Kandeepanin Kanavu-4

Kandeepanin Kanavu-4

                     காண்டீபனின் கனவு 4

 

காண்டீபனின் கனவு தொடர்ந்தது. லேசான ஒளியை ஊன்றுகோலாகப் பிடித்துக் கொண்டு அது என்ன இடம் என்று பார்க்க முற்பட்டான்.

அது ஒரு குகை. அவன் ஆறடிக்கும் சற்று கூடுதலாக இருந்தான். நிமிர்ந்து பார்த்தால் தலையை முட்டியது அந்தக் குகை.  ஒருவர் மட்டுமே நடந்து செல்லும்படியான பாதை. ஆனால் முடிவில்லாத நீண்ட பாதையாகத் தென்பட்டது.

“இது என்ன இடம்! குகை போல இருக்கே!” திரும்பிப் பார்த்தால் வந்த பாதை தெரியவில்லை.

போகும் பாதை மட்டுமே சாஸ்வதம். திரும்பிச் செல்லவேண்டுமென்றால் இருளில் தான் நடக்க வேண்டும்.

ஆகையால் முன்னேறிச் சென்றான்.

வெளிச்சத்தில் இப்போது குகை சற்று முன்னைவிட நன்றாகத் தெரிந்தது. அதனால் ஓடாமல் நடக்கலானான்.

அந்தக் குகையில் ஏதோ வரைந்து வைக்கப் பட்டிருப்பது தெரிந்தது. கண்ணை கூர்மையாக்கி அது என்னவென்று பார்க்க நினைத்தான்.

ஆம்! அது ஓவியங்களே தான். ஆனால் அரைகுறையாக இருந்தது. எதுவும் முற்றுப் பெறவில்லை.

ஒரு பக்க மலை. பாதி தீட்டப் பட்ட தாமரை மலர். அரைவட்டம்,அதில் கூரான சில முனைகள். பாதி மனிதன்.

“இவை என்ன?” யாரும் இல்லாத அந்த இடத்தில் கேள்வியை மட்டும் பொதுவாகக் கேட்டான்.

“காண்….டி……பா………..” அந்த ஒளியிலிருந்து மெல்லிதான சத்தம்  அவன் பேரைச் சொன்னது.

“நான் தான்… நான் தான்…யார் கூப்டீங்க?”சுற்றிச் சுற்றித் தேடினான்.

மீண்டும் அதே போல “காண்….டி….பா…..” என்றது.

இப்போது சுற்றி இருந்த படங்கள் காணவில்லை.

அவன் பார்த்த படங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டான்.

ஒளி குன்றியது போல் பிரம்மை தோன்ற, அதற்குள் அந்த ஒளியை அடைய மீண்டும் ஓடினான்.

மூச்சிரைத்தது. உடலெங்கும் சில்லென்ற பனிக் காற்று வீசியது.

‘இது என்ன? இத்தனை நேரம் இல்லாமல் குளிர் வாட்டுதே!’ சிந்தித்துக் கொண்டே தன் உள்ளங்கையை சூடு பறக்கத் தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. குளிர் அவனை நடக்கவிடாமல் செய்தது.

சட்டென அவனை யாரோ தொட, திரும்பிப் பார்த்தான்.

யாரோ அங்கே நின்றார்கள். யாரென தெரியவில்லை. உருவம் மட்டுமே தெரிந்தது.

“யார் நீங்க? நான் இங்க என்ன பண்றேன்? இங்க எப்படி வந்தேன்? இது என்ன இடம்?” ஒரு துணை கிடைத்த ஆர்வத்தில் வரிசையாக கேள்விகளை அவர் மீது தொடுத்தான்.

“ நான் யாருன்னு உனக்குத் தெரியுமே காண்டீபா. இது தான் உன்னோட பாதை. முன்னேறிப் போகாம ஏன் உட்காந்த?” அது பெண் குரலா ஆண் குரலா என அவனால் பகுத்தறிய இயலவில்லை.

“என்னால போக முடியல. குளிருது.” பதில் மட்டும் சொன்னான்.

