Kandeepanin Kanavu – 29

                                        காண்டீபனின் கனவு 29

 

அவர்களது இருப்பிடத்திற்கு வந்ததும், உடனே போன் செய்து தங்கள் இடத்தை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.

அவனின் அவசரம் சாமிற்கு சற்று அச்சத்தை உண்டாக்கியது.

“என்ன அவசரம் டா? ஏன் எல்லாத்தையும் காலி பண்ற? திரும்ப நாம இங்க வர மாட்டோமா?” அவன் பின்னாலேயே சென்று கேட்டாள்.

அவனோ மீண்டும் போன் பேசுவதில் மும்மரமாக இருந்தான்.

“திங்க்ஸ் எல்லாம் நீங்க யாருக்காவது வித்துடுங்க. எனக்கு அப்பறம் அந்த அமௌன்ட்ட அக்கவுன்ட்ல போடுங்க.” பேசிக் கொண்டே இருந்தான்.

“வீரா..” அவளும் விடாமல் அவனைத் துறத்த,

“கொஞ்ச நேரம் இரு சாம்..” பொறுமையாகவே பதில் தந்தான்.

அவளும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அமர்ந்துவிட, சற்று நேரம் கழித்து அவளிடம் வந்தான்.

“இப்போ சொல்லு. என்ன கேட்கணும்?” அவளின் தோளைப் பற்ற…

“எக்சாக்ட்லி… என்னை கேட்கணும். நீயா வீட்ட காலி பண்றோம்னு சொல்ற.. என்னை ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலியா?” கையைத் தட்டிவிட்டாள்.

“ நமக்கு இனி இங்க வேலை இல்ல சாம். புரிஞ்சுக்கோ.” எடுத்துக் கூற வந்தான்.

“உனக்கு இங்க வேலை இல்ல. பட் எனக்கு காலேஜ் இருக்கு. உனக்கு அது ஞாபகம் இல்ல..” உரக்கவே கத்தினாள்.

“நான் அத யோசிக்காம பண்ணல. நீ அங்க போய் கண்டினியு பண்ணிக்கலாம். நான் அர்ரேன்ஜ் பண்றேன். ஆனா நான் இல்லாம நீ இங்க இருப்பியா? அதான் சொன்னேன்.” அவன் கத்தாமல் புரியவைத்தான்.

“ உனக்கு அங்க வேலை அந்த வில் எடுக்கற வரை தானே. அதுக்கு அப்பறம் இங்கயே வந்து வேலைய கண்டினியு பண்ண வேண்டியது தான.”

“அது உண்மை தான். ஆனா அங்க என்னென்ன நடக்கும்? அதுக்கு பிறகு வர பின்விளைவுகள் என்னன்னு என்னால யோசிக்க முடியல. அதுனால தான் சொல்றேன்.” வீராவின் மனம் கனத்தது.

“ஹே என்ன டா பயமுறுத்தற..?” கோவத்தை மறந்து சாம் அருகில் வந்தாள்.

“ச்ச ச்ச… அப்படி இல்ல. ஒரு பேச்சுக்கு சொல்றேன். அப்படியே எல்லாம் நல்லவிதமா நடந்து நமக்கு அங்க ஒன்னும் வேலை இல்லன்னா கண்டிப்பா நீ இங்க வந்து படிக்கலாம். நான் வரல்லைன்னாலும் நீ இங்க வந்து படி.” அவளது பதட்டத்தைக் குறைத்தான்.

“நீ இல்லாம நான் மட்டும் வரணுமா.. நோ..” சாம் சிணுங்க,

“அத தான டி அப்போவே சொன்னேன்.” அவளது தலையில் தலையால் முட்ட,

அவனது இந்த விதம் அவளுக்குப் பிடித்து இருந்தது. வீராவை இத்தனை நாள் காதல் என்ற கோணத்தில் பார்க்காமல் இபோது பார்ப்பது அவளுக்கே புதிதாக இருந்தது.

