கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  16

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  16

நிரஞ்சனா, எதுவும் பேச விரும்பாதவளாக அவர்கள் படுக்கை அறைக்கு வந்து, மெத்தையில் குப்புறப் படுத்து, முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டு கதறினாள்.  அவள் கதறலில் ஹாலில் இருந்து படுக்கை அறைக்கு வந்த முகுந்தன் கதவோரமாகச் சாய்ந்து, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு முதுகு குலுங்க அழும் தன் மனைவியைப் பார்த்தான்.

நிரஞ்சனாவின் அழுகை முகுந்தனின் கோபத்தை அதிகப் படுத்தியது. ‘இவள் இப்படி அழும் அளவுக்கா நான் இவளை வைத்திருக்கிறேன்?’ என்று அவன் மனம் வருந்தியது.

அவள் அருகே எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான் முகுந்தன். எதுவுமறியாமல், அறியும் நிலைமையில் இல்லாமல், நிரஞ்சனா கண்ணீரில் கரைய, முகுந்தன் கண்மூடி உறங்க முயற்சித்தான். அவன் இருக்கைகளையும் பின்னந்தலையில் கோர்த்துக் கொண்டு, கண்களை இறுக மூடியிருக்க, தன் மனையாளின் கண்ணீரும், விலகலும் அவன் மனதைப் பாதித்து வேதனையாகக் கண்ணீராய் கசிந்தது. சமாதானம் செய்ய, ஆளில்லாமல் முகுந்தனின் கண்ணீரும், நிரஞ்சனாவின் கண்ணீரும் அந்த அறையை நிரப்பியது. காதல்! காதல்! காதல்! இவற்றால் நிரம்பி வழிந்த அறை தான். இன்றும், காதல் மேலோங்கி தான் இருந்தது. தன்னை அவன் புரிந்து கொள்ளவில்லை, என்று நிரஞ்சனாவும், தன்னை அவள் புரிந்து கொள்ளவில்லை என்றும் இருவரும் வருந்தினர்.

நேரம் செல்ல செல்ல, தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் முகுந்தன். நிரஞ்சனாவின் விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, மனம் தாளாமல்,”நீரு…” என்று அழைத்து அவள் தலை கோதினான் முகுந்தன்.

“முகுந்த்…” என்று கதறிக் கொண்டு, அந்த சிறு பொழுதின் பிரிவைக் கூட தாங்க இயலாதவளாக, வேகமாக அவன் மார்பில் சரண் புகுந்தாள் நிரஞ்சனா. “ஏய்! எதுக்கு டீ. இப்படி அழற? நீ அழுதா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டீ… அழாத.” என்று கண்டிப்போடு கூறி, அவளை இறுக அணைத்துக் கொண்டான் முகுந்தன்.

“நான் எங்க போய்ட்டேன். இங்க உன் பக்கத்தில் தானே இருக்கேன்.” என்று தன்மையாக  கூற, “என்கிட்ட நீ பேச இவ்வுளவு நேரமா?” என்று மூச்சு வாங்கிக் கொண்டே விசும்பலோடு கேட்டாள் நிரஞ்சனா.

“நீ பேசிருக்கலாமே?” என்று முகுந்தன் அவள் கூந்தலை வருடியபடி கேட்க, “நீ தான் என்னை வெளியே போக சொல்லிட்டியே? எனக்குன்னு யார் இருக்கா?” என்று நிரஞ்சனா வருத்தத்தோடு கேட்க, “எனக்கு மட்டும் யார் இருக்கா?” என்று அதே வருத்தத்தோடு புருவம் உயர்த்தி கேட்டான் முகுந்தன்.

