Kandharva Logaa – 34

கந்தர்வ லோகா – 34 

 

லோகா எழுந்ததிலிருந்து ஒன்றும் செய்யத் தோன்றாமல் மிகவும் சோர்ந்து இருந்தாள்.

மகேஸ்வரன் அவளை அழைத்து தன் பக்கத்தில் அமரவைத்து அவளது தலையைத் தடவி பாசமாகப் பேசினார். எப்போதும் மகள் என்றால் தனி பாசம் தான்.

இன்று அவள் சோர்ந்து இருப்பது அவரையும் வருத்தியது.

“என்ன டா ரொம்ப டல்லா இருக்க? உடம்பு சரியில்லையா ? டாக்டர் கிட்ட போகலாமா!” அவரின் பாசமான குரலில் சொல்லமுடியாத வேதனையை மனதில் அடக்க முயன்றாள்.

தொண்டையை சரி செய்து சற்று மனதை தேத்தியவள்,

“இல்லப்பா! லேசான தலை வலி. இன்னைக்கு காலேஜ் போகலப்பா. அம்மா வ நீங்க தான் சமாளிக்கணும். “ இருக்கும் கஷ்டத்தில் மஞ்சுளாவை வேறு சமாளிக்க வேண்டுமே என்று தோன்ற, தந்தையிடம் உதவி கோரினாள்.

“நீ ரெஸ்ட் எடு டா . அவ கெடக்கறா. நீ நல்லா தூங்கு ,” அவளை அனுப்பிவிட்டு தினசரியில் மூழ்கினார்.

அவள் சோர்வுடன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.

அவளிடம் இதைப் பற்றிக் கேட்டால் தன்னிலையை நினைத்து வருந்தக் கூடும். அதனால் தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.

தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல நினைத்தார். உடனே மஞ்சுளாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவரோ மகேஸ்வரனிடம் சொல்லிவிட்டு செல்லுமாறு கூறினார்.

இருவரும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த மகேஸ்வரனிடம் சென்றனர்.

“என்னங்க , அம்மா ஊருக்கு போகணும்னு சொல்றாங்க..” சாதரணமாகவே சொல்ல,

மகேஸ்வரனுக்குத் தான் மனதில் சுருக்கென்று எங்கோ வலித்தது. எதுவோ சரியில்லை என்று உணர்ந்தார். ‘இத்தனை நாள் இந்த நினைப்பே இவருக்கு இல்லை இப்போது எதற்கு’, என்று யோசிக்க,

“என்ன அத்தை! திடீர்னு? “ அத்தையிடம் அன்பும் மரியாதையும் இருந்தாலும் அவரின் விஷயங்களில் தலையிடுவதில்லை. இன்று ஏனோ கேட்கத் தோன்றியது.

“ கோயிலுக்கு போகணும் தம்பி. ரொம்ப நாள் ஆச்சு. மஞ்சுவோட அப்பா இறந்ததுக்கு அப்புறம் அந்தப் பக்கம் போகவே இல்லை. அது தெய்வக் குத்தமாயிடும். அதுனால ஒரு தடவ போய் பொங்கல் வெச்சுட்டு வரேன்.” அவர் சொல்லி முடிக்க ,

தன் தாயும் இப்படித் தான் கோயிலுக்குக் கிளம்பிப்போய் வந்த பிறகு நிரந்தரமாகப் நினைவிற்கு வந்தது.

“எனக்கு என்னமோ சரியா படல அத்தை. நீங்க பொய் தான் ஆகணுமா?” முகம் சற்று தாயின் நினைவில் சோர்ந்தது.

“ இது அவசியமான ஒன்னு . நம்ம குடும்ப நல்லதுக்குத் தான் போறேன் தம்பி. தடை சொல்லாதீங்க” அவர் பேச்சை முடித்துக் கொள்ள, வேறு வழியின்றி மனம் ஒப்பாமல் சம்மதித்தார்.

“ நான் நம்ம லோகாவை கூட்டிட்டு போகவா. அவ கையால பொங்கல் வெச்சா நல்லது. கல்யாணம் வேற வெச்சிருக்கோம். எல்லாம் சுபமா நடக்கணும். “  சற்று தயங்கிய படியே கேட்க,

 பாட்டியை தனியே அனுப்புவதும் கடினம் அதனால் லோகா உடன் செல்வது சற்று ஆறுதலான விஷயம் தான் என்று பட்டது அவருக்கு. சரி என்று சொல்ல வாய் திறக்க, அதற்குள் மஞ்சுளா குறுக்கிட்டு,

“நானும் அப்போ வரேன் . எல்லாரும் சேர்ந்து போகலாம் “ என்று கூற,

‘இவள் வந்தால் மகளின் விவரம் அறிந்து மிகவும் வேதனைப் படுவதோடு அது வேற விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றும் எண்ணிக் கொண்டிருந்தார்  பாட்டிம்மா.