இதழோரத்தில் சிரிக்க, “என்ன?” அவளது தோளில் கை போட்டுக் கொண்டு கேட்டான்.

“ஒண்ணுமில்ல..” என அவனது பார்வையை தவிர்த்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவனும் தன்னோடு அவளை இதமாக சேர்த்துக் கொள்ள, இருவர் உள்ளமும் நிறைந்தது.

**

கோடங்கி தனது பூஜையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். தாத்தாவும் மற்றவர்களும் மனதில் வருந்திக் கொண்டிருந்தாலும், வீராவின் மேல் நம்பிக்கையும் இருந்தது.

அன்றைய பூஜைய முடித்த கோடங்கி, தாத்தாவிடம் வந்தார்.

“ஐயா…!”

“சொல்லு வல்லையா! என்ன விஷயம்?” மனம் படபடத்தது,

“இன்னிக்கு மை போட்டு பாத்ததுல, தம்பி வீராவுக்கு தான் தான் அர்ஜுனன்னு தெரிய வந்துடுச்சு. அங்கிருந்த கண்டத்துல இருந்து தப்பிச்சுட்டாரு.” விஷயம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை சாதாரணமாகக் கூறினார்.

“இது சந்தோஷமான விஷயம் தானே!அதை எதுக்கு இத்தனை சோகமா சொல்ற வல்லையா? எதாவது பிரச்சனையா?” தாத்தா கலங்க,

“எல்லாம் நல்லது தாங்க. ஆனா இந்த வருண் விஷயம் தான் எனக்குப் புரியல. நடுல நடுல பூஜை செய்யறப்ப அந்த வெள்ளி மான்களும் அதன் கூரானா பார்வையும் தான் என்னை குத்துது. இடைஞ்சல் பண்ணுது. அது தான் கவலையா இருக்கு.” தனக்குத் தோன்றியதைக் கூறினார்.

“தமா தான் அதைப் பத்தி பேசவே வேண்டான்னு சொல்லிட்டானே. நாம இதுல எதுவும் பண்ண முடியாது.” வருத்தத்துடன் மீண்டும் இருக்கையில் சாய்ந்தார்.

அந்த நேரம் சரியாக போன் அடித்தது. தாத்தா தான் பேசினார்.

“காண்டீபா…எப்படிப்பா இருக்கே? உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..” படபட வென அவர் பேச,

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு பேசினான் வீரா.

“நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க?” முதலில் அதைக் கேட்டவன்,

“இன்னும் உயிர் இருக்குப்பா. அது நம்ம குலத்தை நீ காக்கற வேலை முடியற வரைக்கும் இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.” மனதில் உள்ளதைக் கொட்டினார்.

“எனக்கு இப்போ எல்லாம் தெரிஞ்சிருச்சு தாத்தா. நீங்க கவலைப் படாதீங்க. நானும் சம்ரக்க்ஷாவும் உடனே கிளம்பி ஊருக்கு வரோம். நாம நம்ம கிராமத்துக்குப் போகலாம்.”

“நாங்க எல்லாரும் இப்போ அங்க தான் இருக்கோம் பா. நீ நேரா இங்கயே வந்துடு. நான் உங்க அப்பாவையும் மாமாவையும் அனுப்பி உன்னோட திங்க்ஸ் எல்லாம் இங்க கொண்டு வர சொல்றேன். எப்போ கிளம்பறீங்க?” தாத்தா பரபரப்பாக,

“இன்னும் அஞ்சு மணி நேரத்துல ஃபிளைட். நாளைக்கு ராத்திரி அங்க இருப்போம். அம்மா அப்பா கிட்ட சொல்லிடுங்க. எனக்கு இங்க முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. நான் கிளம்பறப்ப மறுபடியும் போன் செய்யறேன்.” என வைத்துவிட்டான்.

“மோகன்…. வேதா..சுஜா…மாப்பிள்ளை…” ஆனந்தத்தில் கத்தினார்.