நிரஞ்சனா கண்கலங்க, அவள் முகம் உயர்த்தி, “என்ன டீ ஆச்சு?” என்று முகுந்தன் ஆழமான குரலில் கேட்க, “அப்பா… அப்பா…” என்று அவள் மீண்டும் ஏங்க, தன் கண்களைச் சுருக்கி அவளை ஆழமாகப் பார்த்தான் முகுந்தன். “அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியலை. சீரியசுன்னு ஹாஸ்ப்பிட்டள்ள அட்மிட் ஆகிருக்காங்க. பக்கவாதம்ன்னு சொல்றாங்க.” என்று நிரஞ்சனா தயங்கிக் கொண்டே கூற, “இதை நீ ஏன் என்கிட்ட அப்பவே சொல்லை?” என்று அவளை விலக்கிக் கேட்டான் முகுந்தன்.

“நீ கேட்கவே இல்லையே?” என்று நிரஞ்சனா உதட்டைப் பிதுக்க, “அப்பாவை இப்ப போய் பார்ப்போமா?” என்று நேரம் காலம் என அனைத்தையும் ஒதுக்கி விட்டுக் கேட்டான் முகுந்தன்.

மறுப்பாகத் தலை அசைத்தாள் நிரஞ்சனா. “நீங்க வரும் பொது தான் தங்கை கூப்பிட்டுருந்தா. ஸ்வாதி தான் அக்கான்னு என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னா. அப்ப, அம்மா பார்த்துட்டாங்க போல. என்கிட்ட பேசினாங்க. நீ செஞ்ச காரியத்தில் இப்படி ஆகிருச்சு. இனியும் இங்க வந்து எங்களை கொன்னுடாதன்னு சொன்னாங்க.” என்று விரக்தியான குரலில் கூற, “சாரி டீ. உன் மனநிலை தெரியாம.” என்று முகுந்தன் அவள் தலை கோத, “நானும் எங்கயோ உள்ள வருத்தத்தை உன்கிட்ட காட்டிட்டேன்.” என்று அவன் தோள் சாய்ந்து படுத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

“நான் அங்க போக முடியாது. எல்லாம் சரியாகிரும்ல?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் நிரஞ்சனா. “எல்லாம் சரியாகிரும். நாளைக்கு, உங்க அம்மா, வீட்டுக்கு போற நேரம்… ஹாஸ்பிடல்ல அவுங்க இல்லாத நேரம் எப்பன்னு ஸ்வாதி கிட்ட கேளு. நாம யாருக்கும் தெரியாத மாதிரி அப்பாவை பார்த்துட்டு வந்திருவோம்.” என்று முகுந்தன் நிரஞ்சனாவுக்கு ஆறுதலாகக் கூறினான்.

நிரஞ்சனா அவனை அச்சம் கலந்து ஏக்கத்தோடு  பார்க்க, “நான் கூட்டிட்டு போறேன். அமைதியா பார்த்துட்டு வந்திருவோம். உனக்கும் மனசு நிம்மதியா இருக்கும். சரியா?” என்று கேட்க, சம்மதமாகத் தலை அசைத்தாள் நிரஞ்சனா.

அவள் நெஞ்சம் அவனுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவிக்க, அவள் இதழ்கள் மௌனம் சாதித்தது.  ‘இவனிடம் கோபித்துக் கொண்டோமே…’ என்ற அவள் தவிக்க, ‘இவளிடம் ஏன் என் பொறுமையை இழந்தேன்.’ என்று அவனும் தவித்தான்.

தவிப்பு,  ஊடல், கூடல் இது தானே காதல் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த காதல் ஜோடி.

 

அதே நேரம், விஜயேந்திரன் லேப்டாப்பில் மூழ்கிருக்க, கீர்த்தனா தீவிரமாக கை வேலையில் மூழ்கி இருந்தாள்.

“கீர்த்தனா, எனக்கு தான் நிறைய வேலை இருக்கு. இப்படி முழிச்சிருக்கேன். நீ தூங்க வேண்டியது தானே?” என்று விஜயேந்திரன் கேட்க, “முன்னாடி ஆபீஸ் போவேன். வீட்டில் வேலை இருக்கும். இப்படி பிஸியா இருந்தா தூக்கம் வரும். இப்ப எனக்கு வேலையே இல்லை. இவ்வுளவு சீக்கிரம் எல்லாம் எனக்கு தூக்கம் வராது.” என்று கீர்த்தனா கூற, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் விஜயேந்திரன்.

