UUU–EPI 3

UUU–EPI 3

அத்தியாயம் 3

சாக்லேட்டை மூன்று வகையாக பிரிக்கலாம். டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், வைட் சாக்லேட் என்பதே அந்த மூன்று வகையாகும். வைட் சாக்லேட் என்பது சாக்லேட்டின் பிரிவில் வருமா என கேள்விகள் ஆராய்ச்சிகள் இருந்தாலும், 20% சதவிகிதம் கொக்கே இருந்தாலே அது சாக்லேட் வகையே என பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

“ஜிங்குனமணி

ஜிங்குனமணி

சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி!!!”

என பாடிக்கொண்டே ஒருத்தி கன்னத்தைத் தடவ, இன்னொருத்தி முதுகைத் தடவ என குஜாலாக இருந்தான் ரிஷி. ஆட்டமோ ஆட்டம்! ரிஷி என பெயர் வைத்தவர்கள் நொந்து போகும் அளவுக்கு ஆட்டம். நின்றவாறே கன்னத்தைப் பிடித்தவளை தூக்கி வயிற்றில் அமர்த்திக் கொண்டவன், முதுகை தடவியவளை உப்பு மூட்டைத் தூக்கிக் கொண்டான். அப்படியே பங்கரா டான்ஸ் ஆடுவதைப் போல இருவரையும் சுமந்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றினான்.(ஏன்டா, இடுப்பு உடையல???) ரிஷி நந்தனின் முகத்தில் சுட சுட பொரித்தெடுத்த பூரியை விட அதீத பூரிப்பு. முன்னால் அமர்ந்திருந்தவள் வலது கன்னத்திலும் பின்னால் அமர்ந்திருந்தவள் இடது கன்னத்திலும் முத்தத்தை அள்ளி இறைக்க அவன் முகமெல்லாம் ஈரம்.

“கெட் டுகெதர் வேணும் நாம கெட்டுப் போக” என முனகிக் கொண்டே கண் திறந்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பப்பில் பங்கரா ஆடிக் கொண்டிருந்தவன், படுக்கையில் எப்படி என முழித்துக் கொண்டிருந்தவன் முகத்துக்கு மீண்டும் ஈர முத்தம். கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தவன் முன்னே தன் பெரிய கண்களை உருட்டிக் கொண்டு நின்றிருந்தது அழகிய நாய் ஒன்று. வெள்ளையும், ப்ரவுன் கலரும் கலந்த ஷீட்சூ வகை பெட்டை நாய் அது. அதுதான் இவ்வளவு நேரமும் அவன் முகத்தை நக்கி எழுப்பிக் கொண்டிருந்தது.

“கனவா!!!! ஜிங்குவையும் மணியையும் தூக்கி சுத்தனது எல்லாம் வெறும் கனவா! அவ்வ்வ்!!!! சிங்கிள்னு சொல்லிட்டுத் திரியறவனுக்கு கனவுல கூட ஜல்சா கிடையாதுன்னு கடவுள் எழுதி வச்சிருப்பான் போல! எள்ளு வய பூக்கலையே!!!!” என பாடிக் கொண்டே எழுந்தவனை பார்த்து வவ் வவ் என குலைத்தது நாய். அலேக்காக அதைக் கையில் தூக்கிக் கொண்டவன்,

“குட் மார்னிங் டீவா செல்லோ!(கோடீவா எனும் சாக்லெட்டின் ஷார்ட் ஃபோர்ம்)! பசி எடுத்துருச்சா?” என கொஞ்சிக் கொண்டே ஹாலில் ஒரு மூலையில் அதற்கென உருவாக்கி இருக்கும் இடத்தில் கொண்டு போய் அமர்த்தினான். தட்டில் அதன் உணவையிட்டவன், தண்ணீரையும் புதிதாக மாற்றி வைத்தான். அது விளையாட எலும்பு போல் இருக்கும் ப்ளாஸ்டிக் விளையாட்டுப் பொருளை வைத்த பிறகே பாத்ரூம் சென்றான்.

டீவா அவன் மருமகள் சீனீ பாப்பா பெட் வேணும் என கேட்டாள் என அவன் வாங்கிப் பரிசளித்த நாய். ஆசை இருந்த அளவுக்கு, குட்டிக்கு நாயின் அருகாமை ஒத்துக் கொள்ளவில்லை. அலர்ஜியாகி தும்ம ஆரம்பித்து விட்டாள். அவ்வளவு விலைக் கொடுத்து வாங்கியதை மறுபடி விற்று விடும்படி சொல்லி விட்டாள் நந்தனா. இவன் யோசனையாக நாயைப் பார்க்க, அது தன் பெரிய கண்களை உருட்டி பாவமாய் இவனைப் பார்க்க, அப்படியே உருகிப் போய்விட்டான் ரிஷி.

