கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  18

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  18

சில வாரங்களுக்குப் பின், நிரஞ்சனாவின் பரீட்சை முடிந்திருந்தது. மேலும், கல்லூரி ப்ராஜெக்ட் விஷயமாக அவள் மும்முரமாக இருக்க, முகுந்தனின் வேலையும் அவனை இழுத்துக் கொண்டது. அவர்கள் திட்டமிட்ட சுற்றுலா பயணமோ தள்ளிக் கொண்டே போனது.  அதே நாட்களில், கீர்த்தனா, விஜயேந்திரனின் நாட்கள் சற்று விசித்திரமாகக் கழிந்தது. விஜயேந்திரன் லீலாவை எண்ணி, கீர்த்தனாவிடமிருந்து விலக நினைத்து, அவனறியாமால் கீர்தனவிடம் தன்னை இழந்து கொண்டிருந்தான். விஜயேந்திரனின் மாற்றம் கீர்த்தனாவுக்குப் புரிய, அதன் முழுமை தன்மையை அறிய முடியாமல், அவள் சஞ்சலத்தோடு தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு. மொறுமொறு வென்று அடை, தொட்டுக் கொள்ள வெண்ணை, தேங்காய் சட்னி. நவநீதன், பூமா இருவரும் அமர்ந்திருக்க, கீர்த்தனா உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். இருவரும், ருசித்து உண்ண, விஜயேந்திரன் நாற்காலியில் அமர்ந்தான்.

“கீர்த்தனா, நீயும் சாப்பிடு. ” என்று வேலை செய்பவர்களை வேலை செய்யச் சொல்லும் நோக்கோடு பூமா கூற, “இல்லை. அத்தை, நானே அடை சுடுரேன். அவங்க அவ்வளவு மொறுமொறுன்னு சுட மாட்டங்க. மெத்துமெத்துன்னு சுடுவாங்க.” என்று கூறி கீர்த்தனா சமையலறைக்குள் நுழைய, விஜயேந்திரன் மெளனமாக அங்கு நடந்து கொண்டிருந்த உரையாடலைப் பார்த்தான்.

நவநீதன் அடையில் கவனமாக இருக்க, “நீ ரொம்ப குடுத்து வச்சவன் டா…” என்று பூமா சிரித்துக் கொண்டே கூறினார். விஜயேந்திரன் தன் தாயை புரியாமல் பார்க்க, நவநீதன் தன் கவனத்தைப் பேச்சில் செலுத்தினார்.

“உனக்கு மொறுமொறுன்னு அடை பிடிக்குமுன்னு கீர்த்தனா  இப்படி செய்றா.” என்று கூற, விஜயேந்திரன் கண்மூடி திறந்து தன்னை நிதானித்து கொண்டான்.

‘ எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை? இவள் எதற்கு எனக்குச் செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி வழக்கம் போல் அவன் மனதில் எழ, தன் மகனின் எண்ணத்தின் ஓட்டம் புரியாமல், “முகுந்தன் தான் எவளோ ஒருத்தியை கட்டிக்கிட்டான். ஆனால், உன் வாழ்க்கை அப்படி இல்லை. கீர்த்தனா, ரொம்ப நல்ல பொண்ணு டா. நாம பண்ணப் புண்ணியம் தான், நம்ம வீட்டுக்கு இப்படி ஒரு மருமகள். எப்ப பாரு, உன்னைப் பத்தி தான் கேட்பா. உனக்கு என்ன பிடிக்கும்முனு தெரிஞ்சிக்கிட்டு பண்ணுவா. முதல் நாள் விருந்து சாப்பாட்டிலிருந்து இன்னைக்கு  வரைக்கும் அப்படி தான். அம்மா இல்லாமல் வளர்ந்த பொண்ணு. என்னை, அம்மா மாதிரி நினைச்சி ஆசாபாசமா இருக்கா டா.” என்று பூமா தொடர்ந்து கீர்த்தனாவை புகழ்ந்து பேச, தன் தாயின் பேச்சை கேட்கும் பொறுமை இல்லாமல் எழுந்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரன் அறிந்த உண்மை தான். ஆனால், அதை அவன் அன்னை சொல்லிக் கேட்கையில், அவன் மனதில் பதட்டம் சூழ்ந்து, பல குழப்பங்களோடு, விஜயேந்திரனின் தலை விண்வினென்று வலித்தது.

“எங்க போறீங்க? உங்களுக்குத் தான் நான் எடுத்துட்டு வரேன்.” என்று கீர்த்தனா தன் புடவையைத் தூக்கிச் சொருகியபடி, கையில் அடையைத் தாங்கிய சட்டாபையோடு அவனை நெருங்கினாள் கீர்த்தனா.