“அனைவரும் போட்டது போட்டபடி ஓடி வர,

“என்னப்பா என்ன ஆச்சு…” மோகன் கலவரமானார்.

“நாளைக்கு நம்ம கண்டீபனும் சின்ன பாப்பாவும் இங்க வராங்க. இப்போ தான் போன் பண்ணான். நீங்க ரெண்டும் பேரும் போய் அவங்க துணிமணி அப்பறம் வேண்டியது என்னவோ இங்க கொண்டு வந்துடுங்க. அவங்க நேரே இங்க வரேன்னு சொல்லிட்டாங்க.” தாத்தா கூறியதும் சுஜாதாவும் வேதாவும் மிகவும் திருப்தி அடைந்தனர்.

“சரி மாமா. மோகன் வா போகலாம்.” கிருஷ்ணன் முதலில் கிளம்பினார்.

“சரி நாங்க போயிட்டு வரோம்.” மோகனும் கிளம்ப,

“அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு வைங்க. பாவம் நல்லா சாப்பிட்டு ரொம்ப நாளா கஷ்டப் பட்டிருப்பாங்க.” தாத்தாவின் முகத்தில் சந்தோஷம் தெரிய, பெண்கள் இருவரும் கூட ஆனந்தப் பட்டனர்.

அனைத்து வேலைகளும் இங்கு  விறுவிறுவென நடந்து கொண்டிருக்க, அங்கே வீராவும் சாமும் தேவையானதை மட்டும் தங்களின் பெட்டியில் வைத்துக் கொண்டு மற்றதை நண்பன் ஒருவனின் பொறுப்பில் விட்டுப் புறப்பட தயாரானார்கள்.

சரியான நேரத்தில் தன்னுடைய பெட்டி ஒன்றுடன் அவர்களின் வீட்டிற்கு வந்தான் வருண்.

“போலாமா?!” என்றான்.

“ம்ம் கிளம்பலாம்..” கதவைப் பூட்டி சாவியை நண்பனிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினான் வீரா.

ஆனால் சாமுக்குத் தான் வருணின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

அவனை முழுதாக நம்ப முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு புரியாத புதிராகத் தான் இருக்கிறான். இப்போதும் அவன் அர்ஜுனனின் பாதி என்று சொல்வதைக் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“என்ன சாம் ஒன்னும் பேசமாட்டேங்கற. இன்னும் என் மேல கோபமா?” காரில் செல்லும் போது பேச்சைத் துவக்கினான் வருண்.

“என்ன பேசணும். எனக்கு உங்கள நம்ப முடியல. ஓபனா சொல்றேனே. போதுமா?” சீறினாள்.

“ஹே சாம். காம் டவுன். எதுக்கு இவ்வளோ டென்ஷன்.” வீரா அவளை கட்டுப்படுத்த,

“ஹா ஹா… அப்படி நான் என்ன செஞ்சேன். ஏன் நம்ப முடியல? நம்ம வாழ்க்கைல எதைத் தான் நம்ப முடியுது..நீயே சொல்லு. நாம போன பிரயானத்துல ஏதாவது நம்பர மாதிரி இருந்துச்சா… அதையெல்லாம் ஏத்துக்கிட்ட.. என்னை மட்டும் நம்ப முடியலன்னு சொல்ற.” அவளது வாயைப் பிடுங்கவே அவன் பேசுவது போல இருந்தது.

வீரா அவளை ‘எதுவும் பேசாதே’ என தலையசைத்து ஜாடை காட்ட… அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

ஆனால் வருண் விடாப்படியாக பேசிக் கொண்டே வந்தான்.

ஏர்போர்ட் வந்ததும் மூவரும் இறங்கி செக்கின் செய்து விட்டு , ப்ளேன் புறப்படும் இடத்திற்கு வந்து அமர்ந்தனர்.

“எதாவது சாப்படறியா?” சாமைக் கேட்டான் வீரா.