“எதுக்கு சிரிக்கறீங்க?” என்று கீர்த்தனா முகத்தை சுருக்க, “நம்ம ரூமை பாரு. எதோ ஆர்ட் ஷோ மாதிரி இருக்கு. அவ்வுளவும் உன் கை வேலை தா. இதில் நீ சும்மா இருக்குறன்னு வேற பேச்சு.” என்று விஜயேந்திரன் கூற, “ம்… க்கும்…” என்று சலிப்பான குரலில் கூறிக்கொண்டு, நாற்காலியில் ஏறி அவள் செய்த கைவேலையை சுவரில் பொருத்திக் கொண்டிருந்தாள்.

‘கணவன் என்ற சொல்லை நீக்கி விட்டு, பார்த்தால் இந்திரனை போல் சிறந்த மனிதன் இல்லை.’ என்ற எண்ணத்தோடும், முகத்தில் புன்னகையோடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.

விஜயேந்திரன்  வேலையில் மூழ்கி இருந்தாலும், அவன் கண்கள் கீர்த்தனாவை வட்டமடித்தது.

‘லீலாவிடம் பேச முடியவில்லை. லீலா கிட்ட, நேரில் போய் நடந்ததைச் சொன்னால், புரிஞ்சிப்பா. ஆனால், கீர்த்தனா? இந்த பெண்ணுக்கு நான் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும். கீர்த்தனாவை நான் வேறு சூழ்நிலையில் சந்திச்சிருந்தால்?’ என்று விஜயேந்திரனின் எண்ணம் தறிகெட்டு ஓடியது.

‘விவாகரத்து என்ற சொல்லை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், இவளைப் போல் ஓர் பெண்ணை பார்க்க முடியாது. அவள் கண்ணியம், நிமிர்வு, மனைவி என்ற பெயரில் எந்த உரிமையும் எடுத்துக் கொள்ளாத தன்மை…’ என்று கீர்த்தனாவின் மேலோங்கிய குணத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தது விஜயேந்திரனின் மனம்.

அப்பொழுது, கீர்த்தனா நாற்காலியிலிருந்து தடுமாறி கீழே விழ, “கீர்த்தனா…” என்று பதறிக்கொண்டு அவளைத் தாங்கி பிடித்தான் விஜயேந்திரன்.

பூமாலையைப் போல் அவளை அவன் கையில் ஏந்த, அந்த நொடி இருவரின் உலகமும் ஸ்தம்பித்து நின்றது. கீர்த்தனாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ, என்ற அச்சம் விஜயேந்திரனின் கண்களில் அப்பட்டமாகத் தெரிய, கீர்த்தனா அதிர்ச்சியிலிருந்தாள். கீழே சரியும் பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி, அவன் தாங்கி பிடிக்க ஏற்பட்ட அதிர்ச்சி என்று அவள் உறைந்து விஜயேந்திரனின் கைகளில் பாந்தமாய் பொருந்தி இருக்க, தன்னிலை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்க, கீர்த்தனா சுயநினைவு வந்தவளாக, படக்கென்று அவன் கைகளிலிருந்து குதித்தாள். “பார்த்து…” பதறியது அவன் மனம்! அவன் உதிர்த்த சொற்கள் உட்பட.

கீர்த்தனா, தன்னை மீட்டுக் கொண்டதன் அடையாளமாக, “அவ்வளவு அக்கறையா?” என்று நக்கலாகக் கேட்டாள். “இல்லையா பின்ன?” என்று புருவம்  உயர்த்தி கேட்டான் விஜயேந்திரன்.

கீர்த்தனா பதிலாகப் புன்னகைக்க, “உன்னை நல்லபடியா பத்திரமாகத் திருப்பி கொடுக்க வேண்டாமா?” என்று விஜயேந்திரன் கேள்வியாக நிறுத்த, மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்டது.

கீர்த்தனா, அவசரமாக ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.

