிருந்து அந்த வில்லைத் தேடப் போவேன்.” உறுதியாக இருந்தான் வீரா.
“வீரா! ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. நான் உனக்கு எதிரி இல்ல.” வருண் சலித்துக் கொண்டான்.
“நான் கேட்டதுக்கு பதில் இது இல்ல.”
“சரி. இங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா கடல் நீர் உள்ளே வர ஆரம்பிச்சுடும். சோ மொதல்ல வில்லை தேடு. அதுக்குப் பிறகு நான் யாருன்னு கண்டிப்பா சொல்றேன். ப்ளீஸ் என்னை நம்பு.”
“நோ.. நீ சொல்லாம..” வீரா பேச ஆரம்பிக்கும் போதே
“வீர் அங்க பாரு…!” சாம் கை காட்டிய இடத்தில் லேசாக அந்த அறைக்குள் தண்ணீர் வர ஆரம்பித்தது.
சொட்டு சொட்டாகத் தொடங்கி இப்போது சற்று பெரிதாக தண்ணீர் வர ஆரம்பிக்க,
“கமான்.. சீக்கிரம் தேடு வீர்.” அவசரப் படுத்தி விட்டு ஓடினான் வருண்.
“வீர்.. நீ வா” சாம் அவனைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நகர,
சுற்றி சுற்றி அந்த இடத்தில் தேடினர். வீராவின் மனதில் ஒரு புறம் வருண் மீதிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டிருந்தது.
சாம் அவனை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். தண்ணீர் அவர்களின் கால் முட்டி வரை தொட, வருணும் வந்து அவர்களோடு சேர்ந்தது கொண்டான்.
“அந்தப் பக்கம் எதுவும் கிடைக்கல.” வருண் கூற,
வீரா அவனை உணர்ச்சி இல்லாமல் பார்த்தான்.
“ப்ளீஸ் வீர். உனக்கு நான் எல்லாம் விளக்கமா சொல்றேன். இப்போ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. என்னை நீ தாராளமா நம்பலாம்.” வீராவின் கையைப் பிடித்து சொல்ல,
வீரா என்ன உணர்ந்தானோ, சரி என்பது போலத் தலையசைத்தான்.
அந்த சிறிய இடத்தில் சுற்றிச் சுற்றித் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீரும் இப்போது நெஞ்சு வரை நிரம்பிவிட, வேறு வழியின்றி திரும்பிச் செல்ல நினைத்தான் வீரா.
“எனக்கு இங்க எதுவும் கிடைக்கற மாதிரி தெரியல. இதுக்கு மேல இங்க இருந்தா இந்த தண்ணீல மூழ்க வேண்டியது தான்.” என்றான்.
“சரி கிளம்பலாம். எனக்கும் ஒன்னும் சரியா படல.” என்ற வருண்,
வீரா முன்னே நீரில் அளந்து அளந்து நடக்க, அவனைப் பிடித்து அந்த நீருக்குள் அமுக்கினான். வீரா சத்தமும் போட முடியாமல் திடீர் தாக்குதலில் திணறிப் போக, கை காலை அசைத்து பார்த்தான்.
வருணின் பிடி வீராவின் பிடரியில் இருக்க, அவனால் தலையை வெளியே எடுத்து மூச்செடுக்க முடியவில்லை.
சற்றே தள்ளி இருந்த சாம், “வீர்” என குரல் கொடுத்தபடி வர, அங்கே வருண் மட்டும் நிற்ப்பதையும் அவன் நீருக்குள் எதையோ அழுத்திக் கொண்டிருப்பதையும் கண்டவளளுக்கு, அது தன்னுடைய வீரா தான் என்பதை கண்டுகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.
“ஹே என்ன பண்ற… வீர்…வீர்…” என வருணைக் கத்திக் கொண்டே, வீராவை இழுக்க முயற்ச்சித்தாள்.
“தள்ளிப் போ!” அவளை ஒரு கையால் நகர்த்தினான் வருண்.
“அடப் பாவி.. அவனை கொல்லப் பாக்கறியா..அது நான் இருக்கற வரைக்கும் நடக்காது.” அவன் கையை ஒரே கடி கடித்தாள்.
வருண், “ஆ!!!” வெனக் கத்த, அவனை ஒரே தள்ளில் நகர்த்தினாள். அவனது பிடி வீராவிடமிருந்து தளர்ந்தது.
அந்த சமயம், வீரா தளர்ந்து விட்டான்.
