UUU__EPI 6
UUU__EPI 6
அத்தியாயம் 6
முதல் சாக்லேட் பார் 1847ல் ஜோசப் ஃப்ரை என்பவரால் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றி வரை சாக்லேட்டின் டிமாண்ட் கூடி கொண்டு தான் இருக்கிறது. இப்பொழுது சாக்லேட் இண்டஸ்ட்ரியின் மொத்த மதிப்பு ஒரு ஆண்டுக்கு 110 பில்லியன் ஆகும்.
அன்று காலையிலேயே கேஷ் கவுண்ட்டரில் நின்றிருந்தாள் சிம்ரன். இந்த வாரம் முழுமைக்கும் அவளை அங்கிருந்து பயிற்சி எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தான் ரிஷி. கவுண்ட்டர் பார்ப்பவர்கள் தான், பானங்களையும் தயாரிக்க வேண்டும், உணவு வகைகளையும் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
கஸ்டமர் அதிகம் இருக்கும் பொழுது நிற்க நேரமில்லாமல் சுழல வேண்டும். கண், வாய், காது, கை, கால் என மொத்த உடம்பும் இயங்க வேண்டும். உதட்டில் எந்நேரமும் புன்னகை இருக்க வேண்டும் என்பது ரிஷியின் கட்டாய விதி. கஸ்டமர் எப்படித்தான் பேசினாலும் புன்னகை வாடாமல் அவர்களை கவனித்து அனுப்ப வேண்டும் என முதல் நாள் பயிற்சியின் போதே காது தீயும் அளவுக்கு ஆற்றி இருந்தான் உரையை.
டாய்லட் கழுவுவதை விட இந்த வேலை சிம்ரனுக்கு கஸ்டமாக இருந்தது. ஒருவரிடம் ஆர்டர் எடுத்து, சில்லரையை சரிப்பார்த்துக் கொடுத்து, அவர்கள் கேட்கும் சில பல டிமாண்ட்களை அதாவது சீனி குறைவாக, பால் குறைவாக என்பதை நினைவில் நிறுத்தி பானம் தயாரித்து முடிப்பதற்குள் அடுத்த கஸ்டமர் ‘வை சோ லோங்?’ என முணுமுணுக்கத் தொடங்கி விடுவர்.
அவசர அவசரமாக செய்கிறேன் என கையில் பல தடவை சுடுநீரை ஊற்றிக் கொண்டிருக்கிறாள் சிம்ரன்.
‘ஷப்பா!!! இந்த மாதிரி வேலைலாம் ஜூஜூபினு நெனைச்சிக்கிட்டு இருந்தோமே! இப்போத்தானே தெரியுது கஸ்டம். டாக்டர், லாயர விட இந்த வேலைக்குத்தான் மல்ட்டிடாஸ்கிங் ரொம்ப முக்கியமாத் தேவைப்படுது. மில்க்குல மில்க்க ஊத்தாதே, காபியில காபிய போடாதே, டீயில டீத்தூள போடாதேன்னு எவ்வளவு டிமாண்ட் பண்ணுறானுங்க! ஒவ்வொருத்தனையும் சமாளிக்கறதுக்குள்ள, யப்பப்பா! கடவுளே இன்னிக்கு பொழுது எந்த சேதாரமும் இல்லாம ஸ்மூத்தா போகனும்ப்பா!’ என வேண்டிக் கொண்டே காபி மிஷின்களையும் அவள் பானம் தயாரிக்கும் இடத்தையும் சுத்தமாக துடைத்து வைத்தாள்.
இவர்கள் மெனுவில் ஹேண்ட் ப்ரூவ்ட்(நாமளே தயாரிப்பது) மற்றும் மெஷின் ப்ரூவ்ட் என இரு காபி வகைகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கஸ்டமர் வரும் போது கடவுளை துணைக்கழைப்பாள் சிம்ரன்.