“குளிரா? இல்லையே! நீ குளிருன்னு நினச்சா குளிரும். வெயில்னு நெனச்சா வெயில். இல்ல எதுவுமே இல்லாத வெட்ட வெளின்னு நினச்சா… அப்படி தான் இருக்கும். உன் மன நிலை தான் இங்க பிரதிபலிக்குது.” அவனுக்கு எதுவோ எடுத்துரைக்க நினைத்தார்.

“இல்ல. எனக்கு தல சுத்துது. நான் ஏன் இங்க வரணும். எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? பதில் சொல்லுங்க ப்ளீஸ்..இந்த குழப்பத்துலேந்து என்னை காப்பாத்துங்க. எனக்கு நீங்க யாருன்னு தெரியல.” அனைத்தும் அப்போதே தெரிந்து கொள்ள நினைத்தான்.

“எல்லாமே சீக்கிரம் உனக்குத் தெரியவரும். உனக்கே புரியும் காலம் வந்துடுச்சு. நான் யாருன்னும் உனக்கு தெரியாம போகாது. நான் வரேன்…” பின்னே சென்று அந்த இருளில் தொலைந்து போனார்.

“நில்லுங்க.. நில்லுங்க…ஸ்டாப்..” அவன் கத்தியும் பிரயோஜனம் இல்லை.

இவன் கத்தியதில் எழுந்து வந்தது சம்ரக்ஷா தான்.

“வீர்…வீர்.. என்ன டா. என்ன ஆச்சு..?” அவனை உலுக்கினாள்.

கண்ணைத் திறக்காமல் “ஸ்டாப்…” என கத்தினான்.

“வீரா…வீரா….! டேய்..” அவன் தோளைப் பற்றி எழுப்பினாள்.

எப்போதும் போல பதறி விழித்தான்.

“ச்ச…நாட் அகைன்!” என தன்னுடைய அக்டிவிட்டி  ட்ராக்கரரில் மணி பார்க்க, காலை ஆறு எனக் காட்டியது.

“என்ன டா? மறுபடியும் கனவா..?” அவனது கலைந்த தலைய சரி செய்தாள்.

இது போன்ற அவளுடைய சிறு செயல்கள் இருவரையும் போட்டி பொறாமையிலிருந்து ஒன்றாக்கியது.

அவனும் கனவை அவளிடம் விளக்கினான்.

“சாம். ஐ திங் சம்திங் ஃபிஷ்ஷி. அடிக்கடி வர கனவு தான். ஆனா ஏதோ சொல்ல வருது. என்னை ஏதோ கண்டுபிடின்னு புஷ் பண்ணிக்கிட்டே இருக்கு. மண்டையே வெடிக்கற மாதிரி இருக்கு.” அவளின் கனிவான சிறு தீண்டல் அவனை சொல்ல வைத்தது.

“என்ன சொல்ற வீர். இப்படி கூட கனவு வருமா?  என்ன கண்டுபிடிக்கணும்? தெளிவா சொல்லு. எதாவது க்ளு கெடைக்குதான்னு பார்ப்போம்.” அவள் கேட்டது, வீராவிற்கு சட்டென மூளையை வேலை செய்ய வைத்தது.

“ நல்லா சொன்ன.. இரு” அவசரமாக எழுந்து அவனது டேபிளுக்குச் சென்று ஒரு நோட்டில் அவன் கண்ட அனைத்தையும் எழுதி வைத்தான்.

‘குகை, இருட்டு, ஒளி, ஓவியங்கள், பாதி  மலை, பாதி தாமரை, அரைவட்டம், அதன் கூரான நுனிகள், பாதி மனிதன்..’ எழுதியும், நினைவில் இருந்தவரை அதை வரைந்தும் வைத்தான்.

இவற்றை எழுதிய பின்னர், “ஒரு குரல்” என எழுதி அதற்குப் பின்னால் பெரிய கேள்விக் குறியையும் போட்டுவைத்தான்.

அவன் என்ன எழுதுகிறான் என பின்னால் வந்த சம்ரக்ஷாவும் பார்க்க,

“என்ன குரல்?” என்றாள்.