அன்றிலிருந்து டீவா இவன் வீட்டின் மகாராணியாய் வளர ஆரம்பித்தாள். எவ்வளவு வேலை இருந்தாலும் காலையில் வால்க்கிங் கொண்டு போவதை மட்டும் கடமையாக வைத்திருந்தான் ரிஷி. இருவரும் நடந்து செல்லும் போது கண்டிப்பாக இவர்களைப் பலர் திரும்பி பார்ப்பார்கள். திடகாத்திரமான ஆண்மகன் குட்டியாய் இருக்கும் அழகு நாயை வால்க்கிங் அழைத்துப் போவது மற்றவர்களுக்கு வேடிக்கையாய் இருந்தது போல. முட்டைக் கண்களை வைத்து போவோர் வருவோரை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் டீவா. ரோட்டில் நடப்பவர்கள், சில நிமிடங்களாவது அதை கொஞ்சி விட்டுத்தான் போவார்கள்.

‘பைட் மீ’யின் மேல் மாடியில் தான் குடி இருந்தான் ரிஷி. கீழே கபே, ஆபிஸ், கிட்சன் என இருக்க, மேலே இருந்த இடத்தை குட்டி அபார்ட்மேண்ட் போல மாற்றி அமைத்திருந்தான். சின்னதாக டூ சீட்டரும் தொலைக்காட்சியும் கொண்ட ஹால், ஒரு பாத்ரூம், கிட்சன், ஹால் பக்கத்திலேயே ஒரு ஆள் படுப்பது போல சிங்கிளுக்கு ஏற்ற சிங்கிள் காட். இவன் வசிக்கும் இடத்துக்கு கடையின் பக்கவாட்டில் படி இருந்தது.

பல் தேய்த்து குளிக்க ஆரம்பிக்க, கதவில் சுரண்டல் சத்தம் கேட்டது. துண்டைக் கட்டிக் கொண்டு கதவைத் திறந்து முறைத்தான் ரிஷி. அங்கே தனது குளிக்கும் ஷாம்புவை வாயில் கௌவிக் கொண்டே அவனைப் பாவமாய் பார்த்தது டீவா!

“நாட் அகேய்ன்! நேத்து தானே உன்னைக் குளிப்பாட்டுனேன். இன்னிக்கு மறுபடியும் வந்து நிக்கற! உன்னை மாதிரி டாக்ஸ்லாம் குளிக்க கூப்டா எப்டி அழிச்சாட்டியம் பண்ணுங்க தெரியுமா? நீ என்னன்னா கேமரன் குளிருக்கு தெனம் குளிக்கனும்னு தொல்லைப் பண்ணுற!” என இவன் சத்தம் போட டீவாவோ,

“வவ் வவ் வவ்” என தலையை ஆட்டி ஆட்டி குரைத்தது.

“என்னையே எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிட்டியா! மூனு வேளை ‘ஐகியூ டாக்’(ப்ராண்ட்) போட்டு, கடிச்சிக்க சிக்கன் ஜெர்க்கி வாங்கி குடுத்து, மாசத்துக்கு ஒரு தடவை க்ரூமிங் கூட்டிப் போய் முடி, நகம்லாம் வெட்டி விட்டு பளபளன்னு வச்சிருக்கேன் உன்னை! என்னையே எதிர்த்துப் பேசறியா நீ! லேடிஸ்தான் ஒரு ஆம்பளைய மதிக்காம எது சொன்னாலும் எதிர்த்து பேசறாங்கன்னு பார்த்தா, லேடி டாக் கூட அப்படித்தான் இருக்கு. என்னே என் ஆண் குலத்துக்கு வந்த சோதனை!” என புலம்பியவன் பாத்ரூம் கதவை அடைத்துக் கொண்டான்.

இரண்டு நிமிடம் கழித்து திறந்தவன் அவசரமாக குளித்திருந்தான்.

“இப்ப வா குளிக்க வைக்கறேன்” என இவன் அழைக்க, அதுவோ இவ்வளவு கஸ்டப்பட்டு ஒன்றும் செய்ய வேண்டாம் என்பது போல வாலை ஆட்டிக் கொண்டு தனது இடத்துக்கு நகர்ந்தது. சிரிப்புடன் டீவாவை அள்ளிக் கொண்டவன்,

“ராங்கிக்கே புடிச்ச ராங்கி நீ!” என கொஞ்சிக் கொண்டே அதை குளிக்க வைத்து நன்றாக துவட்டி விட்டான்.

தனக்காக ப்ளாக் காபி ஒன்றை தயாரித்து அருந்தியவன், எட்டு மணி வாக்கில் டீவாவை வால்க்கிங் அழைத்து செல்ல மாடியில் இருந்து இறங்கினான். ஒன்பது மணிக்கு சீனி பாப்பாவை ப்ளேஸ்கூலில் விட போக வேண்டும். அதற்கு பிறகு வேலை வேலை வேலைதான் அவனுக்கு.