‘ஆண்டவா இவங்க மெஷின் ப்ரூவ்ட் காபி கேக்கனும்! தயவு பண்ணுப்பா’ எனும் இவளின் வேண்டுதல் சில சமயம் நிறைவேறும். பல சமயம் ஊத்திக் கொள்ளும். அப்படி ஊத்திக் கொள்ளும் வேளையின், சிம்ரனின் கையிலும் சுடு பானம் தாராளமாக ஊற்றிக் கொள்ளும். முன்பெல்லாம் துடித்துப் போய்விடுபவள் இப்பொழுது சாதரணமாக அதைக் கடக்கப் பழகி இருந்தாள்.
காலையில் கபேவுக்கு வந்தவுடன் அவளுக்குப் பிடித்த சாக்லேட் ப்ரவுனியை உண்டு, ஒரு டீ குடித்தவுடன் தான் வேலையை ஆரம்பிப்பாள் சிம்ரன். முதல் வேலையாக பேஸ்ட்ரி ஐட்டம்களின் ஸ்டாக் செக் செய்து, கிட்சனில் போய் ப்ரேஸ்சாக இருக்கும் பேஸ்ட்ரிகளை கொண்டு வந்து அழகாக அதனதன் தட்டுக்களில் அடுக்கி வைப்பாள். அதோடு குறைந்திருக்கும் சாக்லேட்களை ஸ்டாக்கில் இருந்து எடுத்து வந்து, பழையதை முன்புறமாகவும் புதியதை பின்புறமாகவும் அடுக்குவாள். அவளோடு பேசிக் கொண்டே உதவுவாள் ஷீலா. அங்கு சிம்ரனுக்கு உதவியதும் கிச்சனுக்குப் போய் விடுவாள் அவள்.
சிம்ரன் இப்பொழுது ஓரளவு தனியாக சமாளிப்பதால், ஷீலாவை கிச்சனுக்கு அனுப்பி இருந்தான் ரிஷி. அங்கு எல்லோருக்கும் எல்லா வேலையும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இங்கே கற்று முடிந்ததும் கிச்சன் வேலையைப் பழக வேண்டும் என ஏற்கனவே ரிஷி சொல்லி வைத்திருந்தான் சிம்ரனிடம்.
மணி ஒன்பது ஆக இன்னும் இருபது நிமிடம் இருக்க, ‘பைட் மீ’ என எழுதி இருக்கும் கருப்பு நிற ஏப்ரனை எடுத்து அணிந்துக் கொண்டவள், அதே பெயர் பொறித்த தொப்பியையும் அணிந்துக் கொண்டாள்.
‘ஐம் ரெடி! பார்த்துடலாம் ஒரு கை!’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு உதட்டில் புன்னகையை ஒட்ட வைத்தாள் சிம்ரன்.
ச்சைம்ஸ் ஒலி கேட்க நிமிர்ந்துப் பார்த்தவள்,
“குட் மார்னிங் நந்தா சார்!” என சொல்லி காபி மிசினில் எதையோ செய்வது போல திரும்பி நின்று கொண்டாள்.
அன்று சீனி பாப்பாவிடம் முத்தம் வாங்க நெருங்கியவளுக்கு, முதலில் கிடைத்தது இவன் உதட்டின் ஸ்பரிசமே! அவ்வளவு ஒன்றும் அவனை நெருங்கவில்லையே பின் எப்படி அது சாத்தியம் என பல முறை யோசித்துப் பார்த்தவளுக்கு கிடைத்த பதில் அவன் தான் நெருங்கி இருக்கிறான் என்பதே! தெரிந்து நெருங்கினானோ, தெரியாமல் நெருங்கினானோ, பட்டது பட்டதுதானே. உதடு சுட்டது சுட்டது தானே! உதடுகள் சுடும் எனும் பதத்தையே அன்றுதான் உணர்ந்துக் கொண்டாள் சிம்ரன்.
‘சிங்கிள் சிங்கிள்னு சொல்லிக்கிட்டு கேப் கிடைச்சா கேப்மாரித்தனம் பண்ணுறது! அந்த சுடும் உதட்ட அடுப்புல வச்ச ஆப்பக்கரண்டியாலேயே ஆப் பண்ணிருக்கனும்! ம்ப்ச்!!! என்ன இருந்தாலும் சமூகம் பெரிய இடம்! கடை ஓனர் வேற! இந்த வேலை கண்டிப்பா தேவை எனக்கு! அதனால இவன அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டியதா இருக்கு. இந்த மாதிரி நெக்ஸ்ட் சான்ஸ் குடுக்காம கவனமா ஒதுங்கிப் போயிடனும்’ என முடிவெடுத்தவள், ரிஷியிடம் முடிந்த அளவு ஒதுங்கிப் போனாள்.