“அப்பா… சொல்லுங்க.” என்று விஜயேந்திரன் பின்னே வர, “விஜய். உங்களுக்கு பாண்டிச்சேரியில் ரிசார்ட் புக்  பண்ணிருக்கேன். நாளைக்கு கிளம்பனும். போயிட்டு வந்துருங்க.” என்று நவநீதன் கூற, “மாமா… ரொம்ப கஷ்டம். ஆஃபீஸிலே நிறைய வேலை  இருக்கும் அவங்களுக்கு.” என்று கீர்த்தனா பதட்டமாக கூற, விஜயேந்திரன் தர்ம சங்கடமாக தன் தந்தையை பார்த்தான்.

“ஆபிசில் ஜஸ்ட் மன்ஜெமென்ட் வேலை தான். நான் பார்த்துப்பேன். நீங்க போறீங்க.” என்று அவர் கண்டிப்போடு கூற, “சரி அப்பா.” என்று சம்மதமாகத் தலை அசைத்தான்.

கீர்த்தனா விழிக்க, நவநீதன் சென்றவுடன், ‘என்ன?’ என்ற கண்களால் வினவினான் விஜயேந்திரன். “என்ன சொன்னாலும், சரின்னு சொல்லிருவீங்களா?” என்று கீர்த்தனா படபடப்பாகக் கேட்க, “எதுக்கு இவ்வுளவு டென்ஷன். அப்பா இப்படிக் கண்டிப்பா சொல்லும் பொழுது என்ன பண்ண முடியும். அப்பா ஹனிமூன்னு சொல்லட்டும். நாம அதை பேமிலி ட்ரிப்பா மாத்திருவோம்.” என்று கண்சிமிட்டினான் விஜயேந்திரன்.

கீர்த்தனா கேள்வியாக அவனைப் பார்க்க, விஜயேந்திரன் முகுந்தனுக்கு அழைத்து அவர்களையும் உடன் அழைத்தான்.  நிரஞ்சனாவின் தந்தை உடல்நிலை, அவள் படிப்பு எனப் பல காரணம் காட்டி அவன் வர மறுத்துவிட, வேறு வழியின்றி இவர்கள் இருவரும் மட்டும் பாண்டிச்சேரியை  நோக்கிப் பயணித்தனர்.

விஜயேந்திரன் வண்டியைச் செலுத்த, காரில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் பேச்சு, பலத்த மௌனம், ஆனால் எந்தவித மனவலியும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருவரும் பயணிக்க, திடீரென்று ஞானோதயம் பெற்றவளாகப் பாட்டை நிறுத்தினாள் கீர்த்தனா.

“நீங்க நல்லா பாடுவீங்கன்னு, முகுந்தன் சொல்லுவாங்க. ஒரு பாட்டு பாடுங்களேன்.” என்று கீர்த்தனா கேட்க, விஜயேந்திரன் புன்னகைத்தான்.

ஆனால், அவன் எண்ணங்களோ லீலாவை சுற்றி வந்தது. தான் பாடுவதும், அதற்கு லீலா பொருள் கேட்பதும், அதை லீலா ஆங்கில பாடலோடு ஒப்பிடுவதும், என விஜயேந்திரன் எண்ணங்கள் லீலாவை சுற்ற அவன் கண்கள் கலங்கியது. அதை கீர்த்தனா அறியாவண்ணம் தன் முகத்தை  ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டு, “இப்ப பாடுறதில்லை கீர்த்தனா.” என்று விஜயேந்திரன் விரக்தியான குரலில் கூறினான்.

“நான் சொல்லிப் பாட மாட்டீங்க போல?” என்று கீர்த்தனா தோளைக் குலுக்கி உதட்டைச் சுழித்து மீண்டும் பாடலை ஒலிக்கச் செய்தாள்.

 

“அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே  புது ஆயுள் வேண்டுமே….”

கீர்த்தனா, உணர்ந்து பாட, அவள் குரலில் மெய்சிலிர்த்து, ‘பாடாத…’ என அழுத்தமாக, கோபமாகக் கூற எண்ணி கீர்த்தனாவைத் திரும்பிப் பார்த்தான் விஜயேந்திரன்.