“அந்த குரல் யாருதுன்னு தெரியல.ஆனா எனக்கு அவங்கள தெரியும்னு சொன்னங்க.”அவன் சீரியசாகச் சொல்ல,

அவன் முகத்தையே இமை தட்டாமல் அவளும் பார்த்தால், அவனும் அவள் ஏதோ சொல்ல வருகிறாளோ என்று விடாமல் பார்க்க,

“ஹா ஹா….” கல கலவென சிரித்தாள்.

“ஏன் டா…உனக்கு மட்டும் இப்படி எல்லாம் கனவு வருது. பாதி மலை பாதி மனுஷனா.. அத கூட முழுசா பார்க்க மாட்டியா..?” மீண்டும் சிரித்தாள்.

“அப்பறம் என்ன .. குரலா? என்ன திருக்குறளா..?” அவன் முகத்திற்கு நேராகச் சிரிக்க, அவன் கடுப்பானான்.

“போடி பிசாசு. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு.” கையில் இருந்த நோட்டால் அவள் தலையில் அடிக்க வர, சிக்காமல் குனிந்து கொண்டாள்.

“ஹே..கொஞ்சமாவது லாஜிக்கோட நினச்சு பாரு டா. அரைகுறையா வரைஞ்சா என்ன அர்த்தம்? அத வரஞ்சவங்களுக்கு சரியா வரையத் தெரியலன்னு அர்த்தம். அதுக்கும் மேல, உனக்கு …” சற்று தள்ளி நின்றுகொண்டாள்..

“என்ன டி எனக்கு…” அவளை நோக்கி முன்னேறினான்.

பாத்ரூம் வரை வந்தவள், “உனக்கு எதையும் முழுசா பண்ணத் தெரியலன்னு அர்த்தம்..” சிரித்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து தாழ் போட்டுக் கொண்டாள்.

“அடிங்க..!வெளிய வா டி.. கைல மாட்டுன காலி நீ..மொளச்சு மூணு இல விடல.. என்ன பேச்சு பேசுது பாரு.” மூடிய கதவை எட்டி உதைத்தான்.

அவளிடம் சத்தமே இல்லை.

“எவ்வளோ நேரம் ஆனாலும் வெளிய வந்து தான் டி ஆகணும். நான் இங்கயே தான் இருப்பேன். காலேஜுக்கு போகணும் ஞாபகம் வெச்சுக்கோ” மிரட்டினான்.

சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. மெல்ல கதவைத் திறந்து பார்த்தாள். அவனோ காபி அருந்திக் கொண்டு தன் செல்லில் விரல்களால் நீவிக் கொண்டிருந்தான்.

பூனை போல அடிமேல் அடி வைத்து வெளியே வந்தவள், சட்டென அவனைக் கடக்க எத்தனிக்க, ஒரே எட்டில் அவளைப் பிடித்தான்.

கையைப் பின்னால் வளைத்துப் பிடித்து,

“என்ன சொன்ன…எதையுமே பாதி தான் செய்வேனா? சாரி சொல்லு டி. இப்போ நீ சாரி சொல்லல.. உனக்கு கை பாதி தான் இருக்கும்.” முறுக்கிய அவளது கைகளை விடாமல் சொல்ல,

“பாவி..அரகுறையா உடச்சு எனக்குக் கல்யாணம் ஆகாம பண்ணிடாத டா. ஆ….” அவள் கத்த,

“உன்ன எவன் டி கட்டிப்பான். உனக்கு வாக்கப்பட்டு   பலியாகப் போற அந்த புண்ணியவான் யாரோ!? அதெல்லாம் அப்பறம் பேசலாம். சாரி சொல்லு. இனிமே சொல்ல மாட்டேன் வீரா, மன்னிச்சுடுன்னு சொல்லு விடறேன்.” இறக்கமே காட்டாமல் பிடியை மேலும் இறுக்கினான்.

“ஆமா..என் புருஷன் பாவமா இல்ல உனக்கு வரபோறவ பாவமா. இப்படி பாதில விட்டுப்போன அவ என்னபண்ணுவா? அவ தான் பலியாடு” வாய்க்குள்ளேயே முனகினாள்.