“ விஷ்வா ஊர்ல இல்ல மஞ்சு. நானும் ரகுவும் தான் இப்போ ஒரு வாரம் ஆபீஸ் வேலை பார்க்கணும். நீயும் போய்டா அப்புறம் எனக்குத் தான் கஷ்டம். அதுனால நீ இங்க இரு. அத்தையும் லோகாவும் போகட்டும். நீங்க லோகாவை கூட்டிட்டு போங்க அத்தை. “ என்று மகேஸ்வரன் சொல்லிவிட, பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

லோகா இதைக் கேள்விப் பட்டவுடன், இடமாற்றம் தேவையான ஒன்று தான் என்று உடனே கிளம்பிவிட்டாள். மஞ்சுளா ஏகப்பட்ட அறிவுறைகளை மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

அவளும் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற எண்ணத்தில் அனைத்திற்கும் தலையாட்டி பாட்டியுடன் கிளம்பினாள்.

பாட்டி ‘அன்றிரவு கிளம்பலாம் ஆனால் நீ தூங்காமல் வரவேண்டும்’ என்று சொன்னதால், மதியம் முழுதும் நன்கு உறங்கி எழுந்தாள் . மதியத்தில் அவளுக்கு எந்த கனவுத் தொல்லையும் இல்லை. நிம்மதியான உறக்கம் வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு.

பாட்டியும் பேத்தியும் ரயில் ஏறினர்.

 

மகேஸ்வரனும் மஞ்சுளாவும் வந்து வழியனுப்பி விட்டுச் சென்றனர்.  ரயில் கிளம்பியது.

“தூக்கம் வருதா லோகா?” ,ஜன்னலின் அருகே சாய்ந்து அமர்ந்த லோகாவைப் பார்த்துக் கேட்க,

“இல்ல பாட்டி. அதான் மதியமே நல்லா தூங்கிட்டேனே. ஏன் என்னைத் தூங்கக் கூடாதுன்னு சொன்னீங்க?” லோகா கேட்க,

“ நாம நாளைக்கு ஊருக்கு போனதும் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு நைட் ஒரு பூஜை செஞ்சு பொங்கல் வைக்கணும். அதான் இப்போ தூங்கிட்டா கஷ்டம். அதுனால தான் சொன்னேன்.”

“அது சரி. எவ்ளோ நேரம் இப்படியே வேடிக்கை பார்த்துட்டு போறது. தூக்கம் வந்துடுமே! “ , அலுத்துக் கொண்டாள்.

“இல்லை. நான் சொல்லப் போறதைக் கேட்டா உனக்குத் தூக்கம் வராது!” பீடிகையுடன் சொல்ல,

“ என்ன சொல்ற பாட்டி. அப்படி என்ன சொல்லப் போற? பேய்க் கதையா?” கிண்டல் செய்து கேட்க,

“ இல்லை லோகா. என்னோட கதை. இப்போ நாம போகப் போற கோயில் பத்தி. அங்கே எனக்கு நடந்த விஷயங்கள் பத்தி சொல்றேன்” மனதில் ஒரு வித இறுக்கம் பரவ சொன்னார் பாட்டி.

அவரின் தாழ்ந்த குரலில் விஷயம் பெரியது என்று தோன்றியது லோகவிற்கு. அமைதியாக அவர் சொல்லப் போகும் விஷயங்களைக் கேட்கத் தயாரானாள்.

“ நான் சின்ன வயசா இருக்கறப்ப எதுக்கும் பயப்படமாட்டேன். ஆனா இந்த உடுக்கை, சிலம்பம் இந்த மாதிரி சத்தம் கேட்டா, என்னை மறந்து என்னோட உடம்பு ஆட ஆரம்பிச்சுடும். அப்போ நான் எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியாது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டாள் லோகா,

“ உங்களுக்கு சாமி வரும்னு அம்மா சொல்லிருக்காங்க. ஆனா இப்போ இல்ல ன்னும் சொன்னாங்க. அப்போ நீங்க குறி சொல்லுவீங்களா? ” ஆர்வம் அவள் முகத்தில்!

லேசாக சிரித்தார் பாட்டி. “ சாமி வர்றது நாம்ம கைல இல்ல டா.  அது எல்லாருக்கும் வராது. சில பேருக்கு வர்றது ஒரு வித நரம்பு தளர்ச்சி தான். ஆனா குறி சொல்றவங்க வேற. அவங்க என்ன சொன்னாலும் நடக்கும்.