விழி மூடி, தன்னை மறந்து அமர்ந்திருந்த கீர்த்தனாவைப் பார்த்துத் திடுக்கிட்டான் விஜயேந்திரன். நினைத்ததை கூற முடியாமல், பாடலை நிறுத்தினான் விஜயேந்திரன்.  கீர்த்தனா, பாடலில் மூழ்கியிருக்க,

“இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர்  ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்?”

என்று கீர்த்தனா தொடர்ந்து பாட, அவள் பாடலில் காதல் வழிய, அவள் கேட்கும் கேள்வி தனக்கானது என்று அவன் அறிவு கூற, அவன் மனம் அதை ஏற்க மறுக்க, மறுப்பாகத் தலை அசைத்தான் விஜயேந்திரன்.

 

“இதயம் ஒரு கண்ணாடி… உனது பிம்பம் விழுந்ததடி…”  என்ற வரியில் கீர்த்தனாவின் உள்ளத்தில் விஜயேந்திரனின் பிம்பம் தெளிவாகத் தெரிய, திடுக்கிட்டுத் தான் பாடுவதை நிறுத்திக் கொண்டாள் கீர்த்தனா. “இதயம் ஒரு கண்ணாடி… உனது பிம்பம் விழுந்ததடி…” என்ற வரியில் அன்று விஜயேந்திரன் மனதில் கீர்த்தனாவின்  அறையில் கண்ட காட்சி தோன்ற, தன் புருவத்தை நெளித்து கீர்த்தனாவை ஓரக்  கண்களால் பார்த்தான் விஜயேந்திரன். கீர்த்தனா மறந்தும் அவனைப் பார்க்கவில்லை.

மௌனம் அவர்களோடு பயணித்து, பாண்டிச்சேரி வந்தடைந்தது.

இருவரும் மாலை வேளையில் சூரியன் மங்கும் நேரத்தில் அங்கிருந்த பிரைவேட் பீச்சில் அமர்ந்திருந்தனர்.

நீலக் கடல் என்று கூறமுடியாதபடி, இளம் சிவப்பு நிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த கடலை  கீர்த்தனா  ரசித்துக் கொண்டிருந்தாள்.  அத்தகைய பெரிய அலைகள் இல்லை. நீந்துவதுற்கு ஏதுவாகவே அந்த இடம் அமைந்திருந்தது.  சில நிமிடங்களில், கரையைத் தொட்டுச் செல்லும் நீரை அவள் மெல்லிய பாதத்தால் தீண்டி விளையாடினாள் கீர்த்தனா.

“எதுக்கு அங்கேயே நிற்கணும்? நீச்சலடிக்க வேண்டியது தானே? இல்லை நீச்சல் தெரியாதா?” என்று நக்கலாக கேட்டான் விஜயேந்திரன்.  “சாரியில் இருக்கேன்.” என்று கீர்த்தனா தடுமாற்றமாகக் கூற, “ஆடாத தெரியாதவனுக்குத் தெருக் கோணல்.” என்று அவன் கேலி பேச, அவனை மேலும் கீழும்  முறைத்தாள் கீர்த்தனா.

“என்ன பார்வை? யாருமில்லை. நீந்தறதுன்னா நீச்சல் அடிக்கணும்.” என்று அவன் மேலும் கேலி பேச, “ஏன் நீங்க நீச்சல் பண்றது  தானே?” என்று தன்  இடுப்பில் கைவைத்து கீர்த்தனா, அவன் கேள்வியை அவனிடமே திருப்பினாள்.