“என்ன சொன்ன..?” அவளுடைய நல்ல நேரம் , சரியாக காதில் விழவில்லை அவனுக்கு.

“ஒன்னுமில்லையே”

“இப்போ மன்னிப்பு கேட்கல.. அடுத்த வாரம் கிராண்ட் கனியன் கூட்டிட்டு போக மாட்டேன். இப்போ என்ன சொல்ற?” சரியான இடத்தில் செக் வைத்தான்.

இது மொதலுக்கே மோசமாச்சே என நினைத்தவள், உடனே “ஐயா விட்ருங்க…மன்னிச்சிருங்க..போதுமா?” என்றாள்.

“போய்த் தொலை..” கையை விட்டதும்,

“உனக்கு வர பொண்டாட்டிகிட்ட யாச்சும் அரைகுறையா நடந்துகாதன்னு சொன்னேன்” சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“ஏய்!” பின் அவள் சொன்னதை நினைத்து அவனுக்கே சிரிப்புத் தான் வந்தது.

“பாவி. உண்மையிலேயே கஷ்டம் டி. உனக்கு வரப் போறவன் நிலைமை ரொம்ப ரொம்ப பாவம்.”

அவளை பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்துவிட்டு ஆபீசுக்கு சென்றான்.

அங்கே தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கில்பர்ட்டும் அவனது மற்ற இரு டீம் மெம்பர்கள் ரோமி, டைசன் மூவரும் கையில் சில பிரிண்ட்அவுட் களை வைத்துக் கொண்டு ப்ரொஜெக்டர் முன்பு அமர்ந்திருந்தனர்.

(இவர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் நாம் தமிழிலேயே இவர்களது கலந்துரையாடல்களைப் பார்ப்போம். அவ்வபோது ஆங்கிலம் எட்டிப் பார்க்கும். கண்டுக்கபடாது… ?)

“கரெக்ட் டைம்க்கு வந்துட்ட வீர்.வா சீக்கிரம். ப்ரீகாஷன் என்னென்னன்னு பார்க்கலாம். டாகுமென்ட்ஸ் வந்திருக்கு.” ரோமி அவனை அழைத்தான்.

“கிரேட். யார் ப்ரிபேர் பண்ணது?” அதிமுக்கிய கேள்வியைக் கேட்டான்.

“சர்ப்ரைஸ்!!” கில்பர்ட் கையை விரித்து சொல்ல,

புருவத்தை உயர்த்தினான் வீர்.

“மொதல்ல இந்த படங்கள பாப்போம். அப்பறம் சொல்றேன்.” வீராவின் கையிலும் அவனுக்குரிய டாகுமேன்ட்சை திணித்தான்.

முதல் படம் ப்ரொஜெக்டரில் வந்தது. அவர்கள் செல்லவிருக்கும் கிராண்ட் கனியன் மலைத் தொடர்களைப் பல கோணங்களில் எடுத்த படங்கள்.

இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அடுத்து வந்த படம், சற்று அரிதானது. அந்த மலைத் தொடரின் கீழ்ப் பகுதி. பெரும்பாலும் மக்கள் கார்களிலும், பஸ்களிலும் சென்று தூரத்திலிருந்து அதன் சுற்றுப் பாதையையும், அதன் உச்சியையும் மட்டுமே கண்டுள்ளனர்.

 

ட்ரெக்கிங் , ஹைகிங் , ஸ்டார் கேசிங், அல்லது அங்கே கேம்பிங் செய்யச் செல்லும் வெகு சிலர் மட்டுமே இந்தக் கோணத்தில் அடியிலிருந்து அந்த மலையைக் காண முடியும்.

இதுவரை வீரா செல்லாத இடம்.ஆகையால் அவனது ஆர்வம் பெருகியது.

அடுத்த படம் வெளிப்புறம் தெரியாத மலையின் பகுதி. அதில் சிறு சிறு துவாரங்கள் தெரிந்தது. அதை தூரத்தில் இருந்து படம் பிடித்திருந்தனர்.

கில்பர்ட்  அடுத்த படத்தை  மாற்றினான்.