“எனக்கு சாலட் அப்புறம் ஒரு ஆரஞ்சு ஜூஸ் மட்டும் வேணும்.” என்றாள்.

“வருண் என் கூட வா.” என அவனையும் கையேடு அழைத்துச் சென்றான்.

அவன் இல்லாத சமயத்தில் எதாவது பேசி சம்ரக்ஷாவை அவன் ஏத்திவிட்டு விடக் கூடாதே என்ற பயம்.

“வருண் எனக்கு ஒரு டவுட்…!” வீரா மெல்லக் கேட்டுப் பார்த்தான்.

“நீயும் நானும் பாதி பாதின்னா.. நீ ஏன் என் குடும்பத்துல பிறக்கல?” இது ஒரு முக்கிய கேள்வி என்பது இருவருக்குமே புரிந்தது.

“என் பிறப்பு ஒரு ரகசியம். அதை தெரிஞ்சுக்க நீ இன்னும் ஆயத்தமாகல. ஊருக்கு போனதும் தெரிஞ்சுப்ப.” அத்துடன் முடித்தான்.

அதற்குப் பிறகு அவனைத் துருவிக் கேட்க வீரா விரும்பவில்லை.

தங்களின் ஊருக்கு வந்து இறங்கியதும் ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு கிராமத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களின் கார் வருவதை ஆவலுடன் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் குடும்பத்தினர்.

பின் சீட்டில் இருந்து வீராவும் சம்ரக்ஷாவும் இறங்க, அவர்களின் பின்னே, முன்னால் அமர்ந்திருந்த வருணும் இறங்கி வந்தான்.

“அம்மா..அத்தை…” என சாம் ஓடிச்சென்று அவர்களை கட்டிக் கொள்ள,

தாத்தா வீராவை கண்கலங்க பார்த்து நின்றார்.

“வா பா.. வா…” மோகன் இத்தனை நாள் இல்லாமல் வீராவை மகிழ்ச்சியாகக் கட்டி அணைத்தார்.

அனைத்தும் வருண் அங்கு வந்து நிற்கும் வரை தான்.

வருணைப் பார்த்ததும் கோடங்கியும் தாத்தாவும் கண்களில் பீதியைக் காட்டினர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மோகனும் மற்றவர்களும் யாரென பார்த்துக் கொண்டிருக்க, சூழ்நிலையை உணர்ந்தான் வீரா.

“இவன் வருண். என்னோட கூட வேலை பார்த்தவன்.” என ஆரம்பிக்க,

“என்ன அப்படி சொல்லிட்ட… நீ இல்லாம நான் இல்ல , நான் இல்லாம நீ இல்லன்னு சொல்லு. நாங்க க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்..” வீராவின் அருகில் வந்து நின்று பளிச்சென்று பேசினான்.

“அப்படியா.. வாங்க வாங்க..” மோகன் சிரித்தார்.

“உள்ள வாங்க…” சுஜாதா அனைவரையும் அழைக்க,

“வேண்டாம்..” தாத்தா தடுத்தார்.

அனைவரும் அவரைப் பார்க்க, தன் பதட்டத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு,

“இல்ல ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வராங்க.. ஆரத்தி சுத்தி அப்பறம் உள்ள கூட்டிட்டு போலாம்.” தாத்தா கூறியது வேதா உடனே எடுத்து வரச் சென்றார்.

கோடங்கியும் பின்னால் சென்று தன்னுடைய மை ஒன்றை எடுத்து வேதாவிடம் கொடுத்தார்.

“இதை வை மா அவங்க நெத்தியில. ரொம்ப கஷ்டப் பட்டு வந்திருக்காங்க.. காத்து கருப்பு அண்டாது.” சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார்.

வந்தவர் தாத்தாவைப் பார்த்து தலையாட்ட, தாத்தா உள்ளே சென்றார்.

“வேதா ஆரத்தி போட்டு வெச்சு கூட்டிட்டு வா மா!” என்று தன் அறைக்குச் செல்ல,

“வல்லையா…” அழைத்தார்.

