Kandeepanin Kanavu 9

                காண்டீபனின் கனவு 9

 

 சம்ரக்க்ஷா நேரில் பார்த்ததை அவளால் நம்ப முடியவில்லை. யாரையும் அழைத்துக் காட்டும் எண்ணமும் வரவில்லை. வாயடைத்துப் போனாள்.

அழகிய இரண்டு வெள்ளி மான்கள் ஒன்று பெரிதும் மற்றொன்று சிறிதுமாக அவள் கண்ணில் பட்டது. அவளைக் கண்டதுமே, அப்படியே அது கனவு போல காற்றில் மறைந்தது.

“நிஜாமவே பார்த்தேனா? இல்ல பிரம்மையா! வெள்ளி மான்களா?!” தன்னையே கேட்டுக் கொண்டவள், அதை உறுதிப் படுத்திக் கொள்ள தனது கேமிராவை எடுத்துப் பார்த்தாள். அதில் ஒன்றுமே இல்லை. அந்த இடத்தில் வெறும் மரமும் அங்கே ஓடிய அந்த நீர்நிலையும் தான் இருந்தது.

‘இதை இவங்ககிட்டலாம் சொல்லவும் முடியாது. சொன்னாலும் நம்ப வைக்க என்கிட்டே எந்த ஆதாரமும் இல்லை. ஆனா, நிச்சயமா நான் பார்த்தேன். இங்க வேற ஏதோ ஒன்னு இருக்கு.’ மனதில் அசைபோட்டாள்.

அப்போதிலிருந்து அந்த இடம் அவளுக்குள் ஏதோ ஒரு அச்சத்தை விதைத்தது. அதற்குள் அனைவருக்கும் உணவு தயாரித்து கில் கொடுக்க, சாமும் சஜகமாக அவர்களோடு கலந்து கொண்டாள்.

“நாம இன்னிக்கு பூரா கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம். எந்த வழில மேல ஏறலாம், எப்படி ரோப் பிக்ஸ் பண்ணலாம்னு இன்னிக்கு டிசைட் பண்ணிட்டு, நாளைக்கு நம்ம எக்ஸ்ப்ளோரேஷன் ஆரம்பிக்கலாம்.” வீரா ஐடியா கொடுத்தான்.

“எஸ். நானும் அதே தான் நினச்சேன். அதுக்குள்ள, கில் கூட கொஞ்சம் கால சரி பண்ணிக்குவாரு. என்ன கில்? இப்போ எப்படி இருக்கு?” வருண் இதமாகக் கேட்க,

“இப்போ பெய்ன் இல்ல. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா ஐ வில் பி ஃபைன்” என்றார்.

அனைவரும் உண்டு முடிக்க, கில் தனது டெண்டில் சென்று ஓய்வெடுத்தார்.

மற்ற மூவரும் அந்த இடத்தைப் பற்றிப் சிறிது நேரம் பேசிவிட்டு, வருண் எங்கெல்லாம் சென்றான் என்பதைப் பத்தி பேசிக் கொண்டிருந்தனர்.

சாம் பேச்சு வாக்கில், அவள் படமெடுத்த அந்த இடத்தை அடிக்கடி திரும்பிப் பார்க்க, மனம் சற்று சஞ்சலப்பட்டது.

இதை கவனித்த வீரா, “என்னாச்சு சாம்? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” அக்கறையுடன் கேட்க,

“அதெல்லாம் இல்ல, நாம கொஞ்ச தூரம் அப்படியே நடந்து பாத்துட்டு வருவோமா?” எனக் கேட்க,

“போலாமே! நானே சொல்லணும்னு நெனச்சேன். இருங்க கில் கிட்ட சொல்லிட்டு போயிட்டு வருவோம்” என எழுந்தான்.

கில் வலியினால் நன்றாக உறங்கிவிட்டிருந்தான். அவனை எழுப்பாமலே திரும்பிவிட்டான் வீரா.

“நல்லா தூங்கறாரு, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நாம போயிட்டு வருவோம்.” என்றான்.