வீர் அப்படத்தைப் பார்த்ததும், உறைந்தே போனான். முன்னால் காட்டிய படத்தில் இருந்த ஒரு துவாரத்தில் ஒருவர் உள்ளே செல்வது போல படம் இருந்தது.

அதில் இருந்த ஆச்சரியம் என்னவென்றால், அது சரியாக அவரின் உயரத்திற்கு இருந்தது.

அவனது கனவில் வந்தது போல, மேலே நிமிர்ந்தால், தலையை முட்டும்.

அப்படியே இருந்தது அந்த குகை. உள்ளே ஒரே இருட்டு, டார்ச் வெளிச்சத்தில் சில படங்கள் இருந்தன. ஆனால் அப்படங்களில் அந்த குகை சாதாரண கருங்கல் பாறையைப் போலத் தான் இருந்தது.

கனவில் கண்டது போல இல்லை. குகையின் உயரம் மட்டுமே அதே போன்று இருந்தது. ஒரு வேளை அங்கே தெரிந்த பல துவாரகளையும் சென்று பார்த்தால் ஒரு வேளை அந்தப் பாதி ஓவியங்கள் தென்படுமோ!?

அவனுக்கு சிந்தனை அதிலேயே நின்றது. ஆகையால் பின்னால் வந்து கொண்டிருந்தவனை  வீர் கவனிக்கவில்லை.

“வீர் உனக்கு நான் சொன்ன சர்ப்ரைஸ். இவர் தான்.இந்த படங்களை எடுத்தவரும் இவர் தான்.ஹி இஸ் ஃபரம் யுவர் பிளேஸ். இந்தியா. பெயர்..” கில்பர்ட் அறிமுகப் படுத்துவதற்குள் ,

அவனே வந்து கையை குலுக்க நீட்டியபடி வீராவின் முன் வந்து நின்றான்.

“ஹாய் ஐ அம் வருண்!”

வீர் அவனை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு. அப்படியே யோசித்தபடி நிற்க,

“கை குலுக்கிட்டு கூட திங் பண்ணலாம் ப்ரோ” வருண் புன்னகைத்தான்.

அவனது சிரிப்பில் எதைக் கண்டானோ! அவனுக்கும் அந்தப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

கை குலுக்கினான்.

இரு உள்ளங்கை சேர்ந்ததில் ரேகைகளின் குறுகுறுப்பை உணர்ந்தனர்.

“நீங்க தமிழா.. இல்ல..”வீர் சதேகமாகக் கேட்க,

“பச்ச தமிழன். ஏன் பாத்தா அப்படித் தெரியலையா?” புன்னகை மாறாமல் நின்றான் வருண்.

“இல்ல. அப்படி இல்ல. ஜஸ்ட் கேட்டேன்.”

“இங்க வந்து ஆறு வருஷமாச்சு. படிச்சுக்கிட்டே இங்க ஜாயின் பண்ணிட்டேன்.” சுருக்கமாக வருண் அவனைப் பற்றிச் சொல்ல,

“தட்ஸ் வெரி வெல். இந்த போட்டோஸ் எப்போ கேதர் பண்ணீங்க?” விவரம் கேட்டான் வீர்.

“இது நான் என்னோட ப்ராஜெக்ட் காக தனியா ஒரு எக்ஸ்ப்ளோரர் கூட போனப்ப எடுத்தது. இங்க நெறைய விஷயம் இருக்கு. அந்த டைம்ல நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ண முடியல. அகைன் ஒரு சான்ஸ்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.

உங்க டீம் இங்க போறதா தெரிஞ்சுகிட்டு இங்க ஜாயின் பண்ணிகிட்டேன்.” ஒருவாறு விளக்கிக் கூற,

“ஓ! கூல்… நீங்க கூட இருக்கறது எங்களுக்கு பெரிய ஹெல்ப்பா இருக்கும். தேங்க்ஸ் ஃபார் ஜாயினிங். க்ளேட் டு வெல்கம் யூ.” வீர் அவனுக்கு அருகிலேயே ஒரு சேர் கொடுத்து அமர வைத்தான்.

வருண் தான் வந்த வேலை கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்கியதை நினைத்து மகிழ்ந்தான்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!