நான் வாய் திறந்து இது வரை எதுவும் சொன்னது இல்லை. ஆனா எனக்குள்ள ஒரு உணர்வு பரவுவதை என்னால தடுக்க முடியாது. ஆண்ட நேரத்துல நான் நானா இருக்க மாட்டேன். வேற யாரோ இருப்பது போல தோன்றும்.

 

அது கடவுளா இல்லயான்னு நான் ஆராய்ச்சி செய்ததில்லை. நம்ம ஊரு பூசாரி கற்பூரம் காட்டின பிறகு கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள இருந்து போகும்.  ரொம்ப அசதியா இருக்குமா அதுல மயங்கிடுவேன்.

எந்திரிச்ச பிறகு எல்லாரும் சொன்னதை கேட்டுத் தான் தெரிஞ்சுப்பேன். என்னைப் பார்க்கவே பயமா இருக்கும்னு சொல்லுவாங்க.

கொஞ்சம் கொஞ்சமா நான் கோயிலுக்கு போறதையே விட்டுட்டேன். அந்த மாதிரி சத்தம் கேட்கற இடத்துல இருக்க மாட்டேன்.

அதையும் மீறி ஒரு நாள் கோயிலுக்கு போயே ஆகணும்னு எனக்குள்ள இருந்து யாரோ என்னை விரட்டிடே இருப்பது போல உணர்வு. அதுவும் ராத்திரி. ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டுக்குள்ளையே இருக்க முயற்சி பண்ணேன். முடியல.” அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அதீந்த்ரியன் லோகாவை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

லோகாவை தூங்க விடாமல் பாட்டி பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். லோகாவை உறக்கத்தில் ஆழ்த்த முயற்சித்தான்.

அவளுக்குக் கொட்டாவி வந்தது. இருந்தும் அவள் அசர வில்லை.

அதைக் கண்ட பாட்டி, தான் சொல்லிக்கொண்டிருந்ததை நிறுத்த,

“அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க. கோயிலுக்குப் போனீங்களா?” அவள் கவனம் இங்கு தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினாள்.

பாட்டி தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

“ எங்க என்னை அறியாம நான் வெளில போயடுவனோன்னு பயந்தேன். உங்க தாத்தாவை எழுப்பி உள் பக்கம் வீட்டை பூட்டச் சொன்னேன். அவரும் பூட்டிட்டு சாவிய எடுத்துட்டு போய்ட்டாரு.

நானும் பேசாம பொய் படுத்துட்டேன். அஞ்சு நிமிஷத்துல மறுபடியும் என்னை ரொம்ப தொல்லை பண்ணிச்சு.

என்னால கட்டுபடுத்த முடியாம வீட்டு பின் வாசல் வழியா ஓடுனேன். ஊரே அடங்கி போன சமயம். தெருவுல நடமாட்டமே இல்லை. நடக்க முடியாம ஓடினேன். என் பின்னால் யாரோ வர மாதிரியே இருந்துச்சு. திரும்பிப் பார்த்தா… “ எச்சில் விழுங்கினார் பாட்டி. அவருக்கு இப்போது கூட வியர்த்தது.

“ பின்னாடி யாரு பாட்டி.” அவரைப் பிடித்து உலுக்கினாள் லோகா. தூக்கம் என்பது மருந்துக்கும் இல்லை அவளிடம்.

“ என் பின்னாடி ஒரு பூனை. ஆனா அது சாதாரண பூனை இல்லை. அதோட உடம்பு முழுக்க புலி மாதிரி கோடுகள். கண் சாதாரண பூனைக் கண் இல்லை. ரத்த சிவப்பான கண்கள்.

நான் நின்னதும் அதுவும் நின்னுடுச்சு. நான் நடக்க ஆரம்பிச்சப்பறம் என் பின்னாடியே வந்துச்சு கோயில் வரைக்கும்.

கோயில் வாசல்ல என்ன விட்டுட்டு அது போய்டுச்சு. என் உடம்பெல்லாம் வியர்த்துப் போச்சு.

கோயில் உள்ள போக திரும்பினேன். அங்கே பூசாரி மட்டும் வாசல்ல  ரொம்ப கோபமா உட்கார்ந்து இருந்தார்.

அவரோட முடியை எப்போதும் முடிஞ்சிருப்பாரு. ஆனா அன்னிக்கு விரிச்ச முடியோட கோயில் வாசல் படில ஒரு தட்டு முழுக்க குங்குமத்தோடயும் கையில ஒரு உடுக்கையோடும் கோபமா என்னைப் பார்த்தாரு.

“ வா “ அப்படின்னு கூப்பிட்டாரு.