ஒரு மலையில் ஒரு பக்க பகுதியின் அடிவாரத்தில் இருந்த அவர்கள் , நடக்கத் தொடங்கி, பாதி தூரம் வரை வந்தனர், அதற்கு மேல் செல்ல முடியாமல் அந்த நீரோட்டம் இருந்தது. மலையும் வட்டம் போல வளைந்து சென்றது. மறு பகுதியைப் பார்க்க, அவர்கள் ஓடம் போல ஏதோ ஒன்றின் உதவியால் மட்டுமே செல்ல முடியும்.

அதையும் அவர்கள் முன்னேர்ப்பாடாக எடுத்து வந்திருந்தார்கள், ஆனால் இப்போது நடந்து வரும்போது கொண்டு வரவில்லை.

“ஒ! இந்த மலை யோட மறுபக்கம் தான் அந்த குகை மாதிரி இருக்கும்.. இல்ல வருண்?” வீரா கேட்க,

“எஸ். ஆனா இப்போ அல்ரெடி மதியத்துக்கு மேல ஆயிடுச்சு. அந்த குகைக் குள்ள போனா திரும்பி வர நைட் ஆகும். நாளைக்கு காலைல போறது தான் பெட்டர்.” வருண் சொல்ல,

“இல்ல நாம உள்ள நாளைக்குப் போகலாம். கில் கிட்ட இருக்கற கயாக்(kayak) ல ஜஸ்ட் போய் வெளிலேந்து பார்த்துட்டு வருவோமே? ஐ கான்ட் ரெசிஸ்ட் லூக்கிங் அட் இட். இங்கயே இருங்க டூ மின்ட்ஸ் ஐ வில் கம்” இருவரும் மறுக்கும்முன் அந்த நீண்ட படகை எடுக்கச் சென்றான்.

அவனது ஆர்வத்தைக் கண்டு வருண் சிரிக்க, “ஹி இஸ் கிரேசி” என்றான்.

சரக்க்ஷா அதை கவனிக்காமல் சுற்றிலும் மீண்டும் அந்த மானைத் தேடினாள்.

“என்ன ஒரே மூட் அவுட்ல இருக்கற மாதிரி தெரியறீங்க?” வருண் கேட்க,

“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல.” அவசரமாக மறுத்தாள்.

“இங்க நெறைய ஆச்சரியமான விஷயம் இருக்கு. உங்களுக்கு இந்த ஒன் வீக் கண்டிப்பா போர் அடிக்காது.” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீரா அந்த கயாக்குடன் வந்தான்.

முன்னும் பின்னும் ஒருவரும், நடுவில் ஒருவரும் அமர்வது போல இருந்தது அந்த படகு. ஒரு துடுப்பை வருணிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை தான் வைத்துக் கொண்டான்.

“சாம், நீ நடுல உட்கார்ந்துக்கோ” என முதலில் அவளை நடுவில் அமர வைத்தான்.

பின் முன்னால் வருண் அமர்ந்துகொள்ள, பின்னால் வீரா அமர்ந்தான்.

இருவரும் ஒன்று போல துடுப்பு போட, அது சீராக நகர்ந்தது. மிகவும் ரம்யமான இடம். சலசலப்பிலாத நீரோடை, அருகே பிரம்மாண்ட மலைத் தொடர், மேலே ஆகாயம் என ஒரு அழகிய சூழ்நிலை அங்கே இருந்தது.

மலையின் சுற்றுவட்டத்தைக் கடக்கவே அரைமணி நேரம் பிடித்தது.

வருண், தான் முதலில் வந்த போது, இங்கு பார்த்ததை விளக்கிக் கொண்டே வந்தான்.

“வீரா, இங்க இருந்து இன்னும் ஒரு பத்து மைல் தூரம், இந்த நீர் போற பாதைலையே போனா, ஒரு சின்ன குளம் மாதிரி தெரியும். அது பக்கத்துல போன, நீ நம்ப மாட்ட, அப்படி ஒரு கிளீன் கிளியர் வாட்டர் அது. உள்ள இருக்கறதெல்லாம் தெரியும். கண்ணாடி மாதிரி வாட்டர்.. அவ்வளோ அழகா இருக்கும்.”