அட்ஜஸ்டபில் லீஷீல்(adjustable leash) டீவாவை கட்டியவன் அதன் கண்ட்ரோலை கையில் பிடித்துக் கொண்டு நடைப்போட்டான். காலை நேரத்து குளிர் காற்று உடலை குத்தீட்டியாய் குத்தியது. ஆழ மூச்சு இழுத்து விட்டவன், உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டான்.

அவன் வரும் நேரம் எப்பொழுதும் ஜாகிங் செய்ய ஆஜராகும் இரு காலேஜ் பெண்கள், அன்றும் பிரசன்னமானார்கள். டீவாவை கொஞ்சி விட்டு இவனிடம் காலை குளிரில் கடலை வறுக்க ஆரம்பித்தார்கள் அவர்கள். டீவாவின் கண்ட்ரோல் கையில் இருக்கும் மிதப்பில் இவனும் பொதுவாக பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.

“நாய் சேகர்!!!!”

யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என இவன் இன்னும் பேசியபடி இருந்தான்.

“நாய் சேகர்!” என ஓங்கிய குரலும் டீவாவின் வவ் வவ்வும் ரிஷியைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

பார்த்தவன் அசந்துப் போய் நின்றான். பல வண்ணக் கலவையான செம்பருத்திப் பூ போட்ட வெள்ளை பிளவுசிலும், பிங்க் கலர் ஸ்லாக்சிலும் தேவதை போலொரு பெண் இவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.

காலேஜ் பெண்களிடன் எக்ஸ்கியூஸ்மீ சொல்லி விட்டு செம்பருத்தியின் அருகே சென்றான் ரிஷி.

“என்னையா கூப்டீங்க?” என கேட்டவன் தெரியாமல் அவள் கண்களைப் பார்த்து விட்டான். பிங்க் கலர் லென்சில் கோபக்கனலைக் கக்கியது அவள் விழிகள்.

‘யப்பா! யார்டா இந்த தேசியப் பூ(செம்பருத்தி மலேசியாவின் தேசியப் பூ)? சாவடியா(ரொம்ப அழகாக, அருமையாக என்பதை இப்படியும் சொல்வார்கள் மலேசியர்கள்) இருக்கா!’

“மிஸ்டர் நாய் சேகர்! கொஞ்சமாச்சும் மூளைன்னு ஒன்னு உங்க கெப்பாலா(தலை)க்குள்ள இருக்கா? இப்படித்தான் நாய கூட்டிட்டு வந்துட்டு அத கவனிக்காம ரோட்டுல போற வர பொண்ணுங்கள சைட்டடிச்சிட்டு நிப்பீங்களா? சென்ஸ் இல்ல, மேனர்ஸ் இல்ல, ஓத்தாக்(மூளை) இல்ல?” என படபடவென பொரிந்தாள் நம் சி சிம்ரன்.

“ஹலோ! ஸ்டாப், ஸ்டாப்! யாரப் பார்த்து நாய் சேகர்னு சொன்ன?”

“நாய் வளக்கற எல்லாருமே எனக்கு நாய் சேகர்தான்”

“கீலாக்காரியா(பைத்தியமா) நீ? முன்ன பின்ன தெரியாதவங்கள கூப்டு வச்சு திட்டிட்டு இருக்க? ஜோக்கா தெரியுமா!(ஒழுங்க இருன்னு சொல்றது)”

“என்ன, என்ன சவுண்டு ஏறுது? சத்தமா பேசனா நாங்க பயந்துடுவமா? அதெல்லாம், படத்துல சொல்லுவாங்களே அச்சம், பயிறு, பருப்புன்னு அந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட வச்சிக்க! என் கிட்ட வேணா! ஒரு நாய் வளக்கத் தெரியல, சவுண்டு மட்டும் கேமரனையே தூக்குது!”

முகம் சிவக்க பட்டாசாய் வெடித்தவளை, இவனும் கோபமாய் வெறித்தான். அவன் வாழ்க்கையில் பெண்கள் இவனிடம் குழைந்து, கொஞ்சி, கெஞ்சி பேசி தான் பழக்கம். இந்த மாதிரி மரியாதை இல்லாமல், ஏசி பேசி எகிறுவது இதுதான் முதல் தடவை. மூச்சை இழுத்து விட்டு, முடியைக் கோதி தன்னை ஆசுவாசப்படுத்தியவன்,

“என்ன பிரச்சனை?” என சாந்தமாக வினவினான்.

“உன் நாய் என் ஹீல்ஸ்ல சூச்சூ போயிருச்சு அதான் பிரச்சனை!”

“வாட்??” என கேட்டவன் டீவாவை நோக்கினான்.