“எனக்கு அந்த எண்ணமே இல்லையே? நான் கரையோரமா இருக்கேன். நீங்க தான் ஆசைப் பட்டு போனீங்க.” என்று அவன் கூற, தயக்கமும், ஆசையும் கலந்து அந்த நீரைப் பார்த்தாள். “யாருமில்லை கொஞ்சம் நேரம் நீச்சல் அடீங்க. அப்புறம் உள்ள போயிடுவோம்.” என்று அவன் கூற, ‘நீங்க இருக்கீங்களே. ‘ என்று அவள் மனம் கூறினாலும், அவன் இருப்பு அவளுக்கு பாதுகாப்பு உணர்வையே கொடுக்க, தண்ணீருக்குள் இறங்கினாள் கீர்த்தனா.

கீர்த்தனா, வேகமாக நீச்சல் அடித்து, மீண்டும் கரைக்கு வந்து, “எப்புடி?” என்று தலை உயர்த்தி கேட்க, “சூப்பர்.” என்று செய்கையாலும் கூறினான் விஜயேந்திரன். “இன்னும் கொஞ்சம் நேரம் போயிட்டு வரட்டுமா?” என்று அவள் குழந்தை போல் இவனிடம் கேட்க, அவள் கண்களில் ஆசை, முகத்தில் புன்னகை இவை அனைத்தையும் பார்த்தபடி சம்மதமாகத் தலை அசைத்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா, நீரில் மீனாய் மாறி நீச்சலடித்து மீண்டும் வெளியே வந்தாள். அவள் பிங்க் நிற சேலை உடலோடு ஒட்டி அவள் அங்க வடிவைத் தெளிவாக எடுத்துக் காட்ட, அவள் கூந்தல் நாகமாக அங்குமிங்கும் அசைந்தாட, விஜயேந்திரன் அவளை ரசிக்கா விட்டாலும், அவன் பார்வை அவளைத் தழுவ, சடாரென்று கீர்த்தனாவின் முந்தானையை இழுத்தான் விஜயேந்திரன்.

இதை எதிர்பாராத  கீர்த்தனா, அவள் புடவையை அழுந்த பிடித்துக் கொண்டு மண்ணில் சரிந்து விழுந்தாள். அவள் கூந்தல் அருகே அவள் இடுப்பின் வளைவில் வளைந்து கொண்டிருந்த மெல்லிய பாம்பை கைகளால் பற்றித் தூர எறிந்தான் விஜயேந்திரன். கீர்த்தனா பதறி எழ,  அவளையும் தண்ணீரில் மூழ்க செய்து, தானும் மூழ்கி எழுந்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா மௌனிக்க, “இல்லை… பா… பாம்பு… வி… விஷமா… இருக்குமோன்னு.” என்று அவன் அவளுக்கு விளக்கமளிக்க, அவன் கண்களில் வழிந்த அக்கறை அவளுக்குப் பல செய்திகள் கூறி, அவள் வாழ்வின் அஸ்திவாரத்தை அவள் மனதில் நங்கூரம் போட்டு அமர்த்தியது.

காதல் கொண்ட மனம், அவன் அக்கறை, அவன் அருகாமை, என அவனை கீர்த்தனா படம் பிடித்துக் கொண்டிருக்க, சரேலென்று தன் செய்கையை எண்ணி வெட்கம் கொண்டு, அவனிடமிருந்து விலகினாள் கீர்த்தனா. ‘ச்சை… என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க.’ என்ற எண்ணத்தில் அவள் கைகளை இறுக கட்டி கொள்ள, “ஏய்.” என்று கர்ஜித்தான் விஜயேந்திரன்.

அவன் கர்ஜனையின் காரணம் புரியாமல் அவன் அவளைப் பார்க்க, “என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? நான் தான் ஏன் அப்படி பண்ணேன்னு சொல்றேன்ல? என்னைப் பார்த்தா அவ்வளவு கேவலமா இருக்கு?” என்று கீர்த்தனாவின் விலகலைத் தவறாகப் புரிந்து கொண்டு அவன் கூற, தன் கண்களைச் சிமிட்டியபடி அவனைப் பார்த்தாள் கீர்த்தனா.

அவள் கன்னங்களை அழுந்த பற்றி, அவன் நடந்து கொண்ட முறையிலும், பேசிய பேச்சிலும் கீர்த்தனா கண்களில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள்.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…