“அப்ப ஏன் இங்க இருக்கற தண்ணி மட்டும் கிரீன் கலர்ல இருக்கு. இதுவும் அப்படித் தானே கிளியர் வாட்டர்ரா இருக்கணும்?” சாம் சந்தேகம் கேட்க,

“இது மலைய சுத்தி இருக்கறதுனால இங்க நெறய பாசி படிஞ்சு அடில தேங்கி இருக்கும், அதுனால அப்படி தெரியுது. போக போக அந்த இடம் மலைகளை தாண்டி மரம் சூழ்ந்த இடம். அங்க தான் கீழ தரை மாதிரி இருக்கும். சோ அது தெளிவா இந்த நீர் சுத்தமா இருக்கறதை காட்டுது.” வருண் விளக்கினான்.

“வருண், இந்த மலைல இருக்கற ஒரு குகைக் குள்ள போனதா சொன்னியே? அதுக்குள்ள என்ன இருந்துச்சு? எதாவது பாத்தியா?” வீரா கேட்க,

சாம் அவனைத் திரும்பி பார்த்து முறைக்க, அவள் திரும்பிய வேகத்தில் படகு ஆட்டம் கண்டது.

“ஏய் ஏய்! படக கவுத்துடாத. நேரா உட்காரு கொஞ்ச நேரம்.” வீரா பதறிப் போனான்.

“ஒண்ணுமில்ல..ஈசி.. ஈசி..” வருணும் கூற,

“நீ ஏன் ஆரம்பிச்ச? குகைல என்ன பாத்தீங்கன்னு?” சாம் நேராக அமர்ந்து அவனைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னாள்.

“அல்மோஸ்ட் வந்துட்டோம்.” வருண் கூற, அந்தப் பேச்சு அத்துடன் நின்றது.

வீராவிற்கு அந்த இடத்தைப் பார்க்க பார்க்க ஏதோ செய்தது. கால்கள் பரபரத்தன. உடனே ஓடிச்சென்று அந்த குகை ஒன்றின் உள்ளே செல்ல வேண்டும் போல துடித்தான்.

கயாக்கை கரையோரம் நிறுத்தினர்.

வீரா முதலில் இருங்க, பின் வருண் அதன் பின் சாம் இறங்கினாள்.

“வாவ்.. சின்ன சின்னதா எவ்வளோ குகைங்க இருக்கு..”ஆச்சரியப் பட்டாள் சம்ரக்க்ஷா..”

“முந்நூறு!” வீரா பதில் தந்தான்.

“உனக்கு எப்படித் தெரியும்?” சாம் அவனைப் பார்க்க,

“இதப் பத்தி படிச்சேன். முன்னாடி அதாவது கணக்கே பண்ண முடியாத ஆண்டுகளுக்கு முன்னாடி, ஒரு மக்கள் கூட்டம், இந்த குகைல வந்து தங்கினாங்க. அவங்க இடத்துல வெள்ளமோ புயலோ வந்ததுனால இங்க வந்து தஞ்சம் புகுந்தாங்க. அவங்க தங்கரத்துக்காக இப்படி இந்த மலைய குடைஞ்சு அவங்களோட வாழ்க்கையை இங்க வாழ ஆரம்பிச்சதா சொல்றாங்க.” வீர் சொல்ல, அவனைத் தொடர்ந்தான் வருண்.