குட் மார்னிங், அப்டர்நுன், நைட் எல்லாம் கரேக்டாக சொல்லுவாள். கேட்ட கேள்விக்கு சிரித்த முகமாகவே பதில் கொடுப்பாள். சில சமயங்களில் அவன் வாங்கிக் கொடுக்கும் உணவையும் புன்னகையுடன் பெற்றுக் கொள்வாள். ஆனால் இவளாக போய் பேசமாட்டாள். சமாதானமாக அவனிடம் நட்புக்கரம் நீட்டியவள், அதை தொடர விரும்பவில்லை.
“குட் மார்னிங் சிம்ரன்”
எப்பொழுதும் விஷ் செய்து விட்டு ஆபிஸ் அறைக்குப் போய் விடுபவன், அன்று கஸ்டமர் போல கவுண்ட்டர் முன்னே நின்றான். அவன் உள்ளே போகாமல் அவள் முன்னே நிற்கவும் திரும்பி அவனைப் பார்த்தாள் சிம்ரன்.
லவேண்டர் வர்ணத்தில் பூப்போட்ட ப்ளவுசும், கண்ணில் லவேண்டர் நிற லேன்சும் போட்டிருந்த சிம்ரனை புன்னகையுடன் நோக்கினான் ரிஷி.
“ஏன் சிம்ரன், இந்தப் பேரு நெஜமா நீ பொறந்தப்ப பெத்தவங்க வச்ச பேர்தானா? இல்லை வளந்ததும் நீ மாத்திக்கிட்டியா?” என பேச்சுக் கொடுத்தான் ரிஷி.
வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் அவளிடம் வேலைக்கான பாரத்தை எழுத சொல்லி அடையாள அட்டையின் நகலையும் வாங்கி வைத்திருந்தான். எல்லோரிடமும் வாங்கி வைப்பதுதான். அதில் சிம்ரன் என இருக்கவும்தான் இது செல்ல பெயர் இல்லை நிஜ பெயர் தான் என நம்பினான் ரிஷி.
“அப்பா வச்ச பேர்தான். அவர் மலேசியவாழ் சிம்ரன் ரசிகர் மன்ற பேரவையின் தலைவர்! 1995ல அவங்க மொத இந்திப் படம் வந்தப்ப இருந்தே தீவிரவாத ஃபேன் அவர்”
“ஓஹோ! சிம்ரனுக்கெல்லாம் பேரவை இருக்கா இந்த நாட்டுல!! பார்டா, நான் கேள்விப்பட்டதே இல்ல! சிம்ரன் மாதிரி அவ்ளோ அழகா இல்லைனாலும், ஏதோ அந்த பேருக்கு நியாயம் செய்யற அளவுக்கு ஓரளவு பார்க்கற மாதிரி தான் நீ இருக்க!” என கிண்டலடித்தான் ரிஷி.
இவனும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான் சிம்ரனை. கஸ்டமர்களிடம் சிரித்த முகமாக உரையாடுகிறாள். கூட வேலை செய்பவர்களிடம் ஒரே கலகலப்புத்தான். போன் செய்து நந்தனாவிடமும் சீனி பாப்பாவிடமும் சலசலவென கதையடிக்கிறாள். ஆனால் ப்ரேண்ட்ஸ் என சொல்லி கைக்கொடுத்த தன்னிடம் மட்டும் ஒரு வகை ஒதுக்கம் காண்பிப்பது போல தோன்றியது இவனுக்கு.
ஒரே இடத்தில் வேலை செய்யும் போது, போட்ட சண்டையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு முகத்தைத் திருப்புவது இவனுக்கும் பிடிக்காமல் போகவும் தான், அவள் சமாதானத்துக்கு வந்த பொழுது பெருமூச்சுடன் சரியென்றான். அப்படி இருக்க, இவனைக் கண்டால் வேலை இருப்பது போல திரும்பிப் கொள்வதும், மாப் போடுவது போல குனிந்துக் கொள்வதும், பேச்சுக் கொடுத்தால் ஒன்று இரண்டு வார்த்தையில் கத்தரிப்பதும் ஏன் என குழம்பிப் போனான் ரிஷி. இன்று பேசித் தீர்த்து விடலாம் என தான் சாதாரணமாக கிண்டல் கேலியாக பேச்சுக் கொடுத்தான்.