அதுவோ ‘இதெல்லாம் நாய் குல வாழ்க்கையில ஜகஜமப்பா’ எனும் ரேஞ்சுக்கு பார்த்தது.

“அது சூச்சூ போற வரைக்கும் நீங்க என்ன பூவா பறிச்சுக்கிட்டு இருந்தீங்க?”

“ஹலோ மிஸ்டர்! குழந்தையோ மிருகமோ யாரா இருந்தாலும் சூச்சூ போறப்ப சத்தம் போட்டு நாம ஸ்டாப் பண்ணினா அதுக்கு வயிறு கட்டிக்கும்னு உங்க வீட்ல சொல்லிக் குடுக்கலையா? நாய் அழகா இருக்கேன்னு கீழ குனிஞ்சு கொஞ்சனேன்! அது என்னனா என் பிங்க் ஹீல்ஸ்ச டாய்லட்னு நெனைச்சிருச்சு போல! இதெல்லாம் தப்புன்னு நீங்கதான் சேகர் சொல்லிக் குடுக்கனும்! ஒழுங்கா என் ஹீல்ச வாஷ் பண்ணி கொண்டு வந்து குடுக்கறீங்க! இல்லைனா நடக்கறதே வேற” என சத்தம் போட்டவள், இரண்டு ஹீல்சையும் கழட்டி அவன் கையில் திணித்தாள்.

பின் அவனையும் நாயையும் போட்டோ எடுத்துக் கொண்டவள்,

“போட்டோ எடுத்து வச்சிட்டேன் உங்க ரெண்டு பேரையும். ‘பைட் மீ’ கடையில தான் வேலைக்கு சேர்ந்துருக்கேன். ஒழுங்கா வாஷ் பண்ணி அங்க கொண்டு வந்து குடுங்க! இல்லைனா ஹீல்ஸ் திருடன்னு போட்டோ போட்டு பேஸ்புக்ல உங்க பேஸ்சை நாறடிச்சிருவேன்! வரட்டா!” என மிரட்டினாள் சி சிம்ரன்.

குனிந்து டீவாவைப் பார்த்தவள்,

“டாகிம்மா! உன் மேல கோபம் இல்லைடா செல்லம்! உன் ஓனர் மேலத்தான் கோபம்! நீங்க சமத்து குட்டிடா! அழகு ஏஞ்சல்டா!” என கொஞ்சி முத்தமும் கொடுத்து விட்டு,

“ஹீல்ஸ் பத்திரம் நாய் சேகர்! புத்தம் புதுசு!” என அவனையும் கண்ணை உருட்டி மிரட்டி விட்டு வெறும் காலுடன் நடைப்போட்டாள் அவள்.

ஒரு கையில் ஹீல்சும் மறுகையில் டீவாவின் லீஷூம் இருக்க, நடந்துப் போகிறவளையே வாய் பிளந்து பார்த்து நின்றான் ரிஷி.

“இவதான் நந்து சொன்ன சி சிம்ரனா!! இவளுக்கு சிம்ரன்னு பேரு வச்சத்துக்கு கும்ரன்னு வச்சிருக்கலாம்டா சாமி! விட்டா கும்மு கும்முன்னு கும்மிருவா போல!” என முனகியவன், கையில் உள்ள ஹீல்சை பார்த்து பின் டீவாவை பார்த்து,

“உன்னை கண்ணின் மணியா வச்சுப் பார்த்ததுக்கு உன்னால என்ன முடியுமோ அத செஞ்சிட்டல்ல!”

பாவமாக அவனைப் பார்த்த டீவா, வவ் வவ் என வாலை ஆட்டி தனது மன்னிப்பை யாசித்தது.

“நம்ம மேல தப்புன்னு பேசாம இருக்கேன்! இல்லைனா அந்த பிங்க் பூங்கா ராயா(செம்பருத்தி), இந்நேரம் நாயா பேயா திட்டிருப்பேன்” என சத்தமாக சொன்னவன்,

“தென்னையா பெத்தா இளநீரு

உன்னைய வளத்தா கண்ணீரு!!!” என டீவாவைப் பார்த்து பாடிக் கொண்டே ஹீல்சை கழுவ வீடு நோக்கி சென்றான் ரிஷி நந்தன்.

 

(உருகுவான்…..)

(ஹாய் டியர்ஸ்

கதை இந்த நாட்டு சூழலிலே வரனும்னு நெறைய இங்க பேசிக்கற மாதிரி எழுதறேன்! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! நார்மலா எழுதுனா லாஜிக்கா இருக்காது. சாயா அடிக்கலாமா, நல்லா அடிச்சுவிட்டியா இப்படிலாம் பேசறப்போ எடத்துக்கு தக்க பொருள் வரும். இங்க அது சாப்பிடறத குறிக்கும். போக போக புரிஞ்சுடும் உங்களுக்கு.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!