“பசிக்கலை.” என்று அவன் ஒற்றை வார்த்தையில் பதில் கூற, “அது எப்படி பசிக்காம இருக்கும்?” என்று விஜயேந்திரனின் வழிமறித்துக் கேட்டாள் கீர்த்தனா.

விஜயேந்திரன் விலகிச் செல்ல, அவன் கைகளைப் பிடித்து, “பசிக்குதோ, பசிகளையோ ஒரு அடை சாப்பிடுங்க. வெறும் வயத்தில் படுக்கக் கூடாது.” என்று அக்கறையோடு கூறினாள் கீர்த்தனா.

“கையை விடு கீர்த்தனா. அம்மா, அப்பா இருக்காங்க.” என்று விஜயேந்திரன் முணுமுணுக்க, கீர்த்தனாவின் பிடி இறுகியது. அவள் பிடிவாதமும் கூடியது. விஜயேந்திரன் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “யாரும் இல்லாத இடத்தில், நீங்க என் கையை பிடிச்சா சரியா? அதையே நான் பிடித்தா தப்பா?” என்று கீர்த்தனா நிதானமாகக் கேட்டாள்.

கடுப்பான விஜயேந்திரன், “ஏன் இப்ப ஒரு படக்காட்சியை உருவாக்குற? நீ என் மேல் அக்கறையா இருக்கன்னு எல்லாருக்கும் தெரியனுமா?” என்று விஜயேந்திரனின் இயலாமை கோபமாக வெடித்தது.

“படக்காட்சியை உருவாக்குறது நீங்க. நான் சாப்பிட சொல்றேன். நீங்க சாப்பிட வேண்டியது தானே? உங்க முகம் உங்க பசியை அப்பட்டமா காட்டுது. என் வார்த்தையை ஏன் எல்லார்  முன்னாடியும் மறுத்து என்னை சங்கப்படுத்துறீங்க?” என்று கீர்த்தனாவின் வார்த்தைகள் பிடிவாதத்தைக் காட்ட, அவளைக் கோபமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனாவிடம் கோபமாகப் பேசிய விஜயேந்திரனால், அவள் கண்களைக் கோபமாகப் பார்க்க முடியவில்லை. அதில் அக்கறை, ஏதோ ஒரு ஏக்கம், அதைத் தாண்டி பல உணர்ச்சிகளை அவள் கண்கள் வெளிப்படுத்த, அவள் பார்வைக்குக் கட்டப்பட்டு உணவை அமைதியாக முடித்தான் விஜயேந்திரன்.

உணவை முடித்துவிட்டு அறைக்குச் சென்ற விஜயேந்திரன் அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

‘நான் ஏன் அவள் பார்வையில் என்னை இழக்கிறேன்?’ என்ற கேள்வி தோன்ற, மனித இயல்பு தவற்றை அவளிடமே திருப்பியது. ‘வசியக்காரி. எல்லாரையும் பார்வையால் வசியம் பண்ண வேண்டியது.’ என்று கீர்த்தனாவை மனதில் வஞ்சித்துக் கொண்டிருக்க, வேலையை முடித்துவிட்டு அவர்களை அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தனா.

“நீ உன் மனசில் என்ன நினச்சிகிட்டு இருக்க?” என்று விஜயேந்திரன் கோபமாகக் கேட்க, “உங்களைத் தான்…” என்று அவன் கேட்காவண்ணம் மெல்லமாக முணுமுணுத்தாள் கீர்த்தனா.

“உன்கிட்ட தான் கேட்கறேன். என்ன முணுமுணுப்பு?” என்று அவன் கடுப்படிக்க, ‘நல்லா தான் இருப்பாங்க… அப்பப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிரும்.’ என்றெண்ணி விஜயேந்திரனை மேலும் கீழும் பார்த்தாள் கீர்த்தனா.

“இப்படி அமைதியா இருந்துட்டா, என்ன அர்த்தம்? நீ எல்லாரையும் அப்படியே மயக்கி வச்சிருக்க.” என்று கூற அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள் கீர்த்தனா.

“என் மேல் அக்கறையா இருக்கிற மாதிரி எல்லாரையும் நம்ப வச்சிருக்க… அப்புறம் அப்படியே ருசியா சமைச்சி… இனிமையா பாடி…” என்று கடுப்பாகக் கூறி, தன் நெற்றியில் யோசனையாக விரல்கள் தட்டி, “இந்த சேலை, இந்த கூந்தல்… எல்லாம்… எல்லாம் கடுப்பா இருக்கு. நாளைலருந்து சேலை கட்டாத, வேற ஏதாவது போடு. இந்த கூந்தல் இப்படி இருக்கக் கூடாது.” என்று அவள் நீளமான கூந்தலைப் பார்த்து அதிகாரமாகக் கூறிவிட்டு வழக்கம் போல் தலையணையை இடையில் வைத்துவிட்டு மெத்தையில் படுத்து, கண்களை இறுக மூடிக்கொண்டான் விஜயேந்திரன்.