அவன் கிண்டலுக்கு எகிறாமல்,
“அது எனக்கே தெரியும் நந்தா சார்!” என சொல்லியபடியே மீண்டும் காபி மெஷின் பக்கம் திரும்பிக் கொண்டாள் சிம்ரன்.
“சிம்ரன், எனக்கு ஒரு கப் மோக்கா கலக்கி குடுக்கறியா உன் கையால!”
“இதே நந்தா சார்!” என சொன்னவள் மனதில்,
‘யாரா இருந்தாலும் கையால தான் காபி போடுவாங்கங்கடா! அப்புறம் என்ன காலாலயா போடுவாங்க! மொக்க போடற மூஞ்சிக்கு மோக்கா கேக்குது’ என வறுத்தெடுத்தாள்.
காபியை அவன் முன்னே நீட்டியவள், மங்கிக்கு மலச்சிக்கல் வந்தது போல லேசாக இளித்து வைத்தாள்.
அவளையே யோசனையாக பார்த்திருந்த ரிஷி,
“நீ என்னை அவோய்ட் பண்ணறியா சிம்ரன்?” என நேரிடையாகவே கேட்டான்.
“இ..இல்லையே! ஏன் அப்படிலாம் நெனைக்கறீங்க? அப்படிலாம் ஒன்னும் இல்ல நந்தா சார்” என அவசர அவசரமாக சொன்னாள் இவள்.
“படபடன்னு மூச்சு விடாம பேசுனா, உண்மைய மறைக்கப் பேசறாங்கன்னு அர்த்தமாம்! எங்கயோ படிச்சேன்!”
“அதெல்லாம் ஏன் படிக்கறீங்க நீங்க? ஐ மீன் அதெல்லாம் சும்மா பொழுது போகாதவங்க மக்கள ஏமாத்த எழுதறது! உங்கள அவோய்ட் பண்ண எனக்கு எந்த ரீசனும் இல்லையே! அப்புறம் ஏன் அப்படி செய்யப் போறேன்!”
“அதானே! அப்படி எந்த ரீஷனும் இல்லாம இந்த சிம்ரன் ஏன் என்னைப் பார்த்து பம்முதுன்னு நெனைச்சேன். எல்லோரும் இணைஞ்சு ஹேப்பியா வேலை செய்யற இடத்துல நீ மட்டும் ஒரு மாதிரியா இருக்கியோன்னு ஒரு ஃபீல்! நீ ஒன்னும் இல்லைன்னு சொன்னதும் தான் நிம்மதியா இருக்கு! சரி சிம்ரன் வேலைய பாரு! குட் டே டூ யூ!” என சிரித்த முகமாக சொன்னவன் வேலையைப் பார்க்க கிளம்பினான்.
இந்த சிங்கிளுக்கு என்னத் தெரியும், ஒன்றும் இல்லை என்று ஒரு பெண் சொன்னால் அதில் ஒன்பது இருக்கிறது என. என்ன பிரச்சனை என கேட்கும் போது, ஒன்றும் இல்லையென பதில் வந்தால், அவ்வாண்மகனை வைத்து செய்வதற்கு அந்தப் பெண் ரெடியாகி விட்டாள் எனும் பாலபாடத்தை எப்பொழுது ஒருவன் கற்றுத் தெளிகிறானோ அன்றே அவன் மோட்சம் அடைகிறான் என சுவாமி இச்சச்சகச்சச்சனார் சொல்லி இருக்கிறார் என ரிஷியிடம் யார் போய் சொல்வது!!!!!