“கரெக்ட். அந்த மக்கள் யார் தெரியுமா? நம்ம குமரிக் கண்டத்தை சேர்ந்த மக்கள். இப்போ குமரிக்கண்டமே தண்ணீர்ல மூழ்கிட்டதுனால அங்க இருந்த இருந்த மக்கள்ல சிலர் தங்கள காப்பாத்திக்க ஒரு பெரிய மன்னனோட கப்பல்ல இந்த இடத்துக்கு பலமாசம்  ட்ராவல்பண்ணி வந்ததாகவும், அவங்க ரொம்ப ப்ரில்லியன்ட் மக்கள்ன்னும் சொல்றாங்க. அப்படி இங்கயே வாழ ஆரம்பிச்சவங்க தான் இங்க அமெரிக்காவுல இருக்கற அமெரிக்கன் இந்தியன் இன மக்கள். அவங்க வம்சா வழில வந்தவங்க இன்னும் இப்போ இருக்காங்க. ஆனா நாகரிக வளர்ச்சி அடைஞ்ச அமெரிகாவில அவங்கள இன்னார்னு தேட முடியாது.” வருண் சொல்வதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.

“அப்போ கொலம்பஸ் கண்டுப்பிடிக்கறதுக்கு முன்னாடியே நம்ம ஆளுங்க அமெரிக்காவ கண்டுபுடிச்சு இங்க வந்துட்டாங்கன்னு சொல்றீங்களா?” நக்கலாக சாம் கேட்டாள்.

“அது மறுக்க முடியாத உண்மை தான். ஆனா இந்த வெள்ளைக்காரங்கள போல நம்ம ஆளுங்க விளம்பரம் தேடிக்கல. நம்ம நாட்டுல இருந்த ஓலைச்சுவடியையும், சில வேத புத்தகங்களையும் இவங்க எடுத்து வந்து ஆராய்ச்சி பண்ணி இப்போ அவங்களே கண்டுபிடிச்ச மாதிரி சொல்லிக்கறாங்க. ஹும்ம்..” அலுத்துக் கொண்டான் வீரா.

“கரெக்ட் வீர். நீ சொல்றது நிஜம் தான்.” வருண் சொல்ல,

“ஒ! அப்போ விதை நாம போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா,கடமை!” சிவாஜி போல பேசிக் காட்டி, “அப்படித் தானே!” சிரித்தாள்.

இருவரும் கூட சேர்ந்து சிரித்துவிட்டு, அந்த குகை வாசலில் சென்று நின்றனர்.

அங்கிருந்த முதல் குகையைப் படமெடுத்தான் வீரா.

“இது தான நீங்க போன குகை” எனக் கேட்க,

“ஆமா வீர். இது ஒன்னு தான் நாங்க போனோம். இங்க எதுவும் இல்ல. நீளமா போயிட்டே இருக்கும். அவ்வளோ தான்.” என்றான்.

“நான் ஒரு குயிக் ரவுண்ட் போய்ப் பார்க்கறேன்”  வலது காலை முன்னே வைத்து ஏறினான்.

“நானும் வரேன் வீர்.” அவன் பின்னோடு அவளும் ஏற, கை கொடுத்து தூக்கினான் வீர்.

அவர்களின் பின்னே வருணும் ஏறினான்.

“ உள்ள போக போக இருட்டா இருக்குல்ல..” சாம் கேட்க,

“ஆமா, ஆனா நாம ரொம்ப உள்ள போக வேண்டாம். இப்போவே மணி நாலு ஆயிடுச்சு” வருண் தடுக்க,

வீராவோ அதைக் காதில் வாங்காமல் மேலே, கீழே, பக்கவாட்டில் என எங்காவது கனவில் வந்த ஓவியமோ அல்லது வேற எதுவோ தென்படுகிறதா என தேடிக் கொண்டே முன்னே நடந்தான்.

ஒருவர் பின் ஒருவராகத் தான் அந்த குகைக்குள் செல்ல முடிந்தது.

வெளியில் இருநந்து தெரிந்த வெளிச்சம் குறைந்து குறைந்து இருள் வரத் தொடங்க, வருண் தன் மொபைலில் இருந்த டார்ச்சை ஒளிரவிட்டான்.

வெறும் பாறையாகத் தான் இருந்தது.

“வீர் நீ இங்க எதாவது தேடுறியா?” நேராக விஷயத்திற்கு வந்தான் வருண்.