மறக்க நினைத்தாலும், மூடிய கண்களுக்குள், அவள் சேலை அசைந்தாட, அவள் கூந்தல் மேகமாய் விரிய, அவள் பாடல் இன்னிசையை அவன் காதில் ஒலித்தது. அவன் மனம் கீர்த்தனாவிடம் பாய, அவன் அறிவு லீலாவை நினைவூட்டியது.

மறுநாள் காலையில் விஜயேந்திரன் எழ, அருகில் கீர்த்தனாவை காணாமல் தேடினான். ‘நேத்து ரொம்ப பேசிட்டோமோ? இன்னைக்கு வேற ட்ரெஸ் போட்டிருப்பாளா?’ என்ற கேள்விகளோடு, முகத்தைக் கழுவிக்கொண்டு பால்கனிக்கு வந்தான் விஜயேந்திரன்.

அருகே இருந்த முகுந்தனின் அறை காலியாக இருந்தது. ‘அம்மாவை எப்படி சமாதானம் செய்வது? முகுந்தனை எப்பொழுது அழைத்து வருவது?’ போன்ற கேள்வியோடு, தன் பார்வையைத் தோட்டத்தின் பக்கம் திருப்பினான் விஜயேந்திரன்.

கீழே இருந்த பூ பந்தலில், சிறிய மொடா மீது ஏறி நின்று பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

‘பூஜைக்கு பூ… ம்ம்…’ என்று அவன் எண்ண, அவள் எம்பிப் பறிக்க, சந்தன நிறத்தில் அவள் இடுப்பின் வளைவு அந்த அரக்கு நிற சேலையில் எழிலோவியமாகக் காட்சி அளித்தது.

விஜயேந்திரனின் அறிவு அதன் செயல்பாட்டைக் குறைத்துக் கொள்ள, ‘இவளைச் சேலை கட்ட கூடாதுன்னு சொன்னேனே…’ என்ற எண்ணம் தோன்றினாலும் அவன் கால்கள் படியிறங்கி அவளை நோக்கி நடந்தது.

‘நேற்று ஏன் இவளைக் கடிந்து கொண்டேன். இவளைத் திட்டி என்னவாக போகுது.’ என்ற குற்ற உணர்ச்சியோடு விஜயேந்திரன் அவளை நெருங்க, அவள் கூந்தல் அசைந்தாட, அவள் எம்பி எம்பி பூப்பறிக்க, “நான் பறித்துத் தரட்டுமா?” என்று நேற்று பேசிய பேச்சுக்குப் பிராயச்சித்தமாக அவன் அவள் பின்பக்கமாக நின்று கொண்டு கேட்க, எதிர்பாராமல் வந்த குரலில் திடுக்கிட்டுப் பின்பக்கமாகச் சரிந்தாள் கீர்த்தனா.

‘ம்… க்கும்… எதையாவது இடக்கு மடக்கா பேச வேண்டியது. அப்புறம் இப்படி சமாதானம் செய்யவேண்டியது.’ என்று கீர்த்தனாவின் மூளை திடமாக வேலை செய்தாலும், அவள் கால்கள் பிடிமானத்தை இழந்து அவன் மீது சரிய, அதை எதிர்பாராத விஜயேந்திரனும் அவளைத் தங்கியபடி புல் தரையில் சரிந்தான்.

அவன் மீது விழாமல் பூ குவளையை அவள் தாங்கி பிடிக்க, பூ குவளையில் உள்ள பூக்கள் அவர்களுக்கு பூ மழை தூவியது. அவன் தேக ஸ்பரிசத்தில், வெட்கம் கொண்ட அவள் மனம் கீர்த்தனாவைத் தாக்க, அவள் கண்கள் தாமாக மூடியது.

விஜயேந்திரனின் கைகள், அவனறியாமல், அவளறியாமல் ரசித்த அவள் கூந்தலை ஆசையாக தீண்ட, அந்த தீண்டலில் அவள் சிலிர்க்க, அவள் கண்கள் வட்ட வடிவமாக விரிந்தது. கீழே விழ இருந்தவளைத் தாங்கி பிடிக்க அவளை அவன் மேல் தாங்கிக் கொண்டாலும், கீர்த்தனாவை  விலக்க மனமில்லாமல் அவன் படுத்திருக்க, எழும் எண்ணம் இல்லாமல் அவளும் தடுமாறினாள். இருவரும் தன்னிலை மறந்திருந்தனர்.

“முண்டக்கண்ணை ஏன் இப்படி முழிக்குற?” என்று அவன் சீண்ட, “என் கண் என்ன முண்டக்கண்ணா?” என்று அவள் கேட்டாள். இன்று அவனிடமும் விலகல் தன்மை இல்லை. அவளிடமும் கோபமில்லை.