எல்லா அப்பாவி ஆண்களைப் போலவும் அவளது பதிலில் சமாதானமாகி வேலையை கவனிக்க சென்றான் ரிஷி. அவன் என்ன மூடில் இருந்தானோ, மெல்லிய குரலில்
“கோழி ருசியா இருந்தா
கோழிய திம்பேன்
கொமரி ருசியா இருந்தா
கொமரிய திம்பேன்”
என பாடியபடியே ஆபிசுக்குள் நுழைய கவுண்ட்டர் பின்னால் இருந்த கதவைத் திறந்தான்.
அவன் பேசாமல் அப்படியே போயிருந்தாலாவது தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள் சிம்ரன். இவள் கன்னத்தை அவன் உதடு தீண்டியதைத் தான் ஜாடைமாடையாக இப்படி பாடலாய் பாடுகிறானோ எனும் எண்ணம் வர மண்டைக்கு மணியடித்து விட்டது சிம்ரனுக்கு. போட்டு வைத்திருந்த கட்டுத் திட்டங்கள் காற்றோடு பறக்க,
“ஹலோ, கொஞ்சம் நில்லுங்க!” என கடுப்பாய் அழைத்தாள்.
“சொல்லு சிம்ரன்!” என கேட்டப்படியே திரும்பி இவளைப் பார்த்துக் கொண்டே காபியை ஒரு மிடறு அருந்தினான் ரிஷி.
லவேண்டர் கண்களில் இருந்து தீப்பொறி பறக்க, இரு கரங்கையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, கோபமான குரலில்,
“என்னை ஏன் கிஸ் பண்ணீங்க?” என கேட்டாள் சிம்ரன்.
அவள் கேள்வியில் அதிர்ச்சியாகி,
“வாட் தெ….!!!” என கோபமாய் சொல்ல வந்தவனுக்கு புரை ஏறி இரும்பல் வர, வாயில் இருந்த காபி அவன் அணிந்திருந்த சட்டை எல்லாம் தெறித்து அவள் மேலேயும் தெறித்தது.
அவசரமாக பேப்பர் நப்கின் எடுத்து தன் ஏப்ரனைத் துடைத்துக் கொண்டவள், அவன் கையில் இருந்த மக்கை பிடிங்கி கவுண்ட்டர் மேல் வைத்தாள். கண்களில் நீர் வர இன்னும் அவளைப் பார்த்தவாறே இரும்பிக் கொண்டு இருந்தவனை ஒரு நிமிடம் ஏறிட்டுப் பார்த்தவள், அவனை நெருங்கி முதுகை படபடவென கதவைத் தட்டுவது போல தட்டினாள்.
“ஈசி மேன் ஈசி! வாயில ட்ரிங்க்ஸ் இருக்கறப்போ பேசக் கூடாதுன்னு தெரியாது? கிஸ்சடிக்கத் தெரியுது, இது தெரியலையா?” என இன்னும் பலமாகத் தட்டினாள்.
“போதும் போதும் நிறுத்து! நீ தட்டுற தட்டுல எங்கம்மாட்ட குடிச்ச பால் கூட வெளிய வந்துடும் போல இருக்கு!”
இருமி மூச்சை இழுத்து விட்டுத் தன்னை சரிப்படுத்திக் கொண்டவன்,
“என்ன பேசறன்னு தெரிஞ்சு தான் பேசறியா சிம்ரன்! உன்னை எப்ப நான் கிஸ் பண்ணேன்!” என கோபமாக கேட்டான்.
“என் கன்னத்த உங்க உதட்டால உரசனதுக்குப் பேரு கிஸ் இல்லையா? ஏன் உரசனீங்க நந்தா சார்? செய்யறதையும் செஞ்சிட்டு கோழி கொமரின்னு பாட்டுப் பாடி என்னை மடிக்க வேற பார்க்கறீங்களா?”
“மடிக்கறாங்களா? நீ என்ன தோய்ச்ச துணியா, உன்னை மடிக்கறதுக்கு? அப்புறம் என்ன சொன்ன? என் உதட்டால உன் கன்னத்தை உரசிட்டேனா!!! உன் கன்னம் ஆண்ட்ரோய்டு போன் ஸ்க்ரீனு, என் உதடு அத தொறக்கற ஆள்காட்டி விரலு, அப்படியே உரசி உசுப்பேத்திடாங்க! போவியா!!!!”