அவன் கேட்பதிலிருந்தே வீர் வருணிடம் தன் கனவைப் பற்றிக் கூறவில்லை என்பதை அறிந்துகொண்டாள் சம்ரக்க்ஷா.

“வீர்..!?” சாம் அவனைத் தொட, அவனோ மந்திரித்து விட்டவன் போல நேராகச் சென்று கொண்டே இருந்தான்.

அவளுக்கு உள்ளே பயம் வந்தது, ‘இவன் என்ன இது கனவுன்னு நெனச்சு நடந்துகிட்டே இருக்கனா?

“வருண், அவன் நிக்க மாட்டேங்கறான்.” தனக்குப் பின்னால் வந்த வருணிடம் கூற,

வருண், “வீரா!!” ஒரே கத்தாகக் கத்தினான்.

அந்தக் குரலில் மீண்டான் வீர்.

திரும்பி வருணைப் பார்த்தான் வீர்.

“வா போகலாம். நாளைக்கு வரலாம்.” என அதிகாரமாகக் கூற,

“ஒ..சரி ஓகே.” நினைவிலிருந்து மீண்டவன் அவனுக்கு பதில் சொல்ல, அனைவரும் வேகமாக வெளியேறினார்கள்.

ஒருவர் பின் ஒருவராக குகையிலிருந்து குதிக்க, வருண் வீராவை ஆழமாகப் பார்த்தான்.

“வீர்! உன்கிட்ட ஒன்னு சொல்லணும், ஒன்னு கேட்கணும்.” வருண் அவன் முன் வந்து நின்றான்.

“சொல்லு வருண்.” சாதாரணமாகக் கூற,

“உன்ன பாத்த நாள்ல இருந்து, உன்ன நான் க்ளோஸ் ப்ரெண்டா தான் நினைக்கறேன். மூணு நாள் தான் ஆச்சு, இருந்தாலும் ஒரு ப்ரதர் ஃபீல் உன்ன பார்க்கறப்பலாம் வருது. நீ என்ன ப்ரெண்டா தான நினைக்கற.?” கண்களைப் பார்த்துக் கேட்க,

“ஹே! என்ன வருண் இப்படி கேட்கற, எனக்கும் உன்ன பார்த்தப்பலேந்து ரொம்ப நாள் பழகின மாதிரி தான் தோணுது. அதான் உன்கிட்ட இவ்ளோ ஃப்ரீயா பேச முடியுது. ஏன் இப்படி கேட்கற?” வருணின் தோளைப் பற்றினான்.

“சரி அந்த உரிமைல கேட்கறேன்.நீ இங்க பஸ்ர்சனலா ஏதோ தேடற மாதிரி இருக்கு. என்னனு சொல்லு.. நான் உனக்கு நிச்சயம் ஹெல்ப் பண்றேன். இட்ஸ் எ ப்ராமிஸ்!” உறுதியாகக் கூறினான் வருண்.

அவன் வார்த்தை வீராவிற்கு அவன் கனவைப் பற்றி சொல்லவேண்டுமென தோன்ற வைத்தது.

அவனது கையைப் பிடித்துக் கொண்டான்.

“கண்டிப்பா சொல்றேன் வருண்.நாம முதல்ல டென்ட்க்கு போவோம். கில் தனியா இருப்பாரு.” புன்னகைத்த படியே கூறினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

“போதும் படம் ஓட்டாதீங்க..நீங்க உங்க சீக்ரெட்ஸ்ஸ நீங்களே ஷேர் பண்ணிகோங்க, எனக்கும் ஒரு சீக்ரெட் இருக்கு.நான் சொல்ல மாட்டேன்.” என்றாள்.

“நீயே வெச்சுக்கோ” வீர் அவளது கழுத்தில் முழங்கை போட்டு சுற்றி அழைத்துச் சென்றான்.

“விடு டா எரும..வலிக்குது..”அவன் கையை விடுவிக்க முடியாமல் அவனோடு சென்றாள்.

இருவரையும் ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.