“உன் கூந்தல் இப்படி இருக்க கூடாதுன்னு சொன்னேன். நீ புடவை கட்டக் கூடாதுன்னு சொன்னேன்.” என்று விஜயந்திரனின்  கைகள், சேலைக்கு இடையே தெரியும் அவள் இடையை தன் வசமாக்கியபடி கொஞ்ச, “நீங்க சொன்னா நான் கேட்கணுமா? நான் யாருக்காகவும், என் சுயத்தை மாத்திக்க முடியாது.” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, கீர்த்தனாவின் இதழ்கள் கம்பீரமாக பெண்ணியம் பேச முயன்று அவன் அருகாமையில் வெட்கத்தில் குலைய, அந்த வெட்கத்தில் அந்த ஆணின் கர்வமும் தொலைந்து போனது.

அவர்கள் உலகத்தை மறக்க, அவர்கள் கண்கள் காதல் பேசியது. கீர்த்தனாவின் விழிகளில் தெரிந்த உரிமையில், காதலில் அவன் சொக்கி போக, அந்த கருவிழியில் தெரிந்த அவன் உருவத்தை அவன் இன்னும் உற்று நோக்க, கீர்த்தனாவின் அறையில் அவன் பார்த்த காட்சி நினைவு வர விஜயேந்திரன் தன்னை மீட்டுக் கொள்ள முயற்சிக்க, வானம் மழையைப் பொழிந்தது.

மழைத்துளி கீர்த்தனாவின் செவ்விதழில் பட்டு, அவன் மீது தெறிக்க இருவரும் சுயநினைவுக்குத் திரும்ப, கீர்த்தனா வெட்கம் சூழ்ந்த முகத்தோடு, அவனை நிமிர்ந்து பார்க்கத் தைரியமின்றி அவர்கள் அறையை நோக்கி ஓடினாள்.

பார்த்திருந்தால்?

சுயநினைவுக்குத் திரும்பிய விஜயேந்திரன் முகம் இருண்டது. புல் தரையில் அமர்ந்து தன் தலை மீது கைவைத்து தன்னை தானே நொந்து கொண்டான். ‘நா என்ன பண்ணிட்டு இருக்கேன்? லீலாவுக்கு நான் செய்றது துரோகமில்லையா? நான் இவ்வுளவு பலமீனமானவனா? நான் திருமணத்தைத் தடுத்திருக்க வேண்டும். நான் கீர்த்தனாவிடம், இல்லை இல்லை என்று கூறிக் கொண்டே, எதோ ஒரு வகையில் அவளுக்கு   நம்பிக்கை கொடுத்திருக்கேன். இன்னைக்கு அதன் உச்சக்கட்டம். இல்லை, நான் இனி இங்க இருக்கக் கூடாது. நான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், நல்லதில்லை. வேகமாக முடிவு எடுக்க வேண்டும். மிக வேகமாக! நான் போகணும்.’ என்று விஜயேந்திரனின் சிந்தனை மிக வேகமாக ஓடியது.

மழையில் நனைத்த உடையை மாற்றிக்கொண்டு கீர்த்தனா, வெளியே வர மழையில் நனைந்த ஈரமான துணியோடு எதையோ தொலைத்த மனநிலையில் அறைக்குள் நுழைந்தான் விஜயேந்திரன்.

‘என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?’ என்ற கேள்வி விஜயேந்திரனின் மனதை குடைய, ‘அவங்க மனசில் நான் தான் இருக்கேன்.’ என்று உறுதியாக நம்பினாள் கீர்த்தனா.

சிந்தனை வாய்ப்பட்டு, அவன் மேஜை மீது கை வைக்க, ஈரமான கைகள் நழுவி அங்கிருந்த கண்ணாடி மாளிகையை வேகமாகத் தொட, அது நழுவி கீழே விழ, “ஐயோ…” என்று அலறிக் கொண்டு கீர்த்தனா நெருங்க இருவரும் அதைத் தாங்கி பிடிக்க முயன்றனர்.

அவர்கள் இருவரின் கைகளும் ஒன்று சேர்ந்து கண்ணாடி மாளிகையைத் தாங்கி பிடிக்க, விழவிருந்த வேகம் சற்று குறைந்து தரையில் தெறித்து விழுந்து, கண்ணாடி மாளிகை இரண்டாக உடைந்தது.

உடைந்த கண்ணாடி மாளிகையில் பயணிக்கும் பொழுது,

கீறல்கள் விழத்தான் செய்யும்…

இரத்தம் வரத்தான் செய்யும்…

வலிகள் மிஞ்சத்தான் செய்யும்…

கவனத்தோடு கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

error: Content is protected !!