சாம் அவனைப் பிடித்து வெளியே இழுக்க , அதற்குள் மீண்டும் பிடியை இறுக்கி சம்ரக்ஷாவை தள்ளி விட்டான்.
“தள்ளிப் போ. இதுல நீ தலையிடாத. இங்க நேரம் ரொம்ப கம்மியா இருக்கு.” முறைத்தான்.
“என்ன டா பண்ண முடியும் உன்னால.விடு டா அவன.” வருணின் மறுகையை சாம் பிடித்து இழுத்தாள்.
இருவருக்கும் நடந்த கலாட்டாவில் வீர் மூர்ச்சையானான். ஏனெனில் வருண் அவனது தலையை நீருக்குள் அழுத்திய படியே தான் இருந்தான்.
வீர் துவள்வது வருணுக்குத் தெரிய அப்போது வீராவை வெளியே கொண்டு வந்தான்.
அவன் வந்த காட்சி, சம்ரக்ஷாவின் உயிரைப் பிளந்தது.
“வீரா…!” அழுதே விட்டாள்.
“டேய் சண்டாளா.. என்ன டா பண்ண அவன… வீர்! எழுந்திரு வீர்.!” அழுது கொண்டே வருணின் பின்னால் சென்றாள்.
வருண் அவனை தோளில் போட்டுக் கொண்டு நீந்தி வெளியே வந்தான்.
சாம் அழுது கரைந்தாள்.
அதற்குள் அந்த சிறு இடம் முழுதும் நீரில் மூழ்கி விட, சாம் திணறிப் போனாள். அவள் இருந்த மனநிலையில் அவளால் நீந்த முடியவில்லை.
வருண் அதை உணர்ந்து, அவளையும் ஒரு கையால் பிடித்து இழுத்து கடல் மட்டத்திற்கு வந்தான்.
அவர்கள் குதித்த அந்த அடிவாரத்திற்கு வந்து,
“ம்ம்ம் மேல ஏறு!” என்றான்.
அவள் மறுக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் பேசாமல் மேலே ஏறினாள்.
வீராவை தோளில் போட்டபடியே வருணும் மேல் ஏறி , முன்பு அவர்கள் கண்டு வந்த சமதள இடத்திற்கு வந்தனர்.
வந்ததும் அந்த பனி லிங்கம் போன்ற அமைப்பிற்கு முன் வீராவைக் கிடத்தினான்.
“வீரா…வீரா…” தேம்பி தேம்பி அழுதே அவனைப் பிடித்து உலுக்கினாள். அவனிடம் அசைவில்லை. அவன் வயிற்றைப் பிடித்து அழுத்தி நீரை வெளியேற்ற நினைத்து அதையும் முயற்சித்தாள்.
“ப்ளீஸ் டா.. எழுந்திரு.. வீர்.. என்னால உன்ன இப்படி பார்க்க முடியல டா.” அவன் இதயத்தில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.
அவளின் அந்த செய்கை அனைத்தையும் சத்தமில்லாமல் ஓரிடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.
“உனக்கு என்ன டா வேணும். அந்த வில் தான. அதுக்கு ஏன் டா என் வீராவ கொன்ன. உன்ன சும்மா விடமாட்டேன்.” என ஆவேசமாக எழுந்து வருணிடம் வந்தாள்.
சக்தியே இல்லாத அவளது கைகளினாள் அவனை அடித்தாள். அவளது வேகம் அவளுக்கே அது அடியே இல்லை என்பதை உணர்த்தியது.
முடியாமல் துவண்டு கீழே சரிந்தாள்.
“என்னையும் கொன்னுடு. வீரா இல்லாம நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். என்னையும் கொல்லு டா. கொல்லு..” முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள்.
வீரா வின் அருகில் நகர்ந்து சென்று, அவனது கன்னத்தைப் பிடித்து ஆட்டினாள்.
“வீரா… உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா… எனக்கு பிடிக்க ஆரம்பிச்சதுநாலையே உனக்கு இப்படி எல்லாம் ஆகுதா.! எழுந்திரு.. என் கூட நீ வாழனும்.. எழுந்திரு..” அவனது மார்பில் குத்தினாள்.
பிறகு அவன் கொடுத்த முத்தம் நினைவுக்கு வர, அதே போல செய்ய அவளது மூளை உடனே ஆணை பிறப்பித்தது.
சிறிதும் யோசிக்காமல், அவன் வாயோடு வாய் பதித்தாள்.
அவளது மூச்சை அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனை எப்படியும் விழிக்க வைத்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருந்தாள்.
இடையிடையே அது மருத்துவமாக இல்லாமல் காதலாகவும் இருந்தது. அவனது இதழை முத்தமிடவும் செய்தாள்.
அப்போது அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை பெருக்கெடுத்தது.
அந்தக் கண்ணீர் அவளது கன்னங்களின் வழி இதழில் வழிந்து, அது வீராவின் இதழில் தஞ்சமடைந்தது.
அவளது மூச்சுக் காற்றோடு அவளது கண்ணீரும் சேர்ந்து அவனுக்குள் இறங்க, அவனது உயிரை அந்தத் கண்ணீர் நனைத்து விழிக்க வைத்தது.
“லொக் லொக்..”கென இரும்பிக் கொண்டே உயிர் பெற்றான் வீரா.
சற்று விலகி அமர்ந்த சம்ரக்ஷா மூச்சு வாங்க, அவன் எழுந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்தாள்.
அவனையே ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் தலையில் தட்டிக் கொண்டு உருண்டு பிரண்டு எழுந்து வந்தான்.
வந்தவன் சம்ரக்ஷாவை விடுத்து நேரே வருணிடம் சென்றான்.அவனோடு சண்டையிடப் போகிறான் என்று எதிர்ப்பார்த்த சம்ரக்ஷா , சட்டென வீரா வருணைக் கட்டிக் கொண்டதும் கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றாள்.
இருவரும் நீண்ட நாள் பழகிய அண்ணன் தம்பி போல ஆரத் தழுவியது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது.
‘உனக்காக இங்க ஒருத்தி உயிரக் குடுத்து அழுத்துட்டு இருந்தா, நீ கண்டுக்காம உன்னை கொல்லப் பார்த்தவன் கிட்ட போய் இளிச்சுக்கிட்டு நிக்கற, வெக்கங்கெட்ட டாக்..’ மனதில் பொருமிக் கொண்டு விறு விறு வென அங்கிருந்து நடந்து சென்றாள்.
அவளைக் கண் காட்டி வீராவிற்கு வருண் சைகை செய்ய,
அவளது பின்னே ஓடினான்.
“சாம்.. நில்லு..” அவளது வேகத்திற்கு அவனும் நடந்தான்.
“ச்ச..என் பின்னால வராத. போ” தன்னைக் கண்டுகொள்ளாமல் போனது அவளுக்கு மனதை அழுத்திக் கொண்டே இருந்தது.
“சொல்றத கேளு, சாம். கொஞ்சம் பொறுமையா இரு.” அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.
“முடியாது. இனிமே இங்க இருக்க எனக்குப் பிடிக்கல. நான் போறேன்.” அவனது முகத்தைப் பார்க்காமல் அவள் திரும்பிக் கொள்ள,
அவளது முகத்தைக் கையில் ஏந்தினான்.
இது அவளுக்குமே புதுசு தான். வீரா வா இது என்ற வியப்புத் தோன்றியது.
கோபம் ஒரு புறம் இருந்தாலும் இந்த வீராவை ஏனோ ரசிக்கத் தோன்றியது. அவனது செயல் அவளுக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பை விதைத்தது.
அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“நீ அழுதது, எனக்காக அழுதது எனக்குத் தெரியும். ஆனா அத விட முக்கியமான சில விஷயங்கள நான் தெரிஞ்சுக்க காரணம் வருண் தான்.”
“என்ன?! அப்படி என்ன தெரிஞ்சுக்கிட்ட, அவன் உன்ன தண்ணீல போட்டு அமுக்கிக் கொல்லப் பார்த்தான். அவனப் போயி..” மீண்டும் கோப முகம் எட்டிப் பார்க்க,
“சரி, என்னைக் கொல்லப் பார்த்தா அந்த தண்ணீலயே என்னை விட்டுட்டு வந்திருக்கலாமே! அப்பறம் எதுக்குத் தூக்கிட்டு வரணும்? அத யோசிச்சியா?” அவளது மூளைக்கு இப்போது கொஞ்சம் வேலை கொடுத்தான்.
“ஆமா. அவன் உன்ன தண்ணீல அமுக்கரான்னு மட்டும் தான் யோசிச்சேன். வேற எதுவும் என்னால யோசிக்க முடியல.”
“சரி இப்போ யோசி. அவன் எனக்கு உதவி தான் செஞ்சிருக்கான்.” அவளது கன்னத்தைத் தட்டி சிரித்தான்.
அவனுடைய சிரிப்பில் மற்ற பெண்களைப் போல சாம் இப்போது மயங்கினாள்.