எனக்கு பயம் எல்லாம் இல்லை. அவருக்கு முன்னாடி போய் உட்கார்ந்தேன். “

 

லோகா சீட்டின் நுனியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ என்னை அவர் வெறித்துப் பார்த்தார். “

“நீ பண்றது மிகப் பெரிய தவறு. உனக்கு அந்த அம்மனோட துணை இருக்கு. நீ உன்னைக் கட்டுப் படுத்தாமல் இருந்தால் அவ உனக்குள்ள இறங்க தயாரா இருக்கா. உனக்கு அவ நல்லது தான் செய்வா. அவ இறங்கறதுக்கு ஒருசில பேர மட்டும் தான் தேர்ந்தெடுப்பா. அந்த வகையில நீ குடுத்து வெச்சிருக்க.

நீயே ஏன் அவ உனக்குள்ள வர விடாம தடுக்கற. “ அவரின் குரல் உக்கரமாய் வெடித்தது.

பாட்டி அசராமல் அமர்ந்திருந்தார். பூசாரியைப் பார்த்தாலே அந்த ஊரில் சில பேருக்கு நடுங்கும். ஆனால் இவரோ துளியும் பயமின்றி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“ நான் நானா மட்டுமே இருக்க விரும்பறேன். ஒரு சாதாரண குடும்பப் பெண்ணா இருக்கனும். என்னை ஒரு தெய்வமா யாரும் பார்க்க வேண்டாம். அந்த தெய்வத்தை நான் வணங்கறேன். அவ அருள் எனக்கு வேணும். அதுக்காக அவளே வேணும்னு நான் கேக்க மாட்டேன். நான் அவளோட பக்தை. தீவிர பக்தை.

எனக்கு இது போதும். மத்தவங்க என்னைப் பார்த்து பயப்படறது இருக்கட்டும். என் பொன்னே என்னைப் பார்த்து பயப்படறா. ஒரு தாயா அவளை நான் கண்டிக்கணும் அரவனைக்கணும். எனக்கு இந்த கடமை வேணாம்.” அவர் கூறிய பதிலைக் கண்டு பூசாரிக்கே ஆச்சரியம்.

“ஆனால் என் தாய் எனக்கு கட்டளை இட்டா. உன்னைக் கூப்பிட்டு உன்மூலமா பேசணும்னு நெனச்சா. நான் அதை நிறைவேத்தனும். ஒரு முறை எனக்கு அனுமதி கொடு. உன்மேல அவ இறங்க. அதுக்கப்றம் நீயாச்சு அவளாச்சு.” பாட்டியின் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்.

பாட்டியின் உடல் தன்னால் ஆட ஆரம்பித்தது. உடம்பெல்லாம் முறுக்கேறியது. கைகளை வலது பக்கமும் இடது பக்கமும் ஆட்டினார். உடுக்கை சத்தம் வேகமெடுத்தது.

உட்கார்ந்து கொண்டே ஆடினார் பாட்டி. கண்களை உருட்ட ,

“டேய்….. “ என்று அலறினார்.  

“ஆத்தா…… வந்துட்டியா…. “

“ ஆமா! இவ என்னோட தீவிர பக்தை தான். ஆனா இவளுக்கு நான் வர்ரதுல விருப்பமில்லை.

அழையா விருந்தாளியா வர எனக்கு புடிக்கல டா…  அவளே என்னைத் தேடி ஒரு நாள் வருவா. அவ கஷ்டத்த போக்க என்னைத் தேடி வருவா…. அது வரை நான் அவ உடம்புல வரமாட்டேன். அவ பக்திய நான் ஏத்துக்கறேன்.

ஒரு நாள் என்னைத் தேடி வரப்ப… அவ குறைய நான் தீர்த்து வைப்பேன். ஆனா அவ அப்போ என்னோடையே ஐக்கியமாகனும்.  

அவள அவ போக்குல விடு.. “

பூசாரி கற்பூரம் காட்ட , பாட்டி கீழே சரிந்தார்.

நான் எழுந்த பிறகு நடந்ததை எனக்கு சொன்னார். அந்த அம்மனோட அருள் எனக்கு இருக்கறதா சொல்லி அந்த குங்குமத்தை எனக்குக் குடுத்தார்.

அதன் பிறகு நாம அங்க போகவே இல்லை. இப்போ தான் போகப் போறோம்.

“ இப்போ ஏன் போகறோம்”  லோகா மனதில் தன் துன்பத்தை நினைத்துக் கேட்க,

“ உனக்காகத் தான் லோகா. எனக்கு எல்லாம் தெரியும்”

லோகா கண்களில் கண்ணீர்.

“ அழாதே லோகா! எல்லாம் சரியாயிடும்.” அவளின் அழுகையைத் தேற்றினார்.

 

Comments Here