இத்தனை நாள் அமைதியாய், கொடுத்த வேலைக்கும் மேலாக உழைப்பைப் போட்ட அவள் மேல் ஒரு மரியாதை வந்திருக்க, நல்லபடியே நடத்தினான் சிம்ரனை. மனதின் ஓரம் லேசாய் எட்டிப்பார்த்த சலனத்தை ஒரு உதை உதைத்து வெளியேற்றி அதில் வெற்றியும் கண்டிருந்தவனை மீண்டும் மலை ஏற்றி இருந்தாள் சிம்ரன்.
“அன்னைக்கு சீனி பாப்பாகிட்ட முத்தம் வாங்க வந்த நீ தான், உன் கன்னத்த என் உதட்டுல உரசிட்டுத் தெரியாத மாதிரி போன! அந்த நாள் முழுக்க என் உதடு திகு திகுன்னு எரிஞ்சிட்டே இருந்துச்சு தெரியுமா! அதப்பத்தி நான் எதாச்சும் உன் கிட்ட வந்து கம்ப்ளேயிண்ட் பண்ணனனா? அறியாத புள்ள தெரியாம பண்ணிருச்சுன்னு மன்னிச்சு விட்டுடல! என்ன இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களில ஆம்பளைங்களுக்கு பரந்த மனசுதான். நீங்களே எங்க மேல வந்து தெரியாம மோதிட்டாலும் சட்டுன்னு மன்னிச்சு விட்டுடுவோம்! ஆனா நீ, ஓன் வீக் கழிச்சு வந்து நீ பண்ண வேலையை நான் பண்ணேன்னு அப்படியே ப்ளேட்டைத் திருப்பி போடற பார்த்தியா! வாட் நான்சன்ஸ் இஸ் திஸ் சிம்ரன்?” இவனும் படபடவென பொரிந்தான்.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவன் உதடும் இவள் கன்னமும் லேசாக உரசிக் கொண்டதற்கு காரணம் சிம்ரனா, ரிஷியா இல்லை அந்தப் பாழாய் போன குப்பிட்டா என்பது கதையை எழுதும் எழுத்தாளருக்குக் கூட தெரியாது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
“இங்க பாருங்க சேகர்..ச்சை நந்தா சார்! நீங்க வெறும் சிங்கிள் தான்! நான் என்னை மட்டுமே காதல் பண்ணுற மொரட்டு சிங்கிள்! மலாய்லயே எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை லேலாக்கி(ஆண்) தான். என் எக்ஸ் விக்கி கிட்ட சிக்கி நான் சின்னாபின்னமானது போதும்! இனிமே என் போலிசி ‘சே நோ டூ காய்ஸ்’ மட்டும் தான்! அதுல இருந்து கொஞ்சமும் பின் வாங்க மாட்டா இந்த சிம்ரன். சோ மனசுல என் மேல ஆசைய வளத்துக்காம வேற வேலையப் பாருங்க. என்னை மாதிரி ஓர் அழகிய, மனசுல இருந்து தூக்கறது கொஞ்சம், ஐ மீன் ரொம்பவே கஸ்டம் தான்! ஆனாலும் நீங்க முயற்சி பண்ணித்தான் ஆகனும்” என தன்னிலேயே நின்றவளை ஆவென பார்த்தான் ரிஷி.
சட்டென தன்னை சமாளித்தவன் கோபமாக,
“சிம்ரன் நடிச்சப் படம் பஞ்சதந்திரம்
உன் மூஞ்ச மேக்காப் இல்லாம பார்த்தா வாந்தி வந்துரும்” என சொல்லி விட்டு விடுவிடுவென ஆபிஸ் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
கஸ்டமர் வருவதற்கான அடையாளமாக ச்சைம்ஸ் ஒலி கேட்க அந்த அருமையான சண்டை அத்தோடு முடிவுற்றது.
அவ்வளவு சண்டையிட்ட சிம்ரன் அந்த இரவே ரிஷியின் இறுக்கமான அணைப்பில் இருந்தாள். (எப்படிடா இப்படின்னு கொஞ்சம் யோசிச்சிட்டே இருங்க…நெக்ஸ்ட் எபில பார்க்கலாம்..லவ் யூ ஆல்)
(உருகுவான்….)