“ஐயா… நம்ம குடும்பத்தை சேராதவன் அந்த மை யை வெச்சுகிட்டா, கண்டிப்பா இன்னிக்கு சாப்பிடும் போது அவனுக்கு வாந்தி வந்துடும். அதுல தெரிஞ்சிடும்.” வல்லையா விஷயத்தைக் கூற

“ஆனா எனக்கு அவன பாத்தா…” சொல்லவே சற்று நடுக்கமாக இருந்தது.

“உங்க அண்ணன் தமயந்தி சாயல் இருக்குன்னு சொல்ல வரீங்களா?” வெளிப்படையாகவே சொன்னார் கோடங்கி.

“ஆமா வல்லய்யா.. ஏதோ தப்பா இருக்கோன்னு மனசுக்குப் படுது. தமா மட்டும் பிரம்மச்சாரியா இல்லன்னா… கடவுளே…! நினைக்கவே பயமா இருக்கு.” நிற்க முடியாமல் கீழே அமர்ந்து விட்டார்.

“அதுக்குத் தான் முதலில் இந்த மை. பொறுமையா இருங்க.. எல்லாம் சுபமா தான் முடியும்னு உங்க அண்ணனே சொல்லிருக்காரு.” தைரியம் சொல்ல,

“என்னவோ… எனக்கு மனசெல்லாம் பிசையுது. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.” அங்கேயே படுத்துக் கொண்டார்.

மூவருக்கும் ஆரத்தி சுற்றி, கோடங்கி கொடுத்த மையை வைத்து உள்ளே அழைத்தார் வேதா. மூவரும் வீட்டினுள் வந்து அமர்ந்திருந்தனர்.

வீராவிற்கு இந்த வீடு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் தாத்தா அடிக்கடி வர அனுமதிக்க மாட்டார். இப்போது பார்க்க மிக நிம்மதியாக இருந்தது.

அப்படியே பழைய வாசனை மாறாமல் இன்றும் புதுப் பொலிவுடன் காட்சியளித்தது.

“குளிச்சுட்டு வாங்க. சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரிச்சா உடம்பு அலுப்பெல்லாம் போகும். வீரா வருணுக்கு மாடில உன் அறைக்கு பக்கத்துல இருக்கற அறைய குடு. போங்க..” மோகன் மூவரையும் அனுப்ப,

சம்ரக்ஷா மட்டும் கீழே உள்ள அறையிலேயே தங்கிக் கொண்டாள்.

“உனக்கும் மேல ரூம் இருக்கு டா..” வேதா கூற,

“எனக்கு உங்ககூட தான் இருக்கணும். நானும் கீழே இருக்கற அந்த குட்டி ரூம் எடுத்துக்கறேன்.” சாம் சொல்ல,

“அது உனக்கு எப்படி போதும்.” சுஜாதா கேட்டார்.

“எல்லாம் போதும். நான் மேல போக மாட்டேன்.” பிடிவாதமாக நின்றாள்.

“ம்ம்…சரி..உன் இஷ்டம்.” என அவள் போக்கில் விட்டனர்.

மூவரும் குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தனர்.

“தாத்தா எங்கே?” வீரா கேட்க,

“அவருக்கு கொஞ்சம் தல வலின்னு படுத்துட்டாரு. நீயும் சாப்பிட்டு தூங்கு. அப்பறம் பாக்கலாம் அவர.” வேதா பதில் தந்தார்.

கோடங்கி அங்கேயே நின்று வருணைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு தங்களின் அறைக்குச் சென்று படுத்தனர்.

வருண் கடைசி வரை வாந்தி எடுத்தது போலத் தெரியவில்லை. வல்லய்யா தாத்தாவிடம் சொல்ல,

“அப்படின்னா…அவன் நம்ம குடும்பத்து ஆளா…!!!” தாத்தாவிற்கு நிஜமாகவே தலை